Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடிவேலு பேட்டி: நண்பர் விவேக் இல்லாத காலட்டம் எப்படி இருக்கிறது?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' மூலமாக திரைக்கு மீண்டும் வருகிறார் நடிகர் வடிவேலு. 'கைப்புள்ள', 'வண்டு முருகன்', 'இம்சை அரசன்', 'நாய் சேகர்' என தனது பல நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் மூலமாகவும் 'வரலாறு முக்கியம் அமைச்சரே', 'பேச்சு பேச்சாதான் இருக்கனும்' என வசனங்கள் மூலமாகவும் மக்களின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாகிய ஒரு நகைச்சுவை கலைஞன்.

திரைக்கு மீண்டும் வருவது, திரையில் நடிக்காமல் இருந்த காலக்கட்டம், இத்தனை ஆண்டு திரையுலக அனுபவத்தில் இருந்து கற்று கொண்ட பாடம், நடிகர் ரஜினி, கமல், நண்பர் விவேக் என பல விஷயங்கள் குறித்து பிபிசி தமிழிடம் கலந்துரையாடினார். அதில் இருந்து...

'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் மூலமாக ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்பயணம். நடிக்காத காலம் உண்மையில் எப்படி இருந்தது?

"உலக உருண்டைக்கே மாஸ்க் போட்டது போலதான் கொரோனா கடந்தது. இந்த காலக்கட்டத்திலும், இதற்கு முன்பும் நான் நடிக்காதிருந்த போது மன வருத்தத்தில் இருந்தது உண்மைதான். மிருகங்கள் எல்லாம் வெளியே வந்து மனிதர்கள் எல்லோரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி போனார்கள். இப்படி ஒரு காலக்கட்டத்தை கண்டு உலகமே பயந்தது. அப்படி இருக்கும் போதுதான், என்னுடைய பழைய படங்களை தொலைக்காட்சியிலும், சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலமாகவும் என்னை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார்கள். மக்களுக்கும் மீடியாவுக்கும் என்னுடைய நன்றி.

முன்பெல்லாம், இரண்டு பேர் என் படத்தை பார்த்திருந்தால் 10 பேர் பார்க்காமல் இருந்திருப்பார்கள். அவர்களும் சேர்ந்து கொரோனா காலத்தில் என் படத்தை பார்த்தார்கள். அப்போதும், வடிவேலு நடிக்கவில்லை என யாரும் சொல்லவில்லை. எப்போது வருவார் என்றுதான் எதிர்பார்த்து இருந்தார்கள்.

 

அந்த சமயத்தில்தான், சுபாஷ்கரன் என்னை அழைத்து, 'வடிவேலு, என் மேலும், லைகா மேலும் தப்பு கிடையாது. அதனால், நாம் மீண்டும் இணைந்து படம் செய்யலாம்' என வாய்ப்பு கொடுத்து, இன்று இருக்கக்கூடிய தயாரிப்பாளர் சங்கத்திலும் பேசி பிரச்சனையை தீர்த்தார்கள். நானும், இயக்குநர் சுராஜ்ஜூம் இரண்டு ஆண்டுங்கள் நிறைய பேசி தயார் செய்த கதைதான் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்'.

நான் திரும்ப வருகிறேன் என கைக்கொடுத்து, வரவேற்பார்கள் என நினைத்தால், ஆரம்பிக்கும் போதே பிரச்சனை. படத்தலைப்பு எங்களுக்குதான் என கடைசி வரை நம்பிக்கையாக காத்திருந்தோம். ஆனால், அது கைகூடவில்லை. பிறகு, லைகாவுடன் கலந்து பேசி நாங்கள் இந்த படத்திற்கு, 'மறுபடியும் நாய் சேகர், நாய் சேகர் கம்பேக், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என மூன்று தலைப்பை கருத்தில் வைத்திருந்தோம். அதில் இறுதியாக 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' என்பதை தேர்ந்தெடுத்தோம். இந்த தலைப்பு தடையை உடைத்து வந்ததே படத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. இந்த முதல் வெற்றிக்கு காரணமானவர் லைகா சிஇஓ தமிழ்குமரன். அடுத்த வெற்றி, படம் வெளியானதும் கிடைப்பது" என்கிறார் உற்சாகமாக.

போஸ்டர்

பட மூலாதாரம்,LYCA_PRODUCTION

இந்த படத்தில் கதை நாயகனா அல்லது காமெடியனா? கதாநாயகி யார்?

