Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரமும் ஜனாதிபதியின் ஜெனீவா பயணமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரமும் ஜனாதிபதியின் ஜெனீவா பயணமும்

[16 - June - 2007]

* வார இறுதி அரசியல் அலசல் -காலகண்டன்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ இப்பொழுது ஜெனீவாவில் இருக்கிறார். ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 93 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கி அங்கு சென்றுள்ளார். உலகின் 207 நாடுகள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் தீர்மானங்கள் மேற்கொள்ளவும் இருக்கின்றன.

ஒரு கால கட்டத்தில் ஐ.நா.வின் கீழ் இயங்கும் சர்வதேச அமைப்புகளுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை எடுக்கும் வல்லமையும் தகுதியும் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஏனெனில் ஐ.நா. சபை என்பது இப்போது ஐ.அ.சபையாக மாற்றப்பட்டுள்ள நிலைதான். இருப்பினும் அந்த அமைப்புகள் தகவல்கள் புள்ளி விபரங்கள் வெளியிடும் மையங்களாகவும் வருடாவருடம் கூட்டங்கள், மாநாடுகள் நடத்தும் பேச்சு மேடைகளாகவும் விளங்குகின்றன என்பதை நிராகரிக்க முடியாது.

முன்பு ஒரு காலகட்டத்தில் இச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எடுத்த தீர்மானங்கள் தொழிலாளர்களுக்கு பயன்தருவதாக அமைந்திருந்தன. அவற்றை நடைமுறைப்படுத்துமாறு உலக நாடுகளின் அரசாங்கங்களை வற்புறுத்தவும் செய்தது. ஆனால் இன்று உலகமயமாதலின் கீழ் சர்வதேச தொழிலாளர் அமைப்பு என்பது வெறும் பேச்சு மண்டபமாகவே காட்சி தருகின்றது. நமது நாடு உட்பட உலக நாடுகளில் தொழிற்சங்கங்கள் உலகமயமாதலின் கீழ் செயலிழக்கச் செய்யப்பட்டிருக்கும் சூழலில் சர்வதேச தொழிலாளர் அமைப்பும் அதற்கு இணங்கிப் போகுமாறே தனது செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறது.

உதாரணம் கூறுவதாயின் ஒன்றைக் காண முடியும். இலங்கையில் உலகமயமாதலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் உரிமைகள் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதற்கு தொழிற்சங்கங்கள் நிறுவக் கூடாது என்பது சட்டமாகும். இது மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்று வரை தொடரப்படுகிறது. ஆனால் இந்நடைமுறை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் விதிகளுக்கு முரணானதாகும். இது பற்றி அந்த அமைப்பு எதுவும் செய்ய முடியவில்லை. அதாவது இலங்கையின் தொழிற்சட்டங்களோ சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தீர்மானங்களோ சுதந்திர வர்த்தக நிலையங்களில் செல்லுபடியற்றவைகளாகும்.

இவ்வாறு இலங்கையின் தனியார் துறைத் தொழிலாளர்கள் பல இலட்சம் பேர் உள்ளனர். அவர்களுக்கு முறையான சம்பளத்திட்டம் இல்லை. தோட்டத் தொழிலாளர்கள் உட்பட அந்தந்த நிறுவனங்களும் முதலாளிமாரும் தான் அத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கிறார்கள். தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவுக்கும் பெறும் சம்பளத்திற்குமிடையில் ஏணி வைத்தாலும் எட்டமுடியாத நிலைதான் நீடிக்கின்றது. முதலாளிமார்களை இரங்க வைப்பது என்பது கல்லில் நார் உரித்த கதைதான்.

இதனைக் கடந்த வருடத்தில் இடம்பெற்ற தோட்டத் தொழிலாளர் சம்பளப் போராட்டத்தில் காண முடிந்தது. இன்றைய அரசாங்கமோ அன்றி ஜனாதிபதியோ அதில் தலையிட்டு தொழிலாளர்களின் 300 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை. தோட்டத்துரைமாரின் குறைந்த சம்பளம் வழங்கும் பிடிவாத நிலையை மாற்ற முடியவில்லை.

