Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல்

by vithaiAugust 1, 2021
cbvxcbxcb.jpg

பன்னிரண்டு வயது வரை யாழ்ப்பாணத் தமிழைப் பேசக்கூடிய கிராமச்சூழலில் வளர்ந்தோம். ‘கெற்றப்போல்கள்’ எனப்படும் கவண்களால் குருவிகளை அடிப்பது விளையாட்டு, பொழுதுபோக்கு. ஊரில் வாய்மொழியாக வந்து சேர்ந்த நம்பிக்கை ஒன்றிருந்தது. ‘தோட்டக்காட்டான் குருவியடிச்சு ரத்தத்தை கெற்றப்போலில் தடவினால் நல்லா அடிக்கும்’. அந்தக் குருவி கத்தும் ஓசை ஒருவகை இரட்டைச் சந்தத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் அதன் சத்தத்தைப் பின்பற்றி அவ் இரட்டைச் சத்தத்தை ’தோட்டக்காட்டான் – வாடா பாப்பம்’ என்று கூவிக்கொண்டே குருவியைத்தேடி அடிப்போம். இது வட்டாரப் பேச்சு மொழியின் மொழியிலும் மன அமைப்பிலும் பிள்ளைகளுக்கு சமூகம் வழங்கியிருக்க கூடிய மொழிவழி கையளிப்பின் அபத்தத்தின் பிறிதொரு உதாரணமிது.

இலங்கையினுடைய சுதேச மொழிச்சமூகங்களுக்குள்ளே காலனியர்களால் தோட்ட வேலைகளுக்காக அழைத்துவரப்பட்டு தங்களுகென்றொரு வாழ்வு முறையையும் நிலப்பண்பாட்டையும் அடைந்திருக்கும் மலையகத் தமிழ் மக்களை ‘தாழ்வாக’ எண்ணும் மனோநிலைகள் இன்னும் நிலவி வருகின்றன. குறிப்பாக ஒரே மொழியையும், பெரும்பான்மைப் பண்பாட்டுக்கூறுகளையும் பகிர்ந்து கொள்ளத்தக்க தமிழ் மொழியின் இரண்டு பெரிய வட்டார வழக்குகளாக இருக்க கூடிய மட்டக்களப்பு தமிழ், யாழ்ப்பாணத்தமிழ் ஆகியவற்றின் அன்றாடப் பேச்சு வழக்குகளில் ‘தோட்டக்காட்டான்’ ‘வடக்கத்தையான்’ போன்ற இழிநிலை அர்த்தங்களைக்கொண்ட பிரயோகங்கள் கிஞ்சித்தும் மனத்தயக்கம் இன்றி பகிரப்படுகின்றன.

வட்டார வழக்கு என்பது ஒரே மொழியில் இருக்கக் கூடிய வெவ்வேறு ஒலிப்பு, சொல், கூற்று , அமைப்பு மற்றும் அர்த்தங்களை வித்தியாசப்படுத்தத்தக்க மொழிப்பிரயோகங்களை குறிப்பாக பேச்சு மொழிப்பிரயோகங்களை குறிக்கின்றது. மொழியியலில் இதைக் ’கிளைமொழி’ என்பர். அடிப்படையில் வட்டார வழக்கு ஒரே மொழிக்குள் இருக்கக்கூடிய வெவ்வேறான வடிவங்களால் தன்னை தனித்துவப்படுத்திக் கொள்கின்றது. இவை இனம், பிரதேசம், சாதி, வர்க்கம் போன்ற பின்னணிகளில் வட்டார வழக்குப் பண்பாட்டை உருவாக்கிக் கொள்கின்றன. வட்டார மொழியினது அடிப்படை இயல்பும் பிரயோகமும் இலக்கிய அல்லது எழுத்து மொழியின், இன்னும் விளங்கும் படி சொன்னால் இலக்கண அமைப்பு மொழியில் இல்லாத செறிவான மொழிப்பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டிருக்கும். தமிழை கா. சிவத்தம்பி மொழிவழிப்பண்பாட்டுச் சமூகம் என்பார். உலகம் முழுவதும் உள்ள பண்டாட்டுச் செறிவும் பரவுதலும் கொண்ட குழுமங்களில் மொழியின் சிந்தனையும் அமைப்பும் அதன் பண்பாட்டு நியமங்களை ஒழுங்குபடுத்துவதில் பெரும்பகுதியை வைத்திருக்கின்றன.

