Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மருவிப்போகும் "சாமிக்கு செய்தல்கள்"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மருவிப்போகும் "சாமிக்கு செய்தல்கள்"

ஒரு பக்கத்தில் பெரியாரிசத்தின் அடிகொள்ளல்;மறுபுறத்தே ஆரியமயமாக்கப்படும் கிராமிய வழிபாட்டு தலங்கள்.இவற்றின் மத்தியில் எங்கள் தொன்ம குல வழிபாட்டு முறைகள் அல்லது "சாமிக்கு செய்தல் " என்னாகும் இனி?

இந்தியாவின் தமிழகத்தின் பல பகுதிகளிலும் குலதெய்வ கோயில்கள் காணப்படுவனையும் அவற்றுக்கான வழிபடுதல்களையும் நாம் அறிவோம்.இலங்கையின் கிழக்கின் கிராமியப்பகுதிகளிலும் இவ்வாறான வழிபாட்டு முறைகளை கொண்ட கண்ணகையம்மன், மாரியம்மன், பேச்சியம்மன் கோவில்களும் காணப்படுகின்றன.இன்று நான் பதிவிடப்போகின்ற விடயம் வீடுகளில் நடைபெறும் குலதெய்வ வழிபாட்டு முறைகள் குறித்தாகும்.

இதனை எங்களூர் பகுதிகளில் "சாமிக்கு செய்தல்" என அழைப்பர்.கிராமிய வீடுகளில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு குலதெய்வம் இருக்கும்.இந்த குலதெய்வமே குடும்பத்திற்கு வரும் இடர்களிலிருந்து குடும்ப உறுப்பினர்களை காப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு.பொதுவாகவே ஒரு குடும்பத்தின் குலதெய்வம் எதுவென அன்னியர்கட்கு வெளிப்படுத்தும் வழக்கம் நடைமுறையில் இல்லை.சிலவேளைகளில் இது குடும்பத்தின் எல்லா உறுப்பினர்கட்கும் தெரிவதில்லை.குடும்பத்தின் மூத்த உறுப்பினர் மட்டுமே இதனை அறிந்திருப்பார்.இதற்கான காரணம் காத்தல் தெய்வமான குலதெய்வத்தை அன்னியர்கள் அறிந்தால் , அந்த தெய்வத்தை கட்டி விட்டு, குடும்பத்தினருக்கு பில்லி, சூனியம் என்பவற்றை ஏவிவிடக்கூடும் என்பதாலாகும்.

பொதுவாகவே எல்லா வீடுகளிலும் சுவாமியறை இருக்கும்.ஆனால் குலதெய்வம் குடியிருக்கும் பந்தல் வீட்டின் முற்றத்தில் அமைந்திருக்கும்.இது ஓலையினால் வேயப்பட்டிருக்கும் அல்லது சில வீடுகளில் கல்லினால் அமைக்கப்பட்டிருக்கும்.இதனுள்ளே சூலமொன்றோ அல்லது வெள்ளிப்பிரம்போ குலதெய்வத்தின் அடையாளமாக இருக்கும்.இதனை வீட்டின் பெண்கள் அல்லது மூத்த உறுப்பினர்கள் தினமுமோ அல்லது வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பூ, தண்ணீர் வைத்து விளக்கேற்றி வழிபடுவர்.

மிகவும் புனிதமான இடமாக கருதப்படும் இந்த பந்தலுக்கு அருகில் மாதவிலக்கு காலங்களில் பெண்கள் செல்வதில்லை.அத்துடன் சிறார்கள் இதனருகே விளையாட அனுமதிக்கப்படுவதில்லை.சில வீடுகளில் ஒதுக்குப்புறமாக இருக்கும் வேம்புமரத்தடியிலும் பந்தல்கள் அமைந்திருக்கும்.அந்த மரத்திலேயே குலதெய்வம் இருப்பதாக ஐதீகம் நிலவுவதுடன் அந்த மரத்துக்கு ஏற்படும் தீங்கு குடும்பத்திற்கான தீங்காகவே கருதப்படும்.

