Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தெற்காசியாவின் மூன்றாவது பெரும்படை

Featured Replies

தெற்காசியாவின் மூன்றாவது பெரும்படை

-அருஸ் (வேல்ஸ்)-

இந்த மிலேனியத்தின் ஆரம்பத்தில் தென் ஆசியாவின் பெரும் சமர்க்களமாக இலங்கை மாறியிருந்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின்னரான இராணுவத்தின் பேரழிவு ஒன்று குறுகிய காலத்தில் இந்த சின்னஞ்சிறிய தீவில் நிகழப்போகின்றதோ என அனைத்துலகம் அங்கலாய்த்த வேளையில் நோர்வேயின் அனுசரணையுடன் போர் ஓய்வுக்கு வந்தது.

விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்தவும் படை நடவடிக்கைகளை நிறுத்தவும் சந்திரிகா குமாரதுங்க தலைமையிலான முந்தைய அரசாங்கம் சம்மதித்தது.

போரும் சமாதானமும் ஒருங்கே பயணிக்க முடியாது என்ற தத்துவமும், போரின் மூலம் சமாதானத்தை எட்டுதல் என்ற ஏமாற்றுத் தனங்களினதும் உண்மைத்தன்மையும் புரிய ஆரம்பித்தது.

படைவலுச் சமநிலையில் உருவான அமைதிச் சூழலை தக்கவைக்க வேண்டுமெனில் இரு தரப்பும் அரசியல் பொருளாதார மற்றும் இராஜதந்திர வழிகளில் சமமாக பேணப்பட வேண்டும் என்பது உலகத்தின் நியதி. ஆனால் இங்கு கடந்து போன ஐந்து வருடங்களில் அவை படிப்படியாக தவறவிடப்பட்டுள்ளன என்பதை விட வேண்டுமென்றே தவறவிடப்பட்டன என கூறுவதே பொருத்தமானது.

தவறவிட்டவர்கள் வேறு யாரும் அல்ல, நோர்வேயின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவு தரப்போவதாக கூறியவாறு உள்நுழைந்த இணைத்தலைமை நாடுகள் தான்.

எனினும் அவர்கள் உள்நுழைந்த நோக்கங்கள் தற்போது தாறுமாறாக குழம்பிப் போயுள்ள நிலையில் இரு தரப்பையும் எவ்வாறு மீண்டும் பேச்சுக்கு திரும்ப வைப்பது என்பது குறித்து கடந்த வாரம் ஒஸ்லோவில் கூடி ஆராய்ந்து உள்ளனர்.

ஒரு தரப்பை பலப்படுத்துவதன் மூலம் மறு தரப்பின் அபிலாஷைகளை மழுங்கடிக்கலாம் என எண்ணியவர்கள் தாம் விரித்த வலையில் தாமே இன்று சிக்கி விட்டனர். தற்போது மீண்டும் பேச்சுக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கடுமையாக ஆராய்ந்து வருகின்றனர். எத்த னையோ அரசுகளை தமது அழுத்தங்கள் மற்றும் படை நடவடிக்கைகள் மூலம் அமைதி வழிக்கு கொண்டு வந்த மேற்குலகத்தின் தற்போதைய ஆராய்வு நடவடிக்கைகள் ஒரு சிறந்த நாடகமாகவே தமிழ் மக்களால் நோக்கப்படுகின்றது.

இந்த அரசியல் நாடகங்களுக்கு அப்பால் மேற்குலகம் மற்றும் சில ஆசிய நாடுகளினால் கடந்த ஐந்து வருட காலத்தில் வழங்கப்பட்ட படைத்துறை ஆதரவுகள் இலங்கையை தென்னாசியாவில் மூன்றாவது பெரிய படைத்துறை நாடாக இன்று மாற்றியுள்ளது.

