Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவுக்கு எதிராக அமெரிக்க – இந்திய இராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன?

Featured Replies

சீனாவுக்கு எதிராக அமெரிக்க – இந்திய இராணுவக் கூட்டணி! விளைவுகள் என்ன?

  • பாஸ்கர் செல்வராஜ்

மெரிக்க தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பாக இந்தியா – அமெரிக்கா இடையே துல்லியமான ராணுவ வரைபடங்களையும் ஏவுகணை வழிகாட்டு தொழில்நுட்ப வசதிகளையும் அமெரிக்க ராணுவத்திடமிருந்து இந்திய ராணுவம் பெறுவதற்கான BECA ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அமெரிக்கா எந்த நாட்டுடன் General Security of Military Information Agreement (GSOMIA), Logistics Exchange Memorandum Of Agreement (LEMOA), Communication Compatibility and Security Agreement (COMCASA), Basic Exchange Cooperation Agreement (BECA) ஆகிய நான்கு அடிப்படை ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்கிறதோ அந்த நாடு நடைமுறையில் அமெரிக்க அணியாக ஆகிவிடும்.

mike-modi.jpgமுதல் மூன்று ஒப்பந்தங்களில் இந்தியா ஏற்கனவே கையெழுத்திட்டு விட்ட நிலையில் நான்காவதாக இந்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது. அமெரிக்கத் தேர்தலுக்கு முன்பாக இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்படுவதால் இது அதிபர் ட்ரம்ப் மீண்டும் வெற்றி பெற உதவும் நோக்கம் கொண்டதாக இருக்கலாம் என்றும், அவர் இந்தத் தேர்தலில் தோற்கும் நிலையில் இருப்பதால் அவர் ஆட்சி இருக்கும்போதே இந்த முக்கிய ஒப்பந்தத்தை இந்தியா ஏற்படுத்திக் கொள்ள முடிவு செய்திருக்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. எது எப்படியோ… வெற்றிகரமாக அதிகாரபூர்வ அமெரிக்க அணியாக இந்தியா மாறிவிட்டது.

ஒரு கல்லில் இரு நாடுகள் வீழ்ந்தன

இதற்கான தேவையும் நோக்கமும் என்ன என்பது குறித்து பெரிதாகச் சிந்தித்து தலையை பிய்த்துக்கொள்ள தேவை இல்லை. இந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க வெளியுறவு மற்றும் பாதுகாப்பு செயலர்கள் இது சீனாவுக்கு எதிரான ராணுவக் கூட்டு என்பதைத் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். இந்திய அமைச்சர்கள் சீனாவின் பெயரை உச்சரிக்கவில்லை என்றாலும் இந்திய ஊடகங்கள் இது இந்தியாவின் தாக்குதல் திறனை வானளவு உயர்த்தும் என எழுதி தீர்த்துவிட்டன. சீனா இதை முக்கிய நிகழ்ச்சியாகக் கணக்கில் கொண்டாலும் பயந்துவிட்டதாகத் தெரியவில்லை. இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருக்கும் ராணுவ ரீதியிலான இடைவெளியைச் சமன்படுத்தி விடாது என சீன அரசின் ஊடகமான குளோபல் டைம்ஸ் தலையங்கம் எழுதுகிறது.

மேலும் 70 சதவிகிதம் ரகசிய ராணுவ தளவாடங்களைக் கொண்ட இந்திய ராணுவத்துக்கு இந்த துல்லியமான தகவல்கள் கிடைத்தாலும் அதன் பயன்பாடு குறைவு என்றும் சுட்டிக்காட்டுகிறது. இந்த ஒப்பந்தமே அந்த ராணுவ தளவாடங்களை நீக்கிவிட்டு அமெரிக்க ராணுவ தளவாடங்களைப் பதிலீடு செய்யும் நோக்கம் கொண்டதுதான் என்பதை இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் அட்லாண்டிக் கூட்டமைப்பில் உரையாற்றிய பாதுகாப்புத் துறை செயலர் எஸ்பர் கூறி இருக்கிறார்.

இந்திய-சீன மோதலுக்குப் பிறகு இந்தியாவின் பொருளாதார கூட்டாளியான சீனாவை இந்திய சந்தையிலிருந்து வெளியேற்றி விட்டு அமெரிக்க நிறுவனங்கள் பிடித்துக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் ராணுவ கூட்டாளியான ரஷ்யாவையும் விரைவில் அமெரிக்கா வெளியேற்றும். அதற்கான அரசியல் – பொருளாதார பலம் அதனிடம் உண்டு. இந்தியாவை தன்பக்கம் ஈர்த்ததன் மூலம் அமெரிக்கா தனது பொருளாதார – ராணுவ சந்தை போட்டியாளர்களான சீனா – ரஷ்யா ஆகிய இருவரையும் ஒரே கல்லில் வீழ்த்தி இருக்கிறது. ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால் என அமெரிக்கா – சீனா – ரஷ்யா இடையே பயணித்த இந்திய வெளியுறவுக்கொள்கை முழுவதுமாக அமெரிக்காவின் இசைக்கேற்ப இனி இன்ப நடம் புரியும்.

