Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர்கள் விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள்

Maaveerarkal-Uttamas-who-gave-their-live

மாவீரர்கள் – விடுதலைக்கு உயிர்தந்த உத்தமர்கள்; மாவீரர் நாள் – தமிழீழத் தேசியத் திருநாள்.

எமது தேசம் விடுதலைபெற வேண்டும். எமது மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, தன்னாட்சி உரிமைபெற்று தன்மானத்துடன் வாழவேண்டும் என்ற உயரிய இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எம்முயிர்ப் போராளிகளை, நாம் எமது இதயக்கோவிலில் பூசிக்கும் புனித நாள் இன்று.

உலக வரலாற்றில் எங்குமே, எப்பொழுதுமே நிகழ்ந்திராத அற்புதமான தியாகங்கள் இந்த மண்ணில் நிகழ்ந்திருக்கின்றன. மனித ஈகத்தின் உச்சங்களை எமது போராட்ட வரலாறு தொட்டு நிற்கிறது. இந்த மNhகன்னதமான தியாக வரலாற்றைப் படைத்தவர்கள் எமது மாவீரர்கள்.

எமது விடுதலைக் காப்பியத்தின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், ஒவ்வொரு பக்கத்திலும், ஒவ்வொரு பந்தியிலும் எமது மாவீரர்களின் தியாக வரலாறு நெருப்பு வரிகளால் எழுதப்பட்டிருகிறது.

– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
(1994ம் ஆண்டு மாவீரர் நாள் செய்தியிலிருந்து…)

Maaveerarkal-Uttamas-who-gave-their-live

தழைக்க ஓங்கித் தமிழீழப் பொழில்
முளைக்க நீயே முதல்விதை ஆனாய்!

உலக விடுதலை வரலாறுகளில் உன்னதமானது நம் தமிழீழத் தேச விடுதலை வரலாறு. உலகே காணாத அளவுக்கு – பிரமிப்பு அடையும் அளவுக்கு தியாகங்களால் அர்ப்பணிப்புக்களால் நிறைந்து அசைக்கமுடியாத உறுதி கொண்டது நம் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டம். “தத்துவங்கள், உண்மைகள் வனமுறைக்கு உள்ளாக்கப்படும் பொழுது தேசிய இயக்கங்கள் பிறக்கும்” என்ற எர்னஸ்ட் கில்னரின் தேசிய வாதங்கள் குறித்த ஆய்வுக்கு உதாரணமாகத் திகழ்வது நம் தமிழீழத் தேச வரலாறு. ஒரு மக்கள் இனம் தம்; தேசத்திற்காக தங்கள் உயிர்களையே கொடுக்கத் தயாராகும்பொழுது அதற்கு தேச இனமெனும் தகுதி தானாகவே வந்துவிடும் எனும் தோமஸ் கைலாண்ட் எரிக்சனின் கூற்றுப்படி, தமிழீழ மக்கள் தமது தியாகங்களினால் தாம் தமிழீழ தேச மக்கள் என்ற தகுதியை உலகுக்கு நிரூபித்து நிற்கின்றனர். “எங்களுக்கு வித்தே வேண்டாம். நாங்கள் வேரிலிருந்து முளைவிடும் சக்தி. எங்களைக் கூட்டிக்குவித்து தீயிலிடு. மறுநாள் சாம்பரிலிருந்து பிறப்போம். வெட்டிச் சரித்து புதைத்திடு. மூன்றாம் நாள் எங்கள் முகம் தெரியும்-இதுதான் தமிழ் இனம்” எனப் வீரப்பாட்டிசைத்து நிற்கும் உணர்ச்சிச் சமுதாயம் எம் தமிழீழச் சமுதாயம். இந்த வீர உரைக்கு, கவிதை வரிகளுக்கு சரித்திரச் சாட்சிகளாக விளங்குபவர்கள் நமது மாவீரர்கள். சந்ததி காக்க நடக்கும் சமரில் சந்ததிக்காக தம் உயிர் தந்து, மண்ணுக்காய் மண்ணை முத்தமிட்டு சாவையும் சரித்திரமாக்கியவர்கள். எங்கள் வாழ்வின் விளக்கொளிர மெழுகாய் உருகியவர்கள். இவர்களின் கல்லறைகளும் கருத்தரிக்கும்.

