Jump to content

பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது


 

பத்துலட்சம் காலடிகள் - ஜெயமோகன்

DSC-OS0916_01.jpg?w=650&h=433&fit=fill

ஔசேப்பச்சன் சொன்னான். “இன்றைக்கு நிறைந்த வெள்ளிக்கிழமை. புனித அந்தோணியார் புண்யவாளனுக்கு உரிய நாள் இது. திரிசந்தியாநேரம் வேறு.ஆகவே என்னைப்போன்ற சத்யவிசுவாசியான மார்த்தோமாக்காரனுக்கு இந்நேரம் மிகமிகப் புனிதமானது.”

“ஆமாம்” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார்.

“இனிமையான கடற்காற்று வீசிக்கொண்டிருக்கும் இந்த அழகான வேளையில் இதைக் கொண்டாடும் பொருட்டு நாற்றமடிப்பதும் பாவத்திலாழ்த்துவதும் அனைத்துக்கும் மேலாக வெள்ளைக்காரப் பெண்களை நினைவில் கொண்டுவருவதுமான அன்னியநாட்டு மதுவகைகளை தவிர்த்து, நம்முடைய சொந்த கொச்சியில் அழகான இயற்கைசூழ்ந்த சாண்டித்துருத்தில் நம்முடைய சொந்த அவறாச்சன் சொந்தமாக வாற்றி எடுத்த தூய்மையான நாட்டுச்சாராயத்தை அருந்தி ஆன்மிக மேன்மையை அடைவதுதான் சிறந்தது என்று நினைக்கிறேன், அல்லேலூயா!”

அவன் கண்ணாடிக்கோப்பையை தூக்கியதும் மற்றவர்கள் “ஆமேன்!” என்றபடி தாங்களும் தூக்கினார்கள்.

“ஈஸோமிஸிஹாய்க்கு ஸ்துதி!” என்று ஔசேப்பச்சன் பெருமூச்சுவிட்டான். “நல்ல சாராயம், அவறாச்சன் நல்ல விசுவாசியான மார்த்தோமா கிறிஸ்தவன். முன்பு புனித தோமாஸ்லீகா கொச்சி மரைன் டிரைவில் பைபிளுடனும் சிலுவையுடனும் வந்து இறங்கியபோது…”

ஸ்ரீதரன் “மார்க்ஸிஸ்டுகள் போய் அட்டிமறிக்கான கூலியை வாங்கியிருப்பார்களே!” என்றான்.

“சேச்சே அவர் கொண்டுவந்தது சிறிய சிலுவை. அவர் அதை தன் கழுத்தில் மாட்டியிருந்தார்”. என்றான் ஔசேப்பச்சன் “அதை இந்த அவறாச்சனின் மூதாதையான ஒருவர் பார்த்து அது என்ன என்று கேட்டிருக்கிறார். அவறாச்சனின் தந்தையின் தந்தை கழுத்தில் முருக்குமரத்தில் செதுக்கிய ஒரு குச்சி தொங்கியது. அது குளிகன் என்ற தெய்வத்திற்கு உரியது. கொந்தை என்று சொல்வார்கள். குளிகன் சாராயத்தின் தெய்வம். உள்ளூரில் வாற்றுசாராயம் காய்ச்சுபவர்கள் சாராயம் திரியாமல் சரியாக முறுகி வரும் பொருட்டு அணிவது. அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு ஆலாலோகுளிகா என்று கூவியபடி கிண்டினால்தான் ஊறல் மனம்கனிந்து சாராயத்தை வெளிவிடத்தொடங்கும். மகனே பாண்டித்தமிழ் எழுத்தாளா, இந்த சாராயம் என்பது என்ன? அது ஒரு தெய்வம்… எல்லா தெய்வங்களும் சாக்கடைபோன்ற கலீஜில் இருந்து எழுபவை…. உங்கள் விஷ்ணுகூட திரிந்த பாலில் இருந்துதானே வந்தார்?”

நான் அதை லாகவமாக கடந்து “தோமாஸ்லீகா என்ன சொன்னார்?” என்றேன்.

“தான் அணிந்திருப்பது சீமைக்கொந்தை என்று தோமாஸ்லீகா சொன்னார். அதை அணிந்துகொண்டு காய்ச்சினால் சாராயத்தில் திராட்சைப் பழத்தின் மணம் வரும் என்று சொல்லி தன் கையிலிருந்த குப்பியை முகர்ந்துபார்க்கச் சொன்னார். அதை முகர்ந்து பார்த்த அவறாச்சனின் மூதாதை மெய்ஞான அனுபூதியை அக்கணமே அடைந்து உடனே அந்த சீமைக்கொந்தையை மாட்டிக்கொண்டார். இவ்வாறாக மார்த்தோமா மதம் என்ற தூய்மையான மதம் இங்கே கால்கோள் கொண்டது” என்றான் ஔசேப்பச்சன் “ஆகவேதான் நாங்கள் எங்கள் மதத்தை ஸ்பிரிச்சுவல் என்கிறோம்.”

நான் “மட்டாஞ்சேரியில் தானே தாமஸ் வந்தார்?” என்றேன்.

“அது வேறு வரலாற்றுநூலில் உள்ளது. வரலாறு வளரும்போது வரலாற்றுநூல்களும் வளர்கின்றன. நமது புண்ணியபாரதத்தின் வரலாற்றை நம்முடைய சொந்த பாரதிய ஜனதாவின் பொன்னுதம்புரான் ஹெய்ல் ஃப்யூரர் வளர்த்துக்கொண்டிருக்கும் இந்த புண்ணியமான காலகட்டத்தில்…”

நான் பேச்சை மாற்றி “இந்த துருத்துகளிலெல்லாம் சாராயம் காய்ச்சுகிறார்கள் இல்லையா?” என்றேன்

“இங்கே சாராயம் வாற்றுதல் ஒரு பண்பாடு… இல்லை ஒரு மதம்” என்றான் ஸ்ரீதரன்.

“நான் என்ன சொன்னேன்? ஆலாலோகுளிகா என்று சொல்வதை அவறாச்சனின் மூதாதையர் ஆலேலூயா என்று மாற்றிக்கொண்டார்கள்… அதைக் குடிக்கவந்த என்னுடைய மூதாதையான ஒச்சப்பன் நாயர் குடித்து வாறாகி அப்படியே ஔசேப்பச்சனாக மாறிவிட்டார். இவ்வாறாக இந்த புனிதமான திரவம் இங்கே உருவாக ஆரம்பித்தது. மகனே, இந்த கேரள கிறிஸ்தவம் என்றால் என்ன? அது நல்ல உள்ளூர் சரக்கு…வீரியம் மிகுந்தது. பால் சகரியா ஒருமுறை சொன்னார்…”

“நாம் சுரியானி கிறிஸ்தவர்களைப்பற்றி இப்போது பேசவேண்டாம்… தெய்வத்தின்மேல் ஆணையாக வேண்டாம்!” என்றான் ஸ்ரீதரன். “சுரியானிகளில் பால் சக்கரியா ஒரு தேவன், அதாவது லூசிஃபரைப்போல வீழ்ச்சியடைந்த தேவன்.”

“அப்படியென்றால் போஞ்ஞிக்கரை ராஃபியை பற்றி பேசலாமா?” என்றான் ஔசேப்பச்சன்.

“அவர் யார்?”

“அந்தக்காலத்தில் அற்புதமான கதைகளை எழுத முயன்றவர்” என்றான் ஔசேப்பச்சன் “பாவம், ஒன்றுகூட சரியாக வரவில்லை. ஆனால் அவருக்கு பொன்குந்நம் வர்க்கிமேல் கடுமையான பொறாமை இருந்தது. ஏனென்றால் அவரும் அற்புதமான கதைகளை எழுத ஆசைப்பட்டவர், நடக்கவில்லை. இரு கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் வசைபாடும்போது மேலே கர்த்தாவின் சபையில் ஒரு மணியோசை எழுகிறது என்பார்கள்…” ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டு “அங்கே நிலைக்காத இடியோசைபோல எப்போதுமே மணிச்சத்தம்தான்… தேவதைகள் எல்லாம் ரொம்பகாலம் முன்னாலேயே செவிடாகிவிட்டனர் என்று புனித ஆமோஸ் புண்ணியவாளன் சொல்லியிருக்கிறார்”

“நாட்டுச்சாராயம் என்பது சனாதன தர்மம்…புளிக்குந்தோறும் இனிப்பது. தாய்மதம் திரும்பிய ஔசேப்பச்சனுக்கு வாழ்த்துக்கள்” என்றான் எலி ராஜு. எலி என்றபெயரில் அவன் எழுதிய கதைக்குப்பின் அந்தப்பெயர் அமைந்தது. அது ஓர் எலியின் சுயசரிதம்.

நான் பேச்சை வேறெங்காவது கொண்டுபோக ஆசைப்பட்டேன். ஏற்கனவே நாட்டு சாராயம். இதில் கிறிஸ்தவ இந்து விவாதம் என்றால் பாத் டப்பில் எண்ணையை ஊற்றி நிறைத்து உள்ளேபடுத்து உடலுறவு கொள்ளும் ஒரு தாய்லாந்து முறை உண்டு என ஔசேப்பச்சன் முன்பு சொன்னது போலத்தான். “நடவடிக்கைகள் நீண்டு நீண்டு செல்லும், பொன்னுமகனே, இலக்கு எட்டப்படாது.”

கடலில் சென்றுகொண்டிருந்த பெரிய படகொன்றைச் சுட்டிக்காட்டி “இத்தனைபெரிய படகு… அதுவும் மரத்தாலானது… இதையெல்லாம் இப்போது கட்டுகிறார்களா?”என்றேன்.

நினைத்தது போல ஔசேப்பச்சன் அந்தப்பக்கமாக திரும்பினான். “அதன்பெயர் பத்தேமாரி… அரேபியப்பெயர்… தெரியாதவர்கள் அதை உரு என்கிறார்கள். உரு என்றால் பெரிதாகக் கட்டி எழுப்பிய ஒன்று என்று பொருள்… அது கடலில் தொலைவில் அப்படி தெரிகிறது. கடல்மேல் எல்லாமே சிறியவைதான். அதை நீ கரையில் வைத்துப் பார்க்கவேண்டும். ஒரு ஐந்துமாடி கட்டிடம் அளவுக்கு இருக்கும்.”

“முழுக்க மரம்தான் அல்லவா?” என்றேன்.

“முழுக்க முழுக்க மரம்…ஒரு ஆணிகூட கிடையாது. ஆப்புகள்தான் எல்லாமே. ஆகவே நூறு ஆண்டுகள் சாதாரணமாக ஓடும்…இப்போது மாலத்தீவுக்கு மங்களூரிலிருந்து போய்க்கொண்டிருக்கும் பத்தேமாரிகளில் இருபது உருப்படிகளாவது நூறாண்டு கடந்தவை.”

“இங்கே செய்கிறார்களா?” என்றேன்.

இங்கே நம் சொந்த கோழிக்கோட்டில் போப்பூரில் செய்கிறார்கள். அதைச்செய்பவர்களுக்கு மாப்பிள்ளைக் கலாசிகள் என்று பெயர். உள்ளூர் தச்சர்களுடன் இணைந்து அதைக் கட்டுகிறார்கள். கலாசிகள் என்றால் தச்சர்கள், வேலைக்காரர்கள். அவர்கள் இஸ்லாமுக்கு முன்பிருந்தே அரேபியாவுடன் தொடர்பு உடையவர்கள். சோழர்களின் காலத்தில்தான் பெரிய அளவில் வளர்ந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் பீரங்கிகளுடன் ஐரோப்பியப் படகுகள் வந்து மேற்குக்கடற்கரையை கைப்பற்றிக் கொள்வது வரை அரபிகடலே அவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது…. அரபிக்கடல் நம் வீட்டுமுற்றம் என்று ஒரு மாப்பிள்ளைப்பாட்டு சொல்கிறது.

அப்போது அவர்கள் இந்த மரக்கலம் கட்டும் கலையை பயின்றார்கள். இது பார்க்க ஒரு கோப்பை போல இருக்கிறது. நீ ஒன்றை கவனிக்கவேண்டும். ஒரு நல்ல புயலின்போது இந்தப் பத்தேமாரியின் பள்ளையின் மேல் வந்து அறையும் ஓர் அலைக்கு பத்து டன் எடை வரை இருக்கும்… பத்து டன்! ஒரு பலகை கொஞ்சம் விலகி இடைவெளிவிட்டால் அதன் வழியாக உள்ளே பீரிடும் தண்ணீர் ஒரு டன் எடையுள்ள பொருளை தூக்கி வீசும் ஆற்றலுடன் இருக்கும்… ஒருமணிநேரத்தில் பத்தேமாரி நீரில் மூழ்கிவிடும்” ஔசேப்பச்சன் கடைசி மிடறை விழுங்கி “தீயை கொண்டுவந்து வைத்திருக்கிறான் அவறாச்சன். யகோவாவே திரவ வடிவில் எழுந்து வந்ததுபோல இருக்கிறது” என்றான்.

“சொல்லு ஔசேப்பச்சா” என்றேன்.

“அதாவது என்ன சொல்கிறேன் என்றால் என்று ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டான் “யோசித்துப்பார், எட்டு டன் எடையை தாங்கும் மரப்பலகை உண்டா? எத்தனை தடிமனாக போட்டாலும்?”

“இல்லை” என்றேன்.

“பிறகு எப்படி அடிதாங்குகிறது?”

“எப்படி?”

“கணக்கு மச்சானே கணக்கு… அதெல்லாம் தமிழில் கதை எழுதும் திருவிதாங்கூர் மூட நாயர்களுக்கு புரியாது… குமாரன் மாஸ்டர் , இதைக் கேளுங்கள். திருவிதாங்கூர் நாயர் என்று எப்படி ஜானம்மை கண்டுபிடிக்கிறாள் தெரியுமா? முடிச்சையோ ஹூக்கையோ அவிழ்க்கும் கணக்கு தெரியாமல் தடுமாறி கத்தி தேடுவார்கள்.”

”கணக்குதெரிந்த ஒரே திருவிதாங்கூர் நாயர்தான் இருந்தார்’ என்றார் குமாரன் மாஸ்டர் “பழைய திருவிதாங்கூர் பேஷ்கார் பி.சங்குண்ணி மேனன். எல்லா கணக்குகளையும் விரல்விட்டு எண்ணுவார். பாவம் ஒருகணக்குகூட சரியாக வரவில்லை.”

“ஏன்?”

”அவருக்கு ஒருகையில் ஆறுவிரல்’ என்றார் குமாரன் மாஸ்டர் ‘‘அதன்பின் அது சங்குண்ணிக் கணக்கு என்று தனி வகையாக அரசாணையால் அங்கீகரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் திருவிதாங்கூருக்கு அந்தககாலத்தில் படெஜெட் போட்டார்கள். அது எப்போதுமே மிச்ச பட்ஜெட் தெரியுமா? அவர் போனபிறகுதான் கம்மி பட்ஜெட் ஆரம்பித்தது.”

“நீ சொல்… என்ன கணக்கு?” என்றான் ஸ்ரீதரன்.

“அதாவது” என்று ஔசேப்பச்சன் ஏப்பம் விட்டான். “என் உட்பகுதியே ஒட்டுமொத்தமாகப் பொசுங்கிவிட்டது என்று நினைக்கிறேன். புகை வருகிறது…. இப்போது என் இதயம் சேக்ரட் ஹார்ட் போல எரிந்துகொண்டே இருக்கிறது.”

“சொல்கிறாயா இல்லையா?”

“அதாவது…” என்றான் ஔசேப்பச்சன். “அதன் வடிவத்தின் முதல் அம்சம் அதன் வளைவு. வளைந்த பரப்பு மிகச்சிறப்பாக எடைதாங்கும் என்று தெரிந்திருக்குமே… அரேபியர்களின் கட்டிடக்கலையே வளைவுகளால் ஆனதுதான்…”

“அவர்கள் வளைவுகளை ரசிப்பவர்கள்” என்றான் ஸ்ரீதரன்.

ஆமாம் வெறும் செங்கல்லைக் கொண்டே அவர்கள் வளைவுகளை அமைத்து மிகப்பெரிய கூரை கொண்ட டோம்களை கட்டியிருக்கிறார்கள். பீஜப்பூரில் உள்ள கோல்கும்பாஸ் மசூதியை நீ பார்க்க வேண்டும். அது பெரிய மைதானம் போல இருக்கும். மேலே வானம் போல வளைந்த கூரை. வெறும் செங்கல் அடுக்கி கட்டியது. உத்தரம் கழுக்கோல் சட்டம் ஏதுமில்லை. ஏனென்றால் வளைவுதான்… வளைந்த பரப்பு ஒன்றையொன்று கவ்விக்கொண்டு அப்படியே நிலைகொள்வது. ஆகவேதான் பரம காருணிகனாகிய கிறித்தவர்களின் பிதா வானத்தை வளைவாக படைத்தார்.

ஔசேப்பச்சன் தொடர்ந்து சொன்னான். பத்தேமாரியின் அனைத்து இடங்களும் வளைவாகவே இருக்கும். துல்லியமான அழகான வளைவு. அந்த வளைவை உள்ளே பல்லாயிரம் மரச்சட்டங்கள் தாங்கியிருக்கின்றன. ஒரு பத்தேமாரிக்குள் சென்று பார்க்கவேண்டும் நீ. அதன் அடிப்பகுதி முழுக்க குறுக்கும்நெடுக்குமாக மரச்சட்டங்கள். தடிமனானவை அல்ல. நம் தொடையளவு வருபவை, அவ்வளவுதான். ஆனால் ஆயிரக்கணக்கில். முற்றிய புளியமரத்தால் செய்யப்படுபவை அந்த சட்டங்கள். இப்போது தேக்கு போடுகிறார்கள்.

