Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓலை சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் - மணி வளன் உரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை சி. மணி வளனின் உரையாடல் : ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் ..

Dr-S-Mani-Valan-Photo.jpg

காட்சி ஊடகங்களான தொலைக்காட்சிகளில் (சன், மக்கள். கலைஞர், மாதா, புதுயுகம்) சி. மணி வளன் அவர்களின் நேர்காணல்கள் இடம்பெற்றுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைகிறது. இவ்வுரையாடல் வழியாக மணிவளன் அவர்களின் கருத்தாழமிக்க ஓலைச்சுவடி குறித்த சிந்தனை வெளிப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

இந்த நேர்காணல்களின் ஒட்டுமொத்த பொருண்மையாக ஓலைச்சுவடிகளின் முக்கியத்துவங்களை முன்மொழியப்பட்டுள்ளன. ஓலைச்சுவடி குறித்தான ஆய்வியல் முறைமையையும்; ஓலைச்சுவடிகளை வாசிப்பது, பாதுகாப்பது, அதனை எவ்வாறு படிப்பது, எவ்வாறு ஆய்விற்கு உட்படுத்துவது என்கிற தன்மைகளில் உரையாடுகியுள்ளார்.

ஓலைச்சுவடிகளின் மீதான ஆர்வம், அதற்கான காரணங்கள், முன்னோர்கள் வாழ்ந்த சூழல், அவர்களின் காலம், பழமை மீதான ஆர்வம், ஆய்வு ரீதியான முயற்சி என்கிற பேரார்வம் எனக்குள் உண்டு. ஊதாரிப்பிள்ளை விலாசம் ஓலைச் சுவடிகளிலிருந்து பெற்ற பாங்கினை உணர்ந்து அதிலிருந்து அதனைஆய்வுக்கு எடுத்துக் கொண்டதன் பேரில் நம் முன்னோர்களின் வாழ்வியலை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் ஏற்பட்டது.

அதன் விளைவே ஓலைச்சுவடிகளைத் திரட்டவேண்டும், பாதுகாக்க வேண்டும் என்கிற ஆவல்உண்டானது என்கிறார். ஓல்ட் இஸ் கோல்ட் ; (Old is Gold) என்று எனக்குள் பழமையைத் தேட வேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டது. கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதிய நாலடியார் நூல் குறித்த ஓலைச்சுவடி 21ஆம் நூற்றாண்டில் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்துள்ளதை நேர்காணலின் அறிந்து கொள்ள முடிகிறது. ஓலைச்சுவடியைப் பிரதி எடுப்பதற்கும், வடிவமைப்பதற்கும் கேள்வி ஞானம் அடிப்படையானது ஆகும்.

‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’(உலகநீதி)
‘சித்திரப் பாவையி னத்தக வடங்கிச்
செவிவா யாக நெஞ்சுகள னாகக்
கேட்டவை கேட்டவை விடாதுளத் தமைத்துப்
போவெனப் போத லென்மனார் புலவர். (நன்னூல் -பாயிரம்-40) இவ் வரிகளைச் சான்று காட்டி, ஓலைச்சுவடிகளின் எழுதுதல் முறையை முன்வைக்கின்றார் பேராசிரியர் முனைவர் சி.மணிவளன்.

nanool+1918.jpg

மேற்காணும் நன்னூல் பாடல் வரிகள் ஓலைச்சுவடி எழுது முறைமை சார்ந்ததாகப் பார்க்க வேண்டும். திண்ணைப் பள்ளிகள் அமர்ந்து மாணவர்கள் கேட்பது என்பது பொருள் பொதிந்த ஓலைச்சுவடியை வாசிப்பது என்பதாகப் பொருள் படுகிறது. இதுஉற்றுநோக்கலோடு தொடர்புடையதாகும் என்று கூறுகிறார்.

ஓர் ஓலைச் சுவடியை வைத்து ஒருவர் வாசிக்க அதை அமர்ந்திருக்கும் பலர் கேள்வி ஞானத்தில் எழுதும் பொழுதும் வார்த்தைளை சரியாக எழுவதும், மாற்றி எழுதுவதும் கேள்வி ஞானத்தை பொருத்ததாகவும் அமையக்கூடும்.வேர்டு ஆர் சேம் லெட்டர் ஆர் டிஃப்ரண்ட்(Word are same, Letters are different ) என்பதன் மூலமாக ஓலைச்சுவடியைப் படிக்கும்போது இருக்கக்கூடிய இடர்ப்பாடுகளைத் தந்தை சி. மணி வளன் அவர்கள் நேர்காணலின்போது முன்மொழிந்துள்ளார். இது ஆச்சரியப்படக் கூடியதாக அமைந்துள்ளது என்கிறார்.

