Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாலும் இரண்டும் உணர்த்தும் வாழ்வியல் அறம்.!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாலும் இரண்டும் உணர்த்தும் வாழ்வியல் அறம்.!

Screenshot-2020-12-01-17-03-51-704-org-m

முன்னுரை

அறம் என்னும் சொல்லிற்கு ‘அறுத்துச் செல்வம்’, ‘ஊழியை உண்டாக்குவது’ என்று பொருள் கூறுவர். மனித இனத்தின் நலத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் மனித சமுதாயம் வரையறுத்துக் கொண்ட ஒழுக்கநெறி ‘அறம்’ எனப்படும். அறம் என்பதை வாழ்க்கை நெறி என்றும் கூறலாம். அதாவது, மனித வாழ்க்கையைச் செம்மையுடையதாகவும், அமைதியுடையதாகவும், பயனுடையதாகவும் அமைவதற்கு ஆன்றோர்கள் காட்டிய அன்றாட வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய முறைகளே அறம் ஆகும். இத்தகைய சிறப்புப் பெற்ற அறத்தைப் பற்றி நாலடியாரும் திருக்குறளும் கூறியுள்ள செய்திகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

அறம் என்பது...

அறம் செய்து வாழ வேண்டும் என்று நாலடியார் கூறுகையில்,

"அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயத்தால்

பெரும் பயனும் ஆற்றவே கொள்க - கரும்பூர்ந்த

சாறுபோல் சாலவும் பின்உதவி மற்றதன்

கோதுபோல் போகும் உடம்பு’’ (1)

என்னும் உவமை வழியில் கூறுகிறது.

மனித வளர்ச்சியில் அறவுணர்வு முதலில் தோன்றியதாகும். இதனையடுத்துத் தோன்றிய அறவுணர்வை வழக்காற்று ஒழுக்கநெறி என்பர். இது மேல் தட்டில் வாழுகின்ற மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு போற்றப்பட்டது. இதனைத் தொல்காப்பியர்,

"வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே

நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான" (2)

என்னும் நூற்பா மூலம் குறிப்பிடுகிறார். அறநெறி என்றும் மாறாதது. ஆனால், இந்த வழக்காற்று ஒழுக்கநெறி காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப மாறிக் கொண்டே போகும்.

உயர்ந்ததும் சிறந்ததுமான அறவுணர்வு, மனத்தின் தூய்மையை அடிப்படையாகக் கொண்டது. திருவள்ளுவர் இந்த உயர்நிலையான அறத்தையே

”மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற” (3)

என்னும் திருக்குறள் மூலம் கூறியுள்ளார். சீத்தலைச்சாத்தனார் தன் காப்பியமான மணிமேகலையில் ‘அறம்’என்பதற்கு ஒரு விளக்கம் கொடுத்துள்ளார்.

"அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்

மறவாது இதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்

உண்டியும் உடையும் உறையுளும் இல்லது கண்டதில்’’ (4)

வாழ்வைச் செம்மையாக வகுத்துக் கொண்டு வளமாய் வாழ வேண்டும் என்பதே புலவர் பெருமக்களின் கனவாய் இருந்ததை அவர்களியற்றிய பாடல்கள் மூலம் அறியலாம்.

தமிழ் இலக்கியங்களில் இடம்பெறும் முப்பொருள் என்பவை அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றாகும். அறம் செய்து பொருளீட்டி இன்பமாய் வாழ வேண்டும் என்னும் கருத்தின் அடிப்படையில் அறத்தை முதலில் வைத்தனர். இதனைத் தொல்காப்பியம்,

"அந்நிலை மருங்கின் அறமுத லாகிய

மும்முதற் பொருளும் உரிய என்ப’’ (5)

என்றும்,

"இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு

அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்

காமக் கூட்டம் காணும் காலை

மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்

துறை அமை நல் யாழ்த் துணைமையோர் இயல்பே’’ (6)

என்றும் குறிப்பிட்டுள்ளது அறிய வேண்டிய ஒன்றாகும். இக்கருத்து திருவள்ளுவர் காலம் வரை இருந்தது. அறத்தை முதலில் வைத்து தம் நூலில்

”அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்

திறம்தெரிந்து தேறப் படும்” (7)

என்றும்,

"அறனீனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து

தீதின்றி வந்த பொருள்’’ (8)

என்றும் கூறியிருப்பது அறத்தை வலியுறுத்தும் குறள்களாகும்.