அவற்றை மேலே நின்று பார்த்தால் ஒரு பெரிய வலை போல தெரியும். அல்லது விறகுக்குவியல்போல. அள்ளி அள்ளி வைத்து சேர்த்து பொருத்தி நிறுத்தியிருக்கிறார்கள் என்று தோன்றும், அப்படி அல்ல. மிகமிக நுட்பமான கணக்குகள் அதற்கு உண்டு. அந்தக் கணக்குகள் எல்லாம் பாடல்களாக அவர்களிடம் இருக்கின்றன. கிழட்டு உஸ்தாத்களுக்கு அவை தெரியும். ஆனால் அவர்களுக்கு இந்தக் கணக்குதான் தெரியும், ஒரு காலிச்சாயா இரண்டு பருப்பு வடைக்கு கணக்கு கேட்டால் கைவிரல்களை மடக்குவார்கள், மூச்சுவாங்கும்.

அவர்களின் கணக்கு பாட்டு வடிவில் இருக்கும் ‘ஒந்நுதொட்டு மூநல்லோ யா அல்லா- ஒந்நில்கொண்டது எண்பதல்லோ! மூநில் நிந்நது நாப்பதல்லோ யா ரஹ்மான்- மூநும் கூட்டி முப்பதல்லோ’ இந்தமாதிரி. இது சும்மா நான் பாடுவது. ஆனால் கேட்டால் இப்படி இருக்கும். நீளநீளமாக போகும். அந்த அமைப்பை ஒரு அறிவியல் என்று சொல்லமாட்டேன். அறிவியல் என்றால் அதற்கு தியரி இருக்கும். இது வெறும் அனுபவ ஞானம். எப்படி சிலந்தி வலைபின்ன கற்றுக் கொண்டதோ, தூக்கணாங்குருவி கூடுகட்ட கற்றுக் கொண்டதோ அப்படி. பல்லாயிரம் பேரின் பலநூறாண்டுக்கால கூட்டு அறிவால் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தது அந்த அறிவு. தனியொருவருக்கு அது முழுமையாகத் தெரியாது. எந்த நூல்களிலும் அது இல்லை. ஆனால் கூட்டாக மாப்பிளைப் பண்பாட்டில் அது இருந்து கொண்டும் இருக்கிறது.

அந்த சட்டங்களின் அமைப்பை இன்றைய அறிவியலின் சொற்களைக் கொண்டு இப்படிச் சொல்லலாம். எடைபரவல். வெளியே அறையும் அலையின் அடியின் எடையை இந்த சட்டங்கள் பகிர்ந்து பகிர்ந்து பகிர்ந்து இல்லாமலாக்கிவிடுகின்றன. நான் கடலில் செல்லும்போது பத்தேமாரியின் இந்த சட்டங்களுக்குள் சென்றிருக்கிறேன். அந்த சட்டங்கள் மெல்ல அதிரும். மிகமெல்ல. அவற்றில் நின்றால் நம் காலில் ஒரு சின்ன மின்சாரம் பாய்ந்த அதிர்வு ஏற்படும், அவ்வளவுதான்.

“அங்கே போகமுடியுமா?” என்றான் எலி.

மச்சானே, அதுதான் மாப்பிள்ளைகள் இரவு உறங்கும் இடம்… அங்கே இருந்து சாராயம் குடிப்பது மிகச்சிறந்த அனுபவமாக இருக்கலாம். காமம் அதைவிடச் சிறப்பாக இருக்கலாம். ஏனென்றால் கடலின் அதிர்வும் கூடவே இணைகிறது. ஆனால் மாப்பிள்ளைகளுக்கு ரசனை கிடையாது. அவர்கள் அதையெல்லாம் அனுமதிப்பதில்லை.

“அரசிகர்கள்” என்றார் குமாரன் மாஸ்டர்.

”நான் அந்தச் சட்டங்கங்களைப் பார்த்து வியந்து வியந்து நின்றிருக்கிறேன். ஒரு பத்தேமாரி அலையில் சென்று பாறையில் நூறுமைல் வேகத்தில் முட்டினால்கூட பெரிய உடைவு உருவாகாது. இத்தனைக்கும் வெளிப்பக்க மரம் ஆறு இஞ்சு கனம்தான் இருக்கும். தேக்கு மரத்தால் செய்கிறார்கள். பழையகாலத்தில் அயினி மரத்தால் செய்தார்கள்” என்றான் ஔசேப்பச்சன்.

“இப்போது செய்கிறார்களா?”

பத்தேமாரிக்களை இப்போது வணிகரீதியாகச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். சிறிய படகுகளைச் செய்கிறார்கள். ஆனால் இன்றைக்கு அவற்றுக்கும் மார்க்கெட் இல்லை. ஆனால் ஓர் அரபு ஷேக் கேட்டார் என்று கடைசியாக 2014 வாக்கில் ஒன்றை கடலில் இறக்கினார்கள். பத்தேமாரிகள் இன்றைக்கு ஒருவகை ஆடம்பரங்கள். ஆறன்முளை கண்ணாடி போல ஒரு வகையான கலைப்பொருட்கள் அவை. ஏனென்றால் பெரும்பாலும் கையாலெயே செய்யப்படுகின்றன. அதோடு பத்தேமாரிக்களை செய்ய மிகமிக அவசியமான ஒன்று இன்றைக்கு இல்லாமலாகிவிட்டது.”

என்ன என்று நாங்கள் கேட்கவில்லை. ஔசேப்பச்சன் நாடக இடைவெளிக்காக சற்றே சாராயம் விட்டு குடித்து நிதானமாக ஏப்பம் விட்டான்.

பிறகு “மாப்பிளைகளின் சமூக அமைப்பு” என்றான். “அது மிகமிக உறுதியான நெறிகளால் ஆனது. தலைமையும் துணைத் தலைமையும் குட்டித்தலைமைகளும் வட்டாரத் தலைமையும் எல்லாம் உள்ள பெரிய அமைப்பு அது. குறைந்தது ஆயிரம் ஆண்டுகளாக அது உறுதியாகச் செயல்பட்டிருக்கிறது. அதை ஒரு தொழில் கூட்டமைப்பு என்று சொல்லலாம். ஒரு கல்விநிறுவனம் என்றும் சொல்லலாம். இஸ்லாமுக்குள் ஒரு துணைச்சாதி அல்லது துணைச்சமூகம் என்றும் சொல்லலாம். ஆனால் அது மெல்லமெல்ல இல்லாமலாகியது. கால யவனிகைக்குள் சென்றது”. அந்த சொல்லை விரும்பிய ஔசேப்பச்சன் கையை தூக்கி “கால யவனிகை… அதாவது காலமாகிய யவனிகை!” என்றான். “காலத்தை துணியால் திரையாக ஆக்கி…” ஏப்பம் விட்டு “நல்ல தீ போன்ற சாராயம்!” என்றான்.

“ஏன்?” என்றேன்.

பலகாரணங்கள் முதல் விஷயம், போப்பூர் துறைமுகத்தின் அழிவு. அருகே கோழிக்கோடு துறைமுகம் மேலெழுந்து வந்தது. போப்பூர் பழையபாணி துறைமுகம். அன்றெல்லாம் துறைமுகங்கள் ஆற்றின் அழிமுகத்தில் அமைந்திருக்கும். கடலோதம் ஏற்பட்டு நீர் உள்ளே வரும்போது கப்பல்கள் ஆற்றுக்குள் நுழையும், துறைமேடைகளுக்கு வந்து சேரும். அணைகள் வந்ததும் ஆறுகளில் நீர் குறைந்தது. அழிமுகங்கள் மணல்மேடுகளாக மாறின. போப்பூர் சாலியார் ஆற்றங்கரையில் இருந்தது. அந்த ஆறு இன்று ஆழமானதுதான், ஆனால் அன்று பெரிய கலங்கள் உள்ளே செல்லும் அளவு இருந்திருக்கிறது.

அதோடு போர்ச்சுக்கல்காரர்களும் பிறகு பிரிட்டிஷ்காரர்களும் மாப்பிள்ளைகளை ஒடுக்கினார்கள். ஆயிரத்தி எழுநூறு முதல் இருநூறாண்டுகள் பிரிட்டிஷ்காரர்கள் மாப்பிள்ளைகளை அழித்து ஒழிக்க போரிட்டிருக்கிறார்கள். குஞ்ஞாலி மரைக்காயர், வாரியங்குந்நத்து ஹாஜி போன்ற பெரிய பெரிய கடலோடிகள் எல்லாம் பிரிட்டிஷாரால் அழிக்கப்பட்டார்கள். மாப்பிள்ளைகளின் கடல் ஆதிக்கம் அழிந்தது. மாப்பிள்ளைகள் வேறுவேறு வேலைகளுக்குச் சென்றார்கள். சிறுவணிகர்களானார்கள். அதோடு அந்த சமூகக்கட்டமைப்பு உடைய தொடங்கியது.

பிரிட்டிஷார் அளித்த ஆங்கிலக்கல்வி அவர்களின் மரபான கல்வியை அழித்தது. ஒரு குழந்தை மாப்பிள்ளைகளின் மரபுக்கல்வியையும் பிரிட்டிஷாரின் பள்ளிக்கல்வியையும் ஒரே சமயம் கற்றுக்கொள்வது என்பது சாத்தியமே அல்ல.கடைசியாக இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள். கிலாஃபத் இயக்கத்துடன் அவை இங்கே வந்து வலுப்பெற்றன. அவை இஸ்லாமை ஒற்றைப்படையான ஒரே மதமாக ஆக்கின.மாப்பிள்ளைகளின் தனிப்பண்பாடு தவறானது என்றும் ஆசாரவிரோதம் என்றும் கருதப்பட்டது. அவ்வளவுதான், ஒரு ஆயிரம் ஆண்டுக்காலம் மரபு அழிந்தது.ஆனாலும் பெருமழையின் தூவானம் எளிதில் நின்றுவிடுவதில்லை. நான் மாப்பிள்ளைகளின் கணக்குகளை நேரில் காண வாய்த்தது. முப்பதாண்டுகளுக்கு முன்பு. அது ஒரு காலம்.

“ஔசேப்பச்சன் கதைக்கு வந்துவிட்டான்… ” என்றான் ஸ்ரீதரன் “அவனுடைய வீரதீர சாகசங்கள்… அவன் வென்றெடுத்த களங்கள்… பெண்கள் உட்பட”

“டேய் நாயரே, நீ வந்தால் நக்கினோமா குடித்தோமா என்று இருக்கவேண்டும். சத்யகிறிஸ்தியானிகளை பற்றிபேசினால் இங்கே ரத்த ஆறு ஓடும்” என்றான் ஔசேப்பச்சன் “தோமாஸ்லீகா இங்கே வந்தது நாயர்களிடம் பேச்சு கேட்பதற்காக இல்லை.”

“ஸ்ரீதரா, நீ பேசாமல் இரு… சொல்லு ஔசேப்பச்சா.”

“அதாவது இது நடந்தது மங்களூரில், 1988 ல். மிகச்சரியாக தேதியைச் சொல்கிறேன், ஜூலை 19 ஆம்தேதி. எப்படி நினைவிலிருக்கிறது என்றால் 1988 ஜூலை 8 ஆம்தேதிதான் கேரளத்தையே உலுக்கிய பெருமண் ரயில் விபத்து நடந்தது.”.

“ஆமாம், நினைவிருக்கிறது” என்று குமாரன் மாஸ்டர் சொன்னார்.

“1988 ஜூலை மாதம் எட்டாம்தேதி மதியம் பெங்களூரிலிருந்து திருவனந்தபுரம் செண்டிரலுக்கு போய்க்கொண்டிருந்தது ஐலண்ட் எக்ஸ்பிரஸ்” என்று ஔசேப்பச்சன் சொன்னான். “ஜூலை மாதம் என்றால் கேரளத்தில் தென்மேற்கு மழை வலுவடைந்திருக்கும் காலம். மதியம் ஒன்றேகால் மணிக்கு ரயில் கொல்லம் பெரிநாடு பக்கத்திலுள்ள அஷ்டமுடிக்காயலின் மேல் ரயில்வே பாலத்தில் மெல்லச் சென்றுகொண்டிருந்தது. என்ன நடந்தது என்று தெரியாது. ரயில் தடம்புரண்டது. பொதுவாக ரயில்கள் தடம்புரண்டால் கவிழ்ந்து அங்கேயே கிடக்கும். அதுவும் பாலத்தின்மேல் மிகமெல்லச் செல்லும்போது தடம்புரண்டு நின்றிருக்கவே வாய்ப்பு ஆனால் எஞ்சினை ஒட்டிய பதினான்கு பெட்டிகள் காயலில் தூக்கி வீசப்பட்டன. அவை அறுபதடி ஆழத்தில் மூழ்கிச்சென்றன.”

“நல்லவேளையாக அங்கே அருகிலேயே மன்றோ துருத்து என்னும் கடலோரக் கிராமம் இருக்கிறது. அங்கிருந்து தேர்ந்த நீச்சல்வீரர்களான மீனவர்கள் வந்து உயிரைப்பணயம் வைத்து காயலில் பாய்ந்தனர். நம்பமுடியாத அளவுக்கு உயிர்கள் காப்பாற்றப்பட்டன. கொல்லம் நேவி காம்பிலிருந்து டைவர்கள் அரைமணிநேரத்திற்குள் வந்தனர். அவர்களாலும் பலர் காப்பாற்றப்பட்டனர். ஆனாலும் நூற்றி ஐந்துபேர் இறந்தனர். இருநூறுபேர் காயமடைந்தனர்.”

“ஒரு டொர்னடோ அங்கே அடித்திருக்கலாம் என்றார்கள் இல்லையா?” என்று குமாரன் மாஸ்டர் கேட்டார்.

அப்படி சொன்னார்கள். ஆனால் விசாரணைக்கமிஷன் அப்படி உறுதியாகச்சொல்லிவிட முடியாது என்றே சொன்னது. இன்றைக்கும் பெருமண் விபத்து ஒரு மர்மம்தான். சரி, நான் சொல்ல வருவது அதுவல்ல. என் கதை மங்களூரில் நடந்தது. நான் அப்போது அங்கே கிரைம் பிராஞ்ச் டிஎஸ்பி. டிஐஜி அஃபோன்ஸோ ரொசாரியோவின் தலைமையில் வேலை. குடி, பெண்கள், ஞாயிறுதோறும் பாவமன்னிப்பு. மச்சானே வாழ்க்கை அற்புதமாகச் சென்றுகொண்டிருந்தது என ஔசேப்பச்சன் தொடர்ந்தான்.

அன்றைக்கு மங்களூரில் நேத்ராவதி ஆற்றின் அழிமுகத்திலுள்ள மணல்மேட்டில் ஒரு சடலம் ஒதுங்கியது. அழுகி, வயிறு உப்பி, கண்கள் பிதுங்கிய சடலம். வயிற்றில் ஊறும் வாயுக்களால் பலூன் ஆக மாறி மிதந்து அலைகளில் கரையொதுங்குவது இந்த பிணங்களுக்கு பிடித்தமான வழக்கம். மாஸ்டர், புத்தர் சொல்லியிருக்கிறார் அல்லவா? கடல் பிணங்களை திருப்பித் தந்துவிடுகிறது என்று?

“புத்தர் அப்படி நிறைய சொல்லியிருக்கிறார். அவர் எங்கே கடலைப்பார்த்தார்?. பிகாரில் ஏதோ ஏரியைச் சொல்லியிருப்பார்.. நீ கதையைச் சொல்லுடா நஸ்ரானி.”

“சரி, சொல்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன். “அது ஓர் இளைஞனின் சடலம்.இருபதுக்குமேல் வயது. சிவந்த நிறம். சின்ன உடல். உடலில் காயம் ஏதுமில்லை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டிலும் காயம் எதுவும் காட்டப்படவில்லை. நுரையீரலில் நீர் நிறைந்திருந்தது. ஆகவே மூழ்கிச்செத்தான் என்பதுதான் முடிவு.”

அது வழக்கம்தான், ஏனென்றால் மங்களூரில் நேத்ராவதிக்குமேல் உள்ள ரயில்வே பாலம் மிகமிக நீளமானது. அங்கிருந்து ஒருபக்கம் ஆற்றையும் மறுபக்கம் கடலையும் பார்ப்பது மிக அழகான காட்சி. அதைப்பார்க்க ஒவ்வொருநாளும் அங்கே பலர் நடந்துசெல்வார்கள். மது அருந்திவிட்டுச்செல்பவர்களோ விளிம்புகளில் ஏறிநின்று வேடிக்கை பார்ப்பவர்களோ தவறிவிழுவதுண்டு. திடுமென ரயில் வருவதைக்கண்டு பாய்பவர்களும் உண்டு. அங்கே பலவகையான நீரோட்டங்கள் உள்ளன. உடல்கள் சென்று மாட்டிக்கொள்ளும் மணல்மேடுகள் நீருக்குள் புதிது புதிதாக உருவாகிக்கொண்டே இருக்கும். ஆண்டுக்கு சராசரியாக முப்பது உயிர் அங்கே போவது வழக்கம்.

அவ்வாறுதான் அந்த வழக்கும் முடிந்திருக்கும். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் எழுந்தது, இதெல்லாம் குற்றவழக்குகளில் அடிக்கடி நிகழும். குற்றங்களிலும் சரி ,அவை கண்டுபிடிக்கப்படுவதிலும் சரி ,கடவுளுக்கு ஓர் இடமுண்டு என்று நாங்கள், மெய்ஞானிகளான சத்ய கிறிஸ்தியானிகள், நம்புவதற்கான காரணம் இதுதான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் ஒரு சின்ன விஷயத்தை பதிவுசெய்யலாமா வேண்டாமா என்று டாக்டருக்கே சந்தேகம். எஸ்.ஐயிடம் அதைக் கேட்டார். எஸ்.ஐக்கும் சந்தேகம், அவர் என் வரை கொண்டுவந்தார்.

சந்தேகம் முதலில் வந்தது போஸ்ட்மார்ட்டம் உதவியாளராகிய முகமது அப்துல் காதர் என்ற மம்முக்காவுக்கு. அவர் மிகவும் மூத்தவர். போஸ்ட்மார்ட்டத்தில் உதவத்தொடங்கி நாற்பதாண்டுக்கால அனுபவம் கொண்டவர். அவர் ஒரு சின்னவிஷயத்தை கண்டுபிடித்தார். பிணத்தின் வலக்கையின் சுட்டுவிரலில் ஒரு மெல்லிய நூல் இருந்தது. ஏதோ ஆடையிலிருந்து வந்தது. சரிகைபோல மின்னும் பட்டு நூல் அது.

