Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மார்ட்டினா - -ப. தெய்வீகன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மார்ட்டினா

-ப. தெய்வீகன்

 

மார்ட்டினா

(1)

கறுத்த எறும்புகள் மார்ட்டினாவின் கைகளில் ஏறுவதும் விழுவதுமாக சிநேகித்தபடியிருந்தன. மார்ட்டினா பூரித்திருந்தாள். கால்களை விரித்து தரையில் அமர்ந்தபடி, உள்ளங்கைககளில் கூட்டி அள்ளிய மண்ணை மெதுவாக வருடினாள். ஆதி நிலத்தின் அழியாத அழகை தினமும் பருகுவதில் அவளுக்குள் அப்படியொரு இன்பம்.

கதிர் வற்றிய வானத்திலிருந்து விழுந்த அந்தியின் வெளிச்சம், மரக்கிளைகளின் வழியாக தரையில் சிறு நிழல்களை வரைந்தது. குளிரோடு தலைகோதும் காற்றின் வாசனையை உணரும்போதெல்லாம் மார்ட்டினா வானத்தை அண்ணாந்து பார்த்து சிரித்தாள். தோழமையான அவளது புன்னகையில் இயற்கையின் மொழி அடர்ந்திருந்தது. அருவமான அவள் எழில் கலந்திருந்தது.

முதியோர் இல்லத்தின் நான்காவது தளத்திலிருந்து, மார்ட்டினாவின் வழக்கமான மண் விளையாட்டை சக வயோதிபர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

மார்ட்டினா விளையாடி முடியும்வரைக்கும் அவளை ரசித்துக்கொண்டிருந்த நளாயினி, இருட்டுவதற்கு முன் அவளை அறைக்கு அழைத்துச்செல்வதற்கு கடிகாரத்தையும் அடிக்கடி பார்த்துக்கொண்டாள்.

பெருங்குரலெடுத்து சிரித்தடி ஒரு எறும்பை விரல்களால் தூக்கிய மார்ட்டினா, அதனைத் தன் முகத்துக்கு அருகில் கொண்டுசென்றாள். வாஞ்சையோடு முத்தமிடப்போவதுபோல கிறங்கினாள். பிறகு வெட்கத்தோடு தரையில் விட்டாள். அவளது விரல்களில் கூட்டமாக ஏறுகின்ற எறும்புகளின் அணிவகுப்பை எப்போது பார்த்தாலும் ஆபரணமாய் வளைந்திருக்கும். நெளிந்தோடும் அவற்றின் விளையாட்டு அவளுக்குள் மாத்திரம் பெருஜதியோடு ஒலியெழுப்பும்.

ஒரு மாதமாக மார்ட்டினா இரவுகளில் இரத்த வாந்தியெடுக்கிறாள். மருத்துவர்கள் அவளுக்குள் புற்றேறியிருப்பதை உறுதிப்படுத்திவிட்டார்கள். கிடைசி நிலைப்புற்று என்று குறிப்பும் கொடுத்திருக்கிறார்கள்.

அபொறிஜினல் ஆதரவு அமைப்பிலிருந்து பலர் வந்து மார்ட்டினாவை பார்த்துப்போனார்கள். அவளது புற்றுக்கான காரணத்தை முன்வைத்து மெல்பேர்ன் முதல் பல இடங்களில் போராட்டங்களும் நடந்துமுடிந்திருக்கின்றன.

குழந்தையாய் தன்னை சிருஸ்டித்தபடி மரணத்தை நோக்கி தவழும் மார்ட்டினாவின் இறுதிநாட்கள் இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அமையவேண்டும் என்று எல்லோரும் பிரார்த்தித்தார்கள். மார்ட்டினாவுக்கு எதுவும் புரிவதில்லை.

போகன்வில்லா பூக்கள் அடர்ந்த முதியோர் இல்ல தோட்டத்தின் முற்றத்தில் மார்ட்டினாவின் காலைகள் விடியும். தளிர்விட்டு பெருகிக்கிடக்கும் பூக்களோடு கொஞ்சி மகிழ்வாள். அவற்றின் அடியிலிருக்கும் மண்ணை கைகள் நிறைய நிறைய எடுப்பாள். நிலத்தில் சொரிவாள். தனது கைகளுக்குள் அடங்காத கொழுத்த நிலத்தின் சதைகளை கிள்ளிச் சிரிப்பாள். தன்னைப்போல அதில் கிடக்கும் கறுப்பெறும்புகளோடு விளையாடுவாள். யாருக்கும் புரியாத ஆதிமொழியில் அடிக்கடி உரத்துச்சிரிப்பாள்.