"இந்த காலக்கட்டத்துக்கு தேவையான ஒரு நகைச்சுவை கதைதான் 'நாய் சேகர்'. இதுவரை வரலாற்று படங்களில் மட்டும்தான் கதாநாயகனாக நடித்துள்ளேன். இந்த மாதிரியான கதையில் நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறை. படத்தில் நான்கைந்து கெட்டப்பில் வருகிறேன். 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கவுள்ளது. பிரியா பவானி சங்கர், ஓவியா, ரம்யா பாண்டியன் என பல கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. இன்னும் யார் என்பது இறுதியாகவில்லை".

படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன்தான் வேண்டும் என கேட்டு அவரை படத்திற்குள் கொண்டு வந்தது ஏன்? அவருடைய எந்த படத்தின் இசை உங்களை கவர்ந்தது?

"சந்தோஷ் நாராயணன் கிடைப்பது கஷ்டம். அந்த அளவிற்கு அவர் தற்போது பல படங்களில் பிஸியாக இருக்கிறார். 'அவரிடம் தற்போது பேச முடியுமா?' என கேட்டிருந்தேன். பேசிவிட்டு, சந்தோஷ் நாராயணன் என்னுடைய தீவிரமான ரசிகர் என கூறினார்கள். அவரிடம் படத்திற்கு இசையமைக்க முடியுமா என கேட்டதும், உடனே 'என் தலைவன் எங்கே?' என கேட்டிருக்கிறார். நேரில் பார்த்து பேசியபோது, 'நான் மட்டுமல்ல சார், நளன் குமாரசாமி, 'காக்கா முட்டை' மணிகண்டன், வெற்றிமாறன் என என் நண்பர்கள் பலரும் உங்கள் ரசிகர்கள்தான் என்றார்.

சந்தோஷ் நாராயணன் மனைவி மீனாட்சி, மகள் தீ இவர்களும் நேரில் பார்க்க வந்தார்கள். தீ என்னை பார்த்து பாட, நான் அவரை பார்த்து பாட என ஒரே அலப்பறைதான்" என்றவரிடம் எந்த படத்தில் சந்தோஷ் நாராயணன் இசை மிகவும் பிடித்து போனது என்றால், பல படங்களில் அவர் இசை கேட்டிருப்பதாக சொல்பவர், சமீபத்தில் மிகவும் பிடித்ததாக 'கர்ணன்' படத்தின் இசையை குறிப்பிடுகிறார்.

உங்களுடைய வசனங்கள் எல்லாம் படத்தலைப்பாக மாறுகிறது. அந்த படங்களும் பெரும்பாலும் வெற்றி அடைந்திருக்கிறது. இதை பார்க்கும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கிறது?

"நாம் பேசும் வசனங்கள், சொற்கள் எல்லாம் படத்தலைப்பாக மாறுவது உண்மையில் மகிழ்ச்சியான ஒன்றுதான். அதைவிட வேறு என்ன பெருமை எனக்கு வேண்டும்? ஆனால், நான் மீண்டும் நடிக்க வரும்போது நம்முடையதை நமக்கே படத்தலைப்பாக தரமாட்டோம் என்று சொன்னது கஷ்டமாக இருந்தது. மனவலி வந்தது உண்மைதான். எதுவாக இருந்தாலும் மக்களுக்கு தெரியும். அதுகுறித்து மேலும் நான் எதுவும் பேச விரும்பவில்லை. என் வசனம் படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார்கள். படம் நன்றாக வரட்டும். வாழ்க!"

காணொளிக் குறிப்பு,

உதயநிதி ஸ்டாலினுடன் நடிப்பது பற்றி வடிவேலு என்ன சொன்னார்?

இத்தனை ஆண்டு திரை அனுபவத்தில் எத்தனையோ ஏற்ற தாழ்வுகளை சந்தித்து இருப்பீர்கள். திரையுலகில் எதேச்சையாக நுழைந்த வடிவேலுவுக்கும் இப்பொழுது இருக்கும் வடிவேலுவையும் எப்படி பார்க்கிறீர்கள்?

"பொதுவாக, என் தொழிலுக்கு நான்தான் போட்டி. ஒரு படம் நடித்தால், அடுத்த என் படம் முந்தைய படத்தை விட நன்றாக வர வேண்டும் என்றுதான் நினைப்பேனே தவிர யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. இதுதான் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம்.

இரண்டாவது, யாரையும் நம்ப கூடாது. நம்மை நம்புவது மட்டும்தான் இங்கு நிஜம். நாம் செய்வது நகைச்சுவை தொழில். ஒருவனை குத்துவதும் அடிப்பதும் அழுவதும் எளிது ஆனால் நகைச்சுவை என்பது அப்படி அல்ல. எனக்கு தினமும் ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும் எதுவாக இருந்தாலும் கவலைகளை மறந்து மக்களை சிரிக்க வைப்பதுதான் நம் தொழில், சரிதானே?

