Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியின் எதிர்காலம் – ஆர். அபிலாஷ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடியின் எதிர்காலம் – ஆர். அபிலாஷ்

188820959_231830234941485_29117963713480

எங்கள் பக்கத்து தெருவில் எங்களை ஒட்டின வீட்டில் இருப்பவர் ஒரு மார்வாரி.  பால்கனியில் இருந்து பார்த்தாலே அவரது வீடு தெரியும். அவர் சிறிய அளவிலான வணிகர். ராஜஸ்தானை சேர்ந்தவர். தீவிர மோடி பக்தர். கடந்த ஆண்டு கொரோனாவை விரட்டும் முயற்சிகளில் ஒன்றாக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்பது மணிக்கு அந்த தெருவே விளக்கணைத்து அகல்விளக்குகள், மெழுகுவர்த்திகள் ஏற்றியது. தட்டுகளால் ஓசையெழுப்பி கோ கொரோனா என ஆர்ப்பரித்தது. எங்கள் வீட்டில் மட்டுமே அந்த திருப்பணியை யாரும் செய்யவில்லை. அப்போது அந்த நபர் என்னிடம் சிநேகமாக கடிந்து கொண்டார். “நீங்கள் ஏன் மெழுகுவர்த்தி கூட ஏற்றவில்லை?” நான் பதிலளிக்காமல் புன்னகைத்து விலகிக் கொண்டேன். இந்த வருடம் இரண்டாவது அலையின் போது ஊரில் அவருடைய உறவினர்களே நோய்த்தொற்றில் மடிந்து விட்டார்கள். அவருக்கும் மோடி மீதிருந்த நம்பிக்கை வெகுவாக குறைந்து விட்டது. தில்லியில் 16,000 கோடிக்கு மோடி மாளிகை கட்டுவது பற்றி பேசிக் கொண்டிருந்த போது சோர்வாக “அடுத்த தேர்தலில் மோடி ஜெயிக்க மாட்டார்” என்றார். எனக்கு வியப்பாக இருந்தது – எவ்வளவு சுலபத்தில் இவர்கள் ஒரு தலைவரை கைவிட்டு விடுகிறார்கள்? இது போல பல தீவிர ஆதரவாளர்கள் மோடி மீதான பற்றுதலை குறைத்துக் கொண்டு பாஜக தலைமையில் மாற்றத்தை ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் எனக் கூறுவதை, ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரர்களே மோடியை சமூகவலைதளங்களில் கண்டிப்பதை காண்கிறேன். ஆனால் இந்த சூழலிலும் மோடி மீது நம்பிக்கை இழக்காதவர்கள் என்னைப் போன்ற எதிர்ப்பாளர்கள் தாம் என நினைக்கிறேன். ஏனென சொல்கிறேன்:

1) இப்போதைய சூழலில் மோடியின் பிம்பம் சற்று சரிந்திருந்தாலும் அவருடைய இந்து காவலர், பிரம்மச்சாரி,காவியணியாத துறவி பிம்பம் அவருக்கு உதவுகிறது. அவரிடத்தில் வேறு யார் இருந்தாலும் இவ்வளவு காலம் தாக்குப் பிடித்திருக்க மாட்டார்கள். அவர் கெட்டவர், சுயநலமி என சுலபத்தில் சொல்லி விட முடியாது. அத்தகைய விமர்சனம் அவர் மீது ஒட்டாது. அது அவருடைய தனித்திறமை அல்ல – எந்த சாமியார் பிம்பம் கொண்டவர்கள் மீதும் புகார்கள் ஒட்டாது. இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும். நீங்கள் கிறித்துவர், இஸ்லாமியர் ஆனாலும் யோசித்துப் பாருங்கள் – இதுவரை பக்தர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஒரு சாமியார் உங்கள் சமூகத்தில் உண்டா?