அந்த இளைஞன் அணிந்திருந்த ஆடையிலிருந்து வந்தது அல்ல அது. அவன் விழுந்தபோது அள்ளிப்பற்றிய எந்த இடத்திலும் அந்த நூல் இல்லை. அது வேறு எவருடையவோ ஆடையிலிருந்து அவன் கையில் வந்தது. மரணத்தருவாயில் அவன் அந்த ஆடையை அள்ளிப்பிடித்திருக்கிறான். அந்த ஆடைக்குரியவன் யார், அவன் இவனை தள்ளிவிட்டானா? தவறிவிழுந்தான் என்றால் உடனிருந்த அவன் ஏன் அதை போலீஸுக்கோ பிறருக்கோ தெரிவிக்கவில்லை? அப்படியென்றால் இது கொலையா?

மம்முக்கா இன்னொன்றும் சொன்னார். மிகவும் தயங்கி, தன்னுடைய ஒரு பொதுவான ஐயமாக. “அந்த நூல் பட்டுச்சரிகையால் ஆனது. அது பொதுவாக இஸ்லாமியர் அணியும் துருக்கித் தொப்பியில் உள்ளது. மிக விலையுயர்ந்த தொப்பிகள் அவை. அவற்றை இஸ்லாமியர் அல்லாத பிறர் பயன்படுத்துவதில்லை” என்றார்.

அங்கிருந்து வழக்கு தொடங்கியது. அந்த நூலை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பதிவுசெய்து கொண்டேன். சந்தேகமரணம் என்று குறித்துக் கொண்டேன். இறந்தவன் யார் என்று விசாரிக்கலானேன். கேரளம், கர்நாடகம் இரு மாநிலங்களிலும் காணாமல் போனவர்கள் பற்றிய புகார்கள் அனைத்தையும் விசாரித்தோம். அதை முதலாண்டு, மேலும் முந்தைய இரண்டு ஆண்டுகள், மேலும் முந்தைய ஐந்தாண்டுகள் என்று விரித்துக்கொண்டே சென்றோம். காணாமலானவர்களின் பட்டியலில் அவன் இல்லை.

என் சீனியர் ரொசாரியோ அப்போது இல்லை, டெல்லியில் சிபிஐயில் ஒர் அசைன்மெண்டுக்காக சென்றிருந்தார். அவர் போலீஸின் எண்ணிக்கையே அதன் முதல் பலம் என்பார். நான் அவர் சொன்னபடி போலீஸின் எண்ணிக்கையை நம்பினேன். மிகமிக விரிவாக வலையை விரித்தேன்.அன்றைய வழக்கம் போட்டோவுடன் போலீஸே ஒவ்வொரு இடமாகச் சென்று விசாரிப்பதுதான். இன்றைக்குபோல சிசிடிவி எல்லாம் இல்லை. பஸ்ஸ்டாண்டுகள், ரயில்நிலையங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், வெற்றிலைபாக்குக் கடைகள், மதுக்கடைகள் என அந்த விசாரணை வளர்ந்து செல்லும். சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ முடிந்தவரை அதிகமான பேரிடம் நேரில் கேட்பதுதான் ஒரே விசாரணைமுறை, அது மிக வெற்றிகரமான முறை, நம்புங்கள்.

பொதுவாக இந்தமாதிரி பரபரப்பான இடங்களில் எல்லாம் முகங்கள் வந்தபடியே இருக்கும். ஆகவே எந்த முகமும் எவர் நினைவிலும் பதிந்திருக்காது. இரண்டே விஷயங்களை நம்பித்தான் இந்த விசாரணை. ஏதாவது ஒரு சிறிய விஷயம் நடந்து அதனூடாக அந்த முகம் எவர் நினைவிலாவது பதிந்திருக்கலாம். அல்லது சிலருக்கு இயல்பாகவே முகங்களை நினைவுபடுத்திக்கொள்ளும் திறன் இருக்கும். மிக அசாதாரணமான திறன் கொண்டவர்கள் உண்டு. தர்மஸ்தலாவில் ஒரு ஓட்டல் உரிமையாளர் அவர் ஓட்டலில் சாப்பிட்ட அத்தனை முகங்களையும் நினைவில் வைத்திருப்பார், எத்தனை ஆண்டுகளானாலும் சொல்வார். அவர் அதற்கு முயற்சி செய்வதே இல்லை. அது அவருக்கு ஒரு மனநோய் போல.

ஒருமாதம் வரை வலை விரிந்துசென்றது. இந்தவலையை விரிப்பதில் ஒரு மெதடாலஜி உண்டு. முதலிலேயே நுணுக்கமாக விசாரிக்க மாட்டோம், அது நேரவிரயம். முதலில் சரசரவென மங்களூரின் முக்கியமான இடங்களில் பொதுவாக விசாரிப்போம். அதாவது மீன் துள்ளும் மையங்களில் மட்டும் தூண்டில் போடுவது போல. அதன்பின் அடுத்த சுற்று கொஞ்சம் விரிவாக, மொத்த மங்களூரையும் கணக்கில்கொண்டு விசாரிப்போம். அதை சுற்றுவலை வீசுவது என்போம். எல்லாரிடமும் கேட்போம். மூன்றாம்சுற்று மிக நுணுக்கமாக அணுவணுவாக விசாரிப்பது. அதாவது மடிவலை வீசுவது. அதில் நெத்திலி குப்பை எல்லாம் மலைமலையாகச் சேரும். ஆராய்ந்து எடுக்கவேண்டும்.

அதிலும் ஒன்றும் சிக்கவில்லை என்றால் நேரடிவிசாரணையை நிறுத்திவிடுவோம். அத்தனைபோலீஸ்காரர்களும் அந்த முகத்தை நினைவில் வைத்திருக்கவேண்டும் என்று சொல்வோம். அவர்கள் தேடிக்கொண்டே இருக்கவேண்டும், அவர்களை அறியாமலேயே தேடல் நடக்கவேண்டும். யாரை எதன்பொருட்டு விசாரித்தாலும் ஒரு கேள்வி இதைப்பற்றியும் இருக்கவேண்டும். அது பல மாதங்கள், பல ஆண்டுகள் அப்படியே நீளமுடியும். ஒரு இயந்திரம் ஓடுவதுபோல நாம் நிறுத்துவது வரை அது இயங்கிக்கொண்டே இருக்கும்.

தேடலின் பரப்பு, நுணுக்கம் எவ்வளவு முக்கியமோ அதேபோல கால அளவும் முக்கியம். நுணுக்கம், பரப்பு, காலம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பெருக்கிக்கொள்ளும்போது மிகவிரிவான வெளி உருவாகிறது. அதில் நாம் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் கூடிக்கூடி வருகின்றன. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுகூட கண்டுபிடித்திருக்கிறோம்.

இந்தப்பையன் யார் என்று ஏழுமாதம் கழித்து கண்டுபிடித்தோம். அவன் பணம்பூர் கடற்கரையில் ஓர் ஓட்டலில் சாப்பிட்டிருக்கிறான், அங்கே அவனுடைய ஒரு பர்ஸை மறந்துவிட்டுவிட்டான். சர்வர் எடுத்து கல்லாவில் கொடுத்திருந்த அந்த பர்ஸை திரும்பி வந்து வாங்கிச் சென்றிருக்கிறான். சர்வருக்கு இருபதுரூபாய் டிப்ஸ் கொடுத்திருக்கிறான். அந்தப் பர்ஸில் பணம் ஏதும் இல்லை. அந்த சர்வர் அவன் போட்டோவை அடையாளம் கண்டான். அது வேறு ஒரு திருட்டு வழக்கு விசாரணையின்போது தற்செயலாக நடந்தது.

பணம்பூரைச் சுற்றி விசாரணையை மீண்டும் தொடங்கினோம். மீண்டும் எண்ணிக்கையின் வலிமையை நம்பிய தேடல்தான். எல்லா கடைகளிலும் ,எல்லா ஓட்டல்களிலும், எல்லா விடுதிகளிலும், எல்லா வீடுகளிலும் விசாரித்தோம். இரண்டுவாரம் கழித்து பணம்பூர் அருகே ஒரு சிறிய ஓட்டலில் அவன் தங்கியிருந்ததைக் கண்டுபிடித்தோம். அந்த ஓட்டலின் உரிமையாளரால் அவனை நினைவுகூர முடியவில்லை. ஆனால் அங்கிருந்த ஒரு பையனின் நினைவில் அவன் இருந்தான். அவன் தங்கியிருந்த அறையையும் பையன் நினைவில் வைத்திருந்தான். 2A. அதைக்கொண்டு ரிஜிஸ்டரில் அவன் பதிவுசெய்த விலாசத்தைக் கண்டுபிடித்தோம். அது போலி விலாசம்.

ஆனால் போலிவிலாசங்களேகூட மிகமிகச் சிறந்த தகவல்கள்தான். எவரானாலும் முழுக்கமுழுக்க கற்பனையான போலி விலாசத்தை கொடுக்கமுடியாது. எந்தப் போலிவிலாசத்திலும் பெரும்பகுதி உண்மையாகவே இருக்கும். உண்மையான விலாசத்தை கொஞ்சம் மாற்றியிருப்பார்கள். காந்திநகரை நேரு நகர் என்றும் ஏ.கே.ஜி நகர் என்றால் இ.எம்.எஸ் நகர் என்றும் மாற்றும் அளவுக்குத்தான் மக்களின் கற்பனை ஓடும். காஞ்சாங்காடு என்றால் நீலேஸ்வரம் என்று எழுதியிருப்பார்கள். அதுவும் ஒரு ரிஜிஸ்டரில் சரசரவென பெயர் எழுதி விலாசம் நிரப்பும்போது கைபோன போக்கில் எழுதுவார்கள். அப்போது கலைமகள் கையருகே வந்து நின்றிருக்க வாய்ப்பில்லை.

அவன் எழுதிய விலாசத்தில் தலைச்சேரி என்று இருந்தது. ஆகவே கண்ணூர் முதல் வடகரை வரை உள்ள இடங்களை வட்டமிட்டோம். மீண்டும் தேடல், இம்முறை எளிதாகவே கண்டுபிடித்துவிட்டோம். மூன்று வாரங்களில். அவன் வடகரையைச் சேர்ந்தவன். அங்கே ஒரு சிறு பகவதிகோயிலில் பூசை செய்திருந்த எம்பிராந்திரிப் பையன். பெயர் கிருஷ்ணன். வயது 29. பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கோயிலில் பூசைசெய்ய தொடங்கினான். அது தேவஸ்வம் போர்டின் கோயில் அல்ல, ஊர்க்காரர்களின் ஒரு டிரஸ்டால் நிர்வகிக்கப்படுவது. ஆகவே மிகக்குறைவான சம்பளம். அருகே அவனுக்கு சொந்தமாக மிகப்பழைய வீடும் பன்னிரண்டு செண்ட் நிலமும் இருந்தது.அவனுக்கு அம்மாவும் தங்கையும் மட்டும்தான். அம்மா வீட்டிலிருந்தே முறுக்கு பலகாரங்கள் செய்து டீக்கடைகளுக்கு கொடுத்தனுப்பி கொஞ்சம் சம்பாதித்துக்கொண்டிருந்தாள். தங்கை சமையலில் உதவினாள்.

அவன் அவர்களிடம் பூசாரி வேலையில் வருமானமே இல்லை, ஆகவே வேலைதேடி மும்பை செல்வதாகச் சொல்லி கிளம்பியிருக்கிறான். அங்கே ஏதாவது ஓட்டலில் வேலை தேடிக் கொள்வது அவனுடைய நோக்கம். அவனுக்கு உள்ளூரில் நிறைய கடன் இருந்தது என்று அவன் அம்மா சொன்னாள், ஆனால் எவ்வளவு கடன் என்று தெரியவில்லை. கடன்தொல்லைக்கு பயந்துதான் ஊரைவிட்டுக் கிளம்பியிருக்கிறான். அவன் சென்றபின் தகவலே இல்லை. அவர்கள் அவன் கடிதம் அனுப்புவான் என்று காத்திருந்தனர், அவன் வராமலானபோது துயருற்றனர், ஆனால் அவனை தேடவேண்டும் என்றோ அதற்கு போலீஸில் சொல்லவேண்டுமென்றோ அவர்களுக்குத் தோன்றவில்லை. அப்படி புகார் செய்யலாம் என்ற தகவலே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருப்பதில்லை.

ஆக, ஒரு சித்திரம் உருவானது. வேலைதேடி மும்பை செல்லும் வழியில் மங்களூருக்கு வந்திருக்கிறான். அங்கே கொல்லப்பட்டிருக்கிறான். திருட்டாக இருக்கும் என்று முதல் எண்ணம் வந்தது, அவனிடம் பணம் இருந்திருக்கலாம். அல்லது பணம் இருக்கிறது என்னும் எண்ணத்தை உருவாக்குபவனாக இருந்திருக்கலாம். ஏற்கனவே மங்களூர் ரயில்நிலையம், பஸ்ஸ்டாண்ட் பகுதிகளின் எல்லா பொறுக்கிகளையும் குட்டித்திருடர்களையும் துப்புரவாக விசாரித்திருந்தோம். அவர்கள் எவரும் அவனைப் பார்த்ததே இல்லை என்றார்கள். அத்தனைபேரையும் மீண்டும் வரவழைத்து மேலும் கடுமையாக விசாரித்தோம். ஒரு வாரத்தில் ஒன்று தெரிந்தது, அவர்கள் எவரும் அவனைப் பார்க்கவில்லை. லாக்கப்பில் ஏராளமான மலமூத்திரம் விழுந்ததுதான் மிச்சம்.

அது எனக்கு முன்னமே தெரிந்திருந்ததுதான். அந்தப் பட்டுநூல் குல்லாய் இஸ்லாமியர்களில் வசதியானவர்கள் போடுவது. ஆகவே அந்தப் பொறுக்கிகள் அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை. அந்த திசையில்தான் நான் புலனாய்வை எடுத்துச் சென்றுகொண்டிருந்தேன். ஆனால் எந்த ஒரு வாய்ப்பையும் விட்டுவைக்கக் கூடாது என்று ரொசாரியோ சொல்வதுண்டு. ஒன்றை முழுமையாக ஆராய்ந்தபின் அதை கடந்துவிடவேண்டும். ஆனால் ஒரு சின்ன வாய்ப்பை மிச்சம் வைத்திருக்கவும் வேண்டும். மேலும் போலீஸ் காரர்களுக்கு ரௌடிகளை சவட்டி எடுப்பதற்கான வாய்ப்புகளை அவ்வப்போது அளிக்கவும் வேண்டும். பணத்தால் மட்டும் மனிதனுக்கு மகிழ்ச்சி வந்துவிடுவதில்லை என்று செயிண்ட் கிரிகோரியோஸ் புண்யவாளன் சொல்லியிருக்கிறார் இல்லையா?.

அறுதியாக கொலையின் சுட்டிமுள் மங்களூர் காசர்கோடு பகுதியின் கடல்தலைவர்களை நோக்கி வந்து நின்றது. தொண்ணூறு சதவீதம் அது கள்ளக்கடத்தல்காரர்களால் செய்யப்பட்டதுதான். ஆனால் இந்த மேற்குக்கடற்கரைப் பகுதியின் கடத்தல் தொழிலுக்கு பலநூறாண்டுக்கால வரலாறு உண்டு. அதைச் செய்பவர்கள் அதிலேயே சரித்திரகாலம் முதல் வாழ்ந்துவரும் மிகப்பெரிய குடும்பங்கள். பெரும்பாலும் மாப்பிளாக்கள். கொஞ்சம் பந்த்கள், பந்த்களில் ஒருசிலர் மதம் மாறி ஆல்வாக்களாக அறியப்பட்டனர். அப்போது மெட்டால கிருஷ்ணப்ப ரை பெங்களூருக்கு இடம் மாறிவிட்டார். கடலோரம் அவருடைய மருமகன் மெட்டால கோவிந்த ரையும், மகன் எரடால சிவப்ப ரையும்தான் கள்ளக்கடத்தல் தொழிலைச் செய்துகொண்டிருந்தனர். அவர்களுக்கும் மாப்பிளாக்களுக்கும் இடையே மிகப்பெரிய போட்டியும் சண்டையும் நடந்துகொண்டிருந்தது.

மங்களூர் மாப்பிளாக்களில் சீமேனி அப்துல் ரஹ்மான் ஹாஜி காலமானபிறகு அவருடைய மகன் சீமேனி அப்துல் நஜீப் சாகிப் அவருடைய சாம்ராஜ்யத்தை தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்தார். நேத்ராவதியின் கரையிலிருந்த கடற்கரையில் பிலாந்தறையில் முகமது இப்ராஹீம் ஹாஜி ஆட்சி செலுத்தினார். இன்னொரு பகுதி கொண்டால நாரணப்ப ஷெட்டியின் ஆட்சியில் இருந்தது. நேத்ராவதி ஆற்றின் கரையில் படகுத்துறைகளை அமைத்திருந்தவர்கள் வெலந்தரா சந்திரா ஷெட்டி, பெண்டால ராமப்ப ரை ஆகியோர். சீமேனி குழுவைச் சேர்ந்த மணக்காடு குஞ்ஞிமுகமது, கொரம்பத்து அப்துல் சலீம், கொரண்டியில் அப்துல் நாஸர் என்று மூவர் நேத்ராவதியில் படகுத்துறைகளை வைத்திருந்தனர்.

அவர்களில் மாப்பிள்ளைகள் எவரோதான் கிருஷ்ணன் எம்பிராந்திரியைக் கொன்றிருக்கவேண்டும். ஆனால் எதற்காக? ஒரு பகவதி கோயில் சாந்திக்காரன், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு சாமானிய இளைஞன், எப்படி இவர்களின் கொலைப்பட்டியலில் வந்தான்?

