Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத்

Essay_Kaliprasad_1.jpg?resize=839%2C559&

அகரமுதல்வனின் காதல் விவரிப்புகள் சுவாரசியமானவை. ஒரு காலத்திற்குப் பிறகு தமிழில் காதல் கதைகள் எழுதுவது நின்றே விட்டது. காதல் அனுபவங்களை கவிஞர்கள் தங்கள் மிகைக் கூற்றுகளுக்கென எடுத்துக்கொள்ள இயல்பான காதல் வர்ணனைகள் உரைநடையில் குறைந்து போயின. காதலும் வீரமும் தமிழரின் பண்பு என்று பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இலக்கியத்தில் அவை பாரதிதாசன் காலத்தோடு நின்றுவிட்டன. காதல் வீரம் தியாகம் துரோகம் ஏதும் சமகால இலக்கியங்களில் பெரிதும் இடம்பெறுவதில்லை. வணிக இலக்கியம் அதற்கான ஊடகமாக ஆகியது. அடுத்து திரைப்படங்களிலும் அவை மேலும் நுண்மையாக்கப்பட்டன. தீர அலசப்பட்டன. அவ்வாறே ஒருகட்டத்தில் கேலியாகவும் ஆயின. விடுதலைப் போராட்டக் காலத்தில், மொழிப்போர் காலத்தில் எல்லாம் இங்கு விதந்தோதப்பட்ட லட்சியவாதங்களும் உரக்கப்பேசுதலும் தானாகவே வடிந்து போயின. ஆனால் இன்றும் அந்த லட்சியவாதத்தின் ஒரு தொடர்ச்சியாக அகரமுதலவன் கதைகள் விளங்குகின்றன. மண்ணுக்காக காதலை இழப்பது, போர்முனையில் காதலை எண்ணி உருகுவது, ஒரு கணத்தில் துவக்கை எடுத்து முழக்கமிட்டவாறு போருக்கு எழுவது என அவரது கதையின் நாயகர்களும் நாயகிகளும் அந்த லட்சிய உலகில் மேலும் புனைவு ஏற்றுகிறார்கள். இன்றைய நவீன இலக்கிய உலகில் அவை மிகையாக மட்டுமே கருத்தில் கொள்ளப்படும் அபாயம் உள்ளதுதான். தான் நம்பும் ஒன்றே ஆனாலும் வலிந்து எழுதப்பட்டால் அவை செயற்கையாக போய்விடும். இன்றும் கூட பத்திரிகைகளில் வரும் காதல், லட்சியம் போன்ற கருதுகோள்கள் கொண்ட புதுக்கவிதைகளை வாசித்தாலும் அவை அந்த உணர்வினை கடத்துவதில்லை. சிலவற்றை நகைப்பில்லாமல் வாசிக்க முடிவதும் இல்லை. அதேநேரம், காலத்தால் முன்னோடியான பாரதியின் சொற்கள் அதன் உண்மைத் தன்மையாலும், அது சுமந்து வரும் அந்நாட்களின் சுதந்திர வேட்கையை காட்டுவதாலும் நமக்குள்ளும் அதே உணர்வெழுச்சியை உண்டாக்கித்தான் வைக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். அகரமுதல்வன் எழுத்துக்கள் அந்த வரிசையில் வந்து நிற்கின்றன. தற்காலத்தில் லட்சியங்கள் பொருளிழந்து போயிருக்கலாம். லட்சியக் கவனவுகளுக்கான நடைமுறைத் தேவை பெரிய அளவில் இல்லாத போதும் சரி, அல்லது செயற்கையாக தற்கால இதழ்களில் அவை வலிந்து மீளுருவாக்கம் செய்யப்படும் போதும் சரி, வாசகருக்கு ஒவ்வாமையே ஏற்பட்டுவிடுகிறது. இருப்பினும், லட்சியவாத எழுத்துக்கள் வாசிக்கப்பட்டாத காலம் என்று ஒன்றையும் சொல்லிவிடமுடியாது. இன்றும் கு.ப.ரா கதைகளும் ரஷ்ய நாவல்களும் விரும்பி வாசிக்கப் படுகின்றன. அதன்வழி அன்றைய உலகம் கண்முன் எழுந்து வருகிறது. அதன் போராட்டத்தில் நாமும் ஒரு அங்கமாகிறோம். ஆகவே உணர்வும் எழுத்தும் தற்காலத்திற்கு தேவையா என்பதை விடவும் எழுதப்பட்ட காலத்திற்கு உண்மையாக உள்ளனவா என்பதை வைத்தே படைப்பு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அந்தவகையில் அகரமுதல்வனின் ஒவ்வொரு சிறுகதைகளிலும் ஈழப்போரில் போர்முனையில் நின்ற ஒரு தமிழீழப் போராளியின் மனவோட்டத்தை வாசிக்கையில் நமக்குள்ளும் உணர்வெழுச்சி மீண்டும் உண்டாகிறது.