இன்று ஜெனிவா சென்றுள்ள தூதுக்குழுவில் தொழில் அமைச்சர் அதாவுட செனவிரத்தினாவும் சென்றுள்ளார். இவர் தொழிலாளர் நலன் காக்கும் ஒருவர் அல்லர். ஒரு காலத்தில் சமசமாஜ இடதுசாரி. பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தூண்களில் ஒருவராக மாறி இருப்பவர். அண்மையில் இவர் அரும்பாடுபட்டு வரையறுத்த விடயம் யாதெனில் தனியார் துறையில் பணிபுரிவோருக்கு அடிப்படைச் சம்பளம் ஐயாயிரமாக இருக்க வேண்டும் என்பதாகும். அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரத்திற்கு மேல் அடிப்படைச் சம்பளம் வரையறுக்கப்பட்டிருக்க தனியார் துறையினருக்கு ஐயாயிரம் ரூபா குறித்தொதுக்கப்பட்டுள்ளது. உண்மையாதெனில் அரசாங்க ஊழியர்களுக்கும் சரி தனியார் துறையினருக்கும் சரி இச் சம்பளங்கள் மூலம் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்ய முடியாது என்பதுதான்.

ஜனாதிபதி மிகவும் கச்சிதமாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 93 ஆவது மாநாட்டில் உரையாற்றும் போது அவர் சம்பந்தப்பட்ட ஒரு முக்கியவிடயம் நினைவுக்கு வருகின்றது. முன்னைய சந்திரிகா அம்மையாரின் அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி தொழில் அமைச்சராக இருந்தவர். அக்கட்டத்திலேயே தொழிலாளர் சாசனம் என்பது வரையப்பட்டிருந்தது. அச்சாசனம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு சட்டமாக்கப்படக் கூடிய சூழலும் நிலவியது. முற்று முழுதாக இல்லாதுவிடினும் தொழிலாளர்களுக்கு ஓரளவு ஆறுதலும் நன்மைகளும் கிடைக்கக் கூடியதாக அச்சாசனம் வரையப்பட்டிருந்தது. அத் தொழிலாளர் சாசனத்தை எந்த விலை கொடுத்தாயினும் நிறைவேற்றுவேன் என அன்றைய தொழில் அமைச்சரான மகிந்த ராஜபக்ஷ சூளுரைத்திருந்தார்.

ஆனால் இறுதியில் அச் சாசனம் கைவிடப்பட்டது. முதலாளிகளும் பல்தேசியக் கம்பனிகளும் அத்தொழிலாளர் சாசனம் நிறைவேற்றப்படுவதைக் கடுமையாக எதிர்த்தன. முதலாளித்துவத்திற்கு மனித முகம் ஏற்படுத்தப் போவதாகக் கூறிய சந்திரிகா அம்மையார் தொழிலாளர் சாசனத்தை இறுகக் கட்டி மூலையில் போடுமாறு உத்தரவிட்டார். `தன்மானத்தை' விட்டுக் கொடுக்காத மகிந்த ராஜபக்ஷ தொழில் அமைச்சர் பதவியை விட்டு மீன்பிடி அமைச்சராகிக் கொண்டார்.

