Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பயணம் - கானா பிரபா

eelam-song.jpg

ஈழத்தில் போர்க்கால இலக்கியங்களின் ஆரம்பம் வீதி வழி நாடகங்களாகவும், பின்னர் இசை நாடகங்களாகவும், கதைகளாகவும், கவிதைகளாகவும், பரந்து விரிந்த போது இவற்றையெல்லாம் மீறிய கலைப்படைப்புகளாக வெளிவந்து ஆட்கொண்டவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.

இவற்றோடு வாழ்ந்து கழித்தவருக்கு பாடல்களைக் கேட்கும் போது எழும் உணர்வுக்கு வார்த்தை அலங்காரம் கட்ட முடியாது. ஈழத்தில் குறிப்பாக எண்பதுகள், தொண்ணூறுகளில் வாழத் தலைப்பட்டவருக்கு இம்மாதிரி அனுபவங்களைக் கேட்டவுடனேயே தம் கண் முன்னே தரிசிப்பர். அவ்வளவு உணர்வு பொருந்திய வரிகளைக் கொண்டமைந்து எமது வாழ்வியலோடு அந்தக் காலகட்டத்தில் கலந்து நின்றவை ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள்.

ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் பல இயக்கங்கள் போராட்டக் களத்தில் இருந்த அந்த எண்பதுகளில், எனது அண்ணன் முறையான ஒருவர் ரெலோ இயக்கத்தின் மீது மிகுந்த பற்றோடு இயங்கி வந்தவர். அப்போது தன்னுடைய வீட்டில் ஒரு ஒலிநாடாவை எடுத்து வந்து ஒலிபரப்பியபோது புதுமையாக இருந்தது. தமிழீழ விடுதலையை வேண்டிய பாடல்களின் தொகுப்பு அது.

தமிழ்த்திரையிசைப் பாடல்களைக் கேட்டு வளர்ந்த எமக்கு அப்போது அதைத் தாண்டிய ஜனரஞ்சக இசையாக “சின்ன மாமியே”, “சுராங்கனி” போன்ற பொப்பிசைப் பாடல்களும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் காலைச் செய்தி அறிக்கையோடு வரும் ஒரு சில மெல்லிசைப் பாடல்களும் தான் அறிமுகமாகியிருந்த வேளை இந்த எழுச்சிப் பாடல்களைக் கேட்டது ஒரு புதுமையான அனுபவமாக இருந்தது.

ஏனெனில் அன்றைய காலகட்டத்தில் ஈழ விடுதலையை வலியுறுத்தும் பிரச்சாரங்களுக்காப் பொதுமக்களை அணி திரள அழைக்கும் போது எல்லா இயக்கங்களுமே பொதுவில் சினிமாவில் வந்த எம்.ஜி.ஆரின் தத்துவப் பாடல்களையும் வேறு சில புரட்சிகரப் பாடல்களையுமே ஒலிபெருக்கி வழியே கொடுத்து மக்களின் கவனத்தைக் குவிக்க வைத்தார்கள்.

Screenshot-2020-11-23-10-48-28-316-org-m

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்”, “ஏமாற்றாதே ஏமாறாதே”, “அச்சம் என்பது மடமையடா” போன்ற பாடல்களோடு அன்று விஜய்காந்த் நடித்த ஆரம்பகாலப் படங்களில் வந்த புரட்சிகரமான பாடல்களும், குறிப்பாக “எங்கள் தமிழினம் தூங்குவதோ”, “தோல்வி நிலையென நினைத்தால்” போன்ற பாடல்களுமே பரவலான பிரச்சாரப் பாடல்களாக அறிமுகமாகியிருந்தன.

இதன் பின்னர் ஒரு இடைவெளி.