பொதுவாகவே சாமிக்கு செய்தல் என்பது மாரிகாலத்தை தவிர்த்து வருகின்ற நாட்களில் வளர்பிறை காலத்தில் நிகழ்த்தப்படும்.சிலவேளைகளில்  வீட்டின் கிணற்றடியில் நிற்கும் வாழை குலைதள்ளி அது செங்காய் அல்லது பழுக்கும் நிலையை அடையும் நாட்களை வைத்தே சாமிக்கு செய்யும் நாளை தீர்மானிப்பர்.

இன்றைய நாட்களை போன்று வாழைப்பழத்தை கடைகளில். வாங்கி படைக்கும் வழக்கம் அன்றில்லை.தங்கள் தோட்டத்தில் அல்லது கிணற்றடியில் விளைந்த வாழைப்பழத்தையே சாமிக்கு படைப்பர்.முற்றிய வாழைக்குலையை வெட்டி சீப்புக்களாக பிரித்த பின்னர் அதனை மடு ஒன்று வெட்டி அதற்குள் போட்டு மூடி விடுவர்.அந்த காய்களின் மேல் காய்ந்த வாழைமடல்கள்,முதிரை இலைக்கொத்துக்கள் என்பன இடப்படும்.ஒவ்வொரு நாளும் காலை, மாலையும் அதற்கு நெருப்பு தணல்களை கொண்டு "புகையடிப்பர்".பூசைக்கு அன்று காலை அல்லது அதற்கு முதல்நாள் மாலையில் பழுத்த பழங்கள் வெளியே எடுக்கப்படும்.அந்த பழங்களின் மேல் புகை,இலை குழைகள் சேர்ந்த மணம் வீசும்.அந்த வாசமே தனி.அந்த சுகமே சுகம்.

சாமிக்கு செய்ய தீர்மானிக்கப்பட்ட நாளில் இருந்து பத்து அல்லது பதினைந்து தினங்கள் முன்பே அதற்கான ஆயத்தங்கள் தொடங்கி விடும்.வீட்டை தூய்மை செய்தல்,வளவினை ஒதுக்கம் செய்தல் முதலிய பணிகளில் வீட்டாரும் உறவினரும் அயலாரும் ஈடுபடுவர்.பெண்கள் அரிசியை மாவாக்கி மடைக்குரிய பதார்த்தங்கள் செய்வதில் ஈடுபடுவர்.

உண்மையிலேயே இந்த மாவிடித்தல் கூட உடல்,உள தூய்மையுடன் செய்யப்படும் ஒன்றே.தோய்ந்து ஈரம் காயாத தலையுடன் குடும்பத்தலைவி அல்லது குடும்பத்தின் மூத்த பெண் உறவு இதனை உலக்கையால் இடித்து துவங்கி வைக்க ஏனைய பெண்கள் இதனை தொடர்வர்.அந்த நாட்களில் கையால் அரிசி இடித்து அதனையே மாவாக்குவர்.

நான் கூறிய பந்தல் சில வீடுகளில் இல்லாது இருக்கும் நிலையில் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்படும்.வளைவுகள் எதுவுமற்ற கொக்கட்டி அல்லது பூவரச மரத்தின் நான்கு கம்புகள் கால்களாக நடப்பட்டு, பந்தலின் கூரை வேம்பம்குழை முதலான பச்சை இலைகளால்  இடப்படும்.பந்தலுக்கு முன்பு அலங்காரம் செய்வதற்காக தென்னங்குருத்துகள் பயன்படுத்தப்படுவது வழமை.

