Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யபட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டுக்குழுக்களால் கொலைசெய்யபட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவில்...

பி.பி.சி. வானொலியின் தமிழ்-சிங்கள சேவைகளின் குடாநாட்டுச் செய்தியாளர்  19.10.2000 அன்று ஆக்கிரமிப்பாளர்களின் அடிவருடிகளால் அவரது இல்லத்தில் வைத்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பத்துவருடகாலமாக பத்திரிகைத்துறையில் பணியாற்றி சிறந்ததொரு செய்தியாளராகப் பரிணமித்த அவர், தனது பணியில் காட்டிய கடமையுணர்விற்கும் நேர்மைப்பண்பிற்கும் வெகுமதியாக, கொலைஞர்கள் அவருக்கு மரணத்தைப் பரிசளித்துள்ளனர்.

பத்திரிகையாளர் நிமலராஜன் கொல்லப்பட்ட செய்தி தமிழ்மக்களுக்கு அதிர்ச்சியையும் ஆழ்ந்த மனவேதனையையும் அளித்துவிட்டது.

கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள இராணுவத்தின் கிடுக்கிப்பிடிக்குள் சிக்கி அவலவாழ்வை அனுபவித்துவரும் யாழ்ப்பாணமக்களது துன்ப-துயரங்களையும் இந்த இராணுவ ஆட்சியை மூடிமறைக்க சிங்கள அரசு எடுக்கும் கண்துடைப்பு அரசியல் நடவடிக்கைகளையும் வெளிஉலகிற்கு அம்பலப்படுத்துகின்ற அரியபணியை நிமலராஜன் ஆற்றிவந்தார்.

தமிழ் – சிங்கள மொழிகளில் நல்ல தேர்ச்சிபெற்றிருந்த அவர் பி.பி.சியின் தமிழோசை மற்றும் அதன் சிங்கள மொழி ஒலிபரப்பான சந்தேசிய உட்பட வெளிநாட்டுத் தமிழ்வானொலிகளின் யாழ்ப்பாணச் செய்தியாளராக திறம்படப் பணியாற்றி- மக்களின் அபிமானத்தையும் பெற்றிருந்தார்.

கணீரென்ற வெண்கலக்குரலில் குடாநாட்டு நிலவரங்களை செய்தியாகத் தொகுத்து நிமலராஜன் வழங்கும் விதம் அலாதியானது. அவர் வழங்கும் செய்திகள் தகவல்கள் தெளிவுடன் இருக்கும். எந்தவிதமான பூடகத்தன்மைகளும் இல்லாது வெளிப்படையாக செய்திகளைக் கொடுப்பது அவர் கடைப்பிடிக்கும் தனித்துவமான பாணி. அவர் வழங்கும் செய்திக் கண்ணோட்டங்களில் நேர்மையான விமர்சனம் இருக்கும். குடாநாட்டு மக்கள் சந்திக்கும் அவலவாழ்வை அம்பலப்படுத்தும்போது அவரது குரலில் தார்மீகக் கோபம் கொப்பளிக்கும். அதுமட்டுமல்ல அவரது செய்திகளிலும்-அரசியல் கண்ணோட்டங்களிலும்-அம்பலப்படுத்தல்களிலும் தமிழ்த்தேசிய உணர்வு மையசக்தியாகத் திகழும். மக்களின் துன்ப-துயரங்களை எடுத்துக்கூறி, அவற்றிற்குக் காரணமானவர்களை சுட்டுவிரல் நீட்டி பகிரங்கமாகவே குற்றம் சுமத்தும்போது அவரது கருத்துக்கள் மௌனமாக உள்ள குடாநாட்டு மக்களது மனச்சாட்சியின் குரலாக ஓங்கி ஒலிக்கும்.

இவை காரணமாக நிமலராஜனுக்கு தமிழ்மக்கள் மத்தியில் பேரபிமானமும் சந்தேசியவின் சிங்கள நேயர்கள் மத்தியில் பிரபலமும், படையினர் மற்றும் அடிவருடிகள் மத்தியில் வெறுப்புணர்வும் இருந்து வந்தது.

