Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும் .

tumblr_p8vpw6s4011sjjdtyo1_640.jpg 

பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே. பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த் தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப் பழங் காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழியாக் கன்னியாகக் கருதுவதும் சுமேரியா, எகிப்து, அசீரியா, இந்தியா ஆகிய நாடுகளின் பழைய நாகரிகங்களில் காணப்படுகின்றது.” (பி.எல்.சாமி, தமிழ் இலக்கியத்தில் தாய்த்தெய்வ வழிபாடு, ப.34) ஆக சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் கடல்கெழு செல்வியும் (அகம். 370) கானமர் செல்வியும் (அகம். 345) தாய்த் தெய்வங்களே.

kottravaiசங்க இலக்கியங்களில் இடம்பெறும் தாய்த் தெய்வங்கள் பற்றிய குறிப்புகள், அத்தெய்வம் காட்டை இருப்பிடமாகக் கொண்டவள் என்ற பொருளிலேயே கையாளப் பட்டுள்ளன. பதிற்றுப்பத்தில் இடம்பெறும் அயிரை என்ற தெய்வம் மலையை இருப்பிடமாகக் கொண்டது. கடல்கெழு செல்வியைத் தவிர பிற இடங்களிலெல்லாம் காடு, மலை, மலைச்சாரல், மலைச்சுனை சார்ந்தே தாய்த் தெய்வங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.

அயிரையும் கொற்றவையும்:

சங்க இலக்கியங்களில் சேரர் இலக்கியம் என்ற பெருமைபெற்ற பதிற்றுப்பத்தில் மூன்று பாடல்கள் அயிரை என்ற தெய்வம் பற்றிப் பேசுகின்றன (பதிற்றுப்பத்து: 79, 88, 90) இரண்டு பாடல்கள் அயிரை மலையைக் குறிப்பிடுகின்றன. (பதிற்றுப்பத்து: 21, 70) சேரர்களின் அயிரை மலையில் உறையும் தெய்வம் அயிரை என்றழைக்கப்பட்டது.

பதிற்றுப்பத்தின் இம்மூன்று பாடல்களிலும் இடம்பெறும் அயிரை வழிபாட்டைக் கொற்றவை வழிபாடு என்றே பழைய உரைக்குறிப்பை ஒட்டி உரையாசிரியர் ஒளவை துரைசாமிப் பிள்ளை எழுதுகின்றார்.

தும்பை சூடிப் பொருதலில் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகிய அசைவு பற்றிப் பிறந்த ஓய்ச்சலுடன்; மார்பிற்பட்ட புண்ணிடத்தொழுகும் குருதியாற் புறத்தே தெளிக்கப்பட்டாலன்றிக் கொடுக்கப்படும் படைச்சலை (பலியை) யேற்றுக் கொள்ளாத அச்சம் பொருந்திய முறைமை யினையுடைய கொற்றவை வீற்றிருக்கின்ற அயிரை மலைபோல நின் புகழ்களும் நிலைபெற்றுக் கெடாது விளங்குவனவாக (ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை, பதிற்றுப்பத்து உரை)

பழைய உரைக் குறிப்பைக் கொண்டு அயிரையைக் கொற்றவை என்று ஒளவை அவர்கள் எழுதும் உரையின் பொருத்தம் ஆய்வுக்குரியது. அயிரையைப் பெண் தெய்வமாக/ தாய்த் தெய்வமாகக் கொள்வது ஓரளவு பொருந்தக்கூடியதே. ஆனால் கொற்றவை என்று வலிந்து பொருள்கொள்வதால் தாய்வழிச் சமூகத்தின் வழிபடு தெய்வமான கொற்றவை, நிலவுடைமைச் சமூகமாகவும் பேரரசுச் சமூகமாகவும் மாறிவிட்ட சேர மன்னர்கள் காலத்திலும் அதே நிலையில் வழிபடப்பட்டது என்று பொருள் கொள்ளப்படும். கொற்றவையோடு தொடர்பு படுத்தக் கூடிய எந்தவிதக் குறிப்புமற்று கடவுள் அயிரை என்றும் உருகெழு மரபின் அயிரை என்றும் சொல்லப்பட்டதன் பின்னணி கவனிக்கத்தக்கது. ஆகவே, அயிரையைத் தனித் தெய்வமாகக் கொள்ளாமல் அயிரை என்ற நெடுவரையே சேரர்களின் வழிபடு தெய்வமாய் தொழப்பட்டிருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.