//எதிரியின் சன்னங்களை எனது நெஞ்சில் வாங்கிக்கொள்ள தயாராகி ஏறக்குறைய 24 வருடங்கள் ஆகிவிட்டன. இவர்கள் எம்மை கட்டிப் போட்டுச் சுட்டாலும் முதுகில் தானே சுடுகிறார்கள். இராணுவத்தின் துவக்குகள் போராளிகளின் நெஞ்சையே எதிர்கொள்ள அஞ்சுகின்றன. நித்திலா எனது குழந்தையை பார்த்து விடவேண்டும் என்கிற ஆசை எனக்குள் ஆழிப்பேரலைபோல அடித்துக்கொண்டிருக்கிறது.//

காக்கைப் பாடினியார் பாடிய புறமுதுகு இடாத மைந்தன், நப்பூதனார் பாடியது போல போர்முனைக்குச் சென்ற கணவன் இன்னும் திரும்பவில்லையே என காத்திருக்கும் மனைவி என புறநானூறு காலம் முதல் சங்க இலக்கியங்களில் தொட்டே காணக்கிடைக்கும் வர்ணனைதானே இது. ஆனால் அகரமுதல்வனின் வரிகளில் அவற்றை மீண்டும் வாசிக்கையில் அது எங்கும் செயற்கையாகவோ புனைவு ஏற்றப்பட்டதாகவோ இல்லை. அன்று நப்பூதனாரும், காக்கைப்பாடினியாரும் மிகையாக சொல்லிவிடவில்லை இதோ அதற்கான ஒரு சான்று என்று சொல்லத்தக்க வண்ணம்தான் இருக்கின்றன. அகரமுதல்வனின் கதைகளில் உள்ள அந்த உண்மைத்தன்மையும் ஆங்காரமும், குருதியில் தோய்ந்த அந்த சபிக்கப்பட்ட நிலத்தின் ரணங்களை இன்னும் காய விடாமல் அப்படியே வைத்திருக்கிறது. அகரமுதல்வன் போர்க்காலத்தை பரணி பாடவில்லை. செய்தித்தாள்களில் வந்தவற்றை இலக்கியத்தில் பதிவது அவர் நோக்கமும் அல்ல. தன் தரப்பு நியாயங்களை தன் உணர்வு சற்றும் குறையாமல் அவர் காட்ட விரும்புகிறார். அதனாலேயே அவர் கதைகளில் வரும் புத்த பிட்சுவின் கண்கள்கூட குரூரமான காட்டு விலங்கின் கண்களையே நினைவு படுத்துகிறது ( அகல்). சிங்கள இராணுவ வீரனுக்கும் சீக்கிய இராணுவ வீரனுக்கும் பெரிய வித்தியாசம் காட்ட வேண்டிய தேவையும் அவருக்கு ஏற்படவில்லை.