சர்வதேச வானொலிகளின் யாழ்ப்பாணச் செய்தியாளராக நிமலராஜன் பணிசெய்யத் தொடங்கும் வரை குடாநாட்டு மக்களின் துயரவாழ்க்கை வெளி உலகிற்கு சரியாகத் தெரியவரவில்லை.

யாழ்ப்பாணத்தில் இராணுவ ஆட்சிக்குப் பதிலாக சிவில் நிருவாகம் அமைக்கப்பட்டு மக்களின் வாழ்க்கை இயல்புநிலைக்குத் திரும்பிவிட்டது என்றும், தமிழ்க்கட்சிகள் அங்கே ஜனநாயகமுறையில் அரசியல் வேலைத்திட்டங்களைத் தொடங்கிவிட்டன என்றும்; குடாநாடு புனரமைக்கப்பட்டு அபிவிருத்தி செயப்படுகின்றது என்றும் சிங்கள அரசு வெளியிட்ட செய்திகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால், நிமலராஜனூடாக யாழ்ப்பாணத்தின் உண்மைநிலவரங்கள் படிப்படியாக வெளிவரத்தொடங்கின. படையினரின் அட்டூழியங்கள் அம்பலத்துக்கு வந்தன. தமிழ்க்குழுக்களின் அராஜகங்கள் வெளிக்கொணரப்பட்டன. சிங்கள அரசின் கண்துடைப்பு அரசியல் தோலுரித்துக்காட்டப்பட்டது. மக்களின் அன்றாட வாழ்வியல் அவலங்கள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

ஆனையிறவுத்தள அழிப்புடன் தென்மராட்சிப் பகுதிக்குள் சண்டை பரவியபோது அங்கிருந்த மக்களின் உயிர்ப்பாதுகாப்பிற்காக இடம் பெயர்ந்து செல்லுமாறு புலிகள் இயக்கம் வேண்டுகோள்விடுத்தது. ஆனால் படையினர் தமது பாதுகாப்பிற்காக அம்மக்களை வெளியேறவிடாது தடுத்து அவர்களுக்கு ஒரு பேரழிவினை உண்டுபண்ண முயன்றபோது அம்மக்களின் நிலையை உலகறியச் செய்விப்பதற்காக உயிராபத்தையும் பொருட்படுத்தாது நிமலராஜன் நேரடியாகவே அப்பகுதிகளுக்குச் சென்றார். அந்த மக்களுடன் உரையாடி அங்கிருந்து நிலைமைகளை வானலைகளில் பரப்பி இராணுவத் தலைமைப்பீடத்தை நெளியவைத்து-சிங்கள அரசைச் சிக்கலுக்குள்ளாக்கினார்.

இவரது செய்திகளால் உத்வேகமடைந்த உலக மனிதஉரிமை அமைப்புக்கள் சிங்கள அரசுக்கு அழுத்தங்களைக் கொடுத்து மக்களின் சுதந்திரமான இடப்பெயர்வுக்கு வழிசமைத்தன.

X08NhYwFrZUgIUYcKWrk.jpg

 

தனி ஒருவனைக்கொண்ட படைபோல நிமலராஜன் தனித்துநின்று குடாநாட்டு நிலவரங்களை அம்பலப்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கும்-அவர்களது அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துவந்தார்.

யாழ்ப்பாணத்தில் சாதாரண இளைஞர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டு, கொல்லப்பட்டவர் புலி உறுப்பினர் என படையினர் விளக்கம்சொல்லி செய்தி வெளியிடுவது வழமை. ஆனால், இராணுவத்தின் அந்தச் செய்தியையும் வானலைகளில் பரப்பி கொல்லப்பட்டவர் ஒரு மாணவர் அல்லது ஒரு அப்பாவி இளைஞன் என நிரூபணங்களையும் எடுத்துக்கூறி அது ஒரு மிலேச்சத்தனமான படுகொலை என உலகிற்கு நிமலராஜன் ஒப்புவிக்கும் விதம் அவரது செய்தி வழங்கும் பாணியின் தனிரகமானது.

இவைகாரணமாக படையினரின் எச்சரிக்கைகளுக்கும் – பயமுறுத்தல்களுக்கும் நிமலராஜன் பலதடவை உள்ளாகியிருந்தார்.

