Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவி எதை தேடியது ? - நடேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆவி எதை தேடியது ? - நடேசன்

நத்தை தனது ஓட்டையும்   பாம்பு தனது தோலையும் புதுப்பித்துக்கொள்வது போன்று,  அவுஸ்திரேலியர்களும்  தாங்கள் வாழும் வீட்டை  ஏழு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றிக்கொள்கிறார்கள்.  அதனால்  அவர்கள் வாழ்ந்த  வீடுகள்  ஏழு வருடங்களுக்கு ஒரு முறை விற்பனைச் சந்தைக்கு வரும்.  வயதானவர்கள்   பெரிய வீட்டை விற்றுவிட்டு,  மற்றும் ஒரு  சிறிய வீட்டைத் தேடுவார்கள்.அதேபோன்று   குடும்பம் பெருகுவதால் மட்டுமன்றி,  குடும்பம் பிரிவதாலும் வீடுகள் மாறுகின்றன.  இலங்கை,   இந்தியா போன்ற நாடுகளிலிருந்து  இங்கு வாழ வந்தவர்களால்   அவுஸ்திரேலியர்களின்  இந்த மனப்பான்மையை  நம்ப முடியாது.  நமது நாடுகளில் நூறு வருட வீடுகள் இடிந்து உடையும்வரை,  பல தலைமுறைகளாக வாழ்வார்கள்.  அப்படிப் பல தலைமுறையாக வாழ்வதையும்  பெருமையாகச் சொல்லிக்கொள்வார்கள்.  எது சரி எது தவறு என்பது இங்கு வாதமல்ல.

சமூகத்தில் எத்தனை பேர் வேலை செய்கிறார்களோ,  அந்தளவுக்கு  சமூகத்திலும்  பணமிருக்கும். அந்தப் பணம் சமூகத்தைத் தொடர்ச்சியாக சக்கரம்போல் சுழல வைக்கும். அவுஸ்திரேலியர் ஒருவர்   எழுபத்தைந்து வருடங்கள் வாழ்ந்தால் குறைந்தது  பத்து வீடுகளிலாவது  வாழ்ந்திருப்பார்.

அந்த  பத்து தடவைகளில் எத்தனை வீட்டுத் தரகர்கள்,  வழக்குரைஞர்கள்  ,  நன்மையடைந்திருப்பார்கள்…?  ஏன்.., வங்கிகளும்தான் நன்மையடைந்திருக்கும் ?

மாற்றாக ஒரு வீட்டில் வாழ்ந்து,  வளர்ந்து, முதிர்ந்து ,மரணமாகி,  பெட்டியில் போனால் யாருக்கு நன்மை? பணத்தின் பரிமாற்றம் அதிகளவு  அங்கு ஏற்படுவதில்லை.  இந்தப் பணப் பரிமாற்றமே முதலாளித்துவ இயந்திரத்தின் எரிபொருள்.  இங்கிருந்தே வேலை வாய்ப்புகளும்  உருவாகி நாட்டில் பொருளாதாரம் மேன்மை அடைகின்றது.

நாங்கள் கடந்த  கால் நூற்றாண்டு காலமாக  வாழ்ந்த பெரிய வீட்டை, இனி அது  அவசியமற்றது என்ற காரணத்தால் விற்றோம்.  அவுஸ்திரேலியாவுக்கு வந்து ஐந்து வாடகை வீடுகளில் ஐந்து வருடங்கள் தங்கியபின்னர்,  சொந்தமாக ஒரு வீட்டை  பிள்ளைகளுக்காக  ஒரு   பாடசாலைக்கு அருகில் வாங்கினோம் .

 பிள்ளைகளின்  பேரன், பேத்தி  விடைபெற்றதோடு ,   பிள்ளைகளும்   கூட்டைவிட்டு வெளியேற எங்களுக்குத் தேவைகள் குறைந்து விட்டன. ஆனால்,  எமக்கு ஏற்றதாக ஒரு வீட்டை  ஆறுதலாகப் பார்த்து வாங்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.  நாம் விரும்பியவாறு  ஒரு வீடு விலைக்கு வந்தபோது,  பழையதை அவசரமாக விற்று விட்டோம். பழைய வீட்டை விற்று, புதியதை வாங்கி விட்ட தருணத்தில் விடுமுறையை ஏற்கனவே தீர்மானித்திருந்ததால்,  வாங்கிய புதிய வீட்டைக் காப்புறுதி செய்துவிட்டு இந்தியாவிற்குப் போய்விட்டோம்.

விடுமுறையிலிருந்து  திரும்பிவரும்போது விமானநிலையத்திலிருந்து  நேரடியாக நாங்கள் வாங்கிய புதிய  வீட்டிற்கு டாக்சியில் வர,   நடு இரவாகிவிட்டது.  வீட்டின்  திறப்பு எங்களிடமிருந்ததால் திறந்து உள்ளே வந்த எங்களுக்கு வீட்டைச் சுத்தப்படுத்தியதால்  சஞ்சரித்த  மணம் சுவாசத்தில் கலந்தபோது,  அதற்குக் காரணமான  மகனுக்கு நன்றி சொன்னோம் .  நாம் வருவதற்கு முதல் கிழமையே  எமது மகன்  ஒரு   கிளீனரைப்பிடித்து,  தரைவிரிப்பான கார்ப்பட்டை  சுத்தப்படுத்தியிருந்தான்.

