Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தரிசாகும் தமிழர் சமூக வெளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தரிசாகும் தமிழர் சமூக வெளி

தரிசாகும் தமிழர் சமூக வெளி

  —  கருணாகரன் — 

கண்ணுக்கெட்டிய தூரம் வரை தரிசாகக் கிடக்கும் வெளியைப் போலவே தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்குரிய இளைய தலைமுறையின் ஆளுமைப் பரப்பும் தரிசாகி – வரண்டு போய்க்கிடக்கிறது. இது ஒன்றும் எதிர்மறைக் கூற்றல்ல. மிகத்துல்லியமான அவதானிப்பினால் உருவான கணிப்பாகும். 

அரசியலில், பொருளாதாரத்துறையில், ஆன்மீகத்தில், சமூகச் செயற்பாட்டில், இலக்கியத்தில், பிற கலை வெளிப்பாடுகளில், அறிவுத்துறையில், ஊடகத்தில் என எங்குமே இந்தத் தரிசு நிலையை – வரட்சியைக் காண முடியும். இதை யாரும் மறுப்பதாக இருந்தால் அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்து வாதிடலாம். 

இதற்கு அதிகமாக யோசிக்க வேண்டாம். ஒரு சிறிய ஒப்பீடு. 1970, 80, 90, 2000 என்ற கடந்த நாற்பது ஆண்டு காலப்பகுதியை எடுத்து, பத்தாண்டுகள் வீதமாகப் பகுத்துப் பாருங்கள். ஒவ்வொரு துறையிலும் எத்தகைய ஆளுமைகள் இருந்தனர் அப்பொழுது. அதாவது அன்றைய இளைஞர்களாக இருந்தோர் அன்றே தனித்துவமான அடையாளத்தைக் கொண்டிருந்தனர். ஒளிரும் நட்சத்திரங்களாகத் துருத்திக் கொண்டு தெரிந்தனர். 

தமிழ் இளைஞர் பேரவை, தமிழ் மாணவர் பேரவை என்ற இரண்டு இளைஞர் அரசியற் திரட்சியுடைய அமைப்புகள் அன்றிருந்தன. அதில் இருந்தவர்கள், செயற்பட்டவர்கள் அன்றும் பெயர் சொல்லக் கூடியோராகவே இருந்தனர். பின்னாளிலும் அவர்கள் பெரிய ஆளுமைகளாக வளர்ச்சியடைந்தனர். 

கூடவே டேவிட் ஐயா, சந்ததியார், டொக்ரர் ராஜசுந்தரம் உள்ளிட்டோரின் காந்தியம். அதனுடைய செயற்பாடு மிகப் பெரியது. அது சந்தித்த நெருக்கடிகளும் ஏராளம். ஆனாலும் அது வரலாற்றில் பதித்த முத்திரை முக்கியமானது. 

இதை விட ஒவ்வொரு இயக்கங்களிலும் இருந்த தலைவர்கள், முக்கியமான பொறுப்புகளை வகித்த ஆற்றலர்கள் என பல நூற்றுக் கணக்கானோர். ஏராளமான இலக்கிய அமைப்புகள், இலக்கியப் படைப்பாளிகள். அவர்களுடைய வெளிப்பாடுகளாக வந்த இதழ்கள். அலை, சமர், களனி, வியூகம், இருப்பு, சுடர், புதுசு, தாயகம், குமரன் என ஏராளம் இதழ்கள். சேரன், ஜெயபாலன், இளவாலை விஜயேந்திரன், சோலைக்கிளி, நிலாந்தன், புதுசு இரவி, சபேசன், ஜபார், சு.முரளிதரன், ஜெயசங்கர், விந்தன், பா.அகிலன், கோ.கைலாசநாதன், செல்வி, சிவரமணி, ஊர்வசி எனப் பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் மேற்கிளம்பினர்.  

யாழ்ப்பாணப்  பல்கலைக்கழக மாணவர் அமைப்பு இதில் ஒன்று. இது அன்று – குறிப்பாக 1977 இல் ஏற்பட்ட இனவன்முறையினால் வந்த அகதிகளைப் பராமரித்தது தொடக்கம் அந்த ஆண்டில் மட்டக்களப்பில் வீசிய புயல் அனர்த்தம் வரையில் மிகச் சிறப்பான பங்களிப்பைச் செய்தது. தொடர்ந்து மண் சுமந்த மேனியர் என்ற நாடகம் மற்றும் இந்த மண்ணும் எங்கள் நாட்களும் என்ற கவிதா நிகழ்வு வரையில் பல நிகழ்வுகள். மட்டுமல்ல, தீவுப்பகுதியில் கிணறுகளை அமைத்துக் கொடுத்தது என இன்னும் பல களப்பணிகள். 

