Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்... இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சரிகிறதா மார்க் சக்கர்பெர்க் சாம்ராஜ்யம்... இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இல்லாமல் என்னவாகும் ஃபேஸ்புக்?

 

மார்க் சக்கர்பெர்க்

 

பிரைவசி பஞ்சாயத்துகளில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், இப்போது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்பது மொத்தமாகவே ஃபேஸ்புக்கை காலி செய்யும் ஆபத்து இருக்கிறது!

இன்று ஒரு சந்தையில் நிறுவனங்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை உறுதிப்படுத்தக் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலுமே சட்டங்கள் அமலில் இருக்கின்றன. இவை 'Antitrust' சட்டங்கள் என அழைக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் ஒரு சந்தையில் அதற்கு இருக்கும் ஆதிக்கத்தை வைத்து வளர்ந்துவரும் போட்டி நிறுவனங்களை ஒடுக்குவது, இடையூறுகள் கொடுப்பது போன்றவை நடக்கக்கூடாதென இந்த சட்டங்கள் இயற்றப்பட்டன. ஒவ்வொரு நாட்டிலும் இதைக் கண்காணிக்க அரசு அமைப்புகள் நிறுவப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் Competition Commission of India ஆணையம் இதற்குத்தான் இருக்கிறது. ஆனால், தொடர்ந்து பெரிய டெக் நிறுவனங்கள் இது போன்ற சட்டங்களை மீறுகின்றன, போட்டி நிறுவனங்களை நசுக்குகின்றன என்ற குற்றச்சாட்டு சில வருடங்களாகவே வைக்கப்பட்டுவருகிறது. இதை அமெரிக்கா காங்கிரஸ் ஒரு குழு அமைத்து விசாரிக்கவும் தொடங்கியது.

Antitrust Hearing
 
Antitrust Hearing

கடந்த ஜூலை மாதம் ஃபேஸ்புக், அமேசான், கூகுள், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களின் CEO-க்களை ஒரே நேரத்தில் அழைத்து இதுகுறித்து சரமாரியான கேள்விகள் கேட்டது அமெரிக்கா காங்கிரஸ். மொத்தமாக ஓர் ஆண்டுக்கும் மேலான விசாரணைக்குப் பிறகு அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்த நான்கு நிறுவனங்களுமே போட்டியை விரும்பவில்லை. போட்டி நிறுவனங்களை ஒடுக்கப் பல செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப் பின் நீதித்துறை மற்றும் 11 மாகாணங்கள் கூகுள் மீது அக்டோபர் இறுதியில் வழக்கு தொடர்ந்தது. இணையத் தேடல் சந்தையில் தனிப்பெரும் நிறுவனமாக இருக்கக் கூகுள் 'Antitrust' சட்டங்களை மீறும் பல செயல்களில் ஈடுபட்டிருக்கின்றன என்றது அந்த அறிக்கை. இது பெரும் டெக் நிறுவனங்களின் 'Monopoly'-க்கு எதிரான முதல் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்பட்டது.

இப்போது இன்னும் கடுமையான வழக்குகள் ஃபேஸ்புக் மீது தொடுக்கப்பட்டிருக்கின்றன. Federal Trade Commission (FTC)-ம் 46 மாகாண அரசுகளும் ஃபேஸ்புக் மீது வழக்குகள் தொடுத்திருக்கின்றன. Antitrust சட்டங்களை மீறிய ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமை பிரிக்கவேண்டும் என்கின்றன இந்த வழக்குகள். ஃபேஸ்புக் நிறுவனத்திற்கும் சரி மார்க் சக்கர்பெர்க்குக்கும் சரி சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. பிரைவசி பஞ்சாயத்துகளில் ஆரம்பித்துத் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டுதான் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால், இப்போது வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு என்பது மொத்தமாகவே ஃபேஸ்புக்கை காலி செய்யும் ஆபத்து இருக்கிறது.

 

சரி, அப்படி என்ன செய்தது ஃபேஸ்புக்?