Maaveerarkal-Uttamas-who-gave-their-live

தேசத்தின் புதல்வியவள்
தேடினாள் விடியலையே.
தேசமே பெரிதென்றெண்ணி
தானைத் தலைவன் அணி நின்றாள்.
புது நானூறு படைத்தளிக்க
புலிப் பெண்ணாய் முன் எழுந்தாள்.

மாவீரர்கள் காலால் நடந்து, வாயால் மொழிந்து, கையால் தலைவாரிக் கொண்டு எம்மைப் போல் ஒருவராய் வாழ்ந்த தமிழீழக் குடிமக்கள். ஆனால், அவர்கள் நெஞ்சிலே எரிந்த விடுதலைக் கனல் மட்டும் அவர்களை மானிடத் தெய்வங்களாக உயர்த்தியது. இந்த விடுதலைக்கனல், அவர்களை உயிர்ப் பூவைக் கிள்ளி எடுத்து விடுதலைக்கு விலைகொடுக்கும் வித்தியாசமான தெய்வப் பிறவிகளாக மாற்றியது. அவர்கள் தேவை அறிந்து போராடியவர்களே அன்றி, சாவை விரும்பிச் சந்தித்தவர்கள் அல்ல. இவர்கள் வசந்தம் தழுவாத கொடிகளோ முகில்கள் முட்டாத முகடுகளோ அல்ல. இதயத்தால் இரும்பானவர்களும் அல்ல. பனியாய் உருகும் நெஞ்சுக்குள் பாகாய் இனிக்கும் வார்த்தைகளுக்கும் இவர்களே உரிமையாளர். தடைகள் கோடியென்றாலும் படைகள் தேடி வந்தாலும் விடைகள் எங்கள் தோள்களில் உண்டு எனக் களம் புகுந்த வேங்கைகள் இவர்கள். வீரர்கள் என்றும் சாவதில்லை; வித்தியாசமான சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை என உணர்ந்த இவர்கள், தோல்வியைக் கண்டு துவள்வதில்லை. சலுகைகளுக்குத் தட்டேந்திய எமது தேச வரலாற்றை, உரிமை தேடும் திசையில் திருப்பிய காலத்தின் கல் அணையான தேசத்தலைவன் பிரபாகரன் தென்றலின் சிறு கால்களில் கூட புயலின் வேகத்தைப் பூட்டிய பிதாமகன் என்பதை உலகுக்கு நிரூபித்த சாதனையாளர்கள். தலைவர் பிரபாகரனின் கண்ணில் எழும் பொறிகள் ஆணையிடும் போதினிலே, தேசக் கடமைக்காய் தேகத்தை விடுத்து தேசிய ஆன்மாவாய் எழுந்தவர்களே நம் மாவீரர்கள். அழுவதும் தொழுவதும், அடுத்தவர் எமது உரிமையைப் பெற்றுத் தந்திடமாட்டாரா என ஏங்குவதுமாய் சலுகைகள் பெற்றும் சரணாகதி அடைந்தும் செத்துப் பிழைத்தும் மானிடராய் வாழ்ந்த மக்கள் வரலாறு மாவீரர்களின் எழுச்சியால் மாற்றப்பட்டது.

இதனால், எம் தேச வரலாற்றில் ஒரு புது அத்தியாயமாக எங்கள் மாவீரர் நாள் எழுச்சி பெற்றது. மரணமில்லாத மனித குலம் ஒன்று இந்த மண்ணில் வாழ வேண்டும் என்ற கவிஞனின் கனவு என்ற காலத்தை மாற்றி, தமிழீழத் தேச சரித்திரத்தின் நனவுக் காட்சியாய் விளங்குகிறது மாவீரர் நாள். சதையைக் கிழித்து, சத்தியத்தை இலட்சியத்தை சிதைத்துவிடலாம் என்ற சின்னப் புத்தி சிங்களப் பேரினவாதிகளுக்கு சிதையிலிருந்தும் போராட்டத்துக்கான உயிர்ச் சக்தி ஊற்றெடுத்துப் பாயும் எனக்காட்டிய சாதனையாளர்கள் நம் மாவீரர்கள். தன்நலம் பேணும் சுயநல நெஞ்சங்கள் நிறைந்த இன்றைய உலகில் நிதம் உங்களதும் எங்களதும் நல்வாழ்வு நினைந்து சந்ததி வாழத் தம்முயிர் தந்த தன்னலம் பேணாப் பெருந்தகையாளர்களே மாவீரர்கள். அவர்களது ஆன்மா தேசத்தின் விடுதலைக்காய் விடுபட்ட காரணத்தால் – அவர்களின் சாவு எங்களின் வாழ்வாகியதன் காரணத்தால் – மாவீரர் நாள் தமிழீழத் தேசத்தின் தேசிய தினமாகி தமிழீழ மக்கள் எங்கு வாழ்ந்தாலம் அவர்கள் வாழ்வின் புனித நாளாக விளங்குகிறது.

