Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிசுமந்த முள்ளிவாய்க்கால்

Featured Replies

பி.மாணிக்கவாசகம்

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறிய பதினோராம் ஆண்டின் நினைவு தினமாகிய இன்றைய தினம் வழமையைவிட இம்முறை விசேட கவனத்தைப் பெறுகின்றது. முள்ளிவாய்க்காலில் மனித குலத்திற்கு எதிரான வகையில் கொத்துக் கொத்தாகத் தமிழ் மக்களைக் கொன்றொழித்த ஆயுதப்படைகளுக்குத் தலைமை தாங்கிய அதிகாரம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தருணத்தில் இந்த நிகழ்வு நினைவுகூரப்படுகின்றது. இதுவே இந்தத் தினத்தின் விசேட அம்சமாகும்.

virakesari_news__12_.jpg


மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்த காலத்தில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் அவலத்துயரம் அரங்கேற்றப்பட்டிருந்தது. அதன் பின்னர் 2014 வரையில் 5 ஆண்டுகள் முள்ளிவாய்க்கால் துயரத்தை நினைவுகூர்வதற்கு அந்த அரசு அனுமதிக்கவில்லை. முள்ளிவாய்க்காலின் ஊழிக்கால துயரத்தை அனுபவித்த மக்கள் அந்த தினத்தை நினைவுகூர்வதன் மூலம் தங்கள் துயரத்தை ஆற்றிக் கொள்ளவிடாமல் அந்த அரசு தடுத்திருந்தது.

ஆனால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து நிலைமைகளில் மாற்றங்கள் ஏற்பட்டன. முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை அனுட்டிப்பதற்கான சூழல் உருவாகியிருந்தது. ஐக்கிய தேசிய கட்சியும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் வரலாற்றில் முதற் தடவையாக இணைந்து அமைந்திருந்த கூட்டாட்சியாகிய நல்லாட்சி அரசு அந்த மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. இராணுவம் தமிழ்ப்பிரதேசங்களில் இருந்து விலக்கிக் கொள்ளப்படாத போதிலும் இராணுவ நெருக்கடிகள் குறைந்திருந்தன.

ஆயினும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் முன்னதாக 2015 ஆம் ஆண்டு தேர்தல்களில் தோற்கடிக்கப்பட்டிருந்த ராஜபக்ஷக்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டார்கள். யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய கோத்தாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவாகி மீண்டும் அதிகாரத்திற்கு வந்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இராணுவ வெற்றிக்கான மூலோபாயச் செயற்பாடுகளில் முதன்மை நிலையில் இருந்து இவரே செயற்பட்டிருந்தார்.

இரண்டு அம்சங்களில் முக்கியத்துவம்
பாதுகாப்பு அமைச்சராகத் திகழ்ந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைவிட, பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பணியாற்றிய கோத்தாபாய ராஜபக்ஷவே அப்போது அதிகாரம் மேலோங்கியவராகச் செற்பட்டிருந்தார். விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக மௌனிக்கச் செய்த ராஜபக்ஷ அரசாங்கம், யுத்தத்தின் பின்னரும் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களை இறுக்கமான இராணுவ கட்டமைப்புக்குள்ளேயே வைத்திருந்தது.
யுத்த மோதல்களில் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் யுத்தத்தின் பின்னர் தமது வாழ்க்கையை சுதந்திரமாக மீளக் கட்டியெழுப்புவதற்கு அங்கு நிலவிய இராணுவ மயமான சூழல் தடையாக இருந்தது. இராணுவமயமான அரச நிர்வாக சூழலில் மாற்றத்தை ஏற்படுத்திய நல்லாட்சி அரசாங்கம் தேர்தலில் தோல்வியைத் தழுவியது.

நிறைவேற்று அதிகார பலத்துடன் அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். அந்த ஜனாதிபதி ஆட்சியின் கீழ் முதலாவது முள்ளிவாய்க்கால் நினைவு தினமாக இந்த தினம் அனுட்டிக்கப்படுகின்றது. இது இந்த தினத்தின் ஒரு விசேட அம்சம்.

முள்ளிவாய்க்கால் அவலம் முடிவடைந்து பத்து ஆண்டுகள் - ஒரு தசாப்தம் முடிவடைந்து, இரண்டாவது தசாப்தத்தில் காலடி எடுத்து வைக்கின்ற முதலாவது நினைவு தினமாகவும் 2020 ஆம் ஆண்டின் இந்த நினைவு தினம் அமைந்திருக்கின்றது என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும்.
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சம்பவங்கள் மனித குலத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கத்தக்க அளவில் கொடூரமானவை. அங்கு இடம்பெற்ற அவலங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மனங்களில் மாறாத வடுக்களாக – மாற்றமுடியாத துயரங்களாகப் படிந்திருக்கின்றன.