18modi1-mobileMasterAt3x-300x300.jpg

2) மோடி ஏற்கனவே பல சரிவுகளை தன் அரசியல் வாழ்வில் சந்தித்திருக்கிறார். அரை நூற்றாண்டுக்கு மேலாக நடைமுறை அரசியலில் இருக்கும் அவருக்கு காத்திருக்க தெரியும். சரியான வேளையில் தன்னை முன்வைக்கத் தெரியும். மக்கள் மனப்போக்கை வளைக்கத் தெரியும். ஆறே மாதங்களில் தன் பிம்பத்தை மீளுவாக்கத் தெரியும். 2002இல் மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவர் மீது கடுமையான விமர்சனம் மத்திய அரசால் வைக்கப்பட்டது. ஊடகங்கள் அவரை வெறுத்தொதிக்கின. சர்வதேச அரங்கிலும் மதிப்பிழந்த அவருக்கு அமெரிக்கா நுழைவு மறுக்கப்பட்டது. ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் ஒரு மாற்று பிரச்சாரம் மூலம் அவர் இதே ஊடகங்களில் புது அவதாரம் எடுத்தார். இந்தியாவே குஜராத்தை தூக்கிக் கொண்டாடியது. பிரதமர் ஆன பின் பணமதிப்பிழப்பு எனும் மக்கள் முதுகெலும்பை உடைத்தார் மோடி. அந்த விசயத்தையும் அவரால் தேர்தலில் தனக்கு சாதகமாக மாற்ற முடிந்தது. 2019இல் ராணுவ வீரர்கள் தீவிரவாத தாக்குலில் கொல்லப்பட்டதை தன் தேர்தல் வெற்றிக்கான பிரதான அஸ்திரமாக்கினார். CAA, விவசாய சட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்களாலும் அவரை பெரிதாக அசைக்க முடியவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால் விளைவு தலைகீழாக இருக்கும்; அவை அகற்ற முடியாத அவப்பெயர்களாக ஊடகங்களால் பேசப்பட்டிருக்கும். இந்த கொரோனா மரண அலை கூட மத்திய வர்க்கத்தை நேரடியாக தாக்குவதாலே அவர்கள் சலனப்படுகிறார்கள். ஆனால் இப்போதைய இந்த நெருக்கடியை கூட தனக்கு சாதகமாக மாற்றி மோடி ஒரு தந்திரம் வைத்திருப்பார் என நினைக்கிறேன்.

3) மோடி தான் நினைத்ததை சாதிக்க காங்கிரஸை விட நூறு மடங்கு அதிக பணத்தை அவருக்கு வழங்க (கார்ப்பரேட்) ஆதரவு சக்திகள் உள்ளன. தேசிய ஊடகங்கள் எப்போதும் அவரது காலடியில். பாலிவுட் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் அவரைப் போற்றி பேச தயார் நிலையில் எப்போதும் இருக்கிறார்கள். 2023இல் நிச்சயமாக போர் வந்தால் அவரை நாயகனாக சித்தரித்து சில படங்களை அவர்கள் எடுப்பார்கள் என்பது நிச்சயம். ராணுவம் மோடியையே தமது தலைமை தளபதியாக கருதுகிறது. பெரும்பாலான நீதிபதிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் அவருடைய ஆணைக்கு காத்திருக்கிறார்கள். டிவிட்டர், வாட்ஸாப்பில் பல லட்சம் டுரோல்கள், ஆதரவாளர்கள் அவருக்காக வேலை செய்கிறார்கள். பொய்ச் செய்திகளை ஓயாமல் பரப்புகிறார்கள். இத்தனையும் மீறி அவரை முறியடிக்க ஒரு மிகக் கொடூரமான கொரோனா அலை 2023இல் வந்து ஹிந்தி பெல்டை அள்ளிக் கொண்டு போனால் தான் உண்டு. ஆனால் ஒரு பெருந்தொற்று அப்படி சரியான டைமிங்கில் வந்து இவ்வளவு ஆயுதங்கள் ஏந்திய ஒரு மிகப்பிரபல தலைவரை முறியடித்ததாக வரலாறு இல்லை.