மாவீரர்கள்!
நெஞ்சில் விடுதலைக் கனலைச் சுமந்தீர்
நெருப்பினில் ஆடியும் தேகம் இழந்தீh
உங்களின் நினைவுடன் பயணம் தொடரும
ஒருநாள் வெற்றிக் கொடிகள் உயரும்

Maaveerar-Thuyilum-Illam.jpg

இது தமிழீழ மக்களின் உறுதியின் வெளிப்பாட்டுத் தினம். எம் மாவீரர்களில், களமாடித் தாயக மீட்புக்காய் களத்திலே வித்தாகிய உத்தமர்கள் – தம் சாவுக்குத் தேதி குறித்து அந்தச் சாவையும் தமிழீழ விடுதலையின் வெற்றிச் சரித்திரமாய் மாற்றிவிடும் கரும்புலித் தியாகிகள். இவ் மாவீர மனிதர்கள் விளைகின்ற தமிழீழத் தேசம் வீரத் திருநாடாய் விளங்குகின்றது. கரி, பரி, தேர், காலாட்படை கொண்டு யாழ் – வன்னி அரசர்கள் ஆண்டமை நேற்றைய வரலாறு. ஆனால், உயிராயுதம் எனும் புதுப்படை கொண்டு சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக தன் தாயகத்தை மீள மீட்கப் போராடுவது இன்றைய வரலாறு. “காலம் எமக்கொரு கட்டளையிட்டது களத்தினில் வாவென்று – நஞ்சு மாலை தரித்தொரு தேதி குறித்தனர் – மானம் பெரிதென்று” என தமிழீழ மக்கள் மேல் சிறிலங்கா ஆக்கிரமிப்பாளன் போரைத் திணிப்பதையும் அதை உயிரைக் கொடுத்தேனும் முறியடித்து தேசத்தை மீட்க மக்கள் பூண்டுள்ள உறுதி நிலையையும் உலகு அறியும். இந்த உறுதிக்கு உயிரால் பலமூட்டி வடக்கும் – கிழக்கும் சிறிலங்காவின் எச்சங்கள் என்ற காலத்தை மலையேற்றி, புவி மீதில் அவை வரலாற்றுக்கு முன்பிருந்தே தமிழீழ மக்கள் தாயகம் என்ற உண்மையை எடுத்து விள்க்கிட தம் தேகத்தையே சிதைத்த உத்தமர்கள் நம் மாவீரத் தெய்வங்கள், எமது தேசத்தின் வீர புருசர்கள்.

இலங்கைத்தீவின் ஒரு பகுதியாக இருந்த எமது மண் இன்று, உலகத்தின் கண்களில் தமிழீழமாகத் தோன்றத் தொடங்கியிருக்கின்றது. இந்த மாற்றம், வெறும் ஒலிபெருக்கி முழக்கங்களினாலும், அச்சடித்த காகிதங்களாலும், வாய்ச்சவால்களாலும் கொண்டுவரப்பட்டதல்ல. ஒற்றைத் துப்பாக்கியோடு, உறுதியும், கட்டுப்பாட்டுடனும் ஆரம்பித்த எமது இயக்கத்தின் எண்ணற்ற வீரர்கள் செய்த தியாகங்களினாலும், சிந்திய இரத்தத்ததாலும், கண்ட சாதனைகளாலும் உருவானது தான் தமிழீழம். இதற்கு நாம் கொடுத்த விலை சொல்லில் அடங்காது வீட்டைப் பிரிந்து, படிப்பைத் துறந்து… கைகளில் துவக்கோடும், கழுத்தில் சனனைட்டோடும், களத்தில் இளம்புலிகள் எத்தனை பேர்! அவர்களது வேட்கையும், வீரமும், விவேகமும் தான் விடுதலைப்போரின் உயிர்மூச்சு. இவர்களது வெற்றிகளின் பின்னால் வேதனைகள், எத்தனையோ வீரமரணங்கள். மண்ணில் கலந்த குருதி நாளைய அரசியல் சாசனமாக உருமாறும். இவர்கள் களம் கண்ட கதையை தலைமுறைகளிற்கூடாக காலம் எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கும்.