பல்கலைக்கழகத்திற்கூட மிகப் பெரிய ஆளுமைகளாகவே அன்றைய விரிவுரையாளர்களும் இருந்தனர். 

குறிப்பாக அது ஒரு செயற்பாட்டியக்கங்களின் காலமாகவும் செயற்பாட்டாளர்களின் காலமாகவும் இருந்தது. இதனால்தான் அந்தக் காலம் பெறுமதியானதாக இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் எழுச்சியடைந்த இளைஞர்கள்தான் இயக்கங்களையும் உருவாக்கினார்கள். தலைமை வகித்தனர். அவர்களிடையே தவறுகள் நிகழ்ந்தது உண்டுதான். ஆனாலும் இன்று மீந்திருக்கும் ஆளுமைகளாக இருப்போர் அன்றைய செயற்பாட்டு ஆளுமைகளாக இருந்தோரே. முக்கியமாக ஒடுக்குமுறைக்கு எதிரானோராக இருந்தனர். சாதிய ஒடுக்குமுறை தொடக்கம் இன ஒடுக்குமுறை வரையில். இவர்களுடைய காலத்தில்தான் நிலமற்ற மக்கள் நிலத்தைப் பெற்றனர். முகவரியற்ற மக்களுக்கு முகவரி கிடைத்தது. இதை எவராலும் மறுக்க முடியாது.  மிதவாத அரசியல் என்ற செயற்பாடற்ற அரசியலுக்குப் பதிலாக செயலூக்க அரசியலை இவர்கள் முன்னெடுத்தனர். அதை ஒரு பாரம்பரியமாகவே பின்னாளில் வளர்த்தெடுத்தனர். 

இதற்கு முக்கியமான காரணம்,அர்ப்பணிப்புணர்வும் விரிந்த சிந்தனையும் உடையோராக இவர்கள் இருந்தனர் என்பதாகும். இதனால் ஒவ்வொருத்தரும் அல்லது ஒவ்வொரு தரப்பும் பெரும் பணிகளைச் செய்யக் கூடியதாக இருந்தமை முக்கியமானதாகும். 

பொதுவாகவே கடந்த காலத்தை மம்மியாக்கம் செய்து, அது ஒரு பொற்காலம் என்று பேசுவோருண்டு. இங்கே அப்படி இது பேசப்படவில்லை. தக்க அடிப்படைகளை வைத்துக்கொண்டே இந்த விடயம் பேசப்படுகிறது. 

அன்றும் குறைபாடுகள் இருந்தன. தவறான போக்குடையோர் இருந்தனர். ஆனாலும் அதையெல்லாம் மீறி மக்களுக்கான பணிகளை முன்னெடுத்துச்செல்லும் போக்குடையோர், அதில் ஆர்வம் கொண்டவர்கள் எல்லாம் ஏராளமாக இருந்தனர். அதாவது பெரும்பான்மையானோர் ஏதோ வழிகளில் செயற்பாட்டியக்கங்களாக இயங்கினர். 

இன்றுள்ள இளைய தலைமுறையினரிடத்தில் இந்தப் பண்பு குறைவாகவே உள்ளது. அப்படி அங்கொன்று இங்கொன்றாக இருப்போரும் தறுக்கணித்தவர்களாகவே உள்ளனர். முக்கியமாகக் கட்சிகளால் காயடிக்கப்பட்டோரோக. அல்லது சீசனுக்கு முளைக்கும் காளான்களைப் போல முகம் காட்டி விட்டுக் காணாமல் போய் விடுவோராக. அல்லது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திணறுவோராக. அல்லது, பரபரப்பை மட்டும் காட்டுவோராக. அதிகபட்சம் சில வெள்ளை வேட்டிகளும் வெள்ளை சேர்ட்டுகளும் இருந்தால் போதும். திடீர் அரசியற் பிரமுகர் உருவாகி விடுவர். இப்படித்தான் திடீர் பாராளுமன்ற உறுப்பினர்கள், திடீர் மாகாணசபை உறுப்பினர்கள், திடீர் மாநகர சபை உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உருவாகியுள்ளனர். இவர்கள் எந்த விதமான உழைப்பையும் செலுத்தாமல் அதிரடியாக மேலெழுந்து வந்தவர்கள். 