4) மாறாக, மூன்றாம் கொரோனா அலை முடிந்த பின்னர் மோடி தில்லியின் செண்டிரல் விஸ்டா கட்டமைப்புகளை காட்டி விளம்பரப்படுத்தி இந்தியா மேலெழுந்து வெற்றி கண்டு விட்டது என ஒரு மகத்தான தோற்றத்தை ஏற்படுத்துவார். அதற்கு அடுத்து, ராமர் கோயில் திறக்கப்பட்டு நாடெங்கும் கொண்டாட்டங்கள். அதன் பிறகு பாகிஸ்தானுடன் ஒரு போர். (இஸ்ரேலிலும் ஆளும் தலைமை இதைத்தானே இப்போது செய்கிறது.) இந்த மூன்றாவது மாஸ்டர் ஸ்டிரைக் மூலம் மோடி 2024 தேர்தல் நிச்சயமாக வெல்வார். ஆனால் anti-incumbency காரணமாக அவருக்கு 2019 போல நிகரற்ற வெற்றி கிடைக்காது. 2024க்குப் பிறகு சற்று பலவீனப்பட்ட ஒரு அரசாக அவருடையது இருக்கும். ஆனால் வேறு சில மாஸ்டர் ஸ்டிரைக்குகள் மூலம் அவர் 2029இல் மீண்டும் ஒரு பிரமாண்ட வெற்றியைப் பெறலாம் அல்லது காணாமலும் போகலாம் (ஒரு கட்டத்தில் மக்களுக்கு பாகிஸ்தானுடனான போர்கள் அலுத்துப் போகும்; சீனாவையும் சும்மா வம்புக்கிழுக்க முடியாது.) அப்போது பாஜக அடுத்த கட்ட தலைவர்களாக துடிப்பான இளம் தலைவர்களை அறிமுகப்படுத்தலாம். இன்னொரு திட்டம் – ஆதித்யநாத்தின் இடத்தில் – இந்து மதத்தின் பிரதிநிதியாக அடையாளம் காணத்தக்க கார்ப்பரேட் சாமியார் ஒருவரை கொண்டு வருவது. அத்தகைய ஒருவரை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி பிரச்சாரம் செய்வது எளிது. யாராலும் ஒரு சாமியாரை விமர்சிக்க குற்றம் சாட்ட முடியாது. எந்த குற்றச்சாட்டும் அவர்கள் மீது ஒட்டாது. ஒரே சிக்கல் இப்போதைய பாஜக சார்பு கார்ப்பரேட் சாமியார்கள் (ஜக்கி, ஶ்ரீஶ்ரீ) தெற்கத்தியர்கள் என்பது.

  5) சரி ஒருவேளை மோடிக்கு எதிரான அருப்தி அலை வலுப்பெற்றாலும் அதை பயன்படுத்தி அணிதிரண்டு அவரை எதிர்க்க தேசிய அளவில் யாருமே இல்லையே!

 6) மோடியின் இடத்தில் யோகி ஆதித்யநாத்தை கொண்டு வரலாம் என்றால் அடுத்த வருட உ.பி சட்டமன்ற தேர்தலில் அவர் தோல்வியை சந்திக்கவே வாய்ப்பதிகம். ஆதித்யநாத்தை விட்டால் மோடிக்கு ஒரு மாற்று பாஜகவுக்குள்ளே இல்லை.

 7) சரி, மே.வங்க (கூடவே தமிழக, கேரள) தேர்தல் முடிவுகள் மோடி-ஷாவின் வியூகங்களை முறியடிக்க முடியும் என நம்பிக்கை அளிக்கவில்லையா? ஆம், ஆனால் ஹிந்தி பெல்டில் உள்ள நான்கு மாநிலங்களில் பாஜக முறியடிக்கப்படாவிட்டால் இந்தியாவை ஒரு கட்சியோ கூட்டணியோ ஆள முடியாது. பாஜக அங்கு மதிப்பிழக்கும் வரை அவர்களுக்கு பிரச்சனையே இல்லை.

