Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற மீட்பு மாயையும் பலியாகும் தமிழரும்

  • இந்திரன் ரவீந்திரன்

2018 நவம்பர் 09 ஆம் திகதி கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைப் பாதுகாத்து, பதவி இறக்கப்பட்ட ரணிலின் பிரதமர் பதவியைப் பாதுகாத்து அரசியல் யாப்பையும் ஜனநாயகத்தையும் மீட்டதாகக் கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் திரு.சுமந்திரனும் திரு.சம்பந்தனின் எதிர்க் கட்சித் தலைவர் பதவியைப் பறிகொடுத்ததில் போய் முடிந்தமைதான் உலகம் அறிந்த அவர்களின் சாணக்கியம். இது ரணிலைக் காப்பாற்றப் போய் ஆப்பிழுத்த குரங்கின் கதையாய் சம்பந்தரின் பதவி பறிபோனதில் முடிந்தது.

இலங்கை நாடாளுமன்றம் நெருக்குதலுக்கு உள்ளாகும் காலத்தில், கைப்பிள்ளை கணக்காக சண்டைக்கு கிளம்புவதில் காட்டும் ஆர்வத்தை அதே அரசியல் யாப்பின் கீழ் வரும் தமிழ் மக்களின் அவசிய தேவைகளில் சிலவான 13ஆம் திருத்தச் சட்டத்தின் கீழான காணி, காவல்துறை அதிகாரங்களை மீட்பதற்கு காட்டவும் இல்லை, போராடவும் இல்லை. குறைந்தபட்சம் நீராவியடி பிள்ளையார் வளாகத்தில் பிக்குவின் சடலம் எரிக்கப்படக் கூடாதென்ற நீதிமன்றத் தீர்ப்பை மீறி அரசியல் யாப்பை குழிதோண்டிப் புதைத்த சம்பவத்திற் கெதிராககூட போராடவும் இல்லை, போராட ஆர்வம் காட்டவும் இல்லை.

கூட்டமைப்பு காப்பாற்றிய பிரதமர் ரணிலும், நாடாளுமன்றமும் நீராவியடி விவகார நீதிமன்றத் தீர்ப்பை பாதுகாக்க தவறியதில் இருந்துகூட இந்த நாடளுமன்ற மீட்பு தர்மயுத்தத்தால் தங்களுக்கோ தமிழ் மக்களுக்கோ எந்த பலனும் கிடைக்காது என்ற பாடத்தை இவர்கள் படித்ததாக தெரியவில்லை.

அவற்றிற்காக மக்கள் கவலையும் கண்ணீருமாக போராடிக்கொண்டிருக்க இதோ அரசியல் யாப்பைப் பாதுகாக்கும் அடுத்த தர்மயுத்தத்திற்கு இப்போது இவர்கள் கிளம்பிவிட்டார்கள்.

இவ்வாறு பலன் கிடைக்காத விடயத்தில் மீண்டும் மீண்டும் ஈடுபடுவது என்பது தேர்தலிற்கான சூதுவாதாகவும் படம் – பந்தா காட்டும் வேலையாகவும்தான் தெரிகிறது. இதைவிட பெரிய படம் – பந்தா எல்லாம் தமிழ் மக்கள் வரலாற்றில் பலமுறை கண்டுதான் இன்றைய கையறு நிலையில் நிற்கிறார்கள்.

சுமந்திரனும் கூட்டமைப்பும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்படாது சிங்கள மக்களின் பிரதிநிதிகள் போல் செயற்படுகிறார்கள் என்று தமிழ் மக்கள் அல்லாதவர்களே சொல்லும் அளவுக்கு படம் காட்டும் வேலை பிரபலம் அடைந்திருக்கிறது.

இனப்படுகொலைக் குற்றவாளிகளில் ஒருவரான மைத்திரியை “”மண்டேலா “” என்று புகழ்ந்து அரசியல் யாப்பின் ஊடாக உரிமை பெறக்கிளம்பிய காலத்தில் செப். .2016 இல்”” யாப்பு”” என்ற புத்தகம் மூலம் 1931 டொனமூர் அரசியல் சாசனம் முதல் 2016 உத்தேச சிறசேன அரசியல் சாசனம் வரை மரபணுப் பரிசோதனை செய்து இதனால் தமிழர்களிற்கு எந்தப்பலனும் கிடைக்காது என அடித்துக் கூறியிருந்தார் தமிழ் அரசறிவியல் பரப்பில் நன்கு அறியப்பட்ட திரு மு.. திருநாவுக்கரசு.

