Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா, இடதுசாரிகளா? – 01

— சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

“இடதுசாரிகளை விட இனவாதிகளே மக்களை ஈர்த்தனர். அதனால் நாடு நாசமானது” என்று ஒரு பதிவைத் தன்னுடைய முகப்புத்தகத்தில் போட்டிருந்தார் ஜீவன் பிரசாத். ஒரு காலம் ஈழப்போராட்டத்தோடு இணைந்திருந்தவர் ஜீவன். அதேவேளை கலை, ஊடகவியல்துறை, திரைப்படம் எனப் பல துறைகளிலும் ஆளுமை மிக்கவர். ஜனநாயகவாதி. மாற்றங்களை எப்போதும் விரும்புகின்றவர். அவர் தன்னுடைய அவதானங்களின் வழியே கண்டடைந்த உண்மை இது.  

அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதே, அதையும் விட உண்மையானது. 

ஏனென்றால், இந்த ஈர்ப்பு இனரீதியான மேம்பாட்டை எந்த இனத்துக்கும் தரவில்லை. இனப்பாதுகாப்புக்கு இதுதான் சிறந்த வழி என்று தோன்றினாலும் இந்த வகையான நிலைப்பாட்டினால் அல்லது வழிமுறையினால் நாடும் நெருக்கடிக்குள்ளாகியது. இனங்களாகப் பிளவுண்டது. ஒவ்வொரு இனமும் நெருக்கடியைச் சந்தித்தன. அழிவுகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. இன்று பிளவுண்ட மனதோடுதான் ஒவ்வொருவரும் உள்ளோம். எல்லோரிடத்திலும் சந்தேகமும் அச்சமும் பகையுணர்ச்சியுமே மேலோங்கியுள்ளன. இலங்கையின் குடிமக்களுக்குக் கிடைத்த வரமிதுவாகியுள்ளது. 

பதிலாக இடதுசாரிகளை ஆதரித்திருந்தால் ஜனநாயகம் செழுமையாக இருந்திருக்கும். போரும் இடைவெளிகளும் உருவாகியிருக்காது. அல்லது இந்தளவுக்கு நீறு பூத்த நெருப்பாக இருந்திருக்காது. சுய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருக்கும். அறிவியலும் பண்பாடும் புதிய வளர்ச்சி நிலையை எதிட்டியிருக்கும். அந்நியத் தலையீடுகள் இந்தளவுக்கு ஏற்பட்டிருக்காது. கல்வி, பொருளாதாரம், பண்பாடு உள்ளிட்ட விசயங்களில் சுதேசத்தன்மை உள்ள மக்களாக நாம் வாழ்ந்திருப்போம். அதேவேளை சர்வதேசத் தன்மை வாய்ந்தோராகவும் இருந்திருப்போம்.  

இலங்கைத்தீவு பல்லினத் தன்மையும் பன்மைத்துவமும் உள்ள அமைதித்தீவாக இருந்திருக்கும். 

இப்படி எழுதும்போது “இது ஒரு அற்புதக் கனவு” என ஒரு சாராரும் “இல்லை இது, சுத்தமான அபத்தக் கனவு” என இன்னொரு சாராரும் கூறுவர். ஏனெனில் இரண்டுக்கும் இதில் சாத்தியங்கள் உண்டு. இடதுசாரித்துவத்தில் முற்போக்குத் தன்மையும் மக்கள் நேயமும் மானுட விகசிப்பும் விடுதலையுணர்வும் இருக்கின்ற அதேவேளை அதில் எல்லையற்ற அதிகாரத்தைப் பிரயோகிக்கின்ற மூடத்தனமும் உண்டு. இரண்டுக்கும் ஏராளமான உலக உதாரணங்களும் வரலாற்று அனுபவங்களும் உண்டு. 

ஆகவே இரண்டுக்குமான சாத்தியங்களை – நன்மை தீமைகளை – மனதிற் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. 

இலங்கையின் எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடதுசாரிகள் பங்கேற்ற அரசாங்கத்துக்கும் –ஆட்சிக்கும் – இடதுசாரிகளில்லாத ஆட்சிக்குமிடையில் உள்ள வேறுபாடுகளையும் இந்தக் கட்டுரை நோக்குகிறது. 

இனத்துவ ரீதியில் இடதுசாரிகள் சோரம்போனதும் இன்னமும் போய்க்கொண்டிருப்பதும் இடதுசாரிகள் மீதான அவநம்பிக்கைகளையும் மதிப்புக்குறைவையும் ஏற்படுத்தியிருப்பது உண்மையே. இனவன்முறைகளையும் இன ஒடுக்குமுறையையும் இடதுசாரிகள் கண்டிக்கவும் தடுக்கவும் தவறினர் என்பதும் உண்மையே. மட்டுமல்ல இனச் சமனிலையைப் பேணுவதற்கான அதிகாரப் பகிர்வு – அரசியலமைப்பு உருவாக்கம் – போன்றவற்றிலும் இடதுசாரிகளின் பாத்திரம் பலவீனமானதே. 

இப்படித் தவறுகளை இழைத்திருக்கும் –இன்னமும் இழைத்துக் கொண்டிருக்கும் இடதுசாரிகளை பிறகு எப்படி முன்னிலைப்படுத்தலாம். இவர்களால் எப்படி அற்புதமான – அதிசயமான ஒரு இலங்கையை உருவாக்கியிருக்க முடியும்? என்று இடதுசாரிகளை நோக்கி உங்களில் யாரும் கேள்வி எழுப்பலாம். 

