Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு

ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசாணை வெளியீடு

 

தமிழக ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் உச்சரிக்க, ஆங்கில எழுத்துக் கூட்டல்களில் மாற்றம் செய்து தமிழ் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

 


உதாரணமாக, எழும்பூரை ஆங்கிலத்தில் எக்மோர் என குறிப்பிட்டு வந்த நிலையில், இனி எழும்பூர் என்றே அழைக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இதேபோல், திருவல்லிக்கேணி என்று இருப்பதை triplicane என்று இனிமேல் உச்சரிக்கக் கூடாது திருவல்லிக்கேணி என்றே உச்சரிக்க வேண்டும். tuticorin என்பதை தூத்துக்குடி என அழைக்க வேண்டும். கோயம்புத்தூர் - KOYAMPUTHTHOOR, தரும‌புரி - THARUMAPURI, ஆலங்குளம் - AALANGGULAM, திருமுல்லைவாயல் - THIRUMULLAIVAAYAL, பூவிருந்தவல்லி - POOVIRUNTHAVALLI, மயிலாப்பூர் - MAYILAAPPOOR , சிந்தாதறிபேட்டை - CHINTHADHARIPETTAI, சைதாப்பேட்டை - SAITHAAPPETTAI என்றே அழைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.maalaimalar.com/news/topnews/2020/06/11020024/1597016/GO-released-for-pronunciation-in-english-just-as-the.vpf

 

நல்லது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Coimbatore இனிமேல் Koyampuththoor: தமிழில் ஊர் பெயர்கள் மாற்றப்பட்டதில் என்ன நன்மை?

Coimbatore இனிமேல் Koyampuththoor:

 

தமிழகத்தில் உள்ள 1018 ஊர்களின் புதிய ஆங்கில எழுத்துக் கூட்டல்கள் தமிழ் உச்சரிப்பின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதற்கு தமிழகத்தில் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.

தமிழக அரசின் இந்த நடவடிக்கையை சமூக ஊடகங்களில் பலர் ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும் வருகின்றனர். குறிப்பாக #Koyampuththoor என்ற ஹேஷ்டேக்கை கோவை மக்கள் பெயர் மாற்றத்தை விமர்சித்து கருத்து தெரிவிக்க பிரபலமாக்கி வருகின்றனர்.

2018-19 ஆண்டில் தமிழ் வளர்ச்சி துறைக்கான மானிய கோரிக்கையில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா கே. பாண்டியராஜன், "தமிழகத்தில் உள்ள ஊர் பெயர்கள் தமிழ் உச்சரிப்புப் போன்றே ஆங்கிலத்தில் அமையும் வகையில் மாற்றம் செய்ய உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு செயற்படுத்தப்படும். இதற்கென 5 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்படும்" என்று அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களின் பரிந்துரைகள் பெறப்பட்டு, ஆலோசனைக்குழுவின் பரிந்துரைப்படி ஊர்களின் ஆங்கில எழுத்துக்கூட்டல் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், புதுக்கோட்டை, கிருட்டினகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தூத்துக்குடி, பெரம்பலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விருதுநகர், கரூர், சேலம், தஞ்சாவூர், விழுப்புரம், வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1018 ஊர்களின் ஆங்கிலப் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே மாற்றப்பட்டுள்ளன என்று தமிழக அரசு, நேற்று (ஜூன் 10) அரசாணை வெளியிட்டது.

குறிப்பாக, கோயம்புத்தூரின் ஆங்கில எழுத்துக் கூட்டல் Coimbatore ஆக இருந்தது, தற்போது Koyampuththoor என மாற்றப்பட்டுள்ளது. இதேபோல், Tuticorin என்று குறிப்பிடப்பட்டு வந்த தூத்துக்குடி, Thooththukkudi என மாற்றப்பட்டுள்ளது.

'ஊர் பெயர்கள் மாற்றம் காலப்போக்கில் பரிச்சயமாகிவிடும்'

'ஊர் பெயர்கள் மாற்றம் காலப்போக்கில் பரிச்சயமாகிவிடும்'படத்தின் காப்புரிமைARUN SANKAR

தமிழக அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிபிசி யிடம் பேசிய பதிப்பாளர் மற்றும் அரசியல் விமர்சகருமான ஆழி செந்தில்நாதன், "பிரிட்டிஷ் காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஊர்களின் பெயர்களை ஆங்கிலேயர்கள் உச்சரிக்க முடியாததால் அவர்களுக்கு ஏற்ப ஊர்களின் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டனர். அவ்வாறு உச்சரிக்கப்படும் ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழகம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநில அரசுகள் தொடர்ந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றன. உலகம் முழுவதுமே தாய்மொழி உச்சரிப்பின் அடிப்படையில் பெயர் மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என தெரிவித்தார்.

