Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்பட உரைத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நேர்பட உரைத்தல்

image_63f180967f.jpg
 

அரசியல் என்பது பெண்களுக்கு மிகவும் சவாலான விடயம் என்பது உண்மைதான். ஆனால், எத்தகைய சவால்களையும் துணிந்து விருப்பத்துடன் ஏற்கும் பெண்களுக்கு அது மிகவும் சுவாரசியமான விடயமும் கூட.

ஒரு தேர்தல் களத்தில் போட்டியிடும் பெண்களின் மீது அவரது சமூகத்தின் அனைத்துப் பெண்களையுமே பிரதிநிதித்துவப்படுத்தும் பாரிய பொறுப்பு சுமத்தப்படுகிறது. இதனை சிறப்புற எதிர்கொள்ளுவதற்கு வெறுமனே அரசியலில் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது அதில் தொடர்ந்து பயணிப்பதற்குத் தேவையான வலுவும் புத்திசாதுர்யமும் துணிவும் ஆண்களைவிட சற்று அதிகமாகவே பெண்களுக்குத் தேவை.

இதற்கு முக்கியக் காரணம் இதுவரை காலமும் ஆண்களை மட்டுமே பெரும்பான்மையாகக் கொண்டிருந்த கட்சி அரசியலானது மக்களின் பிரச்சினைகள் மீது மட்டுமே கட்டியெழுப்பப்பட்டது ஆகும். அவர்கள் மக்களை எப்போதும் பிரச்சினையில் உழல வைத்து அதனைக் காட்டியே ஒவ்வொருமுறையும் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடித்துச் செல்கிறார்கள். மக்களின் பிரச்சினைகள் என்று தீர்கிறதோ அன்று தமக்கான தேவையும் இல்லாமல்போய் மக்களின் தெரிவுகள் அதிகமாகிவிடும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதனாலேயே பதவிக்கு வந்த பின்னர் கூட மக்களின் பிரச்சினைகளைச் சுமுகமாகத் தீர்க்கும் நேரடி வழிமுறைகள் தென்பட்டாலும் கூட, அவற்றைத் தீர்க்கவிடாது தமக்குள்ளேயே போலியான அடிபாடுகளைத் தொடங்கி ஒவ்வொருவரும் தாம் மட்டுமே மக்களுக்காகன தீர்வைப் பெற்றுக்கொடுக்க அதிகம் சிரமப்படுகிறோம் என்பதாகக் காட்டுவதிலேயே காலத்தைச் செலவழிக்கிறார்கள். மக்களும் இத்தகைய படம்காட்டல்களை எளிதில் நம்பிவிடுவதுடன் அதையே விரும்பவும் தொடங்கிவிடுகிறார்கள். இதுவே வடமாகாணசபையின் தோல்வியிலிருந்து தமிழர் தரப்பு அரசியலின் அடிப்படையான அரசியல் தீர்வு என்பதை இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே பேசிக்கொண்டேயிருப்பது என்பது வரை நீண்டு செல்கிறது.

