Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தின் புதிய ஆளுநராக... ஆர்.என்.ரவி நியமனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

தமிழகத்தின் புதிய ஆளுநராக... ஆர்.என்.ரவி நியமனம்.

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவியை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமனம் செய்துள்ளார்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார்.  அண்மையில் அவருக்கு பஞ்சாப் ஆளுநர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது.

இந்நிலையிலேயே அவர் பஞ்சாப் ஆளுநராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள  ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாகலாந்து  ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, தமிழகத்தின் புதிய  ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

நாகலாந்து ஆளுநர் பதவி அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முக்திக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது.

உத்தரகாண்ட் ஆளுநர் பதவி வகித்த பேபி ராணி மவுரியாவின் இராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் புதிய ஆளுநராக குர்மித் சிங் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழகத்தின் புதிய  ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவி (வயது 69) பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1238670

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக புதிய ஆளுநர் ஆர்.என்.ரவி - உளவுத்துறையில் நீண்ட அனுபவம் பெற்றவர்

9 செப்டெம்பர் 2021
ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,R.N. RAVI

 
படக்குறிப்பு,

ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உளவுத்துறை முன்னாள் உயரதிகாரியான ஆர்.என். ரவி, காவல் பணியிலும் நிர்வாகப் பணியிலும் தேர்ந்த அனுபவம் பெற்றவராக அறியப்படுகிறார். தற்போது அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார்.

பிகாரில் உள்ள பாட்னாவில் பிறந்த ஸ்ரீ ரவீந்திர நாராயண் ரவி, 1974 இல் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி படிப்பை முடித்ததும், சில காலம் பத்திரிகைத் துறையில் பணியாற்றிய இவர், 1976இல் இந்திய காவல் பணியில் சேர்ந்தார். அவருக்கு கேரளா பிரிவு ஒதுக்கப்பட்டது.

அங்கு அவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்ட கண்காணிப்பாளர், காவல் துணைத் தலைவர் உட்பட பல்வேறு பதவிகளில் பணியாற்றினார், பின்னர் மத்திய அரசுப் பணிக்கு மாற்றலாகி நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றினார்.

மத்திய புலனாய்வுத்துறை பணியின்போது, நாட்டில் சுரங்க மாஃபியாக்கள் உட்பட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு எதிராக பல ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொண்டார். இந்தியாவின் உளவுத்துறையான இன்டலிஜென்ஸ் பியூரோவிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

அந்த பணியில் இருந்தபோது, இவர் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கி வந்த குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் மூளையாக செயல்பட்டார். உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்தபோது, ஐ.பி இயக்குநராக இருந்தவர் அஜித் தோவால். அவர்தான் தற்போது பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். அந்த வகையில் தோவாலுக்கும் ஆர்.என். ரவிக்கும் நெருக்கமான புரிந்துணர்வு உள்ளது.

அந்த பணியின்போது தெற்காசியாவில் மனிதர்களின் பூர்விக குடியேற்றத்தின் இயக்கவியலில் நிபுணத்துவம் பெற்றார். எல்லையோர மக்களின் அரசியல், சமூகவியலில் ஏற்படும் தாக்கங்களை அவர் காவல் நோக்கில் ஆராய்ந்து அரசு பல திட்டங்களை வகுக்க காரணமாக இருந்தார்.

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,R.N. RAVI

இனக் கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வரும் பணியில் அவர் முக்கியப்பங்காற்றினார்.

2012இல் அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் தேசிய நாளிதழ்களில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய நிகழ்வுகளை தமது அனுபவங்களுடன் ஒப்பிட்டுக் கட்டுரைகளை எழுதி வந்தார்.

பின்னர் அவர் பிரதமர் அலுவலகத்தில் மத்திய உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு உளவு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பணிக்காக நியமிக்கப்பட்ட கூட்டு புலனாய்வு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்,

அங்கு புலனாய்வு சமூகத்தின் தலைவராகவும், நாட்டின் உளவுத்துறை தேவைகளை பூர்த்தி செய்யும் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வழிகாட்டியாக செயல்பட்டார்.