யுத்தம் ஒன்றில் எதிரிகள் மோதிக்கொள்ளும் போது இடம்பெறுகின்ற உயிரிழப்புக்கள் பாதிப்புக்கள் என்பன யுத்த நடைமுறை சார்ந்தவை. அங்கு அந்த யுத்தம் நடைபெற்றிருக்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து விமர்சனங்கள் எழுமே தவிர, யுத்தத்தில் போர்வீரர்கள் ஒருவரை யொருவர் சண்டையிட்டுக் கொல்லப்படுவதை எவரும் விமர்சிப்பதில்லை. அந்த யுத்தம் யுத்த தர்மங்களுக்கு அமைவாக, யுத்த நியமங்களுக்கு அமைவாக இடம்பெற்றனவா என்பதே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். யுத்தம் என்பது ஒருவரை ஒருவர் அழிப்பது. அந்த அழிவிலும் போர் வீரர்களின் துணிவு, திறமை, சாதுரியம், அங்கு எதிரியிடம் காட்டப்படுகின்ற மனிதாபிமானம், கருணை என்பன கவனத்தில் எடுத்து சிலாகித்து பேசப்படும்.
ஆனால் யுத்த தர்மத்தை மீறிய நிலையில்; இடம்பெறுகின்ற சண்டைகள் மனித குலத்திற்கு எதிரானவையாகக் கருதப்படும், போர்க்குற்றங்கள் இழைத்ததாகக் குற்றம் சுமத்தப்படும். அது குறித்து நீதி நியாய காரணங்களுடன் விமர்சனங்கள் எழும். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி நேரச் சண்டைகள் அத்தகைய நிலைமைக்கே ஆளாகியிருன்றன.

 

அழுத்தம் காரணமாக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்கள்

சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்த காலத்தில் 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் ஒரு யுத்த நிறுத்தத்தைச் செய்தது. நோர்வே அரசு இதற்கு மத்தியஸ்தம் வழங்கியிருந்தது. இந்த யுத்த நிறுத்தம் நான்கு வருடங்கள் நீடித்திருந்தது. பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இந்த நிலையில் 2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். ஆட்சி மாற்றத்தின் பின்னரும், விடுதலைப்புலிகளுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. முடிவுகள் எட்டப்படவில்லை.

திகோணமலை மாவட்டம் மாவிலாறு பகுதியில் விவசாயத் தேவைக்கான நீர்pவிநியோகத்தில் ஏற்பட்ட ஒரு தகராறு யுத்த நிறுத்தத்தைப் பாதித்தது. இதனால் 2006 ஆம் ஆண்டு ஜுலை 26 ஆம் திகதி மாவிலாறு பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளின் இலக்குகள் மீது அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தின. போர்நிறுத்தமும் பேச்சுவார்த்தைகளும் முறிந்தன. சண்டைகள் மூண்டன.

கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற கடும் சண்டைகளில் விடுதலைப்புலிகளின் வசமிருந்த பல பகுதிகளை அரச படைகள் கைப்பற்றி வெற்றிப் போக்கில் அரசு முன்னேறியது. தொடர்ந்து வடக்கிலும் மோதல்கள் வெடித்தன.

நீண்ட தொலைவில் சென்று வெடிக்கத்தக்க எறிகணை குண்டுத் தாக்குதல்களையும் விமானக் குண்டுத் தாக்கதல்களையும், சிறிய எண்ணிக்கையிலான படைவீரர்களைக் கொண்ட அணிகளின் மூலம் விடுதலைப்புலிகளின் பிரதேசங்களுக்குள்ளே ஆழ ஊடுருவி தாக்குதல்கள் நடத்தியும் இராணுவம் முன்னெறியது. இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதிக் கட்ட மோதல்கள் இடம்பெற்றன.
விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநககராகத் திகழ்ந்த கிளிநொச்சி நகரம் 2008 ஆம் ஆண்டு அரச படைகளிடம் வீழ்ச்சியுற்றது. அரசு விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல்களை மிகத் தீவிரமாக முன்னெடுத்தது. விடுதலைப்புலிகளும் சண்டைக்களத்தில் தீரத்துடன் போரிட்டு அரச படைகளுக்குப் பெரும் உயிர்ச் சேதங்களை ஏற்படுத்தினார்கள்.

