Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிடிமானம்: உமாஜி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

பிடிமானம்: உமாஜி

Umaji-1.jpg?resize=1020%2C721&ssl=1

‘கடவுளே. பஸ்ஸை நிப்பாட்டி என்னை அவமானப் படுத்திடக்கூடாது’

தலையை உயர்த்திப் பார்த்தவாறு குப்புறப் படுத்திருந்தவன் மனதிற்குள் அலறினான். ஆனாலும் இக்கட்டான தருணங்களில் கடவுளைப்போலவேதான் பேரூந்தும். அவனுக்கு முன்னால் இருபதடி தூரத்தில் நின்றுவிட்டிருந்தது. அது இறுதி யுத்த காலம்தான். ஆனாலும் அவன் ஒன்றும் பேரூந்துக்குக் குண்டு வைக்க எல்லாம் படுத்துக்கொண்டு காத்திருக்கவில்லை. சில வினாடிகளுக்கு முன்னர்தான் அந்தப் பேருந்திலிருந்து கீழே விழுந்துவிட்டிருந்தான். 

முன்வாசல் வழியாக நடத்துனர் பதட்டமாக இறங்கு வர, அவசரமாக எழுந்து கொண்டான். சடுதியான அதிர்ச்சியை எதிர்கொண்ட உடல், உடனடியாகவே ஒன்றும் நடந்துவிடவில்லை என்று சமாதானம் செய்துகொள்வதைப் போலவே மனதோடு இணைந்து அசாத்திய வேகத்துடன் எழுந்து கொண்டது ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பேருந்தே ஒட்டுமொத்தமாகத் திரும்பி அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதாய்த் தோன்றியது.

பேரூந்தை நோக்கி செலுத்தப்பட்டவன்போல இயந்திரத்தனமாக நடந்தான். பின்வாசல் வழியாக ஏறுகையில் வலதுகால் சற்று ஒத்துழைக்க மறுத்தது. உள்ளே சென்று தலைக்கு மேலே கம்பியை பிடித்தவாறு எதுவும் நடக்கவில்லையே என்பதுபோல நின்றுகொண்டான். பின்னாலேயே தொடர்ந்து வந்த நடத்துனர், ‘அடி பலமாக பட்டு விட்டதா’ எனச் சிங்களத்தில் கேட்டவாறே தலையை தொட்டுப் பார்த்தார். அக்கறையாகப் பிடரியைப் பார்த்தவர், சற்றுக் குனிந்துகொள்ளச் சொல்லி உச்சந்தலையை தடவிப் பார்த்தார். அவனது கையைப் பற்றி மடித்து புறங்கையைப் பார்த்தார். இரண்டு கையையும் பரிசோதித்தவர் ‘நல்லவேளை பெரிதாக அடிபடவில்லை’ என்று, அவன் தோள்தட்டித் தன் வேலையைக் கவனிக்கப் போய்விட்டார்.

சுற்றுமுற்றும் பார்க்கத் துணியவில்லை. அதிர்ச்சியால் ஏற்பட்ட உடலின் படபடப்பு இன்னும் நீங்கவில்லை. ‘இன்று காலையில் யார் முகத்தில் விழித்தோம்?’ என்றொரு யோசனை வந்தது. உடனேயே  என்ன அபத்தம் இது எனக் கடிந்துகொண்டான். முகத்திலா விழிக்கிறோம் குரலில்தானே விழித்துக்கொள்கிறோம். காலையில் கண் திறக்குமுன்பே அம்மாவின் குரல்தான் அப்பாவிடம் சொல்லிக்கொண்டிருந்தது, “இவன் செத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்”. அப்பா ஒன்றும் பேசவில்லை. இது ஒன்றும் அவனுக்குப் புதிதில்லை. அம்மாவின் வசைகள் நினைவு தெரிந்தே கேட்பதுதான். ஏன் இப்படி? தெரியவில்லை. அது அப்படித்தான். அவ்வளவுதான். எதனால் அப்படி? எப்போதிலிருந்து? சிறுவயது முதலே அப்படித்தான்.