2014ஆம் ஆண்டில் மத்தியில் நரேந்திர மோதி தலைமையில் புதிய அரசு அமைந்த சில மாதங்களில், அதே ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி, நாகாலாந்தில் நாகா சமாதான பேச்சுவார்த்தைக்கான மையத்தின் மத்தியஸ்தராக ரவி நியமிக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, 2018ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அவர் நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வருகிறார். பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் அவர் தமிழக ஆளுநராக தற்போது இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

நாகா பேச்சுவார்த்தையும் ரவியின் நடவடிக்கைகளும்

நாகா குழு

பட மூலாதாரம்,MHA

 
படக்குறிப்பு,

2015இல் நாகா என்எஸ்சிஎன் (ஐஎம்) குழு தலைவர்களுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டும் உடன்பாட்டில் கையெழுத்திட்ட தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நாகாலாந்து கிளர்ச்சிக்குழுவான என்எஸ்சிஎஎன் (ஐஎம்) தலைவர்கள், மாநிலத்தில் நீடித்து வரும் கிளர்ச்சியாளர்கள் பிரச்னைக்கு தீர்வு காண மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி வந்தனர். அந்த நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், 2014இல் இந்திய அரசின் சார்பில் நாகா கிளர்ச்சியாளர்களுடன் பேச்சு நடத்தும் அதிகாரம் மிக்கவராகவும் மத்தியஸ்தராகவும் என்,ஆர். ரவி நியமிக்கப்பட்டார்.

நாகாலாந்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் என்எஸ்சிஎன் (ஐஎம்) குழுவுடன் 1997இல் இந்திய அரசு சண்டை நிறுத்தம் செய்யும் உடன்பாட்டை எட்டியது. அதைத்தொடர்ந்து அந்த குழுவுடன் சுமார் 90 சுற்று பேச்சுவார்த்தைகளை இந்திய அரசு நடத்தியிருக்கிறது.

கடந்த 24 ஆண்டுகளாக இந்த பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதெல்லாம் அதில் என்எஸ்சிஎன் (ஐஎம்) தலைவர் ஐசாக் சிஷி ஸ்வு, பொதுச்செயலாளர் டி. முய்வா ஆகியோர் பங்கெடுத்தனர்.

இந்த சமயத்தில்தான் வடகிழக்கு மாநிலங்களில் உளவுப்பிரிவில் அனுபவம் பெற்ற ஆர்.என். ரவியை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு 2019இல் நியமித்தது. அதன் பிறகும் நாகா குழுக்களுடன் பேசும் அரசின் பிரதிநிதியாக அவர் பணியைத் தொடர்ந்தார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி அமைதிப்பேச்சுவார்த்தைக்கு உடன்பட என்எஸ்சிஎன் (ஐஎம்) கையெழுத்திட்டிருந்தாலும், அதில் ஒப்புக்கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் இறுதி செய்யப்படாமல் இழுபறியாக உள்ளன. இதுவரை அமைதி பேச்சுவார்த்தைக்கு உடன்படும் நடவடிக்கையில் என்எஸ்சிஎன் (என்கே), என்எஸ்சிஎன் (ஆர்), என்எஸ்சிஎன் (கே) பிரிவு கிளர்ச்சிக்குழுக்கள் கையெழுத்திட்டுள்ளன.

ஆனால், மேலும் சில குழுக்களும் நாகாலாந்தில் உள்ளதால் அவற்றை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வரும் முயற்சியில் தொய்வு காணப்படுகிறது. அதற்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த என்எஸ்சிஎன் (ஐஎம்) குழு, இந்திய அரசின் சார்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதிநிதி பொறுப்பில் இருந்து ரவியை அகற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு குரல் கொடுத்தது. நாகாலாந்து அமைதிக்கு அரசியல் தீர்வு கிடைக்க தடங்கலாக ரவி இருப்பதாக அந்த குழுவின் தலைவர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டினர்.

ஆனால், நாகாலாந்து தேசிய மக்கள் குழுவில் (என்என்பிஜி) அங்கம் வகிக்கும் ஏழு உள்ளூர் அமைப்புகள் மற்றும் 14 நாகா பழங்குடிகள் அங்கம் வகிக்கும் நாகா பழங்குடி ஹோஹோஸ் குழு (ஏஎன்டிஎச்என்), ஆர்.என்.ரவியை நீக்க ஆட்சேபம் தெரிவித்தன.

