Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

’படப்பிடிப்பு’ என்ற போராட்டத்தின் தேவை

Johnsan Bastiampillai   / 2020 ஜூன் 13

ஏறத்தாள 12 வருடங்களுக்கு முன்னர்....

பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலியப் படையினரின் சுற்றிவளைப்புகள், வீதியில் போகும் இளைஞர்களைக் கைது செய்து துன்புறுத்தல், தடுத்துவைக்கப்பட்டவர்கள் மீதான சித்திரவதைகள் என,  பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் ஆக்கிரமிப்புகள், அட்டகாசங்கள் நாள்தோறும் நிகழ்ந்த வண்ணம் இருந்தன. இவ்வாறு, நாள்தோறும் நிகழும் சம்பவங்கள் எல்லாம், செய்திகளாக வெளியுலகை எட்டுவதில்லை; அடக்குமுறையாளர்கள் மீது தொடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளும் வெற்றி பெறுவதற்கு ஆதாரங்கள் இருக்கவில்லை. 
அப்போதுதான், பாலஸ்தீன இளைஞர்கள் புதுவகை ஆயுதமொன்றைக் கைகளில் எடுத்தார்கள். கற்களில் இருந்து பீரங்கிகள் வரையிலான ஆயுதங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்திக் களைத்துப்போன, பாலஸ்தீன இளைஞர்கள் கைகளில் எடுத்த புதுவகை ஆயுதம்தான் வீடியோ கமெரா. 

குண்டுகளுக்கு அஞ்சாத இஸ்ரேலிய படைகள், இந்தப் புதிய ஆயுதத்துக்கு  அஞ்சினர். இஸ்ரேலியரின் மனித உரிமை மீறல்களை, ஆக்கிரமிப்புகளை ஒளிப்பதிவு செய்வதற்காக,  பாலஸ்தீன இளைஞர்கள் கமெராவும் கையுமாக அலைந்தார்கள்; இப்போதும் அலைகிறார்கள். 

இஸ்ரேலில் சமாதானம் மலரவேண்டும் என்பதற்காகப் பாடுபடும், நெதர்லாந்தைச் சேர்ந்த மனிதஉரிமை அமைப்பான 'பி'ரி செலம்' (B'T Selem) இந்தப்  போராட்டத்துக்கு நிதியுதவி வழங்கி, ஆயிரக்கணக்கான வீடியோ கமெராக்களை, பாலஸ்தீன இளைஞர், யுவதிகளிடம் கையளித்தது. இந்தப் 'படப்பிடிப்புப் போராட்டம்' காரணமாக, பாலஸ்தீனத்துக்கு பல நல்ல விளைவுகள் நடந்தேறின. 

இனச்சுத்திகரிப்புகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் உள்ளாக்கப்படும் சமூகம் ஒன்றில், படப்பிடிப்புப் போராட்டத்தின் தேவை, அத்தியாவசியமானதாக உணரப்படுகின்றது. ஓரினம் அடக்குமுறைகளுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் உட்படுகின்றது என்றால், அது குறித்த உண்மை, உலக சமுதாயத்தின் முன் கொண்டுசெல்லப்பட வேண்டும். 

யாருக்கு எதிராகப் போராடுகின்றோம், எதற்காகப் போராடுகின்றோம், போராட்டத்தின் இறுதி நோக்கத்தை அடைவதற்குத் தடையாக இருக்கும் சக்திகள் எவை, போராட்டத்தை நீர்த்துப்போக வைக்கும் காரணிகள் யாவை போன்றவையே, ஒரு போராட்டத்தின் தன்மை, அதன் செல்நெறிகள் போன்றவற்றைத் தீர்மானிக்கின்றன. 

இலங்கையில், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் கடந்த காலத்தில், அஹிம்சைப் போராட்டம், ஆயுதப் போராட்டம் எனத் தொடர்ந்து, தற்போது அஹிம்சையில் வந்து நிற்கின்றது. இந்நிலையில், தற்போது ஆங்காங்கே முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுடன், நடந்தேறும் உண்மைகளை வெளிக்கொணரும் வகையிலான ஆதாரங்கள் உருவாக்கப்பட வேண்டும். அந்த ஆதாரங்கள் காணொளிகள் மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 

அமெரிக்காவில், பொலிஸாரின் வன்முறையால் கொல்லப்பட்ட ஜோர்ஜ் புளொய்ட்டுக்கு நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் நடைபெற்று வரும், 'கறுப்பு உயிர்களும் முக்கியம்' என்ற உலகளாவிய போராட்டத்துக்கு அடிப்படைக் காரணியாக இருந்தது, 17 வயது உயர்தரப் பாடசாலை மாணவியால் எடுக்கப்பட்ட ஒரு சாதாரண காணொளி மட்டுமே! 