புதிதாக வாங்கிய போதிலும் , வீடு புத்தம் புதியதோ அல்லது திருத்தப்பட்டதோ அல்ல. அறுபது வருடங்கள் புராதனமானது .  வயதான தம்பதி,  நாற்பது வருடங்கள் வாழ்ந்த  வீடு.  அந்த வீட்டுக்காரரின்   மனைவி இறந்த பின்னரும்  அவர்   தனியனாக நூறு வயதுவரை வாழ்ந்தவர்.  ஆறு மாதங்கள் முதியோர் இல்லத்தில் வாழ்ந்து , கடந்த மாதம்  இறந்திருந்தார். அவரது இரு ஆண்பிள்ளைகள் எந்தத் திருத்தமும் செய்யாது அவர்களது முதிசமான அந்த வீட்டை எங்களுக்கு விற்றிருந்தார்கள்.

பழைய வீடென்றாலும்  மெல்பனில் அமைதியான புறநகரில் அமைந்துள்ளது.  ஐந்து கிலோமீட்டரில் கடற்கரை . சிறிய தெருவிலிருந்து வரும் கிளைத் தெருவில் வீடு.  அதிக வாகனப் போக்குவரத்தில்லை.  நடந்து போய் மளிகைச் சாமான்கள் வாங்கமுடியும். பழைய வீடானதால்  வீட்டைச் சுற்றி சோலையாக மரங்கள் வளர்ந்திருந்தன.

கோடை காலத்தில் வீட்டுக்குள் வெய்யில் வராத  வடக்கே பார்த்த வீடு. வீட்டைச் சுற்றி  சிறிய நிலம் .  அதிக பராமரிப்பும் தேவையில்லை. இப்படிப்  பல காரணங்களால் இந்த வீட்டை  இணையத்தில் பார்த்த உடனே பிடித்திருந்து.  இதை விடக்கூடாது என்ற எண்ணமே வந்தது.   வீட்டை  ஏலத்தில் விடுவார்கள்  என அறிந்த போது,   நிச்சயமாகப் பலர் வருவார்கள் என்பதும், அதில் எங்களைவிட வசதியானவர்களும்   வரலாம் என்பதும்  தெரிந்தது. அத்துடன்   வீட்டுக்கான  ஏலத்தை நடத்தும் தரகர்களே   தங்களுக்குச் சாதகமாக  சிலரையும்  அழைத்துவந்து,  வீட்டின் விலையை ஏற்றிவிடமுடியும்.  இதனால் எங்களுக்காக வீட்டு ஏலத்தில்  அனுபவம்வாய்ந்த  தொழில் முறை பிரதிநிதி ஒருவரைப் பிடித்து,  அவரிடம் இந்த ஏலத்தில் எங்கள் சார்பில்  பங்குபற்றும்படி கேட்டோம்.

வீட்டு ஏலம் என்பது அஸ்திரேலியாவில் ஒரு தெரு நாடகமாக வீதியை அடைத்து,  மேடை தாளமற்று  அரங்கேறும். ஏலம் போடும் கதாநாயகன் விசேடமாக வாடகைக்கு எடுக்கப்படுவார். அவரைவிடச் சுற்றி ஐந்து ஆறுபேர் அந்த ரியல் எஸ்ரேட் ஏஜன்டின்  உதவியாளர்களாக நின்று கேட்பவர்களுக்கு ஊக்கமூட்டுவார்கள்.

குரலை அடக்கி  மெதுவாக ஏலத்தில் பங்கு பற்றுபவர்களுக்காக ஒலி பெருக்கியாவார்கள்.  சீரியசாக ஏலம் கேட்பவர்கள் உள் வளையத்திலும்,  விலை  தமக்கு சரி வந்தால் பங்குபற்றுவோம்  என்ற நினைப்பில் உள்ளவர்கள் அடுத்த வளையத்திலும் , விடுப்பு பார்ப்பவர்கள் பெரிய வளையத்திலும் நிற்பார்கள்.

முப்பது வயதுகளில்   எனக்கும்   ஒரு தடவை இது போன்ற ஏலத்தில்  பங்கு பற்றியதாக  ஞாபகம் உண்டு. சுத்தமான இரத்தமும் ஆரோக்கியமான இதயமும் இருந்த காலம் அது. ஆனால்,  இரத்த அழுத்தத்திற்கு மருந்தெடுக்கும்  இக்காலத்தில்  எனக்கு,  ஏன் தேவையில்லாத கசகரணம் என்று  நமக்காக ஒருவரை நியமித்துவிட்டேன். நானும் மகனுமாக ஏல நாடகத்தை  வேடிக்கை பார்ப்பது என்பது முடிவாகியது.     

மார்கழி எங்களுக்கு கோடைக்காலம் . மரங்கள் நிறைந்த வீதியானதால் பகலவனால்  மதியத்தில் எட்டிப் பார்க்க மட்டும் முடிந்தது. சுற்றியுள்ள மரங்களின் அடியிலும் மதில்களிலும் சாய்ந்தபடி அறுபதுக்கும்  மேற்பட்டவர்கள் நின்றனர் .