discover-300x150.jpg

😎 பிரசாந்த் கிஷோர் தனது பேட்டியொன்றில் மோடி-ஷா கூட்டணியை முறியடிப்பது சாத்தியம் தான், ஆனால்அதற்கு ஒரு மாற்றுத்தலைமை எதிர்க்கட்சியிடம் தோன்றி, அவர்களால் ஒரு மாற்றுக் கதையாடலை முனைக்க முடிய வேண்டும் என்கிறார். அந்த மாதிரியான ஒரு விசயம் எதிர்பாராமல் தேசிய அளவில் உருக்கொள்ளலாம் என்று அவர் கூறுகிறார். அப்படி ஒன்று நடக்கும் என நாம் அனுமானம் செய்யலாம். ஆனால் அதற்கு ஒரு தெளிவான செயல்திட்டம் யாரிடமும் இப்போதைக்கு இல்லை. கொரோனாவை எதிர்கொள்வதிலே அடுத்த ஒன்றரை, இரு வருடங்கள் போய் விடும் எனும் போது அடுத்த நாடாளுமன்ற தேர்தலின் போது, எதிர்க்கட்சிகள் காங்கிரஸின் கீழ் அணி திரண்டு பிரச்சாரம் செய்ய அவகாசம் இருக்குமா? இப்போது காங்கிரஸுக்கு அதிகாரபூர்வ தலைவர் கூட இல்லையே.

  9) உலக வரலாற்றில் முசோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரத் தலைவர்கள், இனவாதத்தை தூண்டி மக்களிடம் செல்வாக்குடன் இருந்தவர்கள் எந்த கட்டத்திலும் தம் அரசியல் எதிரிகளால் முறியடிக்கப்படும் அளவுக்கு பலவீனமாகவில்லை என்பதை கவனிக்க வேண்டும். இருவருடைய வீழ்ச்சிக்கும் இரண்டாம் உலகப்போரில் இத்தாலியும் ஜெர்மனியும் பெற்ற தோல்விகளே காரணமாயினர். அதாவது வெளியில் உள்ள சக்திகளின் குறுக்கீடே அவர்களை அகற்ற உதவியது, மக்களின் ஆதரவை அவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரட்டி அல்ல என்பதை கவனிக்க வேண்டும். பொதுவாக வலுவாக தம்மை காட்டிக் கொள்கிறவர்கள், அதிகாரத்தை கட்டற்று செலுத்துகிறவர்கள் மீது ஒரு வசீகரம், ஈர்ப்பு, பிடிப்பு மக்களுக்கு ஏற்படும். வன்முறையாளனான காதலனை, கணவனை உள்ளூர நேசிக்கும் பெண்கள், தம்மை கடத்தி சிறைவைத்தவரை விரும்பி பின் தொடரும் கடத்தப்பவர்களின் உளவியலைப் போன்றது இது. எந்தளவுக்கு அதிகமாக இந்த சர்வாதிகாரிகள் மக்களின் வாழ்வை உருக்குலைத்து, அதனால் தமக்கு தனிப்பட்ட அளவில் லாபமில்லை எனக் காட்டிக் கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் மக்கள் மத்தியில் பிரசித்தமாக இருப்பார்கள். உதாரணத்திற்கு ஒரு கொடுங்கோலரான அப்பாவை, ஆசிரியரை எடுத்துக் கொள்ளுங்கள். அவரை வெறுத்தாலும் தன்னிச்சையாக மறுப்பின்றி அவரைப் பின்பற்றவே நாம் விழைவோம். நம் சமூகத்திற்கு மொத்தமாக போலீஸ் மீது பயமும் வெறுப்பும் உள்ளது. ஆனால் “இது தாண்டா போலீஸில்“ இருந்து “சிங்கம்” வரை நாம் சினிமாவில் சட்டத்தை மதிக்காமல் வன்முறையுடன் நடந்து கொள்ளும் போலீஸ் அதிகாரிகளை ரசித்து கொண்டாடுகிறோம். மாபியா தலைவர்களாக, டான்களாக ஹீரோக்கள் நடித்தாலும் அது பெரும் வெற்றி பெறுகிறது. இந்த உளவியல் தான் சில நேரம் தேர்தல் அரசியலிலும் செயல்படுகிறது. மோடியும் ஒரு “சிங்கம்” சூரியா, பாட்ஷா தான். மக்கள் அவரை ஒரு பக்கம் வெறுத்தபடியே நேசிப்பார்கள். அது அதிகாரத்தின் மீதான ஈர்ப்பு. சர்வாதிகார தலைவர்கள் மக்கள் விரும்புகிற மிதமிஞ்சிய அதிகாரத்தை அவர்களுடைய சார்பில் தாம் சுமப்பதாக காட்டுவார்கள் – செண்டிரல் விஸ்டா கட்டிடங்களை பல ஆயிரம் கோடிகளுக்கு மோடி இப்போதும் கட்டுவது, ராமர் கோயிலைத் திறந்து தன்னை ராமரின் அவதாரமாக முன்னிறுத்தப் போவது, ராணுவ சீருடையில் பாகிஸ்தான் எல்லையில் நின்று அவர் ஆர்ப்பரிக்கப் போவதெல்லாம் இந்த பிம்பத்தை வலுப்படுத்தி மக்கள் மனதை வெல்லத் தான். தம்மால் செய்ய முடியாததை – வெளிப்படையாக ஆதரிக்க முடியாததை – அவர் செய்கிறார் என்பது பெரும்பான்மை இந்துக்களுக்கு கிளுகிளுப்பூட்டி உற்சாகப்படும். சர்வாதிகாரத்தின் வெற்றி சூத்திரம் அடிப்படையில் வன்முறையை நியாயப்படுத்தும் சினிமாவின் சூத்திரம் தான். ஹிட்லர், முசோலினியும் வரலாற்றின் கரங்கள் அவர்களை நசுக்கும் வரை இந்த பாதையில் தான் “சிங்கம் சிங்கம்” என வெற்றிகரமாக பயணித்தார்கள்.