தடித்த உதடுகளுக்கும் புடைத்திருக்கும் மூக்கிற்கும் அவளது முகம் கிட்டத்தட்டப் போதுமாயிருந்தது. ஆழத்தில் கிடந்த கண்களில் வயோதிபத்தை விஞ்சிய அழகு அவளில் தேங்கியிருந்தது. ஒழுங்கின்றிய கேசம் எப்போதும் அவளது முன் நெற்றியில் ஒழுகியபடியிருந்தது. ஒற்றியெடுக்கலாம் என்றளவுக்கு அவளது முகம் எப்போதும் எண்ணைச் சதைகளாக தொங்கியது.

(2)

தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டிலிருந்து ஆறாயிரம் கிலோமீற்றர் தொலைவில் இயற்கையின் கர்வம் விதிர்த்த நிலமாகப் பரந்திருந்த மாரலிங்க பிரதேசத்தில் அன்று மார்ட்டினா தூக்கத்திலிருந்து எழுந்தபோது, ஊரைவிட்டு ஓடிக்கொண்டிருந்த தகப்பனின் தோளில் குலுங்கிக்கொண்டிருந்தாள். மார்ட்டினாவின் தகப்பன் அவளது முதுகை தனது நெஞ்சோடு சேர்த்து அழுத்தியபடி மூச்சிரைக்க ஒடிக்கொண்டிருந்தான். காட்டு நிலமும் தடித்த கொடிகளும் விலகி வழிவிட, தனக்கு தெரிந்த பலர் கூடவே ஒடிக்கொண்டிருப்பதை கண்ட மார்ட்டினா வீரிட்டுக் கதறினாள். எப்போதும் மாறாத வானமும் அவர்களை பதற்றத்தோடு துரத்திக்கொண்டிருப்பதாக உணர்ந்தாள்.

மாரலிங்க நிலத்திலிருந்து நெடுந்தூரத்திற்கு ஓடிவந்த அனைவரும், தேக்குப்பாலமொன்றோடு அணைந்தோடிய நீருற்றைச் சுற்றி அமர்ந்தார்கள். அணங்கு மர நிழல்களில் ஏணை கட்டினார்கள். எல்லா குழந்தைகளையும்போல மார்ட்டினாவும் காடு அதிர அழுதபடியிருந்தாள். நீண்ட தடிகளை மரத்தில் சாய்த்து, ஏணை கட்டினார்கள். குழந்தைகளை அதில் போட்டு திணை மாவைப்பிசைந்து ஊட்டினார்கள். அந்தி சாயும் நேரம், காட்டுத்தடிகளை முறித்து எரித்து நெருப்பு வளர்த்தார்கள்.

அந்த இரவு, கரிய சுவாலைகள் அடர்ந்த மர்மத்தால் கொழுந்து விட்டெரிந்துகொண்டிருந்தது. காட்டுக்குள் சென்ற சிலர் கருவேலித்தடிகளை வெட்டிவந்து, உள்ளிருந்த விச்சறி க்ரப் புழுக்களை பிதுக்கி, நெருப்பில் சுட்டுத்தின்றார்கள். விடிந்ததும் தங்களது சொந்த இடத்துக்குப் போய் பார்த்துவருவது என்று பேசிக்கொண்டார்கள்.

அடுத்தநாள் காலை பெருங்காட்டை சிராய்த்துப்போவதுபோல தாழப்பறந்து சென்ற இரு விமானங்களின் சத்தத்தால் எல்லோரும் திடுக்கிட்டார்கள். சில விநாடிகளில் காட்டு மரங்கள் அனைத்தும் வெடித்துச்சிதறியதுபோல நிலம் அதிரும் பேரொலி மிக அருகில் கேட்டது. வானம் புகைக்குடமாய் ததும்பி வழிந்தது. காட்டின் மீது மீண்டும் இருள் விழுந்தது.

படுத்திருந்தவர்கள் அனைவரும் பதறியெழுந்தார்கள். மரங்களுக்குக் கீழ் அணைந்து நின்றார்கள். குழந்தைகள் மீண்டும் வீறிட்டு அழுதார்கள். வானில் படர்ந்த பெரும்புகை, சுருள் சுருளாக கீழ் இறங்கியது. மார்ட்டினாவின் தகப்பன் அலுபா தரையில் காதை வைத்து நிலத்துடன் பேசிப்பார்த்தார். சிறிது நேரத்தில் அறியாத புகைமணமொன்று காட்டிற்குள் இறங்கியது.