சமூகத்தின் கருத்தியல் மேலாண்மையை வடிவமைக்கும் பெரிய பகுதியை மொழியானது தன்னிடம் எடுத்துக்கொள்கின்றது. நவீனத்துவ அறிவுத்துறைகள் மரபார்ந்து இருந்துவந்த இலக்கிய வழக்கை மட்டும் ’அறிவாகக்’ கருதும் தன்மையினை விலத்திச் சென்று ‘பேச்சு’ மொழியினை ஆய்வுப்பொருளாக அறிவுச்செயற்பாடுகளின் மையத்திற்கு எடுத்துவந்தன. இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழியியல் அறிவுத்துறையாக வளரும்போது பேச்சு மொழியினையும் வட்டார மொழியினையும் கொண்டே மொழி மூலமாக உலகத்தை விளக்க முற்பட்டது. அதன்படி மொழியியல் என்னும் சமூக அறிவுத்துறை ‘பேச்சு வழக்கினை’ ஆராய்ந்தது. முக்கியமாக உலகெங்கும் இருக்கக்கூடிய கிளைமொழிகள் அல்லது வட்டார மொழிகளின் மீது அறிவுத்துறைகள் மேற்கொண்ட ஆய்வுகள் வட்டார மொழிகளின் உள்ளூர் அறிவு, அவற்றின் அமைப்பு என்பன மனித அறிதல் முறையில் குறிப்பாக தத்துவ மேம்படுத்தல்களில் பெரும்பங்காற்றின. அதேவேளை வட்டார மொழிகள் கொண்டுள்ள, தொன்றுதொட்டு காவிவருகின்ற சமூக அசமத்துவங்களையும் கண்டுகொள்ள முடிந்தது. பிரதேசவாதம், இனவாதம். வர்க்க ஏற்றத்தாழ்வு, ஆணாதிக்கம், சாதியம் போன்றன நடைமுறைப் பயில்வில் இருப்பதைக்காண்கிறோம். மொழி சமூகத்தின் சிந்திக்கும் ஞாபகங்களை வைத்திருக்கும் பகுதி என்பதால் அனைத்து அசமத்துவங்களையும் சேர்ந்த்தே அது தனக்குள் எடுத்துக்கொள்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை மட்டக்களப்புத் தமிழ், யாழ்ப்பாணத்தமிழ், மலையகத் தமிழ், முஸ்லீம் தமிழ், கொழும்புத்தமிழ், நீர்கொழும்புத்தமிழ், என்பனவும் சிங்கள மக்களிடையே கரையோரச்சிங்களம், கண்டிச்சிங்களம் என்று பிரதேச, வர்க்க அடிப்படையில் மாறுபடக்கூடிய சிங்களம் காணப்படுகின்றது. அங்கேயும் கரையோர, கண்டிய வேறுபாடுகள் நுட்பமாக சாதி வர்க்க ஆதிக்க, வடிவங்களால் கையாளப்படும் சமூக நிலையே காணப்படுகின்றது.

