Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கேரளாவில் உச்சம்தொடும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததன் அதிர்ச்சிப் பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக

கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது, தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ` கொரோனா முதல் அலையைவிட இரண்டாம் அலையின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. இதிலிருந்தே `கேரள மாடல் முன்னுதாரணமானது' என்பது தெரியவரும்' என்கிறார் மலப்புரம் மாவட்ட ஆட்சியர். என்ன நடக்கிறது கேரளாவில்?

மூன்று மடங்காக உயர்ந்த பாதிப்பு

இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 25 ஆம் தேதி நிலவரப்படி 37,593 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது 46,164 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம், கேரளாவில் தொற்று பரவல் என்பது மூன்று மடங்காக உயர்ந்துள்ளது, அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கொரோனா முதல் தொற்றை மிகத் திறமையாகக் கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்த கேரள அரசால், தற்போதைய நிலைமையை சமாளிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, கடந்த 22 ஆம் தேதி கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை என்பது 10,402 ஆக இருந்தது. 23 ஆம் தேதி 13,383 ஆகவும் 24 ஆம் தேதி 24,296 ஆக உயர்ந்தது. கடந்த 25 ஆம் தேதி இந்த எண்ணிக்கை அதிகரித்து 31,445 எனப் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,65,273 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதன் பாதிப்பு விகிதம் என்பது 19.03 சதவிகிதமாக உள்ளது. அதிலும், எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம் உள்பட 14 மாவட்டங்களில் தொற்றின் பாதிப்பு அதிகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.

பக்ரீத் பண்டிகைக்காக கடந்த 27 ஆம் தேதி தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் முக்கியக் காரணமாகப் பேசப்பட்டு வருகிறது. ஓணம் பண்டிகைக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் தொற்றின் தாக்கம் குறையவில்லை. இதனை விமர்சித்த கேரள சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஸன், ` கேரள மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அமைப்பு தோல்வியைத் தழுவிவிட்டது. மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் 38 லட்சத்தைக் கடந்து விட்டது. ஆனால், அரசு தகவல்களை மறைக்கிறது' என சாடியிருந்தார்.

எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு

கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் வகுப்புகள் திறக்கப்பட உள்ள நிலையில், கேரள மாநில நிலவரத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.

கேரளா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோழிகோடு(கோப்புப் படம்)

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ``கேரள மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்குள் வருகிறவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கிருந்து வருகிறவர்கள் 2 தவணை தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் அல்லது கொரோனா இல்லை என பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும்," என்றார்.

மேலும், கோயம்புத்தூர், தேனி, தென்காசி, கன்னியாகுமரி உள்பட எல்லையோர மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. ``அங்குள்ள மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் மாநில சுகாதாரத்துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளோம்" என்கிறார், தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் இயக்குநர் மருத்துவர் செல்வவிநாயகம்.

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசியவர், ``அனைத்து எல்லைப் பகுதிகளுக்கும் எச்சரிக்கையை கொடுத்துள்ளோம். கேரளாவில் இருந்து வருகிறவர்களுக்கு இரண்டு வகையான சோதனைகள் நடத்தப்படுகின்றன. ஒன்று, அறிகுறிகள் இருந்தால் அனுமதி மறுப்பது, அடுத்ததாக நெகட்டிவ் ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் ஆகியவற்றோடு வருகிறவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் திறந்த பிறகு எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்" என்கிறார்.

கேரள அரசின் தவறு என்ன?

`` கேரளாவில் தொற்று அதிகரிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவின் ஒட்டுமொத்த சீரோ (Sero) சர்வேயை கணக்கிட்டால் கேரளாவில் பாதிப்பு என்பது குறைவாகத்தான் உள்ளது. முதல் சீரோ ஆய்வில் அங்கு பாதிப்பு விகிதம் என்பது 11 சதவிகிதமாக இருந்தது. அந்தநேரத்தில் மற்ற மாநிலங்களில் 25 சதவிகிதம் என்ற அளவில் இருந்தது. தற்போது கேரளாவில் பாதிப்பின் அளவு 44 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. அதேநேரம், இந்தியாவின் சராசரி பாதிப்பு என்பது 67 சதவிகிதமாக உள்ளது. அங்குள்ள மக்கள்தொகையில் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும், வயதானவர்களின் எண்ணிக்கையும் துணை நோய்களோடு இருப்பவர்களும் அங்கே அதிகம்" என்கிறார் சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் புகழேந்தி.