மாரலிங்க மக்களின் ஏகதெய்வமான ஏழுவண்ண சர்ப்பத்தினை வேண்டி அலுபா வானத்தை நோக்கி கூவினான். ஆனால், நீலமற்ற வானம் இருள் சிறகால் மிரட்டியது.

குழந்தைகளை ஏணைகளிலிருந்து தூக்கிக்கொண்டு எல்லோரும் ஓடினார்கள். எங்கும் படர்ந்திருந்த புகையின் மணம், இருளின் மீது தாவித்தாவி அவர்களைத் துரத்தியது. மதியம் கடந்தபோது வெட்டையான ஓரிடத்தில் வெளிச்சம் தெரிந்தது. காடு அவர்களின் பின்னால் மறையத்தொடங்கியிருந்தது.

அப்போது, தூரத்தில் தங்களை நோக்கி வந்துகொண்டிருந்த நீண்ட இரும்பு வாகனத்தைக் கண்டார்கள். முழுதாக தங்களை வெள்ளை பிளாஸ்திக் ஆடையால் உருமறைத்தவர்கள் அந்த வாகனத்திலிருந்து துப்பாக்கிகளுடன் இறங்கினார்கள். அவர்கள் அனைவரும், முதல்நாள் காலை தங்களது சொந்த இடங்களிலிருந்து கலைத்தவர்கள்தான் என்பது அலுபாவுக்கு புரிந்தது.

வாகனத்தின் ஓட்டுனர் ஆசனத்திலிருந்து ஆகக்கடைசியாக இறங்கிய தடித்த தலைவர் தோரணையிலான கம்பீரம் கொண்டவர், அனைவரையும் தங்களது வாகனத்திலேயே ஏறச்சொன்னார். பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச்செல்வதாக குரலில் கனிவைக் காண்பித்தார். இடுப்பிலிருந்து ஆரம்பித்து தோள்களின் மீது தாவி முதுகின் வழியாக கீழிறங்கிய இரண்டு ரப்பர் பட்டிகள், அவரது தொப்பையை இறுக்கமாகத் தாங்கியிருந்தன. காதுவரை வளர்ந்திருந்த நரைத்த முதிய மீசை, அவரின் மீது நம்பிக்கையை கோரியபடியிருந்தது.

காடுகள் வழியாக தாங்கள் நடந்து வந்துவிடுவதாக மாரலிங்க நிலத்தவர்கள் கொஞ்சப்பேர் பதிலளித்தார்கள். குழந்தைகளுடனிருப்பவர்கள் வாகனத்தில் ஏறிப்போய்விடுவது நல்லது என்று சிலர் அபிப்பிராயம் சொன்னார்கள். மார்ட்டினாவை கைகளில் ஏந்திய தனது மனைவியை வாகனத்தில் ஏற்றிவிட்டான் அலுபா.

அலுபாவுடன் இருபது பேர் காடுகளின் வழியாக நடந்து போவதற்கு தயாரானார்கள். அப்போது, வாகனத்துக்குள் ஏறியவர்கள் அனைவரையும் இரும்புக் கதவினால் உள்ளே அடைத்துவிட்டு, வாகனத்துக்கு முன்பாக வந்த இரண்டு பேர், அலுபாவையும் இருபது பேரையும் எந்தச் சிரமமுமின்றி அந்த இடத்திலேயே சுட்டுக்கொன்றார்கள்.

கூச்சலும் ஒப்பாரியும் அடைந்த வாகனம் அடர்ந்த காட்டுக்குள் போய் இறங்கியது. அங்கு மேலும் பலர் பிளாஸ்திக் ஆடைகளுடன் நின்றுகொண்டிருந்தார்கள். வாகனத்திலிருந்தவர்களை ஒவ்வொருவராய் இறக்கினார்கள். குழந்தைகளைத் தனியாக பிரித்து வேறொரு வாகனத்தில் ஏற்றினார்கள். மார்ட்டினாவை தாயிடமிருந்து பிடுங்கியெடுத்தான் நரைத்த மீசைகொண்ட தடித்தவன். பிளாஸ்திக் முகமூடிகளின் பின்னால் சிவப்பு இறைச்சியாய் தெரிந்த அவனது முகத்தை மார்ட்டினா தன் சிறுகையால் ஓங்கியடித்தாள்.

