Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெனிவாத் தீர்மானமும் பின்னும் - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெனிவாத் தீர்மானமும் பின்னும் - நிலாந்தன்

spacer.png

 

 

2009ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் வலைஞர்மடம் தேவாலயத்தை மையமாகக் கொண்டு மருத்துவர்களும் மதகுருக்களும்  இயங்கிக்கொண்டிருந்த ஒரு காலகட்டம். மாதா கோயிலின் பங்குத்தந்தையாக அமரர் அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் இருந்தார்.  மாதா கோயில் வளாகத்தில் ஒரு பெரிய பதுங்குகுழி இருந்தது.அதைத்தான் மருத்துவர்களும் மதகுருமார்களும் கன்னியாஸ்திரிகளின் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்திவந்தார்கள்.கடைசிக்கட்டப் போரில் கட்டாய ஆட்சேர்ப்பில் இருந்து தப்பிவந்தவர்களுக்கு வலைஞர் மடம் தேவாலயம் ஒரு புகலிடமாகவும் இருந்தது. அந்நாட்களில் அத்தேவாலயம் ஓரூழிக்காலத்தின் சமூக இடையூடாட்ட மையமாகச் செயல்பட்டது.மாத்தளன் துறைமுகமும்  வைத்தியசாலைகளும் அந்த மக்களுக்கான வெளி வாசலாகக் காணப்பட்டன.

அக்காலகட்டத்தில் வலைஞர்மடம் தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த மோற்றலோவா தொலைபேசியில் இருந்து சில சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் வெளி உலகத்தோடு தொடர்பு கொண்டார்கள். வன்னியில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை வன்னிக்கு வெளியே இருந்தவர்கள் எடுப்பதற்கு தயங்கிய ஒரு காலகட்டம் அது. அப்பொழுது மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக இருந்த ராயப்பு ஜோசப் ஆண்டகை  வன்னியிலிருந்து வந்த அழைப்புக்களை ஆர்வத்தோடு செவிமடுத்தார். அப்படியொரு தொலைபேசி உரையாடலின்போது ஒரு சிவில் சமூகப் பிரதிநிதி அவரிடம் பின்வருமாறு கூறினார்…”இந்த யுத்தம் ஓர் இனப்படுகொலையில் முடியப்போகிறது. மீனைப்பிடிப்பதற்கு கடலை வடிக்கும்  உத்தியை இந்த அரசாங்கம் கையாண்டு வருகிறது. எனவே மீனைப் பிடிப்பதற்காக கடலைப் பிழியும்பொழுது அது நிச்சயமாக ஒரு பேரழிவாகவே முடியும். அதைத் தடுக்கவேண்டும்” என்று.. அப்பொழுது ஆயர் திரும்பி கேட்டார் “அப்படி ஒரு நிலைமை வந்தால் பெருந்தொகையான மக்கள் இறப்பார்களா ?” என்று. ஆம் குறைந்தது 30 ஆயிரம் பேராவது உயிரிழக்கும் ஒரு நிலைமை ஏற்படலாம் என்று அந்த செயற்பாட்டாளர் சொன்னார். ஆயர் “ஆண்டவரே” என்றார். ”அதை எப்படி தடுப்பது” என்று கேட்டார்.

அப்பொழுது நடைமுறையில் இருந்த ஒருதலைப்பட்சமான  பாதுகாப்பு வலையத்துக்குப் பதிலாக இருதரப்பு பாதுகாப்பு வலயத்தை உருவாக்க வேண்டும். அதை மூன்றாவது தரப்பு மேற்பார்வை செய்ய வேண்டும். அப்படி ஒரு முத்தரப்பு உடன்படிக்கை உருவாக்கப்பட்டால் பேரழிவை தடுக்கலாம் என்றும் அந்த செயற்பாட்டாளர் சொன்னார். அப்பொழுது உயர் பாதுகாப்பு வலயங்கள் மரணப் பொறிகளாக  மாறிக் கொண்டிருந்தன. அந்த உயர் பாதுகாப்பு வலயங்களை அரசாங்கமே ஒருதலைப்பட்சமாக அறிவித்திருந்தது. அப்பாதுகாப்பு வலையங்கள் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை  அல்ல. அதிலும் குறிப்பாக மூன்றாவது தரப்பு ஒன்றின் கண்காணிப்பு அல்லது மேற்பார்வை அப்பாதுகாப்பு  வலையங்களுக்கு இருக்கவில்லை. இதுதான் இறுதிக்கட்ட போரில் நிகழ்ந்த அழிவுக்கு முக்கியக் காரணம்.