தொல்காப்பியரும் கொற்றவையும்:

தொல்காப்பியர் தம் பொருளதிகாரத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நால்வகை நிலங்களுக்குமான தலைமைத் தெய்வங்களைக் குறிப்பிடும் இடத்தில்

மாயோன் மேய காடுஉறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும் - (தொல். அகத். நூ. 5)

என மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என நான்கு நிலத்திற்கும் ஆண் தெய்வங்களையே தலைமைத் தெய்வங்களாகக் குறிப்பிட்டுள்ளார். தாய்த்தலைமைச் சமூகம் மாற்றம் பெற்றுத் தந்தைத் தலைமைச் சமூகம் நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூகத்தின் கருத்தாக்கமே தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் வெளிப்படையாய்ப் பதிவு பெற்றுள்ளது. முல்லைக்கும் குறிஞ்சிக்கும் சொல்லப்பட்ட மாயோன், சேயோன் ஆகிய திருமாலும் முருகனும் தமிழ் மரபு சார்ந்த தெய்வங்கள். ஆனால் மருதத்திற்கும் நெய்தலுக்கும் சொல்லப்பட்ட வேந்தன் எனப்பட்ட இந்திரனும், வருணனும் தமிழ் மரபிற்கு அயலான தெய்வங்கள், வைதீக மரபுத் தெய்வங்கள். சங்க இலக்கியங்களில் ஓரிடத்தும் திணை சார்ந்தோ வேறெந்தத் தமிழ் வழிபாட்டு மரபு சார்ந்தோ குறிப்பிடப்படாத இந்திரனும் வருணனும் தமிழர்களின் நானிலத் தலைமைத் தெய்வங்களாயினமை மிகுந்த சிக்கலுக்குரியது. பழந்தமிழகத்தில் மக்கள் மத்தியில் பெருவழக்காயிருந்த கொற்றவை அல்லது வேறு பெயரிலான தாய்த் தெய்வங்கள் எதனையும் தொல்காப்பியர் திணைத் தலைமைத் தெய்வங்களாகக் குறிப்பிடாதது வியப்பிலும் வியப்பே. வைதீகச் சமயக் கருத்துக்கள் சங்க காலத்திலேயே தமிழகத்தில் செல்வாக்கு பெறத் தொடங்கி விட்டன என்ற அடிப்படையில் தொல்காப்பியரின் நானிலத் தலைமைத் தெய்வக் கோட்பாட்டை வைதீகப் பண்பாட்டுத் தாக்கத்தின் விளைவு என விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

கொற்றவை வழிபாடு குறித்துச் சங்க இலக்கியங்கள் உரிய குறிப்புகள் ஏதும் இடம்பெறவில்லை. கொற்றவை என்ற பெயரும் பெருங்காட்டுக் கொற்றி என்ற பெயரும் சங்க இலக்கியங்களில் பிற்பட்டனவாகக் கருதப்படும் பரிபாடல், கலித்தொகைகளில் தாம் இடம்பெற்றுள்ளன.

சிலம்பு நா. செல்வராசு தம் ஆய்வொன்றில் சங்க காலத்துக் கொற்றவை குறித்துப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