உளவு ஒத்துழைப்பும் பதிலிப் போர்களும்

அதோடு எஸ்பர் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளை உள்ளடக்கிய உளவு கூட்டமைப்பான ஐந்து கண்கள் (Five Eyes) இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் எதிர்கொள்ளும் சவால்களை முறியடிக்க புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. இது தன்னுடைய இந்தியாவுடனான ஒப்பந்தப் பயணத்தில் பிரதிபலிக்கும் என்றார்.

இந்தப் பகுதியில் உள்ள சவால் சீனாதான் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. சீன வர்த்தகத்தின் உயிர்நாடியான இந்தியப் பெருங்கடல் முதல் அதன் கடல் எல்லைப் பகுதியான பசிபிக் பெருங்கடல் வரை தனது அணி நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளுடன் சுற்றி வளைக்கப்படுகிறது.

முக்கியமாக 4000 கிலோமீட்டர் அளவுக்கு சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அதன் நில எல்லை பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வாய்ப்பை அமெரிக்க ராணுவத்துக்கு வழங்குகிறது. அதுமட்டுமல்ல; சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியான திபெத்தில் உளவறியும் செயல்பாடுகளைக் கொண்டிருப்பதாகச் செய்திகள் உண்டு. இனி இந்த உளவுத் தகவல்கள் அமெரிக்க ராணுவத்துக்குத் தங்குதடைன்றி கிடைக்கும். அந்தச் சர்ச்சைக்குரிய பகுதிகளின் மனித உரிமை பிரச்சினைகள் மேலும் சர்வதேச கவனம் பெறும். போராட்டங்களுக்கும், வண்ணப் புரட்சிக்கும் கூட வாய்ப்பு உண்டு.

சீனாவின் உள்விவகாரங்களில் இந்தியா தலையிட்டால் சீனா இந்தியாவின் வடகிழக்கில் தலையிட வெகுநேரம் ஆகாது என ஏற்கனவே சீன பத்திரிகை எச்சரிக்கிறது. சில வடகிழக்கு மாநிலங்களில் இந்தியச் சட்டம் செல்லுபடியாகாது. ஏற்கனவே சில அமைப்புகள் விடுதலை வேண்டி போராடி வருகின்றன. ஆக, சீனப் பகுதிகளில் எந்த அளவு மனித உரிமை பிரச்சினைகள் வெடிக்கிறதோ அந்த அளவுக்கு இங்கே வட கிழக்கு இந்தியாவில் அமைதி நிலவும்.

01-1-3.jpgஇதுவரை காஷ்மீர் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளின் உள்விவகாரமாக இருந்து வந்தது. சிறப்பு சட்டப்பிரிவு 370 திரும்ப பெற்றபின் அது இந்தியா – பாகிஸ்தான் – சீனா ஆகிய மூன்று நாடுகளின் பிரச்சினையாகி இருக்கிறது. அங்கே நிலம் வாங்க அனுமதிக்கும் ஆணையை மத்திய அரசு பிறப்பித்திருக்கிறது. ஏற்கனவே அந்த பகுதியில் ஒரு நபருக்கு மூன்று ராணுவ வீரர்கள் என்ற அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். அது மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இனிவரும் காலங்களில் அதிகமாகலாம். ஆகவே பணம் உள்ளவர்கள் அங்கே நிலம் வாங்கலாம். பணமற்றவர்கள் உடனடியாக ராணுவ வேலைக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம்.

யாருடைய நலனைப் பாதுகாக்கும்?

