Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் இனிவரும் காலங்களில் வெகுஜனப்போராட்டங்களாகப் பற்றி எரியுமா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் போராட்டம் இனிவரும் காலங்களில் வெகுஜனப்போராட்டங்களாகப் பற்றி எரியுமா ?

dis-23-696x522.jpg

 

சென்ற 30 /08/2020 அன்று தமிழீழமெங்கும் இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப் போராட்டங்கள் இந்த இறுதிக்காலாண்டுக்கான பேசுபொருளாக எழுந்திருக்கின்றதை அனைவராலும் உணரமுடிகின்றது. அதுமட்டுமன்றி இப்போராட்டமானது தமிழர் வாழும் புலம்பெயர் நாடுகளிலும் பெருமெடுப்பிலான கவனயீர்ப்புப் போராட்டங்களை அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் தன்னார்வத்துடன் முன்வந்து நடாத்தியிருந்தனர். இதில்  வடக்கு,கிழக்கு இணைந்த  தமிழர் தாயகப்பகுதியில் கட்சிபேதங்களின்றித்  தமிழ் அரசியல் தரப்பினர் பங்குபற்றி இருந்தமை வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

ஆனால் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரணமாக அமைதி வழியில் மேற்கொள்ளப்படவிருந்த இந்தப்போராட்டத்திற்கான முன் அனுமதியை மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி திருமதி அமலநாதன் அமலநாயகி அவர்கள் போராட்டத்திற்கு ஒரு வராத்திற்கும் முன்பாகவே பொலீசார் மற்றும் சுகாதாரசேவை அதிகாரிகளின் அனுமதிகளைப் பெற்று அதற்கான முறைப்படியான பத்திரங்களையும் பெற்றிருந்தார். ஆனால் ஒரு வழியால் அனுமதியை வழங்கிவிட்டு இன்னொரு வழியால் அந்தப்போரட்டத்தைத் தடை செய்யும் விதத்தில் நீதவான் நீதிமன்றில் தடையாணையையும் காவல்துறையினர் பெற்றுக்கொண்டிருந்தனர்.

Amala-nayagi-1.jpgஇதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் செயலணியினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்லடிப்பாலத்தடியில் இருந்து காந்திபூங்காவரையுமாக எதிர்ப்புப்பேரணியை நடாத்துவதாகத் திட்டமிட்டுள்ளனர். இதனால் பொதுப்போக்குவரத்திற்கு இடையூறினை ஏற்படுத்தல், கொரோணா நோய்த் தொற்றுப் பரவும் வாய்ப்புக்கள் உள்ளது என்று குறிப்பிட்டபின் விசேடமாகத் தாய்மாரின் செயற்பாடுகளால் விடுதலைப்புலிகள் மீழுருவாக்கம் செய்யப்படுவார்கள் எனக்கூறியிருப்பதுவும் அதற்குப் பாராமுகமாகச் சிங்கள நீதித்துறை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எதிர்காலம் மற்றும் உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் கையறு நிலை என்பவற்றைக் கொஞ்சமேனும் நினைத்துப்பார்க்காது மனிதாபிமான நியமங்களுக்கு எதிரானவகையில் இந்தத்  தடையாணையைப் பிறப்பித்துள்ளது.

அதிலும் குறிப்பாக1976 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கக் குற்றவியல் நடைமுறைச்சட்டப்பிரிவு 106 உட் பிரிவு 01 என்பது ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு “அவசரகாலத் தொல்லை வழக்குகளில் முழுமையான உத்தரவுகளை வழங்க அதிகாரம் அளிக்கிறது. “எந்தவொரு நபருக்கும் அல்லது மனித வாழ்க்கை, உடல்நலம் அல்லது பாதுகாப்பு அல்லது ஒரு கலவரம் அல்லது ஒரு அவதூறு ஆகியவற்றிற்கு இடையூறு, எரிச்சல் அல்லது காயம் ஏற்படுவதைத் தடுக்கவோ அல்லது  இது வழிவகுக்கும் என்று மாஜிஸ்திரேட் கருதுகிறார்.”