படையினரின் இரும்புப்பிடிக்குள் நடைபெறும் யாழ்ப்பாணத்தின் “ஜனநாயக அரசியலையும்” அதை நடாத்தும் தமிழ்க்குழுக்களின் அடாவடித்தனங்களையும் மிகத் தெளிவாகவே, அவர் உலகிற்கு எடுத்துக்கூறினார். அண்மையில் நடந்துமுடிந்த தேர்தல்கூத்தில் தமிழ்க்கட்சிகள் குறிப்பாக ஈ.பி.டி.பியினர் தீவகத்தை ஒரு அடிமைத்தீவாக வைத்திருக்கின்றனர். அங்குள்ள மக்களை அடிமைகள் போல தம்விருப்பப்படி ஆட்டுவிக்கின்றனர் என விமர்சனம் செய்தார். படையினரின் பாதுகாப்பில் இந்தத் துரோகிகள் நடாத்தும் கேலிக்கூத்தான அரசியலை எள்ளிநகையாடி, நிமலராஜன் செய்திகளை வெளியிட்டார்.

இதனால் தமிழ்க்குழுக்களின் குறிப்பாக ஈ.பி.டி.பியினரின் கொலை மிரட்டல்களுக்கு இவர் உள்ளானார்.

எனினும், இந்தவகை மிரட்டல்களைக்கண்டு நிமலராஜன் தனது பணியில் தடுமாறவில்லை. தனி ஒருவனைக்கொண்ட படைபோல நிமலராஜன் தனித்துநின்று குடாநாட்டு நிலவரங்களை அம்பலப்படுத்தி ஆக்கிரமிப்பாளர்களுக்கும்-அவர்களது அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்துவந்தார்.

யுத்தகளத்திற்கு நேரடியாகச் சென்று போர்ச்செய்திகளைத் திரட்டும் பத்திரிகையாளர்கள் ஒருவகை. ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் வசித்தபடி, ஆக்கிரமிக்கப்பட்ட மக்களுள் ஒருவராக இருந்துகொண்டே-அரசியல், இராணுவ நிலவரங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள் வேறோருவகையினர். முதல்வகைச் செய்தியாளர்களுக்குச் சாவு ஒருதடவைதான் வரும். ஆனால் அடுத்தவகைச் செய்தியாளர்கள் சாவை சதா சந்தித்தபடியே வாழ்க்கையை ஓட்டுவார்கள். நிமலராஜன் இந்தவகைச் செய்தியாளராகவே பணியாற்றினார். பலமுனைகளிலிருந்தும் சாவை சதா சந்தித்தபடியே-சாவுக்குப் பயப்படாது அவர் துணிச்சலுடன் பணியாற்றினார்.

ஒரு செய்தியாளன் என்ற நிலைக்கும் அப்பால்-குடாநாட்டுமக்களின் அவலவாழ்க்கையை துணிச்சலுடன் உலகிற்கு எடுத்துக்கூறும் ஒரு மக்கள் பிரதிநிதி போலவே நிமலராஜனின் செயற்பாட்டை தமிழ்மக்கள் கருதினர்.

அதனாலேயே, கொலைஞர்களின் குண்டுக்கு அவர் பலியானபோது குடாநாட்டு மக்கள் மட்டுமல்ல, தமிழீழ மக்கள் அனைவருமே தங்களது குரலை இழந்துவிட்டதுபோலத் துயரப்பட்டனர்.அவரது சாவுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் கூட்டங்களை நடாத்தினர். அவரின் உயிரைப் பறித்த கொலைஞர்களைக் கண்டனம் செய்து-தமது கோபத்தை வெளிப்படையாகக் காட்டினர்.

குடாநாட்டுச் செய்தியாளராக நிமலராஜன் பணியாற்றிய காலம் தமிழ்மக்களால் என்றும் நினைவுகூரப்படும். நிமலராஜன் என்ற செய்தியாளனும் தமிழரின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் நிலையான இடத்தைப் பெறுவார்.

– விடுதலைப்புலிகள் (குரல்:96 ,ஐப்பசி, கார்த்திகை 2000) இதழிலிருந்து வேர்கள்…!

 

https://www.thaarakam.com/news/0b6cf61e-d8be-49f5-8332-aef9c0193080

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.