அடுத்த சுற்றில் ராஜபக்சாக்களின் அரசியல் அமைப்புச் சர்வாதிகாரமே அரங்கேறும் என்றும் கோத்தா ஜனாதிபதியாவதற்கு முன்பே இவர் தனது கட்டுரை வாயிலாக அடித்துக் கூறியிருந்தார். அதற்குரிய தடல்புடல் வேலைகள் தான் இப்போது நடக்கிறன.

960-1.jpgஇலங்கை தொடர்பாக இப்போது பரவலாக எழும் விவாதங்களில் அரசியல் அமைப்பின் படி கலைக்கப்பட்ட நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படுமா? அல்லது இப்போது அறிவித்துள்ளபடி யூன் 20 இல் தேர்தல் நடைபெறுமா? அல்லது தேர்தலை நடத்தாமலேயே காலம் கடத்தப்படுமா? என்ற கேள்விகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன.

 

நாடாளுமன்றத்தைக் கலைத்து மூன்று மாதங்களிற்குள் தேர்தலை நடத்தாவிட்டால் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என்றும் அவசரகால நிலமையில் நாடளுமன்றத்தை கூட்டத் தேவை இல்லை என்றும் சட்டப்புத்தகங்களையும் வரலாற்றையும் புரட்டிப் புரட்டிப் படித்து பதில்கள் சொல்லப்படுகின்றன. இதனால் அரசியல் யாப்பு நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இது உண்மையெனில் இலங்கை அரசியல் வரலாற்றில் அரசியல் யாப்பு நெருக்கடிக்கு உள்ளாவது அல்லது உள்ளாவது போல் காட்டப்படுவது இது ஒன்றும் முதல் தடவையும் அல்ல. அதேநேரம் இலங்கை அரசியலில் அரசியல் யாப்பு நெருக்கடி என்பது ஒரு உண்மையான பிரச்சனையும் அல்ல.

இறுதி முடிவுகளை எடுப்பதில் அரசியல் யாப்பையும் அது சார்ந்த நீதித்துறையையும் கடந்து இராணுவத்தினதும், மகாசங்கத்தினதும் பங்குதான் பிரதானமானது என்ற கறைபடிந்த இலங்கை வரலாற்றின் ஆகப்பிந்திய உதாரணமே சமகால சம்பவங்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சிகள் சார்பாக சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, இரா.சம்பந்தன், பட்டாளி சம்பிக்க ரணவக்க, மனோகணேசன், ரவூப் கக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டு கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாயவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடவே அரசாங்கத்திற்கு சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றும் எச்சந்தர்ப்பத்திலும் நாடாளுமன்ற ஆட்சிக் கவிழ்ப்பிற்கு முயற்சி செய்ய மாட்டோம் என்றும் சத்தியம் செய்திருக்கிறார்கள்.

இதற்கு “தேர்தல் திகதியை தள்ளிப்போடலாமே தவிர கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை எச்சந்தர்ப்பத்திலும் மீண்டும் கூட்ட முடியாது” என ஜனதிபதி கோத்தபாய பதில் அளித்துள்ளார்.