1990 ஆம் ஆண்டு நல்லூர்த்திருவிழாவிற்குப் போகின்றேன். வழக்கம் போல அதிக நேரம் கோயிலின் உள் மினக்கெடாமல் வெளியே வந்து சந்திரா ஐஸ்கிறீமில் வாங்கிய சொக் ஐஸ்கிறீமை நக்கியவாறு திருவிழாவிற்காக முளைத்த தற்காலிகமான கடைத்தொகுதிகளில் மேய்கின்றேன். அப்போது கண்ணிற் பட்டது ஒரு அங்காடி. அங்கே குவிந்திருக்கும் தாயக வெளியீடுகளோடு “களத்தில் கேட்கும் கானங்கள்” பாடற் போழைகள். என்னுடைய சுய நினைவுகெட்டியவரை பகிரங்கமாக ஒரு அங்காடியில் தாயக கீதங்களை விற்பனைக்காக வைத்திருந்தது அதுவே முதல் முறையாக இருந்தது. தொடர்ந்து வந்த நல்லூர்த்திருவிழாக்காலங்களில் இந்தப் பாடல்கள் கோயில் வீதிகளில் முழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

1987 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்துடனான எதிர்பாராத யுத்தம், தொடர்ந்த மூன்றாண்டு வனவாசம் கழிந்து தமிழீழ விடுதலைப்புலிகள் சொந்த மண்ணில் வியாபித்த வேளை, இந்த “களத்தில் கேட்கும் கானங்கள்” ஒரு முக்கியமான வரலாற்றுத் திருப்புமுனை விளைந்த காலத்து உணர்வுப்பதிவுகளின் பாடல் வடிவமாக விளைந்திருக்கின்றது. ஒவ்வொரு பாடல்களுக்கும் முன்னர் கவிஞரின் அறிமுகமும் அதையொட்டிய அடி நாதத்தில் பாடல்களுமாக அமைந்திருக்கும்.

இந்திய இசையமைப்பாளர் தேவேந்திரன் இசையில் புதுவை ரத்தினதுரையின் பாடல் வரிகளை ஜெயச்சந்திரன், மலேசியா வாசுதேவன், பி,சுசீலா உள்ளிட்ட தமிழகத்து முன்னணிப் பாடகர்கள் பாடியிருந்தார்கள். “நடடா ராஜா மயிலைக் காளை நாளை விடியப் போகுது” என்று மலேசியா வாசுதேவனும், “பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே” என்ற பாடலை ஜெயச்சந்திரனும், “கண்மணியே கண்ணுறங்கு” என்று பி.சுசீலாவுமாகப் பாடிய பாடல்களோடு அந்த ஒலி நாடாவில் வந்த ஏனைய பாடல்களும் வெகுஜன அபிமானத்தைப் பெற்றுக் கொண்டன.

இன்னமும் “வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டிலிருந்தொரு சேதி சொல்லு” என்று வாணி ஜெயராமும் “தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்” என்று காதலர் தம் தாயக நிலையை உணர்ந்து களமாடப் போகும் ஜோடிப் பாடலும் கூட இதில் சேர்த்தி.

அந்தக் காலகட்டத்தில் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப்பாடல்களுக்கு இசை வடிவம் கொடுப்பதில் அமரர் எல்.வைத்தியநாதன் (எழாவது மனிதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர்), தேவேந்திரன் (வேதம் புதிது போன்ற படங்களின் இசையமைப்பாளர் போன்றோரின் பணி வெகு சிறப்பாக அடியெடுத்துக் கொடுத்தது.

 maxresdefault.jpg

                (தேவேந்திரன்)

இந்திய இராணுவம் ஈழ மண்ணை விட்டு விலகிய பின்னர், ஈழப்போராட்டக் களத்திலும் முன்னர் அவ்வளவாகப் பொதுமக்களோடு அந்நியோன்யம் பாராட்டாது இருந்த போராட்ட வடிவமும் முழுமையான மக்களை ஒன்றிணைத்த போராட்ட வடிவமாக மாற்றமடைய பிரச்சாரப் பிரிவின் முயற்சிகள் தீவிரமாக அமைந்திருந்தன. இதன் முன்னோடி முயற்சிகளாக 86, 87 ஆம் ஆண்டுகளில் எங்களூர் சந்துபொந்தெல்லாம் ஒரு சிறு வாகனத்தில் தியாகி திலீபன் சிறு ஒலிபெருக்கியோடு பிரச்சாரப்படுத்தியதும் நினைவுக்கு வருகிறது.

விடுதலைப் புலிகளின் பிரச்சாரப் பிரிவு மற்றும் கலை பண்பாட்டுப் பிரிவு போன்றவற்றின் களப்பணிகளுக்கு ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் பேருதவியாக அமைந்திருந்தன.