எனில் அவ்வாறான ஒரு அவசர கட்டளையை வழங்கமுடியும். ஆனால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் காலடியில் மண்டியிட்டுத் தங்கள் சொந்தங்களை  ஒப்படையுங்கள் என மன்றாடுவதற்கான ஒரு போராட்டத்தில் வலுவிழந்த தாய்மார்கள் அவ்வாறான செயற்பாடுகளில் இறங்குவார்களா ? என்பதைத்தன்னும் ஆய்ந்து பார்க்கப்படாமல் இந்தக்கட்டளை வழங்கப்பட்டிருந்தமை அரசின் அடக்குமுறை செயற்பாட்டையும் அடக்குமுறை நீதியையுமே காட்டுகின்றது.

இருப்பினும் எந்த ஒரு எளிய விலங்கின்மீதும் வலிமேல் வலிகளை ஏற்படுத்தும்போது அது இறுதியில் அதனது எதிர்ப்பை தீவிரமாக வெளிப்படுத்தும். அதவாது “கடும் முறுக்கு தெறிக்கும”என்பது போல் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சொந்தங்கள் விடயத்திலும் கிழக்கின் வரலாற்றில் முதன் முதலாக ஒரு சம்பவம் உலகின் கவனத்தை ஈர்க்கச்செய்துள்ளது என்றே கூறவேண்டும்.

அதாவது போராடிய உறவுகள் அனைவரையும பொலிஸ் தீவிரவாதம் குற்றப் பலாத்காரத்தின் மூலமாக  அவர்களை பலவந்தப்படுத்தி கல்லடிப்பாலத்தின் இறக்கத்தை அண்டிய சென் செபஸ்தியார் தேவாலத்தில் அடைத்து வைக்க முயன்றபோது  அவர்கள் தமது தீவிர எதிர்பினை வெளிப்படுத்தி பொலிசாரின் எதிர்புகளையும் மீறிவெளிக்கதவை உந்தித்தள்ளித் தடைகளை உடைத்து வீதிக்கு வந்து பெரும் கோசமிட்டு அரசிற்கு தங்களது எதிர்ப்பையும், உலகத்தின் மாயக்கண்களை திறக்கவும் செய்துள்ளது.இவையனைத்தும் நீதவான் நீதிமன்று தனது எதேச்சையான அதிகாரத்தில் வழங்கிய பிழையான கட்டளைத்தீர்ப்பால் எழுந்தது என்றே மறுவளமாக நோக்கப்பட வேண்டும்.

மேலும் 30/08/2011 அன்றைய ஐ.நா.மன்றப்பிரகடனமானது ஒவ்வொரு ஆண்டின் 08ஆம் மாதம் 30 ஆம் திகதியில் உலகநாடுகள் முழுவதற்கும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசபடைகளால் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து அரசுகளிடமும் ஐ.நா மன்றத்திடமும் தங்களின் உறவுகளை மீட்டுத்தருமாறு உலகு தழுவிய ரீதியில் தங்களின் கோரிக்கைகளை முன்வைக்கும் நாளாக ஐ.நா.நியமங்கள் விதந்துரைக்கின்றன.

disa-bat.jpgஅதனடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் அரசபடைகளாலும் அரச ஒட்டுக்குழுக்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை மீட்டுத்தருமாறு அரசிடம் கோரிநிற்கின்றனர்.ஆனால் என்றும்போல் இந்தாண்டும்  அவர்களுக்கு தங்களின்  உறவுகள் கிடைப்பார்கள் என சிங்களப்பேய் அரசையும் உலகையும் நம்பித்  துயரத்துடன் கழிந்து சென்றுள்ளது.

உலகில் அதிகமான மனிதர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பட்டியலில் இலங்கை முதலாவது நாடு எனும் இடத்தைப் பிடித்திருக்கின்றது என ஐ.நா.சபை விதந்துரைக்கின்றது. அதே நேரத்தில் ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் அறிக்கைப்படி இலங்கை தொடர்பில் 16,742 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  வழக்குகள் விசாரணைகள் செய்யப்படாமல் கிடப்பில் இருப்பதாக வெளிப்படுத்துகின்றன. இவை அனைத்தும் அரசினாலும் அரசபடையினராலும் திட்டமிட்டு இழுத்தடிப்புக்களைச்செய்து கிடப்பில் போடப்பட்டுள்ளன.