வாழ்வு நிலையில்லாதது

இவ்வுலக வாழ்வு விலையில்லாதது. எத்தனை நாள் என்று தெரியாத வாழ்வு, மனித வாழ்வு ஆகும். இத்தகைய நிலையில்லாத வாழ்வில் இருக்கும் வரை மற்றவர்க்கு உதவி செய்து வாழ வேண்டும். சிறுகச் சிறுகச் சேர்த்ததைத் தானே அனுபவிக்க வேண்டும் என்னும் தன்னலம் இருக்கக் கூடாது. ‘சிறுதுளி பெரு வெள்ளம்’ என்னும் பழமொழிக்கேற்ப சேர்த்த பொருளை மற்றவருடன் பகிர்ந்துண்டு வாழ்ந்து இன்பம் பெற முயலுதல் வேண்டும். செல்வம் என்றைக்கும், வைத்திருப்போரிடமிருந்து போகும் என்று சொல்ல முடியாது. உலக வாழ்வு கடிகாரம் போன்று சுழன்று கொண்டே இருக்கும்.

எனவே, உலகச் சுழற்சியில் தானும் அனுபவிக்காமல் பிறருக்கும் கொடுத்து உதவாமல் வாழ்வதால் யாருக்கும் எந்த லாபமும் இல்லை. இக்கருத்தை நாலடியார் பாடல் மூலம் உணரலாம்.

"துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்

பகடு நடந்த கூழ் பல்லாரோ டுண்க

அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்

சகடக்கால் போல வரும்’’ (9)

மனிதன் சுற்றத்தாரோடு உண்டு மகிழ்ந்து வாழ வேண்டும் என்று நாலடியார் கூறுகிறது.

மனித வாழ்வு பற்றிய சிந்தனையில் பிறப்புக்கு முன்னும் இறப்புக்குப் பின்னும் உள்ள நிலை தெரியாதவை. பிறப்பும், வாழ்வும், இறப்புமே நமக்கு உறுதியாக தெரியாதவை. எனவே, இவற்றிற்கு இடைப்பட்ட வாழ்வை வாழ்வதற்காகவே பயன்படுத்த வேண்டும்.

தன்னை எதிர்த்தோரை வியக்கவும், இழிவாகவும் நினைக்காமல் பகைவரை வென்றபோது மகிழ்ந்தும், இழிவாகவும் நினைக்காமல் சாதாரணமாக நினைக்கும் மன்னர்கள் வாழ்ந்த பூமியில் நாமும் இந்நெறியைப் பின்பற்றி வாழ்ந்தால் உயர்வை அடையலாம். இக்கருத்தை,

"கிண்கிணி களைந்த கால் ஓண் கழல்தொட்டுக்,

குடுமி களைந்த நுதல்வேம்பின் ஒண்தளிர்

நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து,

குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி,

நெடுந்தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன்

யார்கொல்? வாழ்க, அவன் கண்ணி! தார்பூண்டு,

தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு

உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை

அழுந்தபற்றி, அகல்விசும்பு ஆர்ப்புஎழக்

மகிழ்ந்தன்றும்,இகழ்ந்தன்றும், அதனினும் இலனே’’ (10)

என்னும் புறநானூற்றுப் பாடலால் அறிய முடிகிறது. திருவள்ளுவரின் எழுத்தோவியமான திருக்குறளிலும் இக்கருத்தைக் காண முடிகிறது.

"அற்கா வியல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்

அற்குப வாங்கே செயல்’’ (11)

நிலையில்லாத செல்வத்தைக் கொண்டு நிலையான அறங்கள் செய்ய வேண்டும் என்று குறள் கூறுகிறது. இதே கருத்தைக் கலித்தொகையில்,

"பால் மருள் மருப்பின் உரல் புரை பாவடி,ஈர் நறும் கமழ் கடாஅத்து, இனம் பிரி ஒருத்தல்

ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்,

பொருள் வயின் பிரிதல் வேண்டும்' என்னும்

அருள் இல் சொல்லும், நீ சொல்லினையே!

நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி,

'நின்னின் பிரியலென் அஞ்சல் ஓம்பு' என்னும்

நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே!

அவற்றுள், யாவோ வாயின? மாஅல் மகனே!

'கிழவர் இன்னோர்' என்னாது, பொருள் தான்,

பழ வினை மருங்கின், பெயர்பு பெயர்பு உறையும்;

அன்ன பொருள் வயின் பிரிவோய் - நின் இன்று

இமைப்பு வரை வாழாள் மடவோள்

அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே" (12)

என்று கூறப்பட்டுள்ளதன் மூலம் நிலையாமையைப் பற்றி அறிய முடிகிறது.