ஏழுவண்ணச் சர்ப்பத்தை நோக்கி கூவியபடி தரையில் விழுந்து குழறினாள் மார்ட்டினாவின் தாய். ஆதிநிலத்தை ஈன்றெடுத்த சர்ப்பத்தை அந்தக்காட்டின் நடுவில் புரண்டெழச்சொல்லி நிலத்தை ஓங்கி அறைந்தாள்.

சிறிதுநேரத்தில் அவள் ஓலம் காலமானது. சடலங்கள் உழுத காட்டின் நிலமெங்கும் நீண்ட முடிக்கற்றைகள் புற்களில் சிக்கி அறுந்துகிடந்தன. காட்டின் நடுவிலிருந்த புல்லுக்குளத்துக்குள் வாகனத்தில் வந்தவர்கள் அனைவரும் சடலங்களாய் மிதந்தனர். இறுகிய குருதி குளமெங்கும் படர்ந்திருந்தது. சாவின் நாற்றத்தை நூதனமாய் மெய்த்தறிந்த அத்திப்பறவைகள் காட்டின் மீது வட்டமிடத்தொடங்கின.

(3)

கறுப்புக் கைபிடிகள் வைத்த பிளாஸ்திக் கதிரைக்குள் விக்கிரகம் போல வந்து அமர்ந்தார் சட்டத்தரணி ராஜநாயகம். மெல்பேர்னில் விஸா எடுத்தவர்கள் எல்லோருக்கும் அருள்கொடுத்த திறமையாளர் என்ற பலநூறு பிரேரிப்புக்களை நம்பி, நளாயினியும் கணவர் பிரேமும் அவரிடம் வந்திருந்தார்கள்.

நுரை வற்றாத தேனீர் இருவருக்கும் முன்னால் பருகுவதற்கு காத்திருந்தது. ஆனால், இருவரும் ராஜநாயகத்தையே பார்த்தபடியிருந்தார்கள். அவர் கொண்டுவந்து இரண்டு கோப்புக்களை பார்த்துக்கொண்டிருந்தார்.

“உங்கட கேஸ முழுதாக பார்த்திட்டன்”

இருவரும் கதிரையின் முன்பாக தள்ளியிருந்துகொண்டார்கள்.

“நீங்கள் திரும்ப திரும்ப சண்டை, சண்டை, சண்டை எண்டு கேஸுக்குள்ள சண்டையத்தான் இழுக்கிறீங்கள். முதல் நீங்கள் ஒன்றை புரிஞ்சுகொள்ளவேணும். நீங்கள் இரண்டுபேரும் தற்காலிக விஸாவில இருக்கிறீங்கள். இந்த கேஸ இன்னமும் ஸ்ட்ரோங்கா பைல் பண்ணுறதுக்கு, பொய்ண்ட்ஸ் காணாமல் கிடக்கு. ரெண்டுபேரும் வேலை செய்யிறதாக் காட்டினால், இந்தக் கேஸ அக்ஸப்ட் நிறைய வாய்ப்பு இருக்கு”

ராஜநாயகத்தின் முகத்தில் ஒரே கணத்தில் இரவும் பகலும் வந்ததுபோல நளாயினி உற்றுப்பார்த்தாள்.

“நளாயினி, உங்களுக்கு வேலைக்கு போறதில ஏதாவது சிக்கல் இருக்குதா”

தயக்கமே இல்லாமல் தலையை இரண்டு பக்கமும் ஆட்டினாள் நளாயினி.

“குடும்பத்தில இரண்டு பேரும் டக்ஸ் கட்டிக்கொண்டு வேலை செய்யினம் எண்டு, கேஸில நம்பிக்கையா நாலு விசயத்தை போடும்போதுதான், பேர்மனெண்ட்ஸி கெதியில கிடைக்க வாய்ப்பிருக்கு”

நளாயினி நம்பிக்கையின் வடிவமாக பிரகாசித்தாள்.

“இந்தக்காலத்தில விஸாவுக்கு போர் மட்டும் போதாது”

தேனீரை உறிஞ்சினார் ராஜநாயகம்.

அன்று வீட்டுக்கு வரும்போதே வேலைக்கான திட்டங்களை மனதில் அடுக்கத்தொடங்கினாள் நளாயினி.

“உன்னைத்திருமணம் செய்துகொண்டுவந்தது வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதற்கில்லை” – என்று, நாளாயினி வேலைக்குப் போவதற்கு அனுமதி கேட்டபோதெல்லாம், காதலோடு மறுத்துவந்த பிரேமிற்கு, ராஜநாயகத்தின் சந்திப்பினால் காரணங்கள் வற்றிப்போயின.

