Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் – நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரண்டு சென்று வாக்களித்து சிதறிப் போன மக்கள் – நிலாந்தன்

August 9, 2020

nilaanthan-200x300.jpg

தெ
ன்னிலங்கையில் தனிச்சிங்கள அலை ஒன்றைத் தோற்றுவித்து ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு தேவையான பலமான அடித்தளம் ஒன்றைப் பெற்றிருக்கிறார்கள். எனினும் அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை முழுமையாக அடைவது என்றால் அவர்களுக்கு வடக்கு கிழக்கிலுள்ள அவர்களுடைய நண்பர்களும் இணைந்தால்தான் முடியும். இதை இன்னும் கூர்மையாக சொன்னால் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்தேசிய வாக்குத் தளத்தை உடைத்து அதிலிருந்து ஒரு தொகுதி வாக்குகளை மறைமுகமாக தாமரை மொட்டுக்குப் பெற்றுக் கொடுத்த வடக்கு-கிழக்கு மைய கட்சிகளும் இணைந்து தான் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை உருவாக்குகின்றன. அப்படி என்றால் தமிழ் மக்களின் வாக்குகளின்றி ராஜபக்சக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அடைய முடியாது. எனவே அதைத் தனிச் சிங்கள மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்று அழைக்கவும் முடியாது.

ஆனால் அவர்கள் அதை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையாகத்தான் காட்டப் பார்க்கிறார்கள். தாமரை மொட்டுக் கட்சி எனப்படுவது யுத்த வெற்றியை நிறுவனமயப்படுத்திக் கட்டி ஏழுப்பப்பட்ட ஒரு கட்சி. யுத்த வெற்றி வாதம் எனப்படுவது சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்தின் 2009 இற்குப் பின்னரான புதுப்பிக்கப்பட்ட வடிவம்தான். ராஜபக்சக்கள் ஓர் இன அலையத் தோற்றுவித்தார்கள்.அதை ஈஸ்டர் குண்டு வெடிப்பின் விளைவுகளை வைத்து 2019இற்குப் புதுப்பித்தர்கள். இப்பொழுது கோவிட்-19 ஐ வைத்து 2020இற்குப் புதுப்பித்திருகிறார்கள். மகிந்தவின் தேர்தல் வெற்றியுரையில் அது உள்ளது “சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்று நோயை வென்றது. மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்” என்று மகிந்த கூறுகிறார்.

 

001-11-1024x576.jpgஅந்த இன அலை மூலம் தெற்கில் வாக்குகள் திரட்டபட்டுள்ளன. ஆனால் தமிழ்ப் பகுதிகளிலோ வாக்குகள் சிதறிப் போயின. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி தமிழ்தேசிய நோக்கு நிலையைக் கொண்ட 3 கட்சிகள் வாக்குகளைப் பங்கிட்டன. இதனால் லாபம் அதிகம் அடைந்தது தமிழ்தேசிய நோக்கு நிலையைக் கொண்டிராத கட்சிகள்தான். அதிலும் குறிப்பாக ராஜபக்ஷக்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் கட்சிகள்தான்.

 

முதலாவதாக கூட்டமைப்புக்கே இதில் தோல்வி அதிகம். அக்கட்சி அதன் வரலாற்றில் கண்டிராத மிகப்பெரிய தோல்வி இது. தோல்விக்கான பொறுப்பு முழுவதையும் தமிழரசுக் கட்சியின் தலைமை மீதும் சுமத்தி விட சுமந்திரன் முற்படுகிறார். மாவை சேனாதிராஜாவின் இயலாமை நாடறிந்த ஒன்று. அவரிடம் தலைமைத்துவப் பண்பு இல்லை என்பது அவருக்கே தெரியும். அவருடைய இயலாமைதான் சுமந்திரன் கட்சிக்குள் இப்போது இருக்கும் நிலையை அடையக் காரணம். அப்படிப் பார்த்தால் ஒரு விதத்தில் சுமந்திரனின் இப்போதிருக்கும் எழுச்சிக்கு வழிவிட்டவரே மாவை சேனாதிராஜா தான். கட்சிக்குள் சுமந்திரன் வெற்றி பெறுவதற்கும் மாவையின் இயலாமையே காரணம்.