இலக்கியம் ஒரு நடுநிலையாக இருக்கவேண்டியதோ அல்லது அரசியல் சரிநிலை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் கொண்டதோ அல்ல. இறுதிப்போர் நிகழ்ந்த காலத்திலிருந்தே இவர் கதைகள் எழுதப்படுவதால் போருக்கும் முன்பான தமிழர் வாழ்க்கையின் சித்தரிப்பு இருப்பதில்லை. மாறாக, கதைகளில் போரை மட்டுமே முதன்மையானதாக வைத்தே பிற அனைத்தும் இயங்குகின்றன. இயக்கத்திற்கும் போருக்கும் சற்றும் சம்பந்தமில்லாமல் கொண்டு செல்லத்தக்கக் கதைகளில் கூட போர் விவரணைகள் உரையாடல்கள் நிகழ்ந்தபடிதான் இருக்கின்றன. காதலில் கொள்ளும் ஊடல் கூட விடுதலைப்போர் மற்றும் இயக்கம் சார்ந்த அபிப்ராய பேதங்கள் வாயிலாகவே உருவாகின்றன. மேலும் சில இடங்களில் கதைகளில் தேவையின்றியுமே, இயக்கத்தின் மீதான விமர்சனங்களுக்கு புனைவின் வழி பதில் சொல்லிக்கொண்டும் செல்கிறார். இயக்கம் ஒழுக்கமீறலை சாதி பார்ப்பதை அனுமதிப்பதில்லை. அவ்வாறு நடந்து கொண்டவருக்கு நேர்ந்த தண்டனைகள் யாவை என்பது எல்லாம் கதையின் போக்கில் தகவல்களாக வருகின்றன. இவை சில நேரங்களில் பிரசாரமாகவும் ஒலிக்கின்றன. அடி உதை சித்தரவதை தண்டனை எல்லாம் இருக்கிறது. ஒரே வித்தியாசம் கதை சிங்கள வதை முகாமில் நிகழ்கையில் அந்த சித்தரிப்பில் அவையனைத்தும் மனித உரிமை மீறலாகவே வெளிப்படுகிறது. அதுவே இயக்கத்தின் விசாரணையில் நிகழும்பொழுது அதற்கான நியாயம் இருப்பதாக உரைக்கப்படுகிறது. வதைபடுபவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு தன்னை கொன்றுவிடும்படி இறைஞ்சுகிறார் அல்லது பாவத்தை எண்ணி நடைபிணமாகிறார். இவை கதைக்கு வெளியே இருப்பவை என்றாலும் அது எழுத்தாளரின் தேர்வுதான் என்ற போதிலும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனாலும் இழந்தவரின் நியாயம் என்றும் வென்றவரின் அறமின்மை என்கிற ஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. அதனாலேயே யதார்தத்தில், வாசகருக்கும் அவர் சொல்வதைக் கேட்டுக் கொள்வதைத் தவிர வேறு ஏதும் செய்வதற்கில்லை.

இக்கதைகளில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் அது அவர் கூறுமுறை. அகரமுதல்வனின் எழுத்து நடையும் சொற்பிரயோகங்களும் கவனிக்கத்தக்கவையாக உள்ளன. வரிகளுக்கு இடையே வரும் உவமைகள் அவர் கதையை சொல்லிச் செல்லும் வேகம் போன்றவை எல்லாம் பிரவாகம்தான். அடிப்படையில் ஒரு கவிஞர் என்பதாலும் இது அவருக்கு கைவரப்பெற்ற ஒன்றுதான். தமிழில் லாசரா எழுத்தை இவருக்கு முன்னோடியாக கருதலாம். //மெல்லிய மிடறுகளில் நீரருந்தும் அவளின் தொண்டைக்குழிக்குள் காய்வது தாகமல்ல. தாழ்வாரத்தின் ஓடைகளில் சொட்டிக்கொண்டிருக்கும் காலமேயான மழையை தாழ்வார மழையென்று அழைப்பது தகுமா? அவள் அருந்துவது நீரையல்ல. தாகம். லோஜி மனமுடைந்து அழுதுகொண்டேயிருந்தாள். கண்ணீரும் சத்தமும் இல்லை. ஆனால்அழுகிறாள்.// அனைத்து வகையிலும் போர்க்கால வர்ணனையும் அதற்குப் பிறகான போராளிகளின் வாழ்வின் அவலங்களையும் சொல்லிச் செல்கிறார். வீடுகளில் கொண்டு வீசப்படும்போது பதுங்கு குழிகளுக்குள் இருந்து வெளியேவராமல் அழுது வாயிலும் மக்களின் நடுவே கேட்கும் திறனிழந்த முஸ்தபா ஒரு குறியீடாகவே ஆகிவிடுகிறது.

