Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்? — வி. சிவலிங்கம் — 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்?

‘ஒரு நாடு ஒரு சட்டம்’ : இப்போது ஏன்?

— விசிவலிங்கம் — 

  • ராணுவ ஆட்சியை முழுமையாக்கும் சூழ்ச்சியா
  • சிங்கள பௌத்த தீவிரவாதியின் செயலணி தலைமை உணர்த்துவது என்ன

இலங்கையில் சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியொன்றினை உருவாக்கும் மறைமுக நோக்கில் தற்போது ‘ஒரு நாடு ஒரு சட்டம்’என்பதனை நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதற்காக ‘பொதுபல சேன’ என்ற இனவாத அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 13 உறுப்பினர்களைக் கொண்ட இக் குழுவில் தமிழர்கள் எவரும் இடம் பெறவில்லை. இனவாதியான தேரர் தலைமையில் இயங்கப் போகும் இக் குழுவில் தமிழர்கள் யாராவது செயற்பட விரும்புவார்களா? என்பது ஆரம்ப நியமனங்களிலேயே புலப்பட்டுள்ளது. அதில் நியமிக்கப்பட்டுள்ள முஸ்லீம் உறுப்பினர்களின் பின்புலங்கள் குறித்து பலத்த சந்தேகங்கள் முஸ்லீம் மக்களாலேயே தெரிவிக்கப்படுகின்றன. இதற்கிடையில் தமிழர் தரப்பிலிருந்து தமக்கான பிரதிநிதிகள் இல்லையே என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பி வருகின்றனர். இதனை அவதானிக்கும்போது தமிழர்கள் அதிலிருந்தால் ஏதோ புதிதாக ஏதாவது எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் புதைபொருள் ஆய்வு நிலங்களைப் பராமரித்தல் என்ற போர்வையில் இன்னொரு பௌத்த பிக்குவின் தலைமையில் தமிழர்கள் அல்லாத செயலணி ஒன்றை அமைத்து பல காணிகளை அபகரித்து வருகிறது. இச் செயலணி அமைத்த வேளையிலும் அமைச்சர் தேவானந்தா உட்பட சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களை நியமியுங்கள் என்று கேட்டனர். எதுவுமே நடைபெறவில்லை. அரசை ஆதரிப்பவர்கள் தாமும் குரல் கொடுத்தோம் என்பதை பதிவு செய்ய முயற்சித்தார்களே தவிர, அடுத்த கட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஏனெனில் அவர்கள் சக்தி அற்ற ஆதரவாளர்கள். தம்மிடம் பலம் இருந்திருந்தால் எல்லாம் கிழித்திருப்பார்கள் என்பது அவர்களது வாதம்.  

அரசாங்கத்தின் இந்த முயற்சி இப்போது ஏன்?என்ற கேள்வி எழுகிறது. நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இத் தருணத்தில் சகல மக்களையும் திரட்டி, தேசிய ஐக்கியத்தை உருவாக்கி, பொருளாதார சுபீட்சத்தை நோக்கிய திட்டங்களை  வகுத்துச் செயற்படுவதே தேசிய நலனில் அக்கறையுடைய அரசு மேற்கொள்ளும் செயற்பாடாக அமையும். ஆனால் ஒரு புறத்தில் ஐ நா சபையில் இலங்கையின் ஐக்கியத்தையும்,ஒருமைப்பாட்டையும் பலப்படுத்தும் வகையில் ஐ நா சபையின் உதவியுடன் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதாகக் கூறி சில மாதங்களே ஆகிய நிலையில் ஏன் இந்த முனைப்பு? ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான இன்றைய அவசரம் என்ன? சிங்கள பௌத்த இனவாதியை தலைமைக்கு அமர்த்தியதன் நோக்கமென்ன?  