 

ஆனால் கட்சிக்குள் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட உடைவுகளுக்கு மாவை மட்டும் காரணம் அல்ல. சுமந்திரன் தான் முதன்மைக் காரணம். சுமந்திரனையும் சுமந்திரனின் எதிரிகளையும் மாவை கட்டுப்படுத்தத் தவறினார். இவர்கள் அனைவரையும் ஒரு மூத்த தலைவராக சம்பந்தர் கட்டுப்படுத்தத் தவறினார். எனவே தோல்விக்கு சம்பந்தரும் சுமந்திரனும் கூட்டுப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

தேர்தலில் சுமந்திரன் பெற்ற வெற்றி ஒப்பீடளவில் மகத்தான வெற்றியும் அல்ல. அந்த வெற்றியை வைத்துக்கொண்டு வெற்றி பெறாத ஏனைய கட்சி பிரமுகர்கள் மீது அவர் கட்சியின் தோல்விக்கான முழுப் பொறுப்பையும் சுமத்துகிறார். ஆனால் கட்சி இன்றைக்கு உட்கட்சிப் பூசல்களால் ஈடாடக் காரணம் முதலாவதாக சுமந்திரன். இரண்டாவதாக சுமந்திரனையும் அவருக்கு எதிரானவர்களையும் கட்டுப்படுத்தி கட்சியை ஒரு கட்டுக்கோப்பான அமைப்பாகப் பேணத் தவறிய மாவையும் சம்பந்தரும்.

 

கூட்டமைப்பு இழந்த ஆசனங்கள் அப்படியே கொத்தாக மாற்றுக் கட்சிகளுக்கு போய் இருந்திருந்தால் அது வேறு கதை. ஆனால் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அதை மாற்று அணி ஓரளவுக்குப் பெற்றுக்கொண்டது. அதேசமயம் கிழக்கில் நிலைமை அப்படியல்ல. தமிழ்த் தேசிய நோக்கு நிலையைக் கொண்டிராத கட்சிகள் குறிப்பாக தாமரை மொட்டுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் சேவகம் செய்யும் கட்சிகள் அங்கே வாக்குகளை அள்ளிக் கொண்டு போய் விட்டன. கிழக்கில் பிரதேச உணர்வுகளையும் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் திரட்டும் கருணா, வியாளேந்திரன், பிள்ளையான் ஆகிய மூன்று தரப்புக்கள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதில் கருணா வெற்றி பெறாவிடாலும் கூட்டமைப்பின் வெற்றியைத் தடுத்துள்ளார். மூன்றுமே தாமரை மொட்டின் சேவகர்கள் தான்.

 

இப்படிப் பார்த்தால் இது தாயகக் கோட்பாட்டுக்கு எதிரானது. வடக்கு கிழக்கு இணைப்புக்கு அதிகம் சோதனையான ஒரு வாக்களிப்பு. அதாவது தாயகக் கோட்பாட்டுக்கு அதிகம் சோதனை வந்திருக்கிறது. தாயகம் இல்லையேல் தேசியம் ஏது? எனவே கிழக்கின் உணர்வுகளைச் சரியாக கண்டுபிடித்து வழிநடத்தத் தவறிய கூட்டமைப்பு அத்தோல்விக்கு முழுப் பொறுப்பை ஏற்கவேண்டும். கடந்த 11 ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு ஒரு கிழக்குத் தலைவரே தலைமை தாங்குகிறார். அவருடைய காலத்தில் திருகோணமலையில் இரண்டு ஆசனங்களைக் கட்டி ஏழுப்ப முடியவில்லை. அவருடைய காலத்திலேயே மட்டக்களப்பில் இப்படி ஒரு பாரதூரமான வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. தோல்விக்கு பொறுப்பேற்று சம்பந்தர் என்ன செய்யப் போகிறார்? ஒரு கிழக்கு தலைவர் முழுத் தமிழ் இனத்துக்கும் தலைமை தாங்கிய 10 ஆண்டுகால அரசியலின் அறுவடை இதுதானா?

அதேசமயம் மாற்று அணிக்கும் இதில் பொறுப்பு அதிகம் உண்டு. கூட்டமைப்பு செய்வதெல்லாம் தவறு அதன் செயல்வழி பிழை என்று கூறிய மாற்று அணி கொள்கையை முக்கியம் என்று கூறியது. நேர்மையை முக்கியம் என்று கூறியது. அப்படி என்றால் கொள்கை அடிப்படையில் தாயகத்தை பாதுகாக்கக் கூடிய விதத்தில் ஏன் கடந்த 10 ஆண்டுகளாக அவர்களால் திட்டமிட முடியவில்லை? தேர்தலை மையப்படுத்தித்தான் அவர்களும் திட்டமிடுகிறார்களா? தேர்தல் அரசியலுக்கு வெளியே ஒரு வெகுசன இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான வழி வரைபடம் ஏதாவது மாற்று அணியிடம் உண்டா? யாழ்ப்பாணத்துக்கு வெளியே மாற்று அணியைக் கிளை பரப்பிப் பலப்படுத்தத் தவறிய இரண்டு மாற்று கட்சிகளும் அந்த தோல்விக்கு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் பொழுது வாக்குகள் தென்னிலங்கை கட்சிகளை நோக்கித் திரும்பும் அல்லது சிதறும் என்று ஏற்கனவே பல தடவை நான் எழுதி இருக்கிறேன். எனவே வாக்குகள் சிதறுவதைத் தடுப்பதற்கு ஓர் இன அலையை உற்பத்தி செய்து தமிழ்த் தேசிய வாக்குத் தளத்தை பாதுகாத்து வாக்குகளைக் கொத்தாகக் கவர்ந்திருக்க வேண்டும். அப்படி ஒரு தரிசனத்தோடு மாற்று அணி செயற்பட்டிருந்திருந்தால் முதலில் அவர்கள் தங்களுக்கிடையே குறைந்தபட்சம் ஒற்றுமைபடத் தயாராக இருந்திருக்க வேண்டும். ஒரு பெரிய கூட்டைக் கட்டியெழுப்பி இருந்திருந்தால் தமிழ் மக்கள் அதை நோக்கிக் கவரப்பட்டு இருந்திருப்பார்கள்.

