Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைகள் தினம்: தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தை ஆட்டிப் படைத்து 26 பேரை கொன்றபின் கும்கியான மூர்த்தியின் கதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யானைகள் தினம்: தமிழ்நாடு, கேரளம், கர்நாடகத்தை ஆட்டிப் படைத்து 26 பேரை கொன்றபின் கும்கியான மூர்த்தியின் கதை

  • மு. ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக
12 ஆகஸ்ட் 2021, 05:16 GMT
புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்
மூர்த்திக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டபோது

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

மூர்த்திக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டபோது

சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு 25க்கும் மேற்பட்டவர்களை கொடூரமாக தாக்கிக்கொன்றதோடு, தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில மக்களை அச்சுறுத்தி வந்த ஆக்ரோஷமான காட்டு யானை, இன்று முதுமலையின் அடர்ந்த வனப்பரப்பை ரசித்து பார்த்தபடி அமைதியான கும்கி யானையாக நிற்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை யானைகள் முகாமில் இருக்கும் 28 யானைகளில், மிகவும் சாதுவான யானை, புதிய மனிதர்களிடம் விரைவாக பழகும் யானை, யாரையும் தொந்தரவு செய்யாத யானை என இன்று பெயர் வாங்கியுள்ளது 58 வயதாகும் மூர்த்தி.

முதுமலை யானைகள் முகாமில் உள்ள ஒவ்வொரு யானைக்கும் ஒரு கதை உண்டு. அதில், மூர்த்தியின் கதை மிகவும் பிரபலமானது என்பதைவிட வலி நிறைந்தது என்றே குறிப்பிட வேண்டும்.

02.மூர்த்தியின் உடல் அளவுகளை அளக்கும் வனத்துறையினர்

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

மூர்த்தியின் உடல் அளவுகளை அளக்கும் வனத்துறையினர்

சுட்டுக்கொல்ல உத்தரவு

1994ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு, கேரளம் மற்றும் கர்நாடகம் ஆகிய மூன்று மாநில மக்களை அச்சுறுத்தி வந்த மூர்த்திக்கு அப்போதைய பெயர் 'மக்னா'. தந்தமில்லாத ஆண் யானையை இவ்வாறு அழைப்பர்.

1997 - 98 கால கட்டத்தில் மக்னா காட்டு யானையால் மனித உயிர் சேதம் அதிகமானது. சுமார் 26 நபர்களை கொடூரமாக தாக்கிக்கொன்றதாக வனத்துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர்களில் 15க்கும் மேற்பட்டோர் கேரளத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், கேரள மக்கள் மத்தியில் மக்னா மீதான வெறுப்பு அதிகமானது.

உயிரோடு பிடிக்கும் முயற்சிகள் தோல்வியடைய, ஒரு கட்டத்தில் மக்னா காட்டு யானையை சுட்டுக்கொல்ல உத்தரவிடுகிறது கேரள அரசு.

துப்பாக்கி சத்தமும், குண்டுகளும் மக்னாவிற்கு புதிதல்ல. விளைநிலங்களில் இருந்து விரட்டுவதற்காக பட்டாசுகளை வெடிப்பதோடு, ஏர்கன் துப்பாக்கிகளை பயன்படுத்தி பலமுறை சுட்டு விரட்டியுள்ளனர்.

இன்று வரை மூர்த்தியின் உடல் முழுவதும் ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய இரும்பு பால்ரஸ் குண்டுகள் ஏற்படுத்திய ஆழமான தழும்புகள் உள்ளன. ஆனால், இம்முறை உயிரைக்கொல்லும் துப்பாக்கிகளை ஏந்தியபடி கேரள வனத்துறையினர் மக்னாவை தேடி வந்தனர்.

