Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம்

by ம.நவீன் • January 1, 2021
http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/06/peychi-10015359-550x550h.jpeg

19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும்  இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன். 

அப்போது நான் ஈப்போவில் உள்ள என் மாமா வீட்டில் இருந்தேன். உடன் போப்பியும் இருந்தான். என்னை விட்டுப் பிரிந்திருப்பதில் அவனுக்குச் சங்கடம் இருந்ததால் உடன் அழைத்துச்சென்றிருந்தேன். ஒவ்வொரு நாளும் கண்விழிப்பு என்பது அவனுக்கு மிகக் கொண்டாட்டமான தருணம். எனவே கட்டிலுக்குத் தூக்கியதும் முகம் முழுவதும் நக்கி என்னுள் எப்படி புகுந்துகொள்வது என தீவிரமான தேடலில் இருந்தான். அப்போது; அக்கணம் ஒரு சிறுகதை உதயமானது. மடிக்கணினியைத் திறந்து பேய்ச்சி நாவல் தடைசெய்யப்பட்டதை முகநூலில் அறிவித்துவிட்டு, கடகடவென சிறுகதை எழுதத் தொடங்கினேன்.

செய்தி பரவி இடையில் சில அழைப்புகளுக்குப் பதில் சொல்லியதில் கவனம் சிதறியதால் முழுமையாகப் கைபேசியை அமைதி செய்தேன். காலை 11.30 அளவில் கதை முழுமையான பின், பாண்டியனுக்கு மின்னஞ்சல் செய்து படித்துப்பார்க்கச் சொன்னேன். கதையால் துடிப்புப் பெற்றிருந்த மனம் மெல்ல மெல்ல அடங்கியதும் கைபேசியை எடுத்தபோது ஏராளமான வாட்சப்புகளும் அழைப்புகளும் வந்திருந்தன.

அசாதாரணமான சூழல்களில் நான் பெரும்பாலும் நிதானமாக இருப்பதை நண்பர்கள் ஆச்சரியத்துடன் கேட்பதுண்டு. எதையும் மனதில் தெளிவாக ஒருமுறை நான் முன்னமே நிகழ்த்திப் பார்ப்பதே அதற்குக் காரணம். ஒரு சூழலின் உச்சபட்ச விளைவு என்ன என்பதை நான் அனுபவமாகவே கண்டுவிடுவேன். எப்போதுமே இறுதி விளைவுகள் எளிமையானவை; பல சமயங்களில் நன்மை கொடுக்கக்கூடியவை. அதை அறியாதவர்களின் மனம் அதையொட்டிய மிகையான கற்பனைகளை உருவாக்கி அதில் உழன்று சோர்கிறது. எனவே முடிவை அடையும்வரை உள்ள பயணங்கள் தத்தளிப்பாகவே உள்ளன. அதெல்லாம் அவசியமற்றவை.

நூல் தடைக்கு முன்

ஒரு வருடத்திற்கு முன்பே பேய்ச்சி குறித்த சர்ச்சை தொடங்கியபோது, நாவல் மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை அறிந்திருந்தேன். ஆனால் என்ன மாதிரியான நடவடிக்கை என்பதில்தான் சில கேள்விகள் இருந்தன. தடை விதிக்கப்பட நிறைய சாத்தியங்கள் இருந்தன. அப்படி தடை செய்யப்படாவிட்டாலும் அதில் உள்ள சொற்களை நீக்கி அல்லது வாக்கியங்களை மாற்றி பிரசுரிக்கும் கட்டளை பிறப்பிக்கப்படலாம் என சட்ட வல்லுனர்கள் மூலம் அறிந்தேன். அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டால் அதை நான் ஏற்கவோ சமரசம் செய்துகொள்ளவோ தயாராக இல்லை என்பதிலும் தெளிவாக இருந்தேன். எனவே தன்னிச்சையாக அந்த நாவலின் மேல் அடுத்தகட்ட நடவடிக்கையாகத் தடை பிறப்பிக்கப்படும் என்பது தெளிவு. எனவே தடை நிகழும்போது அதையொட்டிய சாதக பாதகங்கள் என்ன என்பதை முறையாக அறிந்துகொண்டேன். ஆயினும் நாவல் பற்றிய எந்த பேச்சுவார்த்தைக்கும் உள்துறை அமைச்சு என்னை அழைக்கவில்லை. தடை செய்யப்பட்ட செய்தியை மட்டுமே வெளியிட்டது.  

நான் மலேசியாவில் பிறந்த தமிழ் எழுத்தாளன். எனவே மலேசிய வாழ்வியலை தமிழில் எழுதுகிறேன். ஆனால் நான் மலேசிய வாசகர்களுக்காக மட்டுமே எழுதவில்லை. எந்த பிரக்ஞையுள்ள எழுத்தாளனும் அப்படித் தன்னை சுருக்கிக்கொள்ளமாட்டான். இன்று மலேசியாவில் நான் முதன்மையான தமிழ் எழுத்தாளர்களில் ஒருவன் என்பதிலும் ஒட்டுமொத்த தமிழ் இலக்கியச் சூழலில் வருங்காலத்தில் அவ்விடத்தை அடையும் தகுதிகொண்டவன் என்பதிலும் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

எனவே, மலேசியா என்ற ஒரு நாட்டின் அரசால் தடை செய்யப்படும் ஒரு நூல் மலேசியாவில் மட்டுமே வாசிக்கப்படாமல் போகக்கூடும் என்பதும், அரசாங்கம் அந்த இறுதி முடிவுக்கு வர ஓராண்டாவது ஆகும் என்பதையும் முன் அனுபவம் உள்ளவர்கள் வழி அறிந்தேன். முதன்முறையாக வல்லினம் பதிப்பில் வந்த நூலை மலேசியாவில் உள்ள முக்கிய மாநிலங்களிலும் சிங்கப்பூரிலும் விற்பனைக்கு வைக்கும் திட்டத்தைத் தொடங்கினேன். நாவல் இரு காரணங்களால் பெரிய கவனத்தை எட்டியது.

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-01-1024x904.jpg

முதலாவது கொச்சையான சொற்களையும் ஆபாசமான வர்ணனையும் கொண்டது என்று நாவலை வாசிக்காத கல்வியாளர்கள் சிலர் ‘தமிழ் மலர்’ நாளிதழுக்கு வழங்கிய கண்டன அறிக்கைகள் வழி கிடைத்த கவனம். இரண்டாவது சாதிய துவேசம் உள்ளதாக வாட்சப் வழி என் படத்துடன் பரவிய தகவலின் அடிப்படையில் பெற்ற கவனம். இதனால் நான் எதிர்பார்த்ததைவிட நாவல் பரவலாகவே வாங்கப்பட்டது. பல புதிய நண்பர்கள் கிடைத்தனர். சுவாரசியமான மிரட்டல் அழைப்புகளெல்லாம் வந்தது தனிக்கதை. இதே மிரட்டல்கள் புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைகளுக்கும் விடுக்கப்பட்டதாக சொன்னார்கள். அவர்களில் ‘உமா பதிப்பக’ உரிமையாளர் டத்தோ சோதிநாதன் மட்டும் நாவல்களை மீட்டுக்கொள்ளச் சொன்னார். அதே உமா பதிப்பகத்தின் கடையில் உள்ள ஜெயமோகன், சாரு நிவேதிதா, ஷோபா சக்தி உள்ளிட்ட பிற நவீன இலக்கியவாதிகளின் நூல்களின் பக்கங்களை கிழித்தோ பசை வைத்து ஒட்டி மறைத்தோ அவர் விற்கக்கூடும் என நினைத்துக்கொண்டேன். ஒருவேளை அவர் அவற்றை வாசித்திருக்கமாட்டார். யாராவது கவனப்படுத்தலாம் . அப்படி கவனப்படுத்தியவுடன் அந்த மிரட்டலுக்கு பணிந்து, அவர் அந்த நூல்களை அடுக்கில் இருந்து இறக்கிவிடலாம். நாளடைவில் அவர் கடையில் சில பள்ளி பயிற்சிநூல்கள் மட்டுமே இருக்கக்கூடும். 