பொதுவாக ராணுவம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தை, சந்தையை வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் அமைப்பு. இரு நாடுகள் ராணுவக் கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன என்றால் இரு நாடுகளுக்கும் பொதுவான பொருளாதார நலன்கள் இருக்கின்றன என்று பொருள். பில்லியன் டாலர் கணக்கில் இந்தியாவில் முதலீட்டுள்ள அமெரிக்காவின் அமேசான், வால்மார்ட், கூகுள் போன்ற நிறுவனங்களின் முதலீடுகளையும், இந்த நிறுவனங்கள் இந்தியாவில் கொண்டு வரப்போகும் திறன்பேசி உருவாக்கம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களையும் பாதுகாத்து, ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனமான போயிங் போன்ற நிறுவனங்களுக்குப் பல பில்லியன் பெறுமான ஆயுத ஏற்றுமதி வாய்ப்பை இந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

சீனா பொருளாதார ரீதியாக அமெரிக்காவுக்குப் பெரும் போட்டியாளராக வளர்ந்துள்ள நிலையில் அதன் எல்லை மற்றும் வர்த்தகக் கடல்வழி பாதையில் செல்வாக்கை ஏற்படுத்திக்கொண்டு அதன் மீதான அழுத்தத்தை அதிகரித்து அமெரிக்கா கட்டுப்படுத்த இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது. இதனால் நமக்கென்ன பலன் என்று கேட்டால், கொரோனாவைக் கட்டுப்படுத்துதல், பொருளாதார மீட்சி, உற்பத்தி சங்கிலி உருவாக்கம் (Supplier Chain) போன்றவற்றை குறித்து இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது பேசினோம் என்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். அம்பானியின் ஜியோ வளர்ச்சியைத் தவிர்த்து வேறு எந்த பொருளாதார நலன்களும் இதுவரை காணக் கிடைக்கவில்லை.

புதிய உற்பத்தி சங்கிலி

புதிய உற்பத்தி சங்கிலியை உருவாக்கப் போகிறார்கள் என்றால் அது என்ன விதமான உற்பத்தி முறைக்கான சங்கிலி. இந்தியா தற்போது வேகமாக செய்து வரும் மாற்றங்கள் புதிய மின்னணு பொருளாதார முறைக்கானதாக இருந்து வருகிறது.

ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து புதிய உற்பத்தி சங்கிலி நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. அம்பானி கொரோனாவுக்குப் பிறகு இலக்கு நோக்கிய (Targeted) குறிப்பிட்ட நிறுவனங்களுக்குக் கடன் வழங்கி புதிய உற்பத்தி சங்கிலியை உருவாக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார். அதுமட்டுமல்ல; புதிய பொருளாதார முறைக்கு ஏற்ப தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட தொழிலாளர்களை உருவாக்க வேண்டும். அதற்குக் குறைந்தது 10 வருடங்களாவது ஆகும் எனக் கூறி இருக்கிறார்.

இவை 1958இல் ஜப்பான் அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொண்ட ராணுவ ஒப்பந்த நிகழ்ச்சிக்கு அடுத்து நிகழ்ந்த பொருளாதார மாற்றங்களுடன் ஒப்பிடத்தக்கதாக உள்ளது. அதன் பிறகு அமெரிக்கா பொருளாதார ரீதியாக ஜப்பானுக்குச் சிறப்பு சலுகைகள் அளித்தது. ஜப்பான் தொழில்துறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் அசுர வளர்ச்சி கண்டது. எனில் இந்தியா ஜப்பானைப்போல வளருமா, அதற்கு வாய்ப்புள்ளதா என்பதை பிறதொரு தருணத்தில் பார்ப்போம்.

இருக்கும் உற்பத்தி சங்கிலியின் நிலை?

இது தவிர்க்க இயலாமல் தற்போது இந்தியாவில் உள்ள உற்பத்தியும், உற்பத்தி சங்கிலியும் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்தியாவில் 90 சதவிகிதம் ஆலை தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு, குறு நிறுவனங்கள் சீன உற்பத்தி சங்கிலியுடன் தற்போது நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது. அதிக தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் மருந்து, ஆடை, தோல், பொம்மை, இன்ஜினீயரிங் பொருள் உற்பத்தி செய்யும் சிறு, குறு நிறுவனங்கள் சீனாவின் மலிவான மூலப்பொருட்களையே பெரிதும் நம்பி உள்ளன. இந்த நிறுவனங்கள் அதிகம் ஏற்றுமதி செய்யும் முதல் 10 நாடுகளில் அமெரிக்கா, அரபு எமிரேட்ஸ் நாடுகளை அடுத்து ஹாங்காங் மற்றும் சீனா மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளன.

இந்திய சீன உறவுகளில் ஏற்படும் சிக்கல்கள் இந்த துறையில் பெரிதும் எதிரொலிக்கும். ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி நடவடிக்கைகளால் நலிந்து போய் இருக்கும் இந்த நிறுவனங்களை இந்த இந்திய – அமெரிக்க நெருக்கம் மேலும் அழிவை நோக்கியே நகர்த்தும். மொத்த தொழிலாளர்களில் 60 சதவிகிதம் பேர் சார்ந்திருக்கும் விவசாயத்தில் கொண்டு வரும் சீர்திருத்தங்கள் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஊகிக்க இயலாத நிலையில் இந்த புதிய அணி சேர்க்கையும், இந்தியாவின் மொத்த பொருளாதாரத்தை புதிய மின்னணு பொருளாதாரத்துக்கு ஏற்ப மாற்றி அமைப்பதும் புதிய வேலைவாய்ப்புகளை அளிக்குமா, இருக்கும் வாய்ப்புகளைப் பறிக்குமா என்பது விடைதெரியாதா கேள்வி.