10) மோடியின் பெரிய பலவீனம் அவருடைய கருணையற்ற மனம் என பிரசாந்த் கிஷோர் சொல்லுகிறார். இது ஒரு அற்புதமான அவதானிப்பு. இந்த கொரோனா கூட்டு மரணங்களின் காலகட்டத்தில் அவரது இந்த கருணையின்மையே அம்பலப்படுகிறது. இதைக் கொண்டு தான் அவர் வீழ்த்த்தப்பட வேண்டும். ஆனால் இதற்கு மாற்றாக கருணை மிக்க ஒரு தலைமையை எதிரணியில் முன்வைக்க முடியுமா? தெரியவில்லை. இந்த கொரோனா அழிவுகளின் போதும் சில டிவீட்டுகளைப் போடுவதைத் தவிர தேசிய அளவில் மக்களுக்கு ஒரு மாற்று கதையாடலை வழங்கி செயல்பட காங்கிரஸ் துணியவில்லையே. அதாவது எடப்பாடியார் ஆட்சியில் இருக்கும் போதே ஸ்டாலின் முழுமூச்சாக பிரச்சார பயணங்களில் இருந்தார். மக்களை நேரில் சந்தித்துக் கொண்டே இருந்தார். ஒ.பி.எஸ், இ.பி.எஸ் முதல்வர்களான போது “ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே” என எதிர்க்கட்சிகள் நம்பிக்கையுடன் காத்திருந்தார்கள். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் எதிர்க்கட்சிகளிடம் ஒரு சிறு சலனம் கூட இல்லை. மாறாக, தேசிய அரசியல் களத்தில் கொரோனா கிருமி தான் மோடிக்கு எதிரான ‘பிரச்சாரப் பயணத்தில்’ இருக்கிறது. இந்த போக்கு தொடர்ந்தால் 2024இல் (கோவை மக்கள் கோயில் கட்டியது போல) நாம் கொரோனா கிருமியை தான் மோடியின் இடத்தில் பிரதமராக்க வேண்டும். அந்த கிருமிக்கு உள்ள போராட்ட குணம் கூட தேசிய எதிர்க்கட்சிக்கு இல்லை. ஆம், ராகுல் கருணையான, முற்போக்கான தலைவராகவே தெரிகிறார். ஆனால் அவர் அதிகாரபூர்வமாக தலைமைப் பொறுப்பை ஏற்று களத்தில் தன்னை முன்வைக்காத, மாநில கூட்டணி தலைவர்களுடன் தொடர்ந்து உரையாடி அணியை வலுவாக்கும் தொலைநோக்கு திட்டங்கள் இல்லாத ஒருவராக இருக்கும் வரை மக்கள் கருணையற்ற தலைவரே மேல் என்றே நினைப்பார்கள்.