காலையில் ஷூட்டிங் வந்ததும் 'என்ன சார் ரெடி தான?' என கேட்டு ஆரம்பிப்பார்கள். அதே நேரத்தில், பின்னால் என்னுடைய பெரியம்மா இறந்துவிட்டார் என்ற தகவல் வந்திருக்கும். அந்த செய்தியை கேட்டு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு உடனே கிளம்பினால் நஷ்டம்தான். ஏனெனில் இங்கு ஒவ்வொரு நொடிக்கும் காசு. இப்படி என்னதான் சோகம் வாழ்க்கையில் இருந்தாலும் இங்கு நடித்துதான் ஆக வேண்டும்.

சினிமா ஒரு கனவுலகம். கற்பனையை காசாக்கக்கூடிய கடல். அதனால், என்னதான் துன்பம் வந்தாலும் அதை கடந்து நகைச்சுவை செய்வதுதான் என் வாழ்க்கை".

நகைச்சுவையில் உங்கள் முன்னோடிகளான நாகேஷ், மனோரமா இவர்களுடன் நடித்தது குறித்து சொல்ல முடியுமா?

வடிவேலு

பட மூலாதாரம்,LYCA_PRODUCTION

"அவர்களோடு இணைந்து நடித்தது எல்லாம் என் பாக்கியம். அவர்களை பார்த்து வளர்ந்தவன்தானே இந்த வைகைப்புயல். மனோரமா, நாகேஷ் ஐயா, கோவை சரளா இவர்கள் எல்லாம் என்னை விட பெரிய நடிகர்கள். சினிமாவில் எம்.ஜி.ஆர்-க்கு அம்மா என்றால் பண்டரி பாயை எப்படி சொல்வார்களோ, அதுபோல, சினிமாவில் வடிவேலுக்கு ஜோடி யார் என்றால் கோவை சரளாதான் எனும் அளவுக்கு எங்களுடைய ஜோடி வெற்றி பெற்றது.

நான் எங்காவது தனியாக சென்றால் கூட, 'எங்க உன் சம்சாரம் சரளா வரலையா? ஏன் இப்படி போட்டு அடிக்கற அவள?' என்று மக்கள் கேட்பார்கள்.

அதற்கு நான் விளையாட்டாக, 'என்னைய அடிக்கறா. நீதான் கேட்கணும்' என்பேன்.

'அடிச்சா என்ன? வாங்கிக்கோ. அது இல்லாம தனியா எல்லாம் வராத' என்பார்கள்.

அந்த அளவிற்கு, அப்போது நானும் சரளாவும் உண்மையான கணவன், மனைவி என்றே நினைத்தார்கள். இப்போது வரை, சினிமாவில் கிடைத்த நல்ல நண்பர்களில் அவரும் ஒருவர். 'மீண்டும் நடிக்க வந்ததில் சந்தோஷம். உடம்பை பார்த்து கொள்ளுங்கள்' என வாழ்த்து கூறினார்".

சினிமாவில் நடிக்காத காலகட்டங்களில் சினிமாவை கவனித்து வந்தீர்களா? இப்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கான இடம் எப்படி மாறியுள்ளு என நினைக்கிறீர்கள்?

"எது எப்படி இருந்தாலும், நல்ல நகைச்சுவைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும். என்னதான் காலம் மாறினாலும், மக்கள் சிரிக்காமல் இருக்கக்கூடிய ஒரு காலம் வரும் என நினைக்கிறீர்களா?

இப்போது இருக்கக்கூடிய தொழில்நுட்பத்தைப் பார்த்தாலும் ஒரு பக்கம் பயமாக இருக்கிறது. பல பழமை எல்லாம் அழிந்து கொண்டே வருகிறது. கொரோனா காலத்தில் எல்லாம் மக்கள் ஏதோ ஒரு பயத்துடனோ, பதட்டத்துடனோதான் இருக்கிறார்கள். இந்த காலக்கட்டத்தில் நல்ல ஒரு நகைச்சுவை படம் வந்தால்தான் ஓரளவாவது மருந்து கொடுப்பதுபோல, மக்களின் பதட்டம் குறையும்".

உங்கள் நண்பர் விவேக் இல்லாத காலட்டம் எப்படி இருக்கிறது?