அவரது உவமைகளும் யதார்த்த உவமைகளாக இருப்பதும் வாசகனை துன்புறுத்துபவை.. உதாரணமாக, //எக்கச்சக்கமான மிதிவெடிகளுக்குள் மாட்டிக்கொண்ட மேய்ச்சல் மாட்டைப்போல எங்கும் அசையவிடாமால் எங்கள் மூக்கணாங்கயிற்றை காலம் பிடித்துவிட்டது. காலத்தின் கரங்களுக்குள் எமது ஒவ்வொரு அடியும் நகர்கிறது.// உணர்வும் வேகமும் வாசகருக்குத் தொற்றிக்கொள்ளும் நடை வாய்க்கப் பெற்றிருக்கிறது. தீபாவளி என்னும் கதை ஒரு ஊரிலிருந்து புலம் பெயரை வேண்டிய நிலையில் இருக்கும் கதிர்காமன் அதை விரும்பவில்லை என்கிற வர்ணனையோடு துவங்குகிறது. புலம்பெயரத் தவிக்கும் ஒரு மனதை சொல்லும் கதையாக துவங்குவது இடையில் ஒரு வரியில் வரும் ” தான் சந்திக்கும் பதினான்காவது இடப்பெயர்வை வெறுக்கும் காரணம் அவனுக்குத் தெரியவில்லை” என்கிற இடத்தில் வேறு கூறுபொருளுக்குச் செல்கிறது. இறுதியில் இந்திராவின் அன்னையைக் கொன்ற இந்திய ஆர்மியின் கதையாகிவிடுகிறது. கதையில் வரும் இந்திராவின் அன்னையும் நாமறிந்த அன்னை இந்திராவும் ஒரு கணத்தில் ஒன்றாகி விடுகிறார்கள். கதைகளில் மெல்லிய நகைப்பு வரவழைக்கும் வரிகளும் ஆங்காங்கு உண்டு. //மாவோ என்று சொல்லியபோது காற்று சும்மா இருந்த கிளைகளை அசைக்கின்றது (சித்தப்பாவின் கதை)// சில கதைகளில் கதாபாத்திரங்கள் மீதான எழுத்தாளரின் கேலியும் உண்டு. //இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தின் முதல் திகதியில் இராணுவத்திடம் சரணடைந்த மங்கையன், பொதுசனங்களென கூறிக்கொண்டு இராணுவப் பகுதிக்குள் நுழைந்த போராளிகளை இனம்காட்டத் தொடங்கியிருந்தான். (தந்தம்)//

அகரமுதல்வன் தனது கதைகளில் போருக்கு முன்பான காலங்களை எழுதவில்லை என்றாலும் போருக்குப் பின்னான வாழ்வை பதிவு செய்திருக்கிறார். அந்தப் பின்புலத்தில் அகரமுதல்வனின் எழுத்துக்கள் தொட்டிருக்கும் இடங்களே அவர் அதுவரையிலான அவரது கதைகளிலிருந்துமே விலகி நிற்கும் ஒரு இடமாகவும் இருக்கிறது. சிங்கள வதை முகாமில் நிகழும் சித்ரவதைகள் போராளிகளின் அங்கஹீனங்கள் அவர்கள் மானபங்கப்படுத்தப்படும் விதம் அனைத்தும் விவரிக்கப்படுகின்றன. வதைமுகாமிலிருந்து வாழ்க்கைக்குத் திரும்பும் போராளிகள் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருகின்றனர். வாழ்வை எதிர்கொள்ள இயலாத போராளிகள் தற்கொலை செய்து மரிப்பதும் நிகழ்கிறது. போரில் மரணமடைவதே பெரிய விடுதலை வாழ்வு பெரும் துயரனமானது என்னும் வர்ணனை அவரது வேறொரு கதையில் வரும் (முஸ்தபாவை சுட்டுக்கொன்ற ஓரிரவு ). அதை இந்தக் கதைகள் நினைவூட்டுகின்றன. இவை ஈழத்திலே அகதியானவர்களின் கதைகள். அதிலிருந்து மாறுபட்டவை இந்தியாவில் வாழும் அகதிகள் நிலை.