இப்பொழுது இளைய பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இளைய தலைமுறையினரில் சிலரை எடுத்துக் கொள்ளலாம். ஒருவர் அங்கயன் ராமநாதன். எந்த வகையான அரசியல் இயக்கத்திலும் பணியாற்றாமல் பிரமுகராகவே களமிறக்கப்பட்டவர். இதனால் இன்று வரையில் குறிப்பிடத்தக்க எந்தச் செயற்பாட்டையும் இவரால் முன்னெடுக்க முடிந்ததில்லை. பதிலாக யாழ்ப்பாணத்தின் நிர்வாகத்துறையைச் சீரழிக்கவே முடிந்தது. அரசியலிலும் குழுவாதத்தையே வளர்த்துள்ளார். இன்னொருவர் சாணக்கியன். அரசியல் பின்புலத்தைக் கொண்டவர் என்பதற்கு அப்பால் களச் செயற்பாடு எதன் வழியாகவும் வந்தவரல்ல சாணக்கியன். ஆனால் பட்டிமன்ற விவாதத்திற் பேசுவதைப்போல மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசக் கூடியவர். இது ஒன்று மட்டும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்குப் போதுமான தகுதியா?அதுவும் ஒடுக்குதலுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு? 

ஆனால் இந்த மாதிரியானவர்களுக்கே ஊடகக் கவர்ச்சிகள் அதிகம். ஊடகத்துறையில் இருப்போரும் ஜனநாயக அடிப்படையிலும் உலகளாவிய அரசியல் வரலாற்று அறிவைக் கொண்டிருக்காத காரணத்தினால் இவர்களைப் பெரும் பிம்பங்களாக்குகின்றனர். இளைய தலைமுறையின் அடையாளங்களாக காட்ட முற்படுகின்றனர். இது எவ்வளவு அபத்தமானது! 

இதற்கெல்லாம் வாய்ப்பாக இணையத் தளங்களும் சமூக வலைத்தளங்களும் உள்ளன. அள்ளிப் போட்டுத் தாக்கு என்ற மாதிரி அத்தனை அதிரடிப் புரட்சிகளையும் பேஸ் புக்கில் நடத்தி விட்டுப் போய்விடலாம் என்ற மாதிரி இவர்கள் நம்புகிறார்கள். 

இதில் தமது சுய பிரலாபங்கள்தான் மேலோங்கியிருக்கிறது என்பதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இதைப்பற்றிச் சொல்ல முற்பட்டால் உடனே அணியாகத்திரண்டு எதிர்க்கத் தொடங்கி விடுகிறார்கள். இந்த எதிர்ப்பு  எந்த வகையான அடிப்படைப் பண்புகளும் அற்ற முறையில் அநாகரீகமாக மேற்கொள்ளப்படுகிறது. அதாவது இதுவும் ஒரு வகையான வன்முறையே. அணி சேர்ந்து தாக்குவதாக. 

பதிலாக போரினால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்சமூகத்திற்கு உதவும் பணிகளில் இவர்கள் கடந்த பத்து ஆண்டுகளும் முயன்றிருந்தால், அந்த அனுபங்களோடும் அந்தப் பங்களிப்பின் பெறுமானங்களோடும் இன்று ஒரு பேரெழுச்சியை இந்த இளைய தலைமுறையினர் உருவாக்கியிருக்க முடியும். 

காலம் அதற்கான கதவைத் திறந்து வழியைக் காட்டியது. பல நிலைகளில் இந்தப் பணியை முன்னெடுத்திருக்கலாம். மாற்று வலுவுடையோரின் வாழ்வை மேம்படுத்துவதாக. போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்வியை முன்னெடுப்பதாக. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி,அவர்களுடைய பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதமளிப்பதாக. மீள் குடியேற்றப் பணிகளை ஒழுங்கமைப்பதாக. இயற்கை வளத்தைப் பேணுவதாக. சுற்றுச் சூழலைப்பாதுகாப்பதாக. தொழிற்துறைகளில் ஈடுபடுவதாக. இப்படிப் பல களங்கள் திறந்திருந்தன. இன்னும் இவை திறக்கப்பட்டே உள்ளன. மீட்பர்களுக்கும் காப்பர்களுக்குமாக. 

ஆனால், இதையெல்லாம் செய்வதற்கு யாருமே இல்லை. 

பதிலாக அரசியற் கட்சிகளின் அல்லக்கைகளாகச் சிலரும் இயற்கை வளங்களை அழித்துப் பிழைப்போராகப் பலரும் மாறி விட்டனர். வாள் வெட்டு, கஞ்சா, கசிப்பு, போதை வஸ்த்துப் பாவனை என்று சீரழிகின்றனர். 