மரங்களும், செடிகளும், கொடிகளும் அழகாய்ப் பூத்துக் குலுங்கும் சோலையில் பழங்கள் பழுத்தும், இலையுதிர் காலத்தில் மரங்கள் வெறுமையாய் நிற்பதும் அனைவராலும் கண்கூடாகக் காணும் நிகழ்ச்சியாகும். இளமையும் அழகும் வயதானால் செல்வதுபோல் சென்று விடும். என்ன அழகு, எத்தனை அழகு, கொள்ளை இன்பம் கொட்டிய அழகு என்று இளைஞன் விருப்பப்படும் பெண்ணும் ஒரு நாள் கோலூன்றி கூன் போட்டு நடக்கும் காலம் நிச்சயம் வரும். எனவே, வாழ்க்கை நிலையில்லாதது, இளமையும் நிலையில்லாதது என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

"பனிபடு சோலைப் பயன்மர மெல்லாம்

கனியுதிர்ந்து வீழ்ந்தற் றிளமை - நனிபெரிதும்

வேற்கண்ணள் என்றிவனை வெஃகன்மின் மற்றிவரும்

கோற்கண்ணா ளாகுங் குனிந்து’’ (13)

என்ற பாடல் மூலம் நாலடியார் இளமை நிலையில்லாதது என்பதை எடுத்துக்காட்டுடன் கூறியிருப்பது சிந்திக்கத்தக்கது.

திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணியில் இதே கருத்தை எடுத்தாளப்பட்டுள்ளது ஒப்பு நோக்கத்தக்கது.

"காய் முதிர்கனியி னூழ்த்து

விழுமிவ் வியாக்கை’’ (14)

மனிதன் பிறக்கும் போது அழுது கொண்டே பிறக்கின்றான். இறக்கும் போது பிறரை அழ வைக்கிறான். பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட நாளில் ‘நல்லவன்’ என்று பெயரெடுத்தலே ஒருவன் செய்ய வேண்டிய கடமை ஆகும். ‘நல்லவர்’ என்ற அமுத மொழி விரைவில் எவருக்கும் எளிதில் கிடைத்துவிடாது. பட்டங்கள் கூடப் படித்து எழுதிப் பெற்றுவிடலாம். நல்லவன் என்ற பட்டம் பெறக் ‘கொடுத்துதவும் நல்ல பண்பு’ என்ற பாடத்தை நன்கு படிக்க வேண்டும். திருமண வீட்டிற்கு அழைத்தால் மட்டுமே விருந்தினர் வருவர். ஆனால் ‘இழவு’ வீட்டிற்கு அழைக்காமலே வந்து விடுவர். போகும்போது சொல்லாமலே சென்று விடுவர். மக்களின் வாழ்வு நிலையில்லாதது. மரம் தனக்குச் சொந்தம் என்று நினைக்கும் பறவை, கூடுகட்டி வாழ்ந்த பொழுதும், வெகுதூரம் பறந்து சென்றுவிடும். நம் உயிரும் உடலை விட்டுப் பிரிந்து போய்விடும் என்ற இயல்பான கருத்தை,

"கேளாதே வந்து கிளைகளாய் இல்தோன்றி

வாளாதே போவரால் மாந்தர்கள் - வாளாதே

சேக்கை மரன்ஒழியச் சேண்நீங்கு புள் போல

யாக்கை தமர்க்கொழிய நீத்து’’ (15)

என்ற பாடல் மூலம் நயமாய் நாலடியார் கூறுகிறது. மேலும், அகத்தைப் பற்றி அகநானூற்றிலும் இக்கருத்து உள்ளது.

"அலங்க லஞ்சினைக் குடம்பைப் புல்லெனப்

புலம்பெயர் மருங்கிற் புள்ளெழுந் தாங்கு

மெய்யிவண் ஒழிய போகி யவர்

செய்வினை மருங்கிற் செலீஇயர்கின் உயிரே’’ (16)

எனவே, நிலையில்லாத வாழ்க்கையில் செல்வமோ, உயிரோ, உடலோ நிலைப்பதில்லை. நாம் செய்யும் செயலில் பெறும் நற்பேறும், உதவும் குணமும், அன்பும், பற்றற்ற பண்பும் மட்டும் நிலையானது என்று நாலடியார் கூறுகிறது.

அறத்தை வலியுறுத்தல்

உயிர்களுக்கு இனிமையானவற்றை செய்தலும் நல்ல வழியில் சென்று உண்மையாய் நிற்பதும் தானம், தர்மம் செய்து உயர்தலும் அறம் எனப்படும்.

"அறம் பொருள் இன்பம் வீடு அடைதல் நூற்பயனே’’ (17)

என்று இலக்கண நூலான நன்னூல் வீடு பேற்றிற்கு இலக்கணம் வகுத்தது. இவ்வாறு தமிழ் இலக்கியங்களுக்கு உரியதாக வலியுறுத்தப்பட்டுள்ள நான்கு பொருள்களுள் அறம் முதன்மையானதாக உள்ளது. அறிவற்றவர்கள் துன்பம் வந்து வாட்டும்பொழுது திணறுவார்கள். இத்துன்பத்திற்குக் காரணம் நாம் முன் செய்த வினையின் பயன் என்பதை உணர மாட்டார்கள். ஆனால், அறிவு பெற்ற பெரியோர்களோ நாம் பெறும் துன்பத்திற்குக் காரணம் முன் செய்த வினையே என்பதை உணர்ந்து தீய செயல்களை விட்டு விட்டு நல்ல செயலைச் செய்ய முயல்வார்கள். இக்கருத்தை,

