Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 8 - குரங்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 8 - குரங்கு

 
 
 
female%2Bgrey%2Blangur.jpgமுன்னுரை:
 
குரங்கு - என்று சொன்னவுடனே நாம் சாதாரணமாகப் பார்த்தாலும் நம்மை முறைத்துப் பார்த்தவாறு 'உர் உர்' என்று சத்தமிடுவதும் நம் கையில் இருக்கும் உணவுப் பொருட்களை எப்போது பிடுங்கிக் கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஓரிடத்தில் இல்லாமல் அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருப்பதுமான குறும்பு நிறைந்த கூனிய உடலுடைய உருவம் தான் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும். குரங்கு என்றாலே அதன் சேட்டைகளுக்குப் பஞ்சமில்லை. குழந்தைகளுக்குக் குரங்கைப் பார்த்துவிட்டால் போதும்; அதன் அருகில் செல்வதற்கு அஞ்சினாலும் அதன் செயல்பாடுகளைக் கண்டு சிரித்து மகிழ்வர். தமிழகத்தில் பரவலாகப் பல கோவில்களில் சுற்றுச்சுவர்களின் மேலும் மரங்களின் கிளைகளிலும் குரங்குகள் அமர்ந்திருப்பதைப் பார்க்கலாம். இன்றைய தமிழகத்தில் பல ஊர்களில் மிகப் பரவலாக ஒரேவகையான குரங்குகளையே பார்க்கமுடிகிறது. ஆனால் குரங்குகளில் பல வகைகள் உண்டு. பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் அழிந்துபோன குரங்கு வகைகள் பல. சங்க காலத் தமிழகத்தின் காடுகளில் எவ்வகையான குரங்குகள் வாழ்ந்து வந்தன என்பதைப் பற்றியும் சங்க இலக்கியங்களில் குரங்குகளைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதைப் பற்றியும் இக்கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.
 
குரங்கு - பெயர்களும் காரணங்களும்:
 
குரங்கு என்னும் விலங்கினைக் குறிக்க, இப்பெயர் உட்பட, கடுவன், மந்தி, ஊகம், முசு ஆகிய பெயர்களைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றில்,
 
குரங்கு என்னும் பெயர் இதன் வளைந்த உடலமைப்பு மற்றும் மரக்கிளைகளில் தொங்குதல் பண்பினால் அமைந்ததாகும்.
கடுவன் என்பது வலிமைமிக்க ஆண் குரங்கினைக் குறிப்பதாகக், கிளைக்குக்கிளைக் கடுகித் தாவும் பண்பினால் அமைந்த பெயராகும்.
மந்தி என்பது வலிமைகுன்றிய பெண் குரங்கினைக் குறிப்பதாகச், சுருசுருப்பில்லாத மந்தத் தன்மையால் அமைந்த பெயராகும்.
ஊகம் என்பது மரத்தில் ஊக்குதல் அதாவது மரத்தில் தாவுதல் / ஊசலாடுதல் ஆகிய பண்பினால் அமைந்த பெயராகும்.
முசு என்னும் பெயர் இதன் உடலெங்கும் நீண்ட மயிர் உடைய தன்மையால் அமைந்ததாகும்.
 
சங்க இலக்கியத்தில் குரங்கு:
 
குரங்கு என்னும் விலங்கானது பாலூட்டி வகையைச் சார்ந்ததாகும். செர்கோபிதிசிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த குரங்குகளில் பலவகைகள் உண்டு. இவற்றுள் சங்ககாலத் தமிழகக் காடுகளில் வாழ்ந்ததாகச் சங்க இலக்கியங்கள் பெரும்பாலும் சுட்டுவது கருங்குரங்கு என்னும் வகையைச் சார்ந்ததாகும். சாம்பல் லங்கூர் என்றும் அனுமன் லங்கூர் என்றும் அழைக்கப்படும் இதன் விலங்கியல் பெயரின் முதல் பகுதி செம்னோபிதிகஸ் ( SEMNOPITHECUS ) ஆகும். இதிலும் பல பிரிவுகள் இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. சங்க இலக்கியங்கள் கருங்குரங்கைப் பற்றிக் குறிப்பிடும்போது, அதன் மயிரானது பருத்திப்பஞ்சு போல வெண்மையாகவும் நீண்டும் இருக்கும் என்றும் கூறுகிறது. அதன் வாய்ப்பகுதிக்குள் முழுமையாக நிறையுமாறு பெரிய பெரிய பற்கள் இருக்குமென்றும் கடைவாயில் கூரிய பற்கள் உண்டென்றும் கூறுகிறது. கருங்குரங்கின் முகம், கைகால் விரல்கள் அனைத்தும் கருநிற மைகொண்டு பூசியதைப்போலக் கன்னங்கரேலெனத் தோன்றுமென்றும் அதன் விழிகளின் நிறம் வெள்ளையாய் இல்லாமல் வித்தியாசமாய் இருக்கும் என்றும் கூறுகிறது. அதாவது பெண்குரங்குகளின் விழிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் ஆண் குரங்குகளின் விழிகள் கருஞ்சிவப்பு / கருப்பு நிறத்திலும் இருக்குமென்று கூறுகிறது. இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் கருங்குரங்கின் விழிகளை அத்திப்பழத்துடன் ஒப்பிட்டும் கூறுகிறது.
 