ஓலைச்சுவடியை எவ்வாறு படித்தல் வேண்டும், எவ்வாறு பிரதி எடுத்தல் வேண்டும், எவ்வாறு வடிவமைக்க வேண்டும் என்கிற அக்கறை ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்யும் ஓர் ஆய்வாளருக்கு வேண்டும் என்று கூறுகிறார். ஓலைச்சுவடிகள் பல்வேறு தேசங்களின் பல்வேறு பொருட்களால் செய்யப்படுவது என்று குறிப்பிடுகிறார். எகிப்தில் பாபிரியாஸ் நாணல் மூலமாக ஓலை செய்வதைப் பார்க்கமுடிகிறது.

பாலஸ்தீனத்தில் தோல்களைச் செப்பனிட்டுப் பதப்படுத்தி அதில் எழுதிவைக்கும் முறையினைக் கையாண்டுள்ளார்கள் என்பதைப் பார்க்கமுடிகிறது. பாலஸ்தீனத்தில் தோல்களைக் கொண்டு ஆரம்பக் காலங்களில் பைபிள் எழுதியுள்ளதைப் பார்க்க முடிகிறது. தமிழ் சூழலில் பனைமரம் அதிகமாக இருப்பதனால் பனை ஓலைகளைப் பதப்படுத்திப் பக்குவப்படுத்தி எழுதிவைக்கக் கூடிய ஓர் ஊடகமாகப் பனை ஓலையைத் தேர்ந்தெடுத்து இருப்பதைப் பார்க்க முடிகிறது.

P1170031.jpg

இவ்வாறு பல்வேறு நாடுகளில் பல்வேறு விதமான ஆவணக்காப்பகங்கள் இருக்கின்றன என்பதைப் பார்க்கமுடிகிறது. ஓலைச்சுவடிகளைப் பாட்டாக பாடுதல் தமிழ் மரபிலிருந்து இருந்துள்ளதை நேர்காணலில் முன்மொழிந்தது முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

ஏனென்றால், பாடல் பாடுதல் மரபு என்பதே வைதீகமரபு என்கிற சிந்தனையைத் தந்தையின் கூற்று மறுப்பதாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் ஓலைச்சுவடிகள் தமிழர் பண்பாடு, வாழ்வியல், அரசியல், இலக்கியம், வானியல், மருத்துவம், இலக்கணம் எனப்பொருள் பொதிந்த களஞ்சியமாக விளங்குகின்றன.

ஓலைச்சுவடிகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்கிற வேட்கை இளநிலை ஆராய்ச்சி பிற்பாடு தனக்குள் தோன்றியதாக நேர்காணலில் குறிப்பிடுகிறார். வரதராஜன் பேட்டை, பாலக்காடு பகுதிகளில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்மொழியில் ஓலைச்சுவடிகள் வழங்கிவந்துள்ளதைப் பார்க்கமுடிகிறது என்கிறார்.

கேரளத்தில் கிடைத்த ஓலைச்சுவடிகள் தமிழ்மொழியில் அமைந்திருப்பது வியப்புக்குரியது என்று கூறுகிறார். “கிடைத்த ஓலைச்சுவடிகள் அனைத்துமே நூலாக்கம் பெறுவதில்லை. நூலாக்கம் பெறுவதிலும் பிரதி எடுப்பதிலும் பல சிரமங்கள் இருப்பதைப் பார்க்கமுடிகிறது. ஓலைச்சுவடிகளில் ஒரு சில சமயங்களில் ஒரு சில பக்கங்கள் விடுபட்டு இருக்கும் பட்சத்தில் நூலாக்கம் பெறுவதில் சிக்கல் இருக்கும்.