 

கூடவே கலைக்கப்பட்ட நாடளுமன்றத்தைக் கூட்டி மீண்டும் நாட்டில் குழப்பமான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டாம் என மகாநாயக்கர்கள் தனக்கு அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறியிருக்கிறார். நாட்டின் நெருக்கடி நிலையை எதிர்கொள்ள பெரும்பாண்மை அரசாங்கமே தற்போதைய தேவை எனவும் கூறியுள்ளார். நாடாளுமன்றம் இல்லாமல் நிதியை கையாளும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருப்பதாகவும் கோத்தபாய தரப்பில் இருந்து சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் “சுகாதாரம் பற்றி இராணுவத்திடமும் அரசியல் அமைப்பு பற்றி தேரர்களிடமும் ஆலோசனை கேட்கும் நிலையில் இன்று ஜனாதிபதி கோட்டா இருக்கின்றார்” என மனோகணேசன் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இப்போது மட்டுமல்ல எப்போதுமே இலங்கை அரசியல் யாப்பிற்கும் நாடாளுமன்றத்திற்கும் இருக்கும் எழுதப்பட்ட அதிகாரத்தைவிட, மக்கள் வழங்கிய ஆணையவிட மகாசங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இருக்கும் நடைமுறை சர்வாதிகாரம் பலமானது என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ் மக்களைப் பொறுத்து இலங்கை அரசியல் யாப்பும் நாடாளுமன்ற அதிகாரமும் என்பது ஒரு மாயமான்.

வடக்கு கிழக்கு இணைப்பை பிரிக்க அரசியல் யாப்பையும் நீதிமன்றத்தையும் துணைக்கு அழைப்பார்கள். ஆனால் அதே 13ஆம் திருத்தச் சட்டத்தின்படியான மகாணசபைக்கு காணி பொலிஸ் அதிகாரங்களை சட்டப்படி வழங்கமாட்டார்கள்.

போரில் பலம் குன்றியபோது அரசியல் யாப்பை மீறி புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திடுவார்கள். ஆனால் அதனோடு தொடர்புபட்ட சுனாமி பொதுக்கட்டமைப்புக்கு அரசியல் யாப்பு தடையென காரணம் காட்டுவார்கள்.

குறைந்தபட்சம் அரசியல் யாப்பையும் நீதிமன்றத்தையும் மீறி நீராவியடியில் புத்தபிக்குவின் பிணத்தை எரிப்பதைக்கூட தட்டிக்கேட்க முடியாத நிலையிலும் தடுக்கும் அதிகாரம் அற்ற நிலையிலும் தான் தமிழ் மக்கள் வைக்கப்பட்டுள்ளார்கள். இத்தகைய யாப்பு ரீதியாகக் கூறப்பட்ட, மேற்படி அதிகாரங்களுக்கும் நீதிக்குமாக சிங்கள ஜனனாயக விரும்பிகளோ , புத்திஜீவிகளோ, நீதிமான்களோ யாரும் குரல் கொடுப்பதுமில்லை.

இவ்வாறு அம்மணமாகக் கிடக்கும் அரசியல் யாப்பிற்கு இன்னமும் கற்பு இருக்கிறது என சட்டப் புத்தகத்தைப் புரட்டிப் புரட்டி பாடம் எடுப்பது தமிழ் மக்களின் தலையில் மட்டுமல்ல சிங்கள மக்களின் தலைகளிலும் மிளகாய் அரைக்கும் செயல்தான்.

ராஜபக்சக்களின் இலக்கு நாடாளுமன்றம் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி வழமைபோல இராணுவம் மற்றும் மகாசங்கத்தின் ஆசியுடனும் நெறிப்படுத்தலுடனும் கூடிய சர்வாதிகார ஆட்சிதான்.

கொரோனாவின் புண்ணியத்தால் அதனை இப்போது நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். கூடவே நிதியைக் கையாளும் அதிகாரத்தையும் ஜனாதிபதி கொண்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகள் முதற்கொண்டு அத்தனை நிதிக்கையாளுகையையும் அவசரகாலத்தின் பெயரால் அனுபவிக்கிறார்கள். அதன் அனுகூலத்தையும் தொடர்ந்து அறுவடை செய்வார்கள்.

இப்படியொரு வாய்ப்பை இழந்து நாடாளுமன்றத்தைக் கூட்ட விரும்பவே மாட்டார்கள்.

அவசரகால விதியின் கீழ் ஜனாதிபதிக்கு பேரரசனுக்குரியது போன்ற அனைத்து அதிகாரங்களும் உண்டு. தேர்தற் சட்டங்களிற் சொல்லப்படாத அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கடமை என்பதன் பெயரால் அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு இருக்கக்கூடிய வகையிலேயே 1978 ஆம் ஆண்டு யாப்பை ஜே. ஆர். வரைந்தார். அவை இப்போதும் அவசரகால விதியின் கீழ் அப்படியே உள்ளன.