அரச தரப்பில் தற்போது பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அரசின் பிரதான கூறுகளாக செயற்படும் விமல் வீரவன்ச தலைமையிலான சுமார் 11 கட்சிகளின் குழுவினர் அமெரிக்க தலையீடு மறைமுகமாக நாட்டிற்குள் வருவதாக பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர். சமீபத்தில் எரிவாயு வழங்கும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஏகபோக உரிமையை அமைச்சரவை போதிய விவாதம் அல்லது கலந்துரையாடல் இல்லாமல் வழங்கியுள்ளதாக வீரவன்ச குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் ஆளும் தரப்பிற்குள் பிழவுகள் ஏற்பட்டுள்ளது.  

நாட்டின் பொருளாதாரம் திட்டமிட்ட அடிப்படையில் எடுத்துச் செல்லப்படவில்லை எனவும், இதனால் நாடு முழுவதும் விவசாயிகள் செயற்கை உரம் இல்லாமல் உற்பத்தியை மேற்கொள்ள முடியாது திண்டாடுவதாகவம், சமீபத்தில் சீனாவிலிருந்து சேதன உரம் என்ற பெயரில் இறக்குமதிக்கு தயாராகவுள்ள பசளையை ஆராய்ந்தபோது அது பல நோய்க் கிருமிகளைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டதால் துறைமுகத்தில் கப்பல் காத்திருக்கிறது. சீன அரசு அதில் எவ்வித தீமையும் இல்லை என சீன ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகக் கூறிய போதிலும் இன்னமும் பிரச்சனை நீடிக்கிறது. இவை தொடர்பாக அதாவது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இப் பசளையின் பணம் இன்னமும் இலங்கையின் மக்கள் வங்கியால் செலுத்தப்படவில்லை.  

இப் பிரச்சனை தொடர்பாக சீன உர உற்பத்திக் கம்பனி இலங்கையின் இவ்வாறான தமது உற்பத்தியின் தரக் குறைவு பற்றி செய்திகள் வெளிவருவது அக் கம்பனியின் சர்வதேச மதிப்பிற்கு களங்கம் ஏற்படுவதாகவும் கூறியுள்ளது. எனவே உரிய காலத்தில் அதற்கான பணம் செலுத்தப்படாவிடில் பாரிய விளைவுகள் ஏற்படுமெனவும், மக்கள் வங்கி மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு எனவும், தமது கம்பனிக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்க நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ உரிய நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுள்ளது. இவை தாமதிக்கப்படுமானால் வங்கிக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாகவும் அச் சீனக் கம்பனி எச்சரித்துள்ளது. 

இச் சீன உர விவகாரம் அத்துடன் நிற்கவில்லை. விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே பத்திரிகையாளர் முன்னிலையில் பிரதமர் ராஜபக்ஸ சீன தூதுவரைச் சந்தித்து அந்த உரம் பாவனைக்கு உகந்ததல்ல என்பதைத் தெரிவித்ததாக கூறியுள்ளார். ஆனால் பிரதமர் சீன தூதுவரைச் சந்தித்த வேளையில் அந்த உரத்தின் தரத்தை மூன்றாவது தரப்பின் ஆய்விற்கு வழங்கி முடிவுகள் எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். விவசாய அமைச்சர் சில காலமாக ஜனாதிபதி கோதபய ராஜபக்ஸ தரப்பின் ஆதரவாளராக செயற்பட்டு வருகிறார். இச் செய்தி குறித்து பிரதமர் விவசாய அமைச்சரை எச்சரித்துள்ளார்.    

சமீபத்தில் பிரதமர் மகிந்த ராபஜபக்ஸ அமைச்சின் காரியாலயத்தில் பிரதான அதிகாரியாக செயற்படும் யூனுஸ் என்பவர் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் பிரதமர்,ஜனாதிபதி ஆகிய இரு சகோதர்களுக்கு மத்தியில் பிளவுகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டுள்ளார். இப் பிளவுகள் மிகவும் வெளிப்படையாகவே தெரியத் தொடங்கியுள்ளன. குறிப்பாக பிரதமர் ராஜபக்ஸ அதிகாரமற்றவராகவும், அவர் திட்டமிட்ட வகையில் ஒதுக்கப்படுவதாகவும், மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள அவர் இவ்வாறு ஒதுக்கப்படுவதால் பலர் அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளதாகவும், குறிப்பாக அடுத்த தேர்தல் ஒன்று நிகழுமானால் 98 சதவீத முஸ்லீம் மக்கள் பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.  