அன்றைய மாப்பிள்ளைகளைப் பற்றிச் சொன்னால்தான் உங்களுக்கு புரியும். கள்ளக்கடத்தல் அவர்களின் தொழில், பூர்விகர்கள் செய்துவந்தது. அரசும் சட்டமும் அதை குற்றமாக நினைத்தாலும் அவர்களுக்கு அது குற்றம் அல்ல. அதற்காக கொலை செய்வது போரின் ஒரு பகுதி. அவர்கள் நூறு தலைமுறைகளாக போர்வீரர்கள். ஆனால் சிலநெறிகள் அவர்களுக்கு உண்டு. ஒன்று, திருடமாட்டார்கள். அது அவர்களுக்கு ஹராம். எதிரியின் சொத்தே ஆனாலும் கைவைப்பதில்லை. இரண்டு, மது போதைப்பொருள் இரண்டையும் கடத்தமாட்டார்கள், அதுவும் அவர்களுக்கு ஹராம். கடத்தல் தங்கம், எலக்டிரானிக் பொருட்கள், கொஞ்சமாக ஆயுதங்கள்; அவ்வளவுதான்.மூன்று, பெண்களையும் குழந்தைகளையும் எந்நிலையிலும் கொல்லவோ கடத்தவோ மாட்டார்கள்.

நான்கு, ஆனால் முக்கியமானது, அவர்கள் எந்நிலையிலும் சாமானிய மக்களின் வாழ்க்கையுடன் உரசிக்கொள்வதில்லை. அவர்களின் குழுவைச்சேர்ந்தவர்கள் சாமானியர்களுடன் எதன்பொருட்டும் மோதமாட்டார்கள். ஒரு சாமானியக் குடிமகன் சரக்கு போட்டுவிட்டு அவர்களை அடித்தால்கூட பேசாமல் ஒதுங்கி போய்விடுவார்கள். கைத்தவறுதலாக அவர்களில் ஒருவனை ஒரு சாமானியன் கொலை செய்துவிட்டால்கூட எங்களிடம் வந்து சட்டநடவடிக்கை எடுக்கத்தான் சொல்வார்கள், அவர்களே ஒன்றும் செய்யமாட்டார்கள்.

ஆகவே அந்தக் கடற்கரையில் அத்தனை பெரிய குற்றவுலகம் இருப்பது சாமானியர்களுக்கு தெரியவே தெரியாது. சொல்லப்போனால் அந்த குற்றவுலகம் சாமானியர்களுக்குப் பெரிய பாதுகாப்பு. சில்லறைத் திருடர்கள் ரவுடிகள் எல்லாம் பயந்தே இருப்பார்கள். அதோடு கடைசியாக இன்னொன்றையும் சொல்லவேண்டும். அவர்கள் பிராமணர்கள் மேல் அபாரமான பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்கள்.

இந்த மாப்பிள்ளைகள் ஸக்காத் மரபை கறாராக கடைப்பிடிப்பார்கள். அவர்கள் சேர்க்கும் பணத்தில் நாற்பதில் ஒரு பகுதி, அதாவது இரண்டரை சதவீதம் ஆண்டுதோறும் பிறருக்கு கொடையாக அளிக்கப்படும். அதை இஸ்லாமியர்களுக்கு கொடுக்கவேண்டும் என நினைக்கமாட்டார்கள். ஏழைகள் எவருக்கானாலும் கொடுப்பார்கள். உறவினர்களுக்கு கொடுப்பது ஸக்காத்தில் வராது. ஆகவே அவர்களில் பலர் மிகச்சிறந்த இலவச மருத்துவமனைகளை நடத்தினர். ஆண்டுதோறும் ஏராளமான கல்வி நிதியுதவிகளைச் செய்தனர். சீமேனி ஹாஜி அப்துல் ஹமீத் அறக்கட்டளை நடத்தும் சீமேனி மருத்துவமனை இந்தியாவிலேயே நல்ல இலவச மருத்துவமனைகளில் ஒன்று.

ஆகவே ஒர் அப்பாவி குடிமகனை, அதுவும் பிராமணனை, அவர்கள் எதன்பொருட்டும் கொன்றிருக்க வாய்ப்பில்லை. அவன் எதற்வது சாட்சியாக ஆனாலும்கூட, அவனே அவர்களை மிரட்டினாலும்கூட அதைச் செய்யமாட்டார்கள். அது அவர்களுக்கு பெரிய ஹராம். அப்படியென்றால் என்ன நடந்திருக்கும்?

போலீஸுக்கும் கள்ளக்கடத்தல் குழுக்களுக்கும் நடுவே நெடுங்காலமாக ஒரு புரிந்துணர்வு உண்டு. இது நீண்ட குற்றவரலாறுள்ள எந்த இடத்திலும் காலப்போக்கில் உருவாகி வந்திருக்கும். போர்செய்யும் ராணுவங்கள் நடுவே உருவாகும் புரிந்துணர்வுபோல. அல்லது காட்டில் புலிகள் மூத்திரச் சொட்டுவிட்டு எல்லை வகுத்துக்கொள்வதுபோல. எங்களுக்கு நடுவே வக்கீல்கள் இருந்தனர். பந்த்களுடன் பேசுவதற்கு டி.எஸ்.பத்மநாப ஷெனாய் என்ற வழக்கறிஞர் இருந்தார். மாப்பிள்ளைகளுடன் பேச கோழிக்கோட்டிலிருந்து வந்தவரான எம்.ஏ..நிஸார் என்னும் வழக்கறிஞர்.

நான் இருவரையும் வீட்டுக்குச் சென்று பார்த்தேன். அந்தக்கொலையில் கள்ளக்கடத்தல் அமைப்புகளுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று கேட்டேன். பந்த்கள் எவ்வகையிலாவது கிருஷ்ணன் எம்பிராந்திரியை அறிந்திருக்கிறார்களா? மாப்பிள்ளைகள் எதற்காகவேனும் அவரைக் கொலை செய்தார்களா? தவறிப்போய் செய்திருந்தால் ஒரு குற்றவாளியை அவர்களே அளித்தால் போதும், கேஸை முடித்துவிடலாம்.

நான்கு நாட்களில் டி.எஸ்.பத்மநாப ஷெனாய் தகவல் சொன்னார், அவர்கள் எவரும் கிருஷ்ணனைப் பார்க்கவே இல்லை. ஒருவாரம் கழித்து எம்.ஏ..நிஸார் சொன்னார், இல்லை அந்தக் கொலையுடன் மாப்பிள்ளைகளுக்குச் சம்பந்தமே இல்லை. கொலைச்செய்தியை பேப்பரில் வாசித்ததுமே அதை அவர்கள் விசாரித்து ஆராய்ந்துவிட்டார்கள். அவர்களில் எவரும் செய்யவில்லை. அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள் என்று எனக்குத்தெரியும். ஆகவே ஒன்றும் செய்வதற்கில்லை, கேஸ் ஏறத்தாழ முடிந்துவிட்டது.

நீண்டகாலத்திற்குப்பிறகு நினைத்துக்கொள்கிறேன், சுவரில்முட்டி நின்றுவிட்ட வழக்குகளைத்தான் ஞாபகம் வைத்திருக்கிறோம். ஏனென்றால் சுவரில்முட்டி நிற்பது என்பது மானுட சாத்தியங்களின் கடைசி எல்லை. அப்போது கடவுள் புன்னகை செய்கிறார். ஒரு சின்ன க்ளூவை போட்டுப் பார்க்கிறார். பயல் அதை பிடித்துக்கொள்கிறான என்று மேலிருந்து வேடிக்கை பார்க்கிறார். ஆனால் நாம் சீதை போல கிருஷ்ணா என்று கையை தூக்கிவிடவேண்டும்.

“சீதை அல்ல, பாஞ்சாலி” என்றேன்.

“பாஞ்சாலியையா அனுமான் தூக்கிக்கொண்டு போனான்?” என்று ஔசேப்பச்சன் சந்தேகமாகக்கேட்டான்.

“தூக்கிக்கொண்டு போனவன் அனுமன் அல்ல. தூக்கிக்கொண்டு போகப்பட்டவள் பாஞ்சாலியும் அல்ல.”

“வேறு யார்?”

“தூக்கிக்கொண்டு போனவன் ராவணன். தூக்கப்பட்டவள் சீதை”

“அதைத்தானே நானும் சொன்னேன்?”

“டேய் விடு, நஸ்ரானிக்கு எதற்கு ராமாயணம்? அவனுக்கு பைபிளே தெரியாது”

“என்ன பிரச்சினை? நான் சரியாகத்தானே சொன்னேன்.”

“இந்தப்பேச்சை இப்படியே விடுவோம்.”

“பைபிள் தெரியாது என்று சொன்ன நாய் ஏது?”

“பைபிள் உனக்கு எதற்கு? நீ சத்யவிசுவாசியாகவே உள்ளே இருந்து கொந்தையுடன் வந்தவன்… டேய் நஸ்ரானி, மிச்சத்தை சொல்லு.”

“அதாவது கடவுள் என்னைப் பார்த்து புன்னகைத்தார். எப்படி என்றால் நாம் மரைன் டிரைவ் சாலையில் பைக்கில் போகும்போது அழகான பெண் நம்மைப்பார்த்து தெரிந்தவள்போல சிரிப்பாள், நாம் கடந்துவந்துவிடுவோம். அதன்பிறகு அவள் யார் என்று மண்டையை உடைத்துக்கொண்டு வீணாய்ப் போவோம் அல்லவா, அதைப்போல” என்றான் ஔசேப்பச்சன்.

“எப்படி?” என்றேன்.

“சொல்கிறேன்” என்று ஔசேப்பச்சன் தொடங்கினான். “நான் சொன்னேனே, பெருமண் விபத்து. அதையும் இந்தக் குற்றத்தையும் எப்படி என் மனதுக்குள் இணைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிந்து கொண்டால் மேலும் விளங்கும்”.

பெருமண் விபத்து நடந்து ஓராண்டுக்குமேல் ஆகியிருக்கும். ரயில்வேயில் ஜெனரல் மானேஜராக வேலை பார்க்கும் என் நண்பன் அர்விந்த் திரிபாதி மங்களூர் வந்திருந்தான். அவன் என் பேட்ச்மேட். போலீஸிலிருந்து அங்கே சென்றவன். மங்களூரில் ஒரு இன்ஸ்பெக்ஷன். அது முடிந்து கோழிக்கோடு செல்வதாகச் சொன்னான். அவன் சொன்ன காரணம் ஆர்வமூட்டியது. அவன் அங்கே மாப்பிள்ளைக் கலாசிகளைச் சந்திக்கச் செல்கிறான்.

பதினான்கு ரயில்பெட்டிகள் நீருக்குள் விழுந்து கிடந்தன இல்லையா? அவற்றை வெளியே எடுக்க பலவாறாக முயன்றனர். உள்ளே இருபதுக்கும் மேற்பட்ட சடலங்கள் பெட்டிகளுக்கு அடியில் மாட்டிக்கொண்டிருந்தன. அந்த மனிதர்களின் உறவினர்கள் அவர்களை வெளியே எடுக்க விரும்பினார்கள். அவர்களுக்குரிய இறுதிச்சடங்குகள் அப்போதுதான் முறையாக செய்யமுடியும். ஆனால் பெட்டிகளை எடுப்பது மிகப்பெரிய செலவுள்ளதாக இருந்தது. நீருடன் அவை பல டன் எடைகொண்டவையாக ஆயின. அந்த எடையை தூக்குவதற்கு மிகப்பெரிய கிரேன்கள் தேவை.

கொச்சி துறைமுகத்திலிருந்து கிரேன் நிபுணர்கள் வந்து பார்த்தனர். பாலத்தில் கிரேன் நிற்காது, அந்த எடையை தாங்காது. கரையில் சேற்றுப்பரப்பு, கிரேனை நிறுத்தமுடியாது. அதற்கு மிகப்பெரிய சிமிண்ட் மேடை ஒன்றைக் கட்டவேண்டும். அதவாது பத்தடி உயரமும் நாற்பது அடி நீளமும் இருபது அடி அகலமும் கொண்ட மேடை. அதை அங்கே நிறுத்தவேண்டும் என்றால் முப்பதடி ஆழத்தில் அஸ்திவாரம் அமைக்கவேண்டும். நடக்கிற காரியமா? அதோடு கிரேன்களை கழற்றி ரயிலில் தனித்தனி பகுதிகளாகக் கொண்டுவந்து இணைக்கவேண்டும். மொத்தச் செலவு சிலகோடிகள். அதற்கு ரயில்வேயிடம் பணமில்லை.

அப்போதுதான் அர்விந்த் மாப்பிள்ளைக் கலாசிகளைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவர்களிடம் மிகமிகக் குறைவான செலவில் கடலுக்குள் மூழ்கிய பத்தேமாரிகளை வெளியே எடுக்கும் தொழில்நுட்பம் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் அது சில பழைய பிரிட்டிஷ் பதிவுகளில் இருந்தது. கோழிக்கோட்டைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. கேரள இதழாளர்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை. அது ஒரு தொன்மம்தான், இன்றைக்கு அப்படி எவரும் இல்லை என்றே சொன்னார்கள்.

ஆனால் அர்விந்துக்கு வெள்ளைக்காரர்கள் அப்படி காணாததைக் கண்டதாக எழுதமாட்டார்கள் என்று ஆழமான நம்பிக்கை. ஏனென்றால் 1872ல் ஒரு வெள்ளைக்காரன் எழுதிய டிஸ்டிரிக்ட் மானுவலில் அர்விந்தின் கொள்ளுத்தாத்தா சதானந்த் திரிபாதி அவத் நவாபுக்கு கூட்டிக்கொடுத்து அமைச்சரான தகவல் இருக்கிறது. அர்விந்த் தனிப்பட்டமுறையில் கிளம்பி வந்திருந்தான். மலையாளம் பேசுவதற்காக என்னை கூடவே வரும்படி அழைத்தான். எனக்கும் மங்களூரை விட்டு எங்காவது ஒழிந்தால் நல்லது என்ற எண்ணம் இருந்தது. நல்ல பச்சை மலையாளம் செவியில் விழவேண்டும். முடிந்தால் செம்மீன், சிப்பி, கொஞ்சு, நண்டு கறியுடன் குடிக்க வேண்டும். எங்காவது விழுந்து கிடந்து கம்யூனிசத்தை நல்ல நாலு வார்த்தை தெறி சொல்ல வேண்டும். ஆகவே நானும் கிளம்பிச் சென்றேன்.

கோழிக்கோட்டில் நாங்கள் ரயில்வே கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம். அங்கிருந்து பத்தேமாரிகளை தயாரிக்கும் இரண்டு இடங்களைச் சென்று பார்த்தோம். அதைப்பற்றி நான் விரிவாகச் சொல்லப்போவதில்லை. அது மாப்பிள்ளைகளும் உள்ளூர் ஆசாரிகளும் இணைந்து செய்யும் ஒரு பெரிய வேலை. ஒரு தொழிற்சாலை செய்யவேண்டிய வேலையை சாதாரண ஓலைக்கூரைபோட்டு இழைப்புளியும் கொட்டுவடியும் வைத்துக்கொண்டு லொட்டு லொட்டு என்று செய்துகொண்டிருப்பார்கள். பக்கத்தில் பாதிமுடிந்த பத்தேமாரி ‘எப்படா முடிப்பீங்க’ என்பதுபோல பரிதாபமாக நின்றிருக்கும்.

மாப்பிள்ளைகளிடம் ஒரு கணக்கு இருக்கிறது. ஆசாரிகளிடம் இன்னொரு கணக்கு இருக்கிறது. இருவரும் அதை பரிமாறிக்கொள்வதில்லை. கடைசியில் பூதம் எழுந்ததுபோல பத்தேமாரி முளைத்து வந்துவிடும். வெறும் மரம்தான் என்றாலும் ஏறத்தாழ முந்நூறு டன் எடைகொண்டது ஒரு சராசரி பத்தேமாரி. அதை பத்துபேர் கொண்ட மாப்ளாக்கூட்டம் உந்தி கடலுக்குள் ஏற்றிவிடுவார்கள். மணல்தரையில் தண்டவாளம் போல இரண்டு தடிகளை வைப்பார்கள். நன்றாக பாலீஷ் செய்யப்பட்ட தடிகள். அவற்றின்மேல் பத்தேமாரி ஏற்றப்படும். நெம்புகோல்கள் வடங்கள் பயன்படுத்தி உந்துவார்கள். அப்படியே வாத்துபோல சறுக்கி நீரில் இறங்கிவிடும். நீரிலிருந்தும் அதேபோல கன்றுக்குட்டியை அழைப்பதுபோல இழுத்து எடுத்துவிடுவார்கள்.

நாங்கள் சென்றபோது ஒரு மாபெரும் பத்தேமாரி கட்டப்பட்ட நிலையில் இருந்தது. அது கடலில் இறங்க ஓராண்டு ஆகும் என்றார்கள். எங்கள் தேவையைச் சொன்னோம். நாங்கள் சொன்னதுமே அவர்களின் கண்களில் எச்சரிக்கை எழுந்தது. ஏன் அந்த தயக்கம் என்று எனக்கு உடனே புரிந்தது. நான் வா என்று அரவிந்தை கூட்டிக்கொண்டு திரும்பிவிட்டேன். அங்கே சொல்லவேண்டியவர் சொல்லாமல் ஒன்றும் நகராது என்று எனக்குத்தெரியும்.

அங்கே தலைமை மாப்பிள்ளை யார் என்று விசாரித்தேன். ஹாஜி எம்.ஏ.அப்துல்லாவின் கட்டுப்பாட்டில்தான் அன்று கோழிக்கோடு இருந்தது. அவர் அரேபியாவில் இருந்து கோழிக்கோட்டுக்கு வந்த மாலிக் தினார் இப்னு அவர்களின் வம்சம் என்கிறார்கள். கோழிக்கோட்டின் மாபெரும் கடல்வீரர் குஞ்ஞாலி மரைக்காயரின் கொடிவழியை சேர்ந்தவர். மாலிக் தினார் இலவச ஆஸ்பத்திரி, மாலிக் தினார் பள்ளிக்கூடம் என்று ஏகப்பட்ட தர்மநிறுவனங்கள். அவர் நாற்பதாண்டுகளாக கோழிக்கோடு கடற்கரையின் உஸ்தாத். போப்பூர் முழுக்கமுழுக்க அவருடைய ஆட்சியில்தான் இருந்தது. துறைமுகத்திலும் அவருடன் எவரும் மோதுவதில்லை. அவருக்கு அரசியல் இல்லை. உள்ளூரில் எவருடனும் மோதல் இல்லை. ஆகவே அவர் இருப்பதே அவருடன் நாம் போய் முட்டிக்கொள்ளாதவரை தெரியாது.