சரியாக பதினொரு மணிக்கு  ஏலம் ஆரம்பித்தபோது எனது இதயம் முதல் கியரில் ஆரம்பித்துத் தொடர்ந்து ஏறியது. ஆரம்பத்திலேயே  இந்த ஏலத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கு பற்றி வீட்டின் விலை மேலே வானத்தை நோக்கியபோது  எனது இதயத்துடிப்பும் ஏறியது. எனது ஏஜன்ட்  எதுவும் பேசவில்லை.

ஏன் இவர் அமைதியாக இருக்கிறார்?

இவருக்குக் கொடுக்கும் பணம் பிரயோசனமா?

நானே ஏலத்தில் கலந்து கொண்டிருக்கலாம் . தேவையில்லாத வேலை. ஏற்கனவே  எனது   மனைவியால் ,   ‘ நாங்களே இதில்  நேரடியாகக் கலந்து கொள்ளலாம்.  ஏஜென்ட் டை பிடிப்பதெல்லாம்  வீண்செலவு ‘  என்ற கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. அதை நான்  ஏன் புறக்கணித்தேன்   என நினைத்து என்னை நானே  திட்டியபடியிருந்தேன்.

எங்களுக்குக் கட்டுப்படாத விலையாக  எகிறிக்கொண்டு போய்விடுமோ?

வீடு கை நழுவிப் போய்விட்டது என நினைத்து பாசமலர் படத்தை முன் வாங்கிலிருந்து  பார்ப்பது போன்ற மனநிலைக்கு வந்திருந்தேன் .

இறுதிச் சுற்றில் இரு மத்திய வயது ஆண்கள் கயிறிழுப்பாக சிறிய தொகையை வைத்துப் போட்டியிட்டார்கள். அதிலொருவரை அவரது மகள் போன்ற இளம் பெண்  குழந்தையை கையில் வைத்துக்கொண்டு உற்சாகப்படுத்தியபடியிருந்தாள். அவர் மகளுக்காக ஏலமெடுக்கும் தந்தையென நினைத்தேன். மற்றது  ஒரு கூட்டமாக நின்ற சீனக் குடும்பம். அந்த சீனக் குடும்பத்திற்கு உதவியாக நம்மூர் நடிகர் ஜெயபாலனுக்குத் தமிழகத்தில் குரல் கொடுப்பதுபோல இங்கும்  குரல் கொடுத்தவர் ஒரு சீன ரியல் எஸ்டேட் ஏஜென்ட் . எனது இதயம் போர்முலா ரேஸ் காராக ஓடினாலும் இந்தக் காட்சிகளையும் கவனிக்க முடிந்தது.

அணுக்குண்டைப்போட்டு இரண்டாம் உலக மகா யுத்தத்தை அமெரிக்கா முடிவுக்குக் கொண்டுவந்ததுபோன்று,   எனது ஏஜன்ட்  ஒரே  பாய்ச்சலில்  விலையைச் சொல்லியதும்  சுற்றி நின்றவர்கள்  அமைதியானார்கள் .

நமது ஓலமிடும் கதாநாயகன் வேறு எவராவது தொகையை அதிகரிக்கிறார்களா என்பதை அவதானிப்பதற்காக   மூன்று வளையங்களில் நின்றவர்களையும்  கழுத்தைக் கொக்காக்கி  சுழற்றிப் பார்த்தார் . ஏற்கனவே நின்ற துணை நடிகர்கள்  கொரோனாவில் இறந்தவர்களைப்  பிராணவாயு கொடுத்து  உயிரோடு வைக்க முயல்வதுபோல் ஏலம்  கேட்டவர்களை வார்த்தையாலும் உடலசைவாலும் உற்சாகமாக விலை கேட்கத் தூண்டினார்கள். எல்லோருமே  மவுனத்துடன் மாலை மலர்களான முகத்துடன் வெற்றிகரமாகப்  பின்வாங்கினார்கள்.

ஏலத்தில் தொகையைவிட , அர்ச்சுனனது பாணமாக   வார்த்தை வந்த விதத்தைப் பார்த்ததுமே கடைசியாக    விலையை  ஏற்றிக் கொண்டு போனவர்கள் முகம் கூம்பி விட்டார்கள். அந்தத் தொகையை நான் நசிந்து நசிந்து  சொல்லியிருந்தால் ஏலம் மேலும் உயர்ந்திருக்கும்.

சில நிமிட நேரத்தில்  ஏலம் கூறியவர் ,  எவரும் மறுவிலை கேட்கவில்லை என்று உறுதி செய்தபின்னர்,  ஒன்று இரண்டு மூன்று எனக்கூறி கையிலிருந்த சுத்தியலால் மறுகையில் அடித்து வீடு எங்களுடையது என்று கை கொடுத்தார். அந்த ஏஜென்ட் இல்லாமலிருந்தால் அந்த வீடு கிடைத்திராது என்பது எனது உறுதியான நம்பிக்கை .