பினராயி விஜயம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தொடர்ந்து பிபிசி தமிழிடம் சில தகவல்களைப் பட்டியலிட்டார். `` கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்கு தளர்வுகளை அறிவித்ததுதான் அவர்கள் செய்த முதல் தவறு. இதுதொடர்பாக, அம்மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பில், `கேரளாவில் மனித உயிர்களுக்கும் வாழ்வாதாரத்துக்கும் இடையே ஒரு சமநிலையை எட்ட வேண்டியுள்ளது, அதனால்தான் தளர்வுகளை கொண்டு வருகிறோம்' எனக் குறிப்பிட்டனர். அதாவது, ஊரடங்கு கட்டுப்பாடுகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது. கேரளாவில் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், அவர்களை மனதில் வைத்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதேநேரம், ஓணம் பண்டிகையின்போது தளர்வுகளைக் கொண்டு வந்தாலும் சில கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.

அடுத்ததாக, அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை பார்க்கின்றனர். அவ்வாறு வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வருகிறவர்களை கண்காணிப்பதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. முந்தைய கேரள அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக சைலஜா டீச்சர், ஒவ்வொரு உத்தரவும் தலைமையகமான திருவனந்தபுரத்தில் இருந்து வர வேண்டும் என எதிர்பார்க்காமல், உடனுக்குடன் முடிவெடுத்தார்.

ஒரு கிராமத்துக்குப் புதிதாக யார் வந்தாலும் சுகாதாரத்துறைக்குத் தகவல் சென்றுவிடும். அப்போது, உயர் அதிகாரியைக் கேட்டு முடிவெடுக்காமல் உள்ளூரிலேயே அதிகாரங்கள் அளிக்கப்பட்டன. கூடவே, மக்களை உள்ளடக்கி கடந்த அரசு செயல்பட்டது. அது வெற்றிகரமான மாடலாக இருந்தது. தற்போது பண்டிகை காலத்தில் மக்களைக் கண்காணிப்பதில் தொய்வு ஏற்பட்டதால் குறைந்துவிட்டது. மேலும், தொற்று பாதித்தவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் (Contact tracing) கண்டறிவதிலும் தொய்வு ஏற்பட்டுவிட்டது. இதுவும் கேரளாவில் தொற்று அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளது" என்கிறார்.

மலப்புரம் மாவட்ட ஆட்சியர் சொல்வது என்ன?

``கொரோனா அலையைத் தடுப்பதில் கேரள அரசின் செயல்பாடுகள் எப்படியுள்ளன?" என மலப்புரம் மாவட்ட ஆட்சியர் கே.கோபாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்ஸிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

``கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் அரசும் மாவட்ட நிர்வாகமும் இரண்டு வகையாகப் பிரித்து செயல்படுகின்றன. முதலில், வைரஸ் தொற்று வேகமாகப் பரவுவதைக் குறைக்க வேண்டும். அடுத்ததாக, அவ்வாறு தொற்று பாதித்தவர்களை எந்தளவுக்கு பாதுகாக்க வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துச் வைத்துச் செயல்படுகிறோம். அரபிக்கடலுக்கும் மேற்கு இந்தியத் தொடர்ச்சி மலைக்கும் இடையில் கேரளா உள்ளது.