அடுத்து, குரங்குகளின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறுமிடத்து, அவை சிறுவர்களைப் போலவே குறும்புத்தனமும் விளையாட்டுத்தனமும் நிறைந்தவை என்று பல பாடல்களின் வாயிலாகக் கூறுகிறது. குரங்குகள் தமது தேவைக்காகப் பிற விலங்குகளிடம் இருந்து மட்டுமின்றி மனிதரிடமிருந்தும் உணவுப் பொருட்களைத் திருடி உண்ணும் என்பதைப் பல சுவையான நிகழ்வுகளின் வழியாக உணர்த்துகிறது. சங்ககாலத்தில் வாழ்ந்ததாகக் காட்டப்படும் கருங்குரங்குகள் சைவ உணவுண்ணிகளாகவே அறியப்பட்டுள்ளன. மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் இலைகள், பூக்கள் மற்றும் காய்களையும் தேன், தினை, பால், சோறு போன்றவற்றையும் உண்டதாகப் பல பாடல்களில் பதிவுசெய்துள்ளன. குரங்கின் குட்டியானது பிறந்து ஒருசில வாரங்கள் வரையிலும் தாயின் மார்புடன் அணைத்தவாறே இருக்கும் என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. மலைக்குறவர்கள் குட்டிக்குரங்குகளைப் பழக்கிக் கழைகூத்திற்குப் பயன்படுத்திய நிகழ்வும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பரட்டைத் தலைமுடியைக் கொண்ட சிறுவர், பிச்சையெடுத்து உண்பவர் மற்றும் முழவுப்பறையினைக் கொட்டி முழக்குபவர் ஆகியோரைக் குரங்குகளுக்கு உவமையாகப் பல பாடல்களில் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் குரங்குகளைப் பற்றிக் கூறியுள்ள மேற்காணும் செய்திகளைப் பற்றி விளக்கமாகக் கீழ்க்காணும் தலைப்புக்களில் காணலாம்.
 
1. கருங்குரங்கு
2. தாய்க்குரங்கும் குட்டியும்
3. குரங்கின் உணவு
4. குரங்கு திருடி உண்ணுதல்
5. குரங்கும் குறும்புத்தனமும்
6. குரங்கும் கழைக்கூத்தும்
7. குரங்கும் உவமைகளும்
 
1. கருங்குரங்கு:
 
குரங்குகளில் பல இனங்கள் உண்டு. இவற்றில் பல இனங்கள் கூண்டோடு அழிந்தும் விட்டன. காலந்தோறும் பல்வேறு காரணங்களால் குரங்கு இனங்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டே வருகின்றது. இந்நிலையில், சங்ககாலத் தமிழகத்தில் பலவகைக் குரங்கினங்கள் வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால், சங்க இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டிருப்பது கருங்குரங்கு மட்டுமே. கருங்குரங்கினை ஊகம் என்றும் முசு என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது.
langur.JPG 
கருங்குரங்கினை சாம்பல் லங்கூர் / அனுமன் லங்கூர் என்ற பெயரால் விக்கிபீடியாவில் அறியலாம். கருங்குரங்கின் முகம் மட்டுமின்றி அதன் கைகால் விரல்கள் என்று அனைத்தும் கருப்பாகவே இருக்கும். இதன் விழிகள் ஏனைக் குரங்குகளைப் போலன்றி வித்தியாசமாக இருக்கும். பெண்குரங்குகளின் கண்கள் வெளிர்சிவப்பு நிறத்திலும் ஆண் குரங்குகளின் கண்கள் கருஞ்சிவப்பு / கருப்பு நிறத்திலும் காணப்படும். இதன் பற்கள் வாய்முழுவதும் அடைத்தமாதிரி நிறைந்து இருக்கும். தலையைச் சுற்றியும் உடல் முழுவதிலும் நீண்ட மயிர் அடர்ந்து நிறைந்திருக்கும். இதிலும் பழுப்பு, பொன், வெள்ளை என்று மயிர்நிறத்தின் அடிப்படையில் பலவகைகள் உண்டு. இவை கருங்குரங்கின் பொதுவான பண்புகள். சங்க இலக்கியங்களும் கருங்குரங்கின் பல பண்புகளைப் பல பாடல்களில் பதிவு செய்துள்ளன. அவற்றை இங்கே விரிவாகக் காணலாம்.
 
