Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தமிழ் வாசகர் ஒருவரிற்கு ஜெயமோகனின் பதில்

Featured Replies

 

 
 
 
அ.முத்துலிங்கம் பற்றிய ஜூம் சந்திப்பில், ஒரு வாசகர்.. முந்திரிக்கொட்டைத்தனமாக ஏதோ பேசியிருக்கிறார் போலிருக்கிறது. அதைப் பற்றி ஜெ. தளத்தில் அவரது வாசகர்கள் விமர்சித்து வைக்க…
இவரோ ‘சார்.. என்னைக் கிள்ளிட்டாங்க சார்” என்று ஜெயமோகனிடம் பிராது எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயமோகனோ.. இரக்கமே இல்லாமல் சுத்தியலை எடுத்து அவரின் நடு மண்டையில் ‘நச்’சென்று இறக்கியிருக்கிறார்- (சு க f-b)

########################################################################################################################

அன்பின் எழுத்தாளர்  ஜெயமோகன் அவர்களுக்கு ,

ஈழத்து மூத்த எழுத்து ஆளுமைகளில் ஒருவரான அ .முத்துலிங்கம் அவர்களுடனான காணொளி உரையாடல் சனிக்கிழமை ,ஜூலை  25,2020 அன்று தங்களின் விஷ்ணு புரம் வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற பொழுது கனடாவிலிருந்து கலந்து கொண்ட இலங்கை தமிழர் நான் தான் .

தமிழ் மொழி பேசுபவர்கள் எல்லாம் தமிழர்கள் தான்.அதில் இலங்கை, மலேசியா ,இந்தியா ,சிங்கப்பூர் எனும் பாகுபாடில்லை .நான் முத்துலிங்கம் ஐயாவின் இரண்டு ,மூன்று கதைகள் தான் படித்திருந்தேன் .அதை வைத்து கேள்வியை தயார் செய்திருந்தேன் .ஆனால் ஜூம் மீட்டிங் எனக்கு அவ்வளவு தூரம் பழக்கமில்லாத ஒரு விடயம் . அதனால் தான் கூடுதல் உளறிக்கொட்டிவிட்டேன்.

தமிழ் ஆர்வம் உள்ளதினால் தான் அதில் கலந்து கொண்டேன் .நான் இலங்கையில் பத்தாம் வகுப்பு வரை தான் தமிழ் படித்திருக்கிறேன். தங்களுடைய வாசகர்கள் போல், உங்களைப்போல்  தமிழ் இலக்கியம் அறிந்தவனில்லை .ஆனால் தங்களுக்கு ஒரு சில வாசகர்கள் என்னைப் பற்றி கடிதம் எழுதியிருந்ததைப்பார்த்தபொழுது மிகவும் மனம் வேதனை அடைந்தேன் .அ.முத்துலிங்கம் காணொளி உரையாடல்

அந்த கடிதம் இப்படி எழுதப்பட்டுள்ளது . “ஆனால் சில குறைகள். இவை பொதுவானவை. எதையுமே வாசிக்காத ஒருவர், இலக்கியச்சூழலிலேயே இல்லாதவர், கனடாவிலிருந்து உள்ளே வந்துவிட்டார். அவர் ஈழத்தவர் ஆதலால் உங்களுக்கு அவரை தெரிந்திருக்கவில்லை.உங்களால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. அவர் நாலைந்து வரி சொன்னதுமே வெட்டிவிட்டிருக்கவேண்டும். அவரை அவ்வளவு உளறவிட்டது பெரிய தப்பு” இதை ஸ்ரீனிவாஸ் என்னும் வாசகர் எழுதியிருக்கின்றார் .

