Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை மனிதனின் கதை | பரீஸ் பொலெவோய்

மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி... | பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் முதல் பாகம் அத்தியாயம் 1...

அறிமுகம்:

ரீஸ் பொலேவோய் புகழ்பெற்ற நூலாசிரியர், பத்திரிகையாளர். சோவியத் யூனியனில் மாபெரும் தேசபக்தப் போர் தொடங்கியது முதல் பொலெவோய் ‘பிராவ்தா’ செய்தித் தாளின் போர்முனை நிருபராகப் பணியாற்றினார். அப்போதுதான் உண்மை மனிதனின் கதையின் கதைமாந்தரான செஞ்சேனையின் வீரமிக்க விமானி அலெக்சேய் மெரேஸ்யெவைச் சந்திக்கிறார். போர்முனையில் மிகச்சிறந்த விமானி எனப் பெயர் வாங்கியிருப்பதைக் கேள்விப்பட்டு, பரீஸ் அவரை பேட்டி காண விரும்பினார்.

அலெக்சேய் மெரேஸ்யெவிற்கும் மாஸ்கோவிலிருந்து வந்துள்ள ‘பிராவ்தா’ செய்தியாளரிடம் நாட்டில் நடந்துவரும் நிகழ்வுகள் அனைத்தையும் கேட்டுத்தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆசை. எனவே இரவு தன்கூடவே தங்குமாறு கூறி அழைத்துச் செல்கிறான்….

….. அதன்பின்னர் அலெக்சேய் மெரேஸ்யெவ் தன் கதையை பரீஸிடம் கூற, அவர் கேட்டுப் பதிவு செய்து, நமக்கு அளித்துள்ள கதைதான் உண்மை மனிதனின் கதை.

உண்மை மனிதனின் கதையை நான்கு பாகங்களாக பரீஸ் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் ஜெர்மானியர்களுடன் நடந்திடும் சண்டையில் அலெக்சேய் மெரேஸ்யெவின் விமானம் சிதறிவிழுதல், அதிலிருந்து எப்படியோ தப்பிப்பிழைத்த அலெக்சேய், தங்கள் ஆட்கள் இருக்கும் திசைநோக்கி, பனிப்புயலினூடே 18 நாட்கள் தவழ்ந்து வந்தது.அவன் வருவதைக் கண்ணுற்ற இரு சிறுவர்கள், ஊருக்குள் அவனுக்கு உறுதுணையாக இருந்த மிஹாய்லா தாத்தா, கிராமத்துப் பெண்கள், ‘கொரில்லா’ கோழி சூப் வைத்துக்கொடுத்த கிழவி உட்பட அனைவரையும் மிகவும் உன்னிப்பாக முதல் பாகத்தில் வர்ணித்திருப்பார் பரீஸ்.

இரண்டாம் பாகத்தில் மருத்துவமனையில் அலெக்சேய்க்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் அவன் அதனை எதிர்கொள்வதையும், அவனுக்கு உற்ற நண்பர்களாய், தோழர்களாய், செயல்பட்ட சக நோயாளிகள், மருத்துவத்தாதிகள் மற்றும் மருத்துவரை பரீஸ் பொலேவோய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் ….

…. கதையின் மூன்றாம் பாகத்தில் மீண்டும் போர் விமானியாவதற்காக அலெக்சேய் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பார்க்கிறோம். ஒவ்வொருவரும் அவனிடம் உள்ள அசாத்திய திறமையைக்கண்டு ஆச்சர்யப்படுவதும், இறுதியில் அவனுக்குக் கால்கள் கிடையாது என்று தெரியவருகிறபோது தங்கள் கையறுநிலையைத் தெரிவிப்பதும், எல்லாவற்றையும் வெற்றிகொண்டு அலெக்சேய் போர் விமானியாவதையும் மூன்றாவது பாகத்தில் நாம் பார்த்திடலாம்.

நான்காவது பாகத்தில் போர் விமானிகளிலேயே முன்னுதாரணமாகத் திகழும் அலெக்சேயை நாம் பார்க்கிறோம்.