இலங்கைத் தமிழ்ச் சமூகங்களிலே யாழ்ப்பாணச்சமூகம் உயர் சைவ வேளாளர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ‘உயர் குழாம்’ மனநிலையைக் கொண்ட ஆதிக்க சமூகத்தின் கருத்தியல் மேலாண்மையைக் கொண்டது. அது சாதியம், வர்க்கம் என்பவற்றில் தன்னை மேலானதாகக் கருதுவது போலவே ‘அசலான’ நல்ல தமிழைப் பேசக்கூடிய சமூகம் என்று தங்களை மார்தட்டிக்கொள்ளவும் பிற சமூகங்களை, பிற வட்டார வழக்குகளை கொண்ட மக்களை ஏளனமனநிலையில் காணும், நடாத்தும் இயல்பு அவர்களின் வட்டாரப் பேச்சில் அவதானிக்கலாம். அவர்கள் மலையக மக்களின் தமிழை வடக்கத்தையான் தமிழ், முஸ்லீம் மக்களின் தமிழை ‘சோனகர் தமிழ்’ என்று தங்களில் இருந்து தாழ்த்தியே கருதுகின்றார்கள். எப்படி யாழ்ப்பாண ஆதிக்க சமூகம் அதே சமூகத்தைச் சேர்ந்த மக்களை சாதியால் ஒடுக்குகின்றதோ அதே மனநிலையின் இன்னொரு பகுதியாக பிரதேச வாதமும், வட்டார வழக்கு மேன்நிலையாக்கத்தையும் தொடர்ச்சியாகப் பேணவே நினைக்கின்றது.

சென்னைத்தமிழ் பேசத்தக்க மக்கள் எப்படி சாதியாலும், பொருளாதார பலத்தாலும் விளிம்புநிலை மக்களாக இழிநிலை கொண்டவர்களாக தமிழ்நாட்டின் பெரும்பான்மை ஆதிக்க மனநிலையினால் கருதப்படும் நடைமுறை இன்னும் நிலவி வருகிறதோ அதைப்போன்றதொரு மனோநிலையின் பகுதிகளை தமிழ்ச்சமூகத்தின் ஆதிக்க சமூகங்கள் தாங்கள் ஒடுக்கும் சமூகங்களின் மீதும் திணிக்கின்றன. இந்திய சமூகங்களில் இருக்கக் கூடிய பிராமணீய செல்வாக்கும் ஆதிக்கமும் சமஸ்கிருதத்தை ‘தேவபாசை’ என்று குறிப்பிடுவதன் மூலம் அதனை சுதேச மொழிகளுக்குள், மொழிவழிப்பண்பாடுகளுக்குள் கொண்டுவந்து சேர்த்து பிராமண கிளை மொழிகளை உருவாக்கி இருக்கின்றார்கள். அவர்களுடைய கிளை மொழி அல்லது வட்டார மொழி அவர்களுடைய சாதிய, பொருளாதார மேலாண்மையைப் பிடித்துக்கொண்டு மையத்தில் சென்று அமர்ந்து ஏனைய ஒடுக்கு முறை வடிவங்களுடன் தானும் இணைந்து கொள்கின்றது. இதை நாம் மொத்த மானுட சமூகங்களுக்கும் பொருத்திப் பார்த்துவிட இயலும்.

ஆதிக்க மனநிலையையும் ஒடுக்கும் இயல்பையும் கொண்ட சமூகங்களும், பண்பாடுகளும் ஒடுக்குதலுக்கும் அதை நிலைப்படுத்துவதற்கும் மொழியை ஒரு அடையாளமாக, கருவியாக மாற்றுகின்றன. மொழியும் குறிப்பாக பேச்சுமொழியும் தங்களுடைய கிளைமொழி இயல்புகளை அவ் ஆதிக்க சமூகங்களுக்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ளவும் பின்பு மொழியே சமூகத்தின் உள நிலைமையைத் தீர்மானிகத்தக்க உறுதிப்பாட்டைச் சென்றடைந்துவிடுகின்றது.

