Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவுச்சின்னங்கள் பூஜிக்கப்படுவதற்காக மட்டுமல்ல - உமா ஷானிகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
JaffnaUniversity_912021_1200.jpg

நாம் பிரான்ஸ் சென்றிருந்த போது, 1944 இல் ஹிட்லரின் SS- படையினரால்  முற்றாகத் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்ட Oradour-sur-Glane எனும் கிராமத்தையும், அதனையொட்டியிருந்த நூதனசாலையையும் போய் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஒரு நினைவுச் சின்னமாக அந்தக் கிராமம் அழிந்த நிலையில் விடப்பட்டு, அதற்கண்மையில் அதே மாதிரியான சிறு கிராமம் நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது.
 
எமது தந்தையுடன் பலகாலமாகப் புரட்சிகர மார்க்சியக் கட்சியுடன் இணைந்து செயற்பட்ட, நாங்கள் வில்பிரட் அங்கிள் என்றழைக்கும் வில்பிரட் சில்வாவுடன் தான் நாம் அங்கு சென்றிருந்தோம்.
 
அங்கு காட்சிப் படுத்தப்பட்டிருந்த நிகழ்வுகளைப் பார்த்தபடியே, “பாசிசத்தின் பேரில் நிகழ்ந்த அழிவுகளையும், வரலாற்றுத் தவறுகளிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் இவர்கள் இத்தகைய இடங்களைப் பேணிப் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் எங்கள் நாட்டில் தமிழ் மக்களின் நினைவுச் சின்னங்களை நிர்மூலமாக்கி, யுத்தம் நிகழ்ந்ததிற்கான சாட்சியங்களை அழித்து இலங்கை அரசு தனது பேரினவாத அரசியலை முன்னெடுத்துச் செல்கிறது என்று சொன்னார்.
 
அவரின் கோபமும், வேதனையும் ஒரு சிங்களவருடையதாக மட்டும் எனக்குத் தெரியவில்லை. தன் வாழ்நாள் முழுதும் இன பேதமின்றி, ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகளிற்காகச் செயற்பட்ட ஒருவரின் குரலாகத் தான் ஒலித்தது. ஏனென்றால் அவருக்குத் தோழர்கள் தான் இருந்தார்கள்.
 
ஆக்கிரமிப்புகளின் போதும் அதிகாரங்கள் கைமாறப்படும் போதும் நினைவுச்சின்னங்கள் அழிக்கப்படுவதும், புதிய சின்னங்கள் நிறுவப்படுவதும் நிகழ்கின்றன.
 
1990ல் கிழக்கு மேற்கு ஜேர்மனி இணைவிற்குப்பின் கிழக்கு ஜேர்மனியிலிருந்த மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின் போன்ற கம்யூனிஸ சித்தாந்தத்தின் சின்னங்கள் அகற்றப்ப்பட்டன அல்லது வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டன.
 
"Good Bye Lenin“ என்ற படத்தில் அவர்கள் வாழும் வீதியிலிருந்த லெனினின் சிலை அகற்றப்பட்டபோது, கம்யுனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்த தமது தாய் சுயநினைவு இழந்திருந்ததால் இதைக்கண்டு மனவேதனையடைய மாட்டாரென அவரது பிள்ளைகள் சந்தோசப்படும் காட்சியும் நினைவிலிருக்கிறது.
 
இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த தமிழ் மக்களை மீள குடியமர்த்தவும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான வசதிகளைச் செய்துகொடுக்கவும், பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யவும், இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்ததை உருவாக்கவும் காட்டாத சிரத்தையை இலங்கைப் பேரினவாத அரசு, அவசரமாக இனப்படுகொலையை நினைவுப்படுத்தும் அடையாளங்களை அழித்து, தன் சார்பான வெற்றிச்சின்னங்களை மாத்திரம் நிறுவி, நாட்டை இராணுவமயமாக்கலுக்கும், பௌத்தமயமாக்கலுக்கும் உட்படுத்த முயன்றுகொண்டிருக்கிறது.
 
யாழ் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட போராளிகள், பொது மக்களை நினைவுபடுத்தும் தூபி இரவோடிரவாக இடிக்கப்பட்டது. இலங்கை பேரினவாத அரசினால் திட்டமிட்டபடி சிறுபான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை என்பதில் எந்த கருத்து வேறுபாடுமில்லை.
 