நாவல் தொடர்ந்து துரித விற்பனையாகி ஒரு கட்டத்தில் மந்தமானது. இனி மலேசியாவில் இதனை வாங்குவதற்கான வாசகர்கள் இல்லை என முடிவெடுக்கும் அளவில் அதன் நிறைவு இருந்தது. தபால் வழி வாங்கியவர்களின் புதிய தொடர்புகள் இனி வல்லினத்தில் வரக்கூடிய நூல்களின் பரவலுக்கு உதவக்கூடிய வகையில் இருந்தன. நாவல் தடை செய்யப்படுவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே நூல் முற்றிலும் தீர்ந்துபோனது. அதை முகநூலிலும் அறிவித்திருந்தேன்.

பேய்ச்சியை ஒட்டி புதிய வாசகர் வட்டம் உருவானது. அவர்களில் பெரும்பாலோர் மரபான நாவல்களை மட்டும் வாசித்தவர்கள். அதுவும் கல்லூரி நாட்களில். அவர்கள் நாவலின் கலைத்தன்மையைப் புரிந்துகொள்ள முடியாது, குழப்பம் அடைந்தனர்.  படைப்பிலக்கியத்தில் உள்ள நுணுக்கங்களை தொகுத்துச்சொல்ல அவர்களால் இயலவில்லை. ஆனால் வாசிப்பினால் அவர்களுக்குள் நிகழ்ந்த மாறுதல்களை தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் சொல்லத் தொடங்கினர். அது எனக்கு சுவாரசியமான அனுபவம். அவர்களுக்குத் தீவிர இலக்கியப் பரிட்சயம் இல்லை. எனவே இப்படியான வேறு நூல்களைப் பரிந்துரைக்கக் கூறினர்.  எனக்கு அது நல் வாய்ப்பாக அமைந்தது. நவீன இலக்கியவாதிகளின் புனைவுகளைப் பரிந்துரைத்தேன். பலரது இலக்கிய வாசிப்பில் நிகழும் மாற்றத்துக்கு ‘பேய்ச்சி’ காரணமாக இருப்பது மகிழ்ச்சியைக் கொடுத்தது.

நான் எவ்வளவு செலவு செய்து விளம்பரம் கொடுத்திருந்தாலும் இது நடந்திருக்காது என அறிவேன். நான் பிறந்து வளர்ந்த லுனாஸையும் அங்கு 1981இல் நடந்த கோர மரணங்களின் வலிகளையும் என்னால் புதிய தலைமுறைக்கு புதிய கோணத்தில் கடத்த முடிந்தது. கெடாவில் வாழும் ஏராளமான வாசகர்கள் அந்தச் சம்பவத்தின் கோரத்தை நாவலின் வழி அறிந்ததாகக் கூறினர். எனவே இந்த நாவல் செலுத்தவேண்டிய தாக்கத்தை தங்கு தடையின்றி செலுத்தியது.

எல்லாவற்றையும் மீறி நான் ஆச்சரியப்பட்டது, புதிதாக எழுந்துவரும் இளம் தலைமுறை படைப்பாளிகள் நாவலை வாசித்து தங்கள் கருத்துகளை மிக நுட்பமாகவே பதிவு செய்தனர்.  இதுவும் மலேசிய இலக்கியத்தில் இதுவரை நிகழாதது. ஒரு முன்னாள் வானொலி அறிவிப்பாளர், “அவர்களெல்லாம் நீங்கள் கேட்காமல்தான் எழுதினார்களா என்ன?” என்று நக்கலாகக்கேட்டார். மொண்ணையான எழுத்துகளைத் தொகுத்து அதற்கு முட்டுக்கொடுக்க நவீன இலக்கியம் அறியாதவர்களை அழைத்து வந்து கூட்டம் போடுபவர்களால் இந்தச் சூழலை அறிந்துகொள்ளவே முடியாதுதான். காரணம் அதுவரை மலேசிய இலக்கியச்சூழலில் அவதூறுகள் நிகழ்ந்தால் மௌனம் சாதிப்பது மட்டுமே சாத்தியமாக இருந்தது. இந்த உடைப்பு நம்ப முடியாததாக பலருக்கும் இருந்தது. அதிலும் நாவலுக்குள் ஒவ்வொருவரும் கண்டடைந்த தனி உண்மைகளை முன்வைத்ததெல்லாம் மலேசியாவின் இலக்கியச் சூழலை பேய்ச்சிக்கு முன் – பின் எனக் கட்டமைக்கச் செய்தது. இது மெல்ல வளர்ந்து மலேசியாவைத் தாண்டி பல நாடுகளில் இருந்தும் நாவல் குறித்து கட்டுரைகள் வந்தன. விரிவான வாசிப்புக்கு பேய்ச்சி சென்றாள். 

நாவல் தடை

பேய்ச்சி சுழன்றாடும் ஆட்டம், நாவல் வெளியீடு கண்டு மிகச்சரியாக ஓராண்டு நிறைவில் (நாவல் வெளியீடு கண்டது 20.12.2019) இன்னொரு பரிணாமத்தை எடுத்தாள் பேய்ச்சி. இதனைத் தற்செயல் என்று மட்டுமே  என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. தான் பிறந்த நிலத்தைவிட்டு தீவிரமாக உலகை வலம் வரவேண்டுமென அவள் முடிவெடுத்த தினம் ஆச்சரியமானது.

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/EpkeB8SVEAE0Enc.jpg

மீண்டும் பேய்ச்சி குறித்த பேச்சுகள் ஆரம்பித்தன. உலகம் முழுவதும் உள்ள தமிழ் இலக்கிய வாசகர்களிடம் பேய்ச்சி என்ற பெயர் அடுத்த இரண்டு நாட்களில் பரவலாகப் போய் சேர்ந்தது. தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள், அமைப்புகள் என பலதரப்பட்ட தரப்பிடமிருந்து பேய்ச்சிக்கு ஆதரவான குரல்கள் எழுந்தன. வாங்கி வைத்திருந்தவர்கள் தேடி எடுத்து வாசிக்கத் தொடங்குவதை என்னிடம் தனிப்பட்ட முறையிலும் முகநூலிலும் பதிவிட்டனர். வாங்காதவர்கள் நாவலைக் கேட்டுக்குடைந்தனர். விலகியிருந்த சிலர் நெருங்கி வந்தனர். மௌனித்திருந்தவர்கள் பேசத்தொடங்கினர். ஆம்! பேய்ச்சி பலரையும் பேச வைத்தாள்.

பொதுவாக மலேசியாவில் ஒரு நூலை எழுதி வெளியிடுவதற்குப் பின்னால் உலகியல் தேவைகள் இணைந்திருக்கும். முன்பு, அரசியல்வாதிகள் மற்றும் தனவந்தர்களின் தயவில் நூலை வெளியிட்டு பணம் சம்பாதிப்பதுண்டு. ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பல ஆயிரங்கள் சம்பாதிப்பார்கள். அல்லது விருதுகளுக்கு அனுப்பி அதன் வழி பணம் கிடைக்கிறதா என முயல்வார்கள்.