இன்னொரு விடயம் எனது மனைவியை அந்த ஏலத்திற்கு  அழைத்துப்போகவில்லை. வீட்டு ஏலம்  பல நேரங்களில் பிரான்சியப் புரட்சியின்போது குற்றவாளிகளை ஊர் ஒன்று கூடி கில்லட்டினால் கொலைசெய்வது போன்றதற்கு  ஒப்பானது.

இங்கும் ஒருவரது  கழுத்தில் கடன் கயிறு கில்லட்டினாக விழும்போது  அதனைப் பார்க்க நூற்றுக்கணக்கானவர்கள் கூடியிருப்பார்கள்.  என்ன நடக்கும்…?   இரத்தமின்றி மனிதன் அடுத்த இருபத்தைந்து வருடத்திற்கும்  மூக்கணங்காயிறு கட்டிய காளை மாடாகச் சுத்தி சுத்தி ஓடியாடியபடியிருப்பான். அந்த வீட்டுக்கான  கடனை  அடைத்து அதனைச்  சொந்தமாக்கும்போது கண்பார்வையும்  தெரியாது ,  வீட்டுக்குள் நடப்பதற்கு தடுமாறிய நிலையில் இருப்பான்.

ஏற்கனவே விடுமுறைக்குச் செல்வதற்காக  ஒழுங்கு  பண்ணியிருந்ததால் வீட்டை வாங்கி விட்டுச் சென்று விட்டோம். முன்பாக இருந்த வீட்டையும் விற்றாகிவிட்டது. படுக்கை தளபாடங்களையும்  வாங்கிய வீட்டிற்கு அனுப்பிவிட்டோம்.

பழைய வீடு விற்ற பின்பு சில மாதங்கள் தற்காலிகமாக  வேறு ஒரு இடத்தில்  தங்கியபோது,  பல தடவைகள் என்னையறியாமல் எனது கார் பழைய  வீட்டிற்குப் போனது. வாசல் வரை போனதும் என்னைச் சுதாரித்துக்கொள்வேன்.  ஒரு முறை கடிதங்கள் எடுக்க அங்கே  சென்றபோது ,  அந்த வீட்டை   வாங்கிய சீனப் பெண் அவ்வீட்டின் மரத்திலான தரையை முற்றாகக் கறுப்பு வண்ணத்தில்  மாற்றி இருந்தாள். அதைப்பார்த்து நன்றாக இருக்கிறது என வார்த்தைகளால் சொன்னாலும்,  மனதில் பழைய தரையைத் தேடி அந்தச் சீனாக்காரியை சபித்தேன். 

இருபத்தியைந்து  வருடங்களின் நினைவுகள் அழியாது அல்லவா?  

எங்களது அந்தப் பழைய வீட்டின் பின்கோடியில்  ஒரு மாதுளைமரம்  எனது  மாமனாரால் நடப்பட்டது. அவர் இறந்த பின்பு  ஒவ்வொரு சித்திரையிலும் இனிமையான கனிகளை சொரியும்.  நண்பர்களுக்கும்  கொடுத்து நாங்களும் உண்போம். அதேபோல் ஒரு கறிவேப்பிலை  மரமும்  மாமனாரால் வைக்கப்பட்டு செழித்து வளர்ந்திருந்தது.

பல வருடங்களாக  அவையிரண்டும் எங்களுக்குத் தன்னிறைவாக இருந்தது. இவையிரண்டையும் தந்தையின் நினைவாகப் பதியம் வைக்க வேண்டுமெனத் தொடர்ச்சியாக மனைவி  விடுத்த  வேண்டுகோளுக்கிணங்க பதியம் வைக்க நினைத்தாலும்,  விவசாய தொழில் நுட்பம் எனக்குத் தெரியாத  காரணத்தால் எனது நண்பனையும் அழைத்து பதியம் வைத்தேன்.

ஆனால்,    மாதுளையில்  அந்தப்பதியம்  சரியாக வந்தபோதிலும் கருவேப்பிலையில் சரி வரவில்லை. எங்கள் வீட்டை வாங்கிய சீனப்பெண்,  உங்களுக்குத் தேவையென்றால் முழு கருவேப்பிலை மரத்தையே கிண்டிக்கொண்டு செல்லலாம் என்றாள்.

அதற்கு நான் வேண்டாமென்றேன் .

கால்நூற்றாண்டுகளாக நாங்கள் வாழ்ந்த வீட்டை விற்றபோது மனதில் ஒரு வெற்றிடம்  தோன்றியிருந்தது. அதேவேளையில் பிறந்த நாடு, தாய் ,தந்தையரை விட்டு வெளியேறியதால் எனது மனதில் உணர்வுகளுக்கான ஈரம் , எழுவைதீவு மணல்தரையில் பெய்த மழையாக இலகுவாகக் காய்ந்துவிடும்.

 ஆனால்,  மனைவியின்  தந்தையும் தாயும் பலவருடங்கள் எங்களுடன் அந்த வீட்டில் வாழ்ந்து இறந்தவர்கள் என்பதால் அவர்களது நினைவுகள்  களிமண் தரையில் பெய்த மழையின் வெள்ளமாக இலகுவில் வடிவதில்லை . அதனால் குறைந்த பட்சமாக  விடுமுறைக்குப் போகுமுன்னர்,  மாமனாரது  நினைவாக அந்த வீட்டிலிருந்து பதியம் போட்ட மாதுளையை நண்பனிடம் சொல்லி  நீர் ஊற்றிப் பாதுகாக்கும்படி கேட்டிருந்தேன்.