முதலில் ஆரம்பித்த பொருள் பொதிந்த செய்திகள் தொடர்ச்சியாக விடுபடாமல் முடிவை நோக்கி அமர்ந்திருக்குமானால் அதனை நூலாக்கம் செய்வது என்பது எளிதாக முடியக் கூடியது என்று கூறுகிறார். ஒரு பனுவல் விடுபட்டு இருப்பின் அப்பனுவல் குறித்த வேறு ஓலைச்சுவடி கிடைக்குமா எனத் தேடுதல் ஓர் ஆய்வாளனுக்கு ஆய்வு வேட்கை உருவாகவேண்டும்.

அப்படி ஒருபொருள் குறித்த பல ஒலைச்சுவடி கிடைக்குமானால் வரலாற்றியல் நோக்கில் அணுகுவதோடு இவ்விரு பனுவல்களின் ஒற்றுமை,வேற்றுமை குறித்து மூலபாட ஆய்வுமுறையில் ஆய்வுசெய்திட வேண்டும். ஓலைச்சுவடி ஆய்வில்கல் வெட்டுச்சான்றுகள், செப்வேடுசான்றுகள், ஆய்வுப் பொருண்மைசார்ந்த நூலாக்கங்கள் முதவியவை துணை சான்றாதாரங்களாகும்.

இதனை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்படவேண்டும். இவ்வாறு ஓலைச்சுவடியியல் ஆய்வு நெறிமுறை மற்ற எழுத்தாக்கப் பனுவல்களின் ஆய்விலிருந்து வேறுபடுகிறது என்று கட்டுரையாளரிடம் உரையாடும் போது கூறியுள்ளார். மேலும் ஓலைச்சுவடிகளை வகை, தொகை முறைமையில் உருவாக்கப்படுதல் குறித்துப்பேசியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

நம் பழமையையும், பாரம்பரியத்தையும், நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த வாழ்வியல் நெறிகள், அறநெறிகள், மருத்துவம், வேளாண்மை, வானியல், நாட்டுப்புறச் சூழலியல் முதலிய கருத்துகளைத் தேடுதல், பகுத்தல், தொகுத்தல், காட்சிப்படுத்தல்,ஆய்வு செய்தல் என்கிற தன்மைகளில் ஒவ்வொரு ஆய்வாளரும் செயல்படும் பொழுது நம் தமிழர்களின் பழமையையும் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் நிலைநாட்ட முடியும்.

ஆகவே ஆய்வாளர்கள், தமிழ்ச்சான்றோர்கள் ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கவேண்டும் என்கிற விழிப்புணர்வு எல்லோருக்குள்ளும் ஏற்படவேண்டும். ஆய்வியல் முறைமையில் ஓலைச்சுவடிகள் சார்ந்த ஆய்வுகள் புது ஆய்வியல் நெறிமுறைகளைக் கொண்டு விளங்குகின்றது என்பதை நேர்காணல்களின் வழியாக அறியமுடிகிறது.

ஓலைச் சுவடிகளைப் பாதுகாப்பதற்கென அரசு பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு துறைசார்ந்த வல்லுநர்களைக் கொண்டு ஓலைச்சுவடிகளின் மேல் அக்கறை கொண்டு பாதுகாக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு நாட்டிலும் ஓலைச்சுவடிகளை பாதுகாக்கப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் கிராமங்கள் தோறும் கிடைக்கக்கூடிய ஓலைச்சுவடிகளை ஆவணக் காப்பகங்களில் ஒப்படைப்பதற்கு மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கிற சிந்தனை நம் ஒவ்வொருவருக்குள்ளும் உதயமாக வேண்டும் என்கிற தன்மையில் பேராசிரியர் முனைவர் சி.மணி வளன் அவர்கள் ஓலைச்சுவடி குறித்த ஆய்வியல் முறையியலை தம் உரையாடலில் முன்வைத்துள்ளார்.