நாகா

பட மூலாதாரம்,NSUD

 
படக்குறிப்பு,

நாகாலாந்தில் பழங்குடிகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஒரு பிரிவு பழங்குடி மக்கள் டெல்லியில் கடந்த ஆண்டு பேரணி நடத்தினர்.

கடந்த வாரம் நாகா விவகாரம் தொடர்பாக பல்வேறு கட்சியினரும் பங்கெடுத்த கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரப்பில் முன்வைக்கப்பட்ட கருத்துகள், நாகாலாந்தில் அமைதி திரும்ப ஆக்கபூர்வ நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இருந்தன.

அந்த கூட்டத்தில் பேசிய மற்ற கட்சியினர் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள், நாகாலாந்து ஆளுநராகவும் இந்திய அரசின் பிரதிநிதியாகவும் உள்ள ஆர்.என். ரவிக்கு பதிலாக வேறு ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த நிலையில், நாகாலாந்து தேசிய கவுன்சில் காப்லாங் (என்எஸ்சிஎன்-கே) பிரிவின் அங்கமான நிகி சுமி பிரிவைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் மத்திய அரசு டெல்லியில் சண்டை நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டது. அதன்படி, அந்த குழுவைச் சேர்ந்த 200க்கும் அதிகமான ஆயுதக்குழுவினர் அமைதிப்பேச்சுவார்த்தை நடவடிக்கையில் பங்கெடுக்க உடன்பட்டனர். இந்த உடன்பாடு செப்டம்பர் 8 முதல் ஓராண்டுக்கு தொடரும் என்று மத்திய உள்துறை அறிவித்தது.

இந்த உடன்பாடு கையெழுத்தான மறுதினமே, ஆர்.என். ரவியை நாகாலாந்து மாநில ஆளுநர் பதவியில் இருந்து இடமாற்றம் செய்து தமிழ்நாடு ஆளுநராக மத்திய அரசு நியமித்திருக்கிறது. இதன் மூலம், நாகாலாந்து கிளர்ச்சிக்குழுக்களுடன் பேச்சு நடத்த புதிய பிரதிநிதியை மத்திய அரசு நியமிக்குமா அல்லது அந்தப் பொறுப்பில் ரவி தொடருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

https://www.bbc.com/tamil/india-58507850

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? புதிய ஆளுநர் நியமனத்தில் பா.ஜ.கவின் அரசியல் என்ன?

55 நிமிடங்களுக்கு முன்னர்
ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,R.N. RAVI

 
படக்குறிப்பு,

ஆர்.என்.ரவி

நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. ` நாகாலாந்தில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிலும் அதே வேலையைத்தான் செய்வார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சிக்கிறது. ஆர்.என்.ரவியின் நியமனம் சர்ச்சையாவது ஏன்?

தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்வாரிவால் புரோஹித் நியமிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் கோவை, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்தார். இந்தப் பயணம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. மாநில சுயாட்சியில் ஆளுநர் தலையிடுவதாகவும் அரசியல் கட்சிகள் கொதிப்பை வெளிப்படுத்தின. ஆளுநர் பன்வாரிலாலின் செயல்பாடுகளும் விமர்சனங்களை ஏற்படுத்தியதால் ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதை அடியோடு ரத்து செய்துவிட்டார்.

இதன்பிறகு கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தபடியே அரசியல் கட்சியினர் கொடுக்கும் மனுக்களை பெற்றுவந்தார். கூடவே, பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பில் பன்வாரிலால் இருந்தார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் முழு நேரமாக நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவியையும் நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆர்.என்.ரவியின் பின்னணி!