நான் மங்களூரில் நிஸாரை அழைத்து இங்கே எம்.ஏ.அப்துல்லாவுடன் எப்படிப் பேசுவது என்று கேட்டேன். அவர் கோழிக்கோட்டில் வக்கீல் அப்துல் ஷமீரை அறிமுகம் செய்தார். அவரே ஃபோனில் பேசியபின் நான் ஷமீரை சென்று பார்த்தேன். ஷமீர் வழியாக எம்.ஏ.அப்துல்லாவுடன் பேச ஏற்பாடாகியது. சாகிபின் கடலோர விருந்தினர் மாளிகையில் எங்களுக்கு ஒரு விருந்து அளிக்கப்பட்டது. இதோபார், நீ மாப்பிளைகளின் விருந்தைச் சாப்பிடாதவரை நீ விருந்தையே சாப்பிட்டதில்லை என்று பொருள். ஆனால் ஒன்று, முதலையின் பல்லும் ஓநாயின் வயிறும் இல்லாவிட்டால் கஷ்டம்.

எம்.ஏ. அப்துல்லா சாகிப், என்ன ஒரு தோற்றம்! செக்கச்சிவந்த நிறம். அடர்த்தியான தாடி, அதில் ஓரிரு வெள்ளிநரை. சதுரமுகம், கூர்மையான அராபிய மூக்கு. வரைந்ததுபோன்ற புருவங்கள். மலர்ந்த அழகான கண்கள். தொப்பை கிடையாது. நிமிர்ந்த உயரமான உடல். அவருக்கு சமானமான அழகன் என இன்னொரு ஆணை நான் பார்த்ததே இல்லை. மம்மூட்டிக்கு ஒரு பத்து மார்க் குறைத்தால் சேர்த்துக்கொள்ளலாம்.

எம்.ஏ.அப்துல்லா உரையாடல் நிபுணர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அன்றுதான் கண்டேன். அடுக்கடுக்காக மாப்பிள்ளை நகைச்சுவைகள். மாப்பிள்ளைப் பாட்டுக்கள். நான் ’மாப்பிளை ராமாயணத்’தை அப்போதுதான் முதல்முறையாகக் கேட்கிறேன். நீ கேட்டிருக்க மாட்டாய். கோழிக்கோடு மோயீன்குட்டி பாகவதர் இயற்றிய பகடிக் காவியம். முதல் காட்சியில் ராவணன் தன் இருபது கன்னங்களுக்கும் ஒவ்வொன்றாக செல்ஃப் ஷேவிங் செய்துகொள்கிறான். இன்னும் நிறைய இருக்கிறது. இந்த எழுத்தாள ஸ்வானன் வேண்டாம், இவன் தமிழில் எதையாவது எழுதிவிட்டால் மதக்கலவரம் ஆகிவிடும். பிறகு நானே சொல்கிறேன்.

சிரித்து உருண்ட நாள் அது. கடைசியில் எங்கள் கோரிக்கையை சாகிப் ஏற்றுக்கொண்டார். அவரே மாப்பிள்ளைக் கலாசிகளின் இரண்டு தலைவர்களை அழைத்து எங்களுக்கு அறிமுகம் செய்தார். தனியாக அமர்ந்து விரிவாகப் பேசினோம். மிகச்சாதாரணமாக “ரயில்பெட்டி தானே எடுத்து தருகிறோம்” என்றார்கள்.

அர்விந்த் வடக்கத்தி ஆள், ஜாக்கிரதையானவன். “எக்கச்சக்கமாக பணம் கேட்கப் போகிறார்கள் டூட், நான் ஓர் அளவுக்குமேல் கொடுக்கமுடியாது” என்று என்னிடம் ஆங்கிலத்தில் சொன்னான். “முப்பது லட்சம் வரை நான் போவேன்… அதற்குமேல் என்றால் வேண்டாம், சொல்லிவிட்டேன். பிறகு பிரச்சினை ஆகக்கூடாது.”

நான் முதிய கலாசியிடம் “ரேட் என்ன உஸ்தாத்?” என்று நயமாகக் கேட்டேன். “பார்த்து சொல்லுங்கள். சர்க்காரிடம் பணம் குறைவு.”

உஸ்தாத் சுருங்கிய முகம் மேலும் சுருங்க கண்ணைச் சுருக்கி, கைவிரல் ஓட்டி எண்ணி கணக்கிட்டு “பன்னிரண்டாயிரம் ரூபாய்… இதில் ஒரு பைசா குறையாது” என்று கறாராகச் சொல்லிவிட்டார்.

“ஆளுக்கா?” என்றேன்.

 “இல்லை மொத்தம்!” என்றார் உஸ்தாத் “இதில் டீ காப்பி செலவு தனி…”

நான் சொன்னபோது அர்விந்த் “பன்னிரண்டாயிரம் ரியாலா?” என்றான்.

“இல்லை டாலர். டேய், அவர்கள் ரூபாயையே அடிக்கடி கண்ணில் பார்ப்பதில்லை என நினைக்கிறேன்” என்றேன்.

“பதினான்கு பெட்டிகளும் அறுபதடி ஆழத்தில் சேற்றில் கிடக்கின்றன, தெரியுமே?” என்றான்.

“நான்குமுறை சொல்லிவிட்டேன், அவர்கள் புத்திசாலிகள். தெரிந்துதான் சொல்கிறார்கள்.”

அர்விந்த் அப்போதே அட்வான்ஸ் கொடுத்துவிட்டான். திரும்பும்போது “டேய், நீ சரியாகச் சொன்னாயா? அவர்கள் கடைசியில் ரயில்பெட்டியா, எங்களிடம் தீப்பெட்டி என்றல்லவா சொன்னார்கள் என்று சொல்லிவிடப்போகிறார்கள்” என்றான்.

“இனிமேல் பேசினால் உன்மேல் பிராந்தியை ஊற்றி பற்றவைப்பேன்” என்றேன்.

அதன்பின் அவன் அடங்கினான். வடக்கத்தி பிராமணர்கள் மரணபயம் உடையவர்கள். ஏனென்றால் அவத் நவாபுகள் குரூரமானவர்கள். நான் அன்று ஏதோ ஓர் அமைதியின்மையை அடைந்தேன். நிலைகொள்ளமாலெயே இருந்தேன். நிறைய குடித்தேன். தூங்கி எழுந்தால் உள்ளம் அப்படியே சுருங்கி—

“உன் வழக்கமான உவமை வேண்டாம். இது சின்னப்பிள்ளைகளும் இருக்கும் இடம்.”

“சரி” என்றான் ஔசேப்பச்சன். கலாசிகள் அவர்கள் சொன்னபடி ரயில்பெட்டிகளை எடுத்துக் கொடுத்துவிட்டார்கள். அதைப்பற்றி நிறைய எழுதப்பட்டுவிட்டது. உலகமே திரும்பிப்பார்த்த நிகழ்வு அது. பிபிசி அதை ஆவணப்படுத்தியிருக்கிறது என நினைக்கிறேன். மாப்பிள்ளைகளிடம் எந்த நவீனக்கருவிகளும் இல்லை. அவர்களே கொண்டுவந்த தடிகளை ஊன்றிச் செய்த நெம்புகோல் அடிப்படை கொண்ட நாட்டுக் கிரேன்கள் இரண்டு. தோவர் என்று சொல்லப்படும் தண்டவாளம் போன்ற மரத்தாலான அமைப்பு. மரத்தாலான உருளைகள்.பலூக்கள் எனப்படும் உறுதியான புளிமரத்தடிகள். கற்றாழைநாரை பின்னி முறுக்கி உருவாக்கப்பட்ட கயிறுகள், அவ்வளவுதான். இவ்வளவுதான் அவர்களின் கருவிகள்.

அதை எப்படி அவர்கள் எடுத்தார்கள் என்று நான் விளக்கினால் உங்களுக்கு புரியாது. ஏனென்றால் நான் நேரில் சென்று கண்ணால் பார்த்தேன், எனக்கும் புரியவில்லை. நீரில் மூழ்கிச்சென்று வடங்களை ரயில்பெட்டிகளில் கட்டினார்கள். வடங்களை கரையில் நின்று இழுத்தார்கள். கரையில் அமர்ந்திருந்த உஸ்தாத் ஒரு மரப்பலகை முழவில் கழியால் அடித்து தாளம் எழுப்புவார். தாளத்திற்கு ஏற்ப அவர்கள் இழுப்பார்கள் அந்த வடம் கரையில் அறையப்பட்டிருந்த வெவ்வேறு தறிகளில் சுற்றிக் கட்டப்படும். இப்படி இஞ்ச் இஞ்சாக இழுப்பார்கள். அந்த கிரேனால் அரைக்கால் இஞ்ச் தூக்குவார்கள். மீண்டும் இழுப்பார்கள். கரையில் சில உருளைகளை வைத்து அவற்றில் கயிற்றை கட்டி சுழற்றுவார்கள். அதற்கெல்லாம் மிகக்கூர்மையான கணக்குகள் இருந்தன.

கடைசியில் ரயில்பெட்டி அதுவே எழுந்து வருவதுபோல கரைநோக்கி வந்தது. உருளைமேல் அமர்ந்தது. அப்படியே இழுத்து கரையில் நிறுத்தினார்கள். அந்த உத்தி என்ன என்று சொல்கிறேன். டம்ப்ளர் நீருக்குள் கிடக்கிறது. நம்முடைய கிரேன்கள் தண்ணீருடன் அப்படியே தூக்குகின்றன. அவர்கள் அதை கீழேயே சரித்து நீரைக்கொட்டிவிட்டு தூக்குகிறார்கள். அதோடு மிகமெல்ல இஞ்ச் இஞ்சாக இது நடைபெறுகிறது. ஆகவே இழுவிசை ஆயிரக்கணக்கான யூனிட்டுகளாக உடைக்கப்படுகிறது. இருநூறு டன் எடைகொண்ட தூக்குவிசையை ஒருலட்சம் இழுப்புகளாக ஆக்கினால் ஒர் இழுப்பின் எடை என்ன?”

“என்ன?”

“நீயே சொல்.. நான் கணக்கில் வீக்” என்றான் ஔசேப்பச்சன்.

“சரி, அது போகட்டும். நம்முடைய வழக்கு என்ன ஆயிற்று?”

அதற்குத்தான் வருகிறேன். பெருமண்ணில் இருக்கும்போது எனக்கு ஒரு வெளிச்சம் வந்தது. கடவுள் உருட்டியதை நான் பிடித்துக்கொண்டேன். அந்த பட்டுச்சரிகை நூல்! ஹாஜி எம்.ஏ.அப்துல்லா ஒரு துருக்கித் தொப்பி வைத்திருந்தார். தவிட்டுநிறத் தொப்பி. ஆனால் ஒருவகையான பொன்மினுப்பு கொண்டது. அந்த நூல் அதில் உள்ளதுதான். ஆதாரம் ஏதுமில்லை, ஆனால் ஓர் உள்ளுணர்வு.

நான் எம்.ஏ.அப்துல்லா சாகிப் பற்றி தோண்டத் தொடங்கினேன். அவருடைய அன்றாட வாழ்க்கை, அவருடைய பழக்க வழக்கங்கள், அவருடைய ரசனை. அபாரமான மனிதர் அவர். மிக ஆசாரமான முஸ்லீம். கூடவே மிகப்பெரிய கலை ரசிகர். ஷாஜகான் சக்கரவர்த்தி அப்படித்தான் இருந்திருப்பார். கஸல் இசையில் பித்து கொண்டவர். மாதம் ஒரு உஸ்தாதாவது வட இந்தியாவிலிருந்து வந்து அவருடைய மாளிகையில் பாடுவார். கவிதை, இலக்கியம் எல்லாவற்றிலும் ஈடுபாடு. தகழி சிவசங்கரப்பிள்ளையின் நண்பர். வைக்கம் முகமது பஷீர் இவரை ‘மிஸ்டர் மே’ என்றுதான் அழைத்திருந்தார்.எம்.டி.வாசுதேவன் நாயரை இவர் வாடா போடா என அழைப்பார்.

சாகிப்பின் உடைகள் மும்பையில் தயாராகி வந்தன. மும்பை சுல்தான் அகமது பாஷா ஆண்ட் கம்பெனியில். நான் மும்பை சென்று அந்தக்கடையை பார்த்தேன். இஸ்லாமிய ஷெர்வானி, கமீஸ் வகையறாக்களுக்கு புகழ்பெற்ற கடை. அங்கேதான் சாகிபின் உடைகள் தைக்கப்பட்டன. அங்கே இருந்த உதவியாளர்களை பணம் கொடுத்து கவர்ந்து சாகிப் அணியும் துருக்கிபாணி தொப்பிகளில் ஒன்றை எடுத்து வந்தேன். அதை ஃபாரன்ஸிக் லேபில் கொடுத்து ஆராய்ந்தேன். பிணத்தின் கையில் இருந்த அந்த நூல் அதேபோன்ற துருக்கித்தொப்பியில் உள்ளதுதான். அது நீதிமன்றத்தில் நிற்கும் சாட்சியமெல்லாம் அல்ல. ஆனால் எனக்கு சந்தேகத்தை உறுதிசெய்ய போதுமானது.

அந்தப்பையனுக்கும் எம்.ஏ.அப்துல்லா சாகிபுக்குமான உறவு என்ன? அதைமட்டும் இணைத்தாகவேண்டும். முதலில் ஒரு விஷயத்தை விசாரித்தேன். கிருஷ்ணன் இறந்த அன்று எம்.ஏ..அப்துல்லா எங்கிருந்தார்? அன்று அவர் கோழிக்கோட்டில் அவருடைய ஆஸ்பத்திரியின் வார்டு ஒன்றை திறக்க வந்திருந்த உள்ளூர் எம்.எல்.ஏ மற்றும் டி.எம்.ஓவுடன் இருந்தார். அதற்கு எல்லா சான்றுகளும் இருந்தன. சட்டென்று ஒருவாசல் மூடியது.

சின்னச் சோர்வுதான். புலனாய்வில் இது ஒரு சிக்கல். ஒரு கற்பனையை நாம் ரொம்பவே வளர்த்துவிடுவோம். அது பலூன்போல உடைந்துவிடும். ஆனால் அதற்காக கற்பனையை வளர்க்காமலும் இருக்க முடியாது கற்பனை வழியாகவே நாம் பல ஊகங்களைச் சென்றடைகிறோம். அதில் ஒன்றுதான் உண்மையாக ஆகிறது.

நான் அந்தச் சோர்வை உந்தி அகற்றிக் கொண்டேன். ரொசாரியோ வழக்கமாக அந்தச் சந்தர்ப்பத்தில் சொல்வார் ‘சரி, உண்மையான இடத்தை நோக்கிச் செல்வதற்கான இன்னொரு வாய்ப்பு கடவுளால் அளிக்கப்பட்டிருக்கிறது’ என்று. நான் அதை என் டைரியில் நாலைந்து முறை எழுதினேன். இனி எம்.ஏ.அப்துல்லாவின் பக்கமிருந்து விசாரணையை கொண்டுசெல்லவேண்டியதில்லை. மறுபக்கமிருந்து கொண்டுசெல்லலாம்.

அந்தப்பையனின் வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும் ஆராய்ந்தேன். கதை இப்போது முழுக்கமுழுக்க கோழிக்கோட்டுக்கு மாறிவிட்டது. கோழிக்கோட்டில் எனக்கு நெருக்கமானவர் இன்ஸ்பெக்டர் மாதவன்நாயர். அவருக்கு நான் பல உதவிகள் செய்திருக்கிறேன். அவர் எனக்கு தேடுவதற்கு சற்றே வழிவிட்டும் உதவிசெய்தார். கிருஷ்ணன் எம்ப்ராந்திரிக்கு கோழிக்கோடுக்கான தொடர்புகள் என்ன?

ஒரு புள்ளியை மையப்படுத்தி தேடினால் தேடல் முடிவில்லாமல் பெருகும். ஆனால் ஒருபுள்ளியை இன்னொரு புள்ளியுடன் தொடர்புபடுத்தித் தேட ஆரம்பித்தால் தேடல் மிகமிக எல்லையுள்ளதாக ஆகிவிடுகிறது. இது புலனாய்வில் பெரிய மர்மம் உடைய பொன்விதி. கிருஷ்ணன் எம்பிராந்திரி என்று தேடினால் மிகப்பெரிய கோடு. கிருஷ்ணன் எம்பிராந்திரியும் கோழிக்கோடும் என்ற கோடு மிகச்சிறியது. அதன் எல்லா புள்ளிகளையும் எட்டே நாளில் தெளிவாக்கிக்கொண்டோம்.

கோழிக்கோடு வடகரைக்கு மிக அருகேதான். அடிக்கடி வந்துபோகும் இடம்தான். ஆனால் அவன் ஒரு பூசாரி. மிகச்சிறிய உலகில் வாழ்பவன். அவன் கோழிக்கோடுக்கு அடிக்கச் செல்வதில்லை. அவனுக்கு சினிமா பார்க்கும் வழக்கமெல்லாம் இல்லை. அவனுடைய கோயிலுக்கு வந்து செல்லும் வாய்ப்புள்ள ஊர்வட்டத்தில் ஒன்பது பேர் கோழிக்கோட்டுடன் நெருக்கமான தொடர்புள்ளவர்கள். அவர்களில் மூவர் ஆசிரியர்கள். ஒருவர் மாநில அரசின் ஊழியர். ஒருவர் பேக்கரியில் வேலைபார்க்கிறார். எஞ்சியவர்கள் பெட்டிக்கடைக்காரர்கள், கோழிக்கோடு சந்தைக்குச் செல்பவர்கள்.

அவர்களில் கோயிலுக்கு வருபவர்கள் எவர் என்று மேலும் குறுக்கினோம். எஞ்சியவர் ராதாமணி. அவர் கோழிக்கோட்டுக்கு வெளியே ஏலத்தூர் என்னும் ஊரில் ஆசிரியை. அங்கே அவருடைய கணவருடனும் ஒரு குழந்தையுடனும் வசிக்கிறார். அவருடைய சொந்த ஊர் வடகரைதான். ஊருக்கு வந்தால் அவர் பகவதி கோயிலுக்கு வந்து வழிபட்டு போகும் வழக்கம் உண்டு. அதெல்லாமே எந்த அர்த்தமும் இல்லாத தேடல்கள்தான். சொல்லப்போனால் நான் ராதாமணியைச் விசாரிக்க பதினைந்துநாள் ஆர்வமே காட்டவில்லை. அதில் ஒன்றும் தேறாது என்று தோன்றியிருந்தது.