இந்திய இராணுவம் போன கையோடு யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் பெரும் எடுப்பிலான இசைக்கச்சேரி நடக்கிறது. அதில் தேனிசை செல்லப்பாவும், பாடகி சுவர்ணலதாவும் (இவர் தமிழ் சினிமாவின் பிரபல பாடகி ஸ்வர்ணலதா அல்ல) பங்கேற்றுச் சிறப்பித்திருந்தார்கள்.

எந்த அடக்குமுறை வாழ்விலும் சுயாதீன முயற்சி தீவிரமடையும் என்பது ஈழத்துப் போர்க்காலப் பாடல்களுக்கும் பொருத்தமாக அமைந்தது. தொண்ணூறுகளில் மீண்டும் தீவிரப்பட்ட போர்க்காலத்தில் கடுமையான பொருளாதாரத் தடை, மின்சாரத் தடை, முன்பு போல தமிழகத்தோடு இணைந்திருந்த தகவல் போக்குவரத்தும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற நிலை வந்த போது ஈழத்தில் பல தன்னிறைவு நோக்கிய செயற்பாடுகள் பிறக்கின்றன.

அப்போது தான் ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்னும் வீரியம் பெற்று எழுகின்றன. ஆனால் இம்முறை ஈழத்தின் பாடகர்களை, இசையமைப்பாளர்களை, கவிஞர்களை ஒருங்கிணைத்து அவை இன்னொரு புதிய வடிவில் மக்களை எட்டிப் பரவலான வெகுஜன அந்தஸ்தை அடைகின்றன.

பள்ளிக்காலத்தில் யாழ்ப்பாணத்துக்குச் சைக்கிள் வலித்து டியூஷன் சென்ரர் நோக்கிய பயணத்தில் அப்போது கஸ்தூரியார் றோட்டில் இருந்த இசையருவி என்ற ஒலிப்பதிவுக் கூடத்தைக் கடக்கும் போது ஏதோ ஏவி.எம் இன் ஒலிப்பதிவுக் கூடத்தைத் தாண்டுவது போல பிரமை இருக்கும். அந்த இடத்தில் தான் இப்போது லிங்கன் கூல்பார் சற்றுத் தள்ளி இருக்கிறது.

“மின்சாரம் இல்லை. ஒலிப்பதிவு செய்வது என்று சொல்வதென்றால் ஸ்பூன் மெஷினில் நாங்கள் ரெக்கோர்டிங் செய்யும் போது ஒரு ரேப்பையே கிட்டத்தட்ட ஏழெட்டு ஒலிப்பதிவு நாடாக்கள் உருவாவதற்கு பாவித்திருக்கின்றோம். “கரும்புலிகள்” தொடக்கம் பல இசைத்தட்டுக்கள் தொடங்கிய வரலாறு அப்படித்தான் இருந்தது. ஒரு பாடல் தொகுதி ஒலிப்பதிவு செய்து முடிந்த பின், மாஸ்ரர் கசற்றில் ரெக்கோர்ட் பண்ணிவைத்து விட்டு அதை அழித்து திருப்பி புதுப்பாடல்களை ரெக்கோர்ட் பண்ணுவது.

அப்போது தரம் போய் விடும். அப்படியான வசதியீனங்களுக்கு மத்தியில் தான் எமது ஒலிப்பதிவு எல்லாம் நிகழ்ந்தன. அப்படியான சூழ்நிலையிலே பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் நினைவு கூரப்படவேண்டியவர்கள்.” இப்படியாக முன்னர் எனக்களித்த பேட்டியில் அன்று எழுச்சிப் பாடல்களில் முன்னணியில் திகழ்ந்தவர்களில் ஒருவரான வர்ண இராமேஸ்வரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.

இதே நிலையில் அப்போது எழுச்சிப் பாடல்களை விரும்பிக் கேட்ட ரசிகர்களும், ஒலிப்பதிவு நாடாவை ரேப் ரெக்கோர்டரில் பொருத்தி விட்டு, சைக்கிள் ரிம் ஐச் சுத்தி, அதில் பொருத்தியிருக்கும் டைனமோவால் மின்சாரத்தை இறக்கிப் பாட்டுக் கேட்பார்கள். அதைப் பற்றிப் பேச இன்னொரு கட்டுரை தேவை.

ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில், அமரர் பிரம்மஶ்ரீ நா.வீரமணி ஐயர், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் காசி ஆனந்தன், பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் போன்றோருடன் மேஜர் சிட்டு போன்ற அப்போதைய போராளிகள், பின்னாளி மாவீரர்களாகிப் போனவர்களும் இணைந்து கொள்ள திரு.வர்ண இராமேஸ்வரன், திரு.பொன் சுந்தரலிங்கம், திரு எஸ்.ஜி.சாந்தன் போன்ற ஆண் பாடகருடன் பெண் பாடகிகளில் பார்வதி சிவபாதமும் பரவலான வெகுஜன அபிமானம் பெற்றுத் திகழ்ந்தனர். பின்னாளில் திருமலை சந்திரன், குட்டிக்கண்ணன் என்று இன்னும் பல்கிப் பெருகினர்.

“கடலினக்கரை போனோரே” என்ற பாடலை அந்தக் காலத்து ஈழத்தவர்களும் சொந்தம் கொண்டாடி ரசித்தனர். அதற்குப் பின்னர் நெய்தல் நிலத்துப் பெருமையைக் கொண்டாடிய பாடல்களைத் தம் தலைமேல் சுமந்து போற்றிய தொகுப்பாக ‘ நெய்தல்” என்ற இசைத்தொகுப்பு வெளிவந்தது.

இசைவாணர் கண்ணன் இசையில் பார்வதி சிவபாதம் , சாந்தன் உட்படப் பல பாடகர்கள் பாடியிருந்தார்கள். “ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன்”, “கடலலையே கொஞ்சம் நில்லு”, “முந்தி எங்கள் பரம்பரையின் கடலம்மா”, “‘நீலக்கடலே”, “புதிய வரலாறு” “கடலதை நாங்கள்”, “வெள்ளிநிலா விளக்கேற்றும்”,”நாம் சிந்திய குருதி”, அலையே நீயும்” என்று அந்த ஒன்பது பாடல்களுமே முத்தான பாடல்கள்.

இன்றும் நினைவிருக்கிறது தொண்ணூறாம் ஆண்டு காலத்தில நாங்கள் விலை கொடுத்து “நெய்தல்” கசற் வாங்கி, டைனமோவில மின்சாரம் எடுத்து றேடியோவில அந்தப் பாடல்களைக் கேட்டது. கூல்பார் பாட்டுக்களிலும் “நெய்தல்” பாடல்கள் தான் இடம்பிடித்தன.

என்னைப் பொறுத்தவரை ” கடலினக்கரை போனோரே” என்ற சினிமாப் பாடலை எப்படி இன்னும் கேட்டுக்கேட்டு ரசிக்கிறேனோ அதே அளவு உயர்ந்த இசைத்தரத்தில் தான் பார்வதி சிவபாதம் பாடிய ” கடலலையே கொஞ்சம் நில்லு” பாடலையும் சாந்தன் பாடிய “வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்” பாடலையும் ரசிக்கின்றேன், எள்ளளவும் குறையாமல்.

