Jump to content

விக்டர்ஹியூகோ  சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது


 

விக்டர்ஹியூகோ  சுற்றுவட்டம் -நெற்கொழு தாசன் | கனலி

http://kanali.in/wp-content/uploads/2021/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AF%8B-1-1300x769.jpg

ரஷோந்தி மூசு” என்ற குரல் கேட்டபோது திரும்பிப் பார்த்தேன். இராசேந்திரம் அய்யா புன்னகையோடு,தலையாட்டியபடி உள்ளே வந்துவிட்டிருந்தார். எனக்கும் அவருக்கும் இடைப்பட்ட பகுதியில் கிறிஸ்தோப் நின்று கொண்டிருந்தார். மூன்றாவது தலைமுறையாக இந்த உணவுவிடுதியை  நடத்திக் கொண்டிருப்பவர். நிமிர்ந்த உருவம். பழுப்பு நிறம். கல்லூரிக்கால  குத்துச்சண்டை சாம்பியன். நடக்கும்போது ஒரு துள்ளல் எப்போதும் இருக்கும். சிரிக்கும்போது கண்களிலொன்று இறுக மூடியும், மற்றையது அரைவாசி  திறந்தும்  இருக்கும். கிறிஸ்தோப்பை நினைவில் கொண்டுவர முயன்றால்  துள்ளல் நடையும் கண்களைமூடிய சிரிப்பும் தான் உடனே வரும்.  கிறிஸ்தோப் இராசேந்திரம் அய்யாவை, “ரஷோந்தி” என்றுதான்  அழைப்பார். பெயர்களை ஆங்கிலத்தில் எழுதி அதைப் பிரெஞ்சு உச்சரிப்பில் அழைப்பார்கள். அப்படி அழைக்கும் போதெல்லாம், இராசேந்திரம் அய்யாவில் சின்னக் குழைவு தெரியும். மூன்று மாதங்களின் பின் அவரை பார்க்கிறேன்.

கொரோனா தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடைகள், பூங்காக்கள், விற்பனை நிலையங்கள் மூடப்படும் என்று அறிவித்த அன்று இரவு  கடைசியாகப் பார்த்திருந்தேன். பின் இடையிடையே தொலைபேசியில் நலம் விசாரித்துக் கொள்வோம்.  கிறிஸ்தோப்பை  நலம் விசாரித்துவிட்டு என்னை நோக்கி வந்தார்.”தம்பி என்ன நல்லாத்தான் பியரை ஊத்தியிருக்கிறீர்போல”  என்கிறார். நான் வயிற்றைத் தடவியபடி “வேற எண்ணத்தை அண்ணே  செய்யுறது” என்றேன். சிரித்தபடி, உடுப்பு மாற்றும் அறைக்குள் நுழைந்து கதவினை அடைத்துக் கொண்டார். இராசேந்திரம் அய்யாவைக் கண்டது பெரும் ஆறுதலாக இருந்தது. என்னிலிருந்து பெருமூச்சு வெளியேறியது. நான் அடைந்த ஆறுதலின் பின்னால்  சுயநலம் இருளென அடைந்து ஒளிந்திருந்தது.  

அந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தவர்போல கிறிஸ்தோப் வந்தார். “செப் நீங்கதான் சொல்லணும். பிறகு நான் கதைக்கிறேன். முதல்ல நீங்க சொல்லி விளங்கப்படுத்திவிடுங்கள்” என்று கூறினார். நான் தலையை ஆட்டினேன். “உடனே சொல்லவேண்டாம். சாப்பாட்டு நேரத்தின்போது சொல்லும்” என்று கூறியபடியே திரும்பி நடக்கத் தொடங்கினார்.  இப்ப கொஞ்சம்கூட மரியாதை தருகிறானில்லை, எனக்குள் புறுபுறுத்துக் கொண்டேன். அதைத் தவிர வேறெதுவும் செய்ய இயலவில்லை. முன்பு  என்றால் கூப்பிட்டு நேரடியாகக் கேட்டுவிடுவேன். கையில் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு, கிறிஸ்தோப் போன திசையைப் பார்த்துக்கொண்டு  நின்றேன். அடிமாட்டுக்கு பல்லுபிடிச்சு பார்க்கிறார். எனக்குள் சொல்லிக்கொண்டேன்.

பாரிஸின் பதினோராம் வட்டாரத்தில் இருக்கும் நாற்பது இருக்கைகள் கொண்ட உணவு விடுதி அது. புராதன பொருட்களை வைத்து கடையை அலங்கரித்து இருந்தார்கள். நூறு வருடங்களுக்கு முற்பட்ட நான்கு சிறிய கொள்கலன்கள் கடையின் வாசலில் இருக்கிறது. அதன்மீது பிரெஞ்சுக் கொடியையும், ஐரோப்பிய யூனியன் கொடியையும்  நிறுத்தியிருக்கிறார்கள்.  கடையின் மது அருந்தும் பகுதியில், மிகப் பழையதான மதுபுட்டிகளும், பலர் கூடியிருந்து மதுவருந்துகின்ற படங்களும் அழகுக்காக வைக்கப்பட்டிருந்தன. பக்கச்சுவர்களில் மரத்தாலான சட்டங்களும், தூண்களும் இருந்தன.  அவற்றில் மிகப்பழைய விளக்குகளும், லாந்தர்களும், மணிக்கூடுகளும் நேர்த்தியாக கொழுவி விடப்பட்டிருந்தன. பரிஸ்கம்யூன்  புகைப்படங்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து கிடந்தன.  ஒரு பக்கம் பிரதான வீதி. அந்த வீதியின் பெயர் விக்டர் ஹியுகோ. வீதியின் சுற்றுவட்டத்தில் விக்டர் ஹியுகோ சிலையாகவும்   நின்று கொண்டிருக்கிறார்.  சிலைக்கு நேரே  மெட்றோ   வாசல். எந்த நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள இடம். கடையின் பழைமையான தோற்றத்தைக் கண்டவுடன்  சுற்றுலாப்பயணிகள் கடைக்குள் வந்து விடுவார்கள். 