என்னைப்போல் தமிழ் அரை குறை தெரிந்தவர்களின் நிலை என்ன? தங்களைபோன்ற தமிழ் எழுத்தாளர்கள் மனதில் எங்களைபோன்றவர்களின் இடம் எங்கேயுள்ளதென்று தெரியவில்லை ஐயா? இவரைபோன்று எழுத்தாளர் நாகராஜன் கொஞ்சம் நாகரீகமாக எழுதியிருக்கின்றார் .”ஒரே ஒரு விதிவிலக்கு கனடாவிலிருந்து கேட்ட இலங்கைத் தமிழர். அவர் இந்த வட்டத்துக்குரியவரே அல்ல. அவரை ஒன்றும் செய்யவும் முடியாது”

ஆகவே என்னை எந்த வட்ட த்தில் தாங்கள் சேர்த்துக்கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? ஐயா. நான் உளறதொடங்கியதும் வெட்டி விட் டிருக்கவேண்டுமா? அல்லது திருத்தியிருக்கவேண்டுமா? இதற்கு தங்களின் பதில் என்ன வென்று தெரியவில்லை

“யாதும் ஊரே யாவரும் கேளீர்”  என்று  கணியன் பூங்குன்றன் எ னும் எங்கள்முன்னோன் சொன்னான் என்று தாங்கள் அடிக்கடி  சொல்வதெல்லாம் சும்மா பொய்யா? அல்லது பழங்கதையா?

நான் மலையாள சூழலில் கேரளத்தில் 1980 காலப்பகுதியில்   படித்து வந்துள்ளேன். அந்த மலையாளச் சூழல் இப்படி பட்டதில்லை.நம்மை சொல்லிக்கொடுத்து திருத்தும் பண்பு அவர்களிடம் நிறைய உள்ளதை நான் அனுபவபூர்பவமாக கண்டு மகிழ்ந்திருக்கின்றேன்.அதிலொன்று திருவனந்தபுரத்தில் எழுத்தாளரும் ,கவிதாயினியுமான  திருமதி மாதவிகுட்டி கமலதாஸ் அவர்களை ,கேரள கௌமுதி பத்திரிகையின் புகைப் படப் பிடிப்பாளர் திரு .சங்கரன் குட்டி அவர்களுடன் சென்று சந்தித்தது இன்றும் என் மனதில் அழியா நிழல் படம் போல் இருக்கின்றது.

இம் மடல் பார்த்து தங்கள் வாசகர் வட்ட ங்களுக்கு இதனை எடுத்துரைப்பீர்கள் என்று நம்புகின்றேன் .பிறந்து மண்ணில் வீழ்ந்ததும் யாரும் மேதைகளாய் வருவதில்லை .உங்களைப்போன்ற எழுத்தாளர்களின் பனுவல்களை எழுத்தெண்ணி படிப்பதன் மூலம் தங்களின் அறிவையும்,அனுபவத்தையும் பெற்றுக்கொள்கின்றான்.

தங்களுக்கு ஏதாவது சிரமம் கொடுத்திருந்தால் மன்னிக்கவும் .

நன்றி

வணக்கம்

அன்புடன் ,

சிவா .பாலசந்திரன்

கனடா .

 

அன்புள்ள சிவா

நீங்கள் நேரடியாக எழுதியபின் இதை விரிவாகப் பேசியே ஆகவேண்டும். கடுமையாக இருந்தால் மன்னிக்கவும், இது இங்கே பொதுவாகப் பேசவேண்டிய விஷயம்

‘அவையத்து நாணுதல்’ என்பது ஒரு பண்புநலனாகவே தொன்றுதொட்டு தமிழ்ச்சூழலில் சொல்லப்பட்டுவருகிறது. அது என்ன? சான்றோர் முன் பிழையாக வெளிப்பட்டுவிடாமலிருக்கும் எச்சரிக்கைநிலை. அவையிலுள்ளோர் முன் குறைவாக தோன்றக்கூடாது என்னும் கவனம். இது கற்றல்நிலையில் மிக அவசியமான ஒன்று. எந்த அவைக்கும் இது பொருந்தும்.