ஆனால் இந்தக் கேள்விக்குப் பின்னுள்ள உண்மைகளை மனந்திறந்து கண்டறிய வேண்டும். 

இலங்கையின் அரசியல் வரலாற்றில் சமஸ்டி முறை பற்றி முதன்முதலில் பேசியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா. ஆனால் அவரே பின்னர் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து கொந்தளிக்கும் நிலைமைக்கு வழியேற்படுத்தினார். அந்தக் கொந்தளிக்கும் நிலைமையின் வளர்ச்சியே இன்று சமஸ்டியைப் பற்றிய பேச்சையே எடுக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளது. 

ஏன் இப்படிப் பண்டாரநாயக்கா இரண்டு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருந்தது? இடையில் நடந்தது என்ன? என்பதைக் கண்டறிந்தால் இடதுசாரிகளிடம் ஏற்பட்ட  – ஏற்பட்டுக் கொண்டிருக்கும் வரலாற்றுத் தவறு எப்படி நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். இவ்வளவுக்கும் பண்டாரநாயக்கா ஒன்றும் முற்போக்குவாதியோ சீர்திருத்தவாதியோ கிடையாது. ஐ.தே.கவின் பிரதிநிதியாக இருந்தவரே. பின்னர் அதிலிருந்து விலகி தனியாகச் சுதந்திரக் கட்சியை உருவாக்கியவர். ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் வேறுபாடுகள் கட்சியின் நிறக்கொடிகளில் மட்டுமல்ல நடைமுறை சார்ந்த கொள்கையிலும் இருந்ததுண்டு. ஆனால், அது அதிக வேறுபாடாக இல்லாமல் பின்னாளில் கரைந்து விட்டது. இதற்குக் காரணம், ஐ.தே.கவின் இனவாத அலைக்கு நிகரலையை சு.கவும் இனவாத அலையை உருவாக்க முற்பட்டதேயாகும். 

இந்த இரண்டு கட்சிகளும் இனவாத அலையை உச்ச நிலைக்குக் கொண்டு செல்ல முற்பட்டபோது இதை எதிர்த்து நிற்கும் திராணியை இடதுசாரிகள் கொண்டிருக்கவில்லை. ஆனால் 1948க்குப் பின்னான இலங்கை அரசியற் பரப்பில் இடதுசாரிகளுக்கென்றொரு தனித்துவ அடையாளம் இருந்தது. இடதுசாரித் தலைவர்கள் சிங்கள – தமிழ் சமூக வெளியில் பேரடையாளத்தோடிருந்தனர். நம்பிக்கை ஒளியூட்டினர். 

ஆனால் இனவாத அலையானது கொந்தளிக்கும் உணர்ச்சியின் மையத்தில் சுழன்று கொண்டிருப்பது என்பதால், தவிர்க்க முடியாமல் இடதுசாரிகளும் அதனோடு சமரசம் செய்ய வேண்டியேற்பட்டது. அல்லது அதைக் கண்டும் காணாதிருக்க வேண்டியேற்பட்டது. அல்லது அதனோடு சேர்ந்து இழுபட வேண்டியிருந்தது. இதில் இவர்கள் தவிர்க்க முடியாமல் இரண்டு சிக்கல்களுக்குள்ளாகினர். ஒன்று அப்போது ஏற்பட்ட ரஸ்ய – சீன சார்புப் பிளவு. இரண்டாவது ஐ.தே.கவை எதிர்த்துத் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் சு.கவுடன் செய்து கொண்ட சமரசம். இரண்டுமே இடதுசாரிகளைப் பலவீனப்படுத்தின என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது. இவர்கள் பிரதான எதிரியாக ஐ.தே.கவையும் அதனுடைய மேற்குச் சாய்வையும் வெளியான அந்நியத்தனத்தையும் எதிர்க்க வேண்டும் என்று கருதினர். இதனால் சு.கவின் ஏனைய தவறுகள், போக்குகளுக்கு தவிர்க்க முடியாமல் உடன்பட்டனர். 

இரண்டாவது தமிழ்ச்சமூகத்தின் மீதான இனவன்முறை, இன ஒடுக்குமுறை போன்றவற்றில் சரியான நிலைப்பாட்டினை எடுக்க முடியாத நிலையை ஏற்படுத்தியதாகும். இதனால் தமிழ் இடதுசாரிகள் தனியான நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.  

இலங்கையின் இடதுசாரித்துவம் மூன்றாக வகைப்பட்டது. ஒன்று, ரஸ்ய சார்புவாதிகள். இரண்டாவது சீனச் சார்புடையோர். மூன்றாவது இவர்களில் தமிழ் நிலைப்பட்டுச் சிந்திக்கும் இடதுசாரிய நிலைப்பட்டோர் ஆக. 

ஆகவே வரலாற்றுப் பொறியிலிருந்து மீள முடியாத சுழலுக்குள் இவர்கள் சிக்குண்டனர். இதன் விளைவாக வரலாற்றுத் தவறுகளுக்குட்பட வேண்டியதாயிற்று. இடதுசாரியம் ஒரு விஞ்ஞானத்துவம். அது தூரநோக்கோடு சிந்திக்கும் ஆற்றலையும் பண்பையும் கொண்டது என்பதை இவர்கள் தவற விட்டனர். இதில் தவறிழைத்தனர். இந்தத் தவறே இடதுசாரிகளை முன்னிலைச் சக்தியாக இன்னும் மாற விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. 

ஆனாலும் ஒப்பீட்டளவில் இடதுசாரிகளின் இடம் பெரியதே. 

