Jump to content

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 1 | புராணமும் பண்பாடும் நிறைந்த பொற்றாமரைக் குளம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 1 | புராணமும் பண்பாடும் நிறைந்த பொற்றாமரைக் குளம்!

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை

தமிழுக்கும் பொற்றாமரைக் குளத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு. சங்கப் பலகை ஒன்று இந்தக் குளத்திலிருந்ததாகவும் தகுதியுடைய நூல்களை சங்கப் பலகை ஏற்கும் என்றும் புராணம் சொல்கிறது. உண்மையில் அப்படி ஒரு பலகை இருந்ததா என்பதைப் பகுத்தறிவு ஏற்க மறுக்கலாம். ஆனால்...

இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்று மதுரை. இரண்டாயிரம் ஆண்டுக்கும் மேலான நாகரிகம் கொண்ட இந்த நகரை மையமாகக் கொண்டே பல்வேறு அரசியல், ஆன்மிகம், பண்பாட்டு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. சங்க காலம் முதல் சம காலம் வரை பல முக்கியமான நிகழ்வுகளின் களமாக விளங்குவதும் மதுரையே.

மதுரை நிலவியலின் முதன்மை அடையாளமாய் மனக்கண்ணில் தோன்றுவது மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். புராண காலங்களில் திரு ஆலவாய் என்றும் வரலாற்றுக் காலங்களில் நான்மாடக்கூடல், கடம்பவனம், கூடல்மாநகரம் என்றும் அழைக்கப்பட்ட இந்த மதுரை மாநகரின் நிரந்தரப் பெருமை இந்தக் கோயில். சிதம்பரம், காசி, திருக்காளகத்தி என்னும் சிவத்தல வரிசையில் நான்காவது தலமாக விளங்குகிறது இந்த ஆலயம். இந்த ஆலயத்தில்தான் அமைந்துள்ளது பொற்றாமரைக் குளம்.

பொற்றாமரைக் குளம்
 
பொற்றாமரைக் குளம்

தமிழர்களின் அழகியல், அறிவியல், ஆன்மிகவியல் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று இணைந்து இயங்குபவை. நகரின் தன்மைக்கு ஏற்ப பிரமாண்டமான கோயில், கோயிலின் பிரமாண்டத்துக்கு ஏற்ப பேரழகுக் கலைக் களஞ்சியங்கள், கோயில் மற்றும் நகரின் நீர் தேவைகளுக்கு ஏற்ப நீர் நிலைகள், தீர்த்தங்கள் என அமைத்துப் பராமரித்தனர் நம் முன்னோர்கள். அப்படிப்பட்ட ஒரு பிரமாண்ட குளம்தான் பொற்றாமரைக்குளம். மீனாட்சி அம்மன் கோயிலில் எழில் கொஞ்சும் கிழக்குக் கோபுர வாசலைக் கடந்து உள்ளே நுழைந்தால் கோயில் வளாகத்துக்குள்ளே ஓர் ஏக்கர் பரப்பளவில் 165 அடி நீளமும் 120 அடி அகலமும் கொண்டு நான்கு பக்கமும் தூண்களுடன் கூடிய பிராகாரங்கள் விளங்க விரிந்து கிடக்கிறது பொற்றாமரைக்குளம்.

ஒருகாலத்தில் அங்கு பொன் தாமரைகள் தோன்றின என்பதன் அடையாளமாகக் குளத்தில் ஒரு பொன் முலாம் பூசப்பட்ட பெரிய தாமரையின் வடிவம் ஒன்று இருக்கிறது. படித்துறைகளில் அமர்ந்து குளத்தைப் பார்க்கிறபோது ஏற்படும் பரவசம் அலாதியானது. உள்ளூர் காரர்களுக்கு அது காற்றுவாங்கும் இடமாக ஆசுவாசம் கொள்ளும் இடமாக இறைச்சிந்தனையில் அமைதியாக அமர்ந்து தியானிக்க உகந்த இடமாக இருக்கலாம். ஆனால் வெளியூரிலிருந்து அங்கு செல்லும் ஒருவருக்கு அது சாதாரண குளமல்ல.

பல கோயில் தீர்த்தங்களுக்குப் புராணச் சிறப்புகள் இருக்கும். ஆனால் பொற்றாமரைக் குளமோ புராணச் சிறப்புகளையும் தாண்டி மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றோடும் தொடர்புடையதாக அமைகிறது.

புராணப்படி இந்தக் குளத்தை இந்திரன் அமைத்ததாகச் சொல்கிறார்கள். போரில் விருத்திராசுரனைக் கொன்றதால் தேவேந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. அது நீங்க அவன் பல்வேறு தலங்களுக்குச் சென்று லிங்கப் பிரதிஷ்டை செய்து ஈசனை வழிபட்டான். ஆனால் அவன் மனதில் நிம்மதி ஏற்படவில்லை.

