Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரஜினியின் மருந்து!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்புக் கட்டுரை: ரஜினியின் மருந்து!

14.jpg

விநாயக் வே.ஸ்ரீராம்

அன்றந்த வியாழக்கிழமையில் ரஜினி, தனது அரசியல் வியூகத்தின் முதற்கட்ட நகர்வை வெளிப்படுத்தியே விட்டார். அதில் மூன்று கூறுகள் முக்கியமானவை.

1. 65 சதவிகிதம் இளைஞர்களுக்கு வாய்ப்புத் தருவது.

2. தான் முதல்வர் பதவிக்கு வராமல் தன் செல்வாக்கை வைத்து மக்களிடம் பெருவாரியான வாக்குகள் பெற்று அதன் பிறகு ஓரளவுக்கேனும் படித்த, செயலாற்றலும் தன்மானமும்கொண்ட ஓர் இளைஞரைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்குவது.

3. தேர்தலுக்குப் பின் அவசியமற்ற தொங்கு சதைகள் போன்ற செயல் மையங்களுக்கு ஓய்வுகொடுத்து விடுவது.

 

தன் 40 ஆண்டுக்கால உழைப்பால் தான்பெற்ற தனிப்பெரும் செல்வாக்கைவைத்து வேறு ஒருவரை முதலமைச்சராக்கித் தருகிறேன் என்கிறார் ரஜினி. எம்.ஜி.ஆர் – என்.டி.ஆர் உட்பட வேறு எந்தப் பிரபலமும் செய்து காட்டாத விஷயம் இது.

இப்படி ஒரு முடிவை எடுத்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் தனித்து நிற்கிறார் ரஜினி. என்றாலும், அதற்குத் தன்னுடைய வயதும் உடல்நலமும் ஒரு காரணம் என்பதையும் அவரே வெளிப்படுத்திவிட்டார். இதை தியாகம் என்றெல்லாம் அடுக்கிச்சொல்லி ஃப்ளெக்ஸ் அடித்துக் கொண்டிருக்காதீர்கள் என்கிறார்.

 

ரஜினி சொல்வதெல்லாம் 100 சதவிகிதம் புரட்சியான கருத்துகள்தான் என்றாலும் அவையெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியப்படுமா? மக்கள் ஏற்றுக்கொண்டு ஒன்றுபடுவார்களா?

ரஜினியின் இந்தப் புதுமையான சித்தாந்தத்துக்கு எதிராக எதிரணியினரின் வியூகம் என்னவாக இருக்கப் போகிறது என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்தத் தருணத்தில் என்னுடைய ஆர்வமெல்லாம் ‘அரசியல் வல்லுநர்கள்’ என்னும் பெயரில் தொலைக்காட்சிகளில் வீராவேசமாகக் கருத்து சொல்லிக்கொண்டிருக்கிறார்களே... அவர்கள் குறித்துத்தான். அடடா... என்னமாக ஆடித் தீர்க்கிறார்கள்?

 

லீலா பேலஸ் ஹோட்டல் அரங்கில் ரஜினி தன் முடிவை அறிவித்த அடுத்த கணமே மேற்கண்ட அனைவருக்கும் ‘புஸ்...’ என ஆகிப்போனதைப் பட்டவர்த்தனமாகக் காண முடிந்தது. எதிர்க்கூடாரம் உட்பட இது நிகழ்ந்தது என்பதை மனித மனத்தின் விந்தையாகவே காண்கிறேன்.

குறித்துக்கொள்ளுங்கள். சமூக ஆர்வத்தோடு கூடிய பகடி (PARODY) ஆகத்தான் இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

ரஜினி பிரஸ் மீட் முடித்த அடுத்த கணமே ஆளாளுக்கு அவரைத் திட்டித் தீர்த்து விட்டார்கள். ரஜினி அபத்தமாக உளறுகிறார் என்று கொஞ்சம்கூட யோசிக்காமல் கொந்தளித்து விட்டார்கள். போகாத ஊருக்கு வழி சொல்கிறார் என பொங்கித்தீர்த்து விட்டார்கள். பாவம், அவர்களை சொல்லிக் குற்றமில்லை.

