Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாயின் பசி – நிலாந்தன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயின் பசி – நிலாந்தன்!

March 14, 2021

 

UK-Mother.jpg

“ஐநா எனப்படுவது  எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை
விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத  அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல.  எனது படம் ஆகிய Quo Vadis Aida  ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்ப உதவும் என்று நான் உண்மையாகவே நம்புகிறேன் …..”
இவ்வாறு தெரிவித்திருக்கிறார் Quo Vadis Aida என்ற திரைப்படத்தின் நெறியாளர் ஆகிய ஜஸ்மிலா ஸ்பானிக். அவர் ஸ்ரெபெர்னிகா.

இனப்படுகொலையில் தனது 17வது வயதில் தப்பிப்பிழைத்த ஒரு பெண். ஐநாவில் பல ஆண்டுகள் வேலை செய்தவர். அண்மையில் அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி டைம்ஸ் சஞ்சிகை அவரை நேர்கண்ட பொழுது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். அவருடைய சர்ச்சைகளோடு பாராட்டப்பட்ட திரைப்படம் ஆகிய Quo Vadis Aida இப்பொழுது ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

1995இல் ஸ்ரெபெர்னிகா இனப் படுகொலையில் எண்ணாயிரத்துக்கும் குறையாதவர்கள் கொல்லப்பட்டார்கள் பெண்கள் சிதைக்கப்பட்டார்கள். அதில் தப்பிப் பிழைத்த ஜஸ்மிலா கூறுகிறார் ஸ்ரெபெர்னிகாவில் இப்பொழுதும் அன்னையர் தங்கள்பிள்ளைகளின் அல்லது கணவன்மார்களின் அல்லது உறவினர்களின் எலும்புத் துண்டுகளை தேடிக் கொண்டிருப்பதாக. ஏதாவது ஒரு எலும்பு மிச்சம் கிடைத்தால் அதைப் புதைத்து ஒரு கல்லறையை கட்டிவிடலாம் என்று காத்திருப்பதாக. அந்தப் பெண்களின் உறுதியை கௌரவித்து அவர்களுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்றும் கூறுகிறார்.

அன்னையரின் துக்கம் அல்லது அன்னையரின் ஆவேசம் அல்லது அன்னையரின் காத்திருப்பு உலகம் முழுவதிலும் போராட்டங்களை பின்னிருந்து இயக்கியிருகிறது. தேற்றப்படவியலாத தாய்மாரின் துக்கம் ரஷ்யாவின்  ஸ்தெப்பி வெளியில் தொடங்கி  வல்லை வெளி வாகரை வெளி கைதடி  வெளி வரையிலும்  நிரம்பியிருக்கிறது. தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டத்தில் அடைக்கலம் தந்த வீடுகள் என்று அழைக்கப்படும் அனேகமான வீடுகளில் தாய்மாரின் தியாகத்தை அர்ப்பணிப்பை துணிச்சலை காணலாம். போருக்குப் போன தமது பிள்ளைகளுக்காகவும் அல்லது காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காகவும் உபவாசம் இருக்கும் ஆயிரக்கணக்கான அன்னையர்களின் கதை வெளியே தெரியவருவதில்லை.