தற்போது கொரொனா நோயின் தாக்கங்களாலும், பொருளாதார நெருக்கடிகளாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள பிரிவினர் அரச அதிகாரிகள் என்ற மத்திய தர வர்க்கத்தினராகும். இவர்கள் படிப்படியாக தமது பதவிகளிலிருந்து அல்லது பொறுப்பான பதவிகளிலிருந்து விலகி வருகின்றனர். ஏனெனில் ராணுவத்தினரின் தலையீடு அரசின் சகல பிரிவுகளிலும் அதிகரித்துள்ளதால் மக்களுக்கான சேவைகளை முழுமையாக வழங்க முடியவில்லை எனக் கூறுகின்றனர். தற்போது ஆசிரியர்கள், சுகாதார ஊழியர்கள் பலர் வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அரசாங்கம் தற்போது பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வேலை நிறுத்தத்தினைச் சட்ட விரோதமானது என அறிவிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. 

இவ்வாறு அரசிற்குள்ளும், மக்கள் மத்தியிலும் அமைதியற்ற நிலை தொடர்வதால் அரசாங்கம் மக்கள் செல்வாக்கை பெருமளவில் இழந்து வருகிறது. இதனை ஜனாதிபதியும் உளவுப் பிரிவினரின் அறிக்கைகள் மூலம் அறிந்துள்ளார். ஜனாதிபதி அடுத்த தேர்தலிலும் தாம் போட்டியிடும் நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தற்போதைய பொருளாதாரச் சிக்கல்கள் தொடருமானால் அவர் பதவியை மீண்டும் பெறுவது சாத்தியமா? மக்கள் ஆதரவு தொடருமா? தற்போது ஆளும் கூட்டணிக்குள் உள் முரண்பாடுகள் படிப்படியாக அதிகரித்து மிகவும் வெளிப்படையாகவே விமர்ச்சிக்கும் அளவிற்கு நிலமைகள் வளர்ந்துள்ளன. இவை நாட்டில் அரசின் செல்வாக்கு சரிவதை உணர்த்துகிறது. கடந்த காலங்களில் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனை இந்தியாவிற்கு வழங்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பினர். ஆனால் எதுவும் நிகழவில்லை. பின்னர் பசில் ராஜபக்ஸ அமெரிக்க பிரஜை எனக் குரல் எழுப்பினர். அதுவும் சரிப்படவில்லை. 20வது திருத்தத்திற்கு எதிராக குரல் எழுப்பினர். பின்னர் இணைந்து வாக்களித்தனர்.  

அரசாங்கத்திற்குள் செயற்படும் இந்த இனவாத சக்திகள் மிகவும் திட்டமிட்டே எதிர்க்கட்சியின் தொழிலை தாம் முன்னெடுத்து எதிர்க்கட்சி பலவீனமானது எனவும், அரசிற்குள் பலமான எதிரணி இருப்பதால் தாமே அரசின் தவறான போக்குகளைத் தடுப்பதாகவும் காட்டும் ஒரு போலித் தோற்றப்பாட்டை இதுவரை நடத்தினர். ஆனால் இக் குழுவினர் அரசாங்கத்தைப் பாதுகாக்கும் ஒரு நோக்கிலும், எதிர்க் கட்சிகளைப் பலவீனமானது என அடையாளப்படுத்தும் நோக்கிலும் சில ஏமாற்றுகளை மேற்கொண்டதை மக்கள் தெளிவாக அடையாளம் கண்டுள்ளனர். இப் போலித்தனங்களால் மக்களை ஏமாற்ற முடியவில்லை. தாம் அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் அரசிற்குள் எதிர்க்கட்சியாக செயற்படுவதாகக் காட்டிய போதிலும் தீர்மானத்திற்கான வாக்கெடுப்பு என வரும்போது இந்த அரசாங்கத்தைத் தோற்கடிக்க இடமளிக்க முடியாது எனவும், தம்மால் மாற்றுக் கட்சி பதவிக்கு வருவதை ஏற்க  முடியாது எனவும் புதிய விளக்கம் அளிக்கின்றனர். 

ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் நோக்கம் 

இவ்வாறு அரச மட்டத்தில் எழுந்துள்ள சிக்கலான பின்னணியில்தான் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற செயலணி நியமனத்தின் உள் நோக்கங்களை நாம் அணுக வேண்டும். தற்போதுள்ள நாட்டு நிலவரத்தின் பிரகாரம் அவதானிக்கையில் நாடு பாரிய அளவில் ராணுவத்தின் கைகளில் சென்றிருக்கிறது. முக்கிய அரச நிர்வாகங்களில் ராணுவம் சிவில் செயற்பாடுகளை மேற்கொள்கிறது. அத்துடன் அரசின் ஆதரவாளர்கள், உறவினர்கள், நண்பர்கள் எனப் பல பிரிவினர் நாட்டின் பிரதான பொருளாதாரத் துறைகளைக் கட்டுப்படுத்துகின்றனர். ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் தற்போது முற்றாகவே ராஜபக்ஸ குடும்பத்தினரின் கைகளில் சென்றுள்ளது. நாட்டின் பிரதான அமைச்சுகள் அக் குடும்பத்தின் கைகளில் உள்ளது. சமீபத்தில் வெளியான ‘பண்டோரா அறிக்கை’ இக் குழுவினரின் பண பலத்தை உணர்த்துகிறது. நாட்டின் மூல வளங்கள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள விபரங்களைத் தருகிறது.  

எனவே நாட்டின் அதிகாரத்திலும்,பொருளாதாரத்திலும் ஆழமாகக் கால் புதைத்துள்ள இப் பிரிவினர் அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவு தர மாட்டார்கள் என அறிந்துள்ள பின்னரும் மக்களைப் பாதிக்கும் முடிவுகளை ஏன் எடுக்கிறார்கள்? தேசத்தின் பிரதான சொத்துகளை ஏன் அந்நிய நாடுகளுக்கு விற்கிறார்கள்?  நாடு பொருளாதாரச் சீரழிவை நோக்கிச் செல்கையில் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’எந்த வகையில் உதவப் போகிறது? தற்போது முன்வைக்கப்படும் இந்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’என்பதைச் சற்று ராணுவ அரசை நோக்கிப் பார்த்தால் அதுவே பொருத்தமானதாக அமையும். எனவே பல்லினங்கள் வாழும் நாட்டில், பல மதங்கள் பின்பற்றப்படும் நாட்டில், இந்த ஆட்சிமுறை வருவதற்கு முன்பதாகவே வாழ்ந்த மக்கள் தமக்கென சில சட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டு அமைதியாக வாழும் நாட்டில் நேற்றுப் பதவிக்கு வந்தவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற காரணத்தைக் காட்டி கடந்தகால ஏற்பாடுகளை நிராகரித்துச் செல்ல முடியாது. தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் தமது கலாச்சாரம், பண்பாடு, அடையாளம் எனபவற்றைப் பாதுகாக்கும் நோக்குடன் தமக்கென விதிகளை அமைத்துக் காலங் காலமாக வாழ்ந்து வருகிறார்கள். அது அவர்களின் வாழ்க்கை முறையாக மாற்றமடைந்துள்ளது. இதனை ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற சிங்கள மயமாக்கல் சூழ்ச்சிகளால் நிறைவேற்ற முடியாது.  

இதனை இன்றைய அரசு புரியாதது அல்ல. நாட்டின் நீதிமன்றச் சட்டத்தினை அவமரியாதை செய்து சிறை அனுப்பப்பட்ட ஒருவர் ஜனாதிபதியின் மன்னிப்பினால் விடுதலை செய்யப்பட்ட நிலையில் நாட்டின் சட்டம்,ஒழுங்கு பற்றி அவரால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? அரசினால் நியமிக்கப்பட்டுள்ள இச் செயலணி மிகவும் நகைப்பானது. இதனால் எதனையும் சாதிக்க முடியாது. ஆனால் சிங்கள பௌத்த பேரினவாதியான ஞானசார தேரோ சில பிரச்சனைகளைத் தோற்றுவிக்க அதாவது இன விரிசல்களை ஏற்படுத்தி ஓர் அமைதியற்ற நிலையைத் தோற்றவிக்க உதவுவார்.  