பலன் தருமா? பலவீனமாகுமா?

முதல் தொழிற்புரட்சிக்குப் பிறகு பேருந்து, மகிழுந்து, கப்பல், ரயில் போன்ற நவீன பொருட்களுடன் இந்தியா வந்த ஆங்கிலேயர்கள் இந்திய விவசாயத்தை தங்களின் தேவைக்கேற்ப மாற்றி பசி பஞ்சத்தில் ஆழ்த்தி பலனடைந்தார்களா… இல்லை, தொழில்மயமான நவீன இந்தியாவை உருவாக்கினார்களா என்பதை இந்தத் தருணத்தில் எண்ணி பார்க்க வேண்டி இருக்கிறது.

1990களில் உலகமயத்தின்போது அதன் உற்பத்தி சங்கிலியில் மென்பொருள் உற்பத்தியில் ஈடுபட்ட இந்தியா அந்தத் துறையில் தன்னை தவிர்க்க இயலாத ஒரு நாடாகவோ, அந்த துறையில் புதுமைகள் படைத்து புதிய மதிப்புமிக்க பொருட்களை உற்பத்தி செய்து பெருமளவு வேலை வாய்ப்புகளையோ உருவாக்கி இருக்கிறதா? வீடுகளில் நவீன பொருட்கள் நிறைந்திருக்கின்றன. கைகளில் திறன்பேசிகள் விளையாடுகின்றன. இந்த அளவுக்கு வேலைவாய்ப்புகள் பெருகி இருக்கிறதா? பாதுகாப்பான தரமான வாழ்க்கையை அடைந்திருக்கிறதா?

பலம் பொருந்திய சீனாவை அமெரிக்காவின் தயவில்தான் இந்தியா எதிர்கொள்ள முடியுமா? இந்தியவை விட மிகச் சிறிய நாடான ஈரான் 90 சதவிகிதம் தனது ராணுவ தேவைகளை தாமே நிவர்த்தி செய்துகொள்ளும் மிகச் சில நாடுகளில் ஒன்றாகத் தன்னை வளர்த்துக்கொண்டு சொந்த பலத்தில் தன்னை காத்துக் கொள்கிறது. பஞ்சம் பட்டினி தலைவிரித்து ஆடுவதாக ஊடகங்கள் சொல்லும் வடகொரியா, கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணையையும், உலகின் மிகச் சில நாடுகள் மட்டுமே அடைந்திருக்கும் அணுகுண்டு சிற்றளவாக்க (Miniaturized) தொழில்நுட்ப மைல்கல்லையும் எட்டி யாரும் தன்னை தொட்டு பார்க்க முடியாது என சவால் விடுகிறது. இந்தியா சவுதிக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகம் ராணுவ தளவாடங்களை இறக்குமதி செய்யும் நாடாக இருக்கின்றது.

இலங்கையில் சொன்னது என்ன?

இந்திய பயணத்தை அடுத்து இலங்கை சென்ற பொம்பேயேவை அருகில் வைத்துக் கொண்டே இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் சுதந்திரமான இறையாண்மை மிக்க இலங்கை பக்கசார்பற்ற வெளியுறவு கொள்கையைக் கடைப்பிடிக்கும் என அழுத்தமாகச் சொல்கிறார். அமெரிக்காவின் உளவு விமானத்தை தென்சீன கடல் பகுதியை உளவு பார்க்க இந்தோனேசியாவில் அனுமதிக்க முடியாது. உங்களின் அதிகாரப் போட்டிக்கு எங்களை பலிகடா ஆக்காதீர்கள் என அந்நாடு தைரியமாக கூறுகிறது.

இந்தியாவும் அணிசேராக் கொள்கை, சுயமான பக்கசார்பற்ற வெளியுறவுக் கொள்கை, இடையீடு அற்ற சுதந்திரமான ராணுவம் போன்றவற்றை முன்னொரு காலத்தில் கொண்டிருந்தது. அந்த வரலாற்றைப் பற்றி பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கும் பழைய பாட நூல்களை வாங்கி படித்து இனி தெரிந்துகொள்ளலாம்.

மின்னம்பலம்

https://thinakkural.lk/article/85610

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.