மனிதர்கள் தாம்  விரும்பியவர்களுக்கு வடிவம் கொடுத்ததன் விளைவாகத் தெய்வங்கள் அக்காலத்தில் தோன்றியது என எங்கோ வாசித்தது நினைவில் வந்தது. அப்படியானால் மாதுளை மரமாக ,  மாமனார் எங்கள் புதிய வீட்டில் வெளியே நிற்பார்.  

விடுமுறை முடிந்து  விமான நிலயத்திலிருந்து டாக்சியில் வந்திறங்கி கொண்டு வந்த பொதிகளை ஒரு இடத்தில் வைத்துவிட்டு கட்டிலுக்குப் படுக்கச் சென்றோம்.  இரவுப்பயணத்தில்  விமானத்தில் உணவருந்தியதால் பசிக்கவில்லை . அப்படிப் பசித்தாலும்   சாப்பிடுவதற்கு  வீட்டில் எதுவும் இல்லை.  குளிர்சாதனப் பெட்டியையும்  காலியாக்கி மின்சாரத்தையும் நிறுத்தி வைத்திருந்தோம்.  படுப்பதற்கு முன்பு தண்ணீரை ஒரு கப்பில் படுக்கையருகே வைத்து விட்டுப் படுத்தேன்.

புதிய வீட்டில் முதலிரவில் நித்திரை இல்லை. ஆறு கிழமைகள் இந்தியாவில் நின்றதனால்,   உடற்கடிகாரம் இந்திய நேரத்திற்கு சாவி கொடுக்கப்பட்டிருந்தது.  கண்களை மூடியபோதிலும் உறக்கம் அணைக்க மறுத்தது.

மெதுவாக,  ஆனால் என்றும் கேட்டிராத  உரசும் ஒலி கேட்டது.  இரண்டு சிறு கற்கள் ஒன்றுடன் ஒன்று தொட்டு மீண்டு வருவதுபோல் இருந்தது. மீண்டும் கவனித்தபோது பற்கள் ஒன்றுடன் ஒன்று கடிபடும்போது நமக்கு மட்டும் கேட்கும் ஒலிபோல இருந்தது. சிறு வயதில்  ‘ பொடியன் பல்லை நறும்புகிறான்… வயிற்றில் பூச்சிபோல ‘ என ஆச்சி சொல்லியதைக் கேட்டிருக்கிறேன்.  

நான் கூட  இலங்கை  இறாகலையில்,  குளிருடைகளற்று கடமைக்குப் போனதால்,  ஒரு நாளிரவு உடல் விறைத்து  பல்லை நறும்பியபடி இரவொன்றைக் கழித்தது  ஞாபகம் வந்தது.  நாங்கள் பல்லை நறும்பினால் எங்களுக்கு மட்டுமே கேட்கும்.    ஆனால், அன்று இரவு புதிய வீட்டில் படுத்தபோது,  பல மடங்கு அதிர்வது போன்ற ஓசை பெரிதாகக் கேட்டது . வெளியே நின்று ஒருவர் தனது பல்லை நறும்புவதை ஒலிபெருக்கியால் பெரிதாக்கினால் வருமோசையென வர்ணிக்க முடியும். ஓசை விட்டு விட்டுக் கேட்டாலும்  ஆரோகணம் அவரோகணமாகத் தொடர்ச்சியாகக் கேட்டது.

அந்த ஓசை,  பயத்தை ஏனோ என்னிடம் உருவாக்கவில்லை. கண்களை மூடியபடி ஏதோ ஒரு சங்கீதத்தை ரசிப்பதுபோல் கேட்டுக் கொண்டிருந்தேன். அரைமணி நேரமாகிவிட்டது.

வீட்டை எப்படியும் மராமத்து பார்க்க வேண்டும்.

யன்னலொன்று ஒழுங்காகப் பூட்டப்படாமலிருக்கிறதோ? அல்லது ஏதோ ஒரு ஓட்டையின் வழியாகக் காற்று உள்ளே வருகிறதோ? கூரையில் உள்ள ஓடுகளில் ஏதாவது விலகியதால் வரும் ஓசையோ..? சுற்றியுள்ள மரங்கள் ஏதாவது காற்றால் கூரையில்  தட்டுப்பட்டு அதிருகிறதோ  எனப் பல கேள்விகளை மனதில் தேக்கியவாறு  படுத்திருந்தேன்.