பீகார் மாநிலம் பாட்னாவில் பிறந்த ஸ்ரீரவீந்திர நாராயண் ரவி எனப்படும் ஆர்.என்.ரவி, இயற்பியலில் முதுகலைப் பட்டத்தை நிறைவு செய்துவிட்டு பத்திரிகை துறையில் பணியாற்றியுள்ளார். பின்னர் 1976 ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்குத் தேர்வாகி கேரளாவில் பணியாற்றினார். பின்னர் மத்திய அரசுப் பணியிலும் உளவுத்துறையிலும் பங்காற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டில் பணி ஓய்வு பெற்று பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதி வந்தவர், பிரதமர் அலுவலகத்திலும் பணிபுரிந்தார்.

2014 ஆம் ஆண்டு கூட்டு புலனாய்வுக்குழுவின் தலைவராகவும் 2018 ஆம் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பணியாற்றினார். பின்னர், 2019 ஆம் ஆண்டு நாகாலாந்து மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு நாகா போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமரச தீர்வை கொண்டு வர முயற்சித்தது என ரவியின் செயல்பாடுகள் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் பெற்றன.

நாகா குழு

பட மூலாதாரம்,MHA

 
படக்குறிப்பு,

2015இல் நாகா என்எஸ்சிஎன் (ஐஎம்) குழு தலைவர்களுடன் அமைதி ஒப்பந்தத்தை எட்டும் உடன்பாட்டில் கையெழுத்திட்ட தலைவர்களுடன் இந்திய பிரதமர் மோதி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதேநேரம், காவல்துறை அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட ஒருவரை தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிப்பதில் உள்நோக்கம் உள்ளதாக அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இதுதொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், `எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்களை இடையூறு செய்வதற்காகவே இதுபோன்ற நியமனங்களை மத்திய அரசு கடந்த காலங்களில் செய்துள்ளது. இதனைக் கண்கூடாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.

கே.எஸ்.அழகிரியின் கேள்விகள்!

உதாரணமாக, முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான கிரண்பேடியை புதுச்சேரி ஆளுநராக நியமித்து, காங்கிரஸ் அரசுக்கு எதிராக நடத்திய ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாடே பார்த்து நகைத்தது. அங்கு ஆட்சி செய்த காங்கிரஸ் அரசைச் செயல்படவிடாமல் நித்தம் இடையூறு செய்து மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்ட அவரை, கடும் எதிர்ப்பு காரணமாக மோடி அரசு திரும்பப் பெற்றது' என்கிறார்.

தொடர்ந்து, ` ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக நியமித்திருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தின் தொட்டிலாக கருதப்படுகிற தமிழகத்தில், வெளிப்படைத் தன்மையுடன் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இடையூறு செய்யும் வகையிலேயே ஆர்.என்.ரவியை ஆளுநராக மோடி அரசு நியமித்திருக்கிறதோ என்று நான் சந்தேகப்படுகிறேன்.

தமிழகத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க, ஆளுநர் நியமனத்தின் மூலம் அச்சுறுத்த நினைக்கிறது. இதற்காக ஆர்.என்.ரவியை பகடைக்காயாகப் பயன்படுத்த மோடி அரசு முயல்கிறது என்ற குற்றச்சாட்டில், நூறு சதவிகிதம் நியாயம் இருப்பதாகவே கருதுகிறேன்' என்கிறார்.

மேலும், ` சிறந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், அறிஞர்கள் ஆகியோரை ஆளுநராக நியமிப்பதுதான் சிறந்த மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால், அவற்றுக்கு முற்றிலும் புறம்பாக பயங்கரவாத குழுக்களை ஒடுக்குவதற்காகவே பொறுப்புகள் வழங்கப்பட்டு செயல்பட்டவர் ஆர்.என்.ரவி. இத்தகைய பின்னணி கொண்ட ஆர்.என்.ரவியை, புதிய ஆளுநராக தமிழகத்தில் நியமித்து ஜனநாயகப் படுகொலை நடத்துவதற்கு ஆயுதமாகப் பயன்படுத்த மோடி அரசு முயன்றால், அதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் மக்களைத் திரட்டிப் போராட வேண்டிய சூழல் உருவாகும்' என எச்சரித்துள்ளார்.

ஆட்சியை கலைக்கும் தெம்பு உள்ளதா?