கேரளா

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

கோழிக் கோடு(கோப்புப் படம்)

இங்கு மக்கள்தொகை அடர்த்தி என்பது இயல்பைவிட அதிகம். நான் மலப்புரம் மாவட்ட ஆட்சியராக இருக்கிறேன். இந்தியாவிலேயே அதிகப்படியான கொரோனா தொற்று பாதித்தவர்கள் இந்த மாவட்டத்தில்தான் உள்ளனர். தினசரி பாதிப்பில் இந்தியாவிலும் சரி கேரளாவிலும் சரி. நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம். இங்கு 49 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நகராட்சியான பொன்னானி இங்குள்ளது. சராசரி குடும்ப அளவு என்பது ஆறு பேருக்கும் மேல் உள்ளது. இங்கு ஓணம் என்பது மிகப் பெரிய பண்டிகையாக உள்ளது. பக்ரீத் பண்டிகையின்போதும் மக்களின் நடமாட்டம் அதிகளவில் இருந்தது. அது தொற்று பரவலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. அதனை நாங்கள் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்.

தொடர்ந்து பிபிசி தமிழுக்காக சில விவரங்களைப் பட்டியலிட்டார். ``மலப்புரத்தில் மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனித்தனி கழிப்பறைகள் தேவைப்படும். அப்படிப் பார்த்தால் ஒவ்வொரு வீட்டுக்கும் ஆறு கழிப்பறைகள் வேண்டும். அது சாத்தியமில்லை. அதிலும், தொற்றுக்கான அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டும்.

எந்தெந்த வகைகளில் தொற்று பரவுகிறது?

ஆறு பேர் உள்ள வீடுகளில் தனிமைப்படுத்துவது சிரமம் என்பதால், வீட்டில் உள்ள அனைவருக்கும் தொற்று பாதித்துவிடுகிறது. அப்படிப் பார்த்தால் 70 சதவிகிதம் பேருக்கு இதுபோன்ற வகைகளில்தான் தொற்று பரவுகிறது. மற்ற 30 சதவிகிதம் பேருக்கு வெளியில் இருந்து வருகிறது. இங்கு ஒரு பாசிட்டிவ் நபரைக் கண்டறிந்தால் அதிகபட்சமாக 3 அல்லது 4 தொடக்க நிலை (Primary contacts) தொடர்புகள் கண்டறியப்படுகின்றன. கணவருக்குத் தொற்று வந்தால் மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு பரவுகிறது. எங்களின் ஆய்வில் இதனைக் கண்டறிந்தோம்.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் கவனித்தால் கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை என்பது பத்தாயிரத்துக்கும்கீழ்தான் சென்றன. ஒவ்வொரு ஊராட்சி, நகராட்சியிலும் 5 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டால், அதனை மைக்ரோ கன்டெய்ன்மென்ட் பகுதியாக அறிவிக்கிறோம்.

எங்கள் மாவட்டத்தில் 920 மைக்ரோ கண்டெய்ன்மென்ட் பகுதிகள் உள்ளன. டெல்லியிலேயே 800 மைக்ரோ கண்டெய்ன்ட் பகுதிகள்தான் உள்ளன. வார்டு அளவில் சானிட்டரி கமிட்டி, பல்வேறு வகையான அதிகாரிகள், ஆசிரியர்கள், காவலர்கள் என தனிக்குழு ஒன்று தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிக்கின்றன. அதேநேரம், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வீடுகளில் ஒரே டைனிங் டேபிள், கழிப்பறை எனப் பயன்படுத்துவதைத் தொடர்ந்து கண்டறிவது சிரமம்" என்கிறார்.

அதேநேரம், கூகுள் உள்பட தொழில்நுட்ப உதவிகளின் வசதியோடு அங்காடிகள், பூங்காக்கள் என மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கிறார். மேலும், கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் அல்லது ஒரு தடுப்பூசியாவது போட்டவர்கள்தான் வெளியில் வர முடியும் எனவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இறப்பு விகிதம் குறைவு!