தனிப்பட்ட முறையில் என் படைப்புகளை எந்த விருதுக்கும் அனுப்பும் பழக்கமில்லை எனக்கு. மாணிக்கவாசக விருது தேர்வுக்கு எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன் பேய்ச்சி நாவலை அனுப்பச் சொல்லி நேரடியாகக் கேட்டபோதோ அதற்கும் முன் கரிகாற்சோழன் விருது தேர்வு குழுவுக்கு அதன் அறக்காவலர் முஸ்தபா என் நூல்களை அனுப்பச் சொல்லிக் கேட்டபோதோ நான் ஒருபோதும் அனுப்பி வைத்ததில்லை. எனது இருபத்து மூன்று வயதில் எடுத்த முடிவுக்குப் பின் எந்தப் போட்டியிலும் பங்கெடுப்பதும் இல்லை. எனவே அது குறித்தெல்லாம் கவலையடைய ஒன்றும் இல்லை. மேலும் புத்தகத் தடைகள் நீக்கப்பட்ட வரலாறுகள் பிற நாடுகளைப் போலவே மலேசியாவிலும் குறிப்பிடத்தக்க அளவு உண்டு. அப்படியே நாவலை வாசிக்கும் ஆர்வம் இந்த தடையின் வழி மலேசியாவில் பலருக்கு ஏற்பட்டிருந்தாலும்  அதற்கேற்ப பதிப்பகம் வேறு வழிகளை நாடலாம். எனவே, தனிப்பட்ட முறையில் இந்தத் தடையால் எனக்கு பாதகம் இல்லை.

தனிப்பட்ட வகையில் எனக்கு நூல் தடையால் எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் மௌனமாக இருந்துவிட முடியுமா என்றுகேட்டால் ‘இல்லை’ என்பதே பதில். ஒரு புத்தகத் தடை என்பது ஓர் எழுத்தாளரோடு சம்பந்தப்பட்டதல்ல. அது ஒரு நாட்டின் கருத்துரிமை மற்றும் எழுத்துரிமையோடு சம்பந்தப்பட்டது. அவ்வுரிமை தடைபடும்போது மெல்ல மெல்ல அனைத்து உரிமைகளுக்கும் ஆபத்து வரும் என்பதையே வரலாறு காட்டுகிறது.

புத்தகத் தடைகள்

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/index.png

மலேசியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் முதல் தமிழ் நாவல் ‘பேய்ச்சி’. அதே சமயம் புத்தகத் தடை என்பது மலேசியாவில் ஒரு புதிய விஷயம் அல்ல. ஆனால், ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பால் உலக புத்தக தலைநகரமாக இந்த ஆண்டு (2020) கோலாலம்பூர் அறிவிக்கப்பட்டு, வாசிப்பை இந்நாடு கொண்டாடும் தருணத்தில் பேய்ச்சிக்குத் தடை அறிவிக்கப்பட்டிருப்பது ஒரு நகைமுரண்தான்.

‘வாசிக்கும் சமூகமே அக்கறையுள்ள சமூகம்’ என்ற கருப்பொருளுடன் KL BACA என்பதை முழக்கவரியாகக் கொண்டது இந்த ஆண்டின் கொண்டாட்டம். “வாசிப்பின் மூலம் அக்கறை” என்ற இலக்குடன், அனைத்து வடிவங்களிலும் வாசித்தல், புத்தகத் தொழில் உள்கட்டமைப்பின் வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய மின்னிலக்க பயன்பாட்டு வசதிகள், வாசிப்பின் மூலம் குழந்தைகளை மேம்படுத்துதல் ஆகின நான்கு கருப்பொருள்களில் ஆண்டு முழுவதும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

படிப்பறிவிலும் படைப்பிலக்கியத்திலும் மேன்மையடைய மலேசியா முயற்சிகளை எடுத்து வருகிறது எனினும், அதிகாரத்துவ தணிக்கை எனும் கருநிழலிலேயே இது நடப்பதாக Free Malaysia Today குறிப்பிடுகிறது. அதேபோல, சர்ச்சைக்குரிய Printing Presses and Publications சட்டத்தை ரத்து செய்வதாக மலேசிய அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால் அது எப்போது நடக்கும் எனத் தெரியாது. பிரபல சட்டத்துறை பேராசிரியர் அஸ்மி ஷாரோம் (Azmi Sharom) இச்சட்டம் இரட்டை நிலைபாட்டைக் கொண்டுள்ளது என்கிறார். உள்ளூர் மலாய் மொழி நூல்களைத் தடைசெய்யும் அதேநேரத்தில், அந்நூல்களை ஆங்கிலத்தில் அனுமதிக்கிறார்கள் என்கிறார் அவர்.

சமயம், பாலியல் தொடர்பான கருப்பொருள் காரணமாக புத்தகங்கள், படங்கள், பாடல்கள் தடைசெய்யப்படுவது மலேசியாவில் வழக்கமானது என்றாலும் அண்மைக்காலமாக அரசாங்கம் கடுமையாக நடந்துகொள்வதாக விமர்சகர்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர்.

இந்த இணைய யுகத்தில் மொழி, பாலினம்,  மதத்தைக் கண்காணிக்கும் பழமையான பாரம்பரியத்தை புத்தகங்களைத் தடை செய்வதன் வழி  மலேசியா தொடர்கிறது என்று பினாங்கு கல்வி நிலையம் 2017ல் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. “The Policing and Politics of the Malay Language” என்ற இந்த நிறுவனத்தின் அறிக்கை, 1971 முதல் 2017 வரை 1,695 புத்தகங்கள் தடைசெய்துள்ளதாக மலாய் மெயில் இணையத் தகவலை மேற்கோள்காட்டி கூறுகிறது. இதில் 556 மலாய் புத்தகங்கள், ஆங்கிலத்தில் 516 புத்தகங்கள்,  சீன மொழியில் 450 புத்தகங்கள் அடங்கும்.

இணையத்தில் அனைத்துமே கிடைக்கும் இந்தக் காலகட்டத்தில், புத்தகங்களைத் தடைசெய்ய  1984ல் உருவாக்கப்பட்ட அச்சகங்கள், வெளியீடுகள் சட்டத்தின் பயன்பாடு சரியானதுதானா என அந்த அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் சில தலைப்புகளைத் தடை செய்வது, அதன் மீது மக்கள் கவனத்தை அதிகமாக ஈர்க்கும் என்றும் ஆய்வாளர் ஓய் கோக் ஹின் (Ooi Kok Hin) குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவைப் பொறுத்தவரையில்  சிந்தனையாளர்கள், கருத்தாளர்கள் வட்டத்தில் நூல்களைத் தடை செய்வதிலோ எழுத்தாளர்களின் கருத்துச் சுதந்திரத்தைப் பறிப்பதிலோ அவர்களுக்கு உடன்பாடில்லை. ஆனால் இதற்கான எதிர்ப்புக்குரல் வலுக்கவில்லை என்பதையே நடைமுறையில் காண்கிறோம். நான் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் ஆயுள் கால உறுப்பினராக இருக்கின்ற போதும் ஒரு தமிழ் புத்தகத்துக்கு நிகழ்ந்துள்ள இந்தத் தடைக்கு அவர்களிடம் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. “இப்படி எழுதினால் அப்படித்தான் தடை செய்வார்கள்” என்பதே அச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரனின் கருத்து. அவருக்கு இலக்கியப் பரீட்சயம் இல்லை என்பது ஒரு புறம் இருக்க, அவர் தலைமையில் விருது பெற்ற புனைவுகளைக் கூட இதுவரை வாசித்திருக்கவில்லை என்பதுதான் கவலைக்குறியது. பேய்ச்சிக்குச் சொல்லப்பட்ட இதே குற்றச்சாட்டுகளை அப்படி விருதுபெற்ற புனைவுகளுக்கும் வைக்கலாம். அப்படியென்றால் இலக்கியம் குறித்த அவர் நிலைபாடுதான் என்ன? அரசாங்கம் தரும் மானியத்தை மட்டுமே நம்பி செயல்படும் இயக்கம் இப்படி வீரியம் இழந்திருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அதுபோல பேய்ச்சி தடைக்காக செயலாற்றிய ‘தமிழ் மலர்’ நாளிதழ் ஒரு செய்திகாகக் கூட இத்தடை குறித்து பேசவில்லை. 