ஆனாலும் நீதவான் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைத்தீர்ப்பானது அதனால் விதந்துரைக்கப்பட்ட சரத்துக்குப்  புறம்பாக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர்களின் செயற்பாட்டால் விடுதலைப்புலிகள் மீண்டும் எழுவதற்கு வாய்ப்பாக உள்ளது எனச் சுட்டிக்காட்டி அவர்களது மனித உரிமை செயற்பாடுகளுக்குப் புலி முத்திரை குத்தி இவ்வாறான போராட்டங்களையும் காணாமலாக்கி அரச பயங்கரவாதத்தை மீழுருவாக்கம் செய்ய அல்லது ஏற்கனவே அரசபடைகளும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் குழுக்களையும் மேலும் பூதாகாரமாக வளர்த்துவிடவே இவ்வாறான தடை உத்தரவுகள் வாய்ப்பைக்கொடுக்கும்.

இவை அனைத்திற்கும் கட்டியம் கூறுவதுபோலவே அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் அமைப்பின் தலைவி திருமதி தம்பிராசா
செல்வராணி அவர்களின் அலுவலகம் அடித்து நொருக்கப்பட்டு அவரை எச்சரிக்கும் விதமான அநாமதேய சுவரொட்டிகளை அவரது அலுவலகச்சுவரில் ஒட்டிச்சென்றுமிருந்தனர்.

புகழ் பூத்த  யூத எழுத்தாளர் பரைமோ லெவி அவர்கள் அவரது ” if this be a man ” எனும் நூலில் இனவெறி அரச பயங்கரவாதமும் அதன் படைகளும் அதனது கொடூரம் நிறைந்த செயற்பாடுகளும்  நாட்டில் வாழும் மக்கள்மீது எப்படி இருந்தது என கிட்லரின் நாஜிப்படைகளின் கட்டுப்பாட்டில் அவரது ஜேர்மனிய வாழ்க்கையின் கொடுமையைப்  பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

அதாவது ”மீன் தொட்டிக்குள் இருக்கும் மீன் எப்போது வேண்டுமானாலும் உணவாகலாம். என்ற நிலையில் அவரது நண்பனின் ஏக்கமும் தன்னைப்போல் இருந்தது என்கின்றார். ஆனால் தாயகத்தைப் பொறுத்தவரை வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் அதனைத் தலைமையேற்று நடாத்துபவர்களுக்கும் கோத்தபாயவின் அரச புலனாய்வாளர்களாலும் படையினராலும் அடிக்கடி பெரும் உயிர் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி இருக்கின்றனர். திட்டமிடப்பட்ட விபத்துக்கள் தேவையற்ற சோதனைகள், அச்சப்படக்கூடிய பின்தொடர்தல்கள் எனக் குறிப்பாகக்  கிழக்கில் மிகவும் ஆபத்தான சூழலை இலங்கை அரசபடைகளும் அதனோடு சேர்ந்து இயங்கும் குழுக்களும் ஏற்படுத்தி வருகின்றன.

இதற்கான மூலகாரணம் கிழக்கில் எவ்வாறு கூடுதலான தமிழர் பாராளுமன்ற, நாடாளுமன்ற பிரதி நிதித்துவத்தை மெல்ல மெல்ல இல்லாதொழித்து கிழக்கு என்பது தனிச்சிங்களப் பிரதேசம் என உலகின் மேடையில் கூறித்தமிழ் முஸ்லீம் இனங்களைக் குட்டிவைக்கவும்; சிங்களப் பெளத்த மமதையில்; தான் நினைத்தால் ஐ.நா சபையைக்கூட உதாசீனம் செய்யும் சீன மூலோபாய சிந்தனைகளையும் ராஜபக்சக்களின் அரசு செய்ய முனைகின்றது. அதன்படி மக்களுக்கு அபிவிருத்தி செய்தால் மட்டும் போதும் என்ற இந்தக்கோசம் ஆர்ப்பாட்டம் எல்லாம் அவரிடம் வாய்க்காது என கருதுகின்றார் கோத்தபாயா.