அவைநாணுதல் ஏன் தேவை? அது நாம் மேலும் கற்பதன்பொருட்டே தேவையாகிறது. கல்வியில் நமக்குத் தேவையான முதல்தேவை என்பது நமக்கு என்னென்ன தெரியாது, நம் நிலை என்ன என்னும் தன்னுணர்வுதான். அறியாமையை அறியாதோர் அறிவையும் அறியமுடியாது. அறிவதற்கான கூர்மையும் முயற்சியும் உருவாகவேண்டும் என்றால் நாம் அறியாதவை எவை என்று நமக்குத்தெரியவேண்டும்.

அது ஒருவகை பணிவுதான். நாவை அடக்கிச் செவியை திறந்து வைத்திருத்தல். எங்கும் நம்மை முன்வைப்பதற்குப் பதிலாக நமக்கு கற்பிக்கக்கூடியவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை அளித்து நாம் கற்பவராக அமர்ந்திருத்தல். பெரிய அவையையும் பெரியவர்களையும் நம் ஆசிரியர்களாக எண்ணுதல். மேலதிகாரிகள் முன் பணிகிறோமே, கொஞ்சம் ஆசிரியர்கள் முன்னும் பணிந்தால்தான் என்ன?

நம் சூழலில் அவைப்பணிவு என்னும் வழக்கம் மிகக்குறைவு. உண்மையில் இதை இன்றைய தலைமுறையில் எவருமே நமக்குச் சொல்லித்தருவதில்லை. நான் முன்பு எழுதிய ஒரு அனுபவக்குறிப்பில் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தேன். அ.கா.பெருமாளுடன் நான் ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்தேன். எங்கள் பேச்சைக் கேட்ட ஒரு பயணி அ.கா.பெருமாள் யார் என்று கேட்டார். தமிழகத்தின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர், அரசு விருதுபெற சென்னை செல்கிறார் என்று நான் சொன்னேன். அவர் சுசீந்திரம் ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார் என்றேன்

அந்தப்பயணி ஒரு கேள்விகூட அ.கா.பெருமாளின் ஆய்வுகள் பற்றி கேட்கவில்லை. சுசீந்திரம் பற்றி அவருக்குத்தெரிந்த ஆரம்பச்செய்திகளை நீட்டி நீட்டிச் சொல்ல தொடங்கினார். அ.கா.பெருமாளை பேசவே விடவில்லை. ஒரு கட்டத்தில் கடும் சினம் அடைந்த நான் ‘உன் வாழ்நாளில் ஒரு ஆய்வாளரை பார்த்திருக்கிறாயா? அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட உனக்கு தெரிந்துகொள்வதற்கு இல்லையா?’ என்றேன்

அந்நிகழ்வைப்பற்றி பேசும் ஒருவர் முரட்டடியாக ‘ஏன் ஒரு சாமானியன் பேசக்கூடாதா?’ என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் நமக்கு ஏன் ஓர் அவையிலிருந்து, ஓர் அறிஞனிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுவதே இல்லை? ஏன் நாமே பேசிவிடவேண்டும் என்று தோன்றுகிறது? அந்த மனநிலையை நாம் கண்காணிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். நம்மை பாமரர்களாக நிலைநிறுத்துவது அதுதான்

யோசித்துப் பாருங்கள், அ.முத்துலிங்கம் அவர்கள் அவருடைய படைப்பை வாசித்த வாசகர்கள் உலகம் முழுக்க கூடியிருக்கும் ஒரு சந்திப்பில் பேசுகிறார். வெறும் இரண்டு மணிநேரம். அது வாசகர்களுக்கு மிகமிக மதிப்பு மிக்கது. அதை ஒருங்கிணைக்க பலர் உழைத்திருக்கிறார்கள். அதில் கூடுமானவரை அவர்தான் பேசவேண்டும். அவரிடம் அவர் படைப்பை படித்தவர்கள் கேள்விகேட்கவேண்டும். அவர்களேகூட சுருக்கமாகவே கேட்கவேண்டும்