மேலே கழுகுக் கண்ணோடு சுற்றும் விமானங்களின் கண்ணில் அகப்படாமல் கொழும்புப் பயணத்துக்காக யாழ்ப்பாணத்தில் இருந்து ஊரியான், கொம்படிப் பாதையால் மேடு, பள்ளம், நீர்க்குட்டை எல்லாம் தாண்டி இரவைக் கிழித்துக் கொண்டே கிளிநொச்சியால் பயணிக்கும் தனியார் பஸ்ஸில் எழுச்சிப் பாடல்கள் களை கட்டும். ஒரு விடிகாலை வேளையில் விசிலடித்துக் கொண்டே பாடும் ஒரு எழுச்சிப் பாடல் (பாடல் பெயர் மறந்து விட்டது) அந்த நேரத்தில் கொடுத்த இனிமை இன்றும் இருபத்தைந்து வருடங்கள் கழித்தும் இனிக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் வேடிக்கையான சில நிகழ்வுகளும் நடந்ததுண்டு. ஊரில் இருக்கும் சின்னன் சிறுசுகளுக்கும் எழுச்சிப் பாடல்கள் மனப்பாடம். குறிப்பாக “காகங்களே காகங்களே காட்டுக்குப் போனிங்களா” போன்ற மழலைக் குரலில் ஒலித்த பாடல்கள். ஒருமுறை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கடந்து வவுனியாவுக்கான பயணத்தில் தாண்டிக்குளத்தில் வைத்து இலங்கை இராணுவச் சோதனைச் சாவடி. அந்த நேரம் பயணித்தவர்களில் ஒரு இளம் தம்பதியும், ஒரு சிறுமியும். அப்போது இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் அந்தச் சிறுமியின் துறுதுறுப்பைக் கண்டு ஒரு பாடல் பாடச் சொல்லிக் கேட்க, அந்தப் பிள்ளை “எதிரிகளின் பாசறையைத் தேடிச் செல்கிறோம்” என்று பாடவும், நல்லவேளை அவன் ஏதோ சினிமாப்பாட்டு என்று விட்டுவிட்டான்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கல்வி நோக்கில் தங்கி வாழ வரும் இளைஞர்கள் ஒளித்து மறைத்து இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைச் சினிமாப்பாடல்கள் போலப் பதிவு பண்ணிக் கேட்ட சம்பவங்களை அனுபவித்ததுண்டு .

புலிகளின் குரல் வானொலி பின்னர் தன் ஒலிபரப்பின் இன்னொரு பரிமாணமாக தமிழீழ வானொலியை உருவாக்கிய பின்னர் இந்த எழுச்சிப் பாடல்கள் நேயர் விருப்பப் பாடல்களாகக் கேட்டு மகிழவும் வாய்ப்பை வழங்கியது.

pulikalinkural_hd_fm.jpg

“ஆதியாய் அநாதியாய் அவதரித்த செந்தமிழ்” என்று பரணி பாடுவோம் பாடல் தொகுப்பிலிருந்து ஒலிபரப்பும் பாடல் எல்லாம் அந்தக் காலகட்டத்தில் பிரசித்தமானவை.

யாழ்ப்பாணம் பஸ் ஸ்ராண்டிலும், தட்டாதெருச் சந்தியிலும் என்று முக்கியமான கேந்திரங்களில் பெரும் ஒலிபெருக்கி பொருத்தி இந்த வானொலி தன் ஒலிபரப்பை எல்லோருக்கும் காற்றலையில் தவழ விடும். எனவே மின்சாரம் இல்லாது பாடல் கேட்கவும், செய்தி அறியவும் வக்கற்றவர்களுக்கு அது திசை காட்டும்.

ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞர்கள் கானமூர்த்தி, பஞ்சமூர்த்தி இரட்டையர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எழுச்சிப்பாடல்கள் நாதஸ்வர இசையாகவும் வாசிக்கப்பட்டு வெளியாயின.

“செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன் தமிழ் தெய்வமான கந்தனே உன் வீதி படுத்தேன்” என்று நல்லூர்த் திருவிழாவின் போது கர்நாடக இசை மேடைகளுக்கு நிகராக “நல்லை முருகன் பாடல்கள்” வெளிவந்தன. ஈழத்துச் சனத்தின் துன்பியல் தோய்ந்த போர்க்கால வாழ்வியலை நல்லூர் முருகனுக்கு ஒப்புவித்துப் பாடிய அந்தப் பாடல்களை புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுத வர்ண இராமேஸ்வரன் பாடியிருந்தார். நல்லூர்த் திருவிழாவின்இசைக்கச்சேரியாகவும் படைத்திருந்தார்கள்.

“எங்களுடைய தேவார திருவாசகங்களிலே கூட எத்தனையோ விடுதலை உணர்வை வெளிப்படுத்தக் கூடிய பாடல்கள் இருக்கின்றது. “நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்” அப்படிப் பல பாடல்கள் இருக்கின்றன. அவற்றைக் கூட இவர்கள் எடுத்துப் பாடியிருக்கலாமே என்று புதுவை இரத்தினதுரை அண்ணா ஆதங்கப்பட்டார். அப்போது நான் சொன்னேன், “நீங்களே எழுதுங்களேன், நாங்கள் அவற்றை படிப்போம்” என்று.