மூன்றாம் ஈழப்போர் முடியும் போது 95,000 இராணுவத்தினரை கொண்டிருந்த இலங்கை இராணுவம் போர் நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புக்களுடன் ஒரு லட்சத்தை தாண்டியிருந்தது. தற்போது கிழக்கில் அகலக்கால் வைக்கும் படை நடவடிக்கைகள் மற்றும் வடக்கை தக்க வைக்கும் உத்திகளுக்காக தனது படை பலத்தை கணிசமான அளவு உயர்த்த தலைப்பட்டுள்ளது அரசாங்கம்.

இராணுவத்தில் 25 வீதமும், கடற்படையில் 50 வீதமும், வான்படையில் 100 வீதமும், ஊர்காவல் படையில் ஏறத்தாழ 90 வீதமுமான படை அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டுள்ளது.

அதாவது முப்படையினருக்கும் 50,000 பேரை திரட்டும் அதே சமயம், ஊர்காவல் படையினருக்கு 18,000 பேரையும் திரட்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இராணுவம், கடற்படை, வான்படை, காவல்துறை, சிறப்பு அதிரடிப்படை, ஊர்காவற் படையினர் என படையினரின் மொத்த எண்ணிக்கை இந்த வருடம் 300,000ஐ தாண்டப்போகின்றது.

அரசின் இந்த படைச்சேர்ப்புக்கள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதும், போரில் காயப்படுபவர்கள், கொல்லப்படுவோர், தப்பி ஓடுவோர் (கடந்த 28 மாதங்களில் 10,000 க்கும் மேற்பட்டோர் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளதாக படைத்தரப்பு அண்மையில் தெரிவித்திருந்தது) போன்றவர்களால் ஏற்படும் வெற்றிடத்தையும் நிரப்பி மேலதிகமான அதிகரிப்புக்கு இது போதுமா என்பவை எல்லாம் ஒருபுறம் இருக்க. சின்னஞ்சிறிய தீவின் படை பலம் கட்டுக்கடங்காது ஊதிப் பெருக்கப் போகின்றது என்பது வெளிப்படை.

அதாவது, இதுவரை காலமும் உலகின் 101 முக்கிய நாடுகளின் இராணுவத் தொகை தரவுகளில் 35 ஆவது இடத்தைப்பிடித்திருந்த இலங்கை எதிர்காலத்தின் படை அதிகரிப்பு இலக்கை அடைந்துவிட்டால் அது 20 ஆவது இடத்தை பிடித்துவிடும் என கணிக்கப்படுகின்றது.

அதாவது, தற்போது 20 ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸையும் அது பின்னே தள்ளி விடும். செயற்றிறன் மிக்க துருப்புக்களின் (யுஉவiஎந வுசழழிள) எண்ணிக்கையில் இஸ்ரேல், ஜப்பான், பிரித்தானியா, இத்தாலி, சவூதி அரேபியா போன்ற நாடுகளை எல்லாம் விட இலங்கை முன்னணியில் திகழும் என்பதே தற்போதைய அரசின் படைச்சேர்ப்பு உரிய இலக்கை அடைந்தால் ஏற்படும் மாற்றம்.

தெற்காசியப் பிராந்திய சார்க் அமைப்பு நாடுகளை எடுத்துக் கொண்டால் இலங்கைப் படையினர் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தையும், படையினருக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள விகிதத்தில் முதலாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அதாவது 1000 மக்களுக்கு இலங்கை 9.10 துருப்பினரையும், இந்தியா 1.20 துருப்பினரையும், பாகிஸ்தான் 3.72 துருப்பினரையும், பங்களாதேஷ் 0.87 துருப்பினரையும், நேபாளம் 2.28 துருப்பினரையும் கொண்டுள்ளன.

தெற்காசியப் பிராந்தியத்தில் இலங்கை அரசின் பாதுகாப்புச் செலவும் மிக அதிகமானது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 4.1 வீதத்தை அது பாதுகாப்புக்கு செலவிட்டு வருகின்றது. ஏனைய முக்கிய தென் ஆசிய நாடுகளை நோக்கினால் இந்தியா 2.5 வீதமும், பாகிஸ்தான் 3.5 வீதமும் செலவிடுவது குறிப்பிடத்தக்கது.