இதன்படி 70 சரத்தின் கீழான உபவிதிகளைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தை கூட்டவும், ஒத்திவைக்கவும், பூட்டவும், தேர்தலை மனம்போறவாறு பின்போடவும்ம், திகதி இடவும் ஜனாதிபதிக்கு அதிகாரமுண்டு.

தேசியப் பேரிடர் என்பதன் பெயரில் கொரோனாவின் முதுகிலேறி நினைத்தவாறு ஜனாதிபதி சவாரி செய்யலாம்.

ஒரு வேளை நெருக்கடிகள் அதிகரித்தால் சட்டம் சொல்கின்றது என்று நாடாளுமன்றத்தைக் கூட்டி விட்டு மீண்டும் கலைத்து இன்னொரு தேர்தல் திகதி அறிவித்து வர்த்தமானி அறிவித்தலை அதே சட்டப்படி வெளியிடவும் முடியும்.

இலங்கையில் 1936 ஆம் ஆண்டு நிகழ்ந்த அரசாங்க சபைக்கான (State Council) தேர்தல்களின் பின் 1941 ஆம் ஆண்டு நிகழவேண்டிய தேர்தல்கள் இரண்டாம் உலகப் போர் காரணமாக 1941 ஆம் ஆண்டு நிகழாமல் ஆறு ஆண்டுகள் வரை பின்போடப்பட்டு 1947 இற்தான் தேர்தல்கள் நடந்தன.

இதன்படி தேர்தலை நடத்தாமல் அரசாங்கத்தை ஒன்றிற்கு மேற்பட்ட வருடங்களிற்கு கொண்டு நடத்தவும் முடியும்.

இலங்கையைப் பொறுத்த அளவில் தேர்தலை நடத்தாமல் பல வருடங்களிற்கு அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவதற்கு அரசியல் அமைப்பில் உள்ள சாதகங்களை தேடுவதற்கான உண்மையான காரணம் கொரோனா அல்ல. மாறாக கொரோனாவினால் வரக்கூடிய அனுகூலத்தை அறுவடைசெய்து நாடாளுமன்றம் மூலமாகவோ நாடாளுமன்றம் இன்றியோ தமிழ் மக்களை பூரண இனவழிப்புச் செய்வதற்கான சர்வாதிகாரத்தை தக்கவைப்பதுதான்.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டும் அளவிற்கு அழுத்தங்கள் ஏற்படாது விட்டால் தேர்தல் திகதியை மாறி மாறி அறிவிக்கச் செய்து இராணுவத்தினதும் மகாசங்கத்தினதும் துணையோடு இப்போது மேற்கொள்ளும் தமது சர்வாதிகார ஆட்சியை தொடர்வார்கள்.

இதற்கிடையில் ஒருவேளை கொரோனா நெருக்கடி தேர்தலிற்கு வழிவிட்டால் தேர்தலை எதிர்கொள்வார்கள். கோரோனா ஏற்படுத்தியிருக்கும் அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி இலகுவாக தேர்தலை எதிர்கொண்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு என்ற தமது சர்வாதிகார ஆட்சிக்கான ஆணையை பெறமுயல்வார்கள். அவ்வளவுதான்.

இதை விடுத்து இரண்டாம் உலகப்போர் நெருக்கடி காலத்தில் பிரித்தானியா செயற்பட்டது போன்று செயற்படுவார்கள் என கனவு காணும் அளவிற்கு சிங்களவர்கள் மக்களாட்சித் தத்துவத்திற்கு மதிப்புக்கொடுப்பவர்களும் கிடையாது அத்தகைய பண்பாட்டைக் கொண்டவர்களும் கிடையாது.

நெருக்கடி கால பிரித்தானியா

இரண்டாம் உலப்போர் நெருக்கடி கால கட்டத்தில் 1940-1945 வரை தேர்தலை நடத்தாமல் வின்சன் சேர்ச்சிலை(Winston Churchill) பிரதமராக கொண்டு அரசாங்கம் நடைபெற்றது.