இரண்டாவது வாரமே மெல்பேர்ன் சென் கில்டாவில் அமைந்துள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் நாளாயினிக்கு முழுநேர வேலை கிடைத்தது.

இயற்கையின் ஒளி மங்கிய அந்திம காலத்தில் – மூப்பின் பெருநிழலில் – வாழக்கொடுத்தவர்கள் அங்கு கரைசேர்ந்திருந்தார்கள். நரையும் குறையும் நிறைந்த வாழ்வை சபிக்கும் ஒலிகளால் அந்த முதியோர் இல்லம் ஒவ்வொரு நாளும் இருண்டு விடிந்தது. இரண்டு பகல்களுக்கு இடையில் அவ்வப்போது சிலர் நிரந்தரமாய் விடைபெற்றார்கள். அப்போதெல்லாம், ஒரு சில மணிநேர துயர் வடிந்து இல்லம் அமைதிகொள்ளும். வெறுமையான அந்த அறையில் தீபம் எரியும். மீண்டும் மரணபயம் நீங்கிய சத்தங்களால் இல்லம் நிறைந்துவிடும்.

தான் வேர் ஊன்றுவதற்காக, வாரத்தில் ஐந்து நாட்களும் இந்த ஆறுதளங்கள் கொண்ட மூத்தோர் முகாமில் மேலும் கீழுமாக நாளாயினி ஓடிக்கொண்டேயிருந்தாள்.

(4)

மாரலிங்க பகுதியில் பிரிட்டன் படையினர் அணுகுண்டு சோதனை நடத்தியபோது, அங்கிருந்து அகற்றப்பட்ட அபொறிஜினல் மக்களை, நடுவனத்தில் வைத்து ஆஸ்திரேலிய படையினர் உயிர்பலியெடுத்த சம்பவத்திற்காக ஐந்து வருடங்களாகப் போராடினாள் மார்ட்டினா. வரலாற்றின் விடமேறிய வரிகளை மூடிமறைப்பதற்காக அரசாங்கம் தடைசெய்துவைத்திருந்த அந்த நிலத்தை, தனது மக்களிடம் மீளக்கொடுக்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் செய்தாள்.

மார்ட்டினா அடிலெய்ட் பண்ணை வீடொன்றில் வளர்ந்தாள். பாடசாலையை நிறைவுசெய்தாள். பல்கலைக்கழகம் சென்றாள். தனது ஏணை ஆடிய தாய் நிலத்தில் அணுகுண்டு சோதனை நடந்ததை அறிந்து குருதி கொதித்தாள். அதற்கு ஆஸ்திரேலியா அனுமதியளித்ததை ஆராய்ந்தறிந்தபோது பெருவலியில் துவண்டாள். மாரலிங்க பகுதியில் தனது தாயும் தகப்பனும் சடலமான இடங்களை தரவுகளோடு வரலாற்றிலிருந்து எடுத்தாள்.

மார்ட்டினாவின் பல வருடப்போராட்டத்தின் பிறகு, மாரலிங்க நிலத்தினை அபொறிஜினல் மக்களிடம் ஒப்படைப்பதாக எண்பதுகளில் ஆட்சிக்கு வந்த தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் ஒப்புக்கொண்டார். மாரலிங்க பகுதிக்குச்சென்ற முதல்வர் அணுகுண்டு சோதனைக்கு ஆதிக்குடிகளிடம் மன்னிப்புக் கேட்டார். ஆதிக்குடித்தலைவரிடம் நிலப்பத்திரத்தை ஒப்படைத்தார். மார்ட்டினா தலைமையில் அங்கு சென்ற ஆதிக்குடி அமைப்புக்கள் நிலம் மீண்ட நன்நாளில் அதில் விழுந்து அழுதார்கள். தாங்களிருந்த வீட்டின் அடிநிலங்களைக் கண்டு வெந்து வெடித்தார்கள். மார்ட்டினாவுக்காக அலுபா கட்டிய கம்பி ஏணையை மார்ட்டினா கண்டுபிடித்தாள். அதில் தலையை அடித்துக்குழறினாள்.அந்த நிலம் மீண்டும் அதே அழுகுரலை கேட்டு விதிர்த்தது.

அங்கிருந்து சிறுதொலைவில் பலியானவர்களுக்காக மார்ட்டினாவும் ஆதிக்குடிகளும் வெட்டையில் முழந்தாளிட்டு வணங்கினார்கள். ஏழு வண்ணச்சர்ப்பத்தினை நோக்கி கூவி முறையிட்டார்கள். கொண்டு சென்ற யூக்கலிப்டஸ் இலைகளை பாளையில் போட்டு எரித்து மூத்தோரை வணங்கினார்கள்.