“Copy, Acquire, Kill” என்ற யுக்தியை ஃபேஸ்புக் கையாண்டதாகக் கூறப்படுகிறது. அனைத்தும் 2012-ல் இன்ஸ்டாகிராமை ஃபேஸ்புக் கைப்பற்றியதிலிருந்துதான் தொடங்குகிறது. மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வந்த இன்ஸ்டாகிராமை அச்சுறுத்தலாக எண்ணியே அதை வாங்கியது ஃபேஸ்புக் என்கிறது விசாரணை அறிக்கை. மார்க் மற்றும் பிற ஊழியர்களின் மின்னஞ்சல் உரையாடல்களை வைத்துப் பார்த்தால் இன்ஸ்டாகிராமை குறிவைத்து அதன் மீது அதிக அழுத்தம் கொடுத்தே அதை ஃபேஸ்புக் வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கிறது அந்த அறிக்கை. இது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமை வாங்கியவுடன் வேண்டுமென்றே அதன் வளர்ச்சியை தடுத்து, ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக இல்லாத வண்ணம் இன்ஸ்டாகிராம் மாற்றியமைக்கப்பட்டது என்றும் கூறுகிறது. இதுகுறித்து இன்ஸ்டாகிராம்மின் மூத்த முன்னாள் ஊழியர்களுள் ஒருவர் காங்கிரஸில் வாக்குமூலம் அளித்துள்ளார். இன்ஸ்டாகிராமை விற்க மறுத்திருந்தால் அதே போன்ற ஒரு சேவையை ஆரம்பித்து இன்ஸ்டாகிராமுக்கு இன்னும் நெருக்கடி ஃபேஸ்புக் கொடுத்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டியை நசுக்கி சந்தையில் தனிப்பெரும் சக்தியாக இருக்க வேண்டும் என்பதே ஃபேஸ்புக் குறிக்கோள் என்கிறது இந்த அறிக்கை. குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி என இரண்டு கட்சிகளுமே இணைந்தே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

Instagram
 
Instagram
2012-ல் 1 பில்லியன் டாலருக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனத்தையும், 2014-ல் வாட்ஸ்அப் நிறுவனத்தை 19 பில்லியன் டாலருக்கும் வாங்கியது ஃபேஸ்புக். இந்த நூற்றாண்டின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிசினஸ் ஒப்பந்தங்களாக இவை கருதப்படுகின்றன.

ஆனால், இவை இரண்டுமே போட்டியை நசுக்கும் நோக்கத்தில் ஃபேஸ்புக் செய்த ஒப்பந்தங்கள்தான் என்கிறது FTC. இதனால்தான் வழக்கில் இந்த இரண்டு நிறுவனங்களையும் ஃபேஸ்புக்கிடமிருந்து பிரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. உடனடியாக இதில் எந்த முடிவுகளும் எடுக்கப்பட வாய்ப்பில்லை. சட்ட அளவிலேயே பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால்தான் இது சாத்தியப்படும். இருந்தும் ஃபேஸ்புக் பிரிக்கப்படவேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்திருப்பதுடன் முதல் கட்ட நடவடிக்கையையும் FTC எடுத்திருப்பது ஃபேஸ்புக்கிற்கு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. புதன் அன்று பங்குச்சந்தையில் சுமார் 4% வீழ்ச்சியை சந்தித்தது ஃபேஸ்புக்.

 

இப்படி இன்ஸ்டாகிராமும், வாட்ஸ்அப்பும் ஃபேஸ்புக்கிடமிருந்து பறிக்கப்பட்டால் என்ன நடக்கும்?