ஆனால் ராதாமணியின் கருப்புவெள்ளை புகைப்படத்தை மாதவன்நாயர் அனுப்பிய ஃபைலில் பார்த்தேன். ஒருகணம்தான், என் மூளை பற்றி எரியத் தொடங்கிவிட்டது. இத்தகைய வழக்குகளை நான் நிறையவே பார்த்திருக்கிறேன். நடுத்தரச் சூழலில், ஏழைக்குடும்பத்தில் சிலசமயம் பேரழகிகள் பிறந்துவிடுவார்கள். நம்பவேமுடியாத அளவுக்கு பேரழகிகள். அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையே அமையமுடியாது. அவர்கள் மிகமிக ஆற்றல் கொண்ட எவருக்காவது ஆசைமனைவியாகவேண்டும், அவனுடைய சந்தேகத்தையும் சித்திரவதையையும் தாங்கிக்கொண்டு வாழ்ந்து மடியவேண்டும். இல்லாவிட்டால் செல்வாக்கானவர்களால் வேட்டையாடப்பட்டு சீரழியவேண்டும். முச்சந்தியில் கிடக்கும் செத்த எலிபோல. எல்லா காக்காயும் கொத்திக்கிழிக்கும்.

நான் ராதாமணியை அழைத்துவரச்செய்தேன். வந்தபோதே அவள் கலங்கியிருந்தாள். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக நான் மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகத்திற்குச் சென்று அவருடைய அறையில் அமர்ந்திருந்தேன். கல்வி அலுவலரின் பியூனை ராதாமணியின் பள்ளிக்கு அனுப்பி அவளை வரச்சொன்னேன். பியூனுக்கு நான் போலீஸ் என்று தெரியாது. ஆனால் ஆனால் அவள் எப்படியோ ஊகித்துவிட்டாள். அவள் அதை எதிர்பார்த்திருந்திருக்கலாம்.

அவள் உள்ளே நுழைந்தபோது நான் மூச்சை இழுத்துவிட்டேன். என் பார்வையை அலைமோதாமல் வைத்துக்கொள்ள மிகவும் கஷ்டப்பட்டேன். அவளை பேரழகி என்று எப்படிச் சொல்கிறேன்? இதோபார், இந்த மேற்குக் கடற்கரை என்பது இனக்கலவையின் சோதனைச்சாலை. உலகமெங்கும் வெவ்வேறு இனங்கள் கலந்த இடங்களில்தான் பேரழகிகள் உருவாகியிருக்கிறார்கள். உதாரணமாக இத்தாலி. அது ஆசிய ஐரோப்பிய இனங்களின் கலவை நிகழ்ந்த நிலம். லத்தீன் அமெரிக்கா இன்னொரு உதாரணம். அரேபியா அதற்கும் முன்பே வெள்ளை ஆரிய இனமும் காப்டிக் கறுப்பினமும் கலந்து உருவானது. காக்டெயிலே இனியது என்று பிரெஞ்சுக்காரன் சும்மாவா சொல்கிறான். அவன்கள் ரசிகன்கள்!

மேற்குக் கடற்கரையில் அரேபியர், போர்ச்சுக்கீசியர் வந்திருக்கிறார்கள். ஆகவே அற்புதமான கலவைகள் இங்கே நிகழ்ந்துள்ளன. இங்குள்ள எல்லா சாதிகளிலும் எல்லா மதங்களிலும் இனக்கலவை அடையாளங்கள் உண்டு. நீலக்கண்கள் சாதாரணம். கொங்கணிபிராமணர்கள், மாத்வ பிராமணர்கள், இஸ்லாமியர்கள், நாயர்கள், நம்பியார்கள் எல்லாருமே கலவைக்குருதி கொண்டவர்கள்தான். உண்மையில் சாதிப்படிநிலை கீழே செல்லச்செல்ல கலவை குறைந்து அழகும் குறையும்.

ராதாமணி எப்படி இருந்தாள்? சற்றே குண்டான ஐஸ்வரியா ராய், போதுமா? வந்து அமர்ந்ததுமே நடுங்கிக்கொண்டிருந்தாள். “சொல்” என்று கூர்மையாகச் சொன்னேன். கைகூப்பினாள். “எனக்கு எல்லாமே தெரியும். எனக்குத் தேவை உன்னுடைய தரப்பு என்ன என்பது மட்டும்தான், சொல்” என்றேன்.

அவள் விம்மி அழுதாள். அழுது முடிக்கும்வரை காத்திருந்தேன். ஆனால் நீண்டநேரம் விசும்ப விட்டுவிடக்கூடாது, அப்போது யோசிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

நான் மீண்டும் கூர்மையாக “சொல்” என்றேன்.

அவள் விசும்பிக்கொண்டே இருந்தாள். ஓர் அதிர்ச்சி இல்லாமல் தொடங்க மாட்டாள். நான் உரக்க “கிருஷ்ணனை கொலைசெய்தது நீயா உன் கணவனா?” என்றேன்.

அவள் திடுக்கிட்டு “இல்லை சார்! இல்லை சார்!” என்றாள். “எங்களுக்கு ஒன்றுமே தெரியாது சார். அவன் ஏன் மங்களூர் போனான் என்றே தெரியாது சார்.”

“அவனைத் தெரியும் இல்லையா?”

“ஆமாம் சார், தெரியும்.”

‘‘சொல்.”

“அவனிடம் நான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன் சார். அவன் என் தம்பி போல…ஊரில் இருக்கும்போது அடிக்கடி கோயிலுக்குப் போவேன். அவன் அன்பாகப் பேசுவான். முதிர்ச்சியாக ஆலோசனைகள் சொல்வான். ஆகவே அவனிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்.”

“என்ன சொன்னாய்?”

“அந்த தொல்லைகளைப் பற்றி.”

“யாருடைய தொல்லைகள்?”

அவள் பேசாமல் நின்றாள்.

“சொல்.”

அவள் உதடுகளை கடித்துக்கொண்டாள்.

“எல்லாம் எனக்கு தெரியும். உன் வாயால் வரவேண்டும். சொன்னால் உன்னை விட்டுவிடுவேன். இல்லாவிட்டால் ஜெயில்தான்.” “சொல்லமுடியாது சார். நான் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள்… எனக்கு எந்தப் பின்னணியும் இல்லை.”

“நீ யாரை பயப்படுகிறாய் என்று தெரியும். நீ கோர்ட்டில் வந்து சாட்சி சொல்லவேண்டியதில்லை. நீ இங்கே என்னிடம் என்ன சொன்னாய் என்று நான் எங்கும் பதிவும் செய்யமாட்டேன். உன்னிடம் எவர் கேட்டாலும் நீ ஒன்றுமே சொல்லவில்லை என்று சொல்லிவிட்டால் போதும். உனக்கு ஒன்றுமே தெரியவில்லை என்றுதான் சொன்னாய் என்று சொல்லிவிடு.”

“அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள்.”

“அதை தவிர்க்கத்தான் நான் வழி சொல்கிறேன். ஆனால் என்னிடமிருந்து நீ தப்பமுடியாது. உடனே உன்னையும் உன் கணவனையும் கைதுசெய்வேன்.பேப்பரில் செய்தி வரும்.”

“நான் ஒன்றுமே செய்யவில்லை சார்.”

“அதை நான் உறுதிப்படுத்தவேண்டும் என்றால் நீ உண்மையைச் சொல்லவேண்டும்… நீ உண்மையைச் சொன்னால் உனக்கு போலீஸின் பாதுகாப்பாவது உண்டு. சொல்லாவிட்டால் போலீஸும் எதிரி, அவர்களும் உன்னை பாதுகாக்கமாட்டார்கள்.”

“சார்!” என்று சொல்லி மீண்டும் அழுதாள்.

நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். திரும்பத்திரும்ப. அது ஒரு வழிமுறை. ஒருபக்கம் ஒரு வழியை திறந்து காட்டுவது. மற்ற எல்லா வழிகளையும் தர்க்கபூர்வமாக மூடிக்கொண்டே இருப்பது. அவள் வந்துதான் ஆகவேண்டும். ஆனால் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நிறைய சொற்கள் உதவியானவை. அவை கேட்பவரின் மூளையை சலிப்படையச் செய்கின்றன. அவள் சிந்திக்கமுடியாமலாக்குகின்றன. நான் சொல்லிச்சொல்லி முடிக்காமலேயே சென்றுகொண்டிருக்க அவள் மூச்சு இரைக்க முனகி நிமிர்ந்தாள்.

“சொல்” என்றேன்.

“அவன் என் பின்னால் வந்தான் சார்.”

“யார்?”

“அவன், ஹாஜி எம்.ஏ.. அப்துல்லாவின் மகன்.”

“அவன் பெயர் என்ன?”

“ஹாஷிம் என்று நினைக்கிறேன்…”

“முகமது ஹாஷிம்.. ”

“ஆமாம்.”

“சொல்.”

“அவன் என்னை ஒருமுறை சாலையில் பார்த்துவிட்டான். அதன்பின் என் பின்னால் வருவான்… என் பின்னால் அவனுடைய பெரிய கருப்பு கார் வந்துகொண்டிருக்கும். அவன் பைக்கில் என் வீட்டுக்கு முன் வந்து நின்று என்னைப் பார்ப்பான். என் பள்ளிக்கூட வாசலுக்கு வந்து காத்து நிற்பான்.”

“சொல்.”

“அவனுடைய வேலைக்காரன் ஒருவன் என்னிடம் வந்து அவன் என்னை விரும்புவதாகச் சொன்னான். அவன் பெயர் அப்துல் அஸீஸ். நான் ஹாஷிமுடன் அவர்களுடைய கடலோர பங்களாவுக்குச் சென்று ஒருநாள் தங்கமுடியுமா என்று கேட்டான். ஒருலட்சம் ரூபாய் தருகிறேன் என்றான் நான் காறித்துப்பி திட்டி அனுப்பினேன்.”

“ம்.”

“அதன்பிறகும் அவன் வந்து பேசினான். விடவே இல்லை. மீண்டும் மீண்டும் பேசினான். எத்தனை திட்டினாலும் அவனுக்கு பொருட்டே இல்லை. நிறைய பணம் தருகிறேன் என்றான். பதினைந்து லட்சம் வரை சொன்னான். ”

“பதினைந்து லட்சம்?” என்னால் அப்போது இவளுக்கென்ன கிறுக்கா என்றுதான் நினைக்கத் தோன்றியது. ஏனென்றால் நாங்கள் நஸ்ரானிகள் பிஸினஸ்காரர்கள்.

“ஆமாம். வீடுவாங்கி தருகிறேன், எஸ்டேட் எழுதித்தருகிறேன் என்று அசீஸ் சொன்னான். வைரநகைகளை கொண்டுவந்து காட்டினான். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பலநாட்கள் பள்ளிக்கூடம் போகாமல் வீட்டில் இருந்தேன். அசீஸ் என் வீட்டுக்கே வந்தான். கணவனை விட்டுவிட்டு வந்தால் ராணிமாதிரி இருக்கலாம் என்றன். மங்களூரிலோ மும்பையிலோ பெரிய வீடும் காரும் தருவதாகச் சொன்னான்.”

“ஓக்கே.”

“கடைசியில் அந்தப் பையனே நேரில் வந்தான்.”

“ஹாஷிம்?”

“ஆமாம், என்னை திருமணம் செய்துகொள்கிறேன் என்றான். அவனுக்கு என்னைவிட நான்கு வயது குறைவு. திருமணம் ஆகவில்லை. என்னை மதம் மாற்றி அதிகாரபூர்வ மனைவியாகவே ஆக்கிக்கொள்கிறேன் என்று சொன்னான். அவனுடைய அப்பா அம்மா அண்ணாக்கள் எல்லாரையுமே சமாதானம் செய்து ஒப்புக்கொள்ள வைப்பேன் என்றான்.”

“நீ என்ன சொன்னாய்?”

“அவன் காலில் விழுந்து அழுதேன். என்னை விட்டுவிடும்படி கெஞ்சினேன்.”

“அவன் மிரட்டினானா?”

“இல்லை அவனும் அழுதான். என்னை மறக்கவே முடியவில்லை என்றான். என்னை அடையாவிட்டால் செத்துவிடுவேன் என்றான்.”

“நீ என்ன சொன்னாய்?”

“அவனை திட்டி வெளியேபோ நாயே என்று சொன்னேன். இல்லை இல்லை என்று கூவியபடி அவன் என்னை பிடிக்கவந்தான். பலவந்தம் செய்வதற்காக அல்ல.அழுதபடி பிடிக்க வந்தான். நான் வெறிகொண்டு அவனை பிடித்து தள்ளினேன். மலலந்து விழுந்தான். கையிலிருந்த எல்லாவற்றையும் எடுத்து அவன்மேல் வீசினேன்.அவன் எழுந்து வெளியே சென்றான். அவன் போனபிறகும் நான் வெறியுடன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தேன். அதன்பிறகு அமர்ந்து அழுதேன்.”

“பிறகு?”

“அதன்பிறகு அறையைப் பார்த்தேன். ஒரே உடைசல்களாக கிடந்தது. எல்லாவற்றையும் எடுத்து அடுக்கினேன். அப்போதுபார்த்தால் ஒரு தொப்பி கிடந்தது. அவனுடைய தொப்பி.”.

நான் எழுந்துவிடப்பார்த்தேன். “துருக்கித் தொப்பியா? ”என்றேன். புகைப்படத்தைக் காட்டி “இதேபோன்றதா?” என்றேன்.

“ஆமாம்”

நான் ஒருகணம் என்னையே எண்ணி சலித்துவிட்டேன். என்ன முட்டாள்தனம். எம்.ஏ.அப்துல்லா சாகிபின் மகன்களும் அதே தொப்பிதான் போடுகிறார்கள் போலும். அதை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.

“அந்த தொப்பி எங்கே?”

“அதை எடுத்து வெளியே போடலாம் என்று நினைத்தேன். ஆனால் எவருக்காவது தெரிந்துவிடும் என்று தோன்றியது. ஆகவே எடுத்து சமையலறையில் ஒரு பெட்டிக்குள் போட்டு வைத்தேன்.”

“பிறகு என்ன சொன்னாய்?”

“உடம்பு சரியில்லை, அம்மாவைப் பார்க்கப்போகிறேன் என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு வடகரைக்குச் சென்றுவிட்டேன். ஆறுநாட்கள் அங்கேயே இருந்தேன். ”

“அப்போது கிருஷ்ணனைப் பார்த்தாய் இல்லையா?”

“ஆமாம், அவனிடம் ஏற்கனவே இந்த தொந்தரவைப் பற்றிச் சொல்லியிருந்தேன். என் கணவரிடம் சொல்லலாமா என்று கேட்டேன். சொல்லவேண்டாம், சொன்னால் அவர் உன்மேலும் சந்தேகப்பட வாய்ப்புண்டு என்றான். அது உண்மை, என் கணவர் எப்போதும் என்னை சந்தேகப்படுபவர். ஆண்கள் யாராவது என்னிடம் பேசினாலே வீட்டுக்கு வந்து அடிப்பார். வயதானவர்கள் பேசினால்கூட…”

“அன்று நடந்ததை கிருஷ்ணனிடம் விரிவாகச் சொன்னாய் இல்லையா?”

“ஆமாம்.”

“அதன்பிறகு?”

“திரும்பி வந்துவிட்டேன். வீட்டுக்கு வந்தபோது கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.”

“ஹாஷிமிடமிருந்து ஏதாவது தொந்தரவு வந்ததா?”

“இல்லை… எந்தத் தொந்தரவும் இல்லை. நான் அவன் ஏதாவது செய்வான் என்று ஒருவாரம் எதிர்பார்த்தேன். வீட்டிலேயே இருந்தேன். அவன் வரவில்லை. அதன்பின் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தேன் இன்னொரு வாரம் கடந்தபின் எல்லாம் சரியானதுபோல இருந்தது.”

“அப்போது கிருஷ்ணன் வந்தான்?”

“ஆமாம்.”

“என்ன சொன்னான்?”

“மும்பைக்குப் போவதாகவும், அங்கே வேலைதேடப்போவதாகவும் சொன்னான்.”

“அவனுக்கு இங்கே ஒன்றரை லட்சம்ரூபாய் வரை கடன் இருக்கிறது, தெரியுமா?” என்றேன்.

“தெரியும்” என்றாள். “அவனுக்கு அங்கே சம்பளமே இல்லை. குடும்பத்தை நடத்தவே வழியில்லை. அவ்வப்போது என்னிடமும் கடன் வாங்கியிருக்கிறான்… கடன் தாளமுடியாமல்தான் ஊரைவிட்டுச் சென்றான். கடன்காரர்கள் அவனை கடுமையாக மிரட்டினார்கள். ஒருநாள்கூட ஊரில் இருக்கமுடியாத நிலை.வீட்டுப்பத்திரம் இன்னொருவரிடம் இருந்தது. அறுபதாயிரம் கடன்கொடுத்த ஒருவர் வட்டியோரு எண்பதாயிரம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் வீட்டுக்கு வந்து முற்றத்தில் இழுத்து போட்டு அடிப்பேன், வேட்டியை உருவிவிடுவேன் என்றெல்லாம் மிரட்டினார். ஆகவேதான் அவன் பயந்து கிளம்பினான்.”

“உன்னிடம் பணம் கேட்டான் இல்லையா?”

“ஆமாம். ஆனால் என்னிடம் பணம் இல்லை. என் நகை ஒன்றுகூட கையில் இல்லை. என் கணவர் எல்லாவற்றையும் கோ-ஆப்பரேட்டிவ் பேங்கில் முந்தைய மாதம்தான் அடகுவைத்திருந்தார். வீடுகட்ட ஒரு சிறிய நிலம் வாங்க திட்டமிருந்தது. என்னிடம் அறுபது ரூபாய் மட்டும்தான் இருந்தது. அது மட்டும்தான் இருக்கிறது என்றேன். அவனிடம் வெறும் எட்டுரூபாய்தான் இருந்தது.”