"வினைப்பயன் வந்தக்கால் வெய்ய உயிரா

மனத்தின் அழியுமாம் பேதை -நினைத்தனைத்

தொல்லைய தென்றுணர் வாரே தடுமாற்றத்

தெல்லை இகந்தொருவு வார்’’ (18)

என்ற பாடல் மூலம் நாலடியார் கூறுகிறது. இக்கருத்தை இளங்கோவடிகள் தன் காப்பியமான சிலப்பதிகாரத்தில்,

"அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவதும்’’ (19)

"ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்’’ (20)

என்ற வரிகளில் தெளிவாய்க் கூறியுள்ளார். அறக்கருத்துகளை வலியுறுத்தி எழுந்த நூல்கள் மக்களின் சிந்தையுள் செலுத்த முயன்றும் அவ்வளவாய்ப் பயன்பெறவில்லை என்பதை மறுக்க முடியாது.

பொறுத்தல்

துன்பப்படுவோரைக் கண்டு வருந்துதல் வேண்டும். மற்றவர் துன்பத்தைத் தன் துன்பம் போல் நினைத்ததால் தான் ‘போதி மரம்‘ தோன்றியது. மகாவீரர், புத்தர் போன்றவர்களின் சிந்தையில் தோன்றிய எண்ணங்கள் போதனைகளாக வந்தன. தன்னை இகழ்ந்து பேசியவர்களை இயேசுவைப்போல் மன்னிக்க வேண்டும். அடுத்த பிறவியில் இகழ்ந்து பேசுவார் பெறும் துன்பத்தை நினைத்து வருத்தப்படுவது பெரியோர்களின் செயலாகும்.

"இகழ்வார்ப் பொருத்தல் தலை’’ (21)

கடமையாகும். தம்மை இகழ்ந்ததற்காகத் தீவினை மறுமையில் பெறக்கூடுமே என்று வருத்தப்படுவது பெரியோர்களின் இயல்பு ஆகும் என்பதை நாலடியார் நயமாய் எடுத்துச் சொல்கிறது.

"தம்மை யிகழ்தமை தாம்பொறுப்ப தன்றிமற்

றெம்மை யிகழ்ந்த வினைப்பயத்தால் உம்மை

எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று

பரிவதூஉம் சான்றோர் கடன்’’ (22)

என்ற பாடல் மூலம் நாலடியார் பெரியவர்களின் குணத்தைவிளக்கிக் கூறியுள்ளது. இதனைத் திருவள்ளுவர்,

"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்

இன்னாச்சொல் நோற்பாரின் பின்’’ (23)

என்ற குறள் மூலம் பெரியவர் பண்பு பற்றிக் கூறியுள்ளார்.

சினமின்மை

கோபத்தை யாரிடமும் காட்டாது அடக்கி வாழ்தல் வேண்டும். மிக்க சினத்துடன் இருக்கும் நாய் ஒன்று தம்மைக் கடித்துவிட்டது என்பதற்காக யாரும் நாயைத் திருப்பிக் கடிக்க மாட்டார்கள். இவ்வுலகத்தில் இப்படியொரு வழக்கு இதுவரை இருந்ததில்லை. இதை நாலடியார் கீழ்மக்கள் தகுதி பார்க்காது இழிசொல் பேசினாலும் அறிவுடைய சான்றோர் பதிலுக்குத் திருப்பிப் பேசாமல் அமைதி காப்பர் என்று எடுத்து மொழிகிறது.

"கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் தம்வாயாற்

பேர்த்துநாய் கௌவினார் ஈங்கில்லை நீர்த்தன்றிக்

கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ

மேன்மக்கள் தம்வாயால் மீட்டு’’ (24)

என்ற பாடல் மூலம் மேன்மக்களின் பண்பைக் கீழ் மக்களோடு பொருத்தி நாலடியார் எடுத்துச் சொல்கிறது. மேலும்,

"நேர்த்து நிகரல்லார் நிரல்ல சொல்லியக்கால்

வேர்த்து வெகுளார் விழுமியோர் - ஓர்த்தனை

உள்ளத்தான் உள்ளி உரைத்துராய் ஊர்கேட்பத்

துள்ளித்தூண் முட்டுமாம் கீழ்’’ (25)

என்றும்,

"கல்லெறிந் தன்ன கயவர்வாய் இன்னாச்சொல்

எல்லாருங் காணப் பொறுத்துய்ப்பர் - ஒல்லை

இடுநீற்றால் பைஅவிந்த நாகம்போல் தத்தம்

குடிமையான் வாதிக்கப் பட்டு’’ (26)

என்றும்,

"நேரல் லார் நீரல்ல சொல்லியக்கான் மற்றது

தாரித் திருத்தல் தகுதி’’ (27)

என்றும் கூறியுள்ளது. எதனையும் அறிந்து நல்ல படி நடந்தால் நன்மையை அடையலாம்.