கயிறு மற்றும் சங்கிலியால் கட்டப்பட்ட மூர்த்தி

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

கயிறு மற்றும் சங்கிலியால் கட்டப்பட்ட மூர்த்தி

கேரள வனத்துறையினருக்கு போக்கு காட்டிவிட்டு தமிழகத்திற்குள் நுழைந்தது மக்னா. ஒருவேளை தமிழக வனப்பகுதிக்குள் நுழையாமல் இருந்திருந்தால் முதுமலைக்கு ஓர் அமைதியான கும்கி யானை கிடைத்திருக்காது.

மேலும், தமிழகத்திற்குள் சென்றால் உயிர் பிழைத்துவிடுவோம் என்ற திட்டமும், இதுதான் மாநில எல்லை என்ற வரையறையும் மக்னா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒவ்வொரு நாளும் தனது உணவுக்காகவும், உயிருக்காகவும் மனிதர்களின் வன்முறையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மனிதர்களிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற மக்னாவின் எண்ணம் தமிழகத்திலும் மனித உயிரிழப்புகளை ஏற்படுத்தியது.

அடங்காத ஆக்ரோஷம்

தமிழ்நாடு எல்லைக்குள் நுழைந்த மக்னா, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் வனப்பகுதிகளில் பதுங்கி இருந்தது. ஒரு நாள் உணவுக்காக ஊருக்குள் நுழைந்த மக்னா, 18 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவரை கொடூரமாக தாக்கிக்கொன்றது.

இச்சம்பவம், கூடலூர் மக்களை காட்டு யானைக்கு எதிராக போராட்டம் நடத்தும் அளவிற்கு தள்ளியது. சுமார் 6 டன் எடையுள்ள கம்பீரமான மக்னா ஊர் சாலைகளில் ஆக்ரோஷமாக ஓடி வரும் காட்சிகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.

நெருக்கடிகள் அதிகமாக, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க தமிழ்நாடு வனத்துறை முடிவு செய்து பணிகளை துவங்கியது.

மூர்த்தியை முன்னோக்கி தள்ளும் கும்கி யானை

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

மூர்த்தியை முன்னோக்கி தள்ளும் கும்கி யானை

தும்பிக்கையை காற்றில் வீசியபடி, புழுதிபறக்க தன்னை நோக்கி ஓடிவந்த காட்டு யானைக்கு, வெறும் 10 அடி தூரத்தில் மயக்க ஊசி செலுத்திய நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்துகொண்டார் ஓய்வுபெற்ற வனத்துறை அலுவலர் பி.ஆர்.மணி.

'கூடலூர் வட்டத்திலுள்ள தேவர்சோலை எனும் பகுதியில் மக்னா யானை ஊருக்குள் வராதபடி காட்டுக்குள் தடுத்து வைத்திருந்தோம். 50க்கும் மேற்பட்ட வனத்துறை அலுவலர்கள் மக்னாவிற்கு மயக்க ஊசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டோம்.

நான் மக்னாவை பின்தொடர்ந்து ஜீப்பில் சென்று கொண்டே இருந்தேன். யானையை ஓர் இடத்தில் நிறுத்தி மயக்க ஊசி செலுத்துவதற்காக காட்டிற்குள் ஒரு பகுதியில் பலாப்பழங்களை போட்டு வைத்திருந்தோம்.

எனது ஜீப் ஓட்டுநரும் நானும் யானையை தேடி காட்டுக்குள் சென்று கொண்டிருந்தோம். அடர்ந்த காடு. அதிகாலை வேளை என்பதால் ஒரு சிறிய வெளிச்சம் கூட இல்லை.

யானையின் ஓசை கேட்டதும் வண்டியை நிறுத்தக் கூறினேன். வண்டியின் விளக்கை அணைத்துவிட்டு தயாராக இருக்கும்படி ஓட்டுநரிடம் கூறினேன்.

நாங்கள் நிற்கும் இடத்திற்கு எதிரே பலாப்பழங்கள் இருந்தன. அங்கு யானை நின்றதும் மயக்க ஊசி செலுத்த நான் தயாராக இருந்தேன்.