மாற்று அணியிரண்டும் பெற்ற வாக்குகளைக் கூட்டிப் பாத்தால் தெரியும். இதில் கூட்டல் கழித்தலுக்கும் அப்பால் ஒரு வாக்களிப்பு உளவியலும் உண்டு.

இரண்டு மாற்றும் சேர்ந்து நின்றிருந்தால் அது வடக்கில் தமிழ்க் கூட்டு உளவியலை மாற்றியிருந்திருக்கும்.
கொள்கைகள் புனிதமானவை தான். ஆனால் சில சமயங்களில் ஐக்கியமே மிகப் பொருத்தமான மிகப் புனிதமான கொள்கையாக அமைவதுண்டு. இங்கு நான் கருதுவது சம்பந்தரும் சுமந்திரனும் கூறும் ஐக்கியத்தை அல்ல. தமிழ் தேசிய ஐக்கியத்தை. தமிழ் மக்களை ஒரு தேசமாக திரட்டுவதை.

கூட்டமைப்பைத் தோற்கடிக்கும் பொழுது வாக்குகள் சிதறி தென்னிலங்கை மையக் கட்சிகளை நோக்கிச் செல்வதைத் தடுக்கும் விதத்தில் மாற்று அணிகள் தங்களுக்கிடையே ஐக்கியப்பட்டத் தவறிவிட்டன. இதே தவறை மாகாணசபைத் தேர்தலிலும் விடுவார்களாக இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக அமையும்.

2009க்குப் பின் தமிழ் அரசியலில் நீண்ட கால திட்டமிடல்களைக் காணமுடியவில்லை. தீர்க்கதரிசனம் மிக்க வழி வரைபடங்களையும் காணமுடியவில்லை. இலட்சியங்களை அடைவதற்கு குறுங்கால உபாயங்கள் நீண்டகால உபாயங்கள் போன்றவற்றை வகுப்பதற்கு தேவையான சிந்தனைக் குழாம்களையும் காணமுடியவில்லை. கடந்த தேர்தலில் இருந்து நீண்ட கால நோக்கில் திட்டமிட்டு உழைத்திருந்தால் இம்முறை வாக்குகள் இப்படிச் சிதறி இருந்திருக்காது.

அது வாக்குச் சிதறல் என்ற பரிமாணத்தை கடந்து தேசியத் திரட்சிக்கு எதிரான உட்பிரிவுகள் அல்லது தேசிய நீக்க சக்திகள் நிறுவன மயப்படுவதைக் காட்டுகிறது. இது ஒரு ஆபத்தான வளர்ச்சி. இந்த இடத்தில் கூட்டமைப்பை தோற்கடித்தததைக் குறித்தோ அல்லது மாற்று அணிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தததைக் குறித்தோ வெற்றி கொண்டாடிக் கொண்டிருக்க முடியாது. மாறாக முழுத் தமிழினத்தையும் தோற்கடிக்க கூடிய வளர்சிகள் உருத் திரளத் தொடங்கிவிட்டன.

எட்டு மாதங்களுக்கு முன்பு ஜனாதிபதி தேர்தலின் போது ஓர் இனமாக திரண்டு நின்ற மக்கள் கடந்த 5ஆம் திகதி கட்சிகளாகவும் பிரதேசங்களாகவும் நலன்களாகவும் சிதறிப் போயிருக்கிறார்கள். வாக்களிப்புத் தினத்திலன்று காலையில் உற்சாகமாக மக்கள் திரண்டு சென்றார்கள். அதைப் பார்த்த போது சந்தோஷமாக இருந்தது.

போன நாடாளுமன்றத் தேர்தலைவிட அதிக வீத வாக்களிப்பு. ஆனால் திரண்டு சென்ற மக்களோ சிதறி வாக்களித்திருக்கிறார்கள்.
 

http://thinakkural.lk/article/61110

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.