ஆனால், பெண்களது பொதுவான நேர்படப் பேசும் திறனும், இரக்க சுபாவமும் அவர்களை அத்தகைய கேவலமான அரசியலைச் செய்யவிடுவதில்லை. அவர்கள் உண்மையாகவே பிரச்சினைகளைத் தீர்க்கவேண்டும் என நினைப்பவர்கள். எனவேதான் இவர்கள் தமது பெயர்கள் வரலாற்றில் பேசப்படவேண்டும் என்பதைவிட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைப் பற்றியே அதிகம் அக்கறை காட்டுகிறார்கள். அரசியல் தீர்வு என்பது தற்போதைய சூழ்நிலையில் கைக்கு எட்டாதது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே அதனைப் பெற்றுத் தருவோம் என்பதை மட்டுமே சொல்லிச் சொல்லி மக்களை காலம்காலமாக ஏமாற்றிக் கொண்டிருப்பதைவிட நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்வைக்கிறார்கள். ஆனால் இந்த அரசியல் நேர்மை என்பது தேர்தலில் வெற்றியைப் பெற்றுத் தர உதவாது என்பதை இந்தப் பெண்கள் உணர்ந்து தாமும் ஏமாற்று அரசியலைப் பழகுவதற்கிடையில் அடுத்த தேர்தலில் அவர்கள் ஒதுக்கப்பட்டு மீண்டும் புதிதாக வேறொரு பெண் இறக்கப்படுகிறார். இதனால் சொல்லுவதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக அல்லாமல் சாணக்கியம் நிறைந்த 'அரசியலுக்குத் தகுதியான' பெண்களின் பிரதிநிதித்துவம் என்பது எப்போதும் எமது மத்தியில் எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு பேஸ்புக் தளத்தில் பெண்களை 'ஹாப் பொயில்'கள் என்று நக்கலடித்து பல்வேறு பதிவுகளும் அதனை நிரூபிக்கும் வகையில் பல துறைசார் பெண்களின் படங்களும் காணொளிகளும் பதிவேற்றப்பட்டிருந்தன. இவற்றைப் பதிவேற்றியவர்களின் மனநிலை எத்தைகைய கொடூரமானதாகவும் பக்கச் சார்பானதாகவும் இருந்தாலுமே தற்போதைய தேர்தல் களத்தைப் பொறுத்தவரை 'நல்லது - கெட்டது' என்ற இரண்டுக்கும் இடையில் நின்றுகொண்டு சில பெண்வேட்பாளர்கள் அரைகுறைத்தனமான கருத்துகளை முன்வைப்பதைக் காண்கையில் இந்தகைய கோபம் வருவதைத் தடுக்க முடியாதிருக்கிறது. அதிலும் குறிப்பாக வடக்கைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவர் "பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்க முன்வந்த ஒருத்தியைச் சிலர் சர்வாதிகாரம் சார்ந்த போக்குடன் கையாள்கிறார்கள்" என்றவாறாகத் தெரிவித்திருக்கிறார். ஜனநாயக கட்சி அரசியலின் அடிப்படையே ஆண்களின் சர்வாதிகாரம் தான் என்ற அடிப்படை அரசியல் அறிவே இல்லாமல் தானா இவர் களத்தில் இறங்கியிருக்கிறார் என்பதை நினைக்க வியப்பாக இருக்கிறது. தவிர குறித்த கட்சியில் இருக்கும் பலநூற்றுக் கணக்கான பெண்களைப் புறம்தள்ளி இவர் கொண்டுவரப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அனுதாப வாக்குகளைப் பெறுவார் என்பதற்கும் மேலாக, தாம் சொல்லுவதை மறுபேச்சின்றிக் கேட்கக்கூடிய ஒருவர் என்பதாகவே இருக்கும் என்ற அடிப்படைப் புரிதல் கூட இல்லாமலிருந்திருக்கிறது என்பது வேதனையளிக்கிறது.

யாழ். மாவட்ட தேர்தல் தொகுதிக்காக ஏழு ஆசனங்களுக்காகப் போட்டியிட ஒவ்வொரு கட்சியிலிருந்தும் குறித்த ஆசன எண்ணிக்கையைவிட மூன்றுபேர் அதிகமாக, மொத்தமாகப் பத்துப்பேரைத் தெரிவுசெய்து அனுப்பவேண்டும். ஒருவரை அல்லது இருவரை மட்டுமே பிரதான வேட்பாளராகக் கொண்டு களமிறங்கும் கட்சிகள் எவற்றுக்கும் ஏனைய வேட்பாளர்களைத் தெரிவு செய்வதில் பெரும் சிரமம் இருக்கப்போவதில்லை. அவர்கள் யாரைப் புதிதாகக் களம் இறக்கினாலுமே குறித்த பிரதான இருவரையும் தமது மூன்றுவிருப்புவாக்குப் பட்டியலில் சேர்க்கச் சொல்லியே பிரசாரம் செய்வார்கள். ஆனால், ஏற்கெனவே ஐந்து ஆசனங்களைக் தன்னகத்தே வைத்திருக்கும் ஒரு கட்சியில் புதிதாக ஒருவரை உள்ளே நுழைக்கிறார்கள் என்றால், குறித்த புதியவர் தனக்கான விருப்பு வாக்கில் ஒன்றைத் தன்னை உள் நுழைத்தவருக்கு விசுவாசமாகப் பரிந்துரைப்பார் என்ற ஒரேயொரு நம்பிக்கை மட்டுமேயாகும். இதன் மூலம் புதிதாகச் சேர்ந்தவரால் கிடைக்கப்பெறும் மேலதிக இரண்டாயிரமோ ஐந்தாயிரமோ வாக்குகள் ஏற்கெனவே உறுப்பினராக இருந்தவருக்கே போய்ச் சேரும்.