எங்களுடைய இசைக் கலைஞர்களிடம் போய்க் கேட்டபோது “இல்லையில்லை சங்கீதம் என்றால் இப்படித்தான் பாடவேணும், இப்படியெல்லாம் செய்யமுடியாது” என்ற போது நாங்கள் சவாலாக எடுத்து புதுவை அண்ணா பாடல்கள் எழுத நான் எனது கச்சேரியில் பாடினேன்” என்று இந்தப் பாடல்களின் உருவாக்கத்தை என்னோடு பகிர்ந்த வானொலிப்பேட்டியில் வர்ண இராமேஸ்வரன் அவர்கள் நினைவு கூர்ந்தார்.

“இந்த மண் எங்களின் சொந்த மண் இதன் எல்லையை மீறி யார் வந்தவன்’ என்று தொடங்கும் பாடலின் முதல் அடிகளைக் கொண்டு வெளிவந்த இந்த மண் எங்களின் சொந்த மண் இசைவட்டில் இடம்பிடித்த “ஏறுது பார் கொடி ஏறுது பார்” பின்னர் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றத்தின் போது பாடப்படும் பாடலாக அமைந்து வருகின்றது. அதே இசைத்தட்டில் வெளியான “விண்வரும் மேகங்கள் பாடும்” பாடல் உள்ளிட்டவை பிரசித்தமானவை.

பின்னாளில் தேனிசை செல்லப்பாவால் பாடிப் பிரபலமான “அழகான அந்தப் பனைமரம்” உள்ளிட்ட பாடல்களோடு தமிழகத்தில் இருந்து மீண்டும் பிரபல பாடகர்களான எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஹரிஹரன், உன்னிமேனன், உன்னிகிருஷ்ணன், நித்யஶ்ரீ போன்ற பாடகர்களால் பாடி அளிக்கப்பட்ட தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து வெளிவந்த போர்க்கால எழுச்சிப் பாடல்கள் எண்பதுகளில் இருந்த சூழலை நினைவுபடுத்துகின்றன.

 28-prabhakaran-arivumathi300.jpg

அறிவுமதி போன்ற தமிழகத்துக் கவிஞர்களும், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனும் இணைந்து கொள்கின்றார்கள். இவர்களில் தேனிசை செல்லப்பாவே பரவலான கவனிப்பைப்பெற்ற பாடகராக தொண்ணூறுகளின் இறுதிப் பகுதியில் இருந்து விளங்கினார்.

95 ஆம் ஆண்டில் வன்னிப் பெருநிலப்பரப்பில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசாங்கம் இயங்கிய போது ஈழத்துத் திரைப்படங்களோடு, போராளிக் கவிஞர்கள், போராளிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர்கள் பரவலாக இந்தப் பாடல் வெளியீட்டு முயற்சிகளில் இயங்கினர்.

தமிழீழ இசைக்குழு வழியாக பாடல் இசைத்தட்டுகள் வெளியாயின. சமகாலத்தில் புலம்பெயர்ந்த மண்ணிலும் ஈழத்துப் போர்க்காலப் பாடல்களின் இசைத் தொகுப்புகள் அந்தந்த நாடுகளில் இருந்தும் வீரியம் பெற்று வருகின்றன. அந்த வகையில் ஜேர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வெளிவந்தவை அதிகம். டென்மார்க்கில் இருந்து வெளி வந்த ஒரு சில இசைத்தட்டுகளும் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்தவை. மலேசியத் தமிழர்களால் வெளியிடப்பட்ட ஈழ விடுதலைக்கான உணர்வு பொருந்திய பாடல்கள் தனியே குறிப்பிடவேண்டியவை. 1995 ஆம் ஆண்டிலியிருந்து 2009 இறுதிக்கட்டப் போருக்கு முன்பாக வெளியான பாடல்கள் ஆயிரத்தைத் தாண்டும்.

இந்தக் காலகட்டத்தில் தமிழீழத் திரைப்படங்களின் பாடல்கள் என்ற வகையிலும் எழுச்சிப் பாடல்களின் கிளை தோன்றியது. ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களில் போராளிகளின் பங்கு, தமிழீழத் திரைப்படப் பாடல்கள், புலம்பெயர் சூழலில் பிறந்த ஈழ தேச நேசிப்பும், எழுச்சியும் மிகுந்த பாடல்கள் போன்றவை தனியே எடுத்து ஆய்வு செய்ய வேண்டியவை.