மறுபிறவியின் பயன்

இல்லையென்று வருபவர்க்கு வாய் கூசாது இல்லையென மறுக்கும் உலோபிகள் அதிகம் உண்டு. பிடி அரிசியாவது தன்னை விட எளியவர்களுக்குக் கொடுத்து உதவி உண்ண வேண்டும். இல்லையென்று வருபவர்களின் நிலைமை, குடும்பச் சூழ்நிலை என்று நினைக்க வேண்டும். முன் பிறவியில் கொடுத்து உதவி வாழாத மக்களை இப்பிறவியில் உணவின்றிப் பிச்சை எடுத்து அல்லாடுபவர்கள் என்று நாலடியார் கூறுகிறது, முற்பிறவியின் பயன் என்று கூறி மறுபிறவியில் பயன் துய்க்கவாவது நன்மை செய்யுங்கள் என்று கூறுகிறது.

"இம்மி யரிசித் துணையானும் வைகலும்

நும்மில் இயைவ கொடுத்துண்மின் - உம்மைக்

கொடாஅ தவரென்பர் குண்டுநீர் வையத்து

அடாஅ அடுப்பி னவர்’’ (28)

என்ற பாடல் மூலம் முடிந்தவரை உதவி செய்து வாழுங்கள் என்பதை நாலடியார் தெளிவாய்க் கூறுகிறது. இக்கருத்திற்குப் பலம் சேர்க்கும் நோக்கில்,

"மாசித்திங்கண் மாசின சின்னத் துணிமுள்ளி

னூசித் துன்ன மூசிய - வாடை யுடையாகப்

பேசிப் பாவாய் பிச்சை யெ னக்கை யகலேந்திக்

கூசிக் கூசி நிற்பார் கொடுத்துண் டறியாதார்’’ (29)

என்ற பாடல் மூலம் திருத்தக்கத் தேவரும் கூறியுள்ளார். மேலும், இனியவை நாற்பது என்ற நீதி நூலில்,

"எத் திறத்தானும் இயைவ கரவாத

பற்றினிற் பாங்கினிய தில்’’ (30)

என்று கூறப்பட்டுள்ளதை அறிந்து நல்வழி நடத்தல் வேண்டும். ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’; தினை விதைத்தவன் தினை அறுப்பான்’’ என்பதே சிறந்த எடுத்துக்காட்டுப் பழமொழியாகும். இந்தப் பிறவியில் புகழும் மறுபிறவியில் நற்பயனும் பெறவே அனைவரும் முயல வேண்டும். முடிந்தவரை இல்லை என்று அல்லாடுபவர்களுக்குக் கொடுத்து உதவி வாழ வேண்டும். மற்றவருக்குக் கொடுத்துதவ முடியாமல் தன்னையே வறுமை சூழ்ந்து கொண்டால், பிறரிடம் சென்று பிச்சை எடுக்காமல் இருக்க வேண்டும். தானம் தருவதை விடப் பிச்சை எடுக்காமல் இருப்பது பல மடங்கு சிறப்புத்தரும் செயலாகும்.

"கரவாத திண்ணன்பின் கண்ணன்னார் கண்ணும்

இரவாது வாழ்வதாம் வாழ்க்கை - இரவினை

உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்னை கொல்

கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு’’ (31)

என்னும் பாடல் இதனையே எடுத்துக் கூறுகிறது. திருவள்ளுவர்,

"கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்

இரவாமை கோடி உறும்’’ (32)

என்ற குறட்பாவின் இழிவான நிலையை விளக்கியுள்ளார். மக்களுக்கு இம்மை மறுமைப் பயன்களை எடுத்துச்சொல்லும் புறநானூறு,

"நல்லது செய்தல் ஆற்றி ராயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்’’ (33)

என்று வலியுறுத்துகிறது. நீதிக் கருத்துக்களைச் சொல்லி மக்களை நல்வழிப்படுத்தி மக்களை மக்களாய் வாழச் சொல்லி வற்புறுத்துகிறார். திருவள்ளுவர்,

"ஏதும் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று

ஈதல் இயல்பிலா தான்’’ (34)

"கழிந்தவை தானிரங்கான் கைவாரா நச்சா

னிழிந்தவை இன்புறா னில்லார் - மொழிந்தவை

மென்மொழியா லுண்ணெகிழ் தீவானேல் விண்ணோரா

லின்மொழியா லேத்தப் படும்’’ (35)

என்று சிறுபஞ்சமூலம் குறிப்பிடுகிறது. முதுமொழிக் காஞ்சியில்,

"இயைவது கரத்தலிற் கொடுமை யில்லை’’ (36)

என்றும் கூறப்படுகிறது. ஒரு வரியில் கருத்துக் கூறி படிப்போரை எளிதில் கவரும் ஆத்திச்சூடியில்

"இயல்வது கரவேல்’’ (37)

என்றும்,

"ஐய மிட்டுண்’’ (38)

என்றும், ஔவையார் கூறியுள்ளார். புறப் பாடல்கள் பெரும்பாலும் அறத்தையே வலியுறுத்தி இயற்றப்பட்டுள்ளவை நோக்கத்தக்கது ஆகும்.