இவ்வாறு உண்மை மனிதனின் கதையைப் படிக்கும் எவராக இருந்தாலும், படிப்பதற்கு முன்பிருந்ததைவிட படித்ததற்குப்பின் தன் உடலிலும் உள்ளத்திலும் உற்சாகம் பொங்கிவழிவதை உணரமுடியும்…

நன்றி : தீக்கதிர்

(முதல் பாகம்)  அத்தியாயம் – 1

பரீஸ் பொலெவோய்விண்மீன்கள் கூரிய குளிரொளியுடன் இன்னும் சுடர்ந்து கொண்டிருந்தன. எனினும் கீழ்த்திசையில் வானம் வெளுக்கத் தொடங்கிவிட்டது. மரங்கள் இருளிலிருந்து சிறிது சிறிதாகப் புலப்படலாயின. திடீரென அவற்றின் முடிகள் மீது பலத்த குளிர் காற்று வீசியடித்தது. உடனேயே காடு உயிர்த்தெழுந்து முழுக்குரலுடன் கணீரென அரவமிட்டது. தணிந்த சீழ்க்கை ஒலியால் ஒன்றையொன்று கூவி அழைத்தன. நூறாண்டுப் பைன் மரங்கள், பனி அடர்கள் கலவரமுற்ற கிளைகளிலிருந்து மெல்லிய சரசரப்புடன் உதிர்ந்தன.

காற்று வீசத் தொடங்கியது போன்றே தீடீரென அடங்கிவிட்டது. மரங்கள் மீண்டும் குளிரில் விறைத்து உறைந்ததுபோயின. அக்கணமே தெளிவாகக் கேட்கலாயின புலர்வதற்கு முன் காட்டில் எழும் ஒலிகள்: பக்கத்துத் திறப்பு வெளியில் ஓநாய்களின் பேராசை நிறைந்த சச்சரவு, நரிகளின் உறுமல், உறக்கத்திலிருந்து மரங்கொத்தி இன்னும் தீர்மானமின்றி மரப்பட்டையைக் கொத்தும் ‘டொக்’ ஒலி முதலியன. மரங்கொத்தி அடிமரத்தை அல்ல, பிடிலின் வெற்று உடலைக் கொத்துவது போன்ற இன்னிசையுடன் காட்டின் ரிசப்தத்தில் கேட்டது அந்த டொக் ஒலி.

பைன் மரங்களின் முடிகள் மீது கனத்த – ஊசியிலைகளினூடே மீண்டும் குப்பென வீசியடித்தது காற்று. வர வர ஒளி மிகுந்து கொண்டுபோன வானத்தில் கடைசி விண்மீன்கள் அமைதியாக அவிந்தன. வானம் முன்னிலும் இறுகிக் குறுகிவிட்டது. இரவின் இருளை முற்றாக உதறி எறிந்து விட்டுக் காடு தன் பசிய மாண்பு முழுவதும் தோன்ற எழுந்தது. பைன் மரங்களின் சுருள் முடிகளும் பிர் மரங்களின் கூரிய கூம்பு முடிகளும் செம்மையுற்று ஒளிர்ந்ததைக் கொண்டு ஞாயிறு உதித்துவிட்டது என்பதையும் அன்றையப் பகல் தெளிவும் குளிரும் கதிர்வீச்சும் கொண்டிருக்கும் என்பதையும் அனுமானிக்க முடிந்தது.

maxim-gorky-thai-novel-part-33a-400x225.பலபலவென்று விடிந்து விட்டது. ஓநாய்கள் இரவில் வேட்டையாடி உண்ட இரையைச் ஜீரணிக்கும் பொருட்டுக் காட்டுப்புதர்களுக்குள் போய்விட்டன. நரி, காட்டின் திறப்பு வெளியிலிருந்து அகன்று விட்டது. தந்திரத்துடன் தாறுமாறாக வைக்கப்பட்டிருந்த அதன் அடித்தடம் வெண்பனி மீது பூப்பின்னல் நாடாப் போலத் தோற்றம் அளித்தது. நெடுங்காலக் காடு ஒரு சீராக இடையீடின்றி இரையலாயிற்று. பட்சிகளின் ஆர்ப்பும் மரங்கொத்தியின் அலகொலியும் மரக்கிளைகளினூடே சிவ்வெனப் பறந்த மஞ்சள் சிட்டுக் குருவியின் கீச்சொலியும் வண்ணப் புள்ளியின் பேராசையைக் காட்டும் வறட்டுக் கத்தலும் மட்டுமே குழப்பலான கலவரமும் ஏக்கமும் நிறைந்த மெல்லிய அலைகளாகப் பரவிய இந்த அரவத்தில் வேறுபாடுகள் உண்டாக்கின.