05.கும்கி யானைகளின் உதவியோடுகூட்டிச்செல்லப்படும்மூர்த்தி

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

கும்கி யானைகளின் உதவியோடுகூட்டிச்செல்லப்படும்மூர்த்தி

அடுத்த சில நிமிடங்களில் மிகவும் ஆக்ரோஷமாக, மரக்கிளைகளை ஒடித்து சாய்த்தபடி மக்னா ஓடிவந்தது. பலாப் பழங்களை கண்டதும் யானை அமைதியாகிவிடும் என நினைத்திருந்தேன். ஆனால், அங்கு வந்ததும் பலாப் பழங்களை எட்டி உதைத்து சிதறடித்தது. அதன் சீற்றம் குறையவில்லை.

இதைக் கண்டு அச்சம் அடைந்த ஜீப் ஓட்டுநர் திடீரென இறங்கி ஓடிவிட்டார். இப்போது நானும் யானையும் நேரெதிராக, சுமார் பத்தடி தூரத்தில் இருக்கிறோம். எனக்கு உயிர் பயம் அதிகமானது.

அடுத்த சில நொடிகளில் சுதாரித்துக் கொண்டு, பலாப் பழங்களை உதைத்துக் கொண்டிருந்த யானையின் முதுகுப் பகுதியை நோக்கி மயக்க ஊசியை செலுத்திவிட்டு மறைந்து கொண்டேன்.

சுமார் 600 மீட்டர் ஓடிய யானை, மயக்கமடைந்து கீழே விழுந்தது. அடுத்த 30 நிமிடங்களில் கும்கி யானைகள் வந்தன. மக்னா மயங்கி விழுந்த இடம் தாழ்வான பகுதியாக இருந்தது. சரியாக கட்டி இழுக்கவில்லை என்றால் சரிந்து கீழே விழ வாய்ப்பிருந்தது.

எனவே, மிகவும் கவனமாக கயிறுகளை கட்டி மற்ற கும்கி யானைகளின் உதவியோடு மக்னாவை அங்கிருந்து முதுமலை யானைகள் முகாமிற்கு அழைத்து வந்தோம்.

அப்போதெல்லாம் யானைகளை அழைத்துச் செல்ல லாரிகள் கிடையாது. நடக்க வைத்துத்தான் கூட்டி செல்ல வேண்டும். அப்படித்தான் மக்னாவையும் சங்கிலி மற்றும் கயிறுகளால் கட்டி, கும்கி யானைகளின் உதவியோடு கூட்டிச் சென்றோம்.

மூர்த்தியை பிடிக்கும் பணியில் தமிழக வனத்துறையினர்

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

மூர்த்தியை பிடிக்கும் பணியில் தமிழக வனத்துறையினர்

உடல் முழுவதும் ரத்தக் காயங்களோடு மயக்க நிலையில் மக்னா தள்ளாடி நடந்து சென்ற காட்சியை என்றும் மறக்க முடியாது. அந்த காட்சியை ஊர் மக்கள் அனைவரும் ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும் சிலர் வருத்தத்தோடு பார்த்தனர்' என கூறுகிறார் மணி.

தேவர்சோலை முதல் முதுமலை யானைகள் முகாம் வரை உள்ள 30 கி.மீ தூரத்தை, சுமார் 4 நாட்கள் நடைபயணத்திற்கு பிறகு மூர்த்தி, கும்கி யானைகள் மற்றும் வனத்துறையினர் அடைந்ததாக குறிப்பிடுகிறார் இவர்.

சிகிச்சையும் பயிற்சியும்

காட்டு பகுதிகளில் இருந்து வெளியேறி, பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் நுழைந்து அச்சுறுத்தும் யானைகள் மற்றும் படுகாயமடைந்த யானைகள் முகாம்களுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அவற்றுக்கு உரிய மருத்துவ சிகிச்சைகளும், சரியான உணவுகளும் வழங்கப்படுகின்றன.