Modi-India-Prime-Minister-300x169.jpg

 

11) பொதுவாக, சில வருடங்களுக்கு முன்பே நாடாளுமன்ற தேர்தலில் யார் வெல்லப்போகிறார்கள் என்பதை கருதி கார்ப்பரேட்டுகள் ஒரு கட்சியை முன்கூட்டியே தேர்வு செய்து முதலீடு செய்வார்கள். அப்படித்தான் 2012 முதலே பாஜகவை அவர்கள் தேர்ந்தெடுத்து மோடிக்காக முதலீடு செய்து கடும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். ஆனால் அதன் பிறகு பாஜக, ஒரு பக்கம், தன்னையே கார்ப்பரேட்டாக (அதானிகள்) மாற்றிக் கொண்டது. இன்னொரு பக்கம், என்னதான் பொருளாதாரம் நொடிந்து மக்கள் பிச்சையெடுக்கும் நிலைக்கு சென்றாலும் கார்ப்பரேட் முதலாளிகள் பெரும்பணக்காரர்களாக மாறும் வண்ணம் progressive வரியை குறைத்து, மத்திய, வறிய மக்கள் மீதான மறைமுக வரியை அதிகப்படுத்தியது. இதன் விளைவாக 2020இல் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து நாடே முடங்கிக் கிடந்த போது 40 இந்திய தொழிலதிபர்கள் பில்லியனர்கள் ஆனார்கள். அம்பானியின் சொத்துக்கள் 24% வளர்ந்தன. அதானியின் சொத்துக்கள் இரட்டிப்பாக வளர்ந்து 32 பில்லியன் அமெரிக்க டாலர்களாகியது. அவர் உலக அளவிலான பணக்காரர்களில் 48வது இடத்தைப் பிடித்தார். ஆக மோடி ஆட்சியில் மக்கள் அதிருப்தியை இருந்தாலும் கார்ப்பரேட்டுகள் மிக திருப்தியாகவே இருப்பார்கள். கொரோனா உச்சத்தில் இருந்த கடந்த வருடம் முதலே மோடியின் அரசு இவ்விசயத்தில் தெளிவாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. 2024 தேர்தலில் கார்ப்பரேட்டுகள் திரண்டு காங்கிரஸுக்கு முதலீடு செய்ய முன்வராத நிலையில் எப்படி அக்கட்சி தேர்தலில் போட்டியிட்டு பாஜகவின் ஈடற்ற பணத்துக்கு, கட்டமைப்பு பலத்துக்கு ஈடு கொடுக்க முடியும்?

இவ்வளவு தடைகளையும் கடந்து தான் மோடி அடுத்த தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதனால் தான் அவரது ஆதரவாளர்களே நம்பிக்கை இழந்தாலும் நான் அவர் மீது “நம்பிக்கை” இழக்க மாட்டேன். பாஜகவை முறியடிப்பதற்கான ஒரு நெடிய போராட்டம் முற்போக்காளர்கள் முன் இருக்கிறது. அது தானே நிகழும் என அவர்கள் கனவு காண்பது ஒரு மேஜிக் வித்தைக்காரன் பாதி ஆட்டத்தில் இருக்கும் போது “இவனால் என் கண்ணைக் கட்டி என்ன செய்து விட முடியும்?” என அசட்டையாக இருப்பதற்கு சமம். மேஜிக் ஷோவின் போது பார்வையாளர்கள் கவனம் சிதறும் போதே அதிசயம் நடக்கும். அது 2023-24ஆக இருக்கலாம். இப்போதைக்கு, சர்வாதிகாரம் தானே சோர்ந்து விழும், தேர்தலின் போது மக்கள் தாமே விழிப்புணர்வு கொள்வார்கள் என கனவு காணாமல் இருப்போம். விழிப்பாக இருப்போம். மக்களையும் விழிக்க வைப்போம்.