ஆதிக்க மனநிலை கொண்ட மொழிப்பிரயோகம் கொண்ட சமூகங்கள் ஆதிக்க மொழி வடிவங்களுக்கும், ஒடுக்கப்படும் சமூகங்கள் அதற்கு அடிபணியவும் பயின்றுகொள்கின்றன.
சாதியும் துடக்கும் என்ற கட்டுரையில் மனோன்மணி சண்முகதாஸ் குறிப்பிடும் யாழ்ப்பாண வட்டார தமிழில் உள்ள வழக்கமொன்றை இங்கே குறிப்பிட வேண்டும்.
”தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெயர் சூட்டப்பட்டது கிட்டத்தட்ட ஆடு, மாடுகளுக்கு அவற்றின் நிறம், உருவ ஒழுங்கமைப்பு கொண்டே பெயர் வைப்பதனைப் போலவே பெயர் சூட்டப்பட்டன. உதாரணமாக மாடுகளுக்கு கறுவல், சிவலை கொடிச்சி. வாலன், கட்டியன், செங்காரி, மாவெள்ளை, நரையன், மறையன் போன்ற பெயர்கள் வைத்து அழைப்பதுண்டு அதனைப்போல தாழ்த்தப்பட்ட மக்களையும் நிறம், உருவமைப்பு போன்றவற்றின் அடிப்படையில் பெயர் வைத்து அழைக்கப்பட்ட நடைமுறை கடந்த சகாப்தங்கள் வரை இருந்து வந்திருக்கின்றது. உதாரணத்திற்கு கறுவல், சிவலை, வெள்ளையன், எல்லுப்பொலை, கட்டையன், பெரியான். சடையன், இத்தினி, சிவப்பி, கறுப்பி, குட்டான் போன்ற பெயர்கள் இருந்ததைக் காண முடியும்”
மேலும் வட்டார மொழியில் மொழியில் ஆணாதிக்க தன்மை அதிகம் இருக்கின்றது. தமிழில் உள்ள வசைச்சொற்களின் பொது வடிவங்கள் பெண்களை இழிவாகக் கருதுபவையும், சாதியைச் சொல்லி இழிபவையுமாக உள்ளன. இவற்றின் வெவ்வேறு வடிவங்களையும் அர்த்தங்களையும் வெளிப்படுத்தும் ஆணாதிக்கம் செறிந்த சொற்கள், கூற்றுக்கள் என்பவற்றை அவதானிக்க இயலும். அவை எந்த ஆட்சேபனையும் இன்றி பயன்படுத்துவது இயல்பாக இருக்கின்றன. அவை வசைச்சொற்களாக இருக்கின்றனவே தவிர அவை தாராளமாகவே புழக்கத்தில் உள்ளன.

இவ்வாறு வட்டார மொழி பெருமிதங்களினாலும் ஒடுக்கும் இயல்பினாலும் மையப்படுத்தப்படும் போது அதன் சமூக ஆபத்தைக் களையும் வழிமுறைகளை சமூக சிந்தனையும் செயல்வாதங்களும் அடையவேண்டும். அதற்கு நாம் மொழியின், வட்டார மொழியின் அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு சமூக அநீதியை ஒரு பெரிய கட்டமைப்பு கொண்டிருக்கும்போது அக்கடமைப்பினை அறியாமலும் அறிந்தும் தாங்கி நிற்கின்ற உபகட்டமைப்புக்களின் அநீதிகளை எதிர்ப்பதும் அவற்றை அரசியல் வயப்படுத்தி சனநாயக முறைப்படுத்துவதும் அவசியம். இங்கே ‘அமைப்பு’ என்பது முக்கியமான பதமாகும். இங்கே அசமத்துவம் உள்ள சமூகங்கங்கள் அதன் பகுதிகள் ஓர் அமைப்புடனேயே இருக்கின்றன. இங்கே சமூகம், மொழி, சாதி, சமயம் என்று யாவும் அமைப்பாக மாற்றமுற்றிருக்கும் வரலாற்று பயணம் எனப்து பெரியது செறிவானது. எனவே அவற்றை சனநாயக மயப்படுத்த நாம் கைக்கொள்ள கூடிய முக்கியமான பொறிமுறையாகவும் அமைப்பாக்கமே இருக்கின்றது. கண்டுபிடிக்கப்படுகின்ற/ இனங்காண்கின்ற அசமத்துவங்களுக்கு எதிராக வைக்கப்படக்கூடிய அமைப்புக்கள் அடிப்படையில் மூன்று விடயங்களைக் கொண்டிருக்க வேண்டியவை.