image_c707ef8a7d.jpg

டர்நெல்லா ஃபிறெஷர் என்ற மாணவி, தனது நண்பனுடன் அந்தச் சந்தை வளாகத்தில் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதுதான், பொலிஸார் அந்தக் கறுப்பினத்தவரைக் கைது செய்யும் காட்சியைக் கண்டு, அதைப் பத்து நிமிடங்கள் படமாக்கியுள்ளார். அதில் எட்டு நிமிடங்களும் 46 விநாடிகளும் புளொய்ட் மரணிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன. இந்தக் காட்சிகளைப் படமாக்கிய அவர், அதை முகப்புத்தகத்தில் உடனடியாகவே பதிவேற்றியிருந்தார். இந்தக் காட்சி, அமெரிக்க வரலாற்றிலேயே பெரும் புரட்சிகளைச் செய்யும் என்று கடுகளவும் எண்ணியிருந்திருக்க மாட்டார். எந்த ஆயுதத்துக்கும் இல்லாத வலிமை, இந்தக் காணொளிக்குக் கிடைத்துள்ளது.

1972 ஜுன் ஒன்பதாம் திகதி, தெற்கு வியட்நாமில் தராங்பாங் என்ற கிராமத்தில் வீசப்பட்ட 'நெப்பொம்' என்ற குண்டு வெடிக்க வைக்கப்பட்டதில், உடல்முழுவதும் தீக்காயங்களுடன் தனது இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு, முகத்தில் பீதியுடன் நிர்வாணமாக ஓடிவரும் சிறுமியின் ஒரு படம், 19 வருட வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு மிகப்பெரிய காரணியாக இருந்தது.

இலங்கையில். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் காட்சிப்படுத்தப்பட்ட பல காணொளிகளை கொண்டு 'சனல்-4' தயாரித்த குறும்படங்கள், ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் சர்வதேசத்தின் சுயாதீன விசாரணைப் பொறிமுறை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்துவதற்கு உதவி இருந்தன. இந்தக் காணொளிகள் உலக மக்களின் மத்தியில் ஏற்படுத்திய பாதிப்புகள் மிகவும் ஆழமானவை. 

யுத்த வலயத்தில் இருந்த டொக்டர்கள், தொண்டு நிறுவனங்களின்  ஊழியர்கள், மதகுருமார் போன்றோர் கண்கண்ட சாட்சியங்களாகத் தெரிவித்த கருத்துகள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, இந்தக் காணொளிகள் ஏற்படுத்திய தாக்கம் மிகக் கடுமையானவையாக இருந்தன. 

சிங்களப் படைவீரர்கள், தமது திறன்பேசி, கமெராக்கள் மூலமாகப் பொழுதுபோக்காகவும் தமது நண்பர்களுக்கு அனுப்பும் முகமாகவும் படமாக்கப்பட்ட இந்தக் காட்சிகள், 'சனல்-4' மூலம் வெளிஉலகுக்கு அம்பலமாகி விட்டன. 

இந்தக் காணொளிகள் போலியானவை என நிராகரித்த இலங்கை அரசாங்கம், இந்தப் போர்க்குற்றங்கள் விடுதலைப்புலிகளால்தான் மேற்கொள்ளப்பட்டன என்பது போன்ற தோற்றப்பாடு ஏற்படும் வகையில், சிங்களத்தில் இருந்த குரல்ப் பதிவுகளை, தமிழில் பேசுவது போன்று மாற்றி. உள்நாட்டுத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது. 

பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனையே, ஆட்சி அமைப்பதற்கான துரும்புச் சீட்டாக வைத்துள்ள பேரினவாத அரசியல்வாதிகள், சிங்கள மக்களுக்கு, தமிழ் மக்களின் இன நெருக்கடி தொடர்பான  உண்மைகளை ஒருபோதும் எடுத்துச் சொன்னதில்லை; சொல்லப் போவதுமில்லை. உண்மையில், சிங்கள மக்கள் ஒற்றைப் பரிமாண சிந்தனைக்குள் மூடிவைக்கப்பட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும். 

சாதாரண சிங்கள மக்களைப் பொறுத்தமட்டில், அவர்களுக்குத் தமிழர்கள் ஏன் போராடுகின்றார்கள், என்ற உண்மை தெரியவராமல், தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, நாட்டைப் பிரிப்பதற்கான போராட்டமாகப் பார்க்கின்றார்கள். அந்தளவுக்கு அவர்கள் மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளார்கள்.