எனவே “இரண்டு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாவது தரப்பின் மேற்பார்வையோடு கூடிய ஒருபாதுகாப்பு வலையத்தை அமைக்குமாறு நீங்கள் கேளுங்கள் என்று அச்செயற்பாட்டாளர் ஆயரிடம் கேட்டார். அந்த வேண்டுகோளை நான் கொழும்பில் உள்ள தூதரகங்கள் மற்றும் சம்பத்தபட்ட அதிகாரிகளிடம் முன்வைக்கிறேன். நானே நேரடியாக சென்று சம்பந்தப்பட்டவர்களை சந்தித்து அப்படியொரு முத்தரப்பு உடன்படிக்கைக்குரிய சாத்தியப்பாடுகளை குறித்து உரையாடுகிறேன்” என்று ஆயர் சொன்னார். வாக்குறுதி அளித்தபடி அவர் கொழும்புக்கு போய் தூதரக அதிகாரிகளையும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளையும் சந்தித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்ததைப்போல ஒரு பாதுகாப்பு வலையத்தை போரின்  இறுதிக்கட்டம் வரையிலும் உருவாக்க முடியவில்லை.

அப்பொழுது மட்டுமல்ல அதற்குப் பின்னரும் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக தமிழ் மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை நீதியும் கிடைக்கவில்லை. கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக தமிழ் மக்கள் பொருத்தமான வெற்றிகள் எதையும் பெறவும் இல்லை. தான் நேசித்த மக்கள் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்தும் பொருத்தமான  வெற்றிகளை பெறவில்லையே என்ற கவலையோடுதான் ஆயர் இராயப்பு ஜோசப் கடந்த புதன் கிழமை உயர்நீத்திருப்பாரா?

கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானமும் அதன் உடனடி விளைவுகளும் தமிழ் மக்கள் வெற்றிபெறத் தவறியதை காட்டுகின்றன. உள்நாட்டில் கூட்டமைப்பும் புலம்பெயர்ந்த தமிழ் பரப்பில் சில அமைப்புகளும் கூறுவது போல அது ஒரு மகத்தான வெற்றியா?

குறிப்பாக புதிய தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான பொறிமுறை குறித்து மிகையான நம்பிக்கைகள் கட்டி எழுப்பப்படுகின்றன. அது சிரியாவில் உருவாக்கப்பட்ட ஒரு பொறிமுறை போன்றது அல்ல. சிரியாவில் அவ்வாறு உருவாக்கப்பட்ட பொறிமுறை ஐநா பொதுச்சபையின் கீழ் உருவாக்கப்பட்டது. எனினும் அதுகூட ஒரு கட்டத்துக்கு மேல் தேங்கி நின்றுவிட்டதாக இப்பொழுது சுட்டிக்காட்டப்படுகிறது. அதேசமயம் புதிய ஐநா தீர்மானத்தில் கூறப்பட்டிருக்கும் பொறிமுறை ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு கீட்பட்டதாகவே இயங்கும். அப்படி என்றால் மனித உரிமைகள் பேரவைக்குள்ள அத்தனை வரையறைகளையும் அது கொண்டிருக்கும். அதன்படி ஒரு நாட்டுக்குள் அந்த நாட்டின் அனுமதியின்றி இந்த விசாரணைப் பொறிமுறை செயற்பட முடியாது. எனவே இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாட்டுக்குள் இறங்கி ஆதாரங்களை திரட்ட அப்பொறிமுறையால் முடியாது. நாட்டுக்கு வெளியே இருந்தபடிதான் அதைச் செய்யமுடியும்.

 

இப்பொறிமுறைமூலம் திரட்டப்படும் சான்றுகளும் சாட்சிகளும் இலங்கைத்தீவின் அரச படைகளுக்கு எதிராக ஒரு நீதி விசாரணையின்போது பயன்படுத்தத் தக்கவை ஆகும். இலங்கை அரசபடைகளுக்கு எதிரானது என்பது அதன் இறுதி விளைவை கருதிக் கூறின் இப்போது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்துக்கு எதிரானதுதான். அப்படிப்பார்த்தால் தன்னை விசாரிப்பதற்காக ஆதாரங்களை திரட்டும் ஒரு பொறிமுறையை எந்த அரசாங்கமாவது தனது நாட்டின் எல்லைக்குள் நுழைய அனுமதிக்குமா? இதுதான் கேள்வி.