எப்படியென்றால் ஒரு போதுமே அவர்கள் பன்மைத்துவத்தை மறுதலிக்கவில்லை. சிறுபான்மைத் தேசிய இனங்களின் உரிமைகளை நிராகரித்ததில்லை. மட்டுமல்ல, இலங்கையின் இந்தளவுக்கான அரசியல் நிலைமைக்கு – கட்டறுந்த அதிகார வெறிக்கும் மக்கள் விரோதப் போக்குக்கும் எதிராக இடதுசாரிகளே இடையில் நிற்கிறார்கள். ஒரு தரப்பு ஆட்சியில் பங்கேற்று விவாதங்களை நடத்துகிறது. கட்டுப்படுத்துகிறது. மறுதரப்பு மக்கள் போராட்டங்களை நடத்துகிறது. 

இந்த இடத்தில் இடதுசாரிகளையும் இடதுசாரித்துவத்தையும் வகைப்படுத்திப் புரிந்து கொள்வது அவசியம். ஒன்று உண்மையில் இடதுசாரிகள் சமகால நிலவரங்களுக்குள் சிக்கப்படாது தெளிவாக அரசியலை முன்னெடுத்திருக்க வேண்டும். ஆனாலும் சமகாலத்தை அவர்களால் புறக்கணிக்க முடியாத நிலை இருந்ததையும் புரிந்து கொள்வது அவசியம். இதில்தான் இடதுசாரிகளிடையே பிளவுண்டாகியது. இந்தப் பாராளுமன்ற அரசியல் என்பது தரகு முதலாளித்துவத்தை சட்ட ரீதியாக நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு ஏற்பாடே என இடதுசாரிகளில் ஒருசாரார் தொடர்ந்தும் வலியுறுத்தினர். இன்னொரு சாரார் இதில் பங்கேற்று இடையீடு செய்யவில்லை என்றால் மிகப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்றனர். ஆகவே இடதுசாரிகளில் இரு நிலைப்பட்டோர் உண்டு என்பதை மனங்கொள்ள வேண்டும். 

ஒரு சாரார் ஆட்சி அதிகாரத்தோடு சமரசம் செய்தோர். ஒத்தோடிகளாக இருந்தோர். இருப்போர். இதற்கு சமகால உதாரணம் திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார போன்றோர். இன்னொரு கோணத்தில் அரச எதிர்ப்பு – புரட்சி என்ற கோதாவில் வந்த விமல் வீரவன்ஸ. 

ஏனையயோர் அரசை எதிர்த்து, அதனுடைய மக்கள் விரோதப்போக்கைக் கண்டித்துக் கொண்டிருப்போர். இங்கே உள்ள கவலையும் துரதிருஷ்டமும் என்னவென்றால் இவர்கள் பல அணிகளாக – குழுக்களாகச் சிதறுண்டிருப்பதே. உண்மையில் இது மக்கள் விரோதமானது. அரச அதிகாரத்துக்குச் சார்பானது. ஒடுக்கு முறைக்கு ஒத்துழைப்பது. தவறுகளுக்கு வழிவிடுவது. இதனால்தான் எதிர்த்தரப்பில் இருந்தாலும் சரி, ஆளுந்தரப்பில் (தேர்தல் அரசியலில்) இருந்தாலும் சரி இடதுசாரிகள் மீதான மதிப்புக்குறைந்தமைக்குக் காரணம்.  

கூடவே எழுந்தெரியும் இனவாத அலையை அணைக்கக் கூடிய எந்தச் சக்தியும் கருத்து நிலையும் தந்திரோபாயமும் இடதுசாரிகளிடம் இல்லை என்பதாகும். ஆனால் இடதுசாரித்துவம் என்பது விஞ்ஞானம் என விளங்கிக் கொள்வோமாயின் அதனிடம் –அந்த தரப்பிடம் அறிவு பூர்வமான – விஞ்ஞான பூர்வமான ஆற்றல் மிக்க சிந்தனையும் செயல் வழிமுறையும் அதற்கான வடிவமும் கிடைத்திருக்கும் அல்லவா. இங்கே அது நிகழவில்லை என்றால் இது அந்த அறிவுபூர்மான – விஞ்ஞான பூர்வமான தகுதியைப் பெற்றிருக்கவில்லை என்றே அர்த்தமாகும். இதைக்குறித்த உரையாடல்களும் விமர்சனங்களும் மதிப்பீடுகளும் விசாரணைகளும் நடக்கவில்லை என்றால் அது இடதுசாரித்துவத்தின் அடிப்படைக்கும் அதன் பண்புக்கும் எதிரானதே. 

அப்படியென்றால் இங்கே என்னதான் நடந்தது? என்னதான் நடந்து கொண்டிருக்கிறது? 

(தொடரும்) 

 

https://arangamnews.com/?p=5648

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா இடதுசாரிகளா? (பகுதி 02)

spacer.png

இடதுசாரிகளிடம் ஒரு பொதுவான குறைபாடுண்டு. அவர்கள் எப்போதும் தங்கள் சித்தாந்தத்திலே மிகக் கறாராக இருப்பர். பிறரோடு எந்த வகையான உடன்பாட்டுக்கும் வரமுடியாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருப்பர். குறிப்பாக தங்களை ஒத்த ஏனைய இடதுசாரியக் கோட்பாட்டைக் கொண்டோரை அல்லது சமத்துவவாதிகளை அல்லது பெரியாரியவாதிகளையே மிகத் தீவிரமாக எதிர்ப்பர். அல்லது இவர்களுக்கிடையில் உடன்பாடு காணமுடியாமல் திணறுவர். 