பிறந்தநாள்

பட மூலாதாரம்,LYCA_PRODUCTION

"நண்பர் என்பதையும் தாண்டி விவேக் நல்ல மனிதர். அவர் இல்லாதது திரையுலகத்திற்கான பேரிழப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அவருடைய குழந்தைகள் எல்லாம் இருக்கும் போது அவர்களை விட்டு சென்றது வருத்தம்தான். விவேக்கின் நகைச்சுவை எல்லாம் காலம் கடந்தும் கொண்டாடப்படும் என்பதில் சந்தேகம் இல்லை" என்றவர் நடிகர் ரஜினியுடன் நடித்த 'சந்திரமுகி' பட நினைவுகளை பகிர்ந்தார்.

"ரஜினி அவர்கள் உடன் நடித்த 'சந்திரமுகி' படம்தான் அந்த பேய் ட்ரெண்டை தொடங்கி வைத்தது. காலத்தால் அழிக்க முடியாத படம் அது. பாலய்யா- நாகேஷ் போல, நானும் ரஜினியும் அந்த படத்தில் இணைந்து காமெடியில் கலக்கியிருப்போம். இயக்குநர் பி.வாசு அருமையாக எடுத்திருப்பார். படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. அதில் நடிக்க இருக்கிறேன். அடுத்து லாரன்ஸ் உடனும் படம் நடிக்கிறேன். லைகா தயாரிப்பில் அடுத்து இரண்டு படங்கள் நடிக்கிறேன். பிறகு இரண்டு படங்கள் வெளியே போய் நடித்து கொடுத்து விட்டு மீண்டும் லைகாவில் நடிப்பேன். 'காக்கா முட்டை' மணிகண்டன், ரவிக்குமார் என பலரும் கதை சொல்லி இருக்கிறார்கள்."

சினிமாவில் நடிக்காத காலக்கட்டத்தில் கமல் உங்களை அழைத்து மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று பேசியதாக முன்பு ஒரு பேட்டியில் சொல்லியிருந்தீர்கள். அவர் படங்களில் ஏதும் இப்போது நடிக்க இருக்கிறீர்களா?

"கமலுடன் அடுத்து ஒரு படம் நடிக்கிறேன். இடையில் ஒரு முறை அவரை விழா ஒன்றில் சந்தித்தேன். 'நீ மீண்டும் நடிக்க வந்ததில் எனக்குதான் முதலில் மகிழ்ச்சி. ரொம்ப நெளிவு சுழிவாக போங்கள். நல்ல கதை, நல்ல இயக்குநர், நல்ல தயாரிப்பாளர் என்று பார்த்து தேர்ந்தெடுங்கள்' என்று வாழ்த்து தெரிவித்தார்.

அவருடன் நடிக்க இருக்கும் படத்தில் நகைச்சுவையோடு இணைந்த குணச்சித்திர கதாப்பாத்திரம். இதுபோன்று நல்ல கதாப்பாத்திரம், மக்களை சிரிக்க வைக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுக்கிறேன். ஏதோ நாமும் நாலு காட்சிகளில் வந்தோம் போனோம் என மக்களை ஏமாற்ற விரும்பவில்லை".

பல வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து இருக்கிறீர்கள். எந்த மாதிரியான அல்லது யாருடைய கதாப்பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு?

"எல்லா வேடங்களிலும் கிட்டத்தட்ட நடித்து இருக்கிறேனே! அடுத்து நான் திருநங்கையாக நடிக்க ஒரு கதை வந்திருக்கிறது. இதற்கு முன்பு நகைச்சுவைக்காக ஒரு சில காட்சிகளில் பெண் வேடங்களில் நடித்திருப்பேன். முழு நீள கதையில் நடித்ததில்லை. திருநங்கையாகவும், இன்னொரு வேடம் வடிவேலுவாகவும் இரட்டை வேடங்கள். கதை கேட்டுக்கொண்டிருக்கிறேன்".

'வின்னர்' பட சமயத்தின்போது, காலில் அடிப்பட்டிருந்தாலும் அதையும் ஒரு 'கைப்புள்ள' கதாப்பாத்திரத்தின் அடையாளமாக மாற்றி இருப்பீர்கள். இதுபோல, வாழ்க்கையில் உண்மையான துயரங்கள் வரும்போது எப்படி அதை கடந்து வருவீர்கள்?