இராணுவத்தின் எறிகணை தாக்குதல்கள், விமானக் குண்டுத் தாக்குதல்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். வகைதொகையின்றி காயப்பட்டனர். விடுதலைப்புலிகளின் பிரதேசங்களை ஒவ்வொன்றாகக் கைப்பற்றி படைகள் முன்னேறிய போதிலும், யுத்தகளத்தில் சிக்கியிருந்த இலட்சக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக இராணுவ பிரதேசத்திற்குள் வருவதற்குரிய ஏற்பாடுகளை அரசாங்கம் செய்யவில்லை.

இதனால் யுத்த மோதல்கள் இடம்பெற்ற பிரதேசங்களில் இருந்த பொதுமக்களின் பாதகாப்பு குறித்து உள்ளுரிலும் சர்வதேச அளவிலும் அக்கறை செலுத்தப்பட்டன. அரசாங்கத்திற்கு இதுவிடயத்தில் கொடுக்கப்பட்ட அழுத்தத்தையடுத்து, யுத்த மோதல்கள் இடம்பெற்ற பல பகுதிகளை அரசாங்கம் பாதுகாப்பு வயங்களாக அறிவித்து, பொதுமக்களை அங்கு செல்லுமாறு பணித்தது. அங்கு பொதுமக்கள் சென்ற பின்னர், அந்த பாதுகாப்பு வலயங்கள் மீதும் எறிகணை தாக்குதல்களும் குண்டுத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.

 

சர்வதேச அமைப்புக்களின் அறிக்கைகள்

இந்த காலப்பகுதியில் வன்னிப்பிரதேசத்தில் இடம்பெயர்ந்த மக்கள் மத்தியில் காயமடைந்து குற்றுயிராக இருந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் மனிதாபிமான ரீதியில் மருத்துவ சேவையை வழங்கிய மருத்துவர்களும் பணியாளர்களும் வைத்தியசாலைகளை தற்காலிக இடங்களை நோக்கி மக்களோடு மக்களாக நகர்த்திச் சென்றார்கள்.

உடையார்கட்டு, புதுமாத்தளன், முள்ளிவாய்க்கால் ஆகிய இடங்களில் நிறுவப்பட்ட தற்காலிக வைத்தியசாலைகள் காயமடைந்தவர்களினால் நிறைந்து வழிந்தன. அந்த நேரத்தில் அந்த வைத்தியசாலைகளும் எறிகணை தாக்குதல்களுக்கு உள்ளாகின. பலர் கொல்லப்பட்டனர் பலர் காயமடைந்தனர். வேறு இடங்களில் காயமநை;து சிகிச்சைக்காக வந்திருந்தவர்களும் சிகிச்சை பெற்றிருந்தவர்களும் கூட இந்தத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டார்கள்.

மருத்துவ சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் தாதியர் மற்றும் பணியாளர்களும் கூட இந்தத் தாக்குதல்களில் காயமடைந்தனர். உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல்கள் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புக்களும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், எம்.எஸ்.எவ் என்ற எல்லைகளற்ற மருத்துவ சேவை நிறுவனம் என்பன கண்கண்ட சாட்சியங்களின் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு மனித உரிமைகள் மீறப்பட்டிருப்பதாக அறிக்கைகளை வெளியிட்டன. அவற்றை இன அழிப்பு நடவடிக்கைகளாகவும் சில அமைப்புக்கள் சுட்டிக்காட்டி இருந்தன.

அரசாங்கம் அத்தகைய தாக்குதல்களை நடத்தவில்லை என்று மறுத்துரைத்தது. சிவிலியன்கள் எவரும் கொல்லப்படவில்லை எனக் கூறியது. சண்டைகளில் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டார்கள் என்று அறிவித்தது.

இறுதிக்கட்ட சண்டைகளின்பொது வெள்ளைக்கொடி ஏந்தி வந்தவர்களும் கொல்லப்பட்டதாக சாட்சியங்களுடன் தகவல்கள் வெளியாகின. அரசாங்கம் எல்லாவற்றையும் மறுத்துவிட்டது. அத்தகைய சம்பவங்கள் இடம்பெறவில்லை என அடித்துக் கூறியது. இத்தகைய பின்னணியில்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் தலைவர் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்டனர். விடுதலைப்பலிகளுக்கு எதிரான யுத்தம் முடிவடைந்தது என்று அரசாங்கம் அறிவித்தது.