கருங்குரங்குகளின் கை மற்றும் கால்விரல்கள் கருமைநிறத்தில் இருந்ததனைப் பற்றிக் கூறும் சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
கைக்கோள் மறந்த கருவிரல் மந்தி... - மலை. 311
கருவிரல் மந்தி செம்முகப் பெரும் கிளை .... - நற்.334
கருவிரல் மந்தி கல்லா வன் பறழ் .... - ஐங்கு. 272
 
கருங்குரங்கின் தலைமயிரானது பார்ப்பதற்குப் பருத்தியின் பஞ்சினைப் போல வெண்ணிறத்தில் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.
 
துஞ்சு பதம் பெற்ற துய்த்தலை மந்தி ..... - நற். 57
துய்த்தலை மந்தி வன் பறழ் தூங்க...  - நற். 95
துய்த்தலை மந்தி தும்மும் நாட - நற்.326
 
இப்பாடல்களில்வரும் துய்த்தலை என்பது பஞ்சுபோன்ற வெண்ணிறத் தலைமயிரைக் குறிக்கும்.
 
பெண் கருங்குரங்கின் கண்கள் வெண்ணிறமாக இல்லாமல் சிவப்புநிறத்தில் இருக்கும் என்று முன்னர் கண்டோம். இதனைச் செம்முக மந்தி என்ற சொல்லால் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
 
கருவிரல் மந்தி செம்முகப் பெரும் கிளை .... - நற்.334
செம்முக மந்தி ஆரும் நாட     ..... - நற். 355
செம்முக மந்தி செய்குறி கரும் கால் .... - நற். 151
துய்த்தலை செம்முக மந்தி ஆடும் ...... - அகம். 241
 
இப்பாடல்களில் வரும் முகம் என்ற சொல் கண் என்ற பொருளில் வந்துள்ளது. முகம் என்ற சொல்லுக்குக் கண் என்ற பொருளும் உண்டு என்று 'இன்னொரு முகம்' என்ற ஆய்வுக் கட்டுரையில் ஏற்கெனவே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அதுமட்டுமின்றி, பெண் கருங்குரங்கின் கண்கள் சிவந்து இருந்ததால் அதனை அத்திப்பழத்துடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் கூறுகின்றது.
 
......அதவத் தீங்கனி அன்ன செம்முகத் துய்த்தலை மந்தி ... - நற். 95
 
langur-golden-red%2Beyes%2Bscary.jpgயாருக்காவது கண்கள் சிவந்திருந்தால், ' 'ஒங்கண்ணு ஏன் அத்திப்பழமாட்டம் செவந்துருக்கு' என்று சிற்றூர்களில் இன்றும் கேட்பது வழக்கமே. அத்திப்பழத்தினையும் பெண் கருங்குரங்கின் சிவந்த விழிகளையும் அருகில் உள்ள படத்தில் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கருங்குரங்கின் சிவந்த கண்களைப் 'பைங்கண்' என்ற சொல்லாலும் இலக்கியம் குறிப்பிடுகிறது.
 
பைங்கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன - சிறு. 221.
 
கோபப்படும்போது சிவக்கும் கண்களைப் பைங்கண் என்று இணையத்தமிழ்ப் பேரகராதி கீழே குறிப்பிடுகிறது. அவ்வகையில் கருங்குரங்கின் பைங்கண் என்பது அதன் சிவந்த விழிகளையே குறிக்கும் என்பதை அறியலாம்.
 
பைங்கண் pai--ka , n. < பை² +. 1. Tender eye; குளிர்ந்த கண். பைங்கண்ணன் புன் மயிரன் (இறை. 1, பக். 7). 2. Tender body; பசிய வுடம்பு. பைங்கண் மாஅல் (பரிபா. 3, 82). 3. Eye fuming with anger; கோபத்தாற் பசிய கண். (பரிபா. 5, 27.) 4. Fresh, green spot; பச்சென்ற விடம். பைங்கட் புனத்த பைங்கூழ் (குமர. பிர. நீதி நெறி. 61).
 