ரஜினி இறங்கி குரங்கு வித்தை காட்டுவார். எல்லோரும் கூடிக் கண்டு களிக்கலாம். முழி சரியில்லை ; முன்னங்கால் அழகில்லை என்றெல்லாம் மனம்போன போக்கில் விதவிதமாகச் சொல்லிப் பொழுதைக் களைகட்ட வைக்கலாம் என எதிர்பார்த்திருந்தால்... `ஸாரி, குரங்கு வித்தை எல்லாம் கிடையாது; வேண்டுமானால் உங்கள் சிரங்கு போக மருந்து அரைத்துத் தருகிறேன். வருவீர்களா...’ என ஒரே போடாகப் போட்டுவிட்டார் ரஜினி.

 

மசாலா படமாகவே பார்த்துத் தள்ளியவர்களுக்கு மகேந்திரன் படத்தைக் காண்பித்தால் என்ன ஆவார்கள்?

‘இல்லையில்லை, ரஜினி சொல்வதுபோல் இந்த நாட்டில் நல்லதெல்லாம் நடக்கவே நடக்காது’ எனத் தங்களையே அறியாமல், தங்கள் பொறுப்பையும் மறந்து சொல்லி விட்டார்கள்.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாகச் சுதாரித்துக்கொண்டு வருகிறார்கள் என நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

இவர்களது அடுத்த கட்டத்தை எண்ணும்போதுதான் எனது ஆர்வம் இன்னுமின்னும் கூடுகிறது. காரணம் உண்டு.

இங்கே, ஒவ்வொருவரும் ஒவ்வொரு சித்தாந்தங்களோடு தங்களை பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை அவர்களால் எளிதில் விட்டுக்கொடுத்துவிட முடியாது. அவ்வாறானவர்கள் ரஜினியின் எதிர்க்கூடாரங்களிலும் இருப்பார்கள். அவர்கள், என்ன சொல்லி ரஜினியை மறுதலிக்கப் போகிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிறேன்.

 

`இளைஞர்களுக்கு வாய்ப்பு தருவேன்’ என்று ரஜினி சொல்வது தவறு என்பார்களா? இளைஞர்களுக்கு அரசியல் குறித்து என்ன தெரியும் என்பார்களா? இளைஞர்களுக்குத் தலைமை ஏற்கும் தகுதி இல்லை என்பார்களா? அப்படிச் சொன்னால் இளைஞர்கள் மத்தியில் இவர்களுக்கு எதிர்ப்பு உண்டாகாதா? சம்பந்தப்பட்ட சேனலின் டி.ஆர்.பி ரேட் சரிந்துப்போகாதா?

சரி, ரஜினி என்ன இளைஞர்களுக்கு அள்ளிக்கொடுப்பது... அதைத் தாங்கள் சார்ந்த சித்தாந்தமே செய்துவிடும் என்று இந்த அரசியல் விமர்சகர்களால் அடித்துச் சொல்லிவிட முடியுமா? அப்படியே அவர்கள் சொன்னாலும் சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைமைகள் அதை ஆமோதித்து ஏற்றுக்கொள்ளுமா?

உதாரணத்துக்கு, திமுக என்ன செய்யும்? அதன் இளந்தலைவரான உதயநிதி ஸ்டாலினுக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் வேண்டுமானால் இந்த வியூகம் தித்திக்கும். ஆனால், திமுகவின் முகங்கள் என அறியப்பட்ட பெரிய தலைகள் அனைத்தும் இந்த வியூகத்தால் அடிபட்டுப் போகுமே?

அவர்களுக்கு டிக்கெட் கிடையாது என்ற நிலை வருமானால் என்ன சொல்வார்கள்? அதுக்கென்ன கட்சியும் நாட்டு நலனும்தான் முக்கியம் என்று சொல்லி அமைதியாக இருந்து விடுவார்களா?