கொற்றவை பற்றிச் சங்க இலக்கியங்கள் தரும் தகவல்கள் மிகக் குறைவு. கொற்றவை என்ற சொல்லாட்சியே சங்க இலக்கியங்களில் இல்லை. பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு (கலி.89) எனவும் நெற்றி விழியா நிறைத்திலகம் இட்டாளே கொற்றவைக் கோலங் கொண்டு ஓர் பெண் (பரி.11) எனவும் வருவன சங்கப் பிற்காலச் சான்றுகளாகும். அவ்வாறே, கொற்றவைச் சிறுவன் (திரு.முருகு. .250) என முருகன் சுட்டப்பெறும் ஓரிடத்துக் கொற்றவையின் பெயர் குறிக்கப் பட்டுள்ளது. விறல் கெழு சூலி (குறு. 218) எனவும் உருகெழு மரபின் அயிரை (பதி. 79,90) எனவும் குறிக்கப்பெறும் தொடர்கள் கொற்றவையைக் குறிப்பிடுவதாகக் கூறுவர். .. .. அச்சம் தரத்தக்க இத்தெய்வம் வெற்றிக்குரியவள் என்பதும் அவள் முருகனது தாய் என்பதும் அவள் மலைஃகாடு வாழ் தெய்வம் என்பதும் மேல் குறிப்புகள் தரும் தகவல்கள் ஆகும். இவைதவிரக் கொற்றவை வழிபாடு பற்றிய வேறு செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வழி அறிய இயலவில்லை. (சிலம்பு நா.செல்வராசு, சங்க இலக்கிய மறுவாசிப்பு, ப. 12)

கொற்றவை குறித்த சங்க இலக்கியப் பதிவுகள் குறைவாக உள்ளமைக்குக் பல்வேறு சமூக மானிடவியல் காரணங்களை நாம் சொல்லமுடியும். குறிப்பாக, குறிஞ்சி, முல்லை வாழ்க்கையும் இனக்குழுச் சமூக அமைப்பும் மாற்றம் பெற்று மென்புலப் பயிர்த்தொழிலும் வணிகமும் நிலைபெற்றுவிட்ட நிலவுடைமைச் சமூக அமைப்பில்தான் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. தொகுப்புக் காலத்தின் சமூக, சமய, அரசியலுக்கு ஏற்பவே சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டிருக்கும் என்பதில் கருத்து வேற்றுமை இருக்க முடியாது. ஆனாலும் சங்க இலக்கியப் பாடல்களில் பல்வேறு புதை அடுக்குகளாகத் தமிழர்களின் முந்தைய தொல்குடிச் சமூகம் தொடங்கி அனைத்துச் சமூகப் பண்பாட்டு எச்சங்களும் இடம்பெற்றுள்ளமை இவ்விலக்கியங் களின் தனிச்சிறப்பு. திருமால், முருகன் குறித்த பாடல்களைக் கொண்ட பரிபாடலில் காடுகிழாளாகிய கொற்றவைக்கும் ஒருபாடல் இருந்ததாக ஒரு பழைய குறிப்பு உண்டு.

திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட்கு ஒன்று – மருவினிய
வையைஇரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்ய பரிபாடல் திறம்

 பரிபாடல் பாடல் எண்ணிக்கை மற்றும் பகுப்புகளைக் குறிப்பிடும் மேற்சொன்ன பழம்பாடலில் இடம்பெறும் காடுகாட்கு ஒன்று என்ற செய்தி காடுகாள் -காடுகிழாள் ஆகிய கொற்றவை குறித்த பரிபாடல் பதிவுக்குத் தக்க சான்றாகும்.

வெட்சியும் கொற்றவையும்

தொல்காப்பியர் திணைத் தலைமைத் தெய்வமாகக் கொற்றவையைக் குறிப்பிடவில்லை என்றாலும் தம் புறத்திணையியல் வெட்சித்திணைப் பகுதியில் புறநடைத் துறையாக கொற்றவை நிலை என்ற துறையினைக் குறிப்பிடுகின்றார்.

மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே                           (தொல். புறத். 4)

என்பது அந்நூற்பா.

வெட்சித்திணையின் துறைகளை அடுக்கிச் சொன்ன நூற்பாவை அடுத்ததாக இப்புறநடை நூற்பாவைப் படைக்கும் தொல்காப்பியர். கொற்றவை நிலையை வெட்சித் திணைக்குப் புறனாக அமைக்கின்றார்.