அதற்காக அக் கட்சியில் இருக்கும் ஏனைய வேட்பாளர்கள் இவர்களை அப்பிடியே விட்டுவிடுவார்கள் என்றும் இந்தப் புதியவரால் கிடைக்கப்போகும் அந்த மீதி விருப்புவாக்குகளுக்காக தமக்குள் அடிபடமாட்டார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. அதனை இம்முறை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பாக யாழ். தேர்தல் தொகுதியில் களமிறக்கப்பட்டிருக்கும் சசிகலா அவர்களின் "நான் பங்கேற்கும் நிகழ்வுகளை விளம்பரமாக்கி, நான் தங்களுக்கு மட்டுமே ஆதரவாகப் பிரசாரம் செய்வது போன்ற விம்பத்தை உருவாக்கி, நான் ஏனைய வேட்பாளர்களுடன் பேணும் சுமுகமான உறவைச் சிதைக்க முயல்கிறார்கள்" என்ற கூற்று உறுதிப்படுத்துகிறது. இந்தத் தேர்தல் அரசியலின் அடிப்படையையே வேட்பாளர்களின் விருப்புவாக்குகளுக்கான போட்டிதான் என்பதையே புரியாமல் களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார் என்பதை நினைக்கக் கவலையாக இருக்கிறது.

இந்த ஒரு காரணத்துக்காகவே இதுகாலவரைக்கும் எலியும் பூனைகளுமாக இருந்த மாவை, சுமந்திரன், சிறீதரன் மூவரும் கூட்டணியமைத்து இந்தத் தேர்தலில் விருப்புவாக்குகளைக் சேகரிக்கச் செல்வதை அவதானிக்க முடியும். தேர்தல் முடிந்ததும் மீண்டும் எலி - பூனைகளாகி, அவர் இதைச் செய்தார், நான் இதைச் செய்ய அவர்தான் விடவில்லை என்றுகொண்டு மக்களை மீண்டும் ஏமாற்றத் தொடங்கிவிடுவார்கள் என்பது வேறு கதை. ஆனால், தேர்தல் கள யதார்த்தம் இதுதான்.

அடுத்ததாக, சசிகலா அவர்கள் "பெண்களின் அரசியல் பிரவேசம் அவசியம் என்பவர்கள் அவர்களை சுயாதீனமாக இயங்க அனுமதிக்க வேண்டும்" எனவும் கூறியிருந்தார். ஒருவேளை இதே பகுதியில் தீவிர பிரசாரம் செய்துகொண்டிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரான உமாசந்திரப் பிரகாஷுக்கு வழங்கப்படும் சுதந்திரத்தில் ஐந்து சதவீதமேனும் தனக்கு வழங்கப்படவில்லை என நினைத்திருக்கலாம். எனக்கு உமாவுடன் அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துவேறுபாடுகள் இருப்பினும், அவர் இன்று அரசியலில் தனக்கென்று பெற்றுக்கொண்ட நிலை ஏதோ திடீரென்று கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியதல்ல. அதைப் பெறுவதற்கான கடின உழைப்பும் திட்டமிடலும் அவரிடம் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறது. சரியோ தவறோ தனக்குக் கொடுக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் அனைத்தையும் தனக்குச் சாதகமாகவே பயன்படுத்திப் பயணித்துக்கொண்டிருக்கிறார். தமிழரின் பிரதான கட்சிகளின் பெண்வேட்பாளர்களின் சில சிறுபிள்ளைத்தனமான கருத்துகளைப் பார்த்தால் உமாவின் திறமை அரசியலில் ஏனைய பெண்களுக்கு வரவே இன்னும் பல காலமெடுக்கும் போலிருக்கிறது.