போட்டி நிறுவனத்தை காலி செய்வது ஒரு முக்கிய காரணம் எனச் சொல்லப்பட்டாலும் ஃபேஸ்புக் இந்த நிறுவனங்களை வாங்கியதற்குப் பின் இன்னும் சில யுக்திகளும் இருக்கின்றன. சமூக வலைதளங்களை பொறுத்தவரையில், ஒன்று அனைவரும் பயன்படுத்துவார்கள், இல்லை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள் என அறிந்தவர் மார்க் சக்கர்பெர்க். எப்படியும் ஃபேஸ்புக்கின் வளர்ச்சி குறையும், மொத்தமாக மக்கள் ஃபேஸ்புக்கை புறக்கணிக்கும் நாள் கூட வரலாம். அப்போது மக்கள் தேடும் மாற்று தன்னிடமே இருக்க வேண்டும் என எண்ணினார் மார்க். அந்த நோக்கில்தான் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை வாங்கினார். இந்த முதலீடுகளால் பலன்களைப் பெறவும் ஆரம்பித்துவிட்டது ஃபேஸ்புக்.

Facebook
 
Facebook

எந்த நிறுவனமும் இருக்கும் இடத்திலேயே இருந்தால் மதிப்பு கிடையாது. வளர்ச்சியைக் காட்டினால்தான் முதலீட்டாளர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும். அப்படி ஃபேஸ்புக்கை மட்டும் வைத்து இனி வளர்ச்சியை மார்க் சக்கர்பெர்க்கால் காட்ட முடியாது. காரணம், விளம்பரங்களிலிருந்துதான் ஃபேஸ்புக் வருமானம் பார்க்கிறது. 'இதற்கு மேல் விளம்பரம் போடனும்னா ஸ்டேட்டஸ்க்கு நடுவுலதான் போடனும்' எனச் சொல்லும் அளவுக்குக் கிடைக்கிற இடங்களில் எல்லாம் ஃபேஸ்புக் விளம்பரங்கள் காட்டி வருகிறது. இன்னும் கொஞ்சம் அதிக விளம்பரங்கள் போட்டால் மொத்தமாகப் பயனர் அனுபவமே மோசமாகி விடும் என்ற சிக்கலில் இருக்கிறது ஃபேஸ்புக். கிட்டத்தட்ட எல்லா நாடுகளிலும் ஃபேஸ்புக் ஊடுருவியும் விட்டது, முடிந்தளவு பயனாளர்களைக் கைப்பற்றிவிட்டது. இதற்கு மேல் புதிதாகச் சேர்க்கவும் போதிய வாடிக்கையாளர்கள் சந்தையில் இல்லை. ஃபேஸ்புக்கில் கூடுதல் வருமானம் ஈட்ட மார்க் போட்ட 'Marketplace' போன்ற திட்டங்களும் பெரிதாக எடுபடவில்லை. வீடியோக்களில் அதிக விளம்பரங்கள் போட்டு வருமானத்தைப் பெருக்கலாம் என முயற்சி செய்து பார்த்தார்கள் அது பயனர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இப்போது வருமான வளர்ச்சி என்பது மொத்தமாகவே இன்ஸ்டாகிராமிலிருந்து வருவதுதான்.

நேரடியாக படங்கள்/வீடியோக்களிலிருந்து பொருட்களை வாங்கும் ஷாப்பிங் வசதிகளை அறிமுகம் செய்துவருகிறது இன்ஸ்டாகிராம். தீவிர முயற்சியால் இன்று பல நிறுவனங்களும் தங்களது சேவைகள்/தயாரிப்புகளை மக்களிடம் சேர்க்க இன்ஸ்டாவில்தான் அதிக விளம்பரங்கள் தருகின்றன. இன்ஸ்டாவில் விளம்பரம் தர வேண்டுமென்றால் ஃபேஸ்புக்கில் பக்கம் ஒன்று தொடங்கியிருக்க வேண்டும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துக்கொண்டிருக்கிறது ஃபேஸ்புக். 2019-ல் இன்ஸ்டாவிலிருந்து மட்டும் 20 பில்லியன் டாலர் வருமானம் பார்த்திருக்கிறது ஃபேஸ்புக். இதன் மொத்த வருமானத்தில் இது 29%. இந்த வருடம் இன்ஸ்டாகிராமிலிருந்து சுமார் 28.1 பில்லியன் டாலர் வருமானம் கிடைக்கும் எனக் கணிக்கிறது EMarketer எனும் ஆய்வு நிறுவனம். இது ஃபேஸ்புக்கின் மொத்த வருமானத்தில் 37% இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்த வருடம் ஃபேஸ்புக்கின் வருமான வளர்ச்சியில் இன்ஸ்டாகிராமின் 8.1 பில்லியன் டாலர் வளர்ச்சி மிகப் பெரிய பங்காக இருக்கும்.