மலேசியாவில் நிலை இப்படி இருக்க, ஒட்டுமொத்தமான, உலகளவிலான தமிழ்ச் சமூகத்தைப் பார்த்தோமானால், வாசிப்பு பல்வேறு நிலைகளில் இருந்தாலும், படைப்புகள் குறித்த மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும் நூல்களைத் தடை செய்வது என்பது பெரும்பான்மையினரால்  ஏற்றுக்கொள்ளக்கூடியதாக எப்போதுமே இருந்ததில்லை.  

டிசம்பர் 6, 1911-ல், பாரதியின் ‘ஆறில் ஒரு பங்கு’ எனும் நூலுக்குத் தடைவிதிக்கப்பட்ட வரலாற்றிலிருந்தே தமிழ் நூல்களின் தடை தொடங்குகிறது. பாரதி உயிரோடு இருந்தபோது, அவருக்குத் தடைவிதித்ததுபோல் இறந்த பின்பும் பாரதி பாடல்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. அவரது பாடல் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், மறு ஆண்டே தடை நீக்கப்பட்டு புத்தகங்கள் திருப்பிக்கொடுக்கப்பட்டன. பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் காலனித்துவத்துக்கு எதிரான, சுதந்திர முழக்கமிட்ட எவ்வகையான எழுத்தும் கலையும் தடை செய்யப்பட்டது. பாரதிதாசனின் ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’, அண்ணாவின் ‘ஆரிய மாயை’, ‘கம்ப ரசம்’, ‘தந்தை பெரியாரின் பொன்மொழிகள்’, ‘புலவர் குழந்தையின் இராவண காவியம்’ தேசிய விடுதலை, திராவிட இயக்கம், காந்தியம் போன்ற கருத்துநிலைகள் சார்ந்து செய்யப்பட்டு வந்த தடையும் எதிர்ப்பும், தற்போது சமய, சாதியத் தன்மைகள் சார்ந்தவையாக மாறியுள்ளன. மதுரை வீரனின் உண்மை வரலாறு என்ற குழந்தை ராயப்பனின் நூலும், கே.செந்தில் மள்ளர் என்பவரால் எழுதப்பட்ட ‘மீண்டெழும் பாண்டியர் வரலாறு’ எனும் நூலும் 2013-ல் தடைசெய்யப்பட்டன. பின்னர் 2015இல் பெருமாள் முருகனின் ‘மாதொருபாகன்’ தடை செய்யப்பட வேண்டும் எனப்போராட்டம் எழுந்து இலக்கியப் பிரதிக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது கருத்துரிமைக்கு எதிரானது என நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.

இப்படித் தொடரும் புத்தகத் தடையின் போதெல்லாம் கண்டனக்குரல்களும் அதிகரிக்கின்றன. ஜெயமோகன், ஷோபா சக்தி போன்ற முதன்மையான தமிழ்ப்படைப்பாளிகளிடம் இருந்து உடனடியாக எதிர்வினைகள் எழுகின்றன. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் சட்ட ரீதியாகவே தடையை மீட்கும் நடவடிக்கையில் இறங்குகின்றன. ஆனால் மலேசியா போன்ற நாட்டில் இந்நிகழ்வு ஓர் எழுத்தாளருக்கும் அரசாங்கத்துக்குமான தனிப்பட்ட விவகாரமாக மட்டுமே பார்க்கப்படுவதுதான் வருத்தமானது. 

மூத்தப்படைப்பாளிகள் கள்ள மௌனங்கள் வழியே இச்சூழலைக் கடக்க நினைக்கின்றனர். இது ஒரு நூலுக்கான தடை மட்டுமே என திரைத்துறையைச் சேர்ந்தோர், ஓவியர்கள், இசைக்கலைஞர்கள், கார்ட்டூனிஸ்டுகள் ஒதுங்கிக்கொள்கின்றனர். கலைத்தன்மையை அறியாத ஒரு குருங்குழுவினர் நினைத்தால் எந்த ஒரு கலைப்படைப்பையும் தடை செய்யலாம் என்ற எண்ணம் இனி பிற கலைகள் மீதும் பரவும். யார் நினைத்தாலும் இனி இந்நாட்டில் சங்க இலக்கியம், திருக்குறள், இதிகாசங்கள் என எதற்கும் தடை கொண்டுவரலாம் என்ற எண்ணம் மேலோங்கும். மொழியாலும் இனத்தாலும் கலையாலும் பிரிந்துள்ள கலைஞர்களின் சுதந்திரம் மெல்ல மெல்ல பறிக்கப்படும். நாளை எந்த ஒரு கலைஞனும் தன் படைப்பை இந்த மொண்ணைக் கும்பலுக்கு ஏற்ப நெளிக்க வேண்டும்; வளைக்க வேண்டும்.

கண்டனங்கள்

பேய்ச்சியின் தடையினால் அதற்கு கண்டனங்கள் தெரிவிப்பவர்கள் மூன்று வகையினர். 

இந்த நாவல் தடைசெய்யப்பட, பொதுமக்களிடம் ஏற்பட்டிருக்கும் அதிருப்தி அடிப்படைக் காரணம் என அரசு தரப்பால் சொல்லப்படுகிறது. ஒரு நாட்டின் அரசாங்கம் மக்களின் மனநிலையைக் கருத்தில்கொண்டே சில முடிவுகளை எடுக்கிறது. மக்களின் மனநிலையை அவர்கள் அறிவது நாளிதழ் வாயிலாக. எனவே பேய்ச்சிக்கு எதிரான கருத்துகள் நாளிதழ்களில் வந்ததைத் தொடர்ந்து அரசாங்கம் அந்த முடிவை நோக்கி செல்லத் தொடங்கியது. ‘தமிழ் மலர்’ நாளிதழ் மட்டுமே தொடர்ச்சியாக பேய்ச்சிக்கு எதிரான அறிக்கைகளை வெளியிட்டது. ஆனால், பேய்ச்சி நாவலால் ஈர்க்கப்பட்டு அது சிறந்த இலக்கியம் எனச் சொல்லும்  தரப்பினரால் எழுதப்பட்ட கட்டுரைகளை கடந்த ஆண்டு தமிழ் மலர் நாளிதழிடம் சமர்ப்பித்தபோதும் அவர்கள் அதனைப் பிரசுரிக்க மறுத்துவிட்டனர். அவர்களிடம் திட்டவட்டமான நிலைப்பாடுகள் இருந்தன. அதையே அவர்கள் செய்தியாக்க முனைந்தனர். அதுவே அமைச்சின் பார்வைக்கும் பிரதானமாகச் சென்றது. எனவே மக்களின் ஒட்டுமொத்த மனநிலையே அதுதான் எனும் நிலைக்கு உள்துறை அமைச்சு சென்றிருக்கலாம். காரணம் தினசரிகளை ஆராய்வதும் நூல்களை ஆராய்வதும் ஒரே பிரிவுதான். அனைத்துத் தரப்பு மக்களின் மனநிலையும் அவ்வாறு இல்லை என்பதையும்; பெரும் வாசகர் பரப்பு பேய்ச்சி நாவலை ஆதரிப்பதையும் இந்த கண்டனங்களின் வழி அதன் வாசகர்களின் குரலாகப் பதிவு செய்ய முடிகிறது. 