12 ஜூலை 1998 அன்று மக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டு முதுமலை முகாமிற்கு கொண்டு வரப்பட்டது. கயிறு மற்றும் சங்கிலிகளால் கட்டி இழுத்து வரப்பட்டதால் யானையின் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன.

மேலும், மனிதர்களுடனான தொடர் மோதலால் யானையின் உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டிருந்ததாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முகாமில் கரோல் எனும் தேக்குமரக் கூண்டில் அடைத்து வைக்கப்பட்ட மக்னாவிற்கான மருத்துவ சிகிச்சைகளை வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் வழங்கியுள்ளனர்.

சில காலங்களுக்கு ஆக்ரோஷம் குறையாமல் காணப்பட்ட மக்னா, ஒருகட்டத்தில் மருத்துவ சிகிச்சைகளுக்கு ஒத்துழைத்திருக்கிறது.

வனத்துறை கால்நடை மருத்துவராக புதிதாக பணியேற்ற டாக்டர். கலைவாணனின் முதல் பணியே மக்னா யானையோடு தான்.

மூர்த்தியின் உடம்பில் உள்ள பால்ரஸ் குண்டு தழும்புகள்

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

மூர்த்தியின் உடம்பில் உள்ள பால்ரஸ் குண்டு தழும்புகள்

'2002ஆம் ஆண்டு முதல் சுமார் 11 ஆண்டுகள் மூர்த்தி என பெயரிடப்பட்டிருந்த அந்த யானையோடு எனது பயணம் தொடர்ந்திருந்தது.

பயிற்சி முடிந்து எனது முதல் பணி, முதுமலை முகாமில் இருந்த மக்னா யானைக்கு சிகிச்சை அளிப்பது. நான் சிகிச்சைகளை துவங்கியபோது அந்த யானை மீதான பயம் இயற்கையாகவே எனக்கு இருந்தது.

26 நபர்களை கொன்ற யானை, சிகிச்சை அளிக்கும் போது நம்மையும் தாக்கி விடுமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் மருத்துவ சிகிச்சைகளுக்கு அந்த யானை அளித்த ஒத்துழைப்பு பெரும் ஆச்சரியத்தை எனக்கு தந்தது. இந்த மாற்றம் எப்போது நிகழ்ந்தது என சரியாக கூறமுடியவில்லை.

ஆனால் முகாமிற்கு வந்த நாள் முதல் யானைக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையும், அவர்களின் அன்பையும் புரிந்து கொண்டுதான் மருத்துவ சிகிச்சைகளுக்கு யானை ஒத்துழைத்தது என கருதுகிறேன்.

நான் பொறுப்பேற்றபோது யானையின் உடல் முழுவதும் பால்ரஸ் குண்டுகள் இருந்தன. சில பகுதிகளில் அவை ஏற்படுத்திய காயங்கள் அழுகி சீல் பிடிக்கும் நிலையில் இருந்தன.

யானையின் தாடைப் பகுதியில் இருந்த குண்டுகளை அகற்றி காயங்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்காக மருத்துவ குழுவினரோடு நானும் தயாரானேன். மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை செய்யலாம் என பரிந்துரைத்தோம். ஆனால் மயக்க ஊசி செலுத்துவது எளிதான விஷயம் அல்ல. அதிலும் பல சிக்கல்கள் இருந்தன. எனவே, மயக்க ஊசி செலுத்தாமல் சிகிச்சை அளிக்கலாம் என யானையின் பாகன் தெரிவித்தார்.

26 நபர்களைக் கொன்ற யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் எப்படி சிகிச்சை அளிப்பது? அதுவும் காயம் முதுகுப்புறம் இருந்தால் கூட தைரியமாக சிகிச்சை அளிக்க முடியும். தும்பிக்கையின் அருகே தாடை பகுதியில் சிகிச்சை அளிக்கும்போது யானை தாக்கினால் தப்பிக்க வாய்ப்பே இல்லை. எனவே, அதிக பயத்தோடு சிகிச்சையை துவங்கினோம்.