“அடுத்து எங்களின் மூத்தோர் படுகொலைக்கு நீதி கோரும் போராட்டம் தொடரும்” – என்று அடிலெய்ட் ஊடகங்களிடம் பேசும்போது மார்ட்டினா அழுத்தமாகச் சொன்னாள்.

மாரலிங்க நிலம் அபொறிஜினல் மக்களிடம் கையளிக்கப்பட்ட மூன்று வருடங்களின் பின்னரான ஒருநாளில், மெல்பேர்ன் எப்பிங் பகுதியில் சுப்ரீண்டெண்ட் டேவிட் லிண்ட்சே என்ற காலஞ்சென்ற ஆஸ்திரேலிய பொலீஸ் உயரதிகாரியை கௌரவிப்பதற்காக சிலை நிறுவப்படப்போவதை மார்ட்டினா கேள்வியுற்றாள். அடிலெய்ட் தர்னாத்தி சித்திரத்திருவிழாவில் நின்றுகொண்டிருந்தவள், அன்று இரவே மெல்பேர்னுக்கு பயணமானாள்.

அடுத்தநாள் காலை சிலை திறக்குமிடத்துக்கு சென்றாள். இன்னும் ஒருவாரத்தில் சிலை திறப்பு இடம்பெறப்போவதையும் அதற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் அங்கு வேலையில் ஈடுபட்டிருந்தவர்கள் மார்ட்டினாவிடம் தகவல் சொன்னார்கள்.

இறுக்கமான தொப்பையை ரப்பர் பட்டியால் இழுத்துக்கட்டிய – தடித்த நரைத்த மீசை கொண்ட – சுப்ரீண்டெண்ட் டேவிட் லிண்ட்சேயின் தலைமையில் மாரலிங்க காட்டுக்குள் நாற்பது வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற படுகொலையை, மார்ட்டினா பல்லாயிரக்கணக்கான தாள்களில் அச்சடித்தாள். எப்பிங் பகுதி வீடுகள் அனைத்திற்கும் தானே கொண்டுபோய் விநியோகித்தாள். பொதுப்போக்குவரத்துக்கள் அனைத்திற்குள்ளேயும் ஏறி சிலை அரசியலுக்கு பின்னாலிருக்கும் குருதிக்கறையை பிரச்சாரம் செய்தாள்.

சுப்ரீண்டெண்ட் டேவிட் லிண்ட்சே மெல்பேர்னில் ஆற்றிய பணிக்காக அவரை கௌரவித்து சிலை வைக்கப்படுவதாகவும் தெற்கு ஆஸ்திரேலிய சம்பவங்கள் குறித்து, அந்த மாநிலம்தான் விசாரணை செய்யவேண்டும் என்றும் அரித்தெடுத்த அரசியல் விளக்கமொன்றை விக்டோரிய நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டார். “சிலைத்திறப்பு திட்டமிட்டபடி நடக்கும்” – என்று மெல்பேர்ன் கவுன்ஸில் அதிகாரிகளும் உறுதிப்படுத்தினார்கள். மார்ட்டினாவுக்கு ஆதரவாக அபொறிஜினல் அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்த அளவுக்கு ஊடகங்களோ ஏனைய ஆஸ்திரேலியர்களோ ஆதரவு கொடுக்கவில்லை. மார்ட்டினா பணத்துக்காகவே இந்தப்போராட்டத்தை செய்கிறாள் என்றும் அரசாங்கம் பணம் கொடுத்தால் அவள் நிச்சயம் சிலைப்பக்கம் தலைவைத்தும் படுக்கமாட்டாள் என்றும் சுப்ரீண்டென்ட் டேவிட் லிண்ட்சேயின் பேர்த்தி, உள்ளுர் பத்திரிகையில் பத்தி எழுதி, வரலாற்றின் மீது விடம் தெளித்தாள்.

உக்கிரம் குறையாத மார்ட்டினா தன் இனத்தின் மீது படரும் கொடுந்தீயினால் ஆறாச்சீற்றம் கொண்டாள். குருதியோடு மிதந்த தன் தாயின் சடலமும் புல்லுக்குளமும் அதன் மீது பறந்த அத்திப்பறவைகளின் ஒலிகளும் அவளுக்குள் கொப்பளித்தன.