நினைவு தெரிந்த நாள்முதலே. அம்மா என்றால் அவனுக்குப் பயம். பதட்டம். அவள், குடும்பத்தின் வீழ்ச்சியின் ஆரம்பமே அவன் பிறப்பிலிருந்து தொடங்கியதாக நம்புகிறாளோ என்னவோ. அல்லது தன் ஆற்றாமையைக் கொட்டித் தீர்க்க அவனை வடிகாலாக்கிக் கொண்டாளோ தெரியவில்லை. பழகிப் போய்விட்டது. இளையராஜாவின் வயலின்கள், பாடல்களுடன் சினிமா கட்டமைத்த அதீத அம்மா பாச விம்பத்திடமிருந்து விலகிநின்றுகொள்ள அவன் அம்மாவே உறுதுணையாகவிருந்தார். ஆனாலும் சரியாகக் காலையில் கண்திறக்கும் நொடியில் கேட்டதிலிருந்து என்னவோ போலிருந்தது. காலையில் நினைவுக்கு வந்த பாடல் போலத் திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டிருந்தது.

பதட்டம் தணிந்து உடல் மெல்ல சமநிலையடையத் தொடங்க, சேத விபரங்களை மனம் கணக்குப் பார்த்தது. வலது முழங்காலில் சிறு கற்கள் குத்திக்கொண்டிருந்தன. அந்த இடத்தில் ட்ரவுசர் கிழிந்திருக்க வேண்டும். முழங்கையிலும் அடிபட்டிருக்க வேண்டும். குனிந்து பார்த்துக்கொள்ள நினைத்து அந்த யோசனையைக் கைவிட்டான். யாரும் கவனித்து விடுவார்கள். நாடியில் அடிபடவில்லை எனினும் வலது கன்னத்தில் தேய்த்துக்கொண்டுவிட்டதா? உறுதிப்படுத்த முடியவில்லை, கிர்ரென்று இருந்தது. கையை எடுத்துப் பார்க்க முடியவில்லை. பேரூந்தின் வேகம் அப்படி. தவிர, கொழும்பு நகர பேரூந்துகளுக்கேயுரிய வகையில் பிரேக் அடிக்கும், கியர் மாற்றும் ஒவ்வொரு செயற்பாட்டிலும் நின்றுகொண்டு பயணிப்பவர்களின் மூட்டுகளின் தாங்குதிறனை பரிசோதித்துக் கொண்டிருந்தார் ஓட்டுநர்.

காலையிலேயே தீர்மானித்துவிட்டிருந்தான். இந்தவாரத்தோடு அலுவலகத்திலிருந்து விலகிவிடவேண்டும். முதலில் வேறு வேலை தேடவேண்டும். இருக்கும் சூழ்நிலையில் சும்மா இருப்பது உகந்ததல்ல. வரும் நாட்களில் யுத்தம் தீவிரமடையும்போது கைதுகள், பாதுகாப்புக் கெடுபிடிகள் என்று நிலைமை இன்னும் மோசமாகும்.ஏற்கனவே சில நாட்களாக யோசித்திருந்த முடிவுதான்.. சிங்களவர்கள், வட இந்தியர்கள், ஒரு கனடியன், ஒரு பிலிப்பைன்காரர் எனக் கலவையாக நவீன கம்ப்யூட்டர் கூலியாட்களாகப் பணிபுரியும்  அந்த அலுவலுகத்தில் அவனைப்போலவே ஒரு தமிழருக்கு மட்டும் அவனோடு ஒத்துவரவில்லை. நல்லமாதிரியாகத்தான் பழகுவார். டீம் லீடர். மேலிடத்தில் அவன் வேலைத்திறன் சரியில்லையென்றும், இவன் குறித்து நல்லபிப்பிராயம் இல்லையென்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். அவனும் மன உளைச்சலுக்குப் பழகிவிட்டான். ஆனாலும் சமீபத்தில் கேள்விப்பட்டதுதான் அதிர்ச்சியாகவிருந்தது. மேலிடம் ஒன்றும் குறை கூறவில்லை. நம்மவர்தான் ஒவ்வொருமுறையும் அங்கே இவனைப்பற்றித் தவறாகப் போட்டுக்கொடுக்கிறார் என்றாள் புதிதாக இணைந்துகொண்ட காரியதரிசிப் பெண். ஆக, அவன் அங்கேயிருப்பதை அவர் விரும்பவில்லை. தொடர்ந்தும் அங்கேயிருப்பது இன்னும் மனஉளைச்சலைக் கொடுக்குமெனில் விலகிவிடுதலே சரியென்று பட்டது. இப்போதும் அவனிடம் இன்முகம் காட்டிச் சிரித்துப் பேசும் அவரை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியவில்லை. இனியும் முடியாது என்று தோன்றியது. அதுமட்டும்தான் காரணமா என்றால் இல்லை. அவளும்தான். அவளையும் அங்கேதான் முதன்முறையாகச் சந்தித்தான்.