இறுதிக்கட்ட மோதல்களில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக செய்மதித் தகவல்களையும் புகைப்படங்களையும் ஆதாரமாகக் கொண்டு ஐநா மன்றம் கூறியது. ஆயினும் வன்னிப்பிரதேசத்தின் இறுதிச் சண்டையில் அங்கு எஞ்சியிருந்த மக்கள் தொகைக்கும், சண்டைகள் முடிந்தபின்னர் அகதிகளாக செட்டிகுளம் இடைத்தங்கல் முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துவரப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கும் இடையில் இருந்த வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி, ஒரு லட்சத்து 46 ஆயிரம் பொதுமக்கள் அங்கு கொல்லப்பட்டதாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஐநா மன்றத்திற்கும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களுக்கும் எழுத்து மூலமாகத் தெரிவித்திருந்தார்.

 

நினைவுகூர்வது தடுக்கப்பட்டது

இத்தகைய பின்னணியில்தான் யுத்தத்தில் வெற்றிபெற்ற அன்றைய அரசாங்கம் முள்ளிவாய்க்கால் துயரங்களை நினைவுகூர்வது விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதாக அமையும். அது அவர்களை உயிர்ப்படையச் செய்யும் என்று அறிவித்தது. இதனால் முள்ளிவாய்க்காலில் மக்கள் ஒன்று கூடவும் முடியாது. நினைவுகூரவும் முடியாது என தடுத்தது. இராணுவத்தைப் பயன்படுத்தி எவரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தவிடாமல் தடுத்திருந்தது.

காலப்போக்கில் இந்த நடைமுறைகளில் மிகச் சிறிய அளவில் மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இடமில்லை என்பதில் அன்றைய ராஜபக்ஸ அரசு இறுக்கமாகவே இருந்தது. அதனை அடியொட்டி இந்த வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளிலும் இராணுவத்தினரும், பொலிசாரும் கெடுபிடிகளைப் பிரயோகித்திருக்கின்றனர்.. அவைகள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற இறுதி யுத்தத்தில் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள் இடம்பெற்றிருப்பதாகச் சுட்டிக்காட்டி, அவற்றுக்கு அரசு பொறுப்பு கூற வேண்டும் என்ற ஐநா மனித உரிமைகள் பேரவையில் அடுத்தடுத்து மூன்று தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான முன்னைய அரசாங்கம் அவற்றுக்கு இணை அனுசரணை வழங்கி அவற்றை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொண்டு பெயரளவில் சில நடவடிக்கைகளையும் எடுத்திருந்தது.

ஆனால் அந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த ராஜபக்ஸக்கள் 2019 ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு இராணுவ வீரரையும் போர்க்குற்றத்திற்காகவோ மனித உரிமை மீறலுக்காகவோ நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு அனுமதிக்கமாட்டோம் என உறுதியளித்து சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளனர்.

அந்த ஆதரவில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோத்தாபாய ராஜபக்ச இராணுவத்தினருக்கு எதிரான வழக்குகள் இடம்பெறாதவாறு பார்த்துக் கொண்டிருக்கின்றார். அத்துடன் சிவில் நிர்வாகத்தின் 22; உயர்நிலை பதவிகளுக்கு  படை அதிகாரிகளை நியமித்து, இராணுவ போக்கிலான ஆட்சிமுறையைக் கடைப்பிடித்திருக்கின்றார்.

இந்த பின்புலத்தில்தான் முள்ளிவாய்க்காலின் துயர நினைவுகளை பதினோராவது ஆண்டாக உலகெங்கம் பரந்து வாழ்கின்ற தமிழ் மக்களும் இலங்கையில் உள்ள தமிழ் மக்களும் நினைவேந்தலை அனுட்டிக்கின்றார்கள்.

வழமைபோலவே, இந்த வருடமும் இந்த நினைவேந்தல் என்பது வெறுமனே கூடி நின்று நடைபெற்ற அநியாயங்களையும் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் நினைவுகூர்ந்து கண்ணீர் விடுவதுடன், அரசியல் ரீதியாக சில கருத்தக்களை வெளியிடுவதுடன் நின்றுவிடக் கூடாது. அங்கு நடைபெற்ற படுகொலைகளுக்கும் பாரதூரமான செயல்களுக்கும் நீதி கோர வேண்டும். நியாயம் கோர வேண்டும் என்ற குரல்கள் பரவலாக எழுந்திருக்கின்றன. ஆனால் நடைமுறையில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதைக் காண முடியவில்லை.

 

கடந்து போகின்ற மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வு.......