வீழ்தலே சிறப்பு

அழகும் இளமையும் மிகுந்த செல்வமும் ஒரு நாள் அழிந்துவிடும். காலம் செல்லச் செல்ல இவையும் சென்றுவிடும் என்பது இயற்கை நியதி. செல்வத்தின் மூலம் நற்செயல்கள் எதையும் செய்யாது வீணாகக் காலத்தைக் கழிப்பவனுடைய வாழ்க்கை உயர்ந்த வாழ்க்கை என்று கூறுவது தவறாகும். இவ்வாறு வாழ்பவனுடைய வாழ்வு வாழ்ந்தாலும் வீழ்ந்ததற்குச் சமம் என்று நாலடியார் கூறுகிறது.

"உருவும் இளமையும் ஒண்பொருளும் உட்கும்

ஒருவழி நில்லாமை கண்டும் - ஒருவழி

ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்(பு)இட்டு

நின்றுவீழ்ந் தக்க(து) உடைத்து’’ (39)

செல்வம் உள்ள போதே அறச்செயல் செய்பவன் இறந்தாலும் வாழ்ந்தவன் ஆவான் என்று நாலடியார் கூறுகிறது. இக்கருத்தை வலியுறுத்தும் நோக்கில் பலநூல்கள் வெளிவந்துள்ளன. எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான கலித்தொகையில்,

"இளமையுங் காமமு நின்பாணி நில்லா

… … … … … … … … … … … …

கடைநா ளிதுவென் றறிந்தாரு மில்லை

… … … … … … … … … … …

கூற்றமும் மூப்பு மறந்தாரோடு ஓராஅங்கு’’ (40)

என்றும்,

"கூற்றுழ்போற குறைபடூஉம் வாழ்நாளு நலையுமோ’’ (41)

என்றும்,

"யாறுநீர் கழிந்தன்ன விளமை’’ (42)

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும், இளங்கோவடிகளின் காவியமான சிலப்பதிகாரமும் உயர்ந்த வாழ்வை அடையச் சீரிய வழியைக் காட்டுகிறது.

"நற்றிறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்

அற்புளம் சிறந்தோர் பற்று வழிச் சேறலும்

அறப்பயன் விளைதலும், மறப்பயன் விளைதலும்

பிறந்தவர்இறத்தலும், இறந்தவர் பிறத்தலும்

புதுவது அன்றே; தொன்று இயல் வாழ்க்கை’’ (43)

என்றும்,

"ஒய்யா வினைப்பயன் உண்ணும் காலைக்

கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள்’’ (44)

என்றும்,

"முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு

பிற்பகல் காண்குறூஉ பெற்றிய காணற்பகலே’’ (45)

என்றும்,

"மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே’’ (46)

என்பது புறப்பாட்டுக் கூறும் செய்தி நினைக்கத்தக்கது. தமிழ்ச் சான்றோர்கள் நிலையாமையைத் தன் இயல்பாகக் கொண்டு இவ்வுலகில், நிலைபேற்றை விரும்பிய ஆன்றோர் அதற்காகத் தம் புகழை நிலைநிறுத்தித் தாம் மறைந்து போயினர். இது வழி வழி வரும் உண்மையாகும். செய்யும் செயலால் சிறப்பு எய்தலாம் என்பதை இதன்மூலம் நன்குணரலாம். பொருள் கொடுக்க இயலாத நிலையில் உள்ள ஒருவனிடம் ஒருவன் வந்து கேட்கும்போது இல்லை என்பது உலக இயல்பு ஆகும். ஆனால், கொடுப்பதாகச் சொல்லிவிட்டுப் பிறகு தேடிவரும்போது இல்லை என்று வந்தவன் மனதைக்கலங்க விடுவது செய்த நன்றியை மறக்கும் குற்றத்திற்கு இணையானது ஆகும் என்று நாலடியார் அழகாய்க் கூறியுள்ளது.