"பொதுவாகவே, ஒரு பெயர் அல்லது ஊரின் பெயரை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளது. அதனை களையும் வகையில் தரநிலைக்கட்டுப்பாடுகளை பயன்படுத்தி தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் அதனை எழுத வேண்டும். இது போன்ற பெயர் மாற்றங்களின் போது ஆரம்பத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுவது இயல்புதான். எடுத்துக்காட்டாக மெட்ராஸ் மாநகரம், 'சென்னை' என பெயர் மாற்றப்பட்ட போது பல விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் தற்போது சென்னை என்ற பெயர்தான் பரிச்சயமாக உள்ளது. இதேபோல் தற்போது மாற்றம் செய்யப்பட்ட ஊர்களின் பெயர்களும் காலப்போக்கில் பரிச்சயமாகிவிடும்" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.

கொரோனா பரவல் சமயத்தில் வந்த அறிவிப்பு

கொரோனா நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் ஊர் பெயர் மாற்றம் அவசியமற்றது என ஒருசாரார் விமர்சித்தபோதும், தமிழ் மொழியின் அடிப்படையில் பெயர் மாற்றும் நடவடிக்கை எப்போது மேற்கொள்ளப்பட்டாலும் வரவேற்கத்தக்கது என்கிறார் எழுத்தாளர் பாமரன்.

"தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஊர்களின் ஆங்கிலப் பெயர்களில் திருத்தம் செய்வது அவசியமானது. எந்த சூழலில் இதை செய்தாலும் வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில், சமஸ்கிருதம் போன்ற பிறமொழி கலப்புகளையும் ஆராய்ந்து தமிழ் ஊர்ப் பெயர்களாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, திருவரங்கம், திருபெரும்புதூர் ஆகிய ஊர்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புதூர் என எழுதப்படுகின்றன. இதுபோன்று, தமிழ் அர்த்தம் பொதிந்த பல ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, 'பன்னீர்மடை' என்ற ஊர் பன்னிமடை என்றும், 'பூளைமேடு' என்ற பகுதி பீளமேடு என்றும் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் திருத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என கேட்டுக்கொண்டார்.

பெயர் எழுத்துக் கூட்டல்களை மாற்றினால் என்ன சிக்கல்?

"பல நாடுகள் மற்றும் மாநிலங்களோடு கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வர்த்தக தொடர்பில் உள்ளன"படத்தின் காப்புரிமைARUN SANKAR Image caption"பல நாடுகள் மற்றும் மாநிலங்களோடு கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வர்த்தக தொடர்பில் உள்ளன"

கோவைப் போன்ற தொழில் நகரங்களின் பெயர்கள் மாற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும் என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரும், எழுத்தாளருமான இரா.முருகவேள்.

"பல நாடுகள் மற்றும் மாநிலங்களோடு கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் வர்த்தக தொடர்பில் உள்ளன. இந்த நிலையில் திடீரென நாளை முதல் ஊர் பெயரில் மாற்றம் செய்யப்படுகிறது என அறிவிப்பது ஜனநாயக நடைமுறை என ஏற்றுக்கொள்ள முடியாது. அறிஞர் குழு மற்றும் மக்களின் கருத்துகளை ஆராய்ந்து வெளிப்படைத்தன்மையோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். மொழிப் பெருமிதம் அவசியம் என்ற போதும் தொழில் மற்றும் வர்த்தகம் போன்ற காரணிகளையும் கருத்தில் கொண்டு, இது போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்," என தெரிவிக்கிறார் முருகவேள்.

https://www.bbc.com/tamil/india-53009388

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1,018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் மாற்றம் - திருத்தங்கள் தேவை; வைகோ

vaiko-urges-to-correct-village-names வைகோ: கோப்புப்படம்

சென்னை

1,018 ஊர்களின் ஆங்கில எழுத்துகளில் மாற்றம் - திருத்தங்கள் தேவை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, வைகோ இன்று (ஜூன் 17) வெளியிட்ட அறிக்கை

 

"தமிழ் அறிஞர்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் ஊர்ப்பெயர்களை ஆங்கிலத்தில் எழுதுகின்ற முறையில் மாற்றங்கள் செய்து தமிழக அரசு பிறப்பித்து இருக்கின்ற ஆணை வரவேற்கத்தக்கது. பெரும்பாலான திருத்தங்கள் சரியாகத்தான் இருக்கின்றன.