``கேரளாவில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,000, 30,000 என அதிகரித்தாலும் இறப்பு விகிதம் என்பது மிகவும் குறைவு. நாள்தோறும் கோவிட் தொடர்பான அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாகச் செயல்படுகிறோம். இதனால், மலப்புரத்தில் இறப்பு விகிதம் என்பது 0.49 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. மாநில அளவில் இந்த அளவானது 0.52 என்ற அளவில் உள்ளது. இதற்குக் காரணம், முன்கூட்டியே தொற்றாளர்களைக் கண்டறிவதுதான்," என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

மேலும், ``கேரளாவில் மலப்புரத்தில் மட்டும் தினசரி 20,000 கோவிட் பரிசோதனைகளை மேற்கொள்கிறோம். கேரளாவில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் பரிசோதனைகளை செய்கின்றனர். தொடக்க நிலையிலேயே தொற்றாளர்களை கண்டறிவதால் சிக்கலை நோக்கிச் செல்லாமல் நோயாளிகள் பாதுகாக்கப்படுகின்றனர். நேற்று (25 ஆம் தேதி) எங்கள் மாவட்டத்தில் மட்டும் 3,502 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இறப்பு என்பது 7 என்ற அளவில் இருந்தது. எனவே, அனைத்து வகையிலும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம். அதேநேரம், வென்டிலேட்டர் பயன்பாடும் மிகக் குறைவாக உள்ளது. யாருக்கும் வென்டிலேட்டர் கிடையாது என்ற நிலை இங்கில்லை. நோயாளியின் வாழ்வாதாரத்தை நசுக்காமல் வாழ்வையும் பாதுகாக்கிறோம்" என்கிறார்.

`கேரள மாடல்' பின்னடைவா?

``கேரளாவின் `கோவிட் தடுப்பு மாடல்' என்பது பலராலும் பேசப்பட்டு வந்தது. அந்த மாடலில் தொய்வு ஏற்பட்டுவிட்டதாகக் கூறப்படுகிறதே?" என்றோம். `` அவ்வாறு பார்க்க முடியாது. 10 தொற்றாளர்கள் இருந்த நேரத்தில் கிடைத்த ரிசல்ட் என்பது பத்தாயிரம் பேர் இருக்கும்போது கிடைக்க வாய்ப்பில்லை. இங்கு வீட்டில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களை தினசரி மருத்துவர் தொடர்பு கொண்டு பேசுவார். ஆஷா பணியாளர்கள் அவர்கள் வீட்டுக்குச் சென்று பார்ப்பார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று கண்காணிப்பது கடினம்.

இங்கு 15 மெடிக்கல் பிளாக்குகள் உள்ளன. ஒருமுறை ஆஷா பணியாளர்கள் சென்றால், மறுமுறை சானிட்டரி கமிட்டி டீம், காவலர்கள் எனச் சென்று நோயாளிகளைக் கவனிப்பார்கள். அதாவது, எதாவது ஒரு குழு சென்று அவர்களுக்கு அறிகுறி உள்ளதா என்பது உள்பட அனைத்தையும் பல்வேறுவிதமான நடைமுறைகள் மூலம் கண்காணிக்கிறோம். இதனை நீர்த்துப் போக வைக்கும் வேலைகளில் நாங்கள் இறங்கியிருந்தால் இறப்பு விகிதம் அதிகமாக இருந்திருக்கும்.

தொடக்க காலத்தில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 1,500 என்ற அளவில் இருந்தபோது இறப்பு விகிதம் என்பது 0.39 ஆக இருந்தது. இரண்டாவது அலை என்பது மிகவும் மோசமாக உள்ளது. இதனால் எங்களின் மாடல் தோற்றிருந்தால் இறப்பு விகிதம் 1 சதவிகிதத்தை நெருங்கியிருக்கும். அவ்வாறு நடக்காமல் இருப்பதைப் பார்த்தாலே கொரோனா நோயாளிகளைக் காப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறையோடு செயல்படுகிறோம் என்பது தெரிய வரும்," என்கிறார்.

கேரளாவில் உச்சம்தொடும் கொரோனா: தடுப்பு நடவடிக்கை தோல்வி அடைந்ததன் அதிர்ச்சிப் பின்னணி - BBC News தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.