காலை முழுவதும் மனம் மிகவும் சோர்வடைந்திருந்தது. அவளிடம் பேசவேண்டும் போலிருந்தது. நமக்குள் எல்லாம் முடிந்துவிட்டது என்று அவள் கூறி இரண்டு வாரம் ஆகிவிட்டது. ஆனாலும் தேவையேற்படின் பேசிக்கொள்ளலாம் எனப் பெரியமனதுடன் தெரிவித்திருந்தாள். இன்று மதியம்வரை அந்தச் சலுகையை அவன் பயன்படுத்தவில்லை. செல்பெசியில் அழைப்பெடுக்க முடியவில்லை. ஈ மெயிலில் நுழைந்து பார்த்தபோது அங்கும் முடியவில்லை. எல்லா வகையிலும் அவன் துண்டிக்கப்பட்டிருந்தான். ஒரு வேளை அவனுக்கான சலுகைக்காலம் முடிவடைந்து விட்டிருக்கலாம். எதனால் என்று குழப்பமாக இருந்தது. அவளாகவே வந்தாள். அவளாகவே போய்விட்டாள். ஒருவகையில் அவன் வேடிக்கை பார்ப்பவனாக மட்டுமே இருந்திருக்கிறான் என்று தோன்றியது.

ஒவ்வொரு முறை நடத்துனர் அவனைக் கடந்து செல்லும்போதும் அவன் தோள்தொட்டு, இருவரும் பரஸ்பரம் புன்னகைக்கத் தவறவில்லை. இருக்கையொன்று கிடைத்தால் நன்றாயிருக்கும். அதற்கான சாத்தியங்கள் தென்படவில்லை. அதிகமாகப் பெண்களே இருந்தார்கள். கர்ப்பிணிப் பெண்ணொருவர் அருகில் வந்து நிற்கும்போதே இருக்கையை யார் கொடுப்பது என்பது தொடர்பில் திடீரென்று பேரூந்தோடு கோபித்துக்கொண்டு அந்தப்பக்கம் யன்னல் வழிபார்த்து அமர்ந்திருக்கும் பெண்களுமுண்டு. வயோதிபர்களுக்கே இரங்காதபோது ஒரு இளைஞனுக்கு எப்படி? தவிர, இரத்தக்காயம் ஏற்பட்டிருந்தால் கிடைத்திருக்கும். அவன் விழுந்ததே இங்கே பலருக்குத் தெரியாதிருக்கலாம். அதுவும் நல்லதுதான். இருந்தாலும் பூர்வ பயண புண்ணியத்தில் ஒரு இருக்கை கிடைக்காதா என உடல் எதிர்பார்த்தது. கர்ப்பிணிப் பெண்கள், வயோதிபர்களுக்கு அவன் இருக்கையை விட்டுக்கொடுக்கத் தவறியதேயில்லை.