பூசை நாளன்று அதிகாலை முதலேயே வேலைகள் தொடங்கி விடும்.அனேகமாக வெள்ளி, செவ்வாய் கிழமைகளே பூசைக்கு உகந்த தினங்கள்.இது தவறின் ஞாயிற்றுக்கிழமைகள் தேர்வாகும்.பொதுவாக ஊரில் ஏதாவது கோவில் கொடியேற்றம் அல்லது சடங்குக்காக திறந்திருக்கும் நிலையில் இந்த சாமிக்கு செய்தல் நடைபெறுவதில்லை.அத்துடன் விரதகாலங்களிலும் இந்த வழிபாட்டு முறைகள் தவிர்க்கப்படுகின்றன.ஏனெனில் பெருந்தெய்வங்கள் ஊருக்குள் இறங்கியிருக்கும் நிலையில் சிறுதெய்வங்களை அழைப்பது கூடாது என்பது கிராம மக்களின் நம்பிக்கை.

பகலில் செய்யப்படுவது அம்மனுக்குரிய மடை.இரவில் வைரவருக்குரிய படை போடப்படும்.அம்மனுக்கு பிடித்த பதார்த்தமாக சர்க்கரை பொங்கல் மற்றும் கதலி வாழைப்பழம்.இதனை சர்க்கரை அமுது எனவும் அழைப்பர்.இதனை தவிர சில வேளைகளில் கூழ், பலகாரம் முதலியனவும் மடையில் இருக்கும்.அம்மனுக்குரிய பூசை வழிபாடுகள் வீட்டின் சுவாமியறையிலேயே செய்யப்படும்.சில வீடுகளில் அம்மனுக்குரிய படையலுடன் பூசை நிறைவுபெறும்;சில வீடுகளில் இரவு மடையும் இருக்கும்.சுவாமியறை முழுவதும் வேப்பிலை மற்றும் தென்னம்குருத்துகளால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்.

இங்கு உருவ வழிபாடு கிடையாது.சில வேளைகளில் அம்மனின் முகக்களை உருவமாக வைக்கப்பட்டிருக்கும்.ஆனால் பொதுவாக கமுகம் பாளை அல்லது தென்னம் பாளை மடையில் மையமாக வைக்கப்பட்டிருக்கும்.இந்த பாளைகளில் தெய்வம் பிரசன்னம் ஆவதாக ஒரு நம்பிக்கை.

பூசையின் சிறப்பு அம்சம் இங்கு தமிழிலேயே வழிபாடுகள் இடம்பெறுவது.சுலோகங்கள் எதுவும் கூறப்படாது வெறுமனே அம்மனுக்குரிய வழிபாட்டு பாடல்கள் உடுக்கை ஒலியுடன் பாடப்படும்.இதனை காவியம் பாடுதல் எனவும் கூறுவர்.இதனை நிகழ்த்துவதெற்கென்றே ஆகமம் சாராத பூசாரிகள் பலருண்டு கிராமங்களில்.இவர்களால் மட்டுமே குறித்த தெய்வத்துடன் பேசி குடும்பத்தவர்களின் குறை ,நிறைகளை சேர்ப்பிக்க முடியும் என்பது நம்பிக்கை.

இப்படி பூசாரிகள் யாருமில்லாவிடின் குடும்பத்தின் மூத்த ஆண் ஒருவர் பூசைகளை நடாத்துவார்.ஒவ்வொருவரின் குலதெய்வத்துக்கேற்ப பூசை முறைகளும் வேறுபடும்.இந்த பூசையின் குறிப்பிடத்தக்க அம்சம் பராயமடையாத சிறுமிகள் ஏழு பேரை தெரிவு செய்து அவர்களை அம்மனாக பாவனை செய்து படையலிடுதலாகும்.இவர்களை "சர்க்கரை பிள்ளை" என்பர்.உரிய முறையில் கூறுவதாயின் "ஸப்த கன்னிகள்".பூசை முடிந்த பின்னர் இவர்களை உரிய மரியாதைகளுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தல் மரபு.