மேலும் ஆண் கருங்குரங்கின் கண்கள் கருஞ்சிவப்பு / கருப்பு நிறத்தில் காணப்படும் என்று மேலே கண்டோம். கீழ்க்காணும் சங்கப்பாடலும் இதனை உறுதிசெய்வதைப் பார்க்கலாம்.
 
கரும் கண் தா கலை பெரும்பிறிது உற்று என ..... - குறு.69
 
கருங்குரங்கின் முகமானது கருமைநிறத்தில் இருக்கும் என்று மேலே கண்டோம். கீழ்க்காணும் சங்கப்பாடல்கள் இதனை உறுதிசெய்வதுடன் கருங்குரங்கின் முகமானது கருநிற மையைப் பூசியதைப் போலக் கருமைநிறத்தில் இருந்ததாகவும் கூறுகின்றன.
 
மா முக முசுக்கலை பனிப்ப - திரு. 303
மை பட்டு அன்ன மா முக முசுக்கலை - குறு.121
மை பட்டு அன்ன மா முக முசு இனம் - அகம். 267
 
கருங்குரங்கின் நீண்ட மயிர், கடும் பற்கள் மற்றும் கருநிற விரல்களைப் பற்றிக் கூறும் குறுந்தொகைப் பாடல் கீழே:
 
நீடு மயிர் கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை ........ - குறு. 373
 
langur%2Band%2Bbaby.jpg2. தாய்க்குரங்கும் குட்டியும்:
 
குரங்குக் குட்டியானது பிறந்து ஒருசில வாரங்கள் ஆகும் வரையிலும் தன் தாயுடன் சேர்ந்தே இருக்கும். தன் தாயின் முதுகினைத் தனது பிஞ்சுக் கைகளால் தழுவியவாறு தாயின் நெஞ்சுப் பகுதியுடன் சேர்ந்து ஒட்டியிருக்கும். அருகில் உள்ள படத்தில் ஒரு குரங்குக்குட்டியானது தனது தாயினை எவ்வாறு தழுவிக் கொண்டுள்ளது என்பதனைக் காணலாம். குரங்குக் குட்டியானது தனது தாயின் நெஞ்சுடன் சேர்த்துத் தன்னைப் பிணைத்திருப்பதைக் கூறும் சங்கப்பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
மகவு உடை மந்தி போல அகன் உற தழீஇ - குறு. 29
மக முயங்கு மந்தி வரைவரை பாய - பரி. 15
 
தாயுடன் பிணித்திருந்த கைகள் நழுவிவிட்டதால் குரங்குக் குட்டியானது தவறிப்போய் ஒரு குறுகிய மலைப்பிளவில் விழுந்துவிட, அதனைக் காப்பாற்ற வேண்டி தாய்க்குரங்கானது தனது சுற்றத்துடன் கூடிநின்று கத்திக் கதறி ஓசையெழுப்பிய செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுவதைக் காணலாம்.
 
கைக்கோள் மறந்த கரு விரல் மந்தி
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு
முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றி
சிறுமையுற்ற களையா பூசல் - மலை. 311
 
3. குரங்கின் உணவு:
 
குரங்குகளில் பல இனங்கள் உண்டு. பெரும்பாலான குரங்குகள் தாவரப் பொருட்களையே உண்டு வாழ்வன என்றாலும் சில இனங்கள் மீன் முதலான அசைவ உணவுகளை உண்பதுமுண்டு. சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த குரங்குகள் உண்ட உணவுகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள தகவல்களை இங்கே காணலாம்.
 
குரங்கின் முதன்மை உணவாகப் பலாப்பழங்களே சங்கப்பாடல்களில் அதிக இடங்களைப் பிடித்திருக்கின்றது. குரங்குகள் பலாப்பழம் உண்ட செய்தியினைக் கூறும் பாடல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.
 
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளை தலைவன் கல்லா கடுவன் ..... - அகம். 352
 
ஆசினி கவினிய பலவின் ஆர்வுற்று
முள் புற முது கனி பெற்ற கடுவன் ..... - புறம். 158
 
பனி வரை நிவந்த பாசிலை பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் ...  - புறம். 200
 
பலாப்பழங்களை மட்டுமின்றி, குரங்குகள் மாங்கனிகளையும் விரும்பி உண்டன. சங்ககாலக் குரங்குகள் மாங்கனிகளை விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.
 