இவ்வாறு புறநடையாகக் குறிப்பிடப்பெறும் எதுவுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டச் சமுதாயத்தில் முதன்மைத் தன்மையுடன் இருந்திருக்க வேண்டும் என்பது இயல்பு. இந்த வகையில் இத்தெய்வம் பண்டைய சமுதாயத்தில் ஒரு தனித் தெய்வமாய் இருந்துள்ளது என்பதற்கு இத்தொல்காப்பியத் துறைப்பகுப்பே சிறந்த சான்று. மாடு பொருளாதாரமாய்க் கருதப்பட்ட ஒரு சமுதாயத்தின் போர்முறையே வெட்சிப்போர். இதனால் தொல்காப்பியர் வெட்சித் திணையில் குறிப்பிட்டுள்ள கொற்றவை வழிபாட்டையும் ஒரு பழஞ்சமுதாய வழிபாடாய்க் கருதலாம். (பெ.மாதையன், தொன்மமும் சங்ககாலப் பெண்டிர் நிலையும்)

தொல்காப்பியர் வெட்சித்திணையில் கொற்றவை வழிபாட்டினைக் குறிப்பிடுகின்ற காரணத்தால், வெட்சியின் புறனாகிய குறிஞ்சிக்கும் கொற்றவை நிலை உரியதாகின்றது. கொற்றவைநிலை நூற்பாவிற்கு உரையெழுதும் இளம்பூரணர், கொற்றவைநிலை என்றதனாலே, குறிஞ்சிக்கு முருகவேளேயன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம் என்பார். நச்சினார்க்கினியர் கூடுதலாக, வருகின்ற வஞ்சிக்கும் கொற்றவை நிலை காரணமாயிற்று, தோற்றோர்க்குக் கொற்றம் வேண்டியும் வென்றோர்க்கும் மேற் செல்லுங்காற் கொற்றம் வேண்டியும் வழிபடுவராதலின் என்று விளக்கம் கூறுவர். ஆக நச்சினார்க்கினியர் உரை கொற்றவை நிலையை வெட்சிக்கும் வஞ்சிக்கும் உரியதாகக் குறிப்பிடுவதிலிருந்து வெட்சிக்கும் வஞ்சிக்கும் புறனான திணைகளான குறிஞ்சிக்கும் முல்லைக்கும் கொற்றவைநிலை உரியதாகின்றது. தொல்காப்பியரின் ஒரு புறநடைக் குறிப்பைக் கொண்டு, கொற்றவை வழிபாடு குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய பழந்தமிழர் வழிபாடு என்பதனை உறுதிசெய்ய முடிகின்றது. குறிஞ்சிக்கும் முல்லைக்கும் உரிய தெய்வம் பாலைக்கும் தெய்வமாகும் என்பது வெளிப்படை. ஏனெனில்,

முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து

நல்லியல்பு அழிந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும் -(சிலப்பதி. காடுகாண். 64-66)

என்ற சிலப்பதிகார மேற்கோளின் அடிப்படையில் முல்லையும் குறிஞ்சியும்தான் பாலை, பாலைதான் முல்லையும் குறிஞ்சியும். பிற்கால இலக்கண இலக்கிய நூல்கள் கொற்றவையைப் பாலைநிலக் கடவுளாகக் கருதியமைக்கு அதுவே காரணம். குறிஞ்சியும் முல்லையும் கடுங்கோடையில் பாலைநிலமாக வறண்டு போன பொழுதில் வழிபட ஒரு தெய்வமும் மழைபெய்து செழிப்பான போதில் வழிபட ஒரு தெய்வமும் என் ஆண்டுக்கு இருமுறை மாறிமாறி வழிபடு தெய்வங்கள் மாற்றம் பெற்றன எனக்கொள்வது பொருந்தாது. தொடக்கத்தில் குறிஞ்சிக்கும் பின்னர் முல்லைக்கும் வழிபடு தெய்வமாயிருந்த தாய்த்தெய்வம் கொற்றவையே பாலை நிலத்துக்கும் வழிபடு தெய்வமாகிப் பின்னர் பாலைக்குரிய தெய்வம் கொற்றவை என்ற மரபு நிலை பெற்றிருக்கும் எனக்கொள்வது பொருந்தக்கூடியதே.

சிலம்பில் கொற்றவை

1.வெட்சிப்போரில் கொற்றவை வழிபாடு.