தனது அதிகாரதிற்குற்பட்ட பிரதேசங்களில் தமது அரசினால் இனப்படுகொலை ஒன்றிற்கான சான்றுகளை அழித்தல் என்ற நிகழ்ச்சி நிரலின் ஒரு அங்கம் தான் இதுவும்.
 
நினைவுத்தூபிகள் யாரைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்றன, அவை நிறுவ முயலும் அரசியல் என்ன என்பன கருத்தில் எடுக்கப்பட வேண்டியவை தான். ஆனால் இலங்கை அரசுகள் சிங்கள பௌத்த ஆதிக்கத்தை நிலைநிறுத்தி கொள்வதற்கானச் சிறுபான்மையினர் மீது தொடர்ந்து மேற்கொள்ளும் இனவொடுக்குதலைப் புறக்கணித்துவிட்டு இத்தகைய எதேச்சகார நடவடிக்கைகளை கடந்து விடுவதும் ஆபத்தானது.
 
யாழ்ப்பாணத்தில் அரசடிச்சந்தியில் அமைக்கப்பட்டிருந்த மகாகவி பாரதியாரின் சிலை உடைக்கப்பட்டபோது "தமிழன் தலை கவிழ்ந்திட்டான்“ என்று அழுதபடி ஓடிவந்த தங்கம்மா என்ற பெண்ணின் உணர்விற்கும் கண்ணிருக்கும் ஒரு மதிப்பிருக்கின்றது.
 
அந்த உணர்வு ஆட்சி பீடத்திலிருந்த சிங்கள பேரினவாத அரசுகளினால் திட்டமிட்டமுறையில் நோகடிக்கப்படுகிறது.
 
30 வருட காலம் பேரிழப்புகளைச் சந்தித்த ஒரு சமூகம் அந்த யுத்தத்தில் பறிகொடுத்த உறவுகளை நினைவு கொள்வது அவர்களது அடிப்படை உரிமை. அந்தவுரிமையை ஒரு அரசு வன்முறையை உபயோகித்துத் தடுக்குமானால், அது பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் மீது பிரயோகிக்கப்படும் ஒடுக்குமுறையே.
 
இலங்கையில் ஆட்சி செய்த சிங்களப் பௌத்த அதிக்க வர்க்கத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அரசுகளின் இனவாத நீட்சியாக சிறுபான்மை மக்களின் உணர்வுகள் சிதைக்கப்பட்டு வருகின்றன.
 
கடந்த கால வரலாறூகளை எடுத்துக் கொண்டால் தமிழ் தேசியத்தை முன்னிலைப்படுத்தும் ஆதிக்கச் சக்திகளும், அந்தவுணர்விற்கு தமது யாழ் மேலாதிக்கவாத அதிகார வர்க்க நலன்களைப் பாதுகாக்கும் முகமாக, சமூகத்திலுள்ள அகமுரண்பாடுகளை மறைத்து, ஒற்றை அடையாளத்தைக் கொடுக்க முனைகிறது.
 
பராம்பரிய தமிழ்த் தேசியத் தலைமைகள் கடைப்பிடித்த, அதே குறுந்தேசியவாதத்தின் அரசியலே ஆயுதப்போராட்டத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதியாக முள்ளிவாய்காலில் பேரழிவுடன் முடிவுறும் வரையில் நீடித்தது.
 
இன மத பேதமின்றி நாடாளவிய ரீதியில் இடதுசாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் போராட்ட வடிவங்கள், சுயாதீனமான மக்கள் போராட்டங்கள், சாதியத்துக்கெதிரான சமூக எழுச்சிகள், தொழிலாளர்களின் உரிமைப் போராட்டங்களெல்லாம் முடக்கப்பட்டன.
 
1979 இல்  அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டு தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலைசெய்யப் பட்டபோதும் , 1981ல் யாழ் நூல்நிலையம் எரிக்கப்பட்ட போதும் இரவோடிரவாக தெற்கிலிருந்து இடதுசாரிகள் வடக்கிற்கு வந்து உண்மைகளைக் கண்டறிந்து அறிக்கைகளை வெளியிட்டும் , அங்கு நடைபெற்ற போராட்டங்களிற்கும், உண்ணாவிரதங்களிற்கும் தமது ஆதரவைத் தெரிவித்தனர்.
 
தொழிற்சங்கப் பிரச்சனைகளின் போதும் இந்தப் பரஸ்பர ஆதரவு நீடித்தது. யாழ்ப்பாணத்திலுள்ள கிங் காமென்ஸில் (King Garments) நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு தெற்கிலிருந்து தொழிலாளர்களும், தெற்கில் யூனியன் கார்பைட்டில் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் வடக்கைச் சேர்ந்த தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள்.
 