வாட்ஸ்அப்
 
வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பொறுத்தவரையில் இன்னும் அதிலிருந்து எந்த வருமானமும் பார்க்கத் தொடங்கவில்லை ஃபேஸ்புக். ஆனால், விரைவில் பணம் காய்க்கும் மரமாக வாட்ஸ்அப்பும் மாறும் என எதிர்பார்க்கிறது ஃபேஸ்புக். ஏற்கெனவே பல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை சென்று சேர வாட்ஸ்அப் பிசினஸ் வசதியைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. விரைவில் முக்கிய நாடுகளில் வாட்ஸ்அப் பே என்னும் பண பரிவர்த்தனை சேவையும் வாட்ஸ்அப்புடன் இணையப்போகிறது. டெக் நிறுவனங்கள் அனைத்துமே இந்தியாவைத்தான் வளர்ந்து வரும் மிக முக்கிய இணையச் சந்தையாகப் பார்க்கின்றன. சீன நிறுவனங்களுக்கு முன்பு இங்கு கால்பதிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கின்றன. ஜியோவுடன் ஃபேஸ்புக் கூட்டணி அமைத்தது இதனால்தான். இந்த கூட்டணியில் வாட்ஸ்அப்தான் மிக முக்கிய பங்காற்றப்போகிறது. 'எப்படி இந்தியாவில் வாட்ஸ்அப் சூப்பர் ஆப்பாக உயரும்?' என விரிவாகத் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்.

பல நாடுகளில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்களை விட வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள்தான் அதிகம். உலகமெங்கும் 200 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் வாட்ஸ்அப்பிலிருந்து வருமானம் வரத்தொடங்கினால் ஃபேஸ்புக் இன்னும் அசைக்கமுடியாத உயரத்துக்குச் செல்லும். இன்ஸ்டாகிராம் ஷாப்பிங்குடன் வாட்ஸ்அப் சாட்டிங்கை இணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது ஃபேஸ்புக்.

 

இது இல்லாமல் அடுத்த தலைமுறையினரிடம் ஃபேஸ்புக்கிற்கான மோகம் குறைந்துபோயிருப்பதையும் உணர்ந்திருக்கிறார் மார்க். அமெரிக்காவில் 2018-ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 13-17 வயதான பதின்பருவத்தினரில் 51% பேர் மட்டுமே ஃபேஸ்புக் பயன்படுத்துவதாக தெரிவித்தனர். இது சில வருடங்களுக்கு முன்பு 71% இருந்தது. அதே சமயத்தில் 72% பேர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதாகத் தெரிவித்தனர். அதனால் தற்போதைய இளைஞர்களின் கூடாரமாக வேண்டுமானால் ஃபேஸ்புக் இருக்கலாம். அடுத்த தலைமுறையினர் இன்ஸ்டா, டிக் டாக், ஸ்னாப்சாட் போன்ற தளங்களில்தான் அதிகம் ஆக்ட்டிவாக இருப்பார்கள் எனக் கருதப்படுகிறது. இந்தியாவில் டிக் டாக்கும் இல்லை, இன்ஸ்டா ரீல்ஸ்தான் அந்த இடத்தையும் பிடித்திருக்கிறது.