இதே கருத்தை வலியுறுத்தி செய்தியாளர்களை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ` உளவுத்துறையோடு தொடர்பில் உள்ள ஒருவரை வேண்டுமென்றே ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. இன உணர்வையும் மொழி உணர்வையும் அழிக்கக் கூடிய ஒருவரை ஆளுநராக நியமித்துள்ளனர். ஜனநாயக முறைப்படி பணியாற்றக் கூடிய ஒருவரை ஆளுநராக பணியமர்த்த வேண்டும். இங்கு யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு ஆட்சியை கலைத்துவிடும் தெம்பும் திராணியும் கிடையாது' என்றார்.

திருமாவளவன்

பட மூலாதாரம்,THIRUMAVALAVAN FB

``புதிய ஆளுநர் நியமனத்தை எதிர்ப்பது ஏன்?" என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசுவிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` ஆளுநர் பதவியே தேவையில்லை என்பதுதான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு. ஆளுநர் என்பவர் இந்திய அரசின் முகவராக உள்ளனர். மக்களால் தேர்வு செய்யப்படும் ஓர் அரசாங்கத்தை முடக்குவதற்கோ, அதன் நிர்வாகத்தின் தலையிடுவதற்கோ ஆளுநர்களுக்கு எந்தவித உரிமைகளும் இல்லை" என்கிறார்.

கூட்டணிக்கே குடைச்சல் கொடுத்த ரவி!

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய வன்னியரசு, `` புதிய ஆளுநராக பொறுப்பேற்க உள்ள ஆர்.என்.ரவி, நாகாலாந்தில் ஆளுநராக இருந்தவர். அங்கு பா.ஜ.கவுடன் இணைந்த கூட்டணிக் கட்சிதான் ஆட்சியில் உள்ளது. ரவியை இடமாற்றம் செய்தது தொடர்பாக, அம்மாநில தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியின் தலைவர் அளித்த ஒரு பேட்டியில், `பெரும்பான்மை மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்கள் அரசாங்கத்தில் ஆளுநர் ரவி தொடர்ச்சியாக தலையிட்டு வந்தார். அவரை இடமாற்றம் செய்தது எங்களுக்கு ஆறுதலாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்கிறார். பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுக்கும் ஒருவர், தமிழ்நாட்டிலும் அதே வேலையைச் செய்வார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

அடுத்ததாக, நாகாலாந்தில் உள்ள நாகா போராட்டக் குழுக்களுடன் ஆர்.என்.ரவி பேச்சுவார்த்தையை நடத்தினார். அவர்கள் தனி நாடு கோரிக்கையை முன்வைக்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அம்மாநிலத்தில் உள்ள 75 சதவிகித இடங்களில் சுதந்திர கொடி ஏற்றப்படவில்லை. தேசிய இனங்களின் விடுதலை, அதன் அடையாளம், உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதுதான் அம்மக்களின் கொள்கைளாக உள்ளன. அப்படிப்பட்ட போராட்டக் குழுவுடன் ஆர்.என்.ரவி பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போட்டதிலும் முறைகேடுகள் நடந்தன.

இரட்டை ஒப்பந்தங்களா?

பொதுவாக, ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் நிலத்துக்கு இரட்டை ஒப்பந்தங்களை (Double Documents) போடுவது வழக்கம். இதே பாணியில் நாகா போராட்டக் குழுவினருடன் இரட்டை ஒப்பந்தங்களை ஆளுநர் ரவி போட்டுள்ளதை, போராட்டக் குழுவினர் கூறியுள்ளனர். அதாவது, பேச்சுவார்த்தையின்போது போராட்டக் குழுவினருடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தனிக்கொடி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை ஏற்றுக் கொண்டதாக ஒன்றும் பிரதமர் மோடியிடம், நாம் சொன்னதை அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாக வேறு ஓர் ஆவணமும் கொடுத்துள்ளார். மோசடியான இந்த ஆவணம் ஜனநாயகத்துக்கு விரோதமாக உள்ளது. தேசிய இனங்களின் எழுச்சி என்பது பா.ஜ.கவின் ஒற்றை இந்தியா என்ற கனவு முழக்கத்துக்கு எதிராக உள்ளது. தேசிய இனங்களின் எழுச்சியை ஒடுக்க நினைக்கும் நபராக ரவி இருக்கிறார்" என்கிறார்.