முள்ளிவாய்க்கால் என்பது மனித உயிர்களைக் காவுகொண்ட ஒரு பலி பீடமல்ல. அது வலிகள் மிகுந்த ஒரு சக்தி. மனங்களில் பெரு நெருப்பாக எரிகின்ற ஒரு தீப்பிழம்பு. அது நீறுபூக்க முடியாதது. அது ஓர் எரிமலை. எரிமலைக்கு ஓய்வே கிடையாது. தணிந்திருப்பதைப் போன்ற தோற்றம் உண்டு. ஆனால் அது தணிவதில்லை.

அத்தகைய முள்ளிவாய்க்காலின் இழப்புக்கள் இன்னும் இழந்தவைகளாகவே இருக்கின்றன. அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு இன்னுமே ஆரம்பிக்கப்படவில்லை. ஆனால் பதினொரு வருடங்களாக நடந்ததென்ன? நடந்து கொண்டிருப்பது என்ன? வருடம் ஒரு தடவை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கூடிப் பிதற்றுவதோடு முடிந்து விடுகின்றதே? ஏன் இந்த நிலைமை? வருடமொருமுறை கூடி நின்று நினைவுகூர்ந்தால் மட்டும் போதுமா?
இந்த நினைவேந்தலை நடத்துவதற்குரிய ஒரு கட்டமைப்பைக்கூட ஒன்றிணைந்து உருவாக்க முடியாத நிலையில்தானே தமிழ் மக்கள் இருக்கின்றார்கள்? தமிழர்தம் அமைப்புக்களும் அவ்வாறுதானே இருக்கின்றன? ஆளுக்கொரு திட்டமும், ஆளுக்கொரு தீர்மானமும் கொண்டவர்களாக, ஒன்றிணைய முடியாதவர்களாத்தானே இருக்கின்றார்கள்?

முள்ளிவாய்க்காலின் பேரவலம் குறித்து பெரிய அளவில் பேசப்படுகின்றது. அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் போர்க்குற்றச் செயல்களா அல்லது இனப்படுகொலை நிகழ்வுகளா என்ற விவாதிப்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

இனப்படுகொலை என்பது முள்ளிவாய்க்காலில் மட்டும் இடம்பெற்றதல்லவே?

தனிச்சிங்களக் சட்டம் கொண்டு வரப்பட்ட 1956 தொடக்கம், 1977, 1981, 1983 என்று தொடர்ந்து இடம்பெற்று வந்திருப்பதை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் தெரிந்து கொள்ள முடியும். கறுப்பு ஜுலை (1983) சம்பவங்கள் தமிழர்களுக்கு எதிரான அப்பட்டமான இன அழிப்பு நடவடிக்கை என்பதை முன்னாள் ஜனாதிபதியும், இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள் என்ற குடும்ப வரலாற்றைக் கொண்ட அரசியல்வாதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க கறுப்பு ஜுலை நிகழ்வுகளுக்காகப் பகிரங்க மன்னிப்பு கோரிய ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

கறுப்பு ஜுலைக்குப் பின்னர் மற்றுமொரு உச்ச கட்ட நிகழ்வாகவே முள்ளிவாய்க்கால் அவலங்கள் நடந்தேறியிருக்கின்றன. இந்த அவலங்கள் அநியாயங்களுக்கு ஆதாரங்கள் பலவற்றையும் ஆதாரங்களுக்கான பல நேரடி அனுபவங்களையம் கொண்ட தமிழ் மக்கள் அதனைப் பகிரங்கமாகக் கூறுவதற்கு அஞ்சுகின்ற மன நிலையில் இருந்து இன்னுமே விடுபடவில்லை. துறைசார்ந்தவர்களும், மனித உரிமை விடயங்களில் திறமைவாய்ந்தவர்களும், சட்ட நுணுக்கங்களைத் தெரிந்தவர்களும்கூட, இந்த மன நிலையில் கட்டுண்டு கிடப்பதையே காண முடிகின்றது. இந்த நிலையில் மாற்றம் வேண்டும். நீதி கேட்கும் பயணத்தில் உறுதியாக ஒன்றிணைந்து அடியெடுத்து வைக்க வேண்டும்.

இந்த நிலையில் முள்ளிவாய்க்காலின் பதினோராம் ஆண்டு நினைவேந்தல் என்பது கொரோனா நோயிடருக்கு மத்தியில் சமூக இடைவெளியைப் பேணுவதற்காக வீடுகளில் விளக்கேற்றி அஞ்சலித்த மற்றுமொரு நினைவேந்தல் நிகழ்வாகவே கடந்து போகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

 

https://www.virakesari.lk/article/82298

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.