பணம் கொழிக்கும் நிறுவனங்களுக்கு அரசியல் கூட ஒருவித முதலீடுதான். ஆனால், புலம்பெயர் நிறுவனங்களோ அல்லது சொந்த மண்ணிலுள்ள நிறுவனங்களோ அவர்களின் பணத்தைப் பெற்று அதை நாம் எப்படி மக்களுக்காகப் பயன்படுத்தி, நாமும் சாதிக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது எமது ஆளுமை. அந்தவகையில் கூட்டமைப்புக்கு மட்டுமல்ல வேறெந்த வடக்குத் தமிழ் அரசியல் கட்சிகளுக்குமே பணம் வாங்குவதில் இருக்கும் ஆர்வம் அதனைப் பயன்படுத்தி மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என நினைப்பதில் இல்லை. அதற்கான ஆளுமை இல்லை. ஒற்றுமையும் இல்லை.

வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட 21 கோடிக்கு என்னவாயிற்று என்று துணிச்சலுடன் கேட்ட தமிழரசுக்கட்சியின் ஆரம்பகால உறுப்பினர், சிறந்த பேச்சாளர், மகளிரணியின் செயலாளர் விமலேஸ்வரி தொடக்கம் அரசியலில் ஆண்களுக்கு சரிசமனாக மல்லுக்கட்டி நிற்கக்கூடிய துணிச்சலுள்ள தமிழரசுக் கட்சியின் கொழும்பு பிரதித் தலைவர் மிதிலா வரை கட்சியில் ஏற்கெனவே இருக்கக்கூடிய சில ஆளுமைமிக்க பெண்களைப் புறம்தள்ளி வைத்துவிட்டுத்தான், தன்னைப் புதிதாகத் தேர்தலுக்காகப் பட்டம்கட்டிக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பதை சசிகலா தெளிவுறப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதிர்த்துக் கேள்வி கேட்கும் பெண்கள் எவரும் தமக்கான விருப்புவாக்குகளைப் பெற்றுத்தரமாட்டார்கள் என்பதை விட, ஆளுமையுள்ள பெண்களால் எதிர்காலத்தில் தமது ஆசனத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என்பது பதவியிலிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, பெண்களது பிரச்சினைகள் என்று வரும்போது அதுவரை தமக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கும் ஆண்கள் கூடத் தமக்குள் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து பெண்களை வெளியே தூக்கிப் போட்டுவிடுவார்கள். பிரதான கட்சிகளில் போட்டியிட நினைக்கும் ஒவ்வொரு பெண்களுமே இந்த நிதர்சனத்தைச் சரிவரப் புரிந்துகொள்ளவேண்டும்.

அடுத்து, இங்கே சசிகலாவின் இன்னொரு கருத்தான "தமிழ்த் தேசிய நீக்க அரசியலை ஊக்குவிக்கும் முகமாக எந்தக் கூட்டத்திலும் நான் கலந்துகொள்ளவில்லை" என்ற கூற்று, தமிழ்த் தேசிய நீக்க அரசியலை நோக்கிய சிலரது பயணம் தேர்தல் காலத்தில் கூட வெற்றிகரமான ஒரு குறித்த கட்டத்தை எட்டிவிட்டிருப்பது புலனாகிறது. சமீபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் பஸீர் காக்கா சொல்லியது போலவே இம்முறை ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துபவர்களின் வெற்றி என்பது தமிழர் மத்தியில் தமிழ்த் தேசிய நீக்க அரசியலை துரிதப்படுத்துவதில் இனிவரும் காலங்களில் பிரதான பங்கு வகிக்கவிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