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
..... கடுவன் ஊழுறு தீம் கனி உதிர்ப்பக் கீழ் இருந்து
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும் ..... - குறு. 278
 
தே கொக்கு அருந்தும் முள் எயிற்று துவர் வாய்
வரை ஆடு வன் பறழ் தந்தை கடுவனும் ...... - குறு. 26
 
முக்கனிகளில் மாம்பழங்களையும் பலாப்பழங்களையும் விரும்பியுண்ட குரங்குகள் வாழைப்பழங்களை மட்டும் விட்டுவைக்குமா என்ன?. மற்ற இரண்டு பழங்களைக் காட்டிலும் குரங்குக்கு வாழைப்பழம் எளிதாகக் கிடைக்கும் என்பதுடன் உண்பதற்கும் எளிமையானது கூட. சங்ககாலக் குரங்குகள் வாழைப்பழம் உண்ட செய்தியினைக் கூறும் பாடல் கீழே:
 
...பிணி முதல் அரைய பெரும் கல் வாழை
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் .. - நற். 251
 
முக்கனிகள் மட்டுமின்றி, வயலில் விளைந்த பலவகைத் தினைகளையும் குரங்குகள் கவர்ந்துண்டன. அத்துடன் இலைகள், பூக்கள் மற்றும் காய்களையும் தேன், பால், சோறு போன்றவற்றையும் குரங்குகள் உண்ட செய்திகள் சங்க இலக்கியங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ஆனால் குரங்குகள் அசைவ உணவினை உண்டதாக எந்தவொரு சங்கப் பாடலிலும் பதிவுசெய்யப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
4. குரங்கு திருடி உண்ணுதல்:
 
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்னும் கூற்றை மெய்ப்படுத்துவதைப் போல குரங்குக்கும் மனிதனுக்கும் பொதுவாக பல குணங்கள் / செயல்பாடுகள் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் பிறரது பொருட்களைத் திருடி உண்பது. மனிதர்களிடம் இருந்து மட்டுமின்றி பிற விலங்குகளிடம் இருந்தும் குரங்குகள் உணவுப் பொருட்களைத் திருடி உண்ட செய்திகள் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே கண்டு சுவைக்கலாம்.
 
.... காழோர் இகழ் பதம் நோக்கி கீழ
நெடும் கை யானை நெய் மிதி கவளம்
கடும் சூல் மந்தி கவரும் காவில் .... - பெரும். 395
 
யானைப்பாகர்கள் கைகளில் குத்துக்கோலைப் பிடித்தவாறு யானைகளுக்குச் சோற்று உருண்டைகளை ஊட்டிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சற்றே கவனக்குறைவாக இருந்த வேளையில், கீழே இருந்த சோற்று உருண்டையினைச் சூலுடைய குரங்கொன்று கவர்ந்துசென்ற செய்தியை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.
 
புன் தலை மந்தி கல்லா வன் பறழ்
குன்று உழை நண்ணிய முன்றில் போகாது
எரி அகைந்து அன்ன வீ ததை இணர
வேங்கை அம் படு சினை பொருந்தி கைய
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி     
எழுது எழில் சிதைய அழுத கண்ணே - நற். 379
 
தேன் கலந்த பாலினைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பருகியவாறு கையில் பிடித்துக்கொண்டு வேங்கைமரத்தின் கீழே நின்று கொண்டிருந்தாள் ஒரு நங்கை. அப்போது அந்த வேங்கைமரத்தில் இருந்த குரங்குக்குட்டி ஒன்று மரத்தில் தொங்கியவாறு ஒருகையால் அவள் கையில் வைத்திருந்த பாலைக் கவர்ந்துசென்றுவிட அவள் அழுத நிகழ்வினைக் கூறுகின்றன மேற்பாடல் வரிகள்.
 
நிரை வளை முன்கை நேர் இழை மகளிர்
இரும் கல் வியல் அறை செந்தினை பரப்பி
சுனை பாய் சோர்வு இடை நோக்கி சினை இழிந்து
பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் - குறு. 335
 
இளம்பெண்கள் பலர் செந்தினைகளைக் கற்பாறைகளின்மேல் பரப்பிக் காயவைத்துக் கொண்டிருந்தனர். பின்னர் உச்சிவெயில் நேரத்தில் அருகில் இருந்த சுனையில் நீராடச் சென்றனர். அவர்கள் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த குரங்குகள் மரத்தில் இருந்து இறங்கிக் குட்டிகளுடன் சென்று அத்தினைகளைக் கவர்ந்துசென்று உண்ட செய்தியினை மேற்பாடல் கூறுகிறது.
 