சில திருத்தங்களில் ஒரே அளவுகோல் பின்பற்றப்படவில்லை.

குறிப்பாக, தமிழில் நெடில் எழுத்துகளை ஆங்கிலத்தில் எப்படி எழுதுவது என இந்த ஆணை வரையறுக்கவில்லை; தெளிவுபடுத்தவில்லை.

வேலூர் என்பதை, ஆங்கிலத்தில் 'Veeloor' வீலூர் என எழுதியதற்குப் பதிலாக, 'Vaeloor' என எழுதுவதுதான் பொருத்தமாக இருக்கும்.

வீடூர் என்பதை, 'Veedur' என எழுதி இருக்கின்றார்கள். 'டூர்' என்ற நெடில் இல்லை.

சில ஊர்களின் பெயர்களில் மட்டும் நெடிலாக ஒலிக்க வேண்டிய இடங்களில் இரண்டு 'AA' சேர்த்து எழுதப்பட்டு இருக்கின்றது. பல ஊர்களில் அந்த மாற்றம் இல்லை.

வடக்கு அவிநாசிபாளையம் என்பதில், 'பாளையம்' என்ற நெடிலுக்கு இரண்டு 'AA' உள்ளது. ஆனால், அவினாசி என்ற நெடிலுக்கு ஒரு 'A' தான் உள்ளது. எனவே, அதை அவினசிபாளையம் என்றே வாசிக்க முடியும்.

திருவாதவூருக்கு இரண்டு 'AA' இல்லை. எனவே, திருவதவூர் என ஆகின்றது. திருவாரூர் என்பது, திருவரூர் என்றே இருக்கின்றது.

பெரியநாயக்கன்பாளையம் என்பதை, பெரியநயக்கன்பாளையம் என்றே வாசிக்கக்கூடியதாக இருக்கின்றது.

ஆண்டிபாளையம், அண்டிபாளையம் ஆக இருக்கின்றது. மணப்பாறையில் இரண்டு 'AA' இல்லை.

அதியமான் கோட்டை என்பது, 'Athiyamankottai' என்கிறது அரசு ஆணை. இங்கே, மான் என்ற நெடிலுக்கு இரண்டு 'AA' இல்லை.

திருமுல்லைவாயில் என்பது, 'Thirumullaivaayal' என மாற்றம் பெற்றுள்ளது.

அதில், 'த' என்ற எழுத்திற்கு, ஆங்கிலத்தில் 'Th' என எழுதப்பட்டு இருக்கின்றது.

தூத்துக்குடி, திருவாரூர் ஆகிய ஊர்களில் உள்ள 'த' என்ற எழுத்திற்கும், 'Th' என்று உள்ளது. அதுபோலவே, பல ஊர்களில் 'த' என்ற எழுத்திற்கு 'Th' என எழுதி இருக்கின்றார்கள்.

ஆனால், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஊர்களின் பெயர்களில், 'த' என்ற எழுத்திற்கு வெறுமனே 'T' என்ற ஆங்கில எழுத்து மட்டுமே உள்ளது.

வேலி என்பதற்கான நெடில் எழுத்திலும் மாற்றம் இல்லை. எனவே, அதை முன்பு போலவே, 'டிருநெல்வெலி' என்றே வாசிக்க முடியும்.

அதேபோல, தென்காசி என்பதும் ஆங்கிலத்தில் 'டென்கசி' என்றே வாசிக்கக்கூடியதாகவே இருக்கின்றது. திருத்தம் தேவை.

திருவில்லிபுத்தூர் என்பதில் இரண்டு 'OO' இல்லை.

ஈரோடு என்பதற்கு, இரண்டு 'EE' தேவை.

சேத்தூர் என்பதற்கு, மாவட்ட ஆட்சியர் 'Seththur' என பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அதை 'Saeththoor' என மாற்றி இருக்கின்றார்கள். இரண்டுமே பிழையானது. அது 'Saeththoor' என்றே இருக்க வேண்டும்.

தூக்கநாயக்கன் பாளையம் என்ற பெயரே இல்லாமல் போய்விட்டது. அதை, ஆங்கிலத்தில் 'Thu.Naa. Paalayam' என மாற்றி விட்டார்கள்.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபொழுது, வடமொழியில் எழுதப்பட்டு இருந்த சில ஊர்களின் பெயர்களைத் தமிழில் மாற்றினார். குறிப்பாக, 'மாயவரம்' என்பது மயிலாடுதுறை ஆனது.