பல்வேறு தரப்புகள் இணைந்தால் ஓர் எழுத்தாளனை முடக்கிவிடலாம் என்ற மனநிலைக்கு எதிரான கண்டனத்தை செலுத்தியவர்கள் இரண்டாவது தரப்பினர். முகநூலில் கூச்சல் போடும் கூட்டத்தினர்,  கல்வியாளர்கள், நாளிதழ், பொது அமைப்பினர் போன்ற நவீன இலக்கிய அறிமுகம் இல்லாதவர்களை நோக்கி அவர்கள் எதிர்ப்புக்குரல் எழுந்தது. இந்த அபத்தச் சூழலுக்கு எதிராக எழுத்தாளர்கள் திரள வேண்டும் என்ற நோக்கில் உருவான கண்டனங்கள் அதிகம். அவர்களில் சிலருக்கு நாவலின் மீது மாற்றுக் கருத்தும் உண்டு. ஆனால் நாவலின் கலைமதிப்பை விமர்சனம் வழியே அணுக வேண்டும் என்ற தெளிவும் இருந்தது. மாறாக, தடை உத்தரவு கலைக்கு எதிரானது என்ற பிரக்ஞையுடன் செயல்பட்டனர்.

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/navin-05.jpg

மூன்றாவது, இலக்கியத்திற்கும் சிந்தனைக்கும் எதிரான வன்முறையாக இந்தச் சூழலைக் கருதும் சிந்தனையாளர்களின் கண்டனங்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் எழுத்தாளன் தன்னைத்தானே முடக்கிக்கொள்வான், தன் சிந்தனையைச் சுயதணிக்கை செய்துகொள்வான் என்பதால் இந்நிலத்தில் இருந்து கலைஞனோ சிந்தனையாளனோ உருவாகமாட்டான் எனும் பதற்றத்தில் அக்கறையில் அவர்கள் மாற்றுக்குரல் எழுப்பினர். மேலும் இந்த நாவலுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் இலக்கியம் என்ற கலை வடிவத்தையும் எழுத்தாளனின் சுதந்திரத்தையும் அறியாதவர்கள் என்பதால் அது குறித்து அழுத்தமாகப் பேசினார்கள். ஆம்! பேசத்தான் வேண்டும். கலையின் சுதந்திரம் சட்டத்தால் முடக்கப்படக்கூடாது; அது விமர்சனங்களால் மட்டுமே எதிர்கொள்ளப்படவேண்டும் என ஒரு சூழலில் மறுபடி மறுபடி உரையாடலை நிகழ்த்த வேண்டியுள்ளது. எழுத்தாளன் தனியன் என்பதால் அவனை என்னவும் செய்யலாம் என நினைக்கும் கூட்டங்களுக்கு எதிராக அவர்களின் கண்டனங்கள் எழுந்தன.

எனவே ஒரு கலைப்படைப்பு தடை செய்யப்படும்போது அதன் கலை மதிப்பை அறிந்தவர்கள், எழுத்தாளனின் சுதந்திரத்தைப் புரிந்தவர்கள், எழுத்தாளனை எளிதாக வீழ்த்தலாம் என்ற சூழ்ச்சிகளை எச்சரிப்பவர்களின் இணைவாகவே பேய்ச்சிக்கு ஆதாரவான குரல்கள் உலகம் முழுவதிலும் இருந்து எழுந்துள்ளன. இது அரோக்கியமானது. தமிழில் அறிவுச்செயல்பாடு உண்டென மறுபடியும் சொல்லிக்கொள்ளும் ஒரு தருணம். ஒரு தமிழ்ப்படைப்பாளி அந்நிலத்துக்கு மட்டும் உரியவன் அல்ல அவன் தான் தனியன் அல்ல என உணர்ந்து கலையின் மீது நிபந்தனையற்ற செயலூக்கத்தையும் கட்டற்ற தீவிரத்தையும் படரவிடும் வரலாற்று நிகழ்வு.

பேய்ச்சி தடைக்குப் பங்காற்றியவர்கள்.

பேய்ச்சி தடை செய்யப்பட்டதற்கு மதியழகன் என்பவர் காரணமென பலரும் சொல்கிறார்கள். அறிவுக் குறைபாடுள்ள ஒருவரால் சேற்றை வாரி இறைக்க முடியுமே தவிர செயல்களால் எதையும் நிகழ்த்த முடியாது. தனி ஒருவராக ஒரு நாவலை தடை செய்ய வைக்கும் அளவுக்கு அவரிடம் எந்த ஆற்றலும் இல்லை என்பதே உண்மை. இது ஒரு கூட்டு முயற்சிதான். 

ஒருவகையில் பார்த்தால் பேய்ச்சியைப் பற்றி முகநூலில் எதிர்மறையாக எழுதியதன் வழி இளம் படைப்பாளர்கள் பலரையும் சீண்டி நாவலுக்கு ஆதரவாக எழுதத்தூண்டியவர் மதியழகன். அவரது அவதூறுக் கட்டுரை எனக்கு ஆதாரவாகத் திரும்பவே, நாவல் சாதி துவேசம் செய்வதாக தகவல்களைப் பகிர்வது, ஆதரவாகப் பேசுபவர்களை வேறொரு எண்ணில் அழைத்து மிரட்டுவது, புத்தகம் விற்கும் கடைக்காரர்களை மிரட்டுவது, கல்வி அமைச்சுக்கும் உள்துறை அமைச்சுக்கும் கடிதம் அனுப்புவது என சில்லறை வேலைகளைச் செய்துகொண்டிருந்தார்கள். இவை எதுவும் பயனளிக்கவில்லை. ஆனால் இதையெல்லாம் முகநூலில் அறிவிப்பதன் வழி அவருக்காக கைதட்டும் கோஷ்டிகளைச் சந்தோசப்படுத்தினார். தன்னையொத்த குறை அறிவுள்ளவர்களை ஒன்று திரட்டினார். 

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/patchaibalan-photo-.jpgந.பச்சைபாலன்

உண்மையில் இந்த நாவல் தடைக்கு முக்கிய காரணி ந.பச்சைபாலன். 