டேவிட் லிண்ட்சேயின் சிலை திறப்புக்கு முதல்நாள் இரவு அங்கு தனியாகப் போய் இறங்கினாள். பெரிய கடப்பாறையுடன் சிலையின் மீது ஏறினாள். லிண்ட்சேயின் காதுகளையும் மூக்கின் சிறுபகுதியையும் அடித்து உடைத்தாள். கீழே இறங்கி, தயாரித்து வைத்திருந்த சிவப்பு வண்ணக்கலவையை சிலையின் மீது ஊற்றினாள்.

சத்தம் கேட்டு அருகிலிருந்து வீடுகளில் வெளிச்சம் எரிந்தது. சில நிமிடங்களிலேயே அங்கு பொலீஸ் வாகனங்கள் சைரனிட்டபடி வந்து சுற்றி நின்றன. அகமும் முகமும் பெரும் திருப்தியில் ததும்பியபடி நின்றுகொண்டிருந்த மார்ட்டினாவை ஓடிவந்த பொலீஸார் தரையில் சாய்த்தார்கள். பின்பக்கமாக புரட்டி விலங்கு மாட்டினார்கள். இழுத்துச்சென்று வாகனத்தில் ஏற்றினார்கள்.

“தேசத்துரோகியே…..”  என்று மார்ட்டினாவை வாகனத்திற்குள் ஏற்றும்போது பொலீஸ் அதிகாரி ஒருவர் அவளது முதுகில் குத்தினார்.

“யாரடா தேசத்துரோகி…. என்னுடைய நாட்டில் நக்க வந்த நாயே…..” – என்று தலையை திருப்பி, அவனது முகத்தில் துப்பினாள் மார்ட்டினா.

பொதுநலவாயச் சொத்துக்கு சேதம் விளைவித்தாள் என்று குற்றம் சுமத்தப்பட்டாள். பாரதூரமான குற்றமிழைத்தவள் என்ற வழக்கோடு நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்தப்பட்டாள். அவள் எந்தப்பதிலும் சொல்லமுடியாதளவுக்கு மனம் பிறழ்ந்திருந்தாள். அவளுக்கு பொலீஸ் காவலில் பெரும் கொடுமை இழைக்கப்பட்டிருப்பதாக அபொறிஜினல் நல அமைப்புக்கள் குற்றஞ்சாட்டின. பொலீஸ் நிலைய கமரா சாட்சியங்களை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தன. மார்ட்டினா பொலீஸ் நிலையத்திற்குள் இழுத்துச்செல்லப்படும் காட்சியை தவிர எதுவும் பதிவாகவில்லை என்பதை பொலீஸார் மிகவும் நுட்பமாக உறுதிப்படுத்தினார்கள்.

சிலையை அடித்து உடைக்கும்போது, அவள் பின்பக்கமாக விழுந்து தலையில் அடிபட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் சமர்ப்பித்த அறிக்கையை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. மார்ட்டினாவுக்கு பெரும்பாலும் பழைய நினைவுகள் முழுவதுமாக அழிந்துபோனது.

மறுவாழ்வு மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்டாள். பின்னர், முதியோர் பராமரிப்பு இல்லத்துக்கு மாற்றப்பட்டாள். சிறுவயதில் சுவாசத்துக்குள் சேர்ந்துகொண்ட அணுக்கழிவின் நாற்றம், மார்ட்டினாவுக்குள் பல வருடங்களுக்குப்பிறகு புற்றாக வளர்ந்தது. அவளது உடலில் காலம்மாத்திரம் எஞ்சிக்கிடந்தது. மிகுதி அனைத்தும் நோய் வளர்த்த ஆகுதியில் கரையத்தொடங்கியது.

ஐந்து வருடங்களுக்கு பிறகு மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் ஆதிக்குடிகள் வரலாற்று ஆய்வுத்துறை மாணவியொருவர், மாரலிங்க படுகொலைகள் குறித்த விரிவான தகவல்களை ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவந்தார். மாரலிங்க படுகொலையில் சுப்ரீண்டெண்ட் டேவிட் லிண்ட்சேயின் பங்களிப்பும் அவர் தலைமையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபணமானது.

(5)

நளாயினியையும் பிரேமையும் அன்று சட்டத்தரணி ராஜசிங்கம் அழைத்திருந்தார். காரணம் சொல்லவில்லை, அலுவலகத்துக்கு வருமாறு இருவரையும் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இருவரும் தாக்கல் செய்த – மீள் வடிவமைக்கப்பட்ட – வழக்கிற்கான பதிலை எதிர்பார்த்து நளாயினி பல மாதங்களாகக் காத்திருந்தாள். அன்று வேலையை முடித்துக்கொண்டு மாலை நேராக ராஜசிங்கத்திடம் போகலாம் என்று பிரேம் சொன்னான். நளாயினியை காலையே வேலையில் கொண்டுபோய் விட்டுச்சென்றான்.