அப்போது தமிழீழ விடுதலைப் போராட்டங்கள் தற்காப்புக்காக எமது இனத்தைக் காப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டன என்றில்லாமல், சிங்களை மக்களை அழித்தொழிக்கவே அயல் நாடுகளின் உதவியுடன் உருவாக்கப்பட்டது என்றும் கதைகள் புனையப்படும். இவையெல்லாவற்றையும் கேட்டுக் கொண்டும் மக்கள் மீண்டும் தேசிய தலைவர் உருவாக்கினார் என்ற ஒரே காரணத்துக்காக கூட்டமைப்புக்கு வாக்குப் போட்டுக் கொண்டிருக்கத்தான் போகிறார்கள்.

இந்த உறுப்பினர்கள் கூட்டமைப்பைவிட்டு வெளியே போனால் ஒரு வாக்குக்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்று மக்களுக்கும் தெரியும், அவர்களுக்கும் தெரியும். அப்படியிருந்தும் மானம், ரோசம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு தாங்கள் அடியோடு எதிர்க்கும் வன்முறையைக் கையிலெடுத்த போராட்ட அமைப்பு ஒன்று உருவாக்கிய கூட்டமைப்பில் தேர்தலில் போட்டியிட முடிந்தால்... அதே கட்சியில் காலம்காலமாக விசுவாசத்துடன் இயங்கிவந்த ஒரு பெண் வாங்கிய தங்களது மானம் ஆயிரம் கோடியென ஏலம்விட முடிந்தால்... பெண்கள் மட்டும் தம்மீதான விமர்சனங்களையும் தடைகளையும் கண்டு எதற்காகக் கூனிக் குறுகி அச்சப்பட்டு ஒதுங்க வேண்டும்?

சுற்றிவளைத்துப் பேசுதலும், சுற்றிச் சுற்றிப் பேசுதலுமே சாணக்கியமாகக் கருதப்படும் இன்றைய அரசியல் களத்தில், நேர்படப் பேசுதல் சாணக்கியம் அல்ல. எனவே, சசிகலா அவர்களே! உங்கள் இன்றைய நிலை வருந்தத் தக்கது தான். அதிலும் குறிப்பாக "கட்சியின் மகளிர் அணி உட்பட சகல பெண்கள் அமைப்புகளின் ஆதரவைக் கோரும் எனக்குச் சிலர் தடையை ஏற்படுத்துவதால் எனக்கு ஆதரவு அளிக்க நினைக்கும் பெண்களுக்கு இது ஒரு சவாலாகக் காணப்படுவதாக" கூறியிருப்பது வேதனைக்குரியது. தமது கட்சியின் ஒரேயொரு பெண் வேட்பாளருக்குக் கூட உதவமுடியாமல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் மகளிரணியின் கையறுநிலையானது, பெண்களின் பிரதிநிதித்துவத்தை தேர்தலில் நேரடியாகப் போட்டியிடுவதன் மூலம் கொண்டுவருவதற்கான எந்தவொரு கொள்கையும் குறித்த கட்சியின் சமீபத்தைய நிகழ்ச்சி நிரலில் இல்லை என்பதையே தெளிவுறச் சுட்டி நிற்கிறது. அதற்குச் சென்றமுறை மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்ட அனந்தியின் பாரிய வெற்றி தந்த அச்சம் கூட ஒரு காரணமாக இருக்கக்கூடும். இதனை இந்தத் தேர்தலில் வாக்களிக்கப்போகும் ஐம்பத்தியாறு சதவீத பெண் வாக்காளர்களும் சரிவர உணர்ந்துகொண்டு தமது வாக்குகளை அளிப்பது சாலச் சிறந்தது.
 