டிசம்பர் 2019இல் வல்லினம் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் ந.பச்சைபாலனின் கவிதைகளை கவிஞர் சாம்ராஜ் கடுமையாக விமர்சித்து அதனை நிராகரித்ததைத் தொடர்ந்து ‘இயக்கியகம்’ அமைப்பின் அனுமதி பெறாமல் அவர்களின் பெயரால் நாவலுக்கான கண்டனக் கடிதம் ஒன்றை ந.பச்சைபாலன் நாளிதழில் பிரசுரித்தார். இன்னும் பிற இயக்கத்தினரைத் திரட்டி அவர்களது அறிக்கைகளும் பிரசுரமாக நாளிதழில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்திக்கொண்டார். நாளிதழில் வெளிவந்த அந்த எதிர்கட்டுரைகள் அரசின் பார்வைக்கு சென்று நாவல் தடைக்கு பெரிய ஆதாரமாக செயல்பட்டுள்ளன.  நான் இயக்கியகத்தைத் தொடர்புகொண்டு அவர்களது அனுமதியில்லாமல் அவர் இயக்கத்தின் பெயரைப் பயன்படுத்தியதை கடிதமாகப் பெற்று காவல் நிலையத்தில் புகார் செய்தேன். பச்சைபாலன் அதற்கு மன்னிப்புக் கடிதம் எழுதியதோடு இந்த விவகாரத்தில் தலையிடுவதில்லை என்றும் மூன்று மாதங்களில் தான் பணி ஓய்வுபெறுவதால் தனது ஓய்வூதியம் உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கும் என்றதால் மன்னித்தேன். யாருடைய வயிற்றிலும் அடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இப்போது இதை நான் சொல்லக் காரணம் இனி அவரது ஓய்வூதியம் பாதிக்கப்படப் போவதில்லை. அவர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கும் எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் இது எங்கேனும் அவசியம் பதிவுசெய்யப்பட வேண்டிய ஒரு வரலாறு. 

கருத்து சுதந்திரம் கோரும் முதிர்ச்சியான தலைமுறை உருவாகி, இந்த நாவல் தடை செய்யப்பட்ட வரலாறு பேசப்படும் போதெல்லாம் பச்சைபாலனின் இழிசெயலும் கவனப்படுத்தப்படும். ஓர் இயக்கத்தின் பெயரை சூழ்ச்சியாகப் பயன்படுத்தி இலக்கிய விமர்சனத்தை கருத்தால் எதிர்கொள்ளாமல் வன்மத்துக்குப் பயன்படுத்திய அவரது  செயல் உமிழப்படும். தமிழை படிக்கும் அவரது அடுத்தத் தலைமுறையினரும்/ மாணவர்களும் எண்ணி நாணுவர். வரலாற்றில் பேய்ச்சி நிலைக்கும். எந்தத் தடைகள் வந்தாலும் நாவல் மீண்டும் வாசிக்கப்படும். அதற்கான செயல்வடிவத்தை நான் அறிவேன். ஆனால் பச்சைபாலனின் அருவருப்பான கறை இனி வரலாறு முழுவதும் படியும். 

http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/12/%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%8D-1024x855.jpg

இந்த நாவல் தடைக்கு ம.இ.காவினரும் பங்காற்றியதாகவும் அதற்கு பின்னணியில் அமைச்சர் டத்தோ சரவணன் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் செய்தி பரவியது. டத்தோ சரவணன் நவீன இலக்கியம் வாசிப்பவராகத் தன்னைக் காட்டிக்கொள்பவர். நாஞ்சில் நாடன், ஜெயமோகன் போன்றவர்களுடன் இலக்கியம் குறித்து உரையாடியுள்ளவர். எனவே இது உண்மைதானா என அறிய அவரைப் பலமுறை தொடர்பு கொண்டேன். அவர் எந்த அழைப்புக்கும் பதில் வழங்காதது போலவே அவர் அடிப்பொடிகளின் கூச்சல்களையும் மறுத்ததாகத் தெரியவில்லை. நாவலை மீட்டுக்கொடுக்க அரசிடம் பரிந்துரைக்க அவரிடம் உதவியெல்லாம் கேட்க மாட்டேன் என அவரும் அறிவார். ஆனால் நவீன இலக்கியம் அறிந்தவராகவும் தமிழ்ப்பற்று உள்ளவராகவும் தன்னை முன்வைக்கும் டத்தோ சரவணன் முழு அமைச்சராக உள்ள காலக்கட்டத்தில் நிகழ்ந்துள்ள இந்தத் தடை ஒரு முக்கிய நிகழ்வு. இந்த நிகழ்வு எழுதப்படும்போதெல்லாம் இதற்கு பின்புலமாக செயலாற்றியவர்கள் குறித்தும் பதிவு செய்வது நாளைய வரலாற்றுக்குத் துணை புரியும். அந்த வரலாற்றின் மகத்துவம் அமைச்சரின் அடிப்பொடிகளுக்கு புரியாமல் இருக்கலாம் டத்தோ சரவணனுக்கு புரியும் என்றே நம்புகிறேன்.

வெறுப்பிற்கான முன்கதை

பேய்ச்சி நாவலை தடைச்செய்ய உழைத்தவர்களின் அடிப்படையான நோக்கம் பலிவாங்கலும் வன்மமும்தான். மலேசியப்புனைவுகளில் ஏராளமான பாலியல் சித்தரிப்புகளும் மக்களின் புழங்கு மொழியின் வசைச்சொற்களும், சாதிய பெயர்களும் தாராளமாகவே உள்ளன. எனவே மலேசிய இலக்கியத்தைப் புனிதமாக்குவதாக சொல்லும் இந்தக் கூச்சல் கும்பல் அதன் பொருட்டு உழைக்கவில்லை என்பது தெளிவு. இந்தக் கும்பலோடு ஊடகங்களும் கல்வியாளர்களும் பிற எழுத்தாளர்களும் என பல்வேறு தரப்பினரும் இணைந்து செயல்படுவதால் தவறுகள் வல்லினம் பக்கம் இருக்கலாம்தானே எனும் சந்தேகம் எழுவதும் இயல்பு. இந்த வெறுப்பும் புறக்கணிப்பும் பேய்ச்சி என்ற ஒரு நாவலால் எழுந்ததல்ல. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

முதலாவது மலேசிய எழுத்தாளர் சங்கம், மணிமன்றம், சக்தி அறவாரியம் போன்ற அமைப்புகளின் மீது வல்லினம் தொடர்ச்சியாக வைக்கும் விமர்சனம். மலேசியாவில் இந்தியர்கள் சிறுபான்மையினர். இவர்களின் கலை இலக்கிய வளர்ச்சிக்காக தங்கள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்களைக் காட்டி அரசிடம் இருந்து பணம் பெறும் எந்த இயக்கமும் அதை ஆரோக்கியமான வழியில் செலவிடவில்லை என்றால் அது குறித்து மாற்றுக்கருத்தை முன்வைப்பது எழுத்தாளனின் கடமை. அந்த அமைப்பில் தனக்கு என்ன கிடைக்கும் என எலும்புத்துண்டுக்குக் காத்திருப்பதும், வாலாட்டிக்கொண்டு கிடைத்ததை கௌவியதும் மௌனிப்பதும் விசுவாசமாக வாலாட்டுவதும் விமர்சிப்பவர்களைக் கடிக்கச் செல்வதும் எங்களுக்குப் பழக்கமில்லாத காரணத்தால்  மாற்றுக்கருத்துகளை முன்வைக்க வேண்டியுள்ளது. 