இதில் தேர்தலை நடத்தாது பழமைவாதக் கட்சி ( Conservative Party), தொழிற்கட்சி (Labour Party), தாரளவாத கட்சி (Liberal Party), தேசிய தாரளவாத கட்சி (National Liberal Party), தேசிய தொழிற்கட்சி (National Labour Party) ஆகிய ஐந்தும் இணைந்து கூட்டணி ஆட்சியாக நடத்தின.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில் பழமைவாதக் கட்சியில் இருந்து சேர்ச்சில் பிரதமராக இருக்க தொழில் கட்சியில் இருந்து கிளமேட் அட்லி (Clement Attlee) துணைப்பிரதமராக இருந்தார். (அட்லி 1945 ஆண்டுத் தேர்தலின் பின்னர் பிரதமரானார்) இது சேர்ச்சிலின் போர் அமைச்சரவை என்று அழைக்கப்பட்டது.

இது நெருக்கடி காலத்தை தேர்தல் நடத்தாமல் எதிர்கொள்வதற்கு அரசியல் அமைப்பில் இருக்கும் ஏற்பாடுகளை தனி நபர்களோ கட்சிகளோ சர்வாதிகாரத்திற்கு பாவிக்காமல் அமைச்சரவையை எதிர்க்கட்சிகளோடு பங்கீடு செய்து மக்களாட்சி மாண்பினைக் காப்பாற்றியதோடு நெருக்கடி நிலையையும் ஒருமித்து எதிர்கொண்டதற்கான வரலாற்றின் முற்போக்கான மிகச்சிறந்த உதாரணம்.

தற்போதும் நாடாளுமன்றங்கள் கூட்டப்பட்டு அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் கொரோனாவை எதிர்கொள்ளும் செயற்திட்டங்கள் உலகம் எங்கும் நடைமுறைப்படுத்தப்படுவது கண்கூடு.

ஆனால் இலங்கை இவ்வாறான ஒரு நெருக்கடியான காலத்திற்கூட இது போன்ற வரலாற்றின் முற்போக்கான முன் உதாரணங்களையோ நடைமுறை உதாரணங்களையோ கைக்கொள்ளாது.

அதன் பின்னணியில் ஊறித்திளைத்திருக்கும் மகாவம்ச மனப்பாங்கும் இராணுவம் மற்றும் மகாசங்கங்களின் சர்வாதிகாரமும் காணப்படுகிறது என்பதையும் தமிழ் மக்களும் நீதி மற்றும் மக்களாட்சியின்பால் கரிசனை உள்ளவர்களும் கருத்தில் கொள்ளவேண்டும்.

நெருக்கடி காலத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் தலைமைத்துவங்களிற்கும் பிரதமர் அல்லது உதவிப் பிரதமர் போன்ற பதவிகள் வழங்கி பிரித்தானியா போன்று தேசிய ஒருமைப்பாட்டோடு உலகளாவிய நெருக்கடியை சிங்களத்தரப்புகள் எதிர்கொள்ளும் என்பதை இன்றைய நிலையில் கற்பனைகூட செய்து பார்க்க முடியாது.

இலங்கை வரலாற்றிலும் சரி, இன்றைய யதார்த்தத்திலும் சரி இலங்கையில் என்றுமே இவ்வாறான மனிதாபிமான, நீதி மற்றும் மக்களாட்சி மாண்புகளை மதித்து நெருக்கடிகளை எதிர்கொண்டதோ அல்லது தேசிய ஒருமைப்பாட்டை காண்பித்ததோ இல்லை.

இப்போது ராஜபக்சக்கள் விரும்புவதெல்லாம் நெருக்கடி நிலையையும் அதனால் விளையும் அரசியல் அமைப்பு சாதக பாதகங்களையும் பாவித்து தேர்தலை நடத்தாமல் தமது சர்வாதிகார ஆட்சியை தொடர்வதுதான். இதனால் தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் பாதிக்கப்படப் போகிறார்கள் என்பதுதான் கூடுதல் செய்தி.

தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கும் பொருட்டு சிங்கள தேசியவாதத்தின் பெயரால் கொண்டுவரப்பட்ட சிங்களம் மட்டும் சட்டம், 13ஆம் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி, காவல்துறை அதிகாரங்களை வழங்காமை என்று அண்மையில் நடந்த நீராவியடி பிள்ளையார் திடலில் நீதிமன்ற உத்தரவை மீறி சடலம் எரிப்பு என செய்யப்பட்ட அத்தனை ஜனநாயக மீறல்களிற்கும் அரசியல் அமைப்பு மற்றும் சட்ட மீறல்களுக்கும் கண்களை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்ததன் விளைவே இது.

அதாவது தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்தின் பெயரால் ஒடுக்குவோர் புரிந்த ஜனநாயக மீறல்களால் ஒடுக்கப்படுவோர் பாதிப்படைந்துவந்தனர். இது மீண்டும் மீண்டும் தொடர் விளைவாக நடந்ததன் விளைவாக இப்போது தேசியவாதத்தின் பெயரால் ஒடுக்குவோரிற்கு ஆதரவு தெரிவித்தவர்களும் பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

இவ்வாறு வரலாறும் அறிஞர்களும் தெளிவாக வழிகாட்ட தமிழ் மக்களின் உரிமைகளை வெல்லும் உருப்படியான செயல்திட்டங்களை வகுக்காமல் நடுச்சந்தியில் நின்று குட்டிக்கரணம் போடும் குரங்கின் நிலைக்குச் சென்றிருக்கிறார்கள் சுமந்திரனின் கூட்டமைப்பினர்.

மீண்டும் கூட்டமைப்பு காட்டும் யாப்பு ஜனநாயக மாயை ஒருவேளை சுமந்திரன் கெட்டிக்காரன் என முதுகில் தட்டி கழுத்தில் மாலைகளை வாங்கி தேர்தலில் வெல்ல அவருக்கு உதவலாமே தவிர தமிழ் மக்களிற்கு துளியளவும் இதனால் பலன் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழரின் கழுத்தை கத்தி நெருங்கவே வழிசெய்யும்.

கூட்டமைப்பு செய்வதெல்லாம் சாணக்கியம் என்று இனியும் நம்பினால் தமிழ் மக்களை யாராலும் காப்பாற்ற முடியாத படுகுழியிற்தான் காணவேண்டி வரும்.

இப்போது தமிழருக்குத் தேவை ஒன்றுபட்ட தமிழர் சக்தியை உலகுக்கு நிரூபிப்பதும், தேசியத் தன்மைவாய்ந்த தமிழ்த் தலைமையை கூட்டமைப்பிற்கு மாற்றாக நிலை நிறுத்துவதும்தான்.

ஆகையால் இத்தகைய கறைபடிந்த வரலாற்று பின்னணியிலும் கசப்பான நடைமுறை யதார்த்தத்திலும் தமிழ் மக்கள் அரசியல் யாப்பு என்ற மாயமானைத் துரத்துவதை முதலில் நிறுத்தவேண்டும். தேர்தலில் வென்று நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்து சாதித்துவிடலாம் என்ற கற்பனையில் மிதப்பதையும் கைவிடவேண்டும்.

இராணுவமும் மகாசங்கமும் இணைந்து திட்டமிடும் சர்வாதிகார ஆட்சியில் மேற்கொள்ளப்படும் பூரண தமிழ் இன அழிப்பு வியூகத்தில் இருந்து தமிழ் மண்ணையும் மக்களையும் பாதுகாக்கக்கூடிய பயன்மிக்க விவாதங்களை உடன் நடத்தவேண்டும்.

பொருத்தமான பாதுகாப்பு மற்றும் அடுத்த கட்ட பொறிமுறைகளுக்கான அறிஞர்களின் பங்களிப்புகள் போதுமான அளவு உள்வாங்கப்பட வேண்டும். அதன்படி செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப் படுத்தவேண்டும். இதுவே காலப்பொருத்தமானது. பயன் தரக்கூடியது. சாத்தியமானது.

http://thinakkural.lk/article/40691

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.