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நேர்பட-உரைத்தல்/91-253309

  • கருத்துக்கள உறவுகள்

 
யாழ் இணையத்தில் இணைக்கப்பட்ட இவரது மூன்று கட்டுரைகளும் 1- தேர்தல் களத்தில் பெண்கள், 2- ஆளுமையா? அனுதாபமா?, மற்றும் 3- நேர்பட உரைத்தல்.. இந்த மூன்று கட்டுரைகளும் இலங்கையில் இன்றைய அரசியலில் ஏற்கனவே இருக்கின்ற மற்றும் புதிதாக நுழைய இருக்கின்ற பெண்களின் நிலையை தெளிவுபடுத்துகிறது. இந்த மூன்று கட்டுரைகளும் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டிருந்தாலும் பெண்
அரசியல்வாதிகளுக்கு சந்தர்ப்பங்களை வழங்க வேண்டிய காரணத்தை, அவசியத்தை தெளிவாக வலியுறுத்துகிறது. 

இலங்கை அரசியலில் பெண் அரசியல்வாதிகளின் விகிதசாரம், அவர்களுக்கு எத்தகைய சந்தர்ப்பங்கள் வழங்கப்படுகிறது, அவர்கள் எதிர்நோக்கும் தடைகள், பெண் வேட்பாளர்களை நோக்கிய ஆண் அரசியல்வாதிகளின் மனோபாவம் மற்றும் பெண் வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பொதுவெளியில் எவ்வாறு பார்க்கப்படுகிறது.. என்பதை தேர்தல்களத்தில் பெண்கள் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

இரண்டாவது கட்டுரையான ஆளுமையா? அனுதாபமா? .. இதில் பெண் வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் கூட பின்பு எவ்வாறு கட்சி நலன், ஆசனபங்கீடு மூலம் காணமல் போகிறது என்பதையும்..ஆசனப்பங்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகிறது விளங்கப்படுத்துகிறது. ஆசன வாய்ப்பை பெறுவதற்காக எவ்வளவு தூரம் வளைந்து கொடுக்கவேண்டும் என்பதை கூறுவதால் விகிதசாரத்தில் அதிகளவில் உள்ள பெண் வாக்காளர்கள் தங்களது வாக்குசீட்டின் வலிமையை உணர்ந்து கொள்ள அறிவுறுத்துகிறது.

நேர்பட உரைத்தலில், பெண் அரசியல்வாதிகளின் தன்மை, சுபாவம் எவ்வாறு வேறுபடுகிறது, இதனாலேயே இவர்களுக்கான சந்தர்ப்பங்களை இழக்கிறார்கள் என்றும்.. அதே நேரத்தில் எப்படி மற்றைய அரசியல்வாதிகளால் கைப்பொம்மையாக பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை கூறுகிறது. பெண்வேட்பாளர்கள் இதனை உணர்ந்து தமது ஒட்டுமொத்த பெண் சமூகத்தையும் பிரதிநிதிப்படுத்துவதன் அவசியத்தை கூறுகிறது..

இவரது மூன்று கட்டுரைகளும் பெண் அரசியல்வாதிகளின் தேவையை, அவர்கள் செய்யவேண்டியவற்றை எடுத்துக்கூறினாலும், இந்த கட்டுரையும் அதன் விஷயங்களும் முழுமையாக எல்லா மக்களிடமும் சென்றடைந்தால் மட்டுமே இவர் எதிர்பார்ப்பது நிறைவேறும்.

அதுமட்டுமல்ல தன்னம்பிக்கை, ஆளுமையைடைய பெண்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்கி அவர்கள் அரசியலில் நுழைந்தாலும் இலங்கையில் உள்ள சமூகங்களுக்கிடையில் ஊறியிருக்கும் சில மனநிலைகள், பழக்கவழக்கங்கள் மாற வேண்டும். அப்படி நடந்தால் மாற்றங்களும் நீண்ட தூரத்தில் இல்லை. 

கட்டுரைகளை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.