பூசை நிகழ்ந்து கொண்டிருக்கையில் பூசாரி அல்லது குறிப்பிட்ட குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் மீது தெய்வம் இறங்கி வந்து "கட்டு கூறுதல்" நிகழும்.இறுதியாக அருளாசி பெற்ற தீர்த்தம் வளவெங்கும் தெளிக்கப்படுவதுடன் பூசை நிறைவுபெறும்.

இந்த பூசையில் அலங்காரம் செய்தல் மற்றும் படையலுக்காக "மஞ்சள் பலகாரங்கள்" செய்யப்படும்.உண்மையில் இந்த "மஞ்சள் பலகாரங்களை" காண்பதே அரிதாகி போய் விட்டது.இந்த மஞ்சள் பலகார மரபு தொடர்பில் தனியொரு பதிவிடுகிறேன்.

இரவு பூசை பைரவ மூர்த்திக்கானது.பைரவருக்கான பிரசாதமாக அரிசி மா ரொட்டி, வெண்பொங்கல்,மொந்தன் வாழைப்பழங்கள் என்பன படைக்கப்படும்.இந்த உரொட்டி தயாரிப்பதற்கான மிகச்சிறந்த "உரொட்டி மேக்கர்கள்"  கிராமங்களில் உள்ளனர்.அத்துடன் கள்ளு,சுருட்டு,சாராயம் என்பனவும் கஞ்சாவினால் தயாரிக்கப்படும் பச்சை ரொட்டியான கஞ்சா ரொட்டியும் படையலில் வைக்கப்படும்.இந்த கஞ்சா ரொட்டி க்கும் கள் மற்றும் சாராயத்துக்கும் பலத்த போட்டி.சில வேளையில் பூசை முடிய முதலேயே இவை களவாடப்படுவதும் உண்டு.

இரவுப்பூசைகளில் காவியம் பாடல், உடுக்கை ஒலித்தல் மற்றும் தீ பாய்தல் என்பனவும் உண்டு.பூசையின் இறுதியில் இந்த பூசையை ஏற்றுக்கொள்ளுமாறு தெய்வத்திடம் பூசாரிகள் மன்றாட்டம் செய்து வேண்டுதல் காண்பதற்கு அற்புதமான காட்சியாகும்.

இந்த மாதிரியான படையல்கள் வீட்டில் மட்டுமன்றி தோட்டங்கள் மற்றும் வயல்வெளிகளிலும் நடைபெறும்.பொதுவாக தோட்டங்களில் இரவு மடையே இடப்படும்.தோட்டங்களில் காவல் தெய்வமாக பைரவர் மற்றும் நாகதம்பிரானையே வழிபடுவர்.பைரவருக்கான பதார்த்தங்கள் நான் மேற்கூறியவையே.

நாகதம்பிரானுக்காக விசேடமாக பால்,பழம் சேர்ந்த கரையலுடன் சில வேளைகளில் முட்டையும் வைக்கப்படும்.பைரவருக்கான பூசை முடிந்ததும் குறித்த கரையலானது தோட்டத்தில் இருக்கும் மரமொன்றின் பொந்துக்குள் பயபக்தியுடன் எடுத்து செல்லப்பட்டு வைக்கப்படும்.இந்த கரையலினை நாகம் வந்து அருந்தி செல்வதாக ஐதீகம் உண்டு.

வயல்வெளியில் வினாயக வழிபாட்டுக்காக மோதகம் , கொழுக்கட்டை,அவல்,கடலை, சர்க்கரை பொங்கல் என்பனவும் நாகதம்பிரான், பைரவர் வழிபாடுகளும் நிகழும்.இதனை நாங்கள் வேள்வி என்றே அழைப்போம்.ஏனெனில் பிரசாதங்கள் பாரிய அளவில் தயாரிக்கப்படுவதனாலாகும்.பொதுவாக வயல் வெட்டி முடிந்ததும் அந்த அரிசியை எடுத்தே இந்த படையல் செய்யப்படும்.