"இசையா ஒருபொருள் இல்லென்றல் யார்க்கும்

வசையன்று வையத் தியற்கை - நசையழுங்க

நின்றோடிப் பொய்த்தல் நிரைடீஇ செய்ந்நன்றி

கொன்றாரின் குற்ற முடைத்து’’ (47)

என்ற பாடல் மூலம் பொருள் இருந்தும் இல்லையென்று சொல்வது மிகப் பெரிய குற்றம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

"ஒல்லுவ தொல்லும் என்றலும் யாவர்க்கும்

ஒல்லா தில்லென மறுத்தலும் இரண்டும்

ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே

ஒல்லா தொல்லூம் என்றலும் ஒல்லுவது

இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே

இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்

புகழ்குறை படூஉம் வாயிலத்தை’’ (48)

என்று புறப்பாட்டு குறிப்பிடுகிறது. இனிய கருத்துக்களைக் கூறும் இனியவை நாற்பதில்,

"நச்சித்தற் சென்றார் நசைகொல்லா மாண்பினிதே’’ (49)

என்று கூறியுள்ளது நோக்கத்தக்கது ஆகும். உலகப் புகழ் பெற்ற திருக்குறள்,

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு’’ (50)

என்று கூறிச் செய்ந்நன்றியறிதலை ஆணித்தரமாய்க் குறிப்பிடுகிறது.

தகுதி உடைய பெரியோர்களும், தகுதியில்லாத தீயவர்களும் அவரவர் இயல்புக்கு ஏற்றவாறே நன்மையும் தீமையும் செய்யும் குணத்திலிருந்து மாறமாட்டார்கள். வெல்லக் கட்டியை யார் தின்றாலும் இனிக்கவே செய்யும். தவிர, கசக்காது. ஆனால் வேப்பங்காயைத் தேவரே தின்றாலும் கசக்குமே தவிர இனிக்காது. இதை நாலடியார் பெரியோர்கள் செய்யும் நன்மைக்கு வெல்லக்கட்டியையும், தீயவர் செய்யும் தீமைக்கு வேப்பங்காயையும் உவமையாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாக உள்ளது.

"தக்காரும் தக்கவ ரல்லாரும் தந்நீர்மை

எக்காலுங் குன்றல் இலராவர் ! அக்கராம்

யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம்

தேவரே தின்னினும் வேம்பு’’ (51)

என்பது ஆகும். சுடு நெருப்புப் பட்டால் உருகும் நெய் நம் உடலில் ஒருதுளி பட்டாலும் சுடும். பட்ட இடமும் புண்ணாகும். நெய் உடலுக்கு நல்லதுதான். ஆனால், சூட்டுடன் உடலின்மேல் படும்போது சுடத்தான் செய்யும். அதுபோலத்தான் சேரக்கூடாத தீவினை செய்யும் குணமுடையவரிடம் சேர்ந்தால் நல்லவர்கள் கெட்டுப்போய் தீவினையாளர் ஆகிவிடுவர். பன்றியோடு சேர்ந்த கன்று என்னவாகும் என்பது உலகம் அறிந்த பழமொழியைக் கொண்டு நாலடியார் கூறியுள்ள செய்தி சிறப்பானதாகும்.

"நெருப்பழல் சேர்ந்தக்கால் நெய்போல் வதூஉம்

எரிப்பச்சுட் டெவ்வநோய் ஆக்கும் - பரப்பக்

கொடுவினைய ராகுவர் கோடாருங் கோடிக்

சுடுவினைய ராகியார்ச் சார்ந்து’’ (52)

என்ற பாடல் மூலம் நல்லவர்களுக்கு நெய்யும் தீயவர்களுக்கு நெருப்பும் உவமையாகக் கொண்டு கூறியுள்ள கருத்து சிறப்பானதாக உள்ளது.

மனிதனின் குணம் தாவும் குரங்கை விடக் கேவலமானது. ஒருவருடைய குணங்களை எந்த ஆராய்ச்சியாளரும் அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது. நுழைய முடியா இடமெல்லாம் காற்று எளிதில் நுழைந்துவிடும். ஆனால், அறிய முடியாத காரணத்தினால் தானே பிரச்சனை ஆட்சி செய்கிறது. ஒருவனுடைய மனதை அறிய முடிந்தால் உலகம் அழிய ஆசைப்படாது. மனிதர்களுக்குப் பயந்தான் கடவுள் சிறுசிறு பகுதிகளாக அழித்து வருகிறார். ஒருவர் சொல்வது ஒன்று. செய்வது ஒன்று என்று இன்றைய உலகில் தொண்ணூற்று ஒன்பது சதவீதம் பச்சோந்திகளை மட்டுமே காண முடிகிறது. ஆராயாமல் நட்புக் கொண்டால் துன்பமே வரும். இருப்பினும் நட்புக் கொண்டபின் விலகுவது துன்பத்திலும் பலமடங்கு துன்பத்தைத் தரும். ஆகவே, நன்கு ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

"கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு

சொல்வேறு பட்டார் தொடர்பு’’ (53)