பழகிய கால்கள் பரதம் ஆடாமல் இருக்குமா?

அடுத்து, ‘உங்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்குவேன்’ என்கிறார் ரஜினி.

என்ன செய்யப் போகிறார்கள் புள்ளிவிவரங்கள் பேசும் வல்லுநர் திலகங்கள்? ரஜினியின் இந்தச் சித்தாந்தத்தை சமூகத்துக்கு எதிரானதாகச் சித்திரித்துவிடப் போகிறார்களா? மக்கள் குரலே மகேசன் குரல் என்பதுதானே திராவிட மண்ணின் பெருமைக்குரிய வாசகம்.

 

`தலைவர்கள் ஆண்டது போதும்; மக்களில் ஒருவரே ஆளட்டும்...’ என்று ரஜினியின் சித்தாந்தத்தில் என்ன பிழைகண்டு சொல்லப் போகிறார்கள்? மக்களின் பிரதிநிதித்துவம்தானே மக்களாட்சியின் மகத்துவம். அதையே மறுதலிப்பது ஜனநாயகம் ஆகுமா?

மக்களில் ஒருவரை முதலமைச்சராக்கும் ரஜினியின் இந்தத் திட்டம் எளிதானது அல்ல. அதை நடைமுறைப்படுத்துவது கடினம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், அவரது முன்மொழிதலை முற்று முதலாக ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

யோக்கியர்கள் செய்யக் கூடாத காரியம் அது என்பதே அந்த வியூகத்தின் அச்சும் ஆரமும்.

மேலும், தனது வியூகத்தைச் செயல்படுத்த ரஜினி எந்தவிதமான திட்டங்களை வைத்திருக்கிறார் என்பது போகப்போகத்தான் தெரியும். அவர் தேர்ந்தெடுத்து முன்வைக்கப்போகும் அந்த ‘கேண்டிடேட்’ யார் என்பதில் அவரது வியூகம் இன்னமும் கெட்டிப்படக் கூடும்.

என்ன சொல்லி எதிர்க்கப் போகிறார்கள் பத்திரிகையாளர்கள் போர்வையில் இருக்கும் கடமைப்பட்டுவிட்ட சித்தாந்தவாதிகள்? தெரியவில்லை.

அடுத்துப் பார்ப்போம். தேர்தலுக்குப் பிறகு தேவையில்லாத 50,000க்கும் மேற்பட்ட ‘செயல் மையங்களுக்கு’ ஓய்வுகொடுத்து விடுவேன் என்கிறார் ரஜினி. அதில் என்ன தவறு?

கட்டடம் ஒன்று கட்டப்படுகிறது. கட்டடத்தைக் கட்டிமுடிக்க அதைச் சுற்றிலும் ‘ஸ்கஃபோல்டு’ எனப்படும் சவுக்கால் ஆன சாரங்களைக் கட்டுவதைக் கண்டிருக்கிறோம். கட்டடம் முடிந்து வர்ணம்பூசிப் பொலிவானவுடன் அந்தச் சாரங்களை என்ன செய்வார்கள்? பாதுகாப்பாகக் கழற்றிப் பத்திரமாக வைத்துவிடுவதுதானே வழக்கம்.

 

அப்படித்தான் சொந்த வேலையை விட்டுவிட்டு இந்தச் சமூகத்துக்காக இறங்கி வந்து உழைத்தவர்கள் எல்லாம் தேர்தல் முடிந்தவுடன் நல்லது செய்துவிட்ட மனத் திருப்தியோடு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போகலாம் என்கிறார் ரஜினி.

இந்தச் சித்தாந்தத்தை எப்படி மறுக்கப் போகிறார்கள்?