இது ஒரு தீரா நோய்க்கூறும் மூடத்தனமுமாகும். கூடவே மக்கள் விரோதச் செயலுமாகும்.  

ஏனெனில், தங்களுக்கும் மக்களுக்கும் உண்மையான எதிரிகள் யார்? என்ற தெளிவிருந்தாலும் அந்த எதிரிகளை ஒன்றிணைந்தே முறியடிக்க வேண்டும். ஒன்றிணைந்து மக்கள் அரசியலை முன்னெடுப்பதன் வழியாகத்தான் இதை ஓரளவுக்கேனும் சாத்தியப்படுத்தலாம் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. இந்தக் குறைபாட்டினால் இவர்கள் சிற்றணிகளாக சிதறுண்டு கிடக்க வேண்டியிருக்கிறது. இதனால் இவர்கள் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்ற அடையாளத்தை இழந்து விடுகின்றனர். 

பதிலாக எதிர்த்தரப்பில் உள்ள வலது அரசியலை முன்னெடுக்கும் சக்திகள் (இனவாதிகளும் மதவாதிகளும்) தேவைக்கேற்ப தங்களை நெகிழ்த்திக் கொண்டு அவ்வப்போது ஒன்றிணைவுகளைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றி வெற்றியைப் பெற்று விடுகின்றனர். இந்த எளிய சூத்திரத்தைக் கூட இவர்கள் புரிந்து கொள்ள முற்படுவதில்லை. 

உண்மையில் மக்களுக்கான அதிகாரத்தைப் பெற வேண்டிய சக்திகள் அதற்கான பொறிமுறையையும் தந்திரோபாயத்தையும் வகுக்கத் தவறி, மக்களுக்குரிய வாய்ப்பைத் தவறவிடுகின்றனர். இதன் மூலம் வலது நிலைப்பட்ட ஆதிக்கச் சக்திகளுக்கு இடமளித்து விடுகின்றனர். மக்களை இவர்களும் இணைந்தே தோற்கடிக்கின்றனர். 

இதைப்பற்றிப் பேச முற்பட்டால் ஏராளம் விளக்கங்களை வரலாற்று ரீதியாக அடுக்கி நம்மைக் களைப்படைய வைப்பர். இவர்கள் கூறுவதில் உண்மை உண்டுதான். ஆனால் அந்த உண்மைகளை சுய விமர்சனமாக்கி, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு, தவறுகளைக் களைந்து புதிய நிலையொன்றை எட்டும் மனப்பாங்கும் நோக்கும் வேண்டுமே. அதை ஏன் எட்டுகிறார்களில்லை?சுத்தமான தங்கத்தினால் ஒரு போதுமே ஆபரணங்களைச் செய்ய முடியாது. அதாவது, எந்த உயிரிய கோட்பாடும் மக்களுக்குப் பயன்படவில்லை என்றால் அது புனித சுலோகமாகவே சுருங்கி விடும். 

இந்தப் பலவீனமே இடதுசாரிகளைத் தொடர்ந்தும் பலவீனப்பட்டவர்களாக்கி வெற்றிகளுக்கும் அதிகாரத்துக்கும் மிகத் தொலைவில் நிறுத்துகிறது. 

இதற்கு ஏராளம் உதாரணங்கள் உள்ளன. இலங்கையில் இடதுசாரியக் கட்சிகள் பலவுண்டு. ஆனால் அவற்றிடையே ஒருங்கிணைப்பு எதுவும்  கிடையாது. எல்லாமே உடைந்துடைந்து சிறு சிறு முகாம்களாகவே உள்ளன. சரியாகச் சொன்னால் பெட்டிக்கடைகளைப் போன்றவை. ஏதோ பெயரளவில் கட்சி என்ற அடையாளத்தோடு இருப்பவை. அதற்கப்பால் பரந்துபட்ட அளவில் மக்களின் செல்வாக்கைப் பெற்றவையல்ல. அப்படிச் செல்வாக்கைப் பெறும் முனைப்பைக் கொண்டவையும் அல்ல. 

தமிழ்த்தரப்பிலேயே உடன்பாடு கொள்ளக் கூடிய, மக்கள் அரசியலை முன்னெடுக்கின்ற, சமத்துவமான, மாற்றுச் சிந்தனையைக் கொண்ட, இடது அரசியலை உள்ளடக்கமாகக் கொண்ட தரப்புகள் உண்டு. ஆனால் ஒருங்கிணைய முடியாமல் ஒவ்வொன்றும் தனித்துச் சிதறிக் கிடக்கின்றன. சின்னஞ்சிறிய பெட்டிக்கடைகளாக. 

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், இவர்கள் தங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பைக் காணமாட்டார்கள். அந்தளவுக்குத் தூய்மைவாதம் பேசுவார்கள். அதேவேளை தனித்தனியாக நின்று எதிர்த்தரப்புகளை – மக்கள் விரோத அரசியலை முன்னேடுப்போரைத் திட்டுவார்கள். பொது எதிரி யார் என்று தெரிந்து கொண்டும் அந்த எதிரியை ஒன்றிணைந்து முறியடிக்காமல் தனித்தனியாகப் பிரிந்து நின்று பலமாக்குவர். இதனால் என்ன பயன் விளைந்திருக்கிறது? எதிர்தரப்பைப் பலப்படுத்தி விட்டு தாம் தொடர்ந்தும் பலவீனப்படுகின்ற நிலையிலேயே உள்ளனர். 

இதுவும் மக்கள் விரோதச் செயலே. அதாவது என்ன, ஏது என்று தெரிந்து கொண்டே அதைப் பொருட்படுத்தாதுவிடுவது. 