“பிறகு?”

“அவன் அழுதான். என்ன செய்வது எங்கே செல்வது என்றே தெரியவில்லை என்றான். நானும் அழுதேன். பிறகு அவன் திடீரென்று என்னிடம் அந்த துருக்கித் தொப்பி உன்னிடமிருக்கிறது இல்லையா, அதைத் தா என்று கேட்டான்.”

“நீ கொடுத்தாயா?”

“ஆமாம்.”

நான் பெருமூச்சுவிட்டேன்.

“தொப்பியை வாங்கி பையில் வைத்துக்கொண்டு அவன் கிளம்பிவிட்டான்.”

“அந்த தொப்பியை வைத்து அவன் என்ன செய்வதாக இருந்தான் என்று உனக்கு தெரியுமா?”

“அப்போது தெரியவில்லை, பிறகு தெரிந்தது.”

“என்ன?”

அவள் உதடுகளை கடித்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

“சொல்.”

“அவன் ஹாஷிமை மிரட்டுவதற்காகச் சென்றிருக்கலாம்.”

“ஹாஷிமை அவன் சந்தித்தானா?”

“தெரியாது.”

“ஹாஷிம் பிறகு உன்னை சந்தித்தானா?”

“இல்லை.”

“அவன் ஹாஷிமை சந்தித்தால் அவன் பையில் அந்த தொப்பி எப்படி இருந்திருக்கமுடியும்? அவன் அந்த தொப்பியுடன் மங்களூர் வரைச் சென்றிருக்கிறான்.”

“எனக்கு தெரியாது.”

“சரி, நீ போகலாம்.”

“சார், எனக்கு ஒன்றும் ஆகாதே? எனக்கு குழந்தை இருக்கிறது.”

“ஒன்றும் ஆகாது.”

அவள் மேலும் ஒருகணம் தயங்கி “சார்” என்றாள்.

“சொல்.”

“அவன் கிருஷ்ணனைக் கொன்றிருக்கமாட்டான்” என்றாள்.

“யார்?”

“ஹாஷிம்.”

“ஏன் சொல்கிறாய்?”

“சார், அவனும் நல்ல பையன்தான். அடம்பிடிக்கும் சின்னக்குழந்தை என்றுதான் தோன்றியது. பெரும் பணக்காரவீட்டுக் குழந்தை. நினைத்ததை எல்லாம் அடைந்தவன். அவனுக்கு இன்னொருவரின் மனநிலை புரியவில்லை. இன்னொருவரின் வாழ்க்கைச் சூழ்நிலையும் தெரியாது. ஆனால் அவன் சின்னக்குழந்தை.”

“சின்னக்குழந்தைகள் கொலைசெய்யும்… பார்த்ததில்லையா? சிறிய பூச்சிகளை..”

அவள் கண்களில் கண்ணீர் வந்ததைக் கண்டேன் “ஹாஷிமுக்கு கிருஷ்ணன் ஒரு சின்ன பூச்சிதான்” என்றேன்.

 “இல்லைசார், எனக்குத்தெரியும்…”

நான் அவள் கண்களைப் பார்த்தேன். “அவன் மேல் அனுதாபம் இருக்கிறதா?” என்றேன்.

அவள் என் கண்களை நேருக்குநேர் பார்த்தாள் முற்றிலும் வேறு ஒருத்தியாகத் தெரிந்தாள். “ஆமாம்” என்றாள்.

 “இல்லை காதலா?”

“தெரியவில்லை… ஆனால் அவன் கண்களில் இருந்தது என்மேல் அவன் கொண்ட பிரியம்… அப்படி ஒரு பிரியத்தை நான் எவரிடமும் பார்த்ததே இல்லை… எல்லாரும் மாமிசத்தைப் பார்க்கும் நாய் போலத்தான் என்னைப் பார்ப்பார்கள்.”

நான் புன்னகைத்தேன்.

“அவன் கொல்லமாட்டான் சார்.”

“அவன் உன்மேல் கொண்டிருந்தது தூய்மையான காதல் என்றால் அதற்காக அவன் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாமே?”

“ஆமாம், என் வீட்டு வாசலில் வந்து நிற்கலாம். எனக்காக தற்கொலைகூடச் செய்துகொள்ளலாம். ஆனால் அவன் என்னை கவரமுயன்றதை மட்டும் ஒளிக்கமாட்டான். அதைவைத்து மிரட்டுபவனைக் கொல்லமாட்டான்.”

“நீ ஹாஷிமை எதிர்பார்க்கிறாயா?”

அவள் கண்கள்! தோழர்களே, கதையெழுதும் பாதிமலையாளிப் பாண்டியே, ஒன்று தெரிந்துகொள். சிலசமயங்களில் மனித மனதை நேருக்குநேராகப் பார்த்து நாம் நடுங்கிவிடுவோம்.

அவள் உறுதியான குரலில் சொன்னாள். “ஆமாம், என் வாழ்க்கையில் நான் எனக்கு மட்டுமான இனிமையாக நினைப்பது அதை மட்டும்தான். என் மரணநாள் வரை அவனை நினைத்திருப்பேன்.”

அவள் சென்றபின் என்னால் நெடுநேரம் ஒன்றுமே தோன்றவில்லை. ஏதேதோ எண்ணியபடி அமர்ந்திருதேன். மேற்கொண்டு என்ன செய்வது? கிருஷ்ணன் சென்று ஹாஷிமை பிளாக்மெயில் செய்தானா? பணம் வாங்கினான் என்றால் அந்த தொப்பி எப்படி அவனிடமிருந்தது? பணம் வாங்கவில்லை என்றால் எதற்காக மங்களூர் சென்றான்?

எப்படி மேற்கொண்டு விசாரிப்பது என்று தெரியவில்லை. ஒருநாள் முழுக்க கோழிக்கோட்டில் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். கடைசியாக ஒன்று தோன்றியது, எம்.ஏ.அப்துல்லாவிடமே நேரில் கேட்பதுதான் சரி. எந்நிலையிலும் அவர் பொய்சொல்பவர் அல்ல. அவருடைய சிரிக்கும் முகம் நினைவுக்கு வந்தது. அழகன் என்று அந்நிலையிலும் என் மனம் மலர்ந்தது.

வக்கீல் அப்துல் ஷமீர் வழியாக எம்.ஏ.அப்துல்லா சாகிபை தனியாகச் சந்திக்கவேண்டும் என்று செய்தி அனுப்பினேன். ஒரு கேஸ் விஷயமாக என்றும் தெரிவித்திருந்தேன். அவர் வரச்சொல்வதாக அப்துல் ஷமீர் சொன்னார். சாகிபின் உதவியாளர் அப்துல் காதர் வந்து என்னை கூட்டிச்சென்றான். இம்முறை அவரை கடலுக்குள் நின்றிருந்த பெரிய ஆடம்பரப் படகில் சந்தித்தேன். அவர் அங்கே வேறு ஒரு சந்திப்பை முடித்துவிட்டு எனக்காக காத்திருந்ந்தார்.

முகம் மலர இருகைகளையும் விரித்தபடி வந்து என்னை ஆரத்தழுவி வரவேற்றார். முகமன்கள் சொல்லி அமரச்செய்தார். வழக்கமான நலம்விசாரிப்புகள். நான் கேஸ் விஷயமாக சந்திக்க வந்திருப்பதாக முன்னரே சொல்லியிருந்தேன். அது கிருஷ்ணன் விவகாரம் என்றும் அவருக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர் முகத்தில் எந்த மாறுபாடும் இல்லை. அதே அழகான சிரிப்பு. துல்லியமான வெண்பற்கள். மெல்லிய பனிப்படலம் போன்ற கண்ணாடி.

நான் விஷயத்துக்கு சென்றேன். “சாகிப், நான் ஒரு கேஸை விசாரிக்க வந்திருக்கிறேன். ஒரு கொலைக்கேஸ். அது நீங்கள் செய்த கொலை என்றால்கூட மறைக்கமாட்டீர்கள் என்று தெரியும்.”

“ஆம், என் வாழ்நாளில் நான் எவரிடமும் எதையும் மறைத்ததில்லை” என்று சாகிப் சொன்னார்.

“சாகிப், கிருஷ்ணன் எம்பிராந்திரி என்று ஓர் இளைஞன் மங்களூரில் கொல்லப்பட்டு கிடந்தான். அவனை நீங்களோ உங்கள் ஆட்களோ கொன்றீர்களா?”

“இல்லை” என்றார் சாகிப்.

“சரி, நீங்கள் அவனைச் சந்தித்தீர்களா?”

“ஆமாம்” என்று அவர் அதே புன்னகையுடன் சொன்னார்.

“எங்கே? எப்போது என்று நான் அறிந்துகொள்ளலாமா?”

“அவன் இறந்த தேதி என்ன சென்ற ஆண்டு ஜூலை 19 அல்லவா?”

“ஆமாம்.”

“அதற்குநான்குநாட்களுக்கு முன் ஜூலை 15 ஆம் தேதி அவனை நான் சந்தித்தேன்.”

“அதாவது அவன் வடகரையில் இருந்து கிளம்பிய மறுநாள்.”

“ஆமாம்.”

“எப்படிச் சந்தித்தீர்கள்?”

“அவன் என் மகனை தேடி என் வீட்டுக்கே வந்தான். சாதாரணமாக அப்படி எவரும் அங்கே வரமாட்டார்கள். அவன் பிராமணன், ஆகவே எதற்கும் அவன் பயப்படவேண்டியதில்லை என்று அறிந்திருந்தான். என் உதவியாளர் ஹாஜி முஸ்தபா அங்கிருந்தார். அவன் ஹாஷிமைச் சந்திக்கமுடியாது என்று அவர் சொன்னபோது அப்படியென்றால் சாகிபை சந்திக்கிறேன் என்றான். அவருக்கு அவன் என்ன கிறுக்கனா என்று சந்தேகம். அப்படி அவரைச் சந்திக்கமுடியாது என்று முஸ்தபா சொன்னார். அவன் உரக்க என்னை இப்போது சந்திக்கவில்லை என்றால் நாளை அவர்கள் இருவரும் போலீஸை சந்திக்கவேண்டியிருக்கும் என்றான்.”

நான் புன்னகைத்தேன்.

அவரும் புன்னகைத்து “முஸ்தபா எனக்கு ஃபோன் செய்து சொன்னார். அவனை என்னிடம் அனுப்பும்படிச் சொன்னேன். அவர் ஏதோ குழம்பிப்போன பிராமணர் என்று தெரிந்திருந்தது. சமாதானம் செய்து அனுப்பலாம் என்று நினைத்தேன்.”

“குழம்பிப்போன பிராமணனேதான்.”

“அவர் வந்ததுமே என்னிடம் உரக்க பேச தொடங்கினார். என்னை மிரட்டவேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவருக்குப் பழக்கமில்லை. ஆகவே கூச்சலிட்டார். அத்துடன் அவர் மிகவும் அரண்டிருந்தார். அவரால் தன்னை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. என் மகன் ஹாஷிம் ஒரு சாதாரணப் பெண்ணை கெடுக்க முயன்றதாகவும், அவள் அவனை அடித்துத் துரத்திவிட்டதாகவும், அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் சொன்னார். இந்துப்பெண்களை முஸ்லீம்கள் கெடுப்பதை வெளியே சொன்னால் கலவரம் உருவாகும் என்றார்.”

அவர் மிக இயல்பான முகத்துடன் உணர்ச்சிகள் இல்லாமல் அதைச் சொல்லிக்கொண்டிருந்தார். எவருடைய கதையையோ சொல்பவர் போல.

“நான் அவரை அமரும்படிச் சொன்னேன். என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவர் மீண்டும் என்னையும் என் மகனையும் ஜெயிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டினார். விஷயத்தைச் சொல்லுங்கள் திருமேனி என்றேன். அதற்குப்பிறகுதான் அவர் கொஞ்சம் நிதானமடைந்து ராதாமணியை ஹாஷிம் பின் தொடர்ந்து சென்றதையும் மிரட்டியதையும் சொன்னார். கடைசியில் வீட்டுக்குள் சென்றே பலாத்காரம் செய்ய முயன்றதாகச் சொன்னார்.”

நான் அவர் முகத்தை பார்த்திருந்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த விழிகள். எத்தனை உறுதியான நரம்புகள் என்ற வியப்பே எனக்கு ஏற்பட்டது. தலைமுறை தலைமுறையாக தீயும் ரத்தமும் கண்ணீரும் கண்டவர்களுக்கு உரியவை.

“நான் அவரிடம் பொறுத்திருக்கும்படிச் சொன்னேன். எழுது மாளிமையின் பின்பக்க அறைக்குச் சென்று ஹாஷிமின் வேலைக்காரன் அஸீசை அழைத்து வரச்சொன்னேன். அவன் வந்ததும் அவனிடம் என்ன நடந்தது என்று கேட்டேன். அவன் நடுங்கினான். என்னிடம் எதையும் எவரும் மறைக்கமுடியாது என்று அவனுக்குத் தெரியும். ராதாமணியை ஹாஷிம் பின்தொடர்ந்ததும் கவரமுயன்றதும் உண்மைதான் என்றான். ஆனால் பலாத்காரம் செய்ய முயலவில்லை, உண்மையிலேயே அவன் அவள்மேல் பித்தாக இருக்கிறான். அவளை எப்படியாவது அடையவேண்டும் என்று நினைக்கிறான். அவளை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கனவுகாண்கிறான் என்று சொன்னான்.”

“நான் ஒன்றுமட்டும் கேட்டேன், அந்தப்பெண் என்ன சொல்கிறாள் என்று. அவள் ஹாஷிமை விரும்பவில்லை, தன்னை தன் கணவனுடன் வாழ விடும்படி கெஞ்சி அழுதாள் என்றான். சரி போ என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு கிருஷ்ணன் எம்பிராந்திரி இருந்த அறைக்கு வந்தேன்” என்று சாகிப் தொடர்ந்தார்.

“கிருஷ்ணன் எம்பிராந்திரி பதற்றத்தில் இருந்தார். அவரால் அந்த தருணத்தின் அழுத்தத்தைக் கையாள முடியவில்லை. அறைக்குள் எழுந்து நின்று சுற்றிக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் ஓடிவந்து விசாரித்தீர்கள் அல்லவா? நான் சொல்வது உண்மைதான் அல்லவா? என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்றார்”.

நான் அவரை மீண்டும் அமரச்செய்தேன். ’சரி, இனி என் மகன் எந்த தொந்தரவும் செய்யமாட்டான்’ என்றேன். ’ஆனால் செய்த தொந்தரவுக்கு என்ன பதில்?’ என்று கிருஷ்ணன் எம்பிராந்திரி கூவினார். அ’வளிடம் அவன் மோசமாக நடந்தான், பலாத்காரம் செய்ய முயன்றான். இதுதான் புகழ்பெற்ற மாலிக் தினார் வம்சத்தின் குணமா? ஏழைப்பெண்களை துரத்தி கற்பழிப்பதா குஞ்ஞாலி மரைக்காயரின் வழிவந்தவர்களின் வேலை? ஹாஜி எம்.ஏ. அப்துல்லா சாகிப் என்றால் நெறிதவறாத தெய்வம் என்று சொல்கிறார்களே இதுதானா அது’ என்று கூவிக்கொண்டே இருந்தார்.”

“நான் அவரை மீண்டும் மீண்டும் சமாதானம் செய்தேன்.’சரி, இதை அப்படியே மறந்துவிடச்சொல்லுங்கள் அந்தப்பெண்ணிடம். இனி அவள் கவலையே படவேண்டாம் என்று சொல்லுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்’என்றேன்.’அவள் விட்டாலும் நான் விடமாட்டேன்’என்றார் கிருஷ்ணன் எம்பிராந்திரி. ’‘சரிஉங்களுக்கு என்னவேண்டும்?” என்று கேட்டேன். அப்படி சட்டென்று கேட்டபோது அவர் திணறிவிட்டார். ஒன்றும் சொல்லமுடியவில்லை. மிகவும் கள்ளமற்ற மனிதர். பதற்றத்துடன் மூச்சுவாங்கினார். அதன்பின் இரண்டுலட்சம் ரூபாய் வேண்டும் என்றார்” சாகிப் சொன்னார்.

“அவனுக்கு இருந்த கடன் அவ்வளவுதான்” என்றேன்.

“ஆமாம், அது எனக்கு உடனே தெரிந்தது. நான் எழுந்துசென்று நான்கு லட்சம் ரூபாய் கொண்டுவந்து கொடுத்தேன். அதை ஒரு தாம்பாளத்தில் வைத்து கூடவே ஆப்பிள் வெற்றிலை பூ ஆகியவை வைத்து அவரிடம் நீட்டினேன்.”திருமேனி, தாங்கள் என்னை மிரட்டியதனால் நான் இதைத்தரவில்லை. என்னை எவரும் மிரட்ட முடியாது. தாங்கள் ஒரு பூஜ்யபிராமணன், நான் எளிமையான ஷத்ரியன், ஆகவே இதை காணிக்கையாகத் தருகிறேன், ஏற்றுக்கொண்டு என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வாதம் செய்யவேண்டும் ”என்று சொன்னேன். சட்டென்று பணக்கட்டை மட்டும் எடுத்துக்கொண்டார். அதை பையில் போட்டுக்கொண்டு ஒரு வார்த்தைகூட சொல்லாமல் வெளியே ஓடினார்.”

“அவர் போவதை நான் பின்னால் நின்று பார்த்தேன். தவறுசெய்துவிட்டோம் என்ற எண்ணம் வந்தது. அவரால் அந்தப் பணத்தை மறைக்கமுடியாது. எங்காவது ரௌடிகளிடம் மாட்டிக்கொள்ள வாய்ப்பு. அந்தப்பணத்தை அவர் வீட்டுக்குக் கொண்டுசென்று கொடுத்திருக்கவேண்டும்…பணம் ஆற்றல் மிக்கது, ஆனாலும் அவர் வீட்டுக்கு திரும்புவார் என்று நினைத்தேன். ஏனென்றால் கூடுதலாக இரண்டு லட்சம் இருக்கிறது. அவர் கடன்களை அடைத்த பிறகும் கொஞ்சம் நிம்மதியாக இருக்கமுடியும். ஆனால் நான்குநாட்கள் கழித்து செய்தி வந்தது, அவர் மங்களூரில் கொல்லப்பட்டுவிட்டார் என்று. என்ன நடந்தது என்று புரிந்தது. அவர் கையில் பணமிருப்பதைக் கண்டு அவரைக் கொன்றிருக்கிறார்கள். ஒன்றும் செய்வதற்கில்லை. எனக்கு கொஞ்சம் குற்றவுணர்ச்சிதான்…”

“சாகிப், நான் முதலில் வந்து பார்த்தபோதே இதை நான் விசாரிப்பது உங்களுக்குத் தெரியுமா?”