ஆனால், வேதாரண்யம், திருமறைக்காடு ஆகவில்லை. 'விருத்தாசலம', திருமுதுகுன்றம் ஆகவில்லை.

இவையெல்லாம் நீண்டகாலக் கோரிக்கை. இதுகுறித்து, அரசு ஆணையில் எந்த அறிவிப்பும் இல்லை.

ஆலயங்களில் உள்ள இறைவன், இறைவி பெயர்களையும் தமிழில் எழுத வேண்டும்.

தமிழில் வேப்பேரி என்பது ஆங்கிலத்தில் 'Vepperi' என்கிறது அரசு ஆணை. 'வே' என்ற நெடில் 'வெ' என்ற குறில் ஆகி இருக்கின்றது. 'Vaeppaeri' என்பதே பொருத்தமாக இருக்கும்.

'க்' என்றால் இரண்டு 'KK', 'ச்' என்றால் 'Ch' போட்டு இருக்கின்றார்கள். இது சரியானதே. ஆனால், இந்த மாற்றமும் பல ஊர்ப் பெயர்களில் இடம் பெறவில்லை.

வாக்கூர் என்பதை மாவட்ட ஆட்சியர் 'Vaakkur' என பரிந்துரை செய்து இருக்கின்றார். அரசு, 'Vaakoor' வாகூர் என ஆக்கி இருக்கின்றது. அதில் இரண்டு 'KK' இல்லை.

'மல்லிகைச் சேரி' என்ற ஊர் ஆங்கிலத்தில் 'Mallikaichcheri' ஆகி இருக்கின்றது.

ஆனால், எருக்கஞ்சேரி 'Erukkenjery' ஆகி இருக்கின்றது.

இரண்டுமே சேரிகள்தான். ஆனால் அதை, 'cheri, jery' என இரண்டுவிதமாக எழுதி இருக்கின்றார்கள்.

சோழிங்கநல்லூர் ஆங்கிலத்தில் 'Solinganalloor' ஆகி இருக்கின்றது.

ஆனால், எழும்பூர், 'Ezhumboor' ஆகி இருக்கின்றது.

இரண்டு ஊர்களிலும், சிறப்பு 'ழ' கரம்தான் இருக்கின்றது.

ஏன் இரண்டு விதமாக எழுதுகின்றார்கள்?

'Ezhumboor' என்று எழுதினால், அதை 'எஸ்ஹும்பூர்' என்றுதான் பிற மொழிக்காரர்கள் வாசிப்பார்கள். 'எழும்பூர்' என வாசிக்க மாட்டார்கள். இது மிகப்பெரிய குழப்பம். எனவே, 'Elumpoor' என எழுதுவதே சரி.

'தமிழ்நாடு' என்பதை ஆங்கிலத்தில் 'Tamilnadu' என்று எழுதுகின்றார்கள். அந்த 'ழ' வில் மாற்றம் இல்லை. பொதுவாக, 'zha' என்பதை பிறமொழிக்காரர்கள் 'ழ' என வாசிப்பது இல்லை. வட இந்தியர்கள் கூட, 'டமில் நடு' என்றுதான் சொல்லுகின்றார்கள். அதையும் 'Thamilnaadu' என்று எழுதுவதே பொருத்தமாக இருக்கும்.

சுட்டிக்காட்டப்பட்டு இருக்கின்ற சில குறைகளை, அரசு களைய வேண்டும். அதற்காக, அறிஞர்கள் குழு ஒன்றைத் தெரிவு செய்து பொறுப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்"

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

https://www.hindutamil.in/news/tamilnadu/559802-vaiko-urges-to-correct-village-names-9.html

 

  • கருத்துக்கள உறவுகள்

103633654_153035379618967_4016326193814075488_o.jpg?_nc_cat=109&_nc_sid=8bfeb9&_nc_eui2=AeEcalUptzJBt25JYXx3fltMBJjY-RZXB_sEmNj5FlcH-3LDk5QewqWMAdld7Vi-gr-IQwxI2fK27_s2WuAFePW8&_nc_ohc=n3e6LWZMK5oAX_eTBip&_nc_ht=scontent-frt3-1.xx&oh=c52a1de33e06826b9dbc976d7c41f9d7&oe=5F156233

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.