ஆனால் அவருடைய இரண்டு கதைகளை மட்டும் பள்ளிநூலில் படித்து, அவரைப்பற்றி எதுவுமே தெரியாத நீங்கள் நீண்டநேரத்தை எடுத்துக்கொண்டு எதையெல்லாமோ பேசுகிறீர்கள். அவருடைய சந்திப்புக்கு வருவதற்குமுன் இணையத்திற்குச் சென்று ஒரு பத்துக் கதைகளை நீங்கள் வாசித்திருக்கலாம். அவருடைய இணையதளத்தைப் போய் வாசித்திருக்கலாம். அந்த ஆர்வமே உங்களிடம் இல்லை.

அதோடு அந்த அவையில் வாசிக்கவில்லை என்று சொல்வது ஒரு குறைவு என்றுகூட உங்களுக்குத் தோன்றவில்லை. வாசிக்கவில்லை என்று ‘வெளிப்படையாக’ச் சொல்வது தவறா என்று கேட்கலாம். வாசிக்காத ஒருவர் வாசிக்கும் நோக்கத்துடன் அமைதியாகச் செவிகொடுத்து அமர்ந்திருந்தால், அவரிடம் கேட்கும்போது வாசிக்கவில்லை என வெளிப்படையாகச் சொன்னால் அது தவறில்லை. ஆனால்  ‘அவையில் பேசுவேன், ஆனால் வாசிக்கவில்லை’ என்று சொல்வது கண்டிப்பாக நாணத்தக்கதுதான். ஏனென்றால் வாசித்தவர்களுக்கான அவை அது.

அந்த விவாதத்தை கவனித்திருந்தாலே நீங்கள் பலவற்றைக் கற்றுக்கொண்டிருக்கலாம். அந்த அக்கறையும் உங்களுக்கு இல்லை. நீங்கள் எதையும் அவரிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளவுமில்லை. நீங்களே நேரத்தை எடுத்து பேசிக்கொண்டிருந்தீர்கள்.

அ.முத்துலிங்கம் தமிழகத்தில் இன்றிருக்கும் எழுத்தாளர்களில் முதன்மையானவர்.மிகப்பெரிய இடத்தில் அவரை வாசகர்கள் வைத்திருக்கிறார்கள். அந்தச் சந்திப்பிலேயே அவர்மேல் வாசகர்கள் கொண்டிருந்த பெருமதிப்பு வெளியானதை நீங்கள் கண்டிருக்கலாம். ஒரு தலைமுறைக்கு ஓரிருவர் மீதுதான் அத்தனை பெருமதிப்பு உருவாகிறது. தமிழகத்தின் எழுத்தாளர்கள் பலர் வந்து அவருடைய வாசகர்களாக அமர்ந்திருந்த அவை அது

நெஞ்சைத்தொட்டு யோசித்துப்பாருங்கள், நீங்கள் பேசியது அந்த மாபெரும் படைப்பாளி மீதான மதிப்புடனா? அவரை பெருமைப்படுத்தும் விதமாகவா நீங்கள் கேள்வி கேட்டீர்கள்? நீங்கள் விரும்பாவிட்டாலும் நீங்கள் இலங்கைத்தமிழர். இலங்கைத்தமிழரின் குரலாகவே தமிழகத்தில் உங்க்ளை அடையாளம் காண்பார்கள்.

நீங்கள் படித்தவர், ஒரு வளர்ந்த நாட்டில் இருக்கிறீர்கள். தயைகூர்ந்து கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உலகம் முழுக்க இருந்து தங்கள் நேரத்தைச் செலவிட்டு அந்த சந்திப்பில் அமர்ந்திருப்பவர்கள் எத்தனை முக்கியமானவர்கள். அவர்களின் நேரத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்ள முடியும்? நீங்கள் பேசுவதை அவர்கள் ஏன் கேட்டுக்கொண்டிருக்கவேண்டும்?