மேலும் நாளுக்கு நாள் ஃபேஸ்புக்கின் மேல் மக்களுக்கு இருக்கும் நன்மதிப்பு தொடர்ந்து குறைந்துகொண்டேதான் இருக்கிறது. ஒரு நல்ல பிராண்டுக்கு மக்கள் மத்தியில் பாசிட்டிவான இமேஜ் இருப்பது அவசியம். ஃபேஸ்புக்கிலிருந்து அது கிடைப்பது இனி கடினம் என்பதை உணர்ந்து இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் இரண்டிலுமே 'From Facebook' எனச் சேர்த்து ஃபேஸ்புக் பெயர் மீது கொஞ்சம் பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சப்பார்க்கிறார் மார்க். இப்படி இருக்கையில் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் பிரிக்கப்பட்டால் சமூக வலைதள உலகில் மார்க் காட்டிவைத்திருக்கும் சாம்ராஜ்யம் மொத்தமாகச் சரியும். அதே நேரத்தில் ஃபேஸ்புக்கின் துணையில்லாமல் இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் என்னவாகும் என்றும் தெரியவில்லை. ஃபேஸ்புக் போன்ற பெரிய நிறுவனம் பின்னணியில் இருப்பதால்தான் புதிய தொழில்நுட்பங்களையும் வசதிகளையும் உடனுக்குடன் பெறுகின்றன இந்த சேவைகள்.

FTC
 
FTC

"இன்று சமூக வலைதளங்கள் மனித வாழ்வின் முக்கிய அங்கமாக மாறிவிட்டன. அதில் தனிப்பெரும் சக்தியாக இருக்க ஃபேஸ்புக் செய்திருக்கும் விஷயங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை அல்ல. இப்படிச் செய்ததன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை தரவில்லை அந்நிறுவனம். இந்த நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும், மீண்டும் சந்தையில் ஆரோக்கியமான போட்டி நிலவ வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்" என்றிருக்கிறார் FTC-ன் Bureau of Competition இயக்குநர் இயன் கான்னர். போட்டி இல்லாத காரணத்தால் ஃபேஸ்புக்கில் பிரைவசி வசதிகள் தொடங்கி பல விஷயங்களில் எந்த முன்னேற்றமும் இத்தனை ஆண்டுகளில் நிகழவில்லை, இருந்தும் வழியில்லாமல் வாடிக்கையாளர்கள் ஃபேஸ்புக்கில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் இவர்.

இதுகுறித்து விரிவான விளக்கத்தை விரைவில் வெளியிடுவோம் எனத் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக். இந்த ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளித்ததே FTC தான். இப்போது மீண்டும் முதலிலிருந்து இதை விசாரிப்பது அமெரிக்க தொழில்நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி இருந்தால் எந்த ஒரு ஒப்பந்தமும் இறுதியானது அல்ல என்ற நிலை ஏற்பட்டுவிடும் என்றும் தெரிவித்திருக்கிறது ஃபேஸ்புக்.

Mark zuckerberg
 
Mark zuckerberg AP
அரசின் இந்த குற்றச்சாட்டுகளை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். நீதிமன்றத்தில் நமக்கு நீதி கிடைக்கும். நாம் பல சேவைகளுடனும் பல கட்டங்களில் போட்டியிட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். டிக் டாக், ட்விட்டர், ஸ்னாப்சாட், கூகுள், யூடியூப் போன்ற சேவைகளும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளன. நாம் கைப்பற்றிய பிறகுதான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பல மடங்கு மேம்பட்டிருக்கிறது, பல பேரைச் சென்று சேர்ந்திருக்கிறது. கடுமையான போட்டி இருக்கிறது என்பதுதான் உண்மை. நாம் அதில் நியாயமாகப் பங்குகொள்கிறோம். அதை நினைத்து நான் பெருமைகொள்கிறேன்
ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் மார்க் சக்கர்பெர்க்

கடைசியாக குவால்கம் நிறுவனத்தின் மீது FTC தொடுத்த வழக்கு தோல்வியில்தான் முடிந்தது. அதனால், இதில் என்ன மாதிரியான முடிவு எட்டப்படுகிறது எனப் பொறுமையாகத்தான் பார்க்க வேண்டும். ஜோ பைடன் தலைமையில் FTC தலைமையும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் இதை எந்த திசையில் எடுத்து செல்வார்கள் என்றும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

https://www.vikatan.com/technology/tech-news/will-marks-social-media-empire-come-crumbling-down-46-states-file-case-for-facebook-break-up

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.