நோய் இருக்கும் போது அந்த நோயின் காரணத்தைக் கண்டுபிடிப்பது வைத்தியருக்கு இலகுவாக இருக்கும்.   இயங்கும் வாகனத்தில் என்ஜினின் சத்தம் வரும்போது மெக்கானிக் இலகுவாகக் கண்டுபிடிப்பது போல் ,  ஓசை வரும்போது பார்த்தால் பிசகை சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என நினைத்து கட்டிலிலிருந்து எழுந்தேன் . அருகில் மனைவியிடம்  மெதுவான குறட்டை ஒலி கேட்டது

லைட்டை போடாமல் தொலைபேசியை எடுத்து அதனது ஒளியுடன் அறையின் வெளியே வந்து குளிக்கும் அறையைப் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை.  மேலே உள்ள கண்ணாடி யன்னல் பூட்டியிருந்தது. பக்கத்தில் உள்ள கழிவறை அறையின் மேலே பார்த்தேன் . அங்குள்ள சிறிய கம்பி வலைகளுடாக  குளிர்ந்த காற்று வந்து முகத்தில் அறைந்தது.  வெளியே பலமான காற்று வீசியது. ஆனாலும் மெல்பனில் கோடைக்காலம். கழிவறை கதவை இறுக்கமாகச் சாத்தி மூடிவிட்டு வந்தேன்.

படுக்கை அறைகளைத் தவிர மற்ற அறைகளில் பிரிக்கப்படாத பெட்டிகள் நிலத்தில் இறைந்தபடியிருந்தன. எனது படிப்பறை சென்று அங்கு கிடந்த பெட்டிகளை கடந்து மூடியிருந்த ஜன்னலை கைகளால் தள்ளிப்பார்த்தேன் . ஏதாவது சத்தம் வருகிறதா என  அவதானித்தேன் . எனது காதை அருகில் வைத்து வைத்தியர்  நெஞ்சை பரிசோதிப்பதுபோல் பரிசோதித்தேன்.  எதுவுமில்லை. இதேபோல் மற்றைய  இரு அறைகளைப் பார்த்தபோது ஓர் அறையில் துணிகளும்  பெட்டியும் தட்டுமுட்டு சாமன்களும் கிடந்தன.  கடைசி அறையில் மனைவி,  பூசை படங்களையும் தனது துணிப்பெட்டிளையும் வைத்திருந்தார்.

அங்கும் எதுவுமில்லை. அந்த அறையின்  ஜன்னலை கையால் தட்டிய போது, கண்ணாடி ஜன்னலில்  சிறிய அதிர்வு தெரிந்தது. அந்தப் பகுதியை  கீழே கிடந்த கார்ட்போட் பெட்டியின் சிறிய துண்டை  கிழித்து அடைத்தேன்.

அங்கிருந்துதான்  ஒலி வந்திருக்கலாம் என நினைத்துக்கொண்டு வீட்டின் முன்பகுதியில் உள்ள மற்றைய ஜன்னல்களையும்  தட்டிப்பார்த்தேன். சமையலறைப் பகுதியையும்  அங்கிருந்து  வெளியே செல்வதற்கான வாயில்  கதவையும்  பார்த்தேன்.

கிட்டத்தட்ட  அரைமணிநேரம் ஒரு கட்டிடக்கலைஞர் வீட்டை வாங்குமுன்னர்  ஆராய்வதுபோல்  வாங்கிய புதிய வீட்டை பார்த்தேன். ஏற்கனவே வீட்டை வாங்கு முன்பு ஒரு கட்டிடக் கலைஞரிடம்  பணம் கொடுத்து ஆராய்ந்துவிட்டு அவர் தந்த  சான்றிதழின் அடிப்படையிலேயே  இந்த வீட்டை ஏலத்தில் வாங்கினோம். 

என்னதான் வீட்டைத்துளாவி ஆராய்ந்தாலும்,    அந்த ஓசைவந்த காரணம் புலப்படவில்லை.  திருப்தியுடன் கட்டிலுக்கு வந்து படுத்தேன்.   தொடர்ந்து பழைய வீட்டின் நினைவுகள் நிழலாகத் தொடர்ந்தன. 

அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து,  வாழ்வின் கனவுகள் மெய்ப்படக் கால் நூற்றாண்டுகளாக வாழ்ந்த  அந்த வீட்டை விற்பது எங்களுக்கு இலகுவான காரியமில்லை. தற்பொழுது இருவருக்கு மாத்திரம்  வாழ்வதற்குப் பெரிய மாடிவீடு தேவையில்லை என்பது மட்டுமல்ல,  பெரிய  வீட்டைப் பராமரிப்பதும்  இலகுவானதல்ல என்பதாலும்  வேறு வீடு பார்க்கும் முடிவுக்கு வந்தோம்.  மனைவிக்கோ  குழந்தைகள் அந்த வீட்டிலே வளர்ந்தார்கள்  பெற்றோர்கள் வாழ்ந்து இறந்தார்கள்  என்ற பசுமையான  நினைவுகள்தான்  நிழலாகத் தொடர்ந்தன.  என்னைப் பொறுத்தவரையில்  அவ்வாறு பெரிதான சென்ரிமெண்டுகள் இல்லை. அமைதியான இடத்தில் ஒரு சிறிய வீடாகப் பராமரிப்பதற்கு இலகுவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது .

வாழ்வின் இறுதிக்காலங்களில் அமைதியான இடத்தில் வாழவேண்டும் என்ற மன ஓட்டத்தில் அந்த  புதிய வீட்டில்  அன்று இரவு  தூங்கிவிட்டேன். மறுநாள் காலையில் சென்று  எங்கள் செல்லப்பிராணி நாய் சிண்டியைக்   கொண்டுவந்தேன்.   எங்கள் விடுமுறைக்காலத்தில்  அது வேறு  ஒரு இடத்தில்  பராமரிக்கப்பட்டது. 