நாம் பேசவேண்டிய அவைகள் என்ன, நாம் கற்றுக்கொள்ளவேண்டிய அவைகள் என்ன என்பது எப்போதுமே முக்கியமானது. நீங்களே எண்ணிப்பாருங்கள், நீங்கள் செயல்படும் துறையில் ஒரு நிபுணர் பேசும்போது அந்தத்துறை பற்றி ஒன்றுமே தெரியாத ஒருவர் உள்ளே புகுந்து, எதையுமே கற்றுக்கொள்ள முற்படாமல், அவரே பேசிக்கொண்டிருந்தால் அவரை எப்படி நீங்கள் நடத்துவீர்கள்?

நாம் நமது குரல் கவனிக்கப்படும் என்ற உறுதி உள்ள அவையிலேயே பேசவேண்டும். அதை நாமே உறுதிசெய்துகொள்ளவும் வேண்டும். நம் குரலுக்கு செவியில்லாத அவையில் பேசுவது நம்மைக் கேலிப்பொருளாக ஆக்குவது. நாம் கற்கவேண்டிய அவையில் நம் செவிகள் திறந்திருக்கவேண்டும். நமக்கு கேட்டேயாகவேண்டிய கேள்வி இருக்கும் என்றால்கூட குறிப்பாக, சுருக்கமாக அதை முன்வைக்கவேண்டும்

ஓர் ஆடை அணியும்போதுகூட அதைப்பற்றி பிறர் என்ன நினைப்பார்கள் என எண்ணுகிறோம். ஓர் அவையில் பேசும்போது ஏன் அதை எண்ணமாட்டேன் என்கிறோம்? அக்கடிதங்களை நான் வெளியிட்டதே ஒவ்வொருவரும் பிறர் நம்மை கவனிக்கிறார்கள் என்று உணரவேண்டும் என்பதற்காகத்தான். அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள் என்று தயங்கவேண்டும் என்றுதான்.

பிறர்முன் கேலிப்பொருளாகிவிடக்கூடாது என்பது ஒரு முக்கியமான தன்னுணர்வு. அதுதான் இங்கிதம் என்று சொல்லப்படுகிறது. அது கருத்துச்செயல்பாடுகளிலும் தேவை.

மலையாளம் பற்றிச் சொன்னீர்கள்.1987ல் கமலாதாஸ் கலந்துகொண்ட ஒரு கூட்டத்தில் நானும் இருந்தேன். ஒரு வாசகர் கமலாதாஸிடம் ஒரு கேள்வி கேட்டார். ஓராண்டுக்கு முன் அந்த கேள்விக்கு தான் பதிலளித்திருந்ததாக கமலாதாஸ் சொன்னார். அதை தான் வாசிக்கவில்லை என்றார் அந்த வாசகர்.  ‘உனக்கு உண்மையான ஆர்வமிருந்தால் நான் அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லியிருக்கிறேன் என்பதை முதலில் தேடிப்பார்த்திருப்பாய், அதன்பிறகே இங்கே வந்து கேட்டிருப்பாய். உனக்கு என்னிடம் பேசும் தகுதி இல்லை’ என்று கமலாதாஸ் சொன்னார். அதன்பின் அவ்வாசகரிடம் முகம்கொடுக்கவே இல்லை.

மலையாளத்தில் மட்டுமல்ல நீங்கள் வாழும் கனடாச் சூழலிலும் கூட இதுதான் விதி. ஓர் அவை அதன் குறைந்தபட்ச தகுதியால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்குச் சில செயல்பாட்டுமுறைகளும் அதுசார்ந்த நெறிகளும் உண்டு. அவற்றை அறியாதவர்களுக்கு அச்சபைகளில் இடமில்லை.