மானம்

ஒவ்வொருவருக்கும் உயிரை விட மிகப் பெரியது மானம் ஆகும். உடலுக்கு அணிகலன் ஆடை, ஆபரணம் என்றால் உயிருக்கு அணிகலன் மானம் ஆகும். இந்த உடம்பு என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் என்றால், உயர்ந்த மானத்தை ஓரம் தள்ளிவிட்டுப் பிச்சை எடுத்துக்கூடக் காப்பாற்றலாம். ஆனால், அழியக் கூடிய உடம்பிற்கு ஏன் கவலைப்பட வேண்டும். இதைவிட அழியாத புகழைச் செய்து நல்லறம் பெற்று இன்பமாய் வாழ வேண்டும். மனிதர்கள் நினைத்தால் நாடே நலமாய் இருக்கும் என்று நாலடியார் பின்வரும் பாடல் வழி எடுத்துச் சொல்கிறது.

"மான அருங்கலம் நிக்கி இரவென்னும்

ஈன இளிவினால் வாழ்வேன்மன் - ஈனத்தால்

ஊட்டியக் கண்ணும் உறுதிசேர்ந் திவ்வுடம்பு

நீட்டித்து நிற்கும் எனின்’’ (54)

‘அழியாத புகழைப் பெற முயல்வதை விட்டுவிட்டு அழியும் உடம்பிற்கு ஏன் வருந்துகிறீர்கள்’ என்று நாலடியார் புத்திமதி சொல்கிறது. தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானை மானத்திற்கு ஒப்பாகக் கூறுகிறார் திருவள்ளுவர்.

"மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை

பூடழிய வந்த விடத்து’’ (55)

என்றும்,

"மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்’’ (56)

என்றும்,

"இளியவரின் வாழாத மானம் உடையார்

ஒளிதொழுது ஏத்தும் உலகு’’ (57)

என்றும்,

"இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்’’ (58)

என்றும்,

"இரப்பன் இரப்பரை எல்லாம் இரப்பின்

கரப்பார் இரவன்மின் என்று’’ (59)

என்றும் வள்ளுவர் மானத்தின் உயர்நிலையைக் குறள் மூலம் எடுத்துக்hகாட்டியுள்ளார். மேலும், புறப்பாட்டு,

"குழவி யிறப்பினு மூன்றடி பிறப்பினும்

ஆளன் றென்று வாளிற் றப்பார்

தொடர்ப்படு ஞமலியி னிடர்படுத் திரீஇய

கேனல் கேளீர் வேளாண் சிறுபத

மதுகை யின்றி வயிற்றுத் தீத் தணியத்

தாம் இரந்து உண்ணும் அளவை

ஈன்மரோ இவ் உலகத் தானே’’ (60)

என்று கூறுகிறது. இனியதை மட்டுமே கூறும் இனியவை நாற்பதில்,

"மான மழிந்தபின் வாழாமை முன் னினிதே’’ (61)

என்று கூறியிருப்பது சிறந்த கருத்து ஆகும். நான்மணிக் கடிகையில்,

"…………………..இலமென்னும்

வன்மையின் வன்பாட்ட தில்’’ (62)

என்றும்,

"இன்னாமை வேண்டி னிரவெழுக’’ (63)

என்றும் வரும் வரிகள் நோக்கத்தக்கவை. இவற்றை அறிந்து நடந்தால் வாழ்வில் உயரலாம்.

தொகுப்புரை

நாலடியாரும் திருக்குறளும் வாழ்வியல் நெறிகளில் நீதி உரைக்கும் பாங்கு பற்றி இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டது. இளமை, யாக்கை, செல்வம் போன்றவை நிலையில்லாதவை. அறம் செய்வதால் பெறும் பலன் அறியப்பட்டது. பெரியோர்களும், சிறியோர்களும் நன்மை, தீமை செய்யும் குணத்தில் இருந்து மாறமாட்டார்கள். தீயோர் நட்பினால் பெறும் தீமையும் ஆராயப்பட்டது. மானம் உயிரைவிடப் பெரியது என்றும், மானத்திற்கு உவமை கூறிய சிறப்பும், ஆழம் காண முடியாத மனித மனத்தின் சிறப்பு பற்றியும், வாழ்வியல் நெறிகளில் அறத்தின் சிறப்பு எனும் இக்கட்டுரையில் ஆராயப்பட்டது. இதன்வழி மனித வாழ்வின் அறநெறி எனப்படுவது நிலையாமை உணர்ந்து வாழ்வின் இயல்பினை ஏற்றுக்கொண்டு யாவர்க்கும் தீங்கு உண்டாக்காது வாழ்வதேயாகும் என்பது ஆய்வின் முடிவாகக் கொள்ளப்படுகிறது.

முனைவர் பீ. பெரியசாமி

தமிழ்த்துறைத் தலைவர்,
டி.எல்.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விளாப்பாக்கம், ஆற்காடு 

http://www.muthukamalam.com/essay/literature/p258.html

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
பிழை திருத்தம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.