சாகிப் சிரித்து “நன்றாகத் தெரியும்… கிருஷ்ணனின் கையில் இருந்த பட்டுநூலைப்பற்றியும் தெரியும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் நகலை வரவழைத்து படித்துப்பார்த்தேன்.”

“நான் விரைவாக நெருங்கிவிட்டேன் இல்லையா?”

“ஆமாம், ஆனால் ரொசாரியோ இன்னும் விரைவாக வந்திருப்பார்” என்று அவர் சிரித்தார்.“அவர் அந்த பட்டுநூலை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் சேர்த்திருக்க மாட்டார். ஆனால் அதைத் தொடர்ந்து என்னை வந்து சேர்ந்திருப்பார். அந்தவகையான தொப்பி போடுபவர்கள் யார் என்று மட்டும் பார்த்திருப்பார். என்னை அடையாளம் கண்டபின் கிருஷ்ணன் யார் என தேடியிருப்பார். அது எளிய வழி”.

நான் “ஆமாம், இப்போது புரிகிறது” என்றேன்.

“ஒருபொருளை பார்ப்பதற்கு அதை மூடியிருக்கும் மூடியைத்தான் முதலில் திறக்கவேண்டும்” என்றார் சாகிப். இன்றுவரை நான் என் புலனாய்வில் ஒரு மாறாத நெறியாக கொண்டிருக்கும் ஆப்த வாக்கியம் அது.

“சாகிப், நான் ஒன்று கேட்கிறேன். அவன் ஏன் மங்களூர் சென்றான்? அந்த தொப்பியை ஏன் உங்களிடம் காட்டவில்லை?” என்று நான் கேட்டேன்.

“அது மனித மனம்தானே? இங்கே நான் அவருக்கு சட்டென்று பணத்தை எடுத்துக் கொடுத்துவிட்டேன்.அந்த தொப்பியை வைத்து மிரட்டவேண்டிய தேவையே வரவில்லை. அவரும் பணத்தைக் கண்டதும் சட்டென்று வெளியே ஓடிவிட்டார். வெளியே சென்று கோழிக்கோடு ரயில்நிலையத்தை அடைந்ததும் அவர் தெய்வத்திற்கும் சாத்தானுக்கும் நடுவே மாட்டிக்கொண்டிருக்கலாம்.”

“எப்படி?”

“பணம் மாம்மன் என்ற தெய்வம், அது சாத்தானின் படைவீரர்களில் ஒன்று. வியர்வை சிந்தி அதை ஈட்டவேண்டும். அல்லது ரத்தமும் கண்ணீரும் சிந்தி ஈட்டவேண்டும். வியர்வையும் ரத்தமும் கண்ணீரும் நாம் அல்லாவுக்கு அளிக்கும் விலை, அதற்கு பதிலாக அவர் நமக்கு செல்வத்தை அளிக்கிறார்.அவ்வாறு ஈட்டப்பட்ட செல்வத்தை அல்லா காப்பாற்றுவார். அல்லாவுக்கான விலையை அளிக்காமல் வரும் செல்வம் சாத்தானுடையது. அவனிடமிருந்து நாம் தப்பமுடியாது. ஆகவேதான் நான் எவருக்குமே சும்மா பணத்தை கொடுப்பதில்லை. கல்வியோ மருத்துவமோ கொடுப்பேன். திருமணம் செய்துவைப்பேன். பணம் கொடுப்பதில்லை. பணம் கொடுப்பது ஒருவனை சாத்தானிடம் தள்ளிவிடுவது.”

அவர் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு அராபிய தங்ஙள் போல, ஒரு சூஃபி போல, ஒரு சுல்தான்போல. மீண்டும் அதே எண்ணம், என்ன ஓர் அழகு.

“அவர் ரயில்நிலையத்தில் நின்றிருக்கையில் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. பணத்துடன் வடகரைக்குச் சென்றிருக்கலாம். குடும்பத்திற்கு உதவியிருக்கலாம். தேவையென்றால் ராதாமணிக்கும் கொஞ்சம் கொடுத்திருக்கலாம். ஆனால் அந்தக்கணம் சாத்தான் அவருக்குள் இருந்து ஆழத்தில் புளித்து நாறும் கனவுகளை வெளியே எடுத்தான்.”

நான் “ஆம்” என்றேன்.

“அவை இல்லாத மனித மனமே இல்லை.ஆகவேதான் பணமுள்ளவன் ஒவ்வொரு கணமும் தன்னை அல்லாவின் பாதையில் அமைக்க போராடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. பணமில்லாதவன் இன்னும் துரதிருஷ்டமானவன். அவன் தன்னுடைய ஏழ்மையால் கட்டுண்டிருப்பவன் தான் என்று நினைப்பவன். உலகமே மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டிருக்க தான் மட்டும் மண்ணில் புதைக்கப்பட்டிருப்பதாக பொருமுபவன். அவனுக்கு பணம் வந்தால் அவனை அது பைத்தியம் ஆக்கிவிடும்.”

நான் புன்னகைத்தேன்.

“அவர் மங்களூர் சென்றார். அங்கே எங்கோ தங்கி அவர் விரும்பிய சிலவற்றைச் செய்திருக்கலாம். ஆனால் அவருக்கு அதற்கான வழிகள் அவருக்கு தெரியாது. பணத்தை அள்ளி வீசியிருக்கலாம். முன்பின் தெரியாதவர்களிடம் தொடர்பு வைத்திருக்கலாம்.”

“ஆம், அதுவே வாய்ப்பு” என்றேன்.

“அவரிடம் அந்த தொப்பி இருப்பதை அவர்கள் கண்டிருக்கலாம். அதை வைத்து ஹாஷிமை தனியாகச் சந்தித்து மிரட்டி மேலும் பணம் பறிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்காக ஆலோசனை செய்வதாகச் சொல்லி அவரை மங்களூர் பாலத்திற்கு அழைத்துவந்திருக்கிறார்கள். அங்கே அந்த தொப்பியை பிடுங்கிக்கொண்டு அவரை துரத்திவிட முயன்றிருக்கிறார்கள். அல்லது கொல்லும் நோக்கமேகூட இருந்திருக்கலாம். தொப்பிக்கான சண்டையில் அவர் அதை பிடித்திருக்கிறார். கையில் ஒரு நூல் மட்டும் எஞ்சியது. கீழே ஆற்றில்விழுந்து மூழ்கி இறந்தார்” என்றார் சாகிப்.

நான் பெருமூச்சுவிட்டேன். படகு மெல்ல ஊசலாடிக்கொண்டிருந்தது. அரபிக்கடலின் நீர் ஆழ்ந்த நீலநிறம் கொண்டது. மாலைவேளையில் சட்டென்று கருமைகொண்டுவிடும். சூரியன் செந்நிறக்கொந்தளிப்பாக மேற்கே விழுந்துகொண்டிருந்தது. கடல்காற்றில் அதுவரை இருந்துவந்த நீராவியின் வெம்மை குறைந்து குளிர் அடித்தது.

“இனிமையான காற்று…. மக்கள் ஊட்டி கொடைக்கானல் என்று மலைகளுக்குச் செல்கிறார்கள். எனக்கு கடல்காற்றின் இனிமை வேறு எங்கும் இல்லை என்று தோன்றும். கொஞ்சம் உப்புக்காற்று நுரையீரலில் இருந்தால்தான் தூக்கமே வரும்” என்றார் சாகிப்.

“ஆமாம், நானும் மங்களூர் வந்தபின் கொஞ்சம் பழகிவிட்டேன். கடல்காற்றில் புகையும் தூசியும் இல்லை, தூய்மையானது” என்றேன்.

“நீங்கள் ஒயின் சாப்பிட விரும்பினால் சாப்பிடலாம். எங்களுக்குத்தான் மது ஹராம்” என்றார்.

நான் புன்னகைத்தேன். அவர் கைகாட்டினார். வந்து பணிந்த ஏவலனிடம் மெல்லிய குரலில் பேசினார். ஹென்றி ஜாயேர் வைன் வந்தது. நான் கோப்பையை கையிலெடுத்தேன். துளித்துளியாக உறிஞ்சி அதன் கசப்பை நாவில் நிறுத்தினேன்.

ஒயின் நம்மை ஒரு சீமானாக எண்ணச்செய்கிறது. அதைவிட ஜெண்டில்மேனாக கற்பனைசெய்துகொள்ளச் செய்கிறது.நான் சொகுசாக, நிம்மதியாக உணர்ந்தேன். கால்களை நீட்டி இயல்பாக ஆனேன். புன்னகைத்தேன். கடல் அலைகளை மகிழ்ச்சியுடன் பார்த்தேன். மனதில் கடலின்னக்கரே போணோரே என்ற பாடல் எழுந்தது. அந்த மெட்டு என்னை சற்றே துக்கம் கொண்டவனாக்கியது. மெல்லிய துக்கம் ஒயினுக்கு மிக உகந்த கலவை. நாம் மேலும் சொகுசாக, மேலும் ஓய்வாக, மேலும் ஜெண்டில்மேன் ஆக உணர்கிறோம்.

“சாகிப் இது என் தொழில்சார்ந்த உதவி, நீங்கள் விரும்பினால் செய்யலாம். கட்டாயமில்லை. கிருஷ்ணனைக் கொன்ற கும்பல் அன்றே மங்களூரிலிருந்து சென்றிருக்கவேண்டும். ஆனால் அவர்களிடம் ஹாஷிமின் தொப்பி இருந்தது. அதை அவர்கள் பயன்படுத்தாமலிருக்க வாய்ப்பே இல்லை. அவர்கள் ஹாஷிமை அணுகினார்களா, ஏதேனும் பேரம் பேசினார்களா?” என்றேன். “நான் ஹாஷிமிடம் ஓர் அரைமணிநேரம் பேசவேண்டும்.”

“அவனிடம் பேசமுடியாது.”

“ஏன்?”

“அவன் இல்லை.”

“எங்கே இருக்கிறார்?”

அவர் காலடியை காட்டி “இந்த அரபிக் கடலின் ஆழத்தில்” என்றார்.

நான் கைகள் நடுங்க எழுந்துவிட்டேன். பின்னர் கோப்பையை டீபாயில் வைத்தேன். “சாகிப், நீங்களா?” என்றேன்.

“நானேதான். அவனுடைய மூத்தவர்களின் சம்மதத்துடன்” என்றார். “இது எங்களுக்குள் நடக்கும் விஷயம். இதில் போலீஸ் தலையிடும் வழக்கம் இல்லை.”

“ஆமாம்” என்று அமர்ந்துகொண்டேன். அவர் முகத்தில் அதே புன்னகை, இமைகூட சுருக்கமில்லை. அதே முழுமலர்வு.

“சாகிப், ஏன் அதைச் செய்தீர்கள்? அந்தப்பெண்ணே சொன்னாள், அவன் ஒரு குழந்தை என்று. ஒரு பொம்மையை விரும்புவதுபோல அவளை விரும்பியிருக்கிறான். அடம்பிடித்திருக்கிறான்.”

“அது எனக்குத் தெரியும். அவன் என் செல்லக்குழந்தை. அவனைப்பற்றி எனக்கு மேலும் தெரிவதற்கு ஒன்றும் இல்லை”என்றார் சாகிப் “ஆனால் இது எங்கள் நெறி. இதை யாரும் எந்நிலையிலும் மீறமுடியாது. நானேகூட மீறமுடியாது. மீறாமலிருக்கும்வரைத்தான் இதெல்லாம் இருக்கும்… ஒரு சிறிய பிழைக்குக் கூட இங்கே இடமில்லை.”

“அவன் ஒரு குழந்தை…என்ன இருந்தாலும்…”

“ஆமாம்,இது சுல்தான்களுக்குரிய உடைவாள். இதை வழிப்பறிக்கு பயன்படுத்தக்கூடாது.”

“தப்புதான்” என்றேன்.

“தொடங்கிவிட்டால் பிறகு நிறுத்தவே முடியாத தப்பு. என் காலத்தில் அது தொடங்காது” அவர் கடலை நோக்கி அமர்ந்திருந்தார். கண்ணாடிச் சில்லுகளில் அலைகள் தெரிந்தன.

நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு கண்களை மூடிக்கொண்டு நெடுநேரம் இருந்தேன். கண்களை மீண்டும் திறந்தபோது வானம் இருட்டியிருந்தது. சூரியனின் கடைசி வண்ணங்கள் எஞ்சியிருந்தன.

சாகிப் எழுந்து கொண்டு என்னிடம் “உஸ்தாத் படே குலாம் அலி கான் பிளேட்டுகள் இரண்டு எடுத்து வைத்தேன், இன்றைக்காக. இன்று ஏழாம்நிலவு. ஏழாம்நிலவுக்குரிய ராகம் சந்திரகௌன்ஸ். உங்களுக்கு ஆர்வமிருந்தால் கேட்கலாம்…”

நான் அவர் முகத்தைப் பார்த்தேன். அதே புன்னகை, அதே தெளிந்த அழகிய விழிகள். அவர் மலர்மேல் மலரை வைப்பது போல இசைத்தட்டின்மேல் ஊசியை வைத்தார். கரிய முத்துப் பளபளப்புடன் எல்பி ரிக்கார்ட் பிளேயர். அது ஓடத்தொடங்கியது. உஸ்தாதின் பித்துப்பிடிக்கச் செய்யும் குரல் எழுந்தது. அது மனிதக்குரல் அல்ல. மலை,கடல்,தீ,வானம், காற்று போன்ற ஏதோ அமானுடப் பேருருவின் குரல்.

சாகிப் நாற்காலியில் அமர்ந்துகொண்டார். கைகளை கோத்து மார்பில் வைத்தார். கண்களில் கனவு எழுந்தது. பதின்பருவத்து இளைஞனுக்குரிய உருகும் முகம். நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.ஔசேப்பச்சன் சொன்னான். மச்சானே, அது ஒரு அபூர்வமான நாள். ஒருபோதும் வாழ்க்கையை அறிந்துகொள்ள முயலக்கூடாது என்று நமக்குத் தோன்றுமே அப்படிப்பட்ட ஒரு நாள் அது.

மரைன் டிரைவின் கடல் அலைகள்மேல் சூரியன் அணைந்துகொண்டிருந்த சிவப்பு தளதளத்தது. மிகமிக மெல்ல நிகழ்வது அந்த அணைதல். ஒரு பெரிய நீர்த்துளி திரண்டு சொட்டி உதிர்ந்து மறைவதுபோல. ஆனால் கடைசியில் சில கணங்கள் மிக விரைவானவை. நான் ஔசேப்பச்சனை பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஔசேப்பச்சன் சொன்னான். கிருஷ்ணன் எம்பிராந்திரி தங்கிய அந்த ஓட்டலில் அதேநாட்களில் அருகில் இருந்த அறையில் தங்கியவர்களின் தகவல்களை சேகரித்தோம். அவர்களில் ஒருவன் மங்களூரின் கிரிமினல்களில் ஒருவன். அவன்தான் கிருஷ்ணன் எம்பிராந்திரியை கொன்று பணத்துடன் சென்றவன். அவனிடம் அந்த தொப்பி இருக்கவில்லை. அது அந்த கைகலப்பின்போது கடலில் விழுந்துவிட்டது. அவனை தொடர்ந்து சென்றோம். அவன் பணத்துடன் கோவா சென்றான். அங்கே குடித்து சீரழிந்தான். அவனை அடித்துப்போட்டு பணத்தை பிடுங்கிச்சென்றார்கள் வேறு திருடர்கள். நாங்கள் அவனை கைதுசெய்தபோது அவன் பிச்சைக்கார குடிகாரனாக இருந்தான்.

ஆனால் நாங்கள் அந்தக்கதையை அதற்குமேல் கேட்க விரும்பவில்லை. எலி எழுந்துகொண்டு “நான் டின்னர் ரெடியா என்று பார்க்கிறேன்” என்றான்.

ஔசேப்பச்சன் என்னிடம் “நீ என்ன நினைக்கிறாய், சாகிப் செய்தது சரியா?” என்றான்.

“என்ன சொல்ல? அவர்களின் மனநிலை எனக்குப் புரியவில்லை” என்றேன் “அவர்கள் வேறு ஒரு யுகத்தைச் சேர்ந்தவர்கள்.”

“நான் அதைப்பற்றி ஆயிரம் தடவையாவது நினைத்துப்பார்த்திருக்கிறேன்” என்றான் ஔசேப்பச்சன் “அப்போதெல்லாம் மாப்பிளாக் கலாசிகள் ரயில்வே வேகன்களை தூக்கிய காட்சிதான் நினைவுக்கு வரும். மூத்த உஸ்தாத் என்னிடம் சொன்னார், ஆயிரத்துக்கு ஆயிரம் கால்வைப்புகள், அவ்வளவுதான் என்று. ஆயிரம் பெருக்கல் ஆயிரம். பத்துலட்சம் காலடிகள். ஆனால் அதில் ஒன்று, ஒன்றே ஒன்று, தவறாகப் போய்விட்டால் அவ்வளவுதான். தவறு பெருகிப்பெருகி கப்பல் மீண்டும் கடலுக்குள் சென்றுவிடும்.”

எலி வந்து “பீஃப் பொரியல் ரெடி” என்றான்.

ஔசேப்பச்சன் “கொண்டுவாடா மரக்கழுதை” என்றான்.

***

https://www.jeyamohan.in/130497/#.XqsA3C_TVR4

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு துப்பறியும் நாவல் வாசித்த நிறைவைத் தருகிறது இந்தக் கதை......!  👍

நன்றி கிருபன்......!

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.