முப்பது வருடங்களாகத் தொடர்ந்து கடைக்குவரும் நான்கு  வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். தினமும் சரியாக மூன்று மணிக்கு ஒவ்வொருவராக வருவார்கள். அவர்களுக்கு வயது எண்பதிற்கு மேல் இருக்கும். அவர்களிடம் வயதைக் கேட்கக் கூடாது. பிரெஞ்சு மக்களிடம் வயதைக் கேட்டால், தங்களது ஆயுள் குறைந்துவிடும் என்றதொரு நம்பிக்கை இருக்கிறது. நேரே கடைக்குள் வரும் அவர்கள் முதலில், எனக்கு வணக்கம் சொல்வார்கள். பின்நாளை என்ன உணவு செய்வாய் என்று கேட்பார்கள்.  பல பொழுதுகளில் நாளைக்கு தமக்கு பிடித்தமான உணவின் பெயரைச் சொல்லி, அதனை செய்து தருவாயா எனக்  கேட்பார்கள். நானும் செய்து கொடுப்பேன். எனக்குத் தெரியாத உணவு வகைகளின் செய்முறைகளைக் காட்டித் தருவார்கள். அவர்களின் செய்முறைகள் பழைய முறையில் இருக்கும். தயாரிக்க  நீண்ட நேரம் எடுக்கும். அதேபோல் சுவையும் நீண்ட நேரம் நாக்கில் இருக்கும். 

வேலைக்கு வந்த முதல் நாளில், அவர்கள் வந்து எனக்கு வணக்கம் சொன்னார்கள். நான் பதில் வணக்கம் சொல்லிவிட்டு விலகிச்சென்றுவிட்டேன் .அதைக் கவனித்த கிறிஸ்தோப்என்னை மீண்டும் அவர்களிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார்.  பின் என்னிடம் திரும்பி, “என் அப்பாவின் தந்தையுடைய  காலத்திலிருந்து இவர்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். இவர்கள் வாடிக்கையாளர்கள் மட்டும் அல்ல. நீங்கள், எனக்கு  மரியாதை தராவிட்டாலும் பரவாயில்லை. என் தந்தையைப் போன்ற அவர்களுக்கு மரியாதையும், அவர்களுக்குத் தேவையானதையும் செய்தும் கொடுக்க வேண்டும்”. என்று  கேட்டுக்கொண்டார். அவர்களின் தோளிலும், மடியிலும் இருந்து வளர்ந்ததாகவும், தனது குடும்பத்தில் அவர்களும் ஒருவராகத்தான் இருக்கிறார்கள் என்றும் கூறினார். 

நாளடைவில் நான் அவர்களோடு ஒன்றாக இருந்து வைன் அருந்துமளவுக்கு நெருங்கியிருந்தேன். நான் செய்கின்ற உணவு வகைகள் அவர்களுக்கு மிகப் பிடித்துப் போயிருந்தது. பண்டிகைக் காலங்களில் பரிசுகள் தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிக்காட்டுவார்கள்.  இலங்கைக்குச் சுற்றுலா போகவேண்டும் நீதான் அழைத்துச் செல்லவேண்டும் என்று அடிக்கடி கூறுவார்கள்.  அவர்களில் ஒருவர் அடிக்கடிஇலங்கையில் யானையில் ஏறிப்போகவேண்டும் என்று கூறுவார். அப்படிப் பயணம் செய்வது இலங்கையில் இருப்பது எப்படித் தெரியும் என்று கேட்டேன். தனது பால்யவயதுக் காதலி இலங்கை சென்று வந்து அந்தக் கதைகளைச் சொன்னதாகக் கூறி சிரித்தார்.  எக்காலத்திலும் காதலும் முத்தமுமான வாழ்வு  அவர்களுடையது. 

அவர்களுடன் உரையாடும்போது, பரதேசியின் நாய்க்கு பிறந்த ஊர் ஞாபகம் வந்தது போலாகிவிடுவேன். ஊரில் வயதானவர்களுக்கு நானும் அகிலனும் சேர்ந்து செய்த சேட்டைகள்  எல்லாம் நினைவுக்கு வரும்.  எனக்குள் சிரித்துக்கொள்வேன். இப்படியெல்லாம் இருந்திருக்கிறேனேயென  வருத்தமாகவும் இருக்கும். இரவுகளில் கள்ளு குடித்துவிட்டு வருபவர் அருகில் சென்று காதை பிடித்து இழுத்து வலி ஏற்படுத்திவிட்டு ஓடுவோம். அல்லது அவர்கள் கொண்டுவரும் “டோர்ஜ் லைட்டைப்” பறித்துக்கொண்டு போவோம். அந்த நாள்களில் பற்றரி எங்கள் பகுதியில் தடை. ஒருமுறை வெறியில் வீட்டு முற்றத்தில் படுத்திருந்த ஐயம்பிள்ளையை கட்டிலொடு தூக்கி சென்று கோவில் முகப்பில் படுக்க வைத்துவிட்டுச் சென்று விட்டோம். அடுத்தநாள் தமிழீழ காவல்துறையில் வழக்குக் கொடுத்துவிட்டார். அவர்களும்   வந்து அள்ளிக்கொண்டு போனார்கள். சனமெல்லாம் அதோட எங்களை அடங்கிவிடுமென்றுதான் நினைத்தார்கள். நாங்களும் பயந்துதான் போனோம்.  காவல்துறைப் பொறுப்பாளரோ  இந்தவயதில்உதெல்லாம் செய்யாட்டி  வேறு எப்ப செய்யுறது. உங்களை இப்பபோக விட்டுவிடுவன். என்ன சனத்திற்கு நம்மில் நம்பிக்கை இல்லாமல் போகும். மூன்றுநாளைக்கு  இருந்து வடிவா திண்டுட்டுப்போங்கடா. என்று சொல்லி சுதந்திரமாக  விட்டிருந்தார்.  