இதைச் சற்று வெளிப்படையாகவே சொன்னால், இன்றுள்ள தமிழ்த்தேசிய நிலைப்பட்ட அரசியற் கட்சிகளிடத்திலும் அந்தத் தளத்தில் நின்று செயற்படுவோரிடத்திலும் இடது அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டோருக்கு உடன்பாடில்லை. 

இதில் புதிய ஜனநாயக மாக்ஸிஸ லெனினிஸக் கட்சி, சமத்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி, இலங்கைத்தமிழர் மகா சபை, ஈழவர் ஜனநாயக முன்னணி என்றுள்ள கட்சிகள் எல்லாம் மக்கள் அரசியலை ஜனநாயக மேம்பாட்டுடன் மேற்கொள்ளும் வகையில் சிந்திப்பவை. 

ஆனால் இவற்றுக்கிடையில் பொது உடன்பாடில்லை. 

இவ்வளவுக்கும் இவர்கள் பிரதிபலிப்பது சிறுதிரள் சமூகத்தினரிடத்தில்தான். பெருந்திரளோ வலதுசாரிய கவர்ச்சி அலைகளில் ததும்பிக் கிடக்கிறது. 

இதேவேளை தமிழ்த்தேசிய நிலைப்பட்ட (வலதுசாரிய) கட்சிகள் பிரிந்து பல அணிகளாக நின்றாலும் தேவையான சந்தர்ப்பங்களில் ஒன்றிணைந்து விடும். அல்லது ஒருங்கிணைந்து நிற்கும். இது ஒரு சந்தர்ப்பவாதக் கூட்டுத்தான். ஆனால் வெற்றிக்காக – அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அவை இதைச் செய்கின்றன. இதன் மூலமாக அவை தமது இருப்பைத் தக்க வைப்பதுடன் மாற்றுச் சக்திகளுக்கு இடமளிக்காத நிலையை உருவாக்கி விடுகின்றன. 

தேர்தல்கால ஒற்றுமை, தேர்தற் கூட்டணிகள் போன்றவற்றை நீங்கள் இந்த இடத்தில் நினைவெடுத்துப் பார்த்துக் கொள்ளலாம். அதைப்போல பொது நெருக்கடி என்று சொல்லப்படும் அல்லது அவ்வாறு கருதப்படும் இடங்களிலும் அவை ஒன்றிணைந்து, ஒருமித்து நின்று செயற்படும். உதாரணம், நினைவு கூருதல்கள் மற்றும் அரச நெருக்கடிகளின்போது. 

இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உதாரணத்தையும் சொல்லிச் செல்ல வேண்டும். 

இந்த இடதுசாரிகளில் ஒரு தரப்பினர் அரசுடன் இன்று இணைந்து செயற்படுகின்றனர். எல்லோரும் தனித்தனியாகவே இணைந்திருக்கின்றனர். ஒன்றிணைந்து ஒரு தரப்பாக அரசுடன் இணையவில்லை. அதைப்போல அரசாங்கத்தை ஆதரித்து நிற்கின்ற தமிழ்க்கட்சிகள் கூட தமக்குள் ஒரு இணைவைக் கொள்ளாமல் தனித்தனியாகவே அரசுடன் இணைந்திருக்கின்றன. இது தம்மைத்தாமே பலவீனப்படுத்திக் கொள்வதன்றி வேறென்ன? மட்டுமல்ல, அரசாங்கத்தோடு இணைந்தே இவை வேலை செய்கின்றன. அதுவும் ஒரே பிராந்தியத்திலேயே வேலை செய்கின்றன. அதுவும் பலமான எதிர்ப்புச் சூழலுக்குள் நின்றே வேலை செய்கின்றன. சிறுதிரளுக்குள்ளேயே வேலை செய்கின்றன. இப்படியெல்லாம் இருந்தும் தமக்கிடையில் ஒருங்கிணைவைக் கொள்ள முடியவில்லை என்றால்? அதன் அர்த்தம் என்ன? 

இதற்கு உதாரணம், வடக்கில் டக்ளஸ் தேவானந்தாவும் அங்கயன் இராமநாதனும். கிழக்கில் சந்திரகாந்தனும் (பிள்ளையானும்) வியாழேந்திரனும் கருணா என்கிற விநாயகமூர்த்தி முரளிதரனும். 

இவர்களைப் பற்றி ஒரு நண்பர் சொன்ன சுவாரசியமான சம்பவம் ஒன்றைச் சொல்ல வேண்டும். இவர்களில் ஒருவருடைய வாகனம் வழியில் பழுதடைந்து நின்றிருக்கிறது. அதே வழியால் வந்த மற்றவர் என்ன ஏது என்று கேட்காமலே விலகிச் சென்றாராம். இந்த இடத்தில் தற்செயலாக யானை ஒன்று தாக்கியிருந்தால் கூட அதுதான் நல்லது என்று மற்றைய நண்பர் நினைத்திருப்பாராம் என்றார் நண்பர். 

இது வெறுமனே கேலியல்ல. ஆழமான வருத்தத்தின்பாற்பட்ட ஒரு நிலை. இந்தளவுக்குத்தான் உள்ளது நம்முடைய சூழலின் அரசியல் நாகரீகமும் மனமுதிர்ச்சியும். 

ஆக பகை மனநிலை என்பது எல்லோரிடத்திலும் நன்றாக முற்றிக் கிடக்கிறது. இதனால் உரையாடல்களுக்கு யாரும் தயாரில்லை. கட்சிகளின் பெயர்களுக்கும் அவற்றின் செயற்பாடுகளுக்கும் இடையில் எந்தத் தொடர்புமே இல்லை என்ற நிலையில்தான் எல்லாமும் உள்ளன. 