எங்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக யானை முழு சிகிச்சைக்கும் மயக்கமருந்து இல்லாமலே அவ்வளவு அழகாக ஒத்துழைத்தது. யானையின் பாகன் தும்பிக்கையை பிடித்துக் கொண்டு தொடர்ந்து கரும்புகளை ஊட்டிக்கொண்டே இருந்தார். நாங்கள் வெற்றிகரமாக சிகிச்சை அளித்து குண்டுகளை அப்புறப்படுத்தினோம்.

காலில் சங்கிலியால் ஏற்பட்ட தழும்பு

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

காலில் சங்கிலியால் ஏற்பட்ட தழும்பு

அன்று முதல் இன்று வரை மூர்த்தியை என்னால் மறக்கவே முடியாது. மூர்த்திக்கும் என்னை நன்றாக தெரியும். நான் அங்கு செல்லும்போதெல்லாம் என் அருகே வந்து நின்றுவிடும். மிகவும் பாசமான யானை மூர்த்தி' என்கிறார் ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் கலைவாணன்.

'மூர்த்தி' பெயர்காரணம்

மக்னா காட்டுயானை முதுமலை முகாமிற்கு அழைத்து வரப்பட்டபோது அதற்கான சிகிச்சைகளை பரிந்துரைத்தவர் 'யானை டாக்டர்' என அழைக்கப்படும் மூத்த கால்நடை மருத்துவர் டாக்டர்.கிருஷ்ணமூர்த்தி. அவர் அப்போது சென்னையில் இருந்ததால் அவரது வழிகாட்டுதலின்படி மக்னாவிற்கு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் யானைகள் மீது அதிக அன்பு கொண்ட டாக்டர் கிருஷ்ணமூர்த்தியின் நினைவாக முகாமிற்கு வந்து ஆறு மாதங்களில் மக்னாவிற்கு மூர்த்தி என பெயரிடப்பட்டுள்ளது.

அமைதியான கும்கி

ஆக்ரோஷமாக இருந்த காட்டு யானை மூர்த்திக்கு மயக்க ஊசி செலுத்தி முகாமிற்கு அழைத்து வரும் பணிகளில் முக்கிய பங்கு வகித்த கும்கி யானைகளில் ஒன்று சுப்பிரமணி. இதன் பாகன் கிருமாறன். இவர் தான் தற்போது மூர்த்தியையும் பராமரித்து வருகிறார்.

'மயக்க ஊசி செலுத்தும் முன்பு மூர்த்தி மிகவும் ஆக்ரோஷமாக இருந்தது. ஊசி செலுத்திய பின்பும் அதன் முன் கும்கிகள் வந்து நின்றதும் தாக்கத் முயற்சித்தது. மூர்த்தியை கண்டு பல கும்கி யானைகள் பயந்து பின்வாங்கியுள்ளன.

அன்று கும்கி சுப்பிரமணி இல்லையென்றால் அவ்வளவு எளிதாக மூர்த்தியை முதுமலைக்கு அழைத்து வந்திருக்க முடியாது.

வனத்துறைஅதிகாரியோடுநிற்கும்மூர்த்தியின் சமீபத்தியபடம்

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

வனத்துறை அதிகாரியோடு நிற்கும் மூர்த்தியின் சமீபத்திய படம்

முதுமலை முகாமிற்கு வந்த பின்பு தான் மூர்த்தியின் நடவடிக்கைகள் குணங்கள் முற்றிலுமாக மாறுபட்டுள்ளன.

ஆரம்பகட்டத்தில் மூர்த்திக்கு கும்கி பயிற்சி கொடுக்கத் துவங்கியபோது அதனால் எதையும் சரியாக செய்ய முடியவில்லை. ஆனால் ஒரு கட்டத்தில் தொடர் பயிற்சியின் காரணமாக கும்கி யானைக்கான வேலைகளை மூர்த்தி அமைதியாக செய்யத் துவங்கியது.