வெறியிலிருந்த தருமரின் சைக்கிளையும், சேட்டையும்  எடுத்துச் சென்று தருமரின் மனைவியிடம், தேவி வீட்டடியில்    கிடந்தது எனச் சொல்லிக்  கொடுத்தோம்.  தேவி ஆள் ஒருமாதிரி என ஊரில் ஏற்கனவே கதை இருந்தது. சைக்கிள் களவு போய்விட்டதென்று  நினைத்து வீட்டுக்குச் சென்ற தருமர், வாசலில் தன்  சைக்கிளைக் கண்டபோது, தான் சைக்கிளைக் கொண்டு போகவில்லையென  எண்ணிக்கொண்டார். அன்றின்பின் அவர்,கள்ளு குடிக்கவே  போவதில்லை. அன்று இரவு அவருக்கு தாயும் மகளும் சேர்ந்து அப்படியொரு அடி. மறுநாள் தருமர் வாசிகசாலையில் இருந்த எங்களைப் பார்த்து, நல்லவேலை செய்துபோட்டியள் என்று மட்டும்தான் சொன்னார். 

வேலைக்கு வருவதும், அவர்களோடு உரையாடுவதும், இப்படி பழைய நினைவுகளை மீட்பதுவுமாக மனதிற்கு இதமான   வேலைத்தளமாகத்தான் இருந்தது. இவர்கள் நால்வரோடு இராசேந்திரம்  அய்யாவும் மனதுக்கு மிக நெருக்கமாகிவிட்டிருந்தார்.  இராசேந்திரம் அய்யா திரான்சியில் வசிப்பவர். எங்கே இருக்கிறீர்கள் என்று யாரவது விசாரித்தால், காந்தி சிலைக்கு முன்னால் இருக்கிற ஒழுங்கை என்றுதான் சொல்லுவார். திரான்சியில் காந்திக்குச்  சிலை இருப்பதை நான் அறிந்துகொண்டது  அவர் சொல்லித்தான். பலதடவைகள் உடைக்கப்பட்ட சிலை, தற்போது  வெண்கலத்தால் செய்யப்பட்டு இருக்கிறதெனவும் ஒவ்வொரு நாளும் வேலைக்கு வரும்போதும் காந்தி  சிலைக்கு  மலர்வைத்து  வணங்கிவிட்டே   வருவதாகச் சொல்லுவார்.  

இராசேந்திரம் அய்யாவுடன் காந்தி சிலையைப் பார்ப்பதற்காக ஒருமுறை சென்றிருந்தேன். காந்தி என்ற அந்தப் பெயரிலேயே எனக்குச் சிறுவயது முதல்  வியப்பு.மனிதனால் இப்படியெல்லாமா இருக்கமுடியும். முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட முடியும்.  அகிம்சையின் அடையாளம். தேச எல்லைகளைக் கடந்து இங்கும் கொண்டாடப்படுவதைப் பார்த்தபோது உள்ளார்ந்து ஒருவித மலர்ச்சி உருவாக்கியது. அங்கிருந்து இராசேந்திரம்  அய்யாவின் வீட்டுக்குச் சென்றபோது, “இந்த கட்டிடத் தொகுதியில்தான் யூதர்களை ஹிட்லர் கொண்டுவந்து அடைத்து வைத்திருந்து கொலை செய்தான். இப்ப நாங்கள் குடியிருக்கிறம்”என்கிறார். அவரது வீட்டிற்கு பின்புறமாக யூதர்களை அடைத்துக் கொண்டுவந்த ரெயில்பெட்டி ஒன்றும், நினைவுக் கற்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதையும் காட்டினார்.  அங்கிருந்து திரும்பிப்  பார்த்தால் காந்தி சிலை தெரியும். 

நான் வேலைக்குச் சேரும்போது, இராசேந்திரம் அய்யா வேலை செய்து கொண்டிருந்தார்.  “தம்பி இந்தக்கடையில பழைய ஆள் நான்தான்”  என்று அடிக்கடி சொல்லிக்கொள்வார். கடையும் பழசு. கிடக்கிற சாமானுகளும் பழசு. வாற சனங்களும் பழசு. நீங்களும் பழசுதான் என்று சொல்லி அவரைப் பகிடி பண்ணுவேன். சில வேலைகளைச் சொல்லித்தந்தார். சில வேலை  நுணுக்கங்களைச்  செய்துகாட்டினார். 