எனவே மேற்படி பொறிமுறை இலங்கைக்குள் இறங்கி வேலை செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதிக்கப்போவதில்லை. அப்படியென்றால் அது நாட்டுக்கு வெளியே இருந்தபடிதான் தகவல்களை திரட்ட வேண்டியிருக்கும். அப்படித்தான் இதற்கு முன்னரும் சில ஆவணங்கள் நாட்டுக்கு வெளியில் இருந்து தொகுக்கப்பட்டன. அவ்வாறு நாட்டுக்கு வெளியே இருந்து தகவல்களைத் தொகுக்கும் பொழுது அதுவிடயத்தில் புலம்பெயர் தமிழ் சமூகம்தான் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கும். இதற்குமுன் தொகுக்கப்பட்ட ஆவணங்களுக்காகவும் புலம் பெயர்ந்த தமிழர்களே அதிகம் உழைத்தனர். எனவே புலம் பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தின் ஒத்துழைப்பின்றி அந்தப் பொறிமுறையை முன்னெடுக்க முடியாது. இதை சரியாக ஊகித்த காரணத்தால்தான் இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட கையோடு சில நகர்வுகளை முன்னெடுத்திருக்கிறது.

புலம்பெயர்ந்த தமிழ்தரப்பில் உள்ள சில அமைப்புகளையும் தனி நபர்களையும் பட்டியலிட்டு தடை செய்திருக்கிறது இப்பட்டியலில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்கள் பல ஏற்கனவே தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து 2015இல் தடை நீக்கபட்டவை என்று கூறப்படுகிறது. இதில் தற்பொழுது பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 27 பேரின் பெயர்களும் உண்டு. தடை செய்யப்பட்ட உலகத்தமிழர் பேரவையின் தலைவரான கத்தோலிக்க மதகுரு இப்பொழுது யாழ்ப்பாணத்தில் வசிக்கிறார். அரசியல் மற்றும் திருச்சபை நடவடிக்கைகளிலிருந்து பெருமளவுக்கு ஓய்வு பெற்றுவிட்ட அவரை யாழ்ப்பாணத்தின் சாலைகளில் சைக்கிளில் திரியக் காணலாம்.

கடந்த மைத்ரி-ரணில் அரசாங்கத்தில் ஒரு தொகுதி புலம்பெயர்ந்த அமைப்புக்கள் மற்றும் நபர்கள் மீதான தடைகள் அகற்றப்பட்டன. இவ்வாறு தடை நீக்கப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை 30/1ஐநா தீர்மானத்துக்கு ஆதரவானவை என்றும் ஒரு அவதானிப்பு உண்டு. இதன் மூலம் புலம்பெயர்ந்த தமிழர்களை பிரித்தாளமுடியும் அதோடு அவர்களை தாயகத்துக்கு வர அனுமதித்து இங்குள்ள கள யதார்த்தத்தோடு தொடர்புற வைப்பதன்மூலம் நாட்டுக்கு வெளியே பிரிவேக்கத்தோடு அவர்கள் முன்னெடுக்கும் அரசியலின் தீவிரத்தை தணிக்கலாம் என்றும் மேற்கு நாடுகளும் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமும் சிந்தித்தன.

அதைத்தான் கஜேந்திரகுமார் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் சில அமைப்புகளின் பெயர்களை குறிப்பிட்டு இந்த அமைப்புக்கள் இலங்கை அரசாங்கத்தின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக் கொள்பவை என்றும் சுட்டிக் காட்டினார்.

இந்த அமைப்புகளில் சில இம்முறையும் ஜெனிவா தீர்மானத்தை உருவாக்க கருக்குழு நாடுகளோடு சேர்ந்து உழைத்திருக்கின்றன என்பதைத்தான் அவை நடத்திய பத்திரிகையாளர் மாநாடுகள் வெளிப்படுத்துகின்றன. ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின் மேற்படி அமைப்புகள் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் தீர்மானத்தை ஒரு வெற்றியாக காட்டுவதும் அதிலுள்ள சில விடயங்களை முக்கிய முன்னேற்றங்களாக காட்டுவதையும் காணமுடிகிறது. 13வது திருத்தம்; வடக்கு கிழக்கில் மாகாணசபை தேர்தல்; தீர்மானத்தில் தமிழ் என்ற வார்த்தை இணைக்கப்பட்டமை; சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு பொறிமுறை போன்றவையே அவர்கள் சுட்டிக்காட்டும் முன்னேற்றங்கள்  ஆகும்.

இவ்வாறு புதிய ஜெனிவா தீர்மானம் தொடர்பாக பிரித்தானியாவையும் கனடாவையும் மையமாகக் கொண்டியங்கும் தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள்ள கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாக தெரிகிறது. புதிய ஜெனிவா தீர்மானத்தை உருவாக்கியதில் மேற்படி அமைப்புகளுக்கும் ஏதோ ஒரு விகிதமளவிற்கு பங்களிப்பு உண்டு. இலங்கை அரசாங்கம் அவ்வாறு கருதுவதால்தான் ஜெனிவாத் தீர்மானத்துக்கு எதிரான தனது முதல் நகர்வை மேற்படி அமைப்புகளுக்கு எதிராக எடுத்திருக்கிறதா?