தமிழ் மொழியின் வரலாறு, கிறித்தவ குருமார்கள் தமிழ்மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு இயேசுசபை குருமார்களின் வாழ்வு, ஓலைச்சுவடி அதிலிருந்து நூலாக்கம் செய்வதன் நோக்கம் இன்றைய வணிக மயமான கல்விச்சூழல், தமிழ் மொழியின் நாளைய செயல்திட்டம், தமிழ் மொழிப்பற்று குறைந்து வரும் சூழலில் தமிழ் உயர்வை நோக்கி தமிழார்வத்தை தனக்குள் ஏற்படுத்திய விதம், தான் பேசும்போதும் எழுதும்போதும் பிழையின்றி எழுத வேண்டும் என்ற எண்ணம், எளிய நடையில் வாசகரை நோக்கிச் செல்லவேண்டும் என்கிற சிந்தனைகளை இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மொழியினை உயிர் மூச்சாகக் கருதவேண்டும். உன் உயிர் மூச்சை காப்பாற்ற நீ என்னென்ன செய்வாயோ அதை நாம் செய்ய வேண்டும். தமிழ்மொழி என்பது அமுதமாய் பருகி நம் உடலில், நம் இரத்தத்தில் கலக்க வேண்டும் என்கிற தமிழ்மொழி குறித்த சிந்தனையை நேர்காணலில் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

இன்றைய சூழலில் ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் ஆய்வு நெறிமுறையை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்கிற ஆலோசனை வழங்கியுள்ளார். ஆய்வுக்காக ஆய்வு செய்தல், வேலைக்காக ஆய்வு செய்தல் என்கிற தன்மையில் ஆராய்ச்சி மாணவர்களின் ஆர்வத்தைப் பொருத்து அமையும்.

ஆகவே ஆராய்ச்சி மாணவர்கள் தேடுதலோடு ஆய்வின் முக்கியத்துவத்தை அறிந்து, ஆர்வத்தை உண்டாக்கி தாம் எடுத்துக்கொண்ட பொருள் குறித்து அனைத்து தரப்பு வாதங்களையும், கருத்துகளையும் முன்வைத்து ஆய்வு செய்யவேண்டும் என்பதைக் கூறியுள்ளார். தன் படைப்புகள் குறித்தும் கவிதைப் படைப்புக்கள், மொழி பெயர்ப்புப் பணிகள், ஓலைச்சுவடியிலிருந்து எழுத்தாகப் பணி,ஆய்வுப் பணி, சமயப் பணி எனப் பல படைப்பிலக்கியத் தேடலை முன்மொழிந்துள்ளார்.

ஓலைச்சுவடிகளைப் பொருள் பொதிந்து வாசித்தல் என்னும் தன்மையில் வாசிக்க வேண்டும் என்று கூறுகிறார். எழுத்தை மாற்றி இருந்தாலும் ஓலைச்சுவடியிலிருந்து எழுத்தாக்கம் கொடுக்கவேண்டும் .

maxresdefault.jpg

ஊதாரிப்பிள்ளை விலாசம் ஓலைச்சுவடியிலிருந்து பதிப்பித்தல் பணியை மேற்கொண்டு ஆய்வு ரீதியான முயற்சி செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது.1989 இதைச் செய்தேன். கிபி இரண்டாம் நூற்றாண்டில் எழுதிய நாலடியார் 21ஆம் நூற்றாண்டில் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தார்.

ஆய்விற்காகத்தேடும் முயற்சியில் தேடலின் முடிவில் நாம் தேடியது கிடைத்து விட்டால் எவ்வாறு மகிழ்ச்சி கொள்கிறோமோ அதேபோல் ஓலைச்சுவடிகள் கிடைத்ததைஎண்ணி மகிழ்ச்சி கொள்கிறார்.

வீரமாமுனிவர் 13க்கும் மேற்பட்ட மொழிகளை அறிந்து இருந்ததோடு தமிழ் மொழியைச் சிறப்பித்துக் கூறுகிறார். இதை நாம் உணரவேண்டும். சேவியர் தனிநாயகம் அடிகளார் என்பவர் உலகத் தமிழ் மாநாடுகள் ஏற்பாடு செய்திருக்கிறார்.