இராசேந்திரம் அய்யா வேலைக்கு வரும்போதும், வேலை முடிந்து செல்லும்போதும் நீற்றாக வெளிக்கிட்டுத்தான் செல்வார். தம்பி நாங்கள் எங்களை  நேசிக்கவேண்டும் என்று நெடுக சொல்லிக்கொள்வார். படிய வாரிய தலைமுடியில் மருந்துக்கும் நரைமுடியைக் காணமுடியாது. வேலைநேரத்தில் கூட எதுவிதமான பதற்றமும் இருக்காது.  சிறிய சத்தங்கூட இல்லாமல் வேலையைச் செய்துமுடிப்பார். எந்த வேலையைச் செய்தாலும் வலதுகை சின்னவிரல் தனியாக நீட்டிக்கொண்டு நிற்கும். நான் சிலநேரம் அதனைப் பிடித்து இழுத்து விடுவேன். சிரித்தபடி “என்ர சின்னவளும் இப்படித்தான் விரலைப் பிடிச்சு இழுப்பாள்” என்பார். ஒரு நூறுதரமாவது அதனை எனக்குச் சொல்லி இருப்பார்.  நான் கோபத்தில் யாருடனாவது கத்திப்பேசினால்  கண்டும்காணாமல் இருந்துதன் வேலையுண்டு என்று செய்து கொண்டிருப்பார்.  வேலை முடிந்து புறப்படும்போது, தம்பி நீ செய்தது பிழை என்று முகத்துக்கு நேரேயே சொல்லுவார். அது யார் என்றாலும் சொல்லியே தீருவார் . எனக்கும் நான் தவறு செய்துவிட்டது முதலே புரிந்துவிடும் ஆனாலும் பேசாமல் நிப்பேன். அவர் அப்படிச் சொன்னதும் அவரைக் கட்டிப் பிடித்துக்கொள்வேன்.

எல்லா ஊழியர்களும்ராஷோந்தி ராஷோந்தி என்று அவருடன் நெருக்கமாகப் பழகுவார்கள். இவர்அவர்கள் அனைவரையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். வேலை முடிந்ததும், நான்கு முதியவர்களிடமும் சென்று அரைமணி நேரமாவது பேசுவார். சிலநாள்களில் கடைகளுக்குச் சென்று அவர்களுக்குத் தேவையானதை வேண்டிக் கொண்டுவந்து கொடுப்பார். தனது தாய் தந்தைக்கு அவர்களின் காலத்தில் கூடயிருந்து உதவமுடியாத குற்றவுணர்வை அதில் தீர்த்துக்கொள்கிறார் எனப் புரிந்துகொண்டேன்.  இன்னும் சிலவருடங்களில் பென்ஷன் எடுத்து விடுவார்.  இருபது வருடங்களாக இங்கு வேலை செய்கிறார். 

உங்களுக்கு இனி வேலை இல்லை என்று  நான் எப்படி  அவரிடம் சொல்வது.

வேலைக்குச் சேர்ந்த முதல் நாள். என்னிடம் அவர்தம்பி  கிறிஸ்தோப் நல்லவன். எந்தவொரு கரைச்சலும் தரமாட்டான். மனுசிக்காரி வந்தால், இரைக்குப் பறந்த பருந்து மாதிரி  அங்கையிங்கை என்று திரிவாள்.  மற்றபடி ஒரு சோலியுமில்லை. என்று சொல்லியிருந்தார். அவரின் அந்த நம்பிக்கையோடுதான் வேலையைத் தொடங்கினேன். ஆறுவருடங்கள் ஆயிற்று. இன்றுதான் நிமிர்ந்து பார்த்து நாள்களைக் கணக்கிடுகிறேன். ஆறுவருடத்தில் ஒருநாள் தன்னும் என்னுடன் கிறிஸ்தோப்போ, மனைவியோ கடுமையாக நடந்ததில்லை. அதேபோல் இராசேந்திரம் அய்யாவுடனும் நடக்கவும்  சந்தர்ப்பம் கொடுத்ததில்லை. அவரும் அப்படி நடந்து விடுவதில்லை.  சனம் அதிகமாக வந்துவிடும் நாள்களில் இரண்டு கிளாஸ்களில் பியர் கொண்டுவந்து தருவார். அந்த நாள்களில்  வேலைமுடிந்து போகும்போது இருபதோ  முப்பதோ  தருவான். முதல் வேலைசெய்த   கடை முதலாளியோடு ஒப்பீடு செய்தால் இந்த முதலாளி தெய்வம். 