எனக்குத் தெரிந்து பல அன்னையர் இரு வேளை உணவைத் துறந்து அல்லது ஒருவேளை உணவைத் துறந்து அல்லது சோற்றைத் துறந்து பாண் மட்டும் சாப்பிட்டு கொண்டு பிள்ளைகளுக்காக காத்திருப்பதை கண்டிருக்கிறேன். ஏற்கனவே பிள்ளை வரம் கேட்டு மண்சோறு சாப்பிடும் ஒரு பாரம்பரியத்தை கொண்ட மக்கள் நாங்கள். எனவே தவமிருந்து பெற்ற பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக தவமிருக்கும் அன்னையரின் தியாகத்தை கழித்துவிட்டு ஒரு விடுதலைப் போராட்டத்தின் ஒட்டுமொத்த தியாகத்தை குறித்து கதைக்க முடியாது. அண்மையில் கூட புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த ஓர் அன்னை காலமானார். அவருடைய வீடு ஆயுதப் போராட்டத்தின் தொடக்க காலங்களில் பலருக்கு புகலிடமாக இருந்த ஒரு வீடு என்பதை முகநூல் பதிவுகளை பார்த்தால் தெரியும். இப்பொழுதும் அவ்வாறு அடைக்கலம் கொடுத்த பல வீடுகள் அமைதியாக நிகழ்கால அரசியல் போக்கில் தலையிடாது அமைதியாக சாட்சிகளாக பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதேசமயம் காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி மற்றொரு தொகுதி அன்னையர்கள் வீதியோர குடில்களில் அல்லது தீச்சட்டி தலையில் சுமந்தபடி போராடிக் கொண்டிருக்கிறார்கள். அன்னையரின் தியாகம் பசி தூக்கம் காயம்’கண்ணீர் என்பவற்றால் வனையப்பட்டதே எந்த ஒரு போராட்டமும்.

அப்படி ஓர் அன்னைதான் இப்பொழுது பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கிறார். இக்கட்டுரை முதலாவதாக அவருடைய பசியை மதிக்கிறது அவருடைய ஓர்மத்தைக் கௌரவிக்கிறது. அவருடைய போராட்டத்துக்கு பக்கபலமாக யாழ்பாணத்திலும் கிழக்கிலும் சுழற்சி முறையில் உண்ணாவிரதப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. புலம் பெயர்ந்த தமிழ்ப் பரப்பிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களின் சுழற்சி முறை உண்ணாவிரதப் போராட்டத்தில் பெரும்பாலான நேரத்தில் மிகச்சிலரையே போராட்ட மேடையில் காணமுடிகிறது. சில சமயங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அங்கே வந்து இருப்பார்கள். கட்சிகளின் உறுப்பினர்கள் அங்கே வந்து இருப்பார்கள். அண்மையில் தென்னிலங்கையிலிருந்து மதகுருக்கள் வந்து இருந்தார்கள். ஆனாலும் பெரும்பாலான நேரங்களில் அந்த மேடை மிகச் சிலரோடு வெறிச்சோடிக் காணப்படும்.

இரவுகளில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களோடு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த சிலர் வந்து தங்குகிறார்கள். மற்றும்படி கட்சிகள் இது விடயத்தில் தங்கள் பங்களிப்பை போதிய அளவு செய்யவில்லை என்று உணரப்படுகிறது. சில கட்சித் தலைவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறுகிறார்கள் இந்த போராட்டத்தை தொடங்கும்போது மாணவர்கள் தம்மோடு கலந்துபேசவில்லை என்றும் அதற்குரிய கட்டமைப்பு எதையும் உருவாக்கவில்லை என்றும். மாணவர் அமைப்புக்குள்ளும் ஒன்றிணைந்த செயற்பாடு இல்லை. மாணவர்கள் அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் கட்சிகள் பங்களிப்புச் செய்யலாம் தானே?


இப்போராட்டத்தில் முன்நின்று செயல்படும் ஒரு மாணவர் தன்னுடைய இரண்டு நாள் பரீட்சைகளை எழுதவில்லை என்று தெரிகிறது. அந்த நாட்களில் அவருக்கு பதிலாக போராட்டத்தை பொறுப்பேற்க வேறு மாணவர்கள் இல்லை? இதுதான் நிலைமை.

மிகச் சிலரின் தியாகத்தை பெருந்திரள் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களா? அல்லது மக்களைப் பங்காளிகளாக மாற்றத் தேவையான அரசியல் தரிசனம் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம்
இல்லையா? தாயகத்தில் மக்கள் போராட்டங்கள் எந்த அளவுக்கு மக்கள் மயப்பட்டிருக்கின்றன என்பதற்கு இப்பொழுது முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்  ஆகப் பிந்திய எடுத்துக்காட்டு. அதிலும் குறிப்பாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலுமான போராட்டத்தின் பின்னரான எடுத்துக்காட்டு.

இவ்வாறான ஒரு போராட்டச்சூழலை முன்வைத்து இக்கட்டுரை பின்வரும் கேள்விகளை எழுப்புகிறது.