இப்படியான நிலையில் இடது – வலது என்ற வேறுபாடுகளை அதிகமாகக் காண முடியாது. 

ஆனால் ஒரே ஒரு ஆறுதல் என்னவென்றால் பொதுவெளியிலும் பெருந்திரள் மக்களிடத்திலும் இடதுசாரிகள் இனவாதத்தை விதைக்கவில்லை என்பது. கூடவே அதிகாரத்தைக் கைப்பற்றாத காரணத்தினால் ஜனநாயக விரோத –மக்கள் விரோத ஆட்சியையோ அதிகாரத்தையோ பிரயோகிக்கவும் இல்லை என்பதாகும். 

ஆனால் உலக வரலாற்று அனுபவங்களில் இடதுசாரிகளும் உச்சமான அதிகாரத்தைப் பிரயோகித்திருப்பதைக் காண்கிறோம். ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்ததை. எதிர்ப்பை அடக்குதல் அல்லது புரட்சிகர நடவடிக்கை என்ற நிலைப்பாடெடுத்து மிக மோசமான அடக்குமுறையைப் பிரயோகித்ததை. 

இதை ஒத்த இன்னொரு உதாரணம்,நமது விடுதலை இயக்கங்கள் உருமாறித் திசைமாறி மக்கள் விரோத, விடுதலைக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியமை. 

ஆகவே இந்த மாதிரி ஏராளமான அரசியல் பேருண்மைகள் நம்மிடம் பல கோணங்களில் சிதறிக் கிடக்கின்றன. 

இங்கே நாம் பேச வந்த இடதுசாரிகளா –இனவாதிகளா இலங்கையின் மீட்பர்கள் என்பதைப் பார்க்க முற்பட்டால், இடதுசாரிகள் பலவீனங்களின் மத்தியிலும் தவறுகளைச் செய்வதில் குறைவான பாத்திரத்தையே வகித்திருக்கின்றனர். அதிலும் ஒரு சாரார்தான் இதற்குப் பொறுப்புடையோர். ஏனைய தரப்பினருக்கு இந்தளவுக்குப் பொறுப்பில்லை. 

ஆனால் இனவாதிகளின் நிலை அப்படியல்ல. அவர்கள் இனவாதத்தை இரத்தத்தை ஊற்றியே வளர்த்தனர். அதுவும் எதிர்த்தரப்பின் இரத்தத்தை. வன்முறைகளையே தங்களுடைய அரசியலின் ஆயுதமாகப் பயன்படுத்தினர். பகைமையையும் முரணையுமே முதலீடாக்கினர். அமைதியை நிர்லமாக்கினர். சந்தேகத்தையும் அச்சத்தையும் எல்லோரிடத்திலும் விதைத்தனர். ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டனர். சனங்களைப் பகடைக்காய்களாக்கினர். ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்தனர். உண்மைக்கு நிறமடித்தனர். 

(தொடரும்) 

 

https://arangamnews.com/?p=5831

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)

இலங்கையின் மீட்பர்கள் யார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? –(இறுதிப்பகுதி)

—  சிக்மலிங்கம் றெஜினோல்ட் — 

(இறுதிப் பகுதி) 

இடதுசாரி அரசியல் என்பது மக்கள் அரசியலாகும். மக்களையும் அவர்களுடைய நலனையும் உரிமைகளையும் மையப்படுத்திச் சிந்திப்பதாகும். விடுதலை என்பதை முழுமையான அளவில் கருதிச் செயற்படுவது, செயற்படுத்துவது. சுருக்கிச் சொன்னால் மக்களுக்காக அரசியற் கோட்பாடும் நடைமுறைகளும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துவது. கட்சியோ உறுப்பினர்களோ தலைமைகளோ அனைத்தும் மக்களுக்காக என்ற உறுதியுரைப்பையும் நிலைப்பாட்டையும் கொண்டது. ஆகவே மக்களுக்காகச் செயற்படுவது, அவர்களுக்காகத் தம்மை ஈந்து கொள்வது என்பதாகும். 

வலது அரசியல் இதற்கு நேர்மாறானது. கட்சிக்காக, அதன்  கோட்பாட்டுக்காக, அதன் தலைமைக்காகவே மக்கள் என்பதாக அது வியாக்கியானம் கொண்டிருப்பது. நடைமுறைகளும் விதிமுறைகளும் கூட இந்த அடிப்படையில்தான் இருக்கும். இருக்கின்றது. மக்களோ கட்சிக்காகவும் தலைமைக்காகவும் செயற்பட வேண்டும், தியாகம் செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டது. ஆனால் இதை அது உருத்தெரியாமல் வெவ்வேறு பொருத்தமான தந்திரோபாயச் சொல்லாடல்களால் மறைப்புச் செய்து தன்னைத் தளைக்க வைத்துக் கொள்கிறது. இதற்கே தேசியவாதமும் இனவாதமும் துணையாகப் பயன்படுத்தப்படுகின்றன. 

இலங்கையின் 1948க்குப் பின்னரான அரசியலானது வலது சக்திகளின் ஆதிக்கத்திலேயே இருந்துள்ளது. இடையிடையே இடதுசாரிகளின் பங்கேற்புடன் அவ்வப்போதான ஆட்சிகள் நடந்திருந்தாலும் அவையும் வலதுக்குக் கட்டுப்பட்டதாக அல்லது அதனோடு இசைவாக்கம் கொண்டதாகவே இருந்துள்ளது. 