இப்போதைக்கு  கையால் தருகின்ற காசு தர முடியாது. இது  எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்றும்  சொல்லத் தெரியவில்லை. என்னை மன்னிக்க வேண்டுமென்று தொலைபேசியிலேயே கூறியிருந்தார்  கிறிஸ்தோப். எண்ணூறு யூரோ இனி இல்லை என்றபோது மனம் தன்பாட்டில் மாத செலவுகளைக் கணக்கிட்டுக்கொண்டது. சீட்டுக்கட்டவேறு சின்ன செலவுகளுக்கும் இனி என்ன செய்வது என்று எண்ணிக்கொண்டேன். வேலைதொடங்கும் முன் கிறிஸ்தோப்பை அழைத்துப் பேசினேன். கையால் தருகின்ற காசு தராவிட்டால் வேலை நேரத்தைக் குறைத்துத்தான் செய்வேன் என்றேன். அதற்காகவே காத்திருந்தவன் போல ஓம் செப் ஓம் நல்லது அதுதான் நல்லது என்றபடி நடந்துகொண்டிருந்தவர், திரும்பி ராஷேந்தியை நிப்பாட்டப் போறன். இனி நீங்கள் தனியாகத்தான் வேலை செய்யவேண்டும்  என்றபடி சென்றுவிட்டார்.  நக்கத் தவிடும்   இல்லை. குடிக்கத் தண்ணியும் இல்லை என எண்ணிக்கொண்டேன். இராசேந்திரம் அய்யா கழுவுமிடத்தில் இருந்த பாத்திரத்தைக் கழுவி  வைத்துவிட்டு என்னை நெருங்கி வந்தார்.  தம்பி என்ன மாதிரி சனம் வருமோடா என்றவரை நிமிர்ந்து பார்த்தேன். எப்படி இவரிடம் நான் சொல்வது. ஐந்து மாதங்களின் பின் எவ்வளவு நம்பிக்கையுடன் இன்று வேலைக்கு வந்திருப்பார். “உங்களை நிப்பாட்டப் போறானாம்” என்று எனக்குள் சொல்லிப் பார்த்தேன்.  நெஞ்சு ஒருமுறை ஏறி இறங்குகிறது. முழுமையான வெற்றிடம் உடம்புக்குள் உருவாக்கியது. நிமிர்ந்து பார்த்தேன். சுருக்கம் விழுந்த அவர் முகம் காந்தியின் புகைப்படங்களை ஒத்திருந்தது. அய்யா, சாமானுக்களை இறக்கி உள்ள வைச்சிருக்கிறன்.  ஒருக்கா “டேற்” பாத்து அடுக்கிவிடுங்கோ. நான் இதை முடிச்சிடுவன்  என்றபடி குனிந்து வேலையைத் தொடர்ந்தேன்.

இனி இரண்டுபேர் செய்த வேலையை நான் தனியாகச் செய்யவேண்டும். ஒன்பதுமணிக்குத் தொடங்கி நான்குமணிவரை வேலை செய்வதாகச் சொல்லிவிட்டேன். என்னாவது செய்துகொள்ளட்டும், என நினைத்தபடி வேலையைத் தொடங்கினேன். மனஉளைச்சலால் கைகள் பதறி வேலையில் கவனம் செலுத்த முடியாதிருந்தது. அப்படியே வைத்துவிட்டு அடுப்பை அணைத்தேன். சேட் பொக்கற்றில் இருந்து ஒரு சீக்கரட் எடுத்தேன்.  ஃபாரில் ஒரு கஃபே கேட்டு வாங்கினேன். இரண்டுடனும் வெளிப்புற மேசையில் சென்று அமர்ந்தேன். 

சம்பளம் குறைந்தால் என்ன செய்வது. எப்படியும் இன்னொரு வேலை எடுக்கவேண்டும். இந்த கொரோனா  காலத்தில் அது சாத்தியம் இல்லை. போட்டிருந்த சீட்டை எடுத்து வீணாகச் செலவு செய்ததுதான் மிச்சம். நினைவுகள் சீக்கரட்டின் புகைபோல தலையைச்சுற்றிக் கொண்டு நின்றது. இதைக் குடியாமல் விட்டால்  நூறு யூரோவரை மிஞ்சும். நினைவு வந்தவுடன் கையில் எரிந்துகொண்டிருந்ததைத் தூக்கி எறிந்தேன். அம்மாவுக்கு அனுப்புகின்ற காசையோ, அக்காவின் பிள்ளைக்குப் படிக்க அனுப்புகின்ற பணத்தையோ நிப்பாட்டினால் ஓரளவு சமாளிக்கலாம். அது சரிவராது. நான் தின்னாமல் குடியாமல் இருந்தென்றாலும் அம்மாவுக்கும்,அவளுக்கும் அனுப்பிப் போடவேணும். எப்பவும் உழைக்கலாம் தானேயெனக் காசை கண்டபடி செலவு செய்த நேரம் சேமித்திருக்கலாம். எல்லாம் கொழுப்பு செய்த வேலை. யாருக்குத் தெரியும் இப்படி ஆகுமென்று.ஆறுமாதங்கள் வேலை இல்லை. இனி குறைந்த நேரவேலை. குறைந்த சம்பளம். இலக்கில்லாமல்  நிமிர்ந்து பார்த்தேன் எதிரில் விக்டர்ஹியூகோ சிலையும் சுற்றுவட்டமும் சனசந்தடியற்று வெறுமையாகி இருந்தது. இனி எப்போது இந்த இடம் களைகட்டும். நாடிக்கு கையை முண்டு கொடுத்தபடி எவ்வளவு நேரம்  இருந்திருப்பேன் என்று தெரியாது. சட்டெனப் பொறி தட்டியது போல எழுந்தேன்.  மேசையில், கஃபே ஆறிப்போயிருந்தது. இனிக் குடிக்கமுடியாது. தூக்கிக்கொண்டு    குசினியை  நோக்கி நடந்தேன். கஃபேயின்  கனம் கூடியிருந்தது. 

கிளாஸை வைத்தபோது கஃபே குடிக்கப்படாமல் இருந்ததைக்  கவனித்த சேவர் நிமிர்ந்து என்னைப் பார்த்தான். அவன் கண்களைப் பார்த்தபின் திரும்பி கிறிஸ்தோப்பைப்  பார்த்தேன். என்னத்தையோ புரிந்துகொண்டவன்போல    தலையை ஆட்டினான். கண்ணுக்குத் தெரியாத ஒரே இரும்பு வளையத்தில் வெளியேறமுடியாமல் நிற்பவர்கள் போல உணர்ந்தேன். 