முதலாவது கேள்வி. உலக சமூகத்திடம் நீதி கேட்டுப் போராடுவது என்பது ஐநா நோக்கிப் போராடுவதா?அது தனிய ஜெனீவா மைய அரசியல் மட்டுமா? இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்ட திரைக் கலைஞரின் கூற்றை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். ஐ.நாவை நம்புவதில் இருக்கும் ஆபத்தை அவர் உணர்த்துகிறார். அவர் ஐநாவில் பல ஆண்டுகள் வேலை செய்தவர் என்பதையும் இங்கு சேர்த்துக் கவனிக்கவேண்டும்.

இரண்டாவது கேள்வி. கடந்த பத்தாண்டுகளில் ஈழத்தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்த சாகும் வரையிலான உண்ணாவிரதங்கள் ஏன் வெற்றி பெறவில்லை? அரசியல் கைதிகளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருந்தார்கள். ஆனால் வெற்றி பெறவில்லை. கடந்த பத்தாண்டுகளில் யாரும் இறுதிவரை போராடவில்லை. அதற்காக இக்கட்டுரை உண்ணாவிரதிகள் சாகவேண்டும் என்று கேட்கவில்லை. சாகும் வரை உண்ணாவிரதம் என்பது ஒரு கடைசிப் போராடம்.

மூன்றாவதுகேள்வி. இவ்வாறான போராட்டங்களை யார் முன்னெடுப்பது ஒப்பீடளவில் சிறந்தது? அதை பிரபல்யமாக இருக்கும் அரசியல்வாதிகள் முன்னெடுப்பதே சிறப்பு என்று மு.திருநாவுகரசு அண்மையில் கூறியிருக்கிறார். மக்கள் பிரதிநிகளுக்கு ஊடகக்கவர்ச்சி உண்டு. அனைத்துலக் அளவில் அங்கீகாரம் உண்டு. அவர்களை மக்கள் தமக்காகப் போராடத்தானே தெரிந்தெடுத்தார்கள்? எனவே அவர்கள் தியாகம் செய்யட்டும். அதன்மூலம் முன்னுதாரணமாகட்டும். அவர்களுக்குள்ள ஊடகக்கவர்ச்சி மற்றும் அங்கீகாரம் என்பவற்றை முதலீடாக்கி அவர்கள் சாகும் வரையிலும் உண்ணாவிரதம் இருக்கும் பொழுது அது உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும். அவர்களுக்கு வாக்களித்த மக்களையும் ஏதோ ஒரு உணர்ச்சி புள்ளியில் இணைக்கும். எனவே மக்கள் பிரதிநிதிகள்தான் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை முன்னெடுக்க வேண்டும். ஆனால் கடந்த பத்தாண்டுகளில் தமிழ் மக்கள் மத்தியில் எந்த ஒரு கட்சித் தலைவரும் அவ்வாறு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க வில்லை. அது மட்டுமல்ல சட்ட மறுப்பாக போராடிய காரணத்தால் யாருமே இதுவரை சிறைக்கும் போகவில்லை. தலைவர்களும் சிறைகளை நிரப்பவில்லை. தொண்டர்களும் சிறைகளை நிரப்பவில்லை. இப்படிப்பட்ட மிக வறுமையான ஒரு போராட்டச் சூழலில்தான் யார்யாரோ தன்னார்வமாக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறார்கள். யார் யாரோ போராட்டத்தை முன்னெடுக்கிறார்கள். தலைவர்கள் அவர்களின் பின் இழுபடுகிறார்கள்.