ஆகவே தொகுத்துப் பார்த்தால், எழுபது ஆண்டுகளுக்கு மேலான ஆட்சி என்பது வலதுகளின் ஆட்சியாகவே இருந்துள்ளது. 

இந்த ஆட்சிக் காலத்தில்தான் பேரழிவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இனமுரண் உச்சமடைந்திருக்கிறது. கடன்பழு கூடியுள்ளது. பல லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு அகதிகளாகப் பெயர்ந்திருக்கின்றனர். வெளிச் சக்திகளின் தலையீடுகள் அதிகரித்த நிலை ஏற்பட்டுள்ளது. நாடு ஜனநாயகத்திலும் பொருளாதாரத்திலும் வீழ்ச்சிடையடைந்துள்ளது. லட்சக்கணக்கானோர் அங்கவீனர்களாகியுள்ளனர். 

ஒரு கணம் கண்களை மூடி நியாயமாகச் சிந்தித்தால் மக்கள் வழங்கிய ஆணையை இவர்கள் எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று தெளிவாகத் தெரியும். நாட்டை அப்படியே கெடுத்துக் குட்டிச் சுவராக்கியுள்ளனர். 

அப்படியென்றால் இந்தத் தரப்பு தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தில் இருக்கத் தகுதியற்றது. இதை இவர்கள் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள். ஆனால் வரலாறு இதை உணர்த்தி வருகிறது. 

இதனால்தான் சிறிலங்கா சுதந்திரக் கட்சி மிகப் பின்னடைவைச் சந்திக்க வேண்டி வந்தது. இது வரலாற்று விதியாகும். ஆனாலும் அதை மீண்டும் மிகக் கடினமாகக் கட்டியெழுப்பினார்கள். இருந்தும் இப்பொழுது அது மறுபடியும் உடைந்து நலிந்துள்ளது. 

பதிலாக அது பொதுஜன பெரமுன என்ற ஒரு புதிய லேபிளைக் கொண்டுள்ளது. ஆனால் அடிப்படையில் இரண்டும் ஒன்றே. அதே ஆட்கள், அதே கோட்பாடு, அதே நிலைப்பாடு, அதே மாதிரிகள் என. 

இதே கதையும் கதியும்தான் ஐ.தே.கவுக்கும். ஐ.தே.க இப்பொழுது உடைந்து நொருங்கியுள்ளது. சு.க.வுக்கு எப்படிப் பொது ஜன பெரமுனவோ அப்படியே ஐ.தே.கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி. 

இவற்றுக்கிடையில் என்ன வித்தியாசம் என்று சத்தியமாக யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 

இது நாடகமன்றி வேறென்ன? ஏமாற்றன்றி வேறேது? 

இப்படித்தான் தமிழ்த்தரப்பிலும். தமிழரசுக் கட்சி சரியில்லை என்று (அதாவது அதன் மீது மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர் என்ற நிலையில்) தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற புதிய லேபிளை ஒட்டிக் கொண்டது. 

இதைப்போலத்தான் தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குப் பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி என்ற மாதிரி புதிய லேபிள்களை உருவாக்கியிருப்பது. இடையில் தமிழ் மக்கள் பேரவை என்ற இன்னொரு தில்லாலங்கடி… 

அடிப்படையில் இவற்றுக்கிடையில் எந்த வேறுபாடுகளும் இல்லை. அதே குணவியல்பு. அதே ஆட்கள். அதே பம்மாத்து மற்றும் மக்கள் விரோத தன் மைய அரசியலும். 

மட்டுமல்ல, தமிழ்த்தரப்பிலும் இந்தச் சக்திகள்தான் மாறி மாறி அதிகாரத்தில் இருந்துள்ளன. மக்களிடம் செல்வாக்கைப் பெற்றிருந்தன. 

அப்படியிருந்தும் மக்களுக்கு ஏதாவதொரு விமோசனத்தையோ, சிறிய மாற்றத்தையேனுமோ செய்திருக்கின்றனவா? …இல்லையே! 

பதிலாக முரண்பாட்டையே ஊக்கி வளர்த்துள்ளன. 

மக்களின் வாழ்க்கையைக் கீழிறக்கியுள்ளன. 

சமூகங்களைப் பிளவுற வைத்துள்ளன. 

அரச ஒடுக்கு முறைக்கு எதிராகப் போராடுகிறோம் என்ற கோதாவில் மக்களைப் பாதிப்புக்குள்ளாக்கி விட்டுத் தாம் மட்டும் அரசுடன் இணைந்த ரகசிய நடவடிக்கைகளில் கொழுத்திருக்கின்றனர். 

ஆகவேதான் இவை மக்களுக்கு எதிரான சக்திகள் என்கிறோம். 

இன்னும் பத்து ஆண்டுகளல்ல, ஐம்பது ஆண்டுகளை இவர்களிடம் கொடுத்தாலும் இவர்களால் ஒரு சிறிய மாற்றத்தையும் உருவாக்க முடியாது. அதையும் கரியாக்கி விடுவார்கள். 

எனவேதான் இவர்களை – இந்தச் சக்திகளை நாம் கழித்து விட வேண்டியுள்ளது. கழித்துக் குப்பைத் தொட்டிக்குள் போட்டு விட வேண்டும். 

ஆமாம், வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள். 

பதிலாக இலங்கையின் பல்லினத் தன்மைக்கும் பன்மைத்துவச் சூழலுக்கும் அமைய புதிய மக்கள் சிந்தனைப் போக்குடைய – இடது நிலைப்பட்ட தரப்பினரே ஆட்சிக்கு வர வேண்டும். 