அவளின் வாசனை சடுதியாகத் தாக்கியது. திடுக்கிட்டுப் பார்த்தான். அவள் பயன்படுத்தும் அதே பெர்ஃபியூம். கண்கள் அவனையறியாமல் அலைபாய்ந்தன. முதன்முறையாக அவளுடன் சினிமாவுக்குப் போய்விட்டு வந்த அந்த மாலையில் அவன் டிஷர்ட்டின் தோளோடு அந்த வாசனை ஒட்டியிருந்தது. ‘அந்த டிஷர்ட்டை தோய்ப்பதாக இல்லை. உன் வாசம் அதிலருக்கு’ என்றபோது அவள் சிரித்தவாறே தலையிலடித்துக்கொண்டாள்.

‘இது சரிவராது. நமக்குள் இருப்பது வெறும் இன்ஃபாக்ஸுக்குவேஷன்தான்’ என்று சடுதியில் அவள் கண்டுகொண்டது பற்றி அவனுக்கு மிக ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பத்தில் அந்தக்காதலை தயங்கி மறுத்திருந்தான். அதற்கு சில காரணங்களை முன்வைத்தான். உண்மையில் அதெல்லாம் ஒன்றுமேயில்லையென்பது அவளுக்கும் தெரிந்திருந்ததால் அவள் விடவில்லை. இப்போது திடீரென்று என்னவாயிற்று? அவள் பொருளாதாரம், உளவியல், புவியியல் சார்ந்து தீவிரமான பாவனையில் பேசினாள். அதெல்லாம் எங்கோ முதலிலேயே கேட்டதுபோல இருந்தது. மூளைக்குள் மின்னலடிக்க, ‘ஏய் இதெல்லாம் நான் முதல்லயே உன்னட்ட சொன்னனில்ல? என்னமோ நீ கண்டுபிடிச்ச மாதிரியே சொல்லிட்டிருக்கிற?’ என்றான். அவள் பேச்சுத்தடைபட்ட  கோபத்துடன், ‘அப்ப எனக்கு புத்தி வேலை செய்யேல. இப்ப தெளிஞ்சிட்டுது. நான் நினைச்சா இப்ப கூட உன்னட்ட ஒண்டும் சொல்லாம விலகிப் போயிடலாம்’ என்றாள். நமக்குத் தேவையில்லை என்றவுடனேயே எப்படி அவ்வளவு வன்மம் வந்து குடிகொள்கிறது? அதுவரை காட்டிய அன்பெல்லாம் மறைந்துவிட முற்றிலும் வேறொருத்தியாகத் தோன்றினாள். அவளுடன் எதுவும் பேசத்தோண்றவில்லை. அவளிடம் எந்த உணர்ச்சியையும் காண்பித்துவிடக் கூடாதென்று பிடிவாதத்துடன் சலனமற்றிருந்தான்.

‘ஓ இதாலதான் நீ சோகமா இருக்கிறியா?’ நண்பன் கேட்டபோது, எதுவும் பேசவில்லை. மறுத்து தலையசைத்தான். முகம் சோகமாகத் தெரிகிறதா? இப்போதுதான் அப்படித்தெரிகிறதா? இதுதான் பிரச்சினையா? உண்மையில் என்னதான் பிரச்சினை? ஏன் இப்படி? எதுவும் புரியவில்லை.

அவன் அவசரமாக முற்றுமுணர்ந்த ஒரு ஞானியின் பாவனையை வரவழைத்துக் கொண்டான். நாடகத்தனமாக, ‘மச்சான் ஒருத்தனுக்குப் பெரிசா ஆப்பு அடிபட்டிருக்கேக்குள்ள பக்கத்தில ஆணி குத்துறது தோற்றாது. வாழ்க்கையே துயரம் சுத்திச் சுத்தி அடிக்கிற மாதிரித்தான் இருக்கு. ரோட்டில சும்மா போற யாரோ ஒருத்தனுக்கும் நம்மள பாத்தா உடனே ஓடிவந்து முதுகிலே குத்தவேணும்போல இருக்கு அப்பிடி ஒரு டிசைன்’.

‘உனக்கு அவளில கோபம் வரேல்லையா?’ என்றான் நண்பன். யோசித்தான். கோபம் வரவில்லை. சமயங்களில் வருகிறது. யார் மீது கோபம்? எதன் மீது? தெரியாது. தெரியாதபோது அவன் மீதேதான் வருகிறது. ‘கோபம் வருதுதான். என்மேல வருது. எதுக்கெண்டு தெரியேல்ல’ என்றான். இருவரும் அமைதியானார்கள். பிறகு அதுபற்றிப் பேசவில்லை.