ஆல்டர் மரக் கிளையில் கூரிய கரு அலகைத் தீட்டிக் கொண்டிருந்த கரிச்சான் பறவை திடீரெனத் தலையை ஒரு புறம் திருப்பி கூர்ந்து கேட்டுவிட்டு விர்ட்டென்று பறந்து போக ஆயத்தமாகக் குந்தியது. மரக்கிளைகள் கலவரம் மூட்டும் வகையில் சரசரத்தன. ஏதோ வலிய பெரியது ஒன்று கண்மூடித் தனமானக் காட்டினூடே நடந்தது. புதர்கள் சிலிர்த்தன. சிறு பைன் மரமுடிகள் அசைந்தாடின. இறுகிய வெண்பனிப் பாளம் ஆழ்ந்து போய்க் கறமுறத்தது. கரிச்சான் கத்திக் கூவிற்று, அம்பு இறகு போன்ற வாலை விரித்து நேராக அப்பால் பறந்து போயிற்று.

காலைப்பனி அடர்களால் வெண்பொடி தூவப்பட்ட ஊசியிலைக் கிளையிலிருந்து வெளித்துருத்தியது நீண்ட பழுப்பு மூஞ்சி. அதன் உச்சியில் கனத்து கிளைத்த கொம்புகள் இருந்தன. மிரண்ட விழிகள் விசால திறப்பு வெளிமீது கண்ணோட்டின. மதயானை ஒன்றின் ரோஜா நிற மூக்குத் துளைகள் பதற்றத்துடன் நடுங்கின. அவற்றின் வழியே கலவரம் நிறைந்த மூச்சுடன் வெப்ப நீராவி குப்குப்பென்று வெளி வந்தது.

முதிய மதயானை, பைன் மரங்களுக்கு நடுவே சிலை போன்று அசைவின்றி நிலைத்துவிட்டது. ரோமக் குச்சங்கள் அடர்ந்த அதன் தோல் மட்டுமே முதுகுப்புறம் சிலிர்த்தது.

எச்சரிக்கை அடைந்த அதன் செவிகள் ஒவ்வோர் ஒலியையும் விடாது பற்றி பதித்துக் கொண்டன. பட்டை தின்னிப்பூச்சி, பைன் மரக்கட்டையைக் கறவுவது கூடக் கேட்கும் அளவு கூர்மையாக இருந்தது அந்த யானையின் செவிப்புலன். ஆனால் இத்தகைய கூரான காதுகளுக்குக் கூடக்காட்டில் புட்களின் ஆர்ப்பும் மரங்கொத்தியின் அலகொலியும் பைன் மர முடிகளின் ஒரு சீரான ஓசையும் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை .

மேலிருந்து கேட்ட ஒலி ஒன்று கடம்பையின் கவனத்தை ஈர்த்தது. மதயானை நடுங்கிற்று, அதன் முதுகுத் தோல் சிலிர்த்தது, பின்னங்கால் மேலும் அதிகமாக மடங்கின.

சில மேவண்டுகள் மந்தமாக ரீங்காரம் செய்தவாறு இருந்தன. பூத்த பிர்ச் மர இலைகளில் சுழல்வது போலிருந்தது அது. அவற்றின் ரீங்காரத்தின் நடுநடுவே சதுப்பு நிலத்தில் கார்ன்கிரேக் பட்சியின் கத்தலை ஒத்த சடசடப்பு சில வேளைகளில் கேட்டது.

இதோ அந்த வண்டுகள். இறக்கைகள் ஒளிர, குளிர் நீலக் காற்றில் அவை நர்த்தனம் செய்தன. மீண்டும் மீண்டும் உயரே ஒலித்தது சடசடப்பு. வண்டுகளில் ஒன்று தனது இறக்கைகளை மடிக்காமலே கீழ்நோக்கிப் பாய்ந்து வந்தது. மற்றவை விண்ணின் நீல வெளியில் மறுபடி நர்த்தனம் செய்யலாயின. அந்த மதயானை தனது இறுக்கமுற்ற தசைகளைத் தளர விட்டு, திறப்பு வெளிக்கு வந்து, வானைக் கடைக்கணித்த படியே வெண்பனிப் பாளத்தை நக்கிற்று. காற்றில் நடனமிட்ட திரளிலிருந்து இன்னும் ஒருவண்டு திடீரென விலக, பகட்டான, பெரிய வாலைப் பின்னே துருத்தியவாறு நேரே திறப்பு வெளியை நோக்கி வந்தது. அது படு விரைவாக அளவில் பெருத்துக் கொண்டு போயிற்று. யானை புதருக்குள் தாவிப் புகுந்ததும் புகாததுமாக, பிரமாண்டமான ஏதோ ஒன்று, கூதிர்காலப் புயற்காற்றின் திடீர் வீச்சை விடப் பயங்கரமான ஏதோ ஒன்று, பைன் மர உச்சிகளைத் தாக்கித் தரையில் தடாலென்று மோதி வீழ்ந்தது. அதன் மோதலால் காடு முழுவதும் அதிர்ந்து முனகிற்று. காட்டுக்குள் நாற்கால் பாய்ச்சலில் மிரண்டோடிய யானையை முந்திக் கொண்டு முழங்கிற்று அதன் எதிரொலி.