இரண்டாவது, எழுத்தாளனாக இல்லாமல் தங்கள் தொடர்புகளைப் பயன்படுத்தி எழுத்தாளர்களைப் போல பாவலா காட்டுபவர்கள் குறித்து நான் எப்போதுமே விமர்சித்து வந்துள்ளேன். ஜமுனா வேலாயுதம் போன்றவர்கள் எழுத்தாளர் சங்க ஆதரவிலும் பொன் கோகிலம் போன்றவர்கள் கல்வியாளர்கள் தயவிலும் தங்கள் மொண்ணையான புனைவுகளை முன்னிலைப்படுத்தும்போது அவை ஏமாற்றுத்தனம் செய்யும் போலிப் பிரதிகள் என அழுத்தமாகவே சொல்லியிருக்கிறேன். 

மூன்றாவது, மலேசியாவில் ஏற்கனவே முன்னிலைப்படுத்தப்பட்ட படைப்புகளை மீள் வாசிப்பின் வழி விமர்சனத்திற்குட்படுத்தும் செயல்பாடுகள். விமர்சனத்தை பலரும் தீர்ப்பாக எடுத்துக்கொள்கின்றனர். மாற்று விமர்சனம் வைக்கும் தங்கள் சுதந்திரத்தை அறியாமல் தனி மனித சாடல்களுக்குள் நுழைகின்றனர். புனித பிம்பங்களாகப்பட்ட எழுத்தாளர்களின் ஆளுமைகள் உடைபடுவதை பலரும் விரும்புவதில்லை. விரும்புவதெல்லாம் பாராட்டுகளை. அதற்கான சொற்கள் எங்களிடம் இல்லாதபோது அதற்கான தகுதி அப்படைப்புக்கு இல்லாதபோது முரண்பாடுகள் எழுகின்றன.

நான்காவது, கிருஷ்ணன் மணியம் போன்ற இந்நாட்டு கல்வியாளர்களில் ஒரு சிலரைத் தவிர, இலக்கிய அபிப்பிராயங்ககளுக்கு தனிப்பட்ட முறையில் நான் துளியளவும் மரியாதை செலுத்துவதில்லை. உடலுக்குப் பிரேத பரிசோதனை செய்வதுபோல ஒரு படைப்பை கலை நுணுக்கத்துடன் அணுகத் தெரியாத அவர்களின் நூல் விமர்சனங்களை நான் கடுமையாகப் புறக்கணித்து வருகிறேன். தங்களுக்குத் துளியும் நிபுணத்துவம் இல்லாத நவீன இலக்கியம் குறித்து, வெட்கமே இல்லாமல் மேடைகளில் ஏறி பேசும் அவர்களின் அருவருப்பான மேடை அலைச்சலை பரிகாசம் செய்கிறேன். 

ஐந்தாவது, மலேசியாவின் சில நாளிதழ்கள் போக்கு குறித்தும் எங்கள் மாற்றுக்கருத்துகளைப் பதிவு செய்தே வந்துள்ளோம். தத்தம் சாதியை தூக்கிப்பிடிக்கவும், தனக்கு நெருக்கமான அரசியல் தலைவருக்காக எழுத்தை வளைக்கவும், பணம் கொடுக்கும் கட்சிக்காக கூலிக்கு மாரடிக்கும் தலையங்கம் எழுதவும், பத்திரிகை உரிமையாளர் மாறும்போதெல்லாம் தனது பத்திரிகை தர்மத்தை மாற்றிக்கொள்ளவும் தயங்காதவர்களை விமர்சிக்காமல் மௌனமாகக் கடக்க முடிவதில்லை. 

இப்படி ஒரு மலேசிய எழுத்தாளனுக்கு எந்தெந்த திசைகளிலெல்லாம் நற்பெயரும் விருதும் கிடைக்குமோ எதன் வழியெல்லாம் அடையாளமும் அங்கீகாரமும் நெருங்குமோ எந்த வளைவுகளில் நட்பு வட்டமும்  கூட்டமும் கூடுமோ அந்த வழிகளையெல்லாம் மொத்தமாக நாங்களே அடைக்கிறோம். இதில் தொடர்புடைய, இதேபோன்ற பாதையைத் தேர்ந்தெடுக்கின்ற மிகச் சிலருடன் மட்டுமே எங்கள் பயணங்கள் சாத்தியமாகின்றன. 

இப்படி உள்ள ஒருவனுக்கு அல்லது ஒரு குழுவுக்கு வாழ்நாள் முழுவதும் சிக்கல்கள் வருவதும், தாக்கப்படுவதும், வீழ்ச்சிகளைச் சந்திப்பதும் அவர்கள் தேர்வின் வழியே நடக்கின்றன. எனவே பேய்ச்சி நாவலின் தடை என்பது அந்த நாவலுக்காக மட்டுமே நிகழ்ந்த தடையல்ல. பதினைந்து வருடமாக எப்படி ஒரு அறிவியக்கம் அடங்காமல் திமிறிக்கொண்டே இருக்கிறது என்ற எரிச்சலின் விளைவு, அவ்வலையை மௌனமாக்க நடக்கும் சூழ்ச்சிகளின் விளைவு, பயமுறுத்திப் பார்க்க, பயந்தவர்களால் நிகழ்த்தப்பட்ட விளைவு.

அதனாலெல்லாம் வல்லினம் செயல்பாடுகளில் எந்தச் சுணக்கமும் ஏற்படாது. நாமார்க்கும் பகையல்லோம்; நமனை அஞ்சோம்.

மனச்சோர்வு

ஓர் எழுத்தாளனாக நான் புனைவை எழுதுவது, அது அந்தரங்கமாக எனக்குக் கொடுக்கும் மகிழ்ச்சிக்காகத்தான். ஆனால் நான் யார் எனக் கண்டடைய சிறுகதையைவிட நாவலே எனக்கு உதவியது. இதே காலகட்டத்தில் எனது முதுகலைக் கல்வி முடிந்ததும் டாக்டர் சண்முகசிவா முனைவருக்காக மேற்கல்வியைத் தொடரச் சொல்லியபோதும் நான் நாவல் எழுதும் தருணத்தில் என்னைக் கண்டடைந்ததையே சொன்னேன். ஒரு துறவி தன் தவத்தின் வழி எதைக் கண்டடைகிறாரோ, எது காலத்தையும் வெளியையும் கடந்த கட்டற்ற விரிவைத் தருமோ, இந்த உலகியல் அடைவுகளை மீறிய பேரனுபவம் உண்டென எது சொல்லுமோ அதை நான் கண்டடைந்தேன்.

இந்தத் தடையால் நான் மனம் சோர்வது ஒன்றுக்காக மட்டும்தான். இளம் படைப்பாளிகள் இந்த அச்சுறுத்தல்களைக் கண்டு தங்கள் புனைவு மனத்தைச் சுருக்கிக்கொள்ளக்கூடும் என்பதும் தங்கள் எழுத்தில் சுயதணிக்கை செய்வார்கள் என்பதுமே இதில் உள்ள சங்கடம். ஏற்கனவே அடையாளம் கிடைப்பதற்காக போலியான இலக்கியச் செயல்பாடுகளில் இணைந்து கசடாகிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் கண்டு கவலைப்படும் சூழலில் இது மேலும் வருந்த வைக்கிறது.