அவளுடன் பேச முயற்சிக்கவில்லை. ஒரு வாரத்துக்கு முன்னர் அவள்தான்  அழைத்திருந்தாள். ‘என்னை மிஸ் பண்ணேல்லயா நீ? இவ்வளவு நாளா கதைக்க நினைக்கேல்லயா?’ மௌனமாக இருந்தான். ‘எதுவுமே கதைக்கிறதுக்கு இல்லையா?’ என்றாள். எதுவும் சொல்லத்தோன்றாமல் அமைதியாக இருந்தான். பிறகு, தனக்கு திருமணம் நிச்சயமாகியிருப்பதாகச் சொன்னாள்.

“ஓ” என்றான்.

அது சற்றே வித்தியாசமாகத் தொனித்திருக்க வேண்டும்.

“அதால ஒண்டும் உன்னை விட்டு போகேல்ல”

“…”

“எனக்கு சொல்லாத தெரியேல்ல. நீ சரியாயில்லை. சரி வரமாட்டே. எனக்கு தேவைபட்டா ஆதரவாச் சாய ஒரு தோள் தேவை. என்மடியில படுத்துக்கொண்டு கை சூப்பிக்கொண்டு இருக்கிறவன் எனக்கு வேண்டாம். கூடக் கைய பிடிச்சுக்க கூட்டிக்கொண்டு போற ஒருத்தன். சில நேரத்தில இழுத்துக்கொண்டு போறவனா… அது நீ இல்ல. உன்னை நான் தூக்கிட்டுப் போக ஏலாது”

அவள் அழைப்பைத் துண்டித்துக்கொண்டாள். அநேகமாக அத்தோடுதான் அவனை எல்லா வகையிலும் துண்டித்துக்கொண்டிருக்க வேண்டும்.

அவளோடு பேசவில்லையெனிலும் அவள் இன்னும் கூடவே இருக்கிறாள் என்றே உணர்ந்துகொண்டிருந்தான். இன்று மதியம்தான் முற்றிலும் அவளிடமிருந்து துண்டிக்கப்பட்டிருந்தது புரிந்தது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது மனதில் வெறுமை நிறைந்திருந்தது. யாருக்கும் தேவையில்லாதவனாக, திடீரென்று எல்லோராலும் கைவிடப்பட்ட ஒருவனாக உணர்ந்தான். மேலே அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். இந்த சிற்றுவேஷனுக்கு மழை அடித்துப் பெய்யவேண்டும். கொழும்பு மழை. சொல்ல முடியாது, வாய்ப்பிருக்கிறது. சற்றுமுன்னர்தான் மழை அடித்துப் பெய்து ஓய்ந்துவிட்டிருந்தது. மேகமூட்டம் கலையவில்லை.

வீதியில் இறங்கி நடந்தபோது ஆங்காங்கே நீர் தேங்கி நின்றிருந்தது. நின்று நிதானித்த்துச் சென்றான். வீதியின் ஓரத்தில் பெருமரம் ஒன்றின் பக்க வேர்கள் மேற்தரையோடு பற்றிப் படர்ந்திருந்தது. அதனை அணையாகக்கொண்டு நீர் சிறுகுட்டையாக நிரம்பியிருந்தது. அதனூடு நடைபாதைக்காக இரண்டடிக்கு ஒரு செங்கல் என நான்கு கற்களில் பாலம் போட்டிருந்தார்கள். அவன் கால் வைக்கப்போகும்போது எதிரில் ஒரு பெரியவரும் வருவதைப்பார்த்து ஒதுங்கி நின்றான். அவனருகே வரும்போது மது வாசனையுடன், ‘சீ.. கொலம்பு செவன்.. ரெசிடெண்டல் ஏரியா’ என்று கைகளை விரித்துக் கிண்டலாகச் சிரித்தார்.