நாலாவது கேள்வி.இது போன்ற போராட்டங்களை உலகம் எப்படிப் பார்க்கிறது? சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட தீபெத் பிரதேசத்தில் இதுவரையிலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் தீபெத்தின் விடுதலைக்காக தீக்குளித்து இறந்திருக்கிறார்கள். ஆனால் அந்த தியாகங்களெவையும் உலகத்தின் மனச்சாட்சியை உலுப்பவில்லை. ஏன் அதிகம் போவான்? உலகப் பேரூடகங்கள் அத்தீக்குளிப்புக்களைக் கண்டுகொள்வதேயில்லை. ஏன்? ஏனெனில் ஒரு போராட்டத்தில் எவ்வளவு தியாகம் செய்யப்படுகிறது என்பதல்ல இங்கு முக்கியம் எவ்வளவு புத்திசாலித்தனமாக பிராந்திய மற்றும் பூகோள அரசியல் நிலைமைகள் கையாளப்படுகின்றன என்பதே முக்கியமானது என்பதாலா? இக்கேள்விகளை முன்வைத்து தமிழ்ச் சமூகம் ஆழமாக உரையாட வேண்டும். தமிழ் மக்கள் ஏற்கனவே நிறைய இழக்க கொடுத்துவிட்டார்கள். கிட்டத்தட்ட நால்வருக்கு ஒருவர் புலம்பெயர்ந்து விட்டார். எனவே தமிழ் சக்தி தொடர்ந்தும் சிதறக்கூடாது. அது சேமிக்கப்படவேண்டும். திரட்டப்பட வேண்டும். இந்த அடிப்படையில் சிந்தித்து நீதிக்கான தமது போராட்டத்துக்கென்று தமிழ் மக்கள் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களின் ஒட்டுமொத்த அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவல்ல ஒரு மக்கள் அமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டும். அது தாயகம்;தமிழ் புலம்பெயர்ந்த சமூகம் மற்றும் தமிழகத்தில் இருக்கும் தரப்ப்புக்களையும் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைக்கும் பொழுது ஒரு முக்கியமான முன் நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். அது என்னவெனில் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் அங்கே முன்வைக்கும் கோஷங்கள் முன்நிறுத்தும் சின்னங்கள் கொடிகள் போன்றன தாயகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன. எனவே அவர்களோடு இணைவது தாயகத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்தானது. தமிழகத்திலும் அப்படித்தான். இதனால் தாயகம்-தமிழகம்-புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகம் ஆகிய மூன்று பரப்புகளும் ஒன்றிணையத் தக்க ஒரு பொதுக்கட்டமைப்பை  அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சிவில் வெளியை திறக்க வேண்டும். அதன் மூலமாகவே புலம்பெயர்ந்த தமிழ் பரப்பிலிருந்து அறிவும் பணமும் ஏனைய உதவிகளும் பரிமாறப்பட வேண்டும்.

இல்லையென்றால் தாயகத்தில் மிக அரிதாக தோன்றும் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்தோடு கொண்டிருக்கும் உறவுகள் காரணமாக ஆபத்துக்குள்ளாகும் நிலைமைகள் ஏற்படலாம். எனவே இங்கு முக்கியமாக எடுக்கப்பட வேண்டிய முடிவு அதுதான்.

தாயகம் – தமிழகம்-புலம்பெயர்ந்த தமிழ்ப்பரப்பு ஆகிய மூன்று பரப்புகளையும் ஒன்றிணைக்கும் ஒரு இடையூடாட்டத் தளமாக கருதத்தக்க ஒரு கட்டமைப்பை முதலில் உருவாக்க வேண்டும். அந்த கட்டமைப்புக் கூடாவே நீதிக்கான தமிழ்மக்களின் போராட்டங்கள் பொருத்தமான வடிவத்தில் பொருத்தமான நேரத்தில்தீர்மானிக்கப்பட வேண்டும். சில தனிநபர்களின் தன்னார்வமான போராட்டங்கள் அல்லது தியாகங்கள் மக்களை ஒரு உணர்ச்சி புள்ளியில் இணைக்க உதவும். ஆனால் சில சமயம் ஒருங்கிணைக்கப் படாத போராட்டங்கள் தொடர்ச்சியற்ற போராட்டங்கள் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த போராட்ட உணர்வை நீர்த்துப் போகச் செய்துவிடும். எனவே இது விடயத்தில் உடனடியாக ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். உண்ணாவிரதம் இருக்கும் அப்பெண்மணியின் பசியை முன்னிறுத்தியாவது தமிழ்ச்சமூகம் இது குறித்து சிந்திக்குமா?

 

https://globaltamilnews.net/2021/158081/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.