இவர் சில காலமாக கத்தோலிக்க ஆண்டகை மல்கம் ரஞ்சித் மற்றும் கிறிஸ்தவ திருச்சபைக்கு எதிராக பேசி வருகிறார். ஆண்டகை இரட்டை உளவாளி எனவும், ஒரு புறத்தில் அரசிற்கு எதிராகவும், மறு புறத்தில் தீவிரவாதிகளுக்கு ஊக்கமளிப்பதாகவும் கூறுகிறார். இதன் பின்னணி என்ன? ஆண்டகை பல மாதங்களாகவே அதாவது ஈஸ்ரர் ஞாயிறு படுகொலைகள் முடிவடைந்து ஒரு வருடங்களுக்கு மேலாக மௌனமாக பாதித்த மக்களுக்கு ஆதரவுகளை மேற்கொண்டு வந்தார். ஜனாதிபதி பதவியை பெற்றுக் கொண்ட சில நாட்களுக்குள்ளாகவே ஆண்டகையைச் சந்தித்து குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டிப்பதாக ஜனாதிபதி ஆண்டகைக்கு தெரிவித்திருந்தார். ஆனால் பதவி பெற்று ஆண்டு கடந்த பின்னரும், ஆணைக்குழு என்ற பெயரில் ஒன்றை அமைத்து அறிக்கை என்ற பெயரில் அரைகுறையாக தயாரித்து இச் சம்பவத்தின் முக்கிய சூத்திரதாரிகளை மறைக்க அரசு முயற்சித்துள்ளதாக ஆண்டகை குற்றம் சுமத்தினார்.  

ஆண்டகை தனது மக்களின் பாதுகாப்புக் குறித்து அரசு காத்திரமான எந்த முயற்சிகளையும் எடுக்காத நிலையில் அவர் சர்வதேச சமூகத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். ஆனால் ஞானசார தேரர் அரசு குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும், அரசினால் வெளியிடப்பட்ட ஆணைக்குழு அறிக்கை முழுமையானது எனவும் கூறி ஆண்டகை அந்நியர்களுக்கு நாட்டைக் காட்டிக் கொடுக்க முனைவதாக குற்றம் சாட்டுகிறார்.  

ஞானசார தேரர் முஸ்லீம் மக்களின் ஆகமங்கள் பௌத்த மத சாசனத்திற்கு போட்டியாக அமைவதாகவும், பெரும்பான்மை பௌத்தர்களின் நாட்டில் இவ்வாறான போட்டி ஆகமங்கள் வளர இடமளிக்க முடியாது எனவும், அவர்கள் பயங்கரவாதிகளை உற்பத்தி செய்கிறார்கள் எனவும், மதக் கல்வி புகட்டும் மத்ரசாக்கள் நாட்டின் கல்விக்கு புறம்பானதாக செயற்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருபவர். முஸ்லீம் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் குறித்து மிகவும் அச்சத்தை வெளிப்படுத்துபவர். இவர்தான் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்ற செயலணிக்குத் தலைமை தாங்கி எதிர்கால இலங்கை குறித்து அறிக்கை தரப் போகிறார். 

இவை யாவற்றையும் ஒட்டு மொத்தமாக பார்க்கையில் குறிப்பாக நாட்டின் அரச கட்டுமானம், பொருளாதாரம், அதிகார இருப்பு என்பவற்றை அவதானிக்கையில் அடுத்த தேர்தல் ஒன்றிற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாக உணரப்படுகிறது. அவ்வாறானால் இதே ஆட்சியாளர்கள் ஒரு பரம்பரை ஆட்சியை உருவாக்க துடிப்பவர்கள் எவ்வாறான ‘ ஒரு நாடு ஒரு சட்டம்’ என்பதைத் தருவார்கள். நிச்சயமாக அது ராணுவ ஆட்சியே.      

 

https://arangamnews.com/?p=6693

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.