பாரிசுக்கு வந்த காலம் முதல் இப்படியொரு மனஅழுத்தத்திற்கு உள்ளானதில்லை. எனக்குமட்டுமா. எல்லோருக்கும் இந்த உலகம்  முழுவதற்கும் இப்படித்தானே இருக்கிறது. நினைத்தபோது பெருமூச்சு வந்தது. வேலையை செய்யத் தொடங்கினேன். என்னை மீறி மனம் அங்குமிங்குமாக அலைந்துகொண்டிருந்து. முழுமையாகப் பதிவு செய்து வேலையைச் செய்யாமல் இருந்ததன் விளைவு. முழுவதும் பதிந்து வேலை செய்தால் அரசுக்கு வரி அது இது என்று வருடமுடிவில் கட்டி கணக்கு பார்க்க மிச்சம் ஒன்றும் இருக்காது. இப்படிப் பதியாமல், களவாக வேலை செய்தால், எதோ கொஞ்சம் காசு மிஞ்சும். அதையும் நாமெங்கே அனுபவிப்பது. வேலை செய்யும் அனுமதிப்பத்திரம் வேறு பதிப்பிக்க வேண்டும். எதேதோ  தேவைகள் மாறி மாறி வந்து விழுந்து கண்ணுக்கு முன்னால்  கிடக்கும். நிமிர்ந்துபார்த்தபோது, பக்கத்தில் இராசேந்திரம் அய்யா வேலையைத் தொடங்கி இருந்தார். 

மெதுவாக எட்டி “அய்யா கனக்க ஒன்றும் செய்யாதீங்கோ பாப்பம்  சனம் பெரிசாக வராது. என்றபடி என் வேலையில் கவனத்தைக் குவித்தேன். இன்னும் ஒருமணிநேரத்தில் சனம் வரத்தொடங்கிவிடும் என எனக்குள் சொல்லிக்கொண்டேன். மளமளவென அன்றைய இறைச்சிக்கென உருளைக்கிழங்கில்  செய்த  கூட்டு உணவை அடுப்புக்குள் தள்ளினேன்.  சோஸ் செய்யவென வேண்டிய சீஸை  எடுத்து வெட்டி துண்டாக்கிக் கலந்து அடுப்பில் வைத்தேன். கைகளும் மனமும்  வேகம் எடுத்தது. தன்பாட்டில் ஒவ்வொன்றாகச் செய்யத் தொடங்கினேன். ஒரு பழக்கப்பட்ட இயந்திரம் தனக்கு இடப்பட்ட கட்டளைகளைச் செய்துமுடிப்பதுபோல, என்னையறியாமல் மனம்  ஒழுங்கில் செய்யத் தூண்டிக் கொண்டிருந்தது.  

அய்யா இண்டைக்கும் காந்தி சிலைக்கு பூ வைச்சிட்டே வந்தனியள்  என கேட்டேன் . ஏன் திடீரென அப்படிக் கேட்டேன் எனத் தெரியவில்லை. ஓமடா. வாசலிலை வெளிக்கிடேக்கை அந்தாளிந்த முகம் தானே முன்னுக்கு நிக்குது. வழமையாக செய்யுறதுதானே என்றவரிடம், ஒரு கஃபே கேளுங்க குடிப்பம் என்றேன். கஃபே குடிக்கும் அந்த நேரத்தில் ஆறுதலாக கிறிஸ்தோப்பின்  நோக்கத்தைச் சொல்லிவிடவேண்டும் என்று முடிவெடுத்தேன். “அய்யா உங்களை நிப்பாட்டப் போறானாம்” எனக்குள்  சொல்லிப்பார்த்தேன்.  முடியாது. என்னால் சொல்லமுடியாது. 

கஃபே குடிக்கும்போது தான் அந்த வீடியோவைக் காட்டினார். லொக்டவுன் நாளில் தமிழர் ஒருவர் வீதிகளிலிருந்த வசிப்பிடமற்றவர்களுக்கு  உணவுப்பார்சல்கள் கொடுத்துக்கொண்டிருந்தார். வாங்கியவர்கள் அவரைக் கட்டிப்பிடித்து தமது அன்பைத் தெரிவித்து விட்டு சென்று கொண்டிருந்தனர். ஆளை கொரோனா கொண்டு போடுத்து என்கிறார். வீடியோவை திருப்ப ஓட விட்டுப்பார்த்தேன். 

இராசேந்திரம் அய்யாவை வேலையால் நிறுத்தியபின், நான் தனியாகத் தொடர்ந்து வேலைசெய்தால் என்னால்தான் நிறுத்தப்பட்டதாக அவர் நினைக்கக்கூடும். அவர் அப்படி எண்ணாவிட்டாலும், அவரது வீட்டில் உள்ளவர்கள் சொல்லக்கூடும். பிள்ளைமாதிரிப் போய்ப்பழகிய வீடு.  நான்  எப்படிச்  சொல்வது. அவருக்காக, நான் இந்த வேலையை இழக்கவும் முடியாது. வேறு வேலையொன்றைத் தேடி எடுப்பது என்பது இந்தக் கொரோனாவுக்குள்  குதிரைக்கொம்பு பிடிப்பதைப் போலத்தான்.  