மேலும், `` தேசிய இனங்களின் அடையாளத்தை பாதுகாக்கும் வகையில் குடியுரிமை திருத்தச் சட்டம், வேளாண் திருத்தச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ராகுல், மம்தா ஆகியோருடன் முதலமைச்சர் ஸ்டாலின் இணைந்து செயல்படுவதால் ஆர்.என்.ரவி போன்றவர்களை அனுப்பி குடைச்சல் கொடுக்கும் வேலைகளைச் செய்கின்றனர். இதன்மூலம், இவர்களை எதிர்கொள்வதிலேயே மாநில அரசுக்கு நேரம் சென்றுவிடும். தேசிய அளவில் கவனம் செலுத்த முடியாது. தேசிய இனங்களின் எழுச்சியை ஒடுக்குவது, மாநில அரசுக்குக் குடைச்சல் கொடுப்பது என இரண்டு வகையான அரசியலை பா.ஜ.க செய்கிறது" என்கிறார்.

ரவியின் நியமனத்தை எதிர்ப்பது சரியா?

``ஆர்.என்.ரவியின் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதே?" என பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` சட்டத்தை மதிப்பவர்கள் போலீஸ்காரர்களை வரவேற்பார்கள். போலீஸ்காரர்களை கண்டு பயப்படுகிறவர்கள் யார் எனப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் நலன் கருதியும் ஆட்சிக்கு வலு சேர்க்கின்ற ஆளுமை என்ற வகையிலும் ஆர்.என்.ரவியை வரவேற்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் அவரை எதிர்ப்பதற்குப் பிரதான காரணம் ஒன்று அரசியல் அல்லது இவர்களுக்கு அவரின் வருகை பயத்தை ஏற்படுத்தியிருக்கலாம்" என்கிறார்.

ஆர்.என்.ரவி

பட மூலாதாரம்,R.N. RAVI

தொடர்ந்து பேசுகையில், `` அரசியல் கட்சிகளின் அச்சத்துக்குக் காரணம், சட்டத்தை மீறிய அவர்களின் செயல்பாடுகள் வெளிப்பட்டுவிடுமோ என்பதுதான். இதுவரையில் அரசியல்வாதிகள் மட்டுமே 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். மோடி பிரதமரான பிறகு சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் ஆளுமை பொருந்திய நிர்வாகிகள், அனுபவம் உள்ளவர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டு வருகின்றனர். இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிய பல முன்னாள் அதிகாரிகள், ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரே ஓர் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாக இருந்தவர்தான்.

தமிழ்நாட்டில் தாலிபான்களா?

எனவே, திறமையும் நிர்வாகத் திறனும் உடையவர்களை ஆளுநர்களாக கொண்டு வருவது என்பது மாநிலத்தின் வளர்ச்சிக்காகத்தான் பார்க்க வேண்டும். இந்த விவகாரத்தை கிரண் பேடியோடு ஒப்பிடுவது சரியானதல்ல. நாம் செய்கின்ற செயலுக்கு தகுந்த அளவுக்கு எதிர்விளைவு இருக்கும் என்பதுபோல நாராயணசாமிக்கு ஏற்றார்போல கிரண்பேடி செயல்பட்டார். தமிழ்நாட்டு அரசு மக்களுக்கு எந்தளவுக்கு உழைக்கிறதோ, அந்த அளவுக்கு ஆளுநரின் பங்களிப்பும் இருக்கும். எந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும், விமர்சனம் செய்ய வேண்டும், வரவேற்க வேண்டும் என்பதை ஆராய்ந்து செயல்படுவது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளுக்கு நல்லதாக இருக்கும்" என்கிறார்.