கொற்றவை வழிபாடு பற்றிய விரிவான விளக்கங்கள் சிலப்பதிகாரத்து வேட்டுவ வரியுள்தான் முதன்முதலில் பதிவாகி உள்ளன. ஆறலைக் கள்வர்கள் என்று சுட்டப்படும் எயினர்கள் வணங்கும் கடவுளாகக் கொற்றவை வேட்டுவவரியில் சித்திரிக்கப் பெற்றுள்ளாள். எயினர்கள் மறக்குணம் வாய்ந்தவராகவும், அவர்கள் ஆநிரை கவர்ந்துவரக் கொற்றவையை வழிபட்டதாகவும் ஆநிரை கவர்ந்து வந்தபின் தம்மைக் கொற்றவைக்குப் பலியிட்டுக் கொண்டதாகவும் வேட்டுவவரி விவரிக்கிறது. ஆநிரை கவர்தல் போரில் எயினர்க்கு வெற்றி தருபவள் கொற்றவை என்ற குறிப்பு வேட்டுவவரியின் மையப்பொருளாகும்.

கொற்றவை வழிபாடு பற்றிய முழுமையான தகவல்களைத் தம் காலத்து வைதீகச் சார்போடு படைத்துக்காட்டும் இளங்கோடிகள் கொற்றவையைக் குறிப்பிடும் பல்வேறு பெயர்களை இடையிடையே பெய்து தம் வேட்டுவவரியை அமைக்கின்றார். அப்பெயர்களில் சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாயிருக்கும்.

கலையமர் செல்வி, அணங்கு, கொற்றவை, அமரி, குமரி, கவுரி, சூலி, நீலி, ஐயை, கண்ணுதல் பாகம் ஆளுடையாள், திங்கள் வாழ்சடையாள், திருவமாற் கிளையாள், பாய்கலைப் பாவை முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடுகிறார் இளங்கோவடிகள். செல்வி, ஐயை, அணங்கு முதலான பெயர்களில் கொற்றவையைக் குறிப்பிடும் வேட்டுவவரி பழந்தமிழர்களின் குறிஞ்சி, முல்லைநிலச் சமூகத்தின் தாய்த்தெய்வமே இக்கொற்றவை என்பதனையும் தவறாமல் பதிவு செய்கின்றது.

2. கொற்றவைக் கோலம்

இவ்வேட்டுவவரி பழந்தமிழர்களின் கொற்றவை வழிபாடு குறித்த தகவல் களஞ்சியமாக இளங்கோவடிகளால் படைக்கப்பட்டுள்ளது. எயினர் குலக் குமரி ஒருத்திக்குக் கொற்றவைக் கோலம் புனைந்த செய்தி முதலில் பேசப்படுகின்றது. (வேட்டுவவரி, 21-35) கொற்றவையின் உருவம் குறித்துத் தமிழ் இலக்கியங்களில் நமக்குக் கிடைக்கும் முதல்பதிவு அப்பகுதி. பின்னர் எயினர்கள் கொற்றவையைப் புகழ்ந்து பாடும் வழிபாட்டுப் பகுதியில் கொற்றவையின் உருவம் குறித்த வருணனை மீண்டும் விரிவாக எடுத்துரைக்கப் படுகின்றது.

மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி
நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப்    
பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி
நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து
அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள்
துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
வளையுடைக் கையிற் சூல மேந்தி        
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்                 
தலைமிசை நின்ற தையல்                             (வேட்டுவவரி, 54-66)