இதனால் நம்பிக்கை அளிக்கக் கூடிய –திருப்தியளிக்கக் கூடிய – மகிழக் கூடிய இளைய முகங்கள் எத்தனை என்று கணக்கிட்டால் நெஞ்சில் துக்கத்தின் பாரம் ஏறுகிறது. கண்களில் நீர் திரள்கிறது. தொண்டை அடைக்கிறது.                                     

இது இவர்கள் மீதான – இந்தத் தலைமுறையின் மீதான குற்றச்சாட்டல்ல. பதிலாக இது பொதுக்கவனிப்புக்கும் உரையாடலுக்குமான ஒரு முன்வைப்பே. 

இதை மேலும் விளக்க – விளங்கிக் கொள்வதற்கு மேலும் ஒரு சிறிய உதாரணம். 

போரினால் முழுதாகவே பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் ஒரு சிறிய அணி மட்டுமே சமூக அக்கறையோடு செயற்படுகிறது. இவர்கள் கல்விப் பணிகளை முன்னெடுக்கிறார்கள். இரத்த தானம் செய்கிறார்கள். வறிய மாணவர்களின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கிறார்கள். இதில் ஒரு இருபது வரையானவர்களே பங்கெடுக்கின்றனர். 

மற்றைய தரப்பினரோ அரசியற் தரப்புகளின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டு கள்ள மண் ஏற்றுகிறார்கள். காட்டை அழித்து தமது பைகளை நிரப்புகிறார்கள். அரசியற் சண்டித்தனம் காட்டுகிறார்கள். அணியாக நின்று கொண்டு மற்றவர்களை எதிர்க்கிறார்கள். அவதூறுகளினால் எதிர்த்தரப்புகளைச் செயற்படாமல் முடக்க நிலைக்குத் தள்ளுகிறார்கள். ஏனையோர் எதுக்கப்பா நமக்குச் சோலி என்று பேசாமல் வாழாதிருக்கிறார்கள். சிலர் அங்குமிங்குமாகத் தாளம் போட்டுக் கொண்டு திரிகிறார்கள். சிலர் நெளிவு சுழிவுகளுக்குள்ளால் தங்களுக்கான காரியத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கிளிநொச்சியின் எதிர்காலத்துக்குரியோர்  என்று கருதப்பட்டவர்களை – நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்டவர்களை இன்று பார்த்தால் கவலையே மிஞ்சுகிறது. ஆசிரியப் பணி, கலை இலக்கியச் செயற்பாடுகள், சமூகப் பணிகளில் எழுச்சியடைவந்து வந்தவர்கள் அப்படியே வெம்பிப் போனார்கள். தமிழ்த்தேசிய அரசியலும் அரச ஆதரவு அரசியலும் அதிகமும் வெம்பல்களையே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. 

இதனால் பலரும் அப்படியே இடையில் வெம்பிப் போனார்கள். 

பொருத்தமான இடங்களில் சேராமல்,தங்களுடைய தனித்துவங்களைப் பேண முற்படாமல், தனித்து எழுச்சியடைய முடியாமல் அங்குமிங்குமாக இழுபட்டுச்சீரழிந்து விட்டனர். 

குறுகிய நோக்கங்களின் காரணமாக சுய நலன், தனி இருப்பு என்று தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக் காணாமலே போய் விட்டனர். 

இதே நிலைதான் ஏனைய இடங்களிலும். 

இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று போராட்டமும் போரும். அது பல ஆளுமைகளைத் தின்று விட்டது. பலர் பலியாகி விட்டனர். மிஞ்சியோரை அது காயடித்து விட்டது. அது உருவாக்கிய வெற்றிடத்தில் காத்திருந்த சமூக விரோதிகள் அதிகாரத்தைக் கைப்பற்றி வருகிறார்கள். 

இரண்டாவது, புலம்பெயர்வு. இதிலும் கணிசமான அளவு ஆளுமைகள் வேளியேறி விட்டனர். 

மூன்றாவது பின் வந்த காலத்தில் இவர்கள் நிலை கொள்ளாமல் சூழலின் விசையில் அள்ளுப் பட்டுப் போயினர். 

இதனால் அடுத்து வரும் காலம் என்பது மேலும் நெருக்கடியானதாகவும் சவாலானதாகவும் கேள்விக்குரியதாகவும் மாறியுள்ளது. 

என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வி எழுந்து எம்மைச் சுற்றி வளைக்கிறது. 

ஆம், என்ன செய்யப்போகிறோம்???? 

 

https://arangamnews.com/?p=6086

 

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்+

நல்ல பல கருத்துக்களும் கேள்விகளும் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.