எனினும் அரசின் இந்த பாதுகாப்புச் செலவு விகிதம் விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலை தொடர்ந்து 5.9 விகிதமாக அதிகரித்துள்ளதுடன் மேலதிக அதிகரிப்பும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் தற்போது மேற்கொள்ளப்படும் இலங்கையின் படை வலு அதிகரிப்பானது தனியே படையினரின் எண்ணிக்கை மற்றும் பாதுகாப்புச் செலவுகளை சார்ந்ததாக மட்டுமல்லாது, அதன் படைக்கலங்களின் தன்மையிலும் கடுமையான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

சாதாரண மோட்டர்கள் மற்றும் ஆட்லறிகளை பயன்படுத்திய இராணுவம், பல்குழல் உந்துகணை செலுத்திகளை பயன்படுத்தும் அதேசமயம் குறுந்தூர ஏவுகணைகள் குறித்தும் சிந்தித்து வருகின்றது. கடற்படையும் டோராக்களின் கடுமையான இழப்புக்களை தொடர்ந்து ஏவுகணைக் கப்பல்கள், உலங்குவானூர்திகளை காவும் கப்பல்கள், சண்டைப் படகுகளுக்கான அதிக தூரவீச்சுக் கொண்ட பீரங்கிகள் என தர முயர்த்தலில் ஈடுபட்டு வருகின்றது.

வான்படையின் வளர்ச்சி மிக அதிகமானது மூன்றாம் தலைமுறை தாக்குதல் விமானங்களில் இருந்து சடுதியாக மிகவும் அதிக விலையும், பெருமளவு பராமரிப்பு செலவும் மிக்க நான்காம் தலைமுறை விமானத்தின் பக்கம் அது சென்றுள்ளது.

மேலும் அவற்றிற்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் மிகவும் நவீனமானவை என்பவற்றுடன் அதிக விலையுமுடையவை. லேசர் மூலம் வழி நடத்தப்படும் குண்டுகள், ஏவுகணைகள், பதுங்கு குழிகளை ஊடுருவிச் செல்லும் குண்டுகள், முப்பரிமாண ராடார்கள், வானில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகள், தரையில் இருந்து வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகள் என கொள்வனவு செய்யப்படப்போகும் ஆயுதங்களின் பட்டியல் மிக நீளமானது. இவை தவிர தரைப்படைக்கு பாகிஸ்தானிடம் இருந்து மேலதிகமாக 40 டாங்கிகளை கொள்வனவு செய்யவும், இந்தியாவிடம் இருந்து கண்ணிவெடி எதிர்ப்பு கவச வாகனங்களையும் கொள்வனவு செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருந்த போதும் இலங்கையைப் பொறுத்த வரையில் ஆளணி, ஆயுதங்கள் என்பவற்றின் அதிகரிப்பு ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நிலையை அடைவதற்கே அதன் பொருளாதாரம் இடம் கொடுக்கும். எனவே தற்போது நடைபெற்று வரும் போரினால் கடுமையாக சிதைந்து போயுள்ள பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் இந்த படைபல அதிகரிப்புக்களை அரசு எவ்வாறு சீராக பேணப்போகின்றது என்பது பெரும் கேள்விக்குறியே.

அதாவது இத்தகைய படையினரின் அதிகரிப்பு மற்றும் ஆயுதங்களின் தெரிவுகள் எல்லாம் சிட்டுக்குருவியின் தலையில் பனங்காயை வைப்பது போன்றது. இவை தவிர பெருளாதாரத்தில் பலவீனமான நாடுகளின் படைத்துறை அதிகரிப்புக்கள் ஒரு போதும் சமச்சீர்த்தன்மையை அடைந்ததில்லை.