வெறுமனே போர்ப் பிரச்சாரங்கள் தாங்கிய பாடல்களாக அன்றி ஈழத்தின் இயற்கை வனப்பையும், தமிழின் சிறப்பையும் போற்றிப் பாடும் பாடல்களாகவும் இந்த ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்கள் நிலைபெற்றிருந்தன.

“மீன்மகள் பாடுகிறாள்” போன்ற பாடல்களின் வழியே தமிழீழ மண்ணின் எழில் மீதான நேசிப்பும், “அழகான அந்தப் பனைமரம்” ஆகிய பாடல்கள் ஈழத்து வாழ்வியலின் நனவிடை தோய்தலாகவும், “கண்மணியே கண்ணுறங்கு” போர்க்காலத்தில் பிறந்த குழந்தைக்குரிய தாலாட்டாகவும், “படையணி நகரும்” போர்க்களத்தில் பெண் போராளிகளின் பங்கையும், “மாவீரர் யாரோ என்றால்”, “மானம் என்றே வாழ்வெனக்கூறி மண்ணில் விழுந்தான் மாவீரன்” போன்ற பாடல்கள் சமர்க்களத்தில் களமாடி மடிந்த வீரர் பெருமையை எடுத்துரைப்பவையாகவும், “வெள்ளி நிலா விளக்கேற்றும் நேரம் கடல் வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்” போன்ற நல்லுதாரணங்கள் தொழிலாளர் சக்தியின் ஓசையாகவும், “செந்தமிழால் உந்தனுக்கு மாலை தொடுத்தேன்” பாடல்கள் வழியே போர்க்காலத்துப் பக்தி இசை வடிவமாகவும், “கிட்டடியில் இருக்குதடா விடுதலை”, “பட்டினி கிடந்து” ஆகிய பாடல்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி நிற்பவையாகவும், “என் இனமே என் சனமே” போன்ற பாடல்களால் போராளிக்கும் சமூகத்துக்குமான உறவின் வெளிப்பாடாகவும், “பூத்தகொடி பூவிழந்து” பாடல்களின் வழியே போரின் ரணத்தைப் பதிவு செய்தும், “காகங்களே காகங்களே” இன்ன பிற பாடல்களால் சிறுவரை இணைக்கும் போர்க்கால இசைப் பாடல்களாகவும்,

“பொங்கிடும் கடற்கரை ஓரத்திலே” வழியாக தலைவனின் மாட்சிமையையும் காட்டி நிற்கும் பாடல்களாகவும் இந்த ஈழ எழுச்சிப் பாடல்களின் அடித்தளம் வெறுமனே பிரச்சாரப் பாடல்கள் அன்றிப் பரந்து விரிந்து பல்வேறுவிதமான பின்னணியோடு அமைந்திருப்பது அவற்றின் தனித்துவத்தைப் பறைசற்றுகின்றன. இன்னொருபுறம் தனியே மெல்லிசை என்ற கட்டுக்குள் நில்லாது சாஸ்திரிய இசையை அரவணைத்தும், பைலா போன்ற மேலைத்தேய இசைவடிவங்களைத் தொட்டும் (உதாரணம் அப்புஹாமி பெற்றெடுத்த) இந்தப் பாடல்களின் வடிவம் ஒரு கட்டுக்குள் நில்லாது அமையப்பெற்றிருக்கின்றன.

“ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடிக்க முனையும் பூனை” என்று வான்மீகி இராமாயணத்தைத் தமிழில் எழுதும் போது கம்பர் சொன்ன அவையடக்கம் போன்றது என்பதுகளின் இறுதி தொட்டு 2009 வரையான முப்பது ஆண்டுகளில் இயங்கிய ஈழத்துப் போர்க்கால எழுச்சிப் பாடல்களைத் தொட்டுப் பேசுவது.

பல்கலைக் கழக மட்டத்தில் இன்னமும் விரிவாக ஆய்வுக்குட்படுத்த வேண்டிய ஒரு இசைப்பண்பாடு இந்தப் போர்க்கால எழுச்சிப் பாடல்களின் பங்களிப்பு.

– கானா பிரபா

https://vanakkamlondon.com/stories/2020/11/91777/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.