a-story-about-a-real-man-pics-01-400x225பசிய ஊசியிலை மரங்கள் அடர்ந்த காட்டுக்குள். எதிரொலி அடங்கிவிட்டது. விமானம் வீழ்ந்ததால் முறிந்த மர உச்சிகளிலிருந்து தீப்பொறிகள் போன்று சுடர் வீசிச் சிதறின பனி அடர்கள். மெதுவாகக் கம்பீரமாக நிசப்தம் காட்டில் குடி கொண்டது. ஒரு மனிதன் முனகுவதும், வழக்கத்துக்கு மாறான சந்தடியாலும் சடசடப்பாலும் ஈர்க்கப்பட்டுக் காட்டுக்கு உள்ளிருந்து திறப்பு வெளிக்கு வந்த கரடியின் கனத்த பாதங்களுக்கு அடியே வெண்பனிப் பாளம் நொறுங்குவதும் அந்த ஆழ்ந்த நிசப்தத்தில் தெளிவாகக் கேட்டன.

கரடி பெரியது, முதியது, மயிர் அடர்ந்தது. அழுக்கடைந்த பழுப்பு ரோமக் கற்றைகள் அதன் உட்குழிந்த விலாக்களிலிருந்து துருத்திக் கொண்டிருந்தன. மெலிந்த, தசை நாண் செறிந்த பின்புறத்தில் அவை பனிக்கம்பிகள் போலத் தொடங்கின. இலையுதிர் காலம் தொடங்கி இந்த வட்டாரங்களில் போர்ப் புயல் வீசிக் கொண்டிருந்தது. முன்பு காட்டுக் காவலர்களும் வேட்டைக்காரர்களும் மட்டுமே, அதுவும் எப்போதாவது தான், இந்தக் காட்டுக்குள் வருவது வழக்கம். இப்பொழுதோ இதன் உட்பகுதிக்குள் கூடப் புகுந்து விட்டது போர். அருகே நடந்த சண்டையின் பேரரவம் இலையுதிர் காலத்திலேயே கரடியின் குளிர் கால உறக்கத்தைக் கலைத்து குகையிலிருந்து அதை உசுப்பி விட்டது . இப்போது பட்டினியும் எரிச்சலுமாக, அமைதியின்றிக் காட்டில் அலைந்து திரிந்தது அது. திறப்பு வெளியில், சற்று முன்பு மதயானை நின்ற அதே இடத்தில் நின்றது கரடி. மதயானையின் புதுமை மாறாத, சுவையான மணத்த சுவடுகனை அது முகர்ந்தது. உட்குழிந்த விலாக்களை அசைத்தவாறு பேராசை தோன்றப் பெருமூச்செறிந்தது, உற்றுக்கேட்டது. மதயானை போய்விட்டது. ஆனால் உயிருள்ள, பலவீனமான பிராணி ஒன்றின் ஒலி அருகே கேட்டது. கரடியின் பிடர் மீது ரோமங்கள் குத்திட்டு நின்றன. அது முகத்தை முன்னே நீட்டியது. மறுபடியும் அந்த முறையீட்டொலி திறப்பு வெளியிலிருந்து லேசாகக் காதுக்கு எட்டிற்று.

வறண்ட, கெட்டியான பனிப்புறணி நெறுநெறுத்துத் தகர, மென்மையான பாதங்களை நிதானமாக, எச்சரிக்கையுடன் எடுத்து வைத்து, வெண்பனியில் புதைந்து அசையாது கிடந்த மனித உருவத்தை நோக்கி நடந்தது கரடி….

 

https://www.vinavu.com/2019/02/25/a-story-about-a-real-man-series-part-01/

 

மிகுதி தொடர்களை படிக்க.....

 

https://www.vinavu.com/author/boris-polevoy/

 

 

 

 

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.