உள்ளே சென்ற நளாயினி பராமரிப்பு இல்லத்தின் வாகனத்தரிப்பிடத்தில் மூன்று அரச வாகனங்கள் இலச்சினையோடு நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டாள்.

நான்காவது தளத்திலிருந்து மார்ட்டினாவை வழக்கம்போல அன்று காலையும் நளாயினிதான், கீழே மண் விளையாடுவதற்கு அழைத்துவரவேண்டும். வேகமாக உள்ளே நுழைந்தாள். வருகையைப் பதியும் இடத்திலிருந்த ஆபிரிக்கப்பெண் மேரியிடம், “வந்திருக்கும் அரச அதிகாரிகள் யார் ?” என்று கேட்டாள்.

“மார்ட்டினாவுக்கு ஆஸ்திரேலிய அரசின் கௌரவ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறதாம். அதனை நேரடியாகக் கையளிப்பதற்கு தலைநகர் கன்பராவிலிருந்தும் விக்டோரிய அரசிலிருந்தும் உயர் அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்”  என்றாள் மேரி.

“மார்ட்டினா இன்றுவரைக்கும் இந்த நாட்டில் குடியுரிமை எடுத்துக்கொள்ளவில்லையாம். அதனையும் கௌரவித்து கொடுத்துவிட்டுப்போக வந்திருக்கிறார்களாம்”

தனது தாழ்ந்த தலைக்கு அடியில் எதையோ எழுதிக்கொண்டு வறண்ட சிரிப்பொன்றை உதிர்த்தாள் மேரி.

நளாயினி ஓடிப்போய் லிப்டுக்குள் ஏறினாள். அவளைத் தாங்கிய லிப்ட் நான்காவது தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

“நீ ஏன் இப்படி ஒவ்வொரு நாளும் வந்து வேலைசெய்கிறாய். கஸ்டம் இல்லையா”

“கணவருக்கும் உதவி மார்ட்டினா. எங்களுக்கு நிரந்தர விதிவிட உரிமை கிடைப்பதற்கு இருவரும் வேலை செய்தால்தான், கேஸுக்கு நல்லது”

நளாயினியை தாங்கிய லிப்ட் நான்காவது தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

“ஹஹ்ஹஹ்……” – எப்போதும் போன்ற ஒலி அடர்ந்த சிரிப்பு.

“ஏன், சிரிக்கிறாய்”

“இவர்கள் என்ன, இந்த நாட்டிலிருப்பதற்கு உனக்கு உரிமை தருவது. நான் தருகிறேன், இந்த நாட்டின் சொந்தக்காரி, நீயும் உனது கணவரும் இன்றிலிருந்து ஆஸ்திரேலியர்கள்…..அவ்வளவுதான்”

தன்னை அறியாமல் வெடித்துச்சிரித்தாள் நளாயினி. எழுந்துசென்று மார்ட்டினாவை ஆரத்தழுவி நெற்றியில் முத்தமிட்டாள்.

அக்கணத்தில் நளாயினியில் பொங்கி வழிந்த மகிழ்ச்சியும் மார்ட்டினாவின் கண்களில் பிரவாகித்த பெருமையும் நிலமெனும் தாயோடு மூவராய் கலந்துகொண்ட பெருங்கீர்த்தியாய் ஒளிர்ந்தது.

நளாயினியை தாங்கிய லிப்ட் நான்காவது தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது அல்லது நளாயினியை விட்டு ஆஸ்திரேலிய நிலம் கீழே சென்றுகொண்டிருந்தது.

குளித்துத் தயாராகி வழக்கமாகத் தனக்காக காத்திருக்கும் மார்ட்டினாவின் அறை அன்று பூட்டியே கிடந்தது. ஆழக்குழியில் துடிக்கும் அந்த மாரலிங்க அழகியை வாஞ்சையோடு அணைப்பதற்கு அறைக்கதவை திறந்தாள் நளாயினி.

அறைமுழுவதும் எறும்புகள் நிறைந்திருக்க மார்ட்டினா அசைவற்ற தூக்கத்திலிருந்தாள்.

முற்றும்.

***

-ப. தெய்வீகன்

 

https://vanemmagazine.com/மார்ட்டினா/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.