கடம்பவனமாக இருந்த இந்தத் தலத்துக்கு வந்தபோது ஈசன் சுயம்புவாக வெளிப்பட்டு இந்திரனுக்கு தரிசனம் கொடுத்தாராம். அதைக் கண்டதும் இந்திரன் வியந்து இறைவனைப் பணிந்துகொண்டான். தரிசித்ததும் பாவங்கள் போக்கும் புண்ணியத் தலம் என்று உணர்ந்தான் இந்திரன். அவன் மனம் அமைதி அடைந்தது. சுயம்புத் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் செய்ய விரும்பினான் இந்திரன். அதற்காக அங்கே ஒரு குளம் ஒன்றை ஏற்படுத்தினான். அதுவே இந்தப் பொற்றாமரைக் குளம் என்கிறது புராணம். இறைவனுக்கு மலர்கொண்டு இந்திரன் வழிபட விரும்பியபோது குளத்தில் பொற்றாமரைகள் உருவானதாகவும் அதைக் கொண்டு இந்திரன் சிவனுக்கு பூஜை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. பொன் தாமரைகள் உருவான குளம் என்பதால் பொற்றாமரைக் குளம் என்று பேர் பெற்றது என்கிறார்கள்.

மதுரை பொற்றாமரைக்குளம்
 
மதுரை பொற்றாமரைக்குளம்

வைகை நதி பாயும் இந்த நதியின் தீரத்தில்தான் ஈசன் 64 திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்கிறது திருவிளையாடல் புராணம். தமிழில் எழுதப்பட்ட புராணங்களுக்கும் பக்தி இலக்கியங்களுக்கும் ஒரு விசேஷித்த தன்மை உண்டு. அவை சமயம் சார்ந்த நிகழ்வுகளையும் நம்பிக்கைகளையும் முன்வைப்பதோடு வரலாற்றுக்குறிப்புகளையும் முன்வைக்கும். இத்தகைய குறிப்புகள் தமிழக சமய வரலாற்றை எழுதுவதற்குப் பெரும்துணை புரிபவை. அப்படிப் பட்ட குறிப்புகள் அடங்கிய ஒரு புராணம் திருவிளையாடல் புராணம்.

சிவபெருமானால் நிகழ்த்தப்பட்ட 64 திருவிளையாடல்களில் வெள்ளை யானையின் சாபம் தீர்த்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது போன்ற பல புராண நிகழ்வுகளோடு தொடர்பு கொண்டது இந்த பொற்றாமரைக் குளம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் வெப்பம் தாளாமல் நக்கீரன் பொற்றாமரைக் குளத்தில் வீழ்ந்தார் என்றும் அதன்பின் ஈசன் அவரை மீண்டும் எழுப்பினார் என்கிறது புராணம்.

 

தமிழுக்கும் பொற்றாமரைக் குளத்துக்கும் பெரும் தொடர்பு உண்டு. சங்கப் பலகை ஒன்று இந்தக் குளத்திலிருந்ததாகவும் தகுதியுடைய நூல்களை சங்கப் பலகை ஏற்கும் என்றும் புராணம் சொல்கிறது. உண்மையில் அப்படி ஒரு பலகை இருந்ததா என்பதைப் பகுத்தறிவு ஏற்க மறுக்கலாம். ஆனால் தொன்மங்களை நேரடிப் பொருள்கொண்டு அணுகாமல் குறியீட்டுப்பொருள் கொள்வது மாற்றுப் பார்வைகளைத் தரும்.

மதுரை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்திலும் கல்வியிலும் சிறந்துவிளங்கியது என்பதை நாம் அறிவோம். அங்கே தமிழ் அறிஞர்கள் பலரும் கூடி விவாதம் செய்யும் சபை ஒன்று இருந்தது. அந்தக் குழுவின் பெயராக சங்கப் பலகை என்பது இருந்திருக்கலாம். அங்கு விவாதம் செய்து ஏற்றுக்கொள்ளப்படும் நூல்களே தகுதியுடையனவாகக் கருதப்பட்டிருக்கலாம். ஆனால் அது பிற்காலத்தில் சுருங்கி சங்கப்பலகை என்பது ஒரு மந்திரப் பலகை என்பதுபோன்று கருதப்பட்டிருக்கலாம்.

மதுரை பொற்றாமரைக்குளம்
 
மதுரை பொற்றாமரைக்குளம்

அப்படி ஒரு சங்கப்பலகைதான் திருக்குறளை அங்கீகரித்தது. குளத்தின் தென்பகுதிப் படித்துறையில் அமர்ந்து திருவள்ளுவர் அதை அரங்கேற்றம் செய்தார் என்கிறார்கள். அதனால்தானோ என்னவோ குளத்தை ஒட்டிய தென்பகுதிச் சுவர்களில் 1330 குறள்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று நின்று அதைக் காணும் தருணம் காவிய காலங்களுக்குள் நுழைந்து வெளியேறும் ஒரு மாயக் கணம் நம்முள் தோன்றி மறையும்.