ஆனால் இங்கேயுள்ள முக்கியமான கேள்வி என்னவென்றால் தமிழ் நோக்கு நிலையிலிருந்து பலவீனமான ஒரு தீர்மானத்தை அல்லது தமிழ் மக்கள் தங்களுக்கு ஒரு பெருவெற்றி என்று கருதமுடியாத ஒரு தீர்மானத்தை கடுமையான தீர்மானமாக எடுத்துக்கொண்டு அதற்கு எதிராக அரசாங்கம் கடுமையாக எதிர்வினை ஆற்றியுள்ளதா? என்பதுதான்.

இது தம்மை பெரிய அளவில் பாதிக்காது என்று அவ்வமைப்புக்கள் கூறுகின்றன. உண்மைதான். இத்தடை அவர்களை நேரடியாக பாதிக்காது. .ஆனால் புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்தில் வாழும் தமிழ்மக்களுக்கும் இடையிலான இடையூட்டத்தை பாதிக்கும். புலம்பெயர்ந்த தமிழ்த் தரப்பிலிருந்து தாயகத்திற்கு வரக்கூடிய உதவிகளையும் இரண்டு தரப்புக்கும் இடையிலான தொடர்புகளையும் அரசாங்கம் தனக்கு வசதியான விதத்தில் சட்டவிரோதமாக காட்டி தாயகத்தில் இருக்கும் செயற்பாட்டாளர்களை தூக்கி உள்ளேபோட இது உதவக்கூடும். எனவே இதன் உடனடிப் பாதிப்பு தாயகத்தில் வாழும் செயற்பாட்டாளர்களுக்குத்தான். இப்படிப்பார்த்தால் அரசாங்கம் ஐநா தீர்மானத்துக்கு எதிரான தனது முதல் நகர்வின்மூலம் தாயகத்திற்கும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கும் இடையிலான இடையூடாட்டத்தை குறைக்க  எத்தனிக்கிறது என்று தெரிகிறது.

இது விடயத்தில் புலம்பெயர்ந்த தமிழ்த்தரப்பை கையாண்டு தனக்கு வசதியான ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்த மேற்கு நாடுகளுக்கு ஒரு பொறுப்பு உண்டு. ஐநா தீர்மானத்துக்கு எதிரான முதல் நகர்வு எனப்படுவது புலம்பெயர்ந்த தமிழ் தரப்புக்கு மட்டும் எதிரானது அல்ல தர்க்கபூர்வ விளைவுகளைக் கருதிக்கூறின் தீர்மானத்தைக் கொண்டு வந்த கருக்குழு நாடுகளுக்கும் எதிரானதுதான். எனவே இதுவிடயத்தில் மேற்கு நாடுகளுக்கு ஒரு பொறுப்பு உண்டு, தீர்மானத்தின் விளைவு அரசாங்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ இல்லையோ உடனடிக்கு தமிழ்மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனை அரசாங்கம் ஐநாவுக்கும் கருக்குழு நாடுகளுக்கும் உணர்த்தியிருக்கிறது.

அதேசமயம் இதுவிடயத்தில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புகளுக்கும் ஒரு பொறுப்பு உண்டு. இதை நான் எனது கட்டுரைகளில் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறேன். டயஸ்போறாவுக்கும் தாயகத்துக்கும்  இடையே ஏற்றுக்கொள்ளத்தக்க சேர்ந்தியங்கும் தளங்களையும் வழிமுறைகளையும் டயஸ்போறா உருவாக்க வேண்டும். ஒப்பீட்டளவில் அதிகரித்த ஜனநாயகச் சூழலைக்கொண்ட நாடுகளில் வசிக்கும்  அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும்  தூக்கும் கொடிகளும் ,சின்னங்களும் தாயகத்திலுள்ள செயற்பாட்டாளர்களோடு அவர்கள் உறவுகளை வைத்துக் கொள்வதற்கு தடையாக இருக்கக்கூடாது. இது விடயத்தில் உலகஅளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிவில்சமூக இடையூடாட்டத் தளங்களை உருவாக்க வேண்டும். இது மிக அவசியம். புலம்பெயர்ந்த தமிழர்களுக்கும் தாயகத்துக்கும் இடையிலான உறவுகளைக் கட்டுப்படுத்தினால் நீண்ட எதிர்காலத்தில் தமிழ்த் தேசியஅரசியலின் ரத்தச் சுற்றோட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று அராங்கம் நம்புகிறது.

 

 

http://www.nillanthan.com/4942/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.