தமிழர்களுக்கு எதிரான இனவாதத்தை, சிங்கள மக்கள் மத்தியில் வளர்ப்பதன் ஊடாக, அந்தச் சமூகத்தைத் தொடர்ந்து சுரண்டிக் கொண்டிருப்பதே சிங்களப் பேரினவாத அரசியல்வாதிகளின் நோக்கமாகும். சிங்கள சமூகத்திடம், இனநெருக்கடி தொடர்பான உண்மைகளைச் சொல்ல விரும்பும் எவரையும், இலங்கை பேரினவாத அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை. 

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ், சிங்களத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் மக்களின், சுயநிர்ணய உரிமைப் போராட்டம் தொடர்பான நியாயப்பாடுகளை முன்வைத்திருந்தார். இதே தடத்தில் பயணித்த இடதுசாரி அரசியல்வாதிகள், குறிப்பாக வாசுதேவ நாணயக்கார போன்றோர் பின்னர் தடம்மாறி இருந்தமைக்குக் காரணம், உண்மைகளைச் சொல்ல அதிகார வர்க்கம் அனுமதிப்பதில்லை என்பதுடன் உண்மைகளைச் சொல்பவர்களால் அதிகாரத்துக்கும் வர முடியாது என்பதாகும்.  

இன்றைய நிலையில், தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்துக்கான நியாயத் தன்மையை, இரண்டு தரப்பினருக்கு மத்தியில் முன்கொண்டு செல்லப்பட வேண்டும்.

முதலாவது, சிங்கள சாதாரண பொதுமக்கள்; இரண்டாவது, சர்வதேசங்களில் வாழும் சாதாரண பொது மக்கள். இந்த இரண்டு தரப்பினருக்கும் தமிழ் மக்கள், இன்று எவ்வாறு ஒடுக்கப்படுகின்றார்கள், அவர்களின் நிலங்கள் எவ்வாறு ஆக்கிரமிக்கப்படுகின்றன, வளங்கள் எவ்வாறு அபகரிக்கப்படுகின்றன, ஆயுதப் படையினர், ஆயுதமுனையில் தமிழ் மக்களை எவ்வாறு அச்சுறுத்துகின்றார்கள் போன்ற அனைத்துச் சம்பவங்களும் காணொளிகள் மூலம், ஆதாரப்படுத்தப்பட்டு, பிரசாரப்படுத்தப்பட வேண்டும். 

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னர், தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற கொடூரங்களையும் அழிவுகளையும் முழுமையாகப் புகைப்படங்களாகவோ, காணொளிகளாகவோ இனி வெளியிட்டுவிட முடியாது. ஆனால், இனி, தமிழர்களுக்கு எதிராக இடம்பெறப்போகும் கொடூரங்களையும் அச்சுறுத்தல்களையும் புகைப்படங்களாகவும் காணொளிகளாகவும் ஆதாரத்துடன் வெளிப்படுத்த முடியும். 

அரசியல்வாதிகள், அதிகாரிகள், உலக நாடுகள் தமிழர்களின் நெருக்கடிகளுக்குத் தீர்வு தருவார்கள் என நம்பி இருப்பதைவிட, பொதுமக்கள் தாமாகவே, தமது பிரச்சினையை எதிர்கொண்டு, தீர்வுகாண முயற்சிக்க வேண்டும். இதற்கு நமது கையில் இருக்கும் சாதாரண திறன்பேசியே, நமக்குச் சிறந்த ஆயுதமாக இருக்கும். அதை நாம் எவ்வாறு உபயோகிக்கப் போகின்றோம் என்பது, நம் ஒவ்வொருவரின் கையில் இருக்கிறது. 

நமது பங்கை நாம் செய்தால், நம் நிலையில் நிச்சயம் முன்னேற்றம் ஏற்படும். இலண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால், இலங்கைத் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, அச்சுறுத்தல் விடுத்த காணொளி, அரசியலில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோன்ற அச்சுறுத்தல்கள் எத்தனை எத்தனை தினமும் தமிழர் வாழும் பகுதிகளில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதைப் போன்ற அச்சுறுத்தல்கள், அவமதிப்புகள் என யாவும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் இந்தப் பத்தியின் நோக்கமாகும்.

உண்மை வெளிக்கொணரப்படுவதன் மூலமே நீதியைத் தேட முடியும். நீதியின் மூலமே, அமைதியைத் தேட முடியும். ஆகவே, உண்மைகள் வெளிக்கொணரப்படுவது காலத்தின் தேவை கருதி முக்கியத்துவம் பெறுகின்றன.   

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/படப்பிடிப்பு-என்ற-போராட்டத்தின்-தேவை/91-251851

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.