கற்றுக்கொள்ளக்கூடாதா, பிறர் திருத்தக்கூடாதா என்று கேட்கிறீர்கள். கற்றுக்கொள்பவர் என்றால் முதலில் அந்த விவாதங்களில் என்ன பேசப்படுகிறது, அதன் தரம் என்ன என்று பார்த்திருப்பீர்கள் இல்லையா? திருத்தலாம், ஆனால் அதற்கான அவை அல்ல அது. புதியவாசகர்களுக்கான ஓர் அவை என்றால் கண்டிப்பாக திருத்தியிருப்போம்

அன்று நீங்கள் அரைநிமிடம் பேசியதுமே நீங்கள் வாசகர் அல்ல என்று தெரிந்தது, அக்கணமே உங்கள் ஒலித்தொடர்பை நடத்துநர் வெட்டியிருக்கவேண்டும். நடத்துநருக்கு நான் அவ்வாறு செய்தி அனுப்பினேன். அவர் புதியவர், அனுபவமில்லாதவர் என்பதனால்தான் நீங்கள் அவ்வளவு பேசமுடிந்தது. அது நிகழ்ச்சியின் ஒரு சிறு குளறுபடியேதான்.

நாம் ஜனநாயகம், சமத்துவம் என்பதை எல்லாம் தவறாகவே புரிந்துகொண்டிருக்கிறோம். அது தெளிவாகத் தெரிவது நம்கூட்டங்களில்தான். ஒரு மூத்த எழுத்தாளரை கூட்டிவந்து பேசவைப்போம். ஒருவர் எழுந்து அவருடைய நேரத்தை பறித்துக்கொண்டு தானே பேசுவார். கேட்டால் ஜனநாயகம், சமத்துவம் என்பார். அந்த மூத்தபடைப்பாளி தன் துறையில் சாதித்திருக்கிறார், அவருடைய கருத்தைக் கேட்கவே அவை கூடியிருக்கிறது, அந்த அவையில் ஒன்றும் தெரியாத ஒருவருக்கு சமமான இடம் உண்டா என்ன?

ஜனநாயகம் எங்கே வருகிறது என்றால் அவையில் இருக்கும் ஒவ்வொருவரையும் நாம் மதிக்கும்போதுதான். இந்த காலகட்டத்தில் ஆயிரம் வேலைகளையும் பொழுதுபோக்குகளையும் விட்டுவிட்டு ஓர் இலக்கியச் சந்திப்பில் வந்து அமர்ந்திருக்கும் ஒவ்வொருவரும் மிகமிக முக்கியமானவர்கள். அன்று அமர்ந்திருந்தவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. தமிழின் புகழ்மிக்க எழுத்தாளர்கள் பலர் அவர்களில் இருந்தனர். அவர்களுக்கு ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ளதாக ஆக்கி அளிக்கும் பொறுப்பு அமைப்பாளர்களாகிய எங்களுக்கு உண்டு. எங்கள் கடமை அவர்களிடம்தான். அதுதான் ஜனநாயகம் என்பது.

இந்த அனுபவம் உங்களுக்கு வருத்தம் அளித்திருப்பதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் அந்த வருத்தம் ஆக்கபூர்வமான ஒன்று என்று கொள்ளுங்கள். அறிவியக்கம் என்பதும் இலக்கியம் என்பதும் மிகமிகத் தீவிரமானவை என்றும், தங்கள் வாழ்க்கையையே அதன்பொருட்டு முன்வைப்பவர்களால் நடத்தப்படுபவை என்றும், அதை அவ்வாறே அணுகவேண்டும் என்றும் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இதை எடுத்துக்கொள்ளுங்கள்.