இவ்வாறு பல மேலைநாடுகளிலிருந்து வந்தவர்கள் நம் தாய்மொழியை உயர்த்த வேண்டும். தமிழ் மொழியின் தொன்மையை உலகறியச் செய்திட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டு இருந்தார்கள். நமக்கு ஏன் அந்த அக்கறை உருவாவதில்லை என்பது நோக்கத்தில் நான் பல ஓலைச் சுவடிகளைத் தேடி, பழமையைப் பாதுகாக்கவேண்டும், பழமையிலும் தமிழ்மொழியின் பெருமையை உலகறியச் செய்யவேண்டும் என்கிற நோக்கில் ஓலைச்சுவடிகளைப் பதிப்புப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன் என்ற கருத்தின் வழியாக இவர் தமிழ்மொழி மீது கொண்டுள்ள ஈடுபாடு வெளிப்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள கீழ்த்திசை நூலகத்தில் திராவிட மொழிகள் அனைத்திலும் சேகரிக்கப்பட்ட எழுபதாயிரத்திற்கு மேற்பட்ட ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்கப்பட்டுவருகினறன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சேகரிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைச் சென்னை அரசினர் சுவடி நூலகத்திலும், தருமபுரி ஓலைச்சுவடிகள் காப்பகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கவேண்டும் என்கிற நோக்கத்தில் அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

ஆகையால் இன்றைய சூழலில் இளநிலை பட்ட, முனைவர் பட்ட ஆய்வுப் படிப்பினை மேற்கொள்வார்கள் ஓலைச்சுவடிகளை அடிப்படையாகக்கொண்டு ஆய்வுசெய்திடல் வேண்டும்என்று உரையாடல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார்.

பின்குறிப்பு :

காட்சி ஊடகங்களின் நேர்காணல்களின் வழியாக ஓலைச்சுவடி ஆய்வியலின் தேவையும் நெறிமுறையும் குறித்துப் பேசியுள்ள பேராசிரியர் முனைவர் சி.மணி வளன் அவர்கள், நாற்பது ஆண்டுகளுக்கு மேலான கல்விப் பணியோடு இயேசு சபையில் இறைப்பணியாற்றி வருகிறார். தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சியில் அமைந்துள்ள கிறித்தவ ஆய்வு மையத்தின் நிறுவுநர் மற்றும் இயக்குநர்.

இயேசு சபையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் இயக்குநர், துணை முதல்வர், கல்லூரிச்செயலாளர் எனப் பல பணிகளுக்கு மத்தியில் படைப்பாக்கப் பணியையும் தொடர்ந்து படைத்துவருபவர் பேராசிரியர் முனைவர் சி.மணி வளன்.

இவர் ஓலைச் சுவடிகளிலிருந்த விலாச நூல்களைப் பதிப்பித்துள்ளார். சான்றாக, ஊதாரிப் பிள்ளை விலாசம், 1892 இல் உருவான ‘ஸ்ரீபகார்த்த விலாசம்’ எனும் நூல்களைக் கூறலாம். மேலும் கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இசை நாடகம் எனப் பல படைப்புகளைப் படைத்துள்ளார். அருள்மொழிக் கும்மி,புதிய பெத்லகேம் குறவஞ்சி இவரின் படைப்புகளை நாட்டிய நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளன.

“என்னால் ஆனதை சமூகத்திற்குச் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தோடு வெளிநாட்டில் தமிழ்த் தொண்டினை அடையாளப்படுத்தும் விதமாகவும் தனித்தமிழ் சார்ந்த தமிழை மீட்டெடுக்கவும் பிழையின்றி எழுத வேண்டும் என்கிற தன்மையிலும் நான் ஒரு எழுத்தாளன் ஆக வேண்டும் என்கிற அவா, பள்ளிப்பருவத்திலிருந்தே உருவானது என் படைப்புகளில் வழியாக என் சிந்தனையைப் பிறருக்குப் பகிர்கிறேன்.

நான் சென்னை லயோலா கல்லூரியில் பணியாற்றும் பொழுது வீரமா முனிவர் இலக்கிய மன்றம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி தெருக்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அதை மாற்றிட மற்றவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியதும் உண்டு.

வீரமா முனிவருக்கு நூல்கள் எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியது. அதன் விளைவாகவே வியத்தகு மேதை வீரமாமுனிவர் , வீரமாமுனிவர் சிந்தனைகள் எனும் அரிய நூல்களைப் படைக்க முடிந்தது என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய வகைமையில் கிறித்தவ இலக்கியச் செல்நெறியை அடையாளப்படுத்திவரும் இவரின் தொண்டு அளப்பரியதாகும்.

– ம.கருணாநிதி, உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, அருள்ஆனந்தர்கல்லூரி, கருமாத்தூர்.625 514.

http://globaltamilnews.net/2020/140833/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.