எட்டு வயதான  அந்த லாபிரடோர் எங்களுடன் வசிக்கும் அடுத்த ஜீவன்.  எங்கள் கட்டிலுக்குப் பக்கத்தில் நிலத்தில் படுத்தபடியே இரவில் குறட்டை விடும்.  ஏதாவது சிறிய சத்தம் கேட்டாலும்  தேர்ந்த  காவல்காரனாக எழுந்து வெளியாலே சென்று பார்க்கும்.   

அடுத்த நாள் அது வீட்டிற்கு வந்த  இரவு அதற்கும்  நித்திரையில்லை. தொடர்ச்சியாக வீடு முழுவதும் நடந்தபடியிருந்தது. புதிய வீடென்பதால் அதற்கும் எங்களைப்போல் இடங்களை மணந்து தன்னை இசைவாக்க வேண்டிய தேவை இருந்திருக்கும் என்பதாக நினைத்துக் கொண்டேன். ஆனால்,  சில நாட்களில்  இரவு பொழுதில் அமைதியாகிவிட்டது. நானும் அவுஸ்திரேலிய நேரத்திற்குப் பழகியபடியால் படுத்தவுடன் தூங்கிடுவேன்.

மீண்டும் ஒரு நாள் இரவு பற்கள் உரசும் சத்தம் கேட்டு  எனது துயில் களைந்தது.  சிண்டியும் குலைத்தபடி பின் வாசலுக்குப் போனது. நான் எழுந்து கண்ணாடித் தம்ளரிலிருந்த  தண்ணீரைக் குடித்துவிட்டு கைத்தொலைபேசியைப் பார்த்தேன்.  இரவு ஒரு மணி.  நானும் எழுந்து சிண்டியைத் தொடர்ந்தபோது பின் வாசலில் நின்று குலைத்தது.  அத்துடன் அதனது கழுத்துத் தசைகள் புடைத்து மயிர்கள் குத்திட்டு நின்றன. காதுகளும் அக்காலத்து  ஒலிபெருக்கியாக நிமிர்ந்தன.

முன்காலை நீட்டி தசைகளை முறுக்கித் தினவெடுத்துப் பாய்வதற்குத் தயாராக நின்றபடி,  எப்போது கதவைத் திறப்பாய் என  பாவனை காட்டியவாறு  என்னைப் பார்த்தது.  ஏதாவது பொசம் அதன் கண்களில் தென்பட்டிருக்கலாம் என நினைத்து பின்கதவைத்து திறந்து விளக்கைப் போட்டேன்.

வெளிச்சத்தில் அந்தப்பகுதி பகலாகியது . எதுவும் தெரியவில்லை. காற்றுக்கு மரங்கள்கூட ஆடவில்லை.  சிண்டி குலைக்கவில்லை.  வெளியாலே வந்து  எங்களது குளியலறையின் பின்பகுதியை முகர்ந்து பார்த்தது. சிறிது நேரம் குளியலறை சுவர்மீது கால்களை வைத்து மீண்டும் சுவரை முகர்ந்தது. உடனே வெளியே இறங்கிய நான்  வெளிப்பக்கத்து ஜன்னல்களையும் வீட்டையும் பார்த்தேன். எதுவும் தெரியவில்லை.  வீட்டைச் சுற்றி வந்து ஒவ்வொரு  ஜன்னல் கதவாகப் பார்த்தபோது எங்கிருந்தும் ஓசை வரவில்லை. மீண்டும் சிண்டியுடன் வீட்டினுள்ளே சென்றபோது  எமது அரவம் கேட்டு,   மனைவி எழுந்து விசாரித்ததும்     “ ஒன்றுமில்லை சிண்டி குலைத்தது.   அதுதான் பார்த்தேன்”  என்றேன்.

——–

மீண்டும் சில நாட்களில்பின்னர்  மற்றும்  ஒரு இரவில் பல்லை நறும்பும் சத்தம் கேட்டு சிண்டி குலைத்தது.

உட்பக்கம்,  வெளிபக்கம் எல்லாம் பார்த்தாகிவிட்டது.  இனிமேல் பார்ப்பதற்குக் கூரை பகுதியே உள்ளது. அது  என்னால் முடியாது. கூரைப் பகுதி அழுக்காகிப் பாசி பிடித்திருந்தது.

வீட்டின் கூரையைப் பார்க்க  ஒருவரை  அழைத்து,    உடைந்த பகுதிகளைப் பொருத்தி பாசியை அகற்ற ஏற்பாடு செய்தேன்.  வந்தவர்  கூரையைக் கழுவியதுடன் பல முனைகளில்    உடைந்த ஓடுகளைப் பொறுத்தி  சீமந்து வைத்து  அடைத்தார்.

என்னைப் பொறுத்தவரையில்  வீட்டின் எல்லாப் பகுதிகளையும் பரிசோதித்து  விட்டேன் எனத் திருப்தியடைந்த பொழுது, வீட்டின்  உட்பகுதிகளில்  மேலும் சில திருத்தங்கள் செய்து புதிய வர்ணம் பூசவேண்டுமென்ற முடிவை நானும் மனைவியும்  எடுத்தோம்.