எனக்கே மாதம் இரண்டாயிரம் யூரோ இருந்தால் தான் சமாளிக்க முடிகிறது. அய்யா எப்படிச் சமாளிக்கப்போகிறார்.  இந்த வேலையை விட்டுவிட்டால்  நானும் வேற வேலை தேடி எடுக்க இயலாது. அவருக்காக கதைக்கப்போய் என்னை வேலையால் நிறுத்திவிட்டால் நான் என்ன செய்வது. நான் அய்யாவிடம் சொல்லப்போவதில்லை. சொல்லமுடியாது எனத் தீர்மானித்துக் கொண்டேன். அய்யாவுக்கு அரசாங்கத்தின் இடர்கால  உதவிகள் கிடைக்கும். சமாளித்துக்கொள்வார். என்னைத் தேற்றிக்கொள்ள சாட்டுகளைத் தேடினேன். லாசெப்பலில் மழைக்கூடாரமொன்றில் இருந்து குளிரில் விறைத்து மயங்கிக்கிடந்தவன் நினைவுக்கு வந்தான். அதற்குப்பிறகு அவனைக் காணவும் இல்லை அவன் பற்றிய கதைகளும் இல்லை. செத்துத்தான் போனானோ தெரியாது. 

நான்கு ஐந்து தடவைகள் அங்குமிங்குமாக கிறிஸ்தோப் மாறிமாறி சென்று கொண்டிருந்தார். போகும்போதும், திரும்பி வரும்போதும், என்னைப்  பார்ப்பதுவும், திரும்பி இராசேந்திரம் அய்யாவைப் பார்ப்பதுவுமாக இருந்தார். வேலை தொடங்கிய ஆரம்பகாலத்தில்நாளொன்றுக்கு   இருபதுபேர் உணவுக்காக வந்தால் நிகரலாபம் என்று சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. இப்போது அரசாங்கம் கொரோனா இடர்மானியம் வேறு கொடுக்கிறார்கள். எவ்வளவு காலம் வேலை செய்துமென்ன, எவ்வளவு நெருக்கமாக பழகியுமென்ன. சந்தர்ப்பம் அவர்களுக்கு வசதியாக அமையும்போது  தங்களின் லாபத்தினை இன்னும் எப்படி அதிகரிப்பது என்றுதான் பார்க்கிறார்கள். 

நேரத்தைப் பார்த்தேன். மதியம். இனி சனம் வரத்தொடங்கும். மீண்டுமொருமுறை எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டுக் காத்திருக்கத் தொடங்கினேன். இராசேந்திரம் அய்யாவும் தனது வேலைகளை முடித்துவிட்டு பாடசாலைக்குச்  சென்ற மகளை தொலைபேசியில் நலம் விசாரித்துக்   கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவர் இந்தாடா மகள் கதைக்கிறாள் என தொலைபேசியை நீட்டினார். வாங்கிக்கதைத்தேன். மாமா எப்ப வீட்ட வருவீர்கள் என்று கேட்டாள். சனிக்கிழமை வாறன் பிள்ளை என்று சொல்லிவிட்டு அய்யாவிடம் தொலைபேசியைக் கொடுத்தேன். அவளும் என் அக்காவின் மகள் போலத்தானே. நினைவுகள் சிதற, முதலாவது பில் வந்து விழுந்தது.

எதிர்பார்த்தளவு சனமில்லை. தனியாளாக செய்துவிடக்கூடியளவு ஆட்கள் தான் உணவுக்காக  வந்தார்கள். அய்யாவிடம் இன்னும் சொல்லவில்லை. வாசலில் நின்று கிறிஸ்தோப் அழைப்பது கண்ணாடிக்குள்ளால் தெரிந்தது. சொல்லிவிட்டாயா  என்றுதானே கேட்கப்போறான்.  எனக்குள்?போனேன். தான் சிக்கரெட் புகைத்தபடி, ஒன்றை எனக்காக நீட்டினார்.  அன்பாக மறுத்தேன். சனமில்லை என்றான். பேசாமல் நின்றேன். தோள்கள் இரண்டையும் உயர்த்தி இறக்கி கைகளை விரித்துக் காட்டினான். நாளைக்கும் பார்ப்போம். இப்படியென்றால் குசினியை மூடிவிடலாம் என்றான். அப்போதும் ஒருகண் அரைவாசிதான் திறந்திருந்தது. தலையை ஆட்டினேன். ராஷேந்திக்கு சொல்லிவிட்டயா என்ற கேள்வியை எதிர்பார்த்தேன். கேட்கவில்லை. கேட்டால் சொல்லுறன் என சொல்லத் தயாராகவே இருந்தேன்.  சிலகண மௌனத்தை உடைக்க எத்தனித்தேன். இயல்பில்லாமல் சமையல்கூடப் பக்கம் பார்த்தேன். போகலாம் என்பதுபோல் தலையாட்டினார். 

நாளை சுழி போல நினைவினில் கிடந்தது. கிணற்றுக்குள் இருந்து கிளம்பும் “ம் மென்ற” ஒலி காதுக்குள் இருந்து  எழுந்தது. திருப்ப வேலையில்லாமல்  போய்விடுமோ  உடல் நடுங்கிக்கொண்டது. வணக்கம் சொல்லி  அழைக்கும் குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். வழமையாக வருபவர்கள். மூவர் மட்டும் நின்றிருந்தார்கள். தங்களுக்குள்ளாகவே விலகியிருந்தார்கள். சிரித்தபடி பதில் வணக்கம் செய்தேன்.  அருகில் வரவேண்டாம் என்று சைகை செய்தார்கள்.  தங்கள் உடனே திரும்பிப் போகப்போவதாகவும் இனிமேல் தினமும் வருவது சிரமம் என்றார்கள். கடை திறந்திருப்பதாக கிறிஸ்தோப் சொல்லியதால் வந்ததாகவும், தங்கள் நெடுங்கால நண்பரின் இறுதி நிகழ்வில் கூட கலந்துகொள்ளவில்லை என்றும் கூறினார்கள். கவலையோடு அவர்கள் கூறுவதைக் கேட்பதுபோல நடித்தேன். அவரின் நினைவாக அவரை அடக்கம் செய்த இடத்தில் யானை பொம்மையொன்றை  வைக்க விரும்புவதாகக் கூறினேன். நிச்சயம் போகலாம் என்றவர்கள், இராசேந்திரம் அய்யாவை, மிகவும் அவதானமாக உடல் நிலையைக் கவனித்துக்கொள்ளும் என்றார்கள்.  விரைவில் நாங்கள் ஒன்றாக இருந்து சாப்பிடுவோம் என மலர்ந்து கூறினார்கள். தொற்றுப்பரவல்  அடுத்தடுத்த கட்டங்களும் வரக்கூடும் என்கிறார்கள். அதையெல்லாம் மீறி எனது நினைவெல்லாம் வேலை தொடர்ந்து கிடைக்குமா என்பதாகவே இருந்தது.