எழுத்தாளன் என்பவன் அதிகார மையங்களின் கைக்கூலியல்ல என்பதை முதலில் ஒவ்வொரு இளம் படைப்பாளிகளும் உணர வேண்டியுள்ளது. அதிகார மையங்களுக்கு சாதகமாக எழுதுவது மட்டுமல்ல; எழுதும்போது அவர்களை மனதில் நிறுத்திக்கொண்டு  கருத்தை வளைப்பதும் எழுத்துக்கூலியாக இருப்பதற்குச் சமம்தான். அப்படியான மனதில் ஒரு காலமும் ஒளி பிறக்காது. ஒளி இல்லாத மனதின் எழுத்து நீர்த்துப் போகும். இலக்கியத்திற்கான பாதை எப்போதும் இரண்டுதான். அதில் ஒன்று மட்டுமே எப்போதும் இளம் தலைமுறைக்கு காட்டப்படுகிறது.

பிரபலங்களுடன் அணுக்கமாதல், அதன் வழி அடையாளங்களை அடைதல், ஆழமான ஆய்வோ தேடலோ இல்லாமல் கூட்டங்களை நடத்துதல், கூட்டங்களை நடத்துவதாலேயே இலக்கிய அந்தஸ்தை பெற்றுவிட்டதாக பாவனை செய்தல், அதிகார மையங்களை நெருங்கிச்செல்ல முடிவதையே இலக்கியத்தின் இறுதி பயனாகக் கருதுதல், தன்னைப்போலவே மொண்ணையான இலக்கியப் பரீட்சயம் கொண்ட வெளிநாட்டு இலக்கிய குழுக்களுடன் இணைவதை சாதனையாக காட்டுதல், அமைப்புகளின் பாதங்களை நக்கி விருதுகளைப் பெறுதல் என அவை நீளும். இதன் வழி ஓர் எழுத்தாளன் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்நாளெல்லாம் தங்கப்பதுமைபோல மவுசாக வாழ்ந்து சாகலாம். 

இன்னொரு பாதை உண்டு. அதில் செய்ய வேண்டியது ஒன்று மட்டுதான். தொடர்ந்து வாசிக்க வேண்டும்; பின்னர் எழுதவேண்டும். பரந்த, ஆழ்ந்த வாசிப்பே ஒருவரை உண்மையான எழுத்தாளனாக உருவாக்கும். அதுவே இயல்பாக விமர்சகனாக நகர்த்தும். எதையும் எதிர்கொள்ளும் நெஞ்சுரத்தைக் கொடுக்கும். அப்படி சுய தன்மையுடன் தங்கள் மேல் சுமையாக அணிந்துள்ள அடையாளங்களைக் கழற்றிவிட்டு எழுந்துவரும் இளம் தலைமுறையால் மட்டுமே மெல்ல மெல்ல இந்தச் சோர்வு நீங்கும்.

இனி

இந்தத் தடையால் மலேசியாவிலும் வெளிநாட்டிலும் பல நண்பர்கள் அழைத்து வருத்தம் தெரிவித்தனர். இதனால் எனக்கு தனிப்பட்ட பாதிப்புகள் வருமா என்று கேட்டனர். அவர்கள் அனைவரிடமும் நான் கூறியது ஒன்றுதான்.

தடை செய்யப்பட்ட நூலை விற்பனை செய்வது குற்றம். ஆனால் பேய்ச்சி நாவல் என்னிடம் கைவசம் இல்லை. அதனால் சட்ட ரீதியான சிக்கல் இல்லை. மேலும் நான் ஒரு அரசாங்க ஊழியன். அதிலும் பல வருடங்களாக பல வகை விசாரணைகளை நான் எதிர்கொண்டு வந்துள்ளேன். வேலைக்கு சேர்ந்த நாள் முதல் பதவி உயர்வுக்காகவோ விருதுக்காகவோ நான் முயன்றதில்லை. வழக்கமாக நடக்கும் சம்பள உயர்வுக்கான விண்ணப்பத்தையே நான் மறந்துவிடுவதும் தாமதித்துவிடுவதும் உண்டு. இலக்கியத்திற்காக நான் செலவிடும் நேரத்தையும் உழைப்பையும் என் தொழிலில் செலுத்தினால் நான் இருக்கக்கூடிய இடம் எதுவென நன்றாகவே தெரியும். ஆனால் நான் காலத்தை நகர்த்த விரும்பும், அறிவுச்சூழலை உருவாக்க முனையும் முழுமையான எழுத்தாளன். அதற்காக மட்டுமே படைக்கப்பட்டவன். அக்கடமையில் இருந்து நான் தவற முடியாது. எனவே அதற்கான சவால்களையும் வாழ்நாள் முழுவதும் அனுபவித்தே ஆகவேண்டும்.

இன்று என் முன் எதிர்கருத்துகளுடன் இருப்பவர்கள் தற்காலிகமானவர்கள். இதற்கு முன்பும் இப்படி சிலர் இருந்தனர். இதற்குப் பிறகும் சிலர் வருவார்கள். கிணற்றைத் தூர்வாரும்போது சகதி காலில் படக்கூடாது என்றால் எப்படி? மேலும் எல்லா இடங்களிலும் நடக்கும் புறக்கணிப்புகளும் பழகிவிட்டது.

இந்த புத்தகத் தடையில் முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் நடுநிலையாக இருப்பதாக மௌனித்து என்னிடம் தனிப்பட்ட முறையில் அழைத்து வருத்தம் சொன்னவர்கள் பல பேர். இதை நான் எப்போதும் கடந்து வந்துள்ளேன். அவர்களைப் பார்க்கப் பரிதாபமாகவே இருக்கும். எத்தனை பலவீனமானவர்கள் அவர்கள். என்னிடம் பேசுவதால் அவர்கள் நட்பு வட்டத்தை இழப்பார்கள் அல்லது ஏச்சுக்குள்ளாவர்கள் என நானும் விலகியே இருந்துவிடுவேன். 

இதெல்லாம் இப்படித்தான் இருக்கும். அதைப் புரிந்துகொண்டு சமசரங்களைத் துறப்பவர்களால் மட்டுமே இந்நிலத்திலிருந்து ஆலமரம்போன்ற வலுவான இலக்கியங்களை உருவாக்க முடியும். மற்றவர்கள் எல்லாம் சிறு புல் பூண்டாக துளிர்த்து மடிவர். அதனால் என்ன? ஆலமர நிழலில் புற்கள் முளைப்பதும் அழகுதானே.

 

http://vallinam.com.my/version2/?p=7339

 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி என்னதான் இந்த நாவலில் எழுதியிருப்பார் என வாசிக்க தூண்டுகிறது.. திரைப்படங்களிலும், சாதாரண வாழ்வில் பயன்படுத்தப்படாத சாதிகளையும், பாலியல் நடவடிக்கைகளையுமா இந்த நாவல் சொல்கிறது?

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2021 at 11:30, பிரபா சிதம்பரநாதன் said:

அப்படி என்னதான் இந்த நாவலில் எழுதியிருப்பார் என வாசிக்க தூண்டுகிறது.. திரைப்படங்களிலும், சாதாரண வாழ்வில் பயன்படுத்தப்படாத சாதிகளையும், பாலியல் நடவடிக்கைகளையுமா இந்த நாவல் சொல்கிறது?

சில சொல்லாடல்கள் மலேசியாவில் இருக்கும் எழுத்தாளர்களுக்கு கோபத்தைத் தூண்டியுள்ளது. நாவல்களில் அப்பட்டமான, ஆனால் திணிக்கப்படாமல், கெட்டவார்த்தைகளும் விவரணைகளும் வருவது வழமைதானே.

புத்தகம் மலேசியாவில் தடை ஆனால் இந்தியாவில் விற்பனைக்கு உள்ளதால் ஓர்டர் பண்ணியிருந்தேன். இந்த மாதம் கையில் கிடைக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.