அறிவியக்கத்திலும் இலக்கியத்திலும் நுழையவேண்டும் என்றால் அதற்கான உழைப்பையும் கவனத்தையும் அளிக்கவேண்டும் என்றும் முறையான தயாரிப்புகளுடனன்றி எங்கும் எழக்கூடாது என்றும் எண்ணிக்கொள்ளுங்கள். நாம் எழுந்து ஒரு சொல் சொன்னால் அவையே அதை கவனிக்கவேண்டும், அதை எவரும் புறக்கணிக்கக்கூடாது, அப்படி தன்னம்பிக்கை வந்தபின் பேசுங்கள். எந்த அவையிலும் நாம் குறைந்துவிடலாகாது என்னும் உணர்வினை அடைவதற்கான தொடக்கமாக அமையட்டும் இது.

நாங்கள் எவரையும் ஒதுக்குவதில்லை, புறக்கணிப்பதில்லை, எவரும் எவரைவிடவும் இயல்பிலேயே கீழானவரும் இல்லை. ஆனால் கூடுதலாக படித்தவர் மேலானவர்தான்.அவர் அடைந்த அந்த இடத்தை அடைவதற்கான முயற்சியும் கூருணர்வும் பிறருக்குத் தேவை. நீங்கள் தொடர்ந்து வாசிப்பீர்கள் என்றால், உங்கள் அறிதலை மேம்படுத்திக்கொள்ள முயல்வீர்கள் என்றால் நீங்கள் எங்களவரே

ஜெ

 

https://www.jeyamohan.in/136265/

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அபராஜிதன் said:
முந்திரிக்கொட்டைத்தனமாக ஏதோ பேசியிருக்கிறார் போலிருக்கிறது. அதைப் பற்றி ஜெ. தளத்தில் அவரது வாசகர்கள் விமர்சித்து வைக்க…
இவரோ ‘சார்.. என்னைக் கிள்ளிட்டாங்க சார்” என்று ஜெயமோகனிடம் பிராது எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயமோகனோ.. இரக்கமே இல்லாமல் சுத்தியலை எடுத்து அவரின் நடு மண்டையில் ‘நச்’சென்று இறக்கியிருக்கிறார்

காணொளியில் சிவா பாலச்சந்திரன் பேசிய சில நிமிடங்களையும்,  எழுத்தாளர் முத்துலிங்கம் அவர்களின் பதிலையும் பார்த்தேன். கனடாவில் இருந்துகொண்டே முத்துலிங்கம் அவர்களின் இலக்கியக் கூட்டங்களுக்குப் போயிருக்கவில்லை. எழுத்தாளரின் இரண்டு கதையை மகனின் தமிழ்ப்புத்தகத்தில் படித்ததாக வேறு சொன்னார். ஆனால் மு. தளையசிங்கத்தையும் அவர் எழுதிய மெய்யுள் நூலையும் அறிந்து வைத்திருக்கின்றார். படித்தாரோ தெரியவில்லை!

கேள்வியைத் தயார் செய்து சுருக்கமாகக் கேட்கவேண்டும், கேள்வி சுவாரசியமான, எழுத்தாளரை சிந்திக்க வைத்து பதில் கூறத்தக்கதாக இருக்கவேண்டும். ஆனால் இவர் சும்மா கேள்வி என்று ஏதோ கேட்கின்றார். எழுத்தாளர் முத்துலிங்கமும் நீட்டிமுழக்கி (அவரது கதைகளில் வருவதுபோல) ஏதோ ஒரு பதில் சொல்லுகின்றார். 

அவருக்கு அடுத்ததாக கேள்வி கேட்ட எடுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் குழந்தை வீரிட்டுக் கத்தியதால், சுனில் கேட்ட கேள்வியே முத்துலிங்கம் ஐயாவுக்குப் புரியவில்லை. ஆனால் பதில் என்று தனது கதை ஒன்றின் சாராம்சத்தைச் சொல்லுகின்றார். அக்கதையை நானும் முன்னர் படித்திருந்தேன். அதன் ஆழ அகலங்களைச் சொல்லாமல் வெறும் சாராம்சமாக பேசியது புதிதாக எதையும் கற்றுத்தரவில்லை.

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.