 

 

 

https://uyirmmai.com/news/politics/future-of-modi-a-analysis-by-r-abilash/

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடைய வேண்டுமானால் மோடி அமித்ஷா போன்ற ஈவிரக்கமற்ற கொள்கையாளர்களே வேண்டும். அவர்கள்தான் பல்வேறு மத நம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமையின்மையையும், சகிப்பின்மையையும், வன்முறையையும் ஏற்படுத்த முடியும். மானிலங்களின் அதிகாரங்களில் கைவைப்பதன் மூலமாக மத்திய மாநில அரசுகளிடையே இணக்கமின்மையையும் அதிருப்தியையும் விரிசலையும் உண்டாக்குவர். இந்தியா பலவீனமடையும். மாநிலங்களில் அமைதியின்மையும் கலவரங்களும் ஏற்படும். இதனை கட்டுப்படுத்தவேறு வேறு மாநிலங்களின் பெயர்களில் உள்ள இராணுவப் படையணிகளை களத்தில் இறக்குவர். இது மேலும் மேலும் மக்களிடையே வெறுப்பைத் தூண்டும். .....

இந்தியா சிறுகச் சிறுக உள்ளூர உக்கி இருதியில்  உடைவதற்கு இதைவிடச் சிறந்த வழி வேறென்ன..?

எனவே 

மோடி வாழ்க. பாரத மாதாஜி வாழ்க. ஜெய் ஹிந். 

😀

 

  • கருத்துக்கள உறவுகள்
On 25/5/2021 at 11:24, Kapithan said:

இந்தியா உடைய வேண்டுமானால் மோடி அமித்ஷா போன்ற ஈவிரக்கமற்ற கொள்கையாளர்களே வேண்டும். அவர்கள்தான் பல்வேறு மத நம்பிக்கையாளர்களிடையே ஒற்றுமையின்மையையும், சகிப்பின்மையையும், வன்முறையையும் ஏற்படுத்த முடியும். மானிலங்களின் அதிகாரங்களில் கைவைப்பதன் மூலமாக மத்திய மாநில அரசுகளிடையே இணக்கமின்மையையும் அதிருப்தியையும் விரிசலையும் உண்டாக்குவர். இந்தியா பலவீனமடையும். மாநிலங்களில் அமைதியின்மையும் கலவரங்களும் ஏற்படும். இதனை கட்டுப்படுத்தவேறு வேறு மாநிலங்களின் பெயர்களில் உள்ள இராணுவப் படையணிகளை களத்தில் இறக்குவர். இது மேலும் மேலும் மக்களிடையே வெறுப்பைத் தூண்டும். .....

இந்தியா சிறுகச் சிறுக உள்ளூர உக்கி இருதியில்  உடைவதற்கு இதைவிடச் சிறந்த வழி வேறென்ன..?

எனவே 

மோடி வாழ்க. பாரத மாதாஜி வாழ்க. ஜெய் ஹிந். 

😀

 

மோடி தோற்பார் என்ற கவலையே உங்களுக்கு வேண்டாம்.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மாற்று தலைமை கூட இல்லை.

அப்புறம் எலக்சன் கிட்ட வர - விஜயகாந்த் ரேன்சுக்கு பாகிஸ்தான் பாடர்ல படம் ஒண்டு காட்டுவார்.

அதோட கோமிய கோஸ்டி சரண்டர்🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.