தொற்றுநோயைக் காட்டி அரசு அடக்குமுறைகளில் ஈடுபடுகிறது. போதிய மருத்துவ ஏற்பாடுகளைச் செய்யாமல்எங்கள் வாழ்க்கைமுறையை மாற்றிவிட முனைகிறது.  எமக்கான அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் அழித்துவிட முடிவெடுத்துவிட்டது. எளிய மனிதர்களாகிய எங்களின்  சகுனங்களையும்  சடங்குகளையும் அறுத்தெறிந்துவிட்டு வண்டில் குதிரைகளாக்கமுயல்கிறார்கள். அரசினை அகற்ற மீண்டும்  கிராமங்களிலிருந்து பரியை நோக்கிப் புறப்பாடு செய்யவேண்டும் என்ற அவர்களின் கண்களில் கடந்தகாலத்தைக் கண்டேன். கனவு தருகின்ற போதை  எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரித்தான் இருக்கும் என எண்ணிக்கொண்டேன்.  கிராமங்களிலிருந்து என்ற சொல்லில் விழுந்த அழுத்தம் என்னைத்  துணுக்குற வைத்தது.  

அவர்கள் விடைபெற்றதும் மறுநாளுக்குத் தேவையான பொருட்களின்    விபரங்களை நாளாந்த குறிப்புக்கொப்பியில் எழுதத் தொடங்கினேன்.  இராசேந்திரம் அய்யா வேலை முடிந்து புறப்படுவதற்காக உடைமாற்றும் அறைக்குள் சென்றிருந்தார். நாளையென்பது சுழிபோல கொப்பியில் விரிந்து கிடந்தது.  இதைவிட்டால் சொல்லிவிட வேறு சந்தர்ப்பம் அமையாது. சொல்லி விடவேண்டியதுதான். அய்யாவை வேலையிலிருந்து நிப்பாட்டாவிட்டால் எனக்கும் சேர்த்து வேலை இல்லாமலும் போகலாம்.  இவ்வளவு காலம் ஒன்றாக வேலை செய்துவிட்டு எப்படிச்  சொல்வது. எப்படியும் சொல்லி விட வேண்டும். சொல்லி விட முடியுமா?  

கிறிஸ்தோப் வெளிவாசலில் இன்னும் நின்று கொண்டிருந்தார். நான்அய்யா உடைமாற்றி வரட்டும் பேசிக்கொள்வோம் என நினைத்தபடி நின்றிருந்தேன்.    நீற்றாக வெளிக்கிட்டு வந்தவர், கிறிஸ்தோப்பை திரும்பிப்  பார்த்தார். “உவன் ஏன்ராப்பா, காந்தி சிலைமாதிரி  போற வாசலிலேயே  நிக்கிறான்” என்றவரை ஆழ்ந்து  பார்த்தேன். நாளைக்கு  வேலைக்கு வரமாட்டேன். நீ கிறிஸ்தோப்புக்கு சொல்லிவிடு. நேரமிருந்தால் சனிக்கிழமை லீவுக்கு வீட்டை வா. கோழிப்புக்கை செய்வம் என்றபடி புறப்பட்டவரிடம், எதுவுமே சொல்லாமல் நின்றேன். பின் நிதானமாக பேனையையும் கொப்பியையும் வைத்துவிட்டு முதலாளியை நோக்கிச்சென்றேன். எப்போதுமில்லாதபடி முழு  உடலும்  இறுக்கம் குறைந்து  போயிருந்தது. நாளைக்கும்  வேலை செய்யலாம் என்று எனக்குக் கேட்கக்கூடியவாறு சத்தமாகச் சொல்லிக் கொண்டேன்.

 

http://kanali.in/victor-hugo-suttruvattam/

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்தக் கொரோனா காலத்தில் ஒரு ரெஸ்டொரண்டில் நடக்கும் நடைமுறையையும் நண்பர்களுக்குள் ஏற்படும் மன ஆதங்கத்தையும் வேலை இழத்தல், அதனால் பணப் பற்றாக்குறை போன்ற அவலங்கள் எல்லாவற்றையும் தனக்குரிய பாணியில் அலசிப் பிழிந்து காயப்போட்டிருக்கின்றார் நெற்கொழு .....!  👍

நன்றி கிருபன்.....! 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெற்கொழுதாசன் எழுதிய கதைகளில் பிடித்த ஒன்று.

கொரோனா ஊரடங்கில் வேலை இருக்குமா போகுமா என்று வேலையாளும், வருமானம் கிடைக்குமா இல்லையா முதலாளியும் தத்தளிக்கும் காலம் இது. 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.