5. குரங்கும் குறும்புத்தனமும்:
 
குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் என்பது பரிணாமவியலின் முதன்மைக் கூற்றாகும். இக் கூற்றினை மெய்ப்பிக்கும் வகையில் பலவகையான ஒற்றுமைகளை குரங்கிற்கும் மனிதருக்கும் இடையில் நாம் காணலாம். மனிதர்கள் வளரவளர அவரது மனம் பக்குவம் அடைவதால், குழந்தைத்தனமும் அதனோடு இயைந்த விளையாட்டு ஆர்வமும் மெல்லமெல்ல மறைந்து போகிறது. ஆனால், குரங்குகள் எவ்வளவுதான் வளர்ந்து ஒரு குடும்பத்தின் தலைவனாகவே ஆனாலும் அதன் குறும்புத்தனம் அவற்றைவிட்டுப் போவதில்லை. சிறுவர்களைப் போலவே அவை குறும்பு செய்யும்; விளையாடும்; குதூகலிக்கும். சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்த குரங்குகள் சிறுவர்கள் செய்யும் குறும்புகளைப் போலத் தாமும் செய்ததாகக் கூறும் சில பாடல்களை மட்டும் இங்கே காணலாம்.
 
தேங்கியுள்ள தண்ணீரின்மீது மழைத்துளி விழும்போது நீர்க்குமிழிகள் தோன்றும் அழகைப் பார்த்து மகிழாத நெஞ்சம் இல்லை. இந்த குமிழிகளைக் குச்சியால் தொட்டு உடைத்துக் குதூகலிப்பது சிறுவர்களின் விளையாட்டு. இந்தச் சிறுவர்களைப் போலவே பெரிய ஆண் குரங்கு ஒன்று நீரின்மேல் தோன்றிய நீர்க்குமிழிகளைக் குச்சியால் உடைத்து விளையாடியதைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.
 
குரங்கின் தலைவன் குரு மயிர் கடுவன்
சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை
மாரி மொக்குள் புடைக்கும் நாட  - ஐங்கு.275
 
மாஞ்சோலைகளில் மாமரங்கள் காய்க்கும் பருவத்தில் தோட்டக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காரணம், தோட்டத்தில் ஆளில்லாத நேரம்பார்த்து சிறுவர்கள் மாமரங்களில் ஏறி அதிலிருக்கும் காய்களையும் பழுத்த கனிகளையும் அடித்து வீழ்த்தியோ கைகளால் பறித்தோ கீழே போடுவர். அவற்றைப் பொறுக்கியெடுத்துத் தின்றும் பைகளில் போட்டுக்கொண்டும் சிறுவர்கள் ஓடிவிடுவார்கள். சிறுவர்களுக்கு இது ஒரு விளையாட்டு மட்டுமல்ல திருட்டு மாங்காய் ருசிக்கும் என்னும் நினைப்பும் ஒரு காரணம் தான். இந்தச் சிறுவர்களைப் போலவே சங்ககாலத்தில் குரங்குகள் நடந்துகொண்ட விதம்பற்றி கீழ்க்காணும் பாடல் விதந்து கூறுவதைப் பாருங்கள்.
 
கடுவன் ஊழுறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும்
பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே - குறு. 278
 
ஆண்குரங்கானது மாமரத்தின் மேலிருந்தவாறு மாம்பழங்களை உதிர்த்துவிட, அந்தக் குரங்கின் பெண்துணையும் குட்டியும் கீழே விழுந்த பழங்களைப் பார்த்துப் பார்த்து எடுத்து உண்டதாக மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. சங்ககாலத்தில் வாழ்ந்த உப்பு வணிகர்கள் ஓட்டிக்கொண்டுவந்த மாட்டுவண்டிகளில் தொற்றிக்கொண்டு வந்த குட்டிக்குரங்குகள் அவ்வண்டியில் வந்த சிறுவர்களுடன் சேர்ந்துகொண்டு விளையாடியதாக கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.
 
..... மகாஅர் அன்ன மந்தி மடவோர்   
நகாஅர் அன்ன நளி நீர் முத்தம்
வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி
........ உமட்டியர் ஈன்ற கிளர்பூண் புதல்வரொடு
கிலுகிலி ஆடும் - சிறு.56
 
சிறுவர்கள் கிலுகிலுப்பையினை ஒலிக்க, குரங்குக்குட்டிகளோ கிளிஞ்சல்களுக்கு உள்ளே முத்துக்களை வைத்து மூடிக்கொண்டு கிலுகிலுப்பையினைப் போல ஆட்டி ஆட்டி ஒலி எழுப்பியவாறு சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடியதை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.
 