கிளிநொச்சிக்கு இணையாகவே சென்னை ஸ்ரீதேவி குப்பம் சாலையும் இவர் வழியாக இலக்கியத்தில் இடம் பிடித்துவிட்டது. அவரது போர்க்கதைகளில் இருந்த தளைகள் ஏதுமில்லாத சுதந்திரமான கதை சொல்லலும் இக்கதைகளில்தான் நிகழ்கிறது. அகதியாகவே இருந்தாலும் அகதியாக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கும் தமிழ் நாட்டில் அகதியாக வாழ்ப்பவருக்குமான வேறுபாடும் ஏற்றத்தாழ்வும் பதிவாகின்றன. நாட்டுக்காக இரத்தத்தைக் கொடுத்து சண்டை செய்த மக்கள் சென்னையில் தண்ணீருக்காய் கேவலமாய் சண்டை செய்வதும், அங்கு புலிகளுக்காக சண்டையிட்ட இளைஞர்கள் இங்கு திரைப்பட நடிகருக்கு புலி என்று பேனர் வைத்து கொண்டாடுவதும் வெளிப்படுகிறது. முகாம்களில் வாழும் பெண்களின் தனிமையும் அவர்களை அயல்நாடுகளில் வாழ் ஈழத்தமிழரே உதவி என்று சொல்லி கொச்சைப்படுத்தும் விதம் ஆகியவை இதுவரை சொல்லப்படாதவை. இங்கு அவர் எழுத்துக்களில் உள்ள வழக்கமான பிரவாகம் குறைவதும் நுட்பமான சித்தரிப்புக்கள் எழுந்து வருவதும் நிகழ்கின்றன. இங்கு அவர் கதைகள் கொள்ளும் அழுத்தம் மிக கனமானது. அவர் கதாபாத்திரங்கள் உரக்கப் பேசுவதும் இல்லை. உறவிலும் மெளனத்தையே பரிமாறிக் கொள்கிறார்கள். அவ்வாறு அவருடைய சென்னைக் கதைகள் மற்ற கதைகளோடு மாறுபட்டுளளன.

அகரமுதல்வன் தனது கதைகளில் ஒரு சிறந்த ஒரு காதல் கதையை அல்லது மனக்கிலேசத்தை எழுதுவது என பலதரப்பட்ட கதைகளையும் சொல்லிச் செல்கிறார். ஆனால் அவை அனைத்தையும் மீறி அவர் உண்மையான நிகழ்ந்த செய்திகளை புனைவில் மெருகேற்றி விளக்குவது என்கிற இடத்தில் தன்னை இருத்திக் கொள்கிறார். அதுவே அவர் எழுத வந்தததன் நோக்கமாகக் கூட கொள்ளலாம். அதற்கான அத்தனை நியாயங்களும் அவர் தரப்பில் உள்ளன. தன்னுடைய ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு ‘பான் கீ மூனின் றுவாண்டா’ என்ற பெயர் இட்டுள்ளார். அந்தப் பெயரில் அவர் ஏதும் சிறுகதை எழுதவில்லை. உலக நாடுகள் பார்த்திருக்க, ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை அவர்களுக்கே சமர்ப்பிக்கும் ஒரு எள்ளல் கொண்ட தலைப்பு. அந்தத் தொகுப்பு மட்டுமின்றி இதுவரையிலான அவரது மொத்த சிறுகதைகளையும்கூட இந்த தலைப்பில் அடக்கி தொகுத்து விடலாம். அந்தவிதத்தில் அவரது எழுத்தின் அடுத்தக் கட்ட பரிணாமம் என்பது இனிவரும் கதைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

 

ஆர். காளிப்பிரஸாத் 

 

சிறுகதையாசிரியர். இலக்கிய விமர்சனங்கள் எழுதுவதிலும், மொழியாக்கங்களிலும் ஆர்வம் கொண்டவர். இவரின் சிறுகதைகள் ‘ஆள்தலும் அளத்தலும்’ என்ற தலைப்பில் தொகுப்பாக வெளிவந்துள்ளது, ‘தம்மம் தந்தவன்’ என்ற நாவலைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.
 

 

https://akazhonline.com/?p=3547

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.