இக்காலக்கட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியினர் ஆற்றிய பங்கைவிட, இலங்கை அரசின் தமிழ் மக்களுக்கெதிரான அடக்குமுறைகளிற்கெதிராக இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், மதகுருமார்கள் என இன மத பேதமின்றி இணைந்து உருவாகிய இனங்களுக்கிடையில் நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் பங்கு அளப்பறியது.
 
இதில் இணைந்து செயற்பட்டவர்களில் சிலர் பிற்காலங்களில விடுதலைப் புலிகளால் பயமுறுத்தப்பட்டு, அப்பிரதேசங்களிலிருந்து விரட்டப்பட்டர்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
 
இலங்கை அரசுகளின் ஒடுக்குமுறைகளின் உக்கிரத்தில் பரிதவித்துப் போயிருந்த தமிழ் மக்கள், விடுதலைப்புலிகள் தம்மை ஏகப்பிரதிநிதிகளாக வரித்துக்கொண்டு, ஒரே நோக்கத்திற்காக போராடப் புறப்பட்ட சக இயக்கத்தவர்களையும், மாற்றுக் கருத்தாளர்களையும் கொன்றழித்து முன்னெடுத்துச் சென்ற ஜனநாயக மறுப்பரசியலை மெளனித்துக் கடந்துச் செல்ல பழக்கப்பட்டார்கள்.
 
முள்ளியவாய்க்கால் நினைவுதூபித் தகர்ப்பட்டதிற்கும் இங்கு சொல்லும் விடயங்களிற்கும் என்ன சம்பந்தமென்று என்று நீங்கள் யோசிக்கலாம். மாட்டைக் கொண்டு போய் மரத்தில் கட்டி மரத்தைப்பற்றிப் பற்றிக் கதைப்பது போலவும் இருக்கலாம். மாட்டைப் பற்றி மட்டும் கதைத்துக் கொண்டிருந்தால் மரங்கள் பட்டுப் போய்விடுகின்றன.
 
நினைவுச் சின்னம் தகர்க்கப்பட்டதிற்கு ஓரிரு வரிகளில் கண்டனத்தையோ உணர்ச்சி ததும்பும் போராட்ட அறைகூவல்களையோ விடுத்து விட்டுப் போகலாம்.
 
நாம் எம்மை பலப்படுத்தி மீண்டும் எழுவோம் எனும் போது அந்தப் பலத்தை வெறும் வெறுப்பரசியலாலும், உசப்பேத்தல்களாலும் அடைய முடியாதென்பதே வரலாறுகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.
 
நாம் பலமடைய நாம் எமது பலவீனங்களை அடையாளம் காணுவது அவசியம்.
அதற்கு வரலாற்றின் பெருமிதங்களுக்கிடையில் ஒளிந்திருக்கும் தவறுகளை வெளியே எடுத்து உரையாட வேண்டும்.
 
அப்போது நினைவுத் தூபிகளை உடைக்க பேரினவாத அரசு எந்தப் பலவீனங்களைப் பாவித்து தனது நோக்கத்தை நிறைவேற்றியது என்பதையும் சிந்திக்கவேண்டியுள்ளது.
 
நினைவுத் தூபி இடிக்கப்பட்டதை எதிர்த்து யாழ் பல்கலைக்கழகத்தின் முன்பாக நடந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடாத்தியவர்களில் ஒருவரான சட்டத்தரணிக்கும் பல்கலைக்கழக நிருவாகத்திற்கும் நடைபெற்ற உரையாடலில் "கொஞ்சம் தமிழ் உணர்வுடன் கதையுங்கள்“ என்று கூறித் தமது நிபந்தனைகளை முன்வைக்கும் போது, நிர்வாகம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அவருக்கு நுழைவதற்கான அனுமதியில்லையென்றும், தமக்கு அவரைத் தெரியாதென்றும் தமது அதிகாரத் தொனியில் விரட்டியடிக்கவே முயற்சித்தனர்.
 
அவ்விடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டப் பின்னரும் இராணுவ தலைமைத்துவம் இடிப்பிற்கும், தமக்கும் சம்பந்ததமில்லையென்றே சொல்லி வந்தது.
 
இலங்கை அரசு மிகவும் கெட்டித்தனமாகத் தனது அடக்குமுறையை நிர்வாகம் மேல் நகர்த்தியது. அதிகாரம் பற்றியிருக்கும் ஆதிக்க வர்க்கக் குணாம்சம் தமிழ் உணர்வை வெற்றி கொள்ளும் பலவீனமாக இங்கு இருந்தது.
 