ஆனால் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் எமது இலக்கை நோக்கி நகர்வதற்கான மிகப்பெரும் சக்திகளாக தங்கள் அரசு தமிழ்மக்கள் மீது நடாத்திய இரக்கமற்ற இனப்படுகொலை தொடர்பான போராட்டங்கள். இன்னொன்று இன்றும் சர்வதேச அளவில் இலங்கை அரசிற்குத் தலையிடியாய் இருக்கின்ற  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உணர்வு  பூர்வமான போராட்டம். இவை இரண்டையும் எவ்வாறாயினும் தாய் நிலத்தில் நடாத்த விடாமல் தடுப்பதில் சிங்களப் பேரினவாதம் எந்த விலை கொடுத்தாவது தடுத்தாக வேண்டும் எனப்பாடுபடும். அதற்காகவேனும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கும் அதனை முன்னின்று வழி நடாத்தும் உறவுகளுக்கு தமிழ்மக்களிடம் இருந்து தனித்துவிடச் செய்வதற்கான திறைமறைவு வேலைகளைக்கூட அரச புலனாய்வாளர்கள் மூலம் குழப்பகரமான வேலைத்திட்டங்களைக்கூட எதிர்காலங்களில் கோத்தபாய மேற்கொள்வார்.

சிங்களப் பெரும்பான்மை தமது ஒட்டுமொத்தப் பலத்தையும் பிரயோகிக்கும்போது தமிழர் அரசியல் தலைமைகளும் போராட்டங்களை முன்னெடுத்து செல்பவர்களும் தங்கள் விவேகத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஜார்ஜ் ஆர்வெல் கூறுவதுபோல் “கடந்த காலத்தை யார் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்களோ அவர்கள் நிகழ்காலத்திலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள்.

நிகழ்காலத்தை யார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்களோ அவர்கள் எதிர் காலத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பர்.”இது இப்போது ஆழும் அரசிற்கும் பொருந்தும் எமக்கும் பொருந்தும்.கோத்தபாய கடந்த காலத்தைத் தன்னிடத்தில் வைத்திருக்கின்றார். நிகழ்காலத்தைத் தக்கவைப்பதற்காக அரும்பாடுபடுவார். தமிழராகிய நாம் அரசியல்ரீதியாக எம்மிடம் காலம் தந்த கடந்த காலங்களைக் கைவிட்டதால் நிகழ்காலத்தையும் படிப்படியாகக் கைநழுவிச்செல்லும் சூழல்களில் வந்து நிற்கின்றோம்.

தமிழர் அரசியல் தலைமை இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடும் மக்களுடன் கைகோர்த்து நின்று அவர்களை வழிநடாத்தும் நல்ல தலைவர்களாக இருப்பதுடன் அரசால் தமிழர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மக்களைத் திரட்டி வெகுஜனப்போராட்டமாக மாற்றியமைத்து சர்வதேசக் கவனங்களைத் திருப்பச்செய்யும்  வகையில் மக்களைத்தயார் செய்யக்கூடியவர்களாகவும் இருக்கவேண்டும். அத்தோடு போராடும் மக்களின் அருகில் சென்று அவர்கள் வாழ்க்கையின் வெறுமை நிலையைப் போக்குவதற்கான ஏற்பாடுகளையும் தமிழ் அரசியல் தலைவர்கள் திறம்பட மேற்கொள்ளவேண்டும்.இனிவரும் காலங்களிலாவது தமிழ் அரசியல் தலைமைகள் மக்களுடன் கலந்து களப்பணி ஆற்றுவார்களா ? என்பதை அவர்களது செயற்பாடுகளின் மூலமாக மக்களுக்குத் தெளிவுபடுத்தட்டும்.

அழ.இனியவன்

http://www.ilakku.org/வலிந்து-காணாமலாக்கப்பட்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.