6. குரங்கும் கழைக்கூத்தும்:
 
குரங்காட்டியானவர் குரங்கைக் கொண்டு பலவிதமான வேடிக்கைகளைச் செய்துகாட்டுவதனைத் தெருக்களில் தற்போதும் பார்க்கலாம். குரங்காட்டியானவர், ஆட்ரா ராமா, போட்ரா ராமா என்று சொல்ல, அக்குரங்கானது நடனமாடுவது, குப்புற விழுந்து எழுவது, பந்து போடுவது போன்ற பலவிதமான வேடிக்கைகளைச் செய்துகாட்டி குழந்தைகளையும் பெரியவர்களையும் மகிழ்ச்சிப் படுத்தும். இதைப்போல, கழைக்கூத்திலும் குரங்குகளைப் பயன்படுத்தி வேடிக்கைக் காட்டுவதுண்டு. சங்க காலத்தில் குறவர்கள் தமது கழைக்கூத்தில் குரங்குகளைப் பயன்படுத்திய செய்தியினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.
 
கழை பாடு இரங்க பல் இயம் கறங்க
ஆடுமகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று
அதவ தீம் கனி அன்ன செம் முக
துய் தலை மந்தி வன் பறழ் தூங்க
கழை கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து    
குற குறுமாக்கள் தாளம் கொட்டும் அக்
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர் - நற். 95
 
எதிரெதிர் திசைகளில் இருந்த பல மூங்கில் மரங்களைப் பிணித்து வலிய கயிற்றினால் கட்டியிருந்தார்கள். அந்தக் கயிற்றின்மேல் ஆடுமகள் நடக்கும்போது மூங்கில் மரங்கள் வளைந்து ஒலியெழுப்ப, இசைக்கருவிகள் பலவும் முழக்கப்பட்டன. பின்னர் இவர்கள் விட்டுச்சென்ற அந்தக் கயிற்றில் மலையில் வாழும் குறவர் மக்கள் ஒரு கழைக்கூத்து நடத்தினர். அப்போது அவர்கள் தாளம் கொட்டி ஒலியெழுப்ப, அத்திப்பழம்போலச் சிவந்த கண்களையும் பருத்திப்பஞ்சு போன்ற தலைமயிரையும் உடைய குரங்குக்குட்டி ஒன்று மூங்கில் மரத்தில் ஏறி விசையுடன் பாய்ந்து கயிற்றினைப் பிடித்துக்கொண்டு ஊசலாடி அனைவரையும் மகிழ்ச்சிப் படுத்திய செய்தியினை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.
 
7. குரங்கும் உவமைகளும்:
 
யாரையாவது திட்ட வேண்டுமென்றால், ' மூஞ்சியைப் பாரு, குரங்கு மாதிரி ' என்று இக்காலத்தில் திட்டுவது வழக்கம். அதுமட்டுமின்றி, இஞ்சி தின்ன குரங்கு போல, குரங்கு கையில் பூமாலை போல என்று பலவிதமான பழமொழிகளும் குரங்கின் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றன. இதைப்போல சங்ககாலத்திலும் குரங்குகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள் புலவர்கள். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே விளக்கமாகக் காணலாம்.
 
இக்காலத்தில் பல ஊர்களில் சிறுவர்கள் உட்பட பலரும் தமது தலைமயிருக்கு எண்ணைநீவித் தலைவாரிக் கொள்வதைப் பார்க்கிறோம். இப்பழக்கமானது பொருளாதார மற்றும் சாதிப் பாகுபாடின்றி பரவலாகப் பலராலும் கடைப்பிடிக்கப் பட்டுவருகிறது. ஆனால் சங்ககாலத்தில் இந்தப் பழக்கம் பரவலாக இல்லை போலும். மன்னர்களும் செல்வந்தர்களும் இப் பழக்கத்தினை மேற்கொண்டிருக்கலாம். காடுகளில் வாழ்ந்தோரும் வசதியற்றோரும் எண்ணை நீவாத காரணத்தினால், பல சிறுவர்களின் தலைமயிரானது தனது கருநிறத்தினை இழந்து மென்மையாகி செம்பட்டை / பரட்டையாகிப் பின்னர் நரைத்தும் போயிருக்கிறது. இதனைப் 'பாறு மயிர்' என்ற சொல்லால் இலக்கியம் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சிறுவர்களின் பாறு மயிரானது ஏறத்தாழ குரங்குகளின் தலைமயிரைப் போலவே இருந்ததால் சிறுவர்களையும் குரங்குகளையும் கீழ்க்காணும் பாடல் ஒப்பிட்டுக் கூறுகிறது.
 
நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த          
மகாஅர் அன்ன மந்தி  - சிறு.56
 
உப்பு வணிகர்கள் ஓட்டிக்கொண்டுவந்த மாட்டுவண்டிகளில் வணிகர்களின் மனைவி மக்கள் அமர்ந்திருக்க, கூடவே தொற்றிக்கொண்டு வந்த குரங்குக் குட்டிகள் பார்ப்பதற்குப் பாறுமயிருடைய சிறுவர்களைப் போலிருந்ததாக இப்பாடல்வரிகள் கூறுகின்றன. செம்பட்டைத் தலைமயிரைக் கொண்ட சிறுவர்கள் கருத்த எருமைமாட்டின் முதுகின்மேல் ஏறிவிளையாடியபோது தொலைவில் இருந்து பார்ப்போர்க்குக் கருநிறப் பாறையின்மேல் ஏறிநின்ற குரங்குகளைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் அகப்பாடல் கூறுகிறது.
 
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை
மயிர் கவின் கொண்ட மா தோல் இரும் புறம்
சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு
துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் - அகம். 206
 
மலையில் விளைந்த தினைக்கதிர்களைக் கைகளால் கசக்கித் தினைகளைப் பிரித்து வாய்முழுவதும் நிறையுமாறு அமுக்கியும் இருகைகளில் ஏந்தியும் இருந்த அந்தப் பெண்குரங்கானது பார்ப்பதற்கு இரண்டு கைகளாலும் உணவைப் பிச்சை எடுத்து உண்போரைப் போலத் தோன்றியதாகக் கீழ்ப்பாடல் வரிகள் கூறுகின்றன.
 
கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை
முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி
கல்லா கடுவனொடு நல் வரை ஏறி
அங்கை நிறைய ஞெமிடி கொண்டு தன்
திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி
வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர்
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் - நற். 22
 
அவரைக் காய்களை அளவில்லாமல் தின்ற குரங்கின் புடைத்த வயிறானது வணிகர்களின் பருத்த பையினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.
 
அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும்...... - ஐங்கு. 271
 
குரங்குகளுக்கு மிகப்பிடித்த உணவு பலாப்பழம் ஆகும். ஒருமுறை அந்த மலைக்காட்டில் ஒரு ஆண்குரங்கிற்கு குடம்போலப் பெரிய பலாப்பழம் ஒன்று கிடைத்தது. ஆவலுடன் சென்ற குரங்கு அதனைத் தனது இருகைகளாலும் தழுவிப் பற்றியது. அப்போது அதன் முன்னால் அழகுமயில் ஒன்று தோகைவிரித்து ஆடிக்கொண்டிருந்த காட்சியானது பார்ப்பதற்கு, விறலியானவள் முன்னால் நடனமாடப் பின்னால் இருந்தவாறு முழவன் ஒருவன் தன் கைகளால் குடமுழவினைப் பற்றியவாறு ஒலிக்கச்செய்வதைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் அகப்பாடல் அக்காட்சியினை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதனைப் பாருங்கள்.
 
முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம்
பல் கிளை தலைவன் கல்லா கடுவன்
பாடு இமிழ் அருவி பாறை மருங்கின்
ஆடு மயில் முன்னது ஆக கோடியர்
விழவு கொள் மூதூர் விறலி பின்றை
முழவன் போல அகப்பட தழீஇ
இன் துணை பயிரும் குன்ற நாடன் - அகம். 352
 
முடிவுரை:
 
சங்க இலக்கியத்தில் குரங்கு பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு சுவையான தகவல்களை மேலே பல ஆதாரங்களுடன் கண்டோம். சங்ககாலத்தில் ஏராளமாக வாழ்ந்துவந்த கருங்குரங்குகளை இப்போது பார்ப்பது அரிதிலும் அரிதாகி விட்டது. கருங்குரங்கு இரத்தம், கருங்குரங்கு லேகியம் ஆகியவை மருத்துவகுணம் மிக்கவை என்னும் பெயரால் கருங்குரங்குகள் அழிக்கப்பட்டு வருகின்றன. அழிவின் விளிம்பில் இருக்கும் இவற்றைக் காப்பாற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். https://thiruththam.blogspot.com/2018/03/8.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.