மாணவர்களின் போராட்டத்தை கையிலெடுக்க அல்லது அதற்குத் தலைமை கொடுக்க முனையும் தமிழ்த் தேசியக்கட்சிப் பிரமுகர்கள் திரும்பத்திரும்ப செய்யும்  "மக்கள் கொதிப்படைவார்கள்" “மீண்டும் போராட்டத்தை நோக்கி செல்வார்கள்” என்ற பிரகடனங்கள் இலங்கை பேரினவாத அரசு விரும்பும் கொதிநிலையை ஏற்படுத்துவதற்கான வாய்பேச்சுகள் மாத்திரமே.
 
வெள்ளை வேட்டிகளுடன் உண்ணாவிரதம் இருப்பவர்களுடன் வந்தமர்ந்து பேசுவதும், உணரச்சிவசப்பட்டுப் பேசி, கட்சி அரசியலை குறியாகக் கொள்வதும் தான் காலங்காலமாக நிகழ்வது.
 
இறுதியில் விளிம்பு நிலையிலிருக்கும் மக்கள் போராட்டத்தில் இணைந்து செத்துமடிவார்கள். உசுப்பேத்தியவர்கள் தமது வர்க்க நலன்களுக்கேற்ப தமது பிள்ளைகளைக் கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகளிற்கு அல்லது வெளிநாடுகளிற்கு அனுப்பி படிப்பித்து சட்டத்தாரணிகளாக்கி, மூன்று மொழிகளிலும் புலமைப் பெறவைத்து , பாட்டனரும், தந்தையாரும் பேசிய அதே பாராளுமன்றத்தில், அதே பேச்சை பேசவைப்பார்கள்.
 
சிங்கள பௌத்தபேரினவாதமும் அதே காய் நகர்த்தல்களைச் செய்யும். உறவுகளையும் அங்கங்களையும் இழந்த போராளிகளும், மக்களும் நிர்க்கதியாக தலைவர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.
 
கோத்தபாயவின் அரசு திட்டமிட்ட முறையில், நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளை மறைத்து , சிங்கள மக்கள் மத்தியில் தமக்கு எதிராக எழக்கூடிய எதிர்ப்புகளை திசைத்திருப்ப தமது இனவாத அரசியலையே தமது பலமாக வைத்திருக்கின்றது.
 
அந்தவகையில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கெதிரான வெறுப்பை நிறுவனப்படுத்தப்பட்ட முறையில் எடுத்துச் செல்கின்றது. தொடர்ச்சியான ஆத்திரமூட்டலின் அறுவடையாக 'பயங்கரவாதத்தையே' உலகிற்குக் காட்டமுனைகிறது.
 
நாட்டின் பொருளாதார, அரசியல் நிலைமைகளை எதிர்கொள்வதற்கு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் பரஸ்பர புரிந்துணர்வு அவசியம். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு இனம் மதம் கடந்து பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு தெரிவித்திருப்பது நல்லதொரு சமிக்ஞை.
 
அனைத்து மக்களினதும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது நாடளாவிய ரீதியில் ஏற்படக்கூடிய முற்போக்குச் சக்திகளின் கூட்டு எதிர்ப்புத் தான், மக்களை பிரித்தாள நினைக்கும் ஆளும் சக்திகளை வலுவிலக்கச் செய்யும்.
 
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக எழுப்பப்படும் வாதங்களான, விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த ஏனைய போராளிகள், விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட வைத்திய கலாநிதி ராஜனி திராணகம, பல்கலைக்கழக மாணவர்கள் விஜிதரன், விமலேஸ்வரன், செல்வி உட்பட்ட ஏனையவர்களிற்குமான நினைவுச்சின்னங்களும் நிறுவப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எப்போதும் போல "துரோகிகள்" என்ற வரையறைக்குள் தள்ளிவிட்டு கடந்து செல்லமுடியாது.
 
நினைவுச்சின்னங்கள் பூஜிக்கப்படுவதற்காக மட்டுமே எழுப்பப்படுவதில்லை.
அவை வரலாற்றின் தவறுகளை மீட்டுப்பார்க்கவும், அந்தத் தவறுகள் மீண்டும் நிகழாததை உறுதிபடுத்தும் அடையாளங்களாக இருத்தல் வேண்டும்.
 
- உமா ஷானிகா
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.