அத்தகைய மகிந்த ராஜபக்‌ஷவிற்கு 2005 ஆம் ஆண்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆகும் வாய்ப்புக் கிடைத்தது. அவ்வரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மூலையில் கிடந்து வரும் தொழிலாளர் சாசனத்தை எடுத்து தனது நிறைவேற்று அதிகாரம் மூலம் நடைமுறைப்படுத்துவார் என்றே தொழிலாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த ஒன்றரை வருட கால மகிந்த சிந்தனை ஆட்சியில் அதுபற்றி வாயே திறக்கப்படவில்லை. இந்நிலையிலே தான் ஜனாதிபதி சர்வதேச தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் உரையாற்றுகிறார். அவ்வாறே தொழில் அமைச்சர் அங்கு இடம்பெறும் பல நிலைக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். இவர்களது பங்கு பற்றலால் இலங்கையின் தொழிலாளர்கள் எவ்வித பலாபலன்களையும் பெறப்போவதில்லை. ஏற்கனவே சர்வதேச தொழிலாளர் அமைப்பு இயற்றிய தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாத அரசாங்கங்களின் தலைவர்கள் ஜெனிவா சென்று பேச்சு மேடையில் பங்குபற்றுவதால் அரைப்பட்டினி முழுப்பட்டினி இல்லாமை, போதாமையுடன் அல்லாடிவரும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு பரிகாரம் கூறவும் மாட்டார்கள் தேடவும் இயலாது.

அதேவேளை, ஜனாதிபதியின் ஜெனிவாப் பயணத்தை அறிந்த சர்வதேச மனித உரிமை அமைப்புகள் அவரை நேரில் சந்தித்து இலங்கை மனித உரிமைகள் விவகாரங்களைப் பேசத் தயாராகின. அதற்குத் தகுந்தாற் போன்று ஜனாதிபதி தன்னுடன் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, சமூக சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டமா அதிபர் சி.ஆர்.டி.சில்வா ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார். ஜெனிவாவில் ஐ.நா. சபையின் கீழான மனித உரிமை அமைப்பின் தலைவர், சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதியைச் சந்தித்து இலங்கையில் மனித உரிமை மீறல் சம்பவங்கள் பற்றிக் கலந்துரையாடியுள்ளனர். அத்துடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உபதலைவரும் ஜனாதி பதியைச் சந்தித்து அண்மையில் கடத்திச் சென்று கொல்லப்பட்ட இரண்டு செஞ்சிலுவைச் சங்கப் பணியாளர் பற்றிய தகவல்களைக் கேட்டறிந்தார்.

மேற்கூறிய சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இரண்டும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பற்றி அதிக கவனமும் கவலையும் தெரிவித்து வருகின்றன. அண்மையில் மேற்கிந்திய தீவில் இடம்பெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டியின் போது `இலங்கை விதிகளுக்கு அமைய விளையாடவும்' என்ற வாசகத்தை கிரிக்கெட் பந்துகளில் பொறித்து அரங்கில் விநியோகித்ததன் மூலம் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களை சர்வதேசத்தின் கவனத்திற்கு மன்னிப்புச் சபை கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு பதில் நடவடிக்கையாக இலங்கைக்கு வருவதற்கு இரண்டு சர்வதேச மன்னிப்புச் சபை உயர் அதிகாரிகள் முயற்சி செய்த வேளை லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் விசா வழங்க மறுத்துக் கொண்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அத்தகைய மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தை ஜனாதிபதி சந்தித்துப் பேசியிருக்கிறார்.

இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்பதால் மனித உரிமைகள் மீறப்படுவது இயல்பானதாகும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு மனித உரிமை மீறல் அவசியமானது.

அமெரிக்கா உலக பயங்கரவாதத்தை எதிர்த்து மனித உரிமை மீறல்களைச் செய்யவில்லையா? புலிகள் மனித உரிமை மீறல்களைச் செய்யும் போது அதனையிட்டு யாரும் பெரிதாகக் குரல் வைக்கவில்லையே? இத்தகைய நியாயப்படுத்தல்களைத் தான் ஜெனிவாவில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் முன்வைப்பார்களா? அல்லது இங்கு இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்குவார்களா? ஜனாதிபதியும் அவரது தூதுக்குழுவினரும் நாடு திரும்பும் போது விரிவான விளக்கத்தை எதிர்பார்க்க முடியும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.