1. பொருத்தமான சமகாலத்தன்மையுள்ள கருத்தியல், நடைமுறை அறிவுச்செயல்களின் வழிவந்த கொள்கைகள்.
2. செயலூக்கம் மிக்க சமகாலத்தை எதிர்கொள்ளத்தக்க சனநாயக பூர்வமான அமைப்பாக்கம்.
3. கொள்கை, அமைப்பு இவை மூலம் பிரயோகிக்க கூடிய வழிமுறைகளும் தந்திரங்களும் கூட்டு உழைப்பும்.

மொழி என்கின்ற பெரிய நிறுவனத்தை எதிர் கொள்வதற்கு தனியாக ஓர் அமைப்பு வேண்டுமா என்றால், அதுவும் பாதகமற்ற நல்லதொரு விடயமாகும். ஏனெனில் மொழியை அரசியல் மயமாக்கலின் பொருட்டு அணுகத்தக்க அறிவுத்துறைகளைக்கொண்ட அமைப்புக்கள் கீழை நாடுகளில் மிகவும் அரிதாகவே இருக்கின்றன. பல்கலைக்கழகங்களில் இருக்கக்கூடிய துறைகளும் அரசியல் மயப்படாத, அரசியல் நீக்கப்பட்ட ஏட்டுச்சுரக்காய் தன்மைகளைக்கொண்டே இருக்கின்றன. ஆயினும் பிற சமூக அமைப்புருவாக்கங்களின் போது மொழியினுடைய, குறிப்பாக உள்ளூர் அறிவையும் நடைமுறையையும் வைத்திருக்கத்தக்க வட்டார மொழிகளை ஆராய்வதும் சமூகம் அவை தொடர்பில் கொண்டிருக்கும் அநீதிகளை எதிர்க்கவும் சமூகத்திற்கு அறிவூட்டவும் கூட்டு உழைப்பு அவசியமாகும்/. தனியான அமைப்பு மட்டுமன்றி ஒவ்வொரு அமைப்பாக்கத்தின் போதும் இனவாத, மதவாத, பிரதேசவாத, சாதிய , ஆணாதிக்க மனநிலைகளுக்கு எதிரான அமைப்பு என்பதைக் கொள்கையிலும் நடைமுறையிலும் கொண்டுவரும் போது மேற் சொன்ன ஒடுக்குமுறைகள் மொழியில் அறியாது பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் அமைப்பிடம் விழிப்புத்தன்மை அவசியமாகும்.

மொழியினுடைய அசமத்துவங்களை கவனித்து எதிர்க்க வேண்டிய சரி செய்ய வேண்டிய சமூகப்பகுதிகளில் கலை இலக்கியங்கள், வட்டார வழக்குகள், சடங்குகள், அன்றாடப் பேச்சு, வாய்மொழி மரபுகள், பழமொழிகள், சொலவடைகள், கதைகள், தொன்மங்கள், போன்றன இலக்கிய அல்லது முறை வழக்கை விடவும், பேச்சு வழக்கிலும் வட்டார தன்மையிலும் பயில்வில் இருக்கும் போது பாமரமக்களின் மனத்தை வடிவமைப்பதில் அவை பெரிய பங்கை எடுக்கின்றன. வட்டார வழக்கில் இருக்கக்கூடிய இலக்கியங்களான பள்ளு, அம்மானை, நாடகம், கூத்து போன்ற வடிவங்களும் சரி வட்டாரப்பேச்சினை பிரதிபலிப்பவை. இவற்றில் இருக்கத்தக்க ஒடுக்கும் ஒடுக்கப்படும் இயல்புகளையும் அவை இலக்கியங்களாக நவீன இலக்கியம் எடுத்துக்கொள்ளும்போது இவ் அசமத்துவங்களை ‘அரசியல்’ வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. அது போலத்தான் மொழி புழங்கத்தக்க ஒவ்வொரு வெளியும் கவனிக்கப்பட வேண்டியவையே.

– யதார்த்தன்

(தாய்வீடு இதழிலில் வெளியான கட்டுரை)

 

https://vithaikulumam.com/2021/08/01/01082021/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.