"முன்பே சொன்னது போல எது நடந்தாலும் நமக்கு தொழில் நடிப்பதுதானே முக்கியம்? சார்லி சாப்ளின் விழா ஒன்றிற்கு செல்லும் போது அப்போது காலில் அடிபட்டு இருந்ததால், தத்தி தத்தி நடந்திருக்கிறார். அதை பார்த்ததும் எல்லாரும் 'கெக்கபிக்கே' என்று சிரித்திருக்கிறார்கள். அவர் மேடைக்கு ஏறும் நேரம் பார்த்து ஒருவன் காலை மிதித்து விட்டான். 'ஆஆ..' என்று அவர் கத்த அதையும் நகைச்சுவை என்று மக்கள் நினைத்து சிரித்து இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்து நாம் செய்வதில்லை. ஊரில் நம் உறவினர்களுக்கு எதாவது ஒன்று என்றால் கூட நாம் இங்கு வேலை பார்த்துவிட்டுதான் நகர்வோம்.

வடிவேலு

'வின்னர்' பட சமயத்தின் போது காலில் எனக்கு அடிப்பட்டிருந்தது. சரியாவதற்கே இரண்டு ஆண்டுகள் ஆகும் என சொல்லியிருந்தார்கள். 'என்ன பண்ணலாம்?' என இயக்குநர் சுந்தர்.சி-யிடம் கேட்க, 'வாங்கண்ணே, ஏதாவது பண்ணலாம்' என சொன்னார். அப்போது நான் வலியோடு படப்பிடிப்பில் நடந்து வருவதை பார்த்து அந்த கதாப்பாத்திரத்தின் அடையாளமாக அதை மாற்றினார்கள். இது எல்லாம் விஷயமா? கமல் போன்ற பெரிய நடிகர்கள் செய்ததை விடவா நாம் செய்தது பெரியது?"

நகைச்சுவை இல்லாமல், முழு நீள சீரியஸ் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா?

"நான் நகைச்சுவை கதாப்பாத்திரம், குணச்சித்திரம், வில்லன் என எல்லா கதாப்பாத்திரங்களிலுமே நடிப்பேன். ஆனால், மக்கள் என்னை நகைச்சுவை கலைஞனாக மட்டுமே பார்க்க விரும்புவார்கள். 'அதெல்லாம் அழ வைக்க ஆள் இருக்கு. நீயும் ஏன்பா அதை பண்ற? சிரிக்க வைச்சாதான உன்ன காட்டி புள்ள குட்டிக்கு சோறு ஊட்ட முடியும்?' என்பார்கள்".

இணையத்தொடரிலும் நடிக்க போகிறீர்கள் என செய்திகள் முன்பு வந்தது. இணையத்தொடர்களின் வளர்ச்சியை எப்படி பார்க்கறீர்கள். அதில் நடிக்க என்ன மாதிரியான திட்டங்கள் வைத்து இருக்கிறீர்கள்?

"இப்போதைக்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அதற்கான காலம் வரும்போது நடிக்கலாம். ஆனால், நிச்சயம் அந்த ஐடியா உண்டு".

மக்களிடம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

"மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்போதுள்ள குழந்தைகள் எல்லாம் ஆன்லைன் கல்வி என சென்று விட்டார்கள். அதற்காக அதிக அளவில் அவர்களுக்கு மொபைல கொடுக்க வேண்டாம். நன்மை என்பது போல அதில் தீமையும் இருக்கிறது. நல்ல விஷயங்களை பார்க்க வைக்க வேண்டும், நல்ல விஷயங்களை சொல்லி தர வேண்டும். நன்றாக படிக்க வைக்க வேண்டும். எதிர்காலத்தில் கல்விதான் எல்லாரையும் வாழவைக்கும். நான் எல்லாம் படிக்காமல் சிரமப்பட்டேன். அதனால், இளைஞர்களுக்கு கல்வி அவசியம். கொரோனா காலத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்". என்றார் வடிவேலு.

வடிவேலு பேட்டி: நண்பர் விவேக் இல்லாத காலட்டம் எப்படி இருக்கிறது? - BBC News தமிழ்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் வடிவேலுவின் முழு சொத்து – இத்தனை கோடி!

உடல் மொழி நகைச்சுவையினால் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் வடிவேலு.

இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த என் ராசாவின் மனசினிலே படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து சிங்கார வேலன், தேவர்மகன், சின்ன கவுண்டர் என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

24ஆம் புலிகேசி படத்தின் பிரச்சனையில் வடிவேலுவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது. ஆனால், அந்த பிரச்சனை தற்போது நீங்கி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் நாய் சேகர் RETURNS என தலைப்பு வைத்துள்ளனர். சமீபத்தில் கூட இப்படத்தில் FIRST லுக் வெளியானது.

இந்நிலையில் நடிகர் வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வடிவேலுவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 120 கோடி இருக்கும் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

http://kisukisu.lk/?p=52351

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.