மதங்களை தாண்டிய எங்கள் மரபு ரீதியான வழிபாடாக நிகழும் இந்த அழகிய சடங்குகள் பெரும்பாலும் இன்று அற்றுப்போய் அல்லது வழக்கொழிந்து போய் விட்டன என்பதை கவலையுடன் பதிவு செய்கிறேன்.மீண்டும் ஒரு சாமிக்கு செய்தல் அல்லது வயல்வெளி படையல் களில் கலந்து கொள்ளும் பாக்கியம் எனக்கு கிட்டுமா என்ற ஆதங்கத்துடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்.

https://www.facebook.com/thirugnanasampanthan.lalithakopan

 

 

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்

மனதில் ஒருவித நெகிழ்சியை ஏற்படுத்துகின்றது இந்தக் கட்டுரை.......!   🤔

நன்றி ஓணாண்டி......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெருந்தெய்வ வழிபாடு திணிக்கப்பட்ட பின்பே எமது தெய்வங்கள் வீட்டுக்கு வெளியிலும் காட்டிலும் கும்பிடும் தெய்வங்களாக ஆக்கப்பட்டன. 

நமது காலத்திலேயே பெருந் தெய்வங்களின் எழுச்சியும்  சிறு தெய்வங்களின் வீழ்சியும் காண முடிகிறது. எனக்கு தெரிந்த காலத்திலேயே  -------த்தீவில் கண்ணகி தெய்வத்தின் சடங்குதான் பெரிதாக இருக்கும். ஆனால் பக்கத்தில் குடியேறிய பிள்ளையாரின் நிலை இப்போது எப்படி? 

இன்னமும் -------த்தீவில் இருந்து கூப்பிடு தூரத்தில்தானே இருக்கின்றீகள்? பிள்ளையார் கோவிலுக்கு சமஸ்கிரதம் தெரிந்த குருக்கள் வேண்டும் என்று சில வருடங்களுக்கு முன்பு விளம்பரம் ஒன்று பார்த்தேன். "ஏண்டா முட்டா மடத் -------த்தீவானே உனக்கெதுக்கிடா சமஸ்கிருதம் என கேட்க முடிந்ததா?"

சக்கரைப்பிள்ளை சடங்கு ஏன் செய்கின்றார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை. சிறு வயதில் ஊரை விட்டுப் போன நான் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு பின்பு ஊருக்கு போய் ஒவ்வொன்றாக விசாரித்தேன். ஒரு மயிராண்டிக்கும் ஒண்டும் தெரியல்ல. அப்புச்சி வீட்டில் சக்கரைப் பிள்ளை சடங்கு செய்யும் போது சலவைத் தொழிலாயின் மகள் ஒருத்தியும் அழைத்து வந்து தெய்வமாக வணங்குவார்கள். இப்போது போய் விளக்கம் கேட்டேன். அப்படியா என ஆச்சரிமானார்கள்.

நம்மூரில் இருந்து இயக்கத்துக்கு போன சில பெடியன்களை பிடித்து

" ஏண்டா இயக்கத்து போன நீ" என விசாரித்தேன்.

"சம்பந்தன் வாத்தி படி படி எண்டு அடிக்கிறான் மாமா. அதுதான் இயக்கத்துக்கு போய் றெயினிங் எடுத்தித்து வந்து அவனுக்கு குடுக்க வேணும் எண்டுதான் மாமா இயக்கத்துக்கு போன நான்." என்றார்கள்.

இப்படித்தான் நோக்கத்தின் காரணம் தெரியாமல் சடங்குகளும் சம்பந்தம் சம்பந்தமில்லாமல் நடக்கும். ஜன்னல் ஓரப் பயணிபோல் காட்சிகளை கடந்து கொண்டே இருப்போம்.

https://www.facebook.com/profile.php?id=100005873804745

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.