கட்டடம் முடிந்த பின்னும் சாரங்கள் எல்லாம் அப்படி அப்படியே நின்று கொண்டிருந்தால் என்னவாகும்? கண்ட காக்காய்கள் வந்து அமரும். ஓயாமல் கரையும். உள்ளே இருப்பவர்கள் எப்படி வேலை பார்ப்பது?

`சமூக சேவை என்பது வேறு; பிழைப்புக்கான வேலை என்பது வேறு’ என்கிறார் ரஜினி.

எண்ணிப் பாருங்கள்... இந்த நாட்டில் கடந்த ஆண்டுகளில் நிம்மதியாக வீடு கட்டிக் குடியேறியவர்கள் உண்டா?

குருவி போல சேர்த்து வைத்து காலரைக்கால் கிரவுண்டில் கனவு வீட்டைக் கட்டப் பார்க்கலாம் என்றால்... செங்கல் ‘லோடு’ வந்து இறங்கிய அடுத்த கணம் பின்னாலேயே ‘ஸ்கார்பியோ’ வந்து நின்றுவிடுகிறதே.

‘என்ன பாஸ், ஏரியாவுல வீடு எல்லாம் கட்றீங்களாமே... அண்ணனோட கட்டிங் எங்கே... இதுக்கெல்லாம் அண்ணன் இங்கே வந்து நிக்கணுமா...’ என அதட்டிக் கேட்டு வாங்கிக் கொண்டு போகிறதே...

விதவைப் பென்ஷனைக் கூட இங்கிருக்கும் ‘அண்ணன்’களின் தயவு இல்லாமல் பெற முடியவிலையே...

காரணம் என்ன?

பேரறிஞர் அண்ணா சொன்னார்...

சாலையோரம் வேலையற்றதுகள்; வேலையற்றதுகளின் உள்ளத்திலே விபரீத எண்ணங்கள்... வேந்தே, அதுதான் காலக்குறி!

அவரவர்க்கு ஒரு வேலை இருக்குமானால் விபரீதங்களை வேலையாக்கிக்கொள்ள மாட்டார்கள் என்பதுதான் அதன் சாரம்.

மக்கள் சேவையைப் பிழைப்பாக்கி வைத்துவிட்டதால்தான் வேலையற்றதுகள் அதிலே ஈடுபட முன் வருகிறது. அதன்பிறகு அவர்களது விபரீத எண்ணங்களால் அப்பாவி பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

அறிஞர் அண்ணாவின் அன்றைய கேள்வியே – ரஜினியின் இன்றைய சித்தாந்தத்துக்கு அடிப்படை ஆகிறது. இதை எப்படி மறுப்பது? இனி, ‘அரசியல் வல்லுநர்களின்’ பாடு திண்டாட்டம்தான்.

ஆட மேடையின்றி அல்லாடப் போகிறார்கள். அதிர அதிர அம்மன் பறை அடித்துப் பழகிய கரங்களில் வீணை மீட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு சேனலும் - ஒவ்வொரு நாளும் - ஒருமணி நேரமாவது அரசியல் கச்சேரி செய்தாக வேண்டும். அதில், அவர்களுக்கு தடாலடி கருத்துகள் இருந்தாக வேண்டும். மக்களுக்கு என்ன தேவை என்பதெல்லாம் அப்புறம். டி.ஆர்.பி முக்கியம்.

அவர்களுக்கென்று சில நிலைய வித்வான்கள் உண்டு என்றாலும் கண்டெண்ட்டுக்கு எங்கே போவார்கள்? ஆம், வீராவேசக் கச்சேரிக்குத் தேவை அஃக்மார்க் மசாலா கண்டெண்ட்.

ஆனால், மசாலாவுக்குப் பெயர்பெற்ற ரஜினி இந்த முறை ‘மருந்து’ கொடுத்துவிட்டார்.

கட்டுரையாளர் குறிப்பு

விநாயக் வே.ஸ்ரீராம் - எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
 

https://minnambalam.com/politics/2020/03/17/14/rajinikanth-gave-the-medicene-to-politics

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.