``காவல்துறை பின்புலம் உள்ளவரை நியமித்ததில் உள்நோக்கம் உள்ளது என்கிறார்களே?" என்றோம். `` இந்தியாவை சுற்றி மூன்று மிகப் பெரிய எதிரிகள் உள்ளனர். பாகிஸ்தான், இலங்கைக்குள் ஒளிந்திருக்கும் சீனா, பங்களதேஷ் ஆகிய நாடுகள்தான் அவை. இவர்களை தமிழ்நாட்டில் உள்ள சில குழுக்கள் ஆதரிக்கின்றன. ஆப்கானிஸ்தானை சேர்ந்த 500 பேருக்குக் குறையாத தாலிபான்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவுக்குச் சென்றுள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

நாகா

பட மூலாதாரம்,NSUD

 
படக்குறிப்பு,

நாகாலாந்தில் பழங்குடிகளுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை களைய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஒரு பிரிவு பழங்குடி மக்கள் டெல்லியில் கடந்த ஆண்டு பேரணி நடத்தினர்.

தமிழ்நாட்டில் இன்றுள்ள ஆட்சியாளர்கள், இந்தச் செய்கைகளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்கிறார்கள். இதனை சரிசெய்ய வேண்டியது மத்திய அரசின் கடமையாக உள்ளது. உள்நாட்டில் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிலரால் தமிழ்நாட்டின் வழியாக இந்தியா பலியாகிவிடக் கூடாது என்ற பாதுகாப்பு அம்சமாக ரவியின் நியமனம் இருக்கலாம். நாகாலாந்தில் கலகத்தை அடக்கியது மட்டுமல்லாமல், வெறும் பேச்சுவார்த்தையின் மூலம் அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைய வைத்தவர் அவர்.

அதாவது, கையில் ஆயுதம் எடுக்காமல் எதிரிகளை அடக்கியவராக பார்க்கப்படுகிறார். தமிழ்நாட்டில் வி.சி.கவுக்கும் தி.மு.கவுக்கும் மொழியுணர்வு என்பது அரசியல் லாபம் கலந்த முழக்கமாக இருக்கிறது. காரணம், தமிழை வளர்ப்பதற்கு இவர்கள் எதையும் செய்யவில்லை. அதனை வைத்து வாக்குகளைப் பெறுவது மட்டுமே இவர்களின் நோக்கமாக உள்ளது. இதனை அவர்கள் தவிர்க்காவிட்டால் மக்களிடம் சங்கடங்களை சந்திக்க நேரிடும்" என்கிறார்.

அமித் ஷா வந்தாலும் நடக்காது!

`` இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் இருப்பதால், அதனைக் கண்காணிப்பதற்காகத்தான் ரவி நியமிக்கப்பட்டுள்ளதாக பா.ஜ.கவினர் கூறுகிறார்களே?" என வன்னியரசுவிடம் கேட்டோம். `` உண்மையில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள லாபியில் சீனாதான் இலங்கையை வென்றுள்ளது. விடுதலைப் புலிகள் எப்போதுமே இந்தியா பக்கம் இருந்துள்ளனர். இந்தியாவின் காலுக்குக்கீழ் உள்ள இலங்கையை சீனா தன்பக்கம் கொண்டு வந்துவிட்டது. அந்தவகையில் பார்த்தால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் ஒற்றை நபரான ரவி வந்து என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? இதுவே ஒரு நகைச்சுவைதான்" என்கிறார்.

மேலும், `` வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்களாக பா.ஜ.கவினர் உள்ளனர். தமிழ்நாட்டில் தனித்தமிழ்நாடு, தமிழ்த்தேசியம் போன்றவற்றைப் பேசும் மாநிலத்தில் அவர்களை அச்சுறுத்தும் நோக்கில் இந்த நியமனம் உள்ளதாக சந்தேகிக்கிறோம். அதேநேரம், இங்கு அவர்களின் செயல்பாடுகள் எதுவுமே நடைமுறையில் சாத்தியமாகப் போவதில்லை. தமிழ்நாட்டில் மிசாவைவே எதிர்கொண்ட இயக்கமாக தி.மு.க உள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக இங்கு பல்லாயிரக்கணக்கானோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ரவி மட்டுமல்ல, அமித் ஷாவே இங்கு ஆளுநரே வந்தாலும் தேசிய இனத்தின் அடையாளத்தை சிதைக்க முடியாது என்பதுதான் களநிலவரம்" என்கிறார் அவர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.