மெல்பனிலும்  கொரோனா வந்ததால் எங்களையும்  வீட்டில் இருக்கப் பண்ணினார்கள். வீட்டு வேலைகளுக்கு எவரையும் அழைக்க முடியாது என்பதால் இரவில் வந்த ஒலியை  மறந்துவிட்டோம்

இரண்டு மாதங்களுக்குப் பின்பு,  மீண்டும் ஒரு நடு இரவுப்பொழுது  பல்லை நறும்புவது போன்ற ஒரு சத்தம் கேட்டு சிண்டி பாய்ந்தது. ஜன்னலின் திரையை விலக்கிப் பார்த்தேன்.  பூரணசந்திரன்  மரங்கள் மத்தியில் வெட்கப்பட்டு  ஒளிந்தது. குளிர்காலம்,  வெளியே செல்லத் தடை என்பதால் வீட்டுக்குள் அடைந்து கிடந்து  ஆகாயம்,  சூரியன்,   சந்திரன் எல்லாம் மறந்து வீட்டைச் சூடாக்கியபடி உள்ளே இருந்தோம்.

சிண்டி மீண்டும் பின் வாசலுக்குப் போய் விட்டது. பின் கதவைத் திறந்தபோது அது வேலி நோக்கிப் பாய்ந்தது.  அந்த நேரம் ஒரு பொசம் மின்சார வயரிலிருந்து  மரத்திற்குத்  தாவியதைக் கண்டோம். மரத்தின் கிளையிலிருந்து  கீழே பார்க்கும் பொசம் அந்த சந்திர ஒளியில் தெரிந்தபோது ,  அந்த பொசத்தை புறக்கணித்துவிட்டு மீண்டும் யன்னலருகே சென்று சிண்டி  முகர்ந்தது.

இம்முறை என் பின்னால்  வந்த மனைவி

“ நான் நினைக்கிறேன்.  முன்பு இந்த வீட்டிலிருந்த  அந்த வயதான மனிதர் இடைக்கிடையே இந்த வீட்டுக்கு வருகிறார் போலிருக்கு. பல வருடங்கள்  இங்கு வாழ்ந்தவர்.  நாங்கள் இந்த வீட்டை விரைவாகத் திருத்தி புது வர்ணம் பூசவேண்டும் “ என்றார் .

அதை நம்பாமல் நான் சிரித்தேன்.

அடுத்த நாள் காலை எழுந்தாலும்,  கட்டிலிலிருந்து நான் ஒன்பது மணிவரையும் படுத்தபடி படித்துக் கொண்டிருந்தேன்.

எனது மனைவி  “ இஞ்ச வாங்கோ… இஞ்ச வாங்கோ…  “ என அலறியபோது  “என்ன நடந்தது?“ எனக்கேட்டவாறு  ஓடினேன்.

 “இஞ்ச பாருங்கள் “ என ஒரு சிவப்பு மூடியான பிளாஸ்டிக் ஜாரை கையில் எடுத்துத் தந்தார்.

 “ என்ன? ”

“ பாருங்கோ,  இதைக் கொண்டுபோய் எறியுங்கோ “

அதில் இரண்டு பல் செட்டுகள் என்னைப் பார்த்துப் புன்னகைத்தன.  அந்தப் பற்களிலிருந்த பொக்கைவாய் எனது  மனத்திரையில் விரிந்தது

“எங்கே இருந்தன ?  “

“ ஜன்னலுக்கு மேல் உள்ள தட்டில் ”

“ இதுவரை எங்கள் கண்ணில் படவில்லையே? “

“ பாவம்,  மனுசனைப் பல் செட்டில்லாது வயோதிபர் இல்லத்திற்குத் தள்ளிக் கொண்டு போயிருக்கிறார்கள் போல. அவர் ஏதாவது கடித்துத்  தின்பதற்குப் பல் செட்டைத் தேடி வந்திருக்கிறார் ”

“ பெரும்பாலும் முதியவர்கள் இல்லத்தில் அவித்து மசித்த  உருளைக் கிழங்கு கொடுப்பார்கள் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன்  “  எனச் சொல்லியபடி அதை  எமது புதிய வீட்டின்  குப்பைத் தொட்டியில் போட்டேன்.

அதன்பின்னர், இரண்டு தடவை  வீட்டைப்  பூட்டிவிட்டு வெளியே சென்று திரும்பியபோது  வீட்டைத் திறக்க  திறப்பில்லாது நின்றோம் . கடைசியில்   அந்த இரண்டு தடவையும்  கதவை உடைக்க வேண்டியிருந்தது.

 “  இவையெல்லாம் நல்லதல்ல .  வீட்டை வெகு விரைவில் திருத்தவேண்டும் “ மீண்டும் மனைவி.

 “கொரோனா முடியட்டும் . பல்செட் இப்போது  இல்லை.  மனிதர் இனி வரமாட்டார்  “ என்றேன்.

—-0—
 

http://puthu.thinnai.com/?p=40812

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.