பிறையாகிய வெள்ளிய இதழைச் சூடும் சென்னியள், நெற்றியைத் திறந்து விழித்த இமையாத கண்ணினள், பவளம் போன்ற வாயை உடையவள், முத்துப் போன்ற ஒளிவீசும் நகையுடையவள், நஞ்சு உண்டதால் கறுத்த கண்டமுடையவள், கொடிய சினமுடைய வாசுகி என்னும் பாம்பாகிய நாணினைப் பூட்டி நீண்ட மேருவாகிய வில்லை வளைத்தவள், துளையமைந்த பொருந்திய பல்லையுடைய நச்சரவினைக் கச்சாக அணிந்த மார்பினள், வளையல் அணிந்த கையில் சூலம் ஏந்தியவள், யானையின் தோலைப் போர்த்து அதன் மேல் சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள், இடக்காலிலே சிலம்பும், வலக்காலிலே வீரக் கழலும் ஒலிக்கும் சிற்றடிகளை உடையவள், எருமைத் தலையும் மனித உடலும் கொண்டு திரண்ட தோளுடன் திகழ்ந்த மகிடாசுரனைக் கொன்று அவனது தலைமேல் நிற்பவள்

என்றெல்லாம் கொற்றவையின் தோற்றம் குறித்து வேட்டுவவரி படைத்துக் காட்டும் வருணனையில் குறிஞ்சி, முல்லைநிலத் தாய்த்தெய்வக் கொற்றவையின் பழைய உருவம் மாற்றம்பெற்று புதிய வைதீகத் தோற்றத்தைக் காண முடிகிறது. கொற்றவையின் புதிய தோற்றம் சிவனின் தோற்றத்தை ஒத்ததாக வருணிக்கப் பட்டுள்ளமையை நோக்கும்போது தாய்த்தலைமைத் தெய்வமாயிருந்த கொற்றவை, தந்தைத் தலைமைச் சமூகத்தில் ஆண் தெய்வமாம் சிவனோடு கலந்து ஒருமைப் பட்டுள்ளமையை உணர முடிகின்றது.

3. வேட்டைச் சமூகக் கொற்றவை.

                    வேட்டுவரி சித்தரிக்கும் கொற்றவையின் தோற்றத்தில் வைதீகச் சார்பு மிக்கிருந்தாலும் எயினர்களின் கொற்றவை வழிபாடு பழைய வேட்டைச் சமூக மரபுகளையே அடியொற்றி அமைக்கப்பட்டுள்ளமை சிலப்பதிகார வேட்டுவவரியின் தனிச் சிறப்பாகும்.

கலையமர் செல்வி கடனுணின் அல்லது
சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள்                               (வேட்டுவவரி, 16-17)

புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை
கருதிப் போகுங் காலைக்
கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும்
கொடுமரமுன் செல்லும் போலும்                                                    (வேட்டுவவரி, பா.13)

மேலே காட்டப்பட்ட முதல் மேற்கோளில், கொற்றவைக்குச் செய்யவேண்டிய நேர்த்திக் கடன்களைச் செலுத்தவில்லை யென்றால் அவள் உங்கள் வில்லுக்கு வெற்றியைத் தர மாட்டாள் என்றும் இரண்டாம் மேற்கோளில், வீரர்கள் கையில் வில்லை ஏந்தி, பறவைகள் தம்மைத் தொடர்ந்துவர, பகைவரது ஆநிரையைக் கவரப் போகும்போது, தான் கைக்கொண்ட சிங்கக் கொடியினை எடுத்து உயர்த்திக் கொற்றவையும் அவன் வில்லின் முன்னே செல்வாள் போலும் என்றும் வேட்டுவரி படைத்துக்காட்டும் கொற்றவை பழைய வேட்டைச் சமூகக் கொற்றவையாய் வில்லுக்கு வெற்றி தருபவளாயும், ஆநிரை கவரச் செல்லும் வீரர்களுக்கு உடன்சென்று நிரை கவரத் துணைநிற்பவளாயும் சித்தரிக்கப் பட்டுள்ளாள். இப்படி வேட்டுவவரி முழுவதிலும் பழைய வேட்டைக் கொற்றவை, வெட்சிக் கொற்றவை, புதிய வைதீக் கொற்றவை என்ற மூன்று வெவ்வேறு சமூக அடுக்குகளில் கொற்றவை வழிபாடு சித்தரிக்கப்பட்டுள்ளது.

- முனைவர் நா.இளங்கோ, தமிழ்த்துறைத் தலைவர், இணைப் பேராசிரியர், தாகூர் கலைக்கல்லூரி, புதுச்சேரி-8

http://www.keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/39970-2020-03-30-04-43-14

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.