பேரூந்து யோசனையுடன் நிற்பதும் நிற்காததுமாய் அவனருகே வேகம் குறைத்தபோது முன்கதவினூடு தாவி ஏறிக்கொண்டான். கதவுக்கு பக்கமிருந்த ஒரே பிடிமானமான கம்பி மழைநீரில் நனைந்து போயிருந்தது. பற்றிக்கொண்ட வலது கை பிடிமானமில்லாமல் வழுக்கியது. அவன் ஏறிக்கொண்ட அதே கணத்தில் பேரூந்து வேகமெடுத்ததில் பிரயத்தனப்பட்டும் மற்றைய கையை முன்கொண்டுவர முடியவில்லை. வேகத்தில் உடலைப் பின்தள்ளியது. காலில் ஒன்று வெளியில் தொங்க, மற்றைய காலும் படியில் பிடிமானமற்று வழுக்கத் தொடங்கியது. இதெல்லாம் சடுதியாக ஓரிரு கணங்களில் நிகழ, அவன் பேருந்திலிருந்து வெளித்தள்ளப்பட்டான். ஒருகணத்தில் பறப்பதுபோல உணர்ந்தான். பாய்ந்து கைகளும் பாதி உடலும் நடைபாதையிலும், மீதியுடல் வீதியிலுமாக குப்புற விழுந்தான். முழங்கையை மடக்கியபடி முன் புறங்கைகளும், முழங்கால்களும் ஊன்றியபடி உடற்பயிற்சி செய்பவன்போல விழுந்த அதே கணத்தில், பேரூந்தின் பின் சில்லுக்குள் மாட்டிக்கொள்ளாது அனிச்சையாக உடல் வளைந்து இடப்புறம் திரும்பிக் கால்களை உள்ளிழுத்துக்கொண்டது.

0

பேருந்திலிருந்து இறங்கி நடந்தபோது வலதுகால் வரமாட்டேன் என்று அடம்பிடித்தது. மெதுவாக நடந்தான். காலையிலிருந்து நடந்தவற்றை மனம் நொண்டிக்கொண்டு  திரும்பத் திரும்ப நினைவுபடுத்தியது. மாடிப்படியில் நின்று நிதானித்து கையை ஊன்றி வலதுகாலை மெல்லத் தூக்கிவைத்து விசித்திரமாக ஏறியதை அப்பா கவனித்துப் பார்த்தார். தகவல் சொன்னான். மன்னார் மடுப்பகுதியில் பாரியளவிலான தாக்குதலை முன்னெடுக்கும் இராணுவம் என்று தலையங்கமிடப்பட்ட பத்திரிகையின் நான்காம் பக்க இடது கீழ்மூலையில் பெட்டிக்குள் புரொயிலர் குஞ்சுகள் விற்பனைக்குண்டு தொடர்பு கொள்க தொலைபேசி இலக்கத்தின் முக்கியத்துவம் அத்தகவலுக்கு கிடைத்திருக்கக்கூடும்.

குளியலறைக் கண்ணாடியில் பார்க்கையில் வலது புறங்கை முழுவதும் இரத்தம் தோய்ந்திருந்தது. அந்தப் பேரூந்து நடத்துனரின் முகம் ஞாபகம் வந்தது. விம்பம் கலங்கித் தெரிந்தது.

 

உமாஜி 

 

உமாஜி, காக்கா கொத்திய காயம் புத்தகத்தின் ஆசிரியர். சுவாரஸ்யமான பத்தி எழுத்துக்களை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். திரைப்படங்கள், புனைவுகள் மீது ஆர்வம் கொண்டவர்.

 

https://akazhonline.com/?p=3025

  • கருத்துக்கள உறவுகள்

உட்காயங்கள் வெளியே தெரிவதில்லை. அது மனசில் இருந்தாலும் கூட ....... ஒரு பஸ் பிரயாணத்தில் ஒரு பயணத்தில் வரும் "பிடிமானம்" தவறிய சிறு சம்பவம்,  நல்ல கதை.....! 👍

நன்றி கிருபன்.....! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.