அண்மைய காலங்களில் உலகில் மிக வேக மாக இராணுவமயமாக்கப்பட்ட (ஆடைவையசளைநன உழரவெசல) நாடாக இலங்கை மாற்றமடைந்து வருகின்ற போதும் அது ஒரு சமச்சீரற்ற அதிகரிப்பாகவே காணப்படுகின்றது. ஏனெனில் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்புடன் ஒப்புநோக்கும் போது அவர்களின் ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மிகவும் குறைவானது.

உதாரணமாக இலங்கையை விட படையினரின் எண்ணிக்கையில் குறைவான பங்களாதேஷ் 200 தொடக்கம் 300 வரையிலான பல்வேறு வகையான டாங்கிகளையும், 125 இற்கும் மேற்பட்ட தாக்குதல் விமானங்களையும் கொண்டிருப்பதை குறிப்பிடலாம்.

அதே போலவே படையினரின் மொத்த எண்ணிக்கை தொடர்பாக ஆராயப்பட்ட 101 நாடுகளில் 20 ஆவது இடத்தை பிடிக்கப்போகும் இலங்கைக்கு கீழே உள்ள இஸ்ரேல், ஜப்பான், பிரித்தானியா, இத்தாலி, சவூதி அரேபியா போன்ற பெருமளவான நாடுகளின் படை பலமும் ஆயுத வளமும் ஒரளவேனும் சமச்சீராக இருப்பதை காணலாம்.

மரபுவழி சமர்க்களங்களில் விடுதலைப் புலிகளை எதிர்கொள்வதில் அரச படைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள் எல்லாம் இதன் அடிப்படையில் தான் தோன்றியிருந்தன.

அதாவது இலங்கைப்படையினர் மரபுவழிச் சமர்களை எதிர்கொள்ளக் கூடியதான ஒரு சீரான வளர்ச்சியை இதுவரை பெற்றிருந்ததில்லை. இந்த சமச்சீரற்ற படைவலு அதிகரிப்பும் பெரும் சமர்க்களங்களில் சந்திக்கப் போகும் நெருக்கடிகளை கடந்த கால சமர்களின் மூலம் ஓரளவு ஊகிக்க முடியும். இதனை சுருக்கமாக கூறின் களத்தின் தன்மையை விட அரசியல் தளத்தின் தாக்கம்தான் படையினரின் அதிகரிப்புக்கள், திட்டமிடல்களில் அதிகம் பங்கெடுத்து வருகின்றது.

எனவே, இந்த வருடத்தின் இறுதிக்குள் எட்டப்படப் போகும் சடுதியான பாரிய படை வளர்ச்சி தென் ஆசியப் பிராந்தியத்தில் இலங்கையை மூன்றாவது பெரும் படை கொண்ட நாடாக காண்பிக்குமே தவிர, போரிடும் தன்மையில் அதற்கு எத்தனையாவது இடம் என்பதை எதிர்வு கூற முடியாது.

ஆனால், இந்த படைபல அதிகரிப்புக்கு பக்க பலமாக இருந்தவர்கள் ஒன்றை மட்டும் உணரத் தவறிவிட்டனர். படைத்துறையில் சடுதியாக வளர்ச்சி கண்ட நாடுகள் எவையும் சமாதானம் நோக்கி திரும்பிப் பார்த்த வரலாறுகள் உலகில் இல்லை. எனவே தற்போதைய படைத்துறை அதிகரிப்புக்கள் போரில் மாற்றத்தை உண்டு பண்ணுமா இல்லையா என்பதை விட சமாதானத்தை கண்காணாத தூரத்திற்கு தள்ளியுள்ளது என்பது மட்டும் வெளிப்படை.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு (01.07.07)

http://www.tamilnaatham.com/

யானையை கட்டி தீனி போடுகிற விசயம் இது... நாளைக்கு மதம் பிடித்து அந்த பாகனையே அது கொலை செய்து விடும் சாத்தியம் அதிகம்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.