முன்னொரு காலத்தில், தனஞ்செயன் என்கிற வணிகர் வியாபாரம் முடித்துத் தனது சொந்த ஊரான மணவூருக்கு ஒரு ராத்திரி நேரத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். இரவானதால் ஒரு கடம்ப வனம் ஒன்றில் தங்க வேண்டியதானது. அங்கே இருந்த ஒரு பொய்கைக் கரையோரம் தங்கினான். அன்றிரவு ஒரு பெரும் அதிசயத்தைக் கண்டான். பொய்கைக்கு அருகே இருந்த சுயம்பு லிங்கத் திருமேனி ஒன்றினை விண்ணிலிருந்து வந்து தேவர்கள் பூஜித்ததைக் காணும் பாக்கியம் அவனுக்குக் கிடைத்தது. இந்தச் செய்தியை அவன் மறுநாள் குலசேகர பாண்டிய மன்னனிடம் தெரிவித்தான். அன்றிரவு மன்னனின் கனவிலும் சிவபெருமான் தோன்றி, ‘கடம்பவனத்தைத் திருத்தி நகராக்கு’ எனக் கட்டளையிட்டாராம். குலசேகரப் பாண்டியனால் அப்படி உருவாக்கப்பட்டதுதான் மதுரை நகரும், மீனாட்சியம்மன் கோயிலும் என்றொரு வரலாறும் உண்டு. பொற்றாமரைக் குளத்துக்குக் காண்பவர்கள் மறக்காமல் வடக்குப் பிராகாரத் தூணில் சிற்பங்களாக இருக்கும் மன்னர் குலசேகரபாண்டியனையும் வணிகர் தனஞ்சயனையும் காணலாம்.

இந்தக் குளத்தின் தென்கிழக்கு மண்டபப்பகுதியில் நின்று பார்த்தால் மீனாட்சி அம்மன் மற்றும் சொக்கநாதர் சுவாமியின் கருவரை விமான தங்கக் கோபுரங்களை தரிசிக்கலாம். பார்க்கலாம். அப்படியான அற்புதக் கட்டடக்கலை நுட்பம் நிறைந்தது பொற்றமரைக்குளம்.

வழக்கமாகக் கோயில் குளங்களில் மீன்கள் துள்ளி விளையாடுவதைக் கண்டிருக்கலாம். ஆனால் இந்தக் குளத்தில் மீன்கள் வசிப்பதில்லை. அதற்கும் ஒரு புராணக் கதை உண்டு. பொற்றாமரைக்குளத்தின் கரைகளில் வந்து அமரும் அடியவர்கள் சிவனின் பெருமைகளைப் பேசி மகிழ்வார்கள். தன் முன்வினைப் பயனால் அவற்றைக் கேட்ட நாரை ஒன்று தானும் சிவனை நோக்கித் தவம் செய்து மோட்சம் அடைய விரும்பியது. குளத்தில் நாரை நின்று தவம் செய்ய ஆரம்பித்தது. மீன்கள் சுற்றிச் சுற்றி ஓடியும் மனம் அலை பாயாமல் சிவனை நினைத்துத் தவம் செய்தது நாரை. சும்மா இருக்குமா மீன்கள்... அருகில் செல்வதும் அதைச் சீண்டுவதும் தீண்டுவதுமாக இருந்தனவாம் மீன்கள். நாரையின் தவத்தை மெச்சிய சிவன் அதற்கு தரிசனமும் முக்தியும் தந்தபோது நாரை ஒரு வரம் வேண்டிக்கொண்டதாம். இந்தக் குளக்கரையில் அமர்ந்து இறைவனை சிந்திப்பதற்கு இடையூறாக எந்த உயிரினமும் குளத்தில் வசிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாம். அன்றிலிருந்து அந்தக் குளத்தில் மீன்கள் இல்லாமல் போனது என்கிறது கதை. புராண காலத்திலிருந்து வரலாற்றுக்காலம் வரை அதில் மீன்கள் இல்லாமல் போனதன் காரணம் பலவாக இருக்கலாம். ஆனால் தற்போது அதற்கு முக்கிய காரணம் குளத்தின் அடிவாரத்தை சிமிண்ட் கொண்டு பூசிவிட்டதாக இருக்கலாம். இப்போது கோயில் நிர்வாகம்தான் நன்னீர் கொண்டு குளத்தை நிரப்புகிறார்கள்.

பர்வத வர்த்தினி
 
பர்வத வர்த்தினி

பொதுவாக மீனாட்சியையும் சொக்கநாதரையும் தரிசிக்கும் முன்பாக பொற்றாமரைக் குளத்தை தரிசிப்பது பக்தர்களின் வழக்கம். அடுத்த முறை அங்கு செல்லும்போது அதன் படித்துறைகளில் சில நிமிடங்கள் அமர்ந்து இளைப்பாருங்கள். தமிழர்களின் பாரம்பர்யப் பெருமை குளிர்ந்த காற்றுபோல வீசி நம்மை சிலிர்க்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.

- வலம் வருவோம்...

 

 

https://www.vikatan.com/spiritual/news/madurai-places-to-visit-the-history-of-potramarai-kulam-aka-golden-lotus-tank

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.