Maaveerar-Thuyilum-Illam-4.jpg

உலக நாடுகளின் வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் ஒவ்வொரு நாடும் தனது தேசத்து உயிர்த் தியாகிகளை தேச புருசர்களாகப் போற்றி தேசிய தினம் கொண்டாடுகின்றது. கனடா மற்றும் பிரித்தானியாவில் கார்த்திகை பிறந்தால் அம் மக்கள் ‘பொப்பி எனும் பூ அணிந்து தமது வாழ்வுக்காகப் போரில் உயிர்நீத்த தமது போர்வீரர்களை நினைவுகூர்வதைக் காணலாம். அதுபோல பிரான்சில் பிரெஞ்சுப் புரட்சியின் நினைவு ஆடி 14ஆம் நாள் தேசிய தினமாக மக்கள் பெருவிழாவாக சிறப்பிக்கப்படுகிறது. உலகின் எந்தத் தேசத்தை எடுத்து நோக்கினாலும் போர் நினைவுச் சின்னங்கள், மாவீரர் துயிலகங்கள் தேசச் சொத்தாக பேணிப் பாதுகாக்கப்பட்டு பூசிக்கப்பட்டு வருகின்றன.

Maaveerar-Thuyilum-Illam-1.jpg

மாவீரர் நாள்!

கருமேகம் கூடக் கசிந்து, விழிசிந்தும
மாலைநேரப் பொழுதில் நாதமணிச் சத்தம்.
கல்லறைக்கு முன்பாக நெய்விளக்குப் பந்தம
நெஞ்சத்துணர்வினிலே…. நெக்குருகி,
கண்களிலே எங்கும் நீர்க்கோலம்.
“மாவீரர்நாள்”
எம் மண்
திரும்பத் திரும்பத் தீக்குளிக்கும் தினம்.
“பிடரியில், தட்டி விரட்டி அடிக்கலாம்
தராசுத் தட்டில் நிறுத்தும் வாங்கலாம்”
இப்படி மாற்றான் எண்ணிய தமிழனை
புலியென நினைத்து கிலிகொளவைத்த
“பிள்ளைகள்” நினைவில் உருகிடும் நாளிது.
கல்லறை தழுவும் காற்றே வருக!
காவியநாயகர் மூச்சைத் தருக!

இவ்வகையில், தமிழர் வரலாற்றிலும் சங்க காலம் முதலே “விழுந்தொடை – மறவர் வில்லிட வீழ்ந்தோர் எழுத்துடை நடுகல்” என மாவீரர்களுக்கு நடுகல் நாட்டி போற்றப்பட்டமையை தமிழிலங்கியங்கள் எடுத்துரைக்கின்றன. எமது தமிழீழத் தேச வரலாற்றிலும் யாழ்ப்பாண அரசினதும் வன்னிமைகளதும் மாவீரர்களின் நடுகற்கள் திருவுருவச் சிலைகள் போற்றப்பட்டமையை சரித்திர சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இவற்றில் பண்டார வன்னியன், சங்கிலி மன்னன் இவர்களினது திருவருவச் சிலைகள் இன்றும் (சிதைவுபட்டாலும்) இருப்பதைக் காணலாம்.

ஆனால், தமிழீழ மாவீரர்கள் நாள் வெறுமனே கடந்தகாலத் தியாகிகளை நினைவுகூரும் ஒரு தினமல்ல. மாறாக, நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அவசியமான பல்லாயிரக்கணக்கான போர்த் தியாகிகள் உருவாவதற்கு அவசியமான சமூக சூழலை உருவாக்கும் துரிதப்படுத்தும் ஒரு தினமுமாகும். இத்தினத்தில், வாயளவு வணக்கம் செய்து செயலளவில் தேசம் மீட்க எதுவும் செய்யாது, நாளை செய்வோம் எனப் பிற்போட்டால் அவர்கள் செய்வார்களென ஒதுங்கிவிட்டால் மாவீரர் ஆன்மாக்கள் எம்மை ஒருபோதும் மன்னிக்காது. தேசக்கடமை செய்ய எழுகவென மாவீரர் அணையா தீபங்கள் காற்றில் அசைந்து எமை அழைக்கின்றன. இது வெறுமனே அரசியல் அழைப்பு அல்ல – சதையால் இரத்தத்தால் உயிரால் கையொப்பமிட்ட புனித அழைப்பு. இந்த அழைப்புக்கு தலைவணங்குவதன் மூலம் மட்டுமே, எமது மானிடத் தெய்வங்களாம் மாவீரருக்கு உண்மையான வீரவணக்கம் செய்ய முடியும்.