அவர்களே மாற்று அரசியற் பண்பாட்டை உருவாக்கக் கூடியவர்கள். மக்கள் அரசியலைச் சிருஸ்டிக்கக் கூடியவர்கள். 

இதுவரையான வரலாற்றில் அவர்கள் –அந்தச் சக்திகள் – மையத்தில் நின்று ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்கமுடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஆட்சியதிகாரத்தில் இருந்தோரை ஓரளவுக்கேனும் நெறிப்படுத்தியது இடதுசாரிகளின் மக்கள் நிலைப் போராட்டங்களேயாகும். 

இப்போது கூட ஜனநாயகத்துக்கும் உரிமைகளுக்கும் சமத்துவத்துக்கும் தேச நலனுக்கும் நாட்டின் இறைமைக்குமாக மெய்யாகவே போராடிக் கொண்டிருப்பது இடதுசாரிகளே. 

விலையேற்றத்திற்கு எதிராக, தொழில் உரிமைகளுக்காக, சம்பள உயர்வுக்காக, இயற்கை வளங்களின் சுரண்டலுக்கும் அழிப்புக்கும் எதிராக, ஜனநாயகத்துக்காக, அதிகாரக் குவிப்புக்கு எதிராக, வெளிச்சக்திகளின் தலையீடுகளை எதிர்ப்பதாக, அரசியல் உள் நோக்கமுடைய கைதுகள், கொலைகள், தவறான அரசியல் நடவடிக்கைகள் போன்றவற்றுக்கு எதிராக என இடதுசாரிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர். 

இவர்களில் ஒரு சிறிய தரப்பே ஆட்சியில் – அரசோடு இணைந்து பங்கேற்கிறது. 

ஏனைய இடது சக்திகள் அத்தனையும் மக்களோடு நின்று அரசை நெறிப்படுத்தவும் ஆட்சியைச் சீரமைக்கவும் உரிமைகளை நிலை நிறுத்தவும் போராடுகின்றன. 

கொழும்பிலும் கண்டி, ஹற்றன், யாழ்பாணம் போன்ற நகரங்களிலும் நடக்கும் சிவப்புப் போராட்டங்களுக்கு என்றொரு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. 

இப்போது கூட கொழும்பு – கோட்டையிலும் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலும் இந்தச் சிவப்புகளின் ஆக்ரோஸமான குரலை நீங்கள் கேட்கலாம். 

மழையிலும் வெயிலிலும் நின்று இவர்கள் கூவுகிறார்கள். எதற்காக? யாருக்காக? எந்த அதிகாரமும் இல்லாத இவர்களுடைய இந்தக் குரல்தான் அதிகாரத்தையே ஆட்டுகிறது. 

எனவேதான் சொல்கிறோம், அரசியல் வரலாற்றில் இடதுகளின் பாத்திரம் என்பது வலுவானது. வரலாற்று முக்கியத்துவமுடையது. மக்கள் இன்று அனுபவிக்கின்ற பாதி அரசியல் உரிமைகள் மற்றும் மக்கள் நலன்கள் எல்லாமே இடதுகளினால் உருவாகியவையே என்று. 

இதை யாராலும் மறுத்துரைக்க முடியாது. 

ஆகவே இனியாவது இலங்கைத் தீவை ஒரு புதிய நிலையை நோக்கி நகர்த்த வேண்டும் என்றால், இலங்கை ஒரு பல்லின சமூகங்கள் வாழும் நாடு என்ற வகையில் பன்மைத்துவப் பண்பையும் அதற்கான ஜனநாயக விழுமியங்களையும் உருவாக்கி வளர்க்க வேண்டும் என்றால் அதற்கு இடதுசாரிகளே பொருத்தமானவர்கள். 

இனவாதிகளோ மதவாதிகளோ அல்ல. 

இடதுசாரிகளே சுதேசியப் பொருளாதாரத்தைக் குறித்துச் சிந்திக்கக் கூடியவர்கள். நவீனத்தைக் குறித்த புரிதலைக் கொண்டவர்கள். விரிந்த சிந்தனையை உடையவர்கள். நெறிமுறைகளை மீறத் துணியாதவர்கள். இதுவரையான வரலாற்றுப் பங்களிப்பிலும் பாத்திரத்திலும் அவர்களுடைய அடையாளத்தை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 

இதை விளங்கிக் கொள்ளவோ விளங்கியும் ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை என்றால் அழிவு அரசியலையே நாம் விரும்புகிறோம். தொடரப்போகிறோம் என்றே அர்த்தமாகும். 

அழிவு அரசியற் சக்திகள் எத்தனை தடவை வென்றாலும் எதையும் புதிதாக ஆக்கப் போவதில்லை. வரலாற்று நிரூபணமும் அதுவே. 

மீட்பர்கள் யார்? என்று அறியாமல் இன்னும் எத்தனை காலம்தான் நெருப்பில் எரிவது? குழிக்குள் வீழ்வது? 

ஆனால் இடதுகளும் தம்மை மீள் பரிசீலனை செய்து மீள்நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வரலாற்றையும் அரசியலையும் சமூகப் பொருளாதாரவியலையும் விஞ்ஞான பூர்வமாக விளங்கிச் செயற்படக் கூடிய இடதுசாரிகள் தமக்குள் பிளவுண்டு எதிர்த்தரப்புகளுக்கு இடமளிப்பது மக்கள் விரோதமாகும்.  

(முற்றும்) 

 

https://arangamnews.com/?p=5913

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.