மரங்களை எடுத்துச்செல்வது, முகாமிற்கு வரும் யானைகளை இழுத்துச் செல்வது போன்ற சில வேலைகளில் மட்டும் மூர்த்தி ஈடுபடுத்தப்படுகிறது. மூர்த்தியின் கதையை தெரிந்த சுற்றுலாப் பயணிகள் பலர் அதன் கம்பீரத்தையும் தோற்றத்தையும் இங்கு வந்து நேரில் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

பொதுவாக, கும்கி யானைகள் புதியவர்களை அருகில் நெருங்க அனுமதிக்காது. ஆனால் மூர்த்தி அப்படி அல்ல. சீக்கிரமாகவே புதியவர்களுடன் அன்பாக பழகிவிடும் குணமுடையது.

இந்த யானை தான் ஒருகாலத்தில் மனிதர்களை கொன்றது எனக் கூறினால் நம்பவே முடியாது. அந்த அளவிற்கு மூர்த்தி இப்போது அமைதியாகவும் பக்குவமாகவும் நடந்து கொள்கிறது' என்கிறார் பாகன் கிருமாறன்.

மனிதர்களே காரணம்

மனிதர்கள் மீதான முந்தைய அனுபவமே யானைகளின் நடவடிக்கையை தீர்மானிப்பவை என்கிறார் விலங்குகள் நலஆர்வலர் முகம்மது சலீம்.

11.முதுமலை முகாமில் மூர்த்தி

பட மூலாதாரம்,TN FOREST DEPARTMENT

 
படக்குறிப்பு,

முதுமலை முகாமில் மூர்த்தி

'விலங்குகளில் அதிக அறிவுத்திறன் கொண்டவை யானைகள் தான். பார்க்கும் மனிதர்களை தாக்குவதும் அருகில் நெருங்க அனுமதிப்பதும் அவற்றின் முந்தைய அனுபவங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன.

மூர்த்தி என்கின்ற யானை ஒருகட்டத்தில் ஆக்ரோஷமான யானையாக மனிதர்களை தாக்கியதற்கு காரணம் மனிதர்கள் தான். மனிதர்களிடம் இருந்து தன்னை தற்காத்துக்கொள்ள கண்ணில்படும் மனிதர்களை அது தாக்கத் துவங்கியது.

இப்போது முகாமில் இந்த யானைக்கு மனிதர்கள் மூலம்தான் சிறப்பான சிகிச்சையும் உணவுகளும் வழங்கப்படுகிறது. அதனால் தற்போது மனிதர்கள் மீது ஒரு நம்பிக்கை உருவாகி இருக்கிறது.

எனவே யானைகளை துன்புறுத்தாமல், அவற்றின்மீது நெருப்பு வீசாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் மீது யானைகளுக்கு ஒரு நம்பிக்கை உருவாகும்' என்கிறார் இவர்.

தனக்கு பிடித்தமான உணவுகளை சாப்பிடுவது, பசுமையான காடுகளுக்குள் சுதந்திரமாக உலாவுவது என அமைதியாக வாழ்ந்து வரும் மூர்த்தியின் உடலில் இன்னும் சில பால்ரஸ் குண்டுகள் அகற்றப்படாமல் இருக்கின்றன.