Maaveerar-Thuyilum-Illam.jpg

விடிவெள்ளிகள்

இளவயது கனவுகளை
இதயத்தில் புதைத்து
மண்மீட்புப் போரில்
மரணித்துப் போனவர்களே!
மரணம் கூட உங்களால்
மகத்துவம் பெற்றது.

காலத்தின் தேவைக்காய்
களம் பல சென்று
விடிவுக்காய் வீழ்ந்த
வீரத்தின் விழுதுகளே!
விடுதலை வரலாற்றின்
விடிவெள்ளிகள் நீங்களே.

“தன்நாட்டை தான் பெறான் உலகில் எந்நாட்டான் ஆயினும் இழிந்தான்” என்பது புரட்சிக் கவி பாரதிதாசனின் கவிதைவரி. எனவே நாம் தமிழீழத்துக்கு வெளியே புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் நம் நாட்டைப பெறாவிடில் நம்மை இழிந்தவர் என்றுதான் இவ்வுலகு பழிக்கும்.

“எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்கள் இனமீன்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் தினையளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாளெனக்குத் “திருநாளாகும்” என்ற பாரதிதாசனின் கனவினை நனவாக்கிய பெருமை தமிழீழ மக்களுக்கே உண்டு.

“உள்ள உயிர் ஒன்றுதான் அது போகப் போவதும் ஒருமுறைதான் தாய்நாட்டு விடுதலைக்குப் போவதிலே ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது” என்ற பேரறிஞர் அண்ணாவின் வார்த்தைகளுக்கு அர்த்தம் கொடுத்தவர்களும் தமிழீழ மக்கள்தான். “பூக்களும் நாமே புலிகளும் நாமே” என நட்புக்கு மென்மனதும், பகைக்கு புலி வலிமை எதிர்ப்புளமும் காட்டுபவர்கள் தமிழீழ மக்கள். ஆதலால், விடுதலைக்காக உயிரையே விலைகொடுத்து நிற்பவர்களிடம், சலுகைகளை கிள்ளி எறிந்து, ஈகைச் சுடரேற்றும் எங்கள் மண்ணை இனிமேலும் ஏமாற்றலாமென்றும் நினையாதீர். “மானத்தோடு தமிழன் வாழ்ந்தான்” என்ற ஒரு வரலாறே வேண்டும் – “வீரத்தோடு போராடி வீழ்ந்தான்” என்ற சரித்திரம் இனி ஒருபொழுதும் இடம்பெறாத வகையில் அனைத்துச் செயற்பாடுகளும் இருக்க வேண்டும்.

Maaveerar-Thuyilum-Illam-41.jpg

மாவீரர்களே!

உங்களைப் புதைத்த மண் உறங்காது
உரிமைகள் பெறும் வரை கலங்காது
எங்களின் தாயகம் விடிவுபெறும் – புலி
ஏற்றிய கொடியுடன் ஆட்சி வரும்.

ஆகவே, படைவிலக்கி வாருங்கள் – பகை முடிக்க வழி உண்டு – சர்வதேச மத்தியத்துடன் பேசித் தீர்க்கவும் இடமுண்டு. இல்லையேல் மாவீரர் வித்துடல் சுமக்கும் குறுமண்ணும் சிங்களப் படையினரை விழுங்கி தன்னைத்தானே விடுவிப்பதை வரலாறு உலகுக்கு உணர்த்தும்.

இதுவே மாவீரர் நாள் கூறும் செய்தி!

நன்றி: களத்தில் இதழ் (19.11.1997).

 

https://thesakkatru.com/maaveerarkal-uttamas-who-gave-their-lives-for-liberation/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.