யானைகள் போன்ற பிற உயிரினங்கள் மீது மனிதர்கள் கொண்டுள்ள வன்மத்தின் அடையாளமாகவே அவை மூர்த்தியின் மீது எஞ்சியிருக்கின்றன.

https://www.bbc.com/tamil/india-58174702

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Ist möglicherweise ein Bild von Elefant und Natur

யானை 🐘🐘
22 மாதங்கள் கருவை சுமக்கும்..
யானை🐘🐘 4 வருடங்களுக்கு ஒரு முறைதான் குட்டி போடும்.
அதன் தும்பிக்கை யால் 350 கிலோ எடையை தூக்க முடியும்.
சில நேரங்களில் இரண்டு குட்டிகள் கூட போடும்.
ஒரு யானை ஒரு காட்டையே உருவாக்கும்.
ஒரு நாளைக்கு 200 - 250 கிலோ உணவு சாப்பிடும் .
ஒரு நாளைக்கு 100 - 150 லிட்டர் தண்ணீர் குடிக்கும்.
250 கிலோ உணவில் 10% விதைகள் இருக்கும்.
சாணத்தில் இருந்து 10 கிலோ விதைகள்
காட்டில் விதைக்கப்படும்.
யானை🐘🐘 ஒரு நாளைக்கு 300 - 500 விதைகள் விதைக்கும்.
யானை🐘🐘 ஒரு நாளில் 100 மரங்களை நடுகிறது. ஒரு வருடத்திற்கு 36500 மரங்கள் நடுகிறது.
ஒரு யானை🐘🐘
தன் வாழ் நாளில் 18 லட்சத்து 25 ஆயிரம் மரம் வளர காரணமாகிறது .
அடுத்த முறை நீங்களும், நானும் யானையை பார்க்கும் பொழுது நம் மனதில் தோன்றக் கூடிய ஒரே காட்சி நாம் பார்க்கும் இந்த காடுகள் மற்றும் இயற்கை வளம் இந்த ஜீவனால் உருவானது என்பதே.
யானையை🐘🐘🐘 பற்றிய இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் உள்ளன.
*தூய தமிழில் யானைக்கு🐘 60 பெயர்கள் உள்ளது.*
யானையின்🐘 இரண்டு தந்தங்களும் சம அளவில் இருக்காது.
யானையின்🐘 துதிக்கை 40,000 தசைகளால் ஆனது.
இந்தியாவில் ஒரு லட்சம் யானைகள்🐘 இருக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்ட நிலையில் இப்போது இருப்பது 27312 யானைகள்🐘 மட்டுமே உள்ளன !
யானைகள் 🐘தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை.
நோயுற்ற யானைகளுக்கு உணவையும், நீரையும் மற்ற யானைகள் ஊட்டும்.
நோயுற்ற யானைக்கு மற்ற யானைகள் தடவிக் கொடுத்து ஆறுதல் படுத்தும். யானையின் பற்கள் சுமார் 5 கிலோ எடை கொண்டவை.
5 கிமீ தூரத்தில் தண்ணீர் இருந்தாலும் அதனை வாசனை மூலம் தெரிந்து கொள்ளும் திறன் கொண்டவை.
யானை தன் தும்பிக்கை யால் 7.5 லிட்டர் தண்ணீரை எடுத்து குடிக்கும் திறனுடையது.
இந்தியாவில் உள்ள பெண் யானைகளுக்கு🐘 தந்தம் கிடையாது.
ஆப்ரிக்காவில் உள்ள பெண் யானைகளுக்கு🐘 தந்தம் உண்டு.
பொதுவாக பெண் யானைகளுக்கு மதம் பிடிப்பது கிடையாது.
கூட்டத்தில் இருக்கும் முதுமை அடைந்த யானை🐘 தான் இறப்பது உறுதி என்று தெரிந்தால் கூட்டத்தில் இருந்து பிரிந்து உண்ணா நோன்பு இருந்து தன் முடிவை தானே தேடிக் கொள்ளும்..
இயற்கையை 🏞️🏞️சமநிலை படுத்துவதில் யானையின் பங்கு மிகப் பெரியது.
அதை தெரிந்து தான் கேரள அரசு தனது அரசு முத்திரையில் இரண்டு யானைகளை வைத்துள்ளது.
*வாழ்க யானைகள்:
🐘🐘🐘🐘
முகநூலிருந்து.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.