Jump to content

பாலுறவு, பாலியல் ஈர்ப்பு: பலருக்கு உணர்ச்சிப் பிணைப்புக்குப் பிறகே பாலியல் ஈர்ப்பு ஏற்படுபடுவது உண்மையா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

பாலுறவு, பாலியல் ஈர்ப்பு: பலருக்கு உணர்ச்சிப் பிணைப்புக்குப் பிறகே பாலியல் ஈர்ப்பு ஏற்படுபடுவது உண்மையா?

  • ஜெஸ்ஸிக்கா க்ளெய்ன்
  • பிபிசி வொர்க்லைஃப்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
காஸ்ஸிக்கா

பட மூலாதாரம்,SOUNDS FAKE BUT OKAY

சிலருக்கு பாலியல் ரீதியாக ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்பு அவர்களுக்கு உணர்ச்சி ரீதியிலான பிணைப்பு ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் அவர்களுக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்படும். இதை டெமிசெக்ஸுவல்(DemiSexual) அல்லது அரை பாலியல் ஈர்ப்பு என்று கூறலாம். பாலியல் ஈர்ப்பு நிலைக்கும், பாலியல் ஈர்ப்பு அற்ற நிலைக்கும் இடைப்பட்டது இது. அவர்கள் ஒருபாலுறவிலோ அல்லது வேறு பாலியல் ஈர்ப்பிலோ இருக்கலாம்.

இப்படியொரு பாலியல் நோக்குநிலை இருப்பதை பலரும் ஏற்பதில்லை. ஆனால் அரை- பாலியல் ஈர்ப்பாளர்கள் தங்களது நிலையை ஒதுக்கிவிடக்கூடாது என்று கூறுகிறார்கள்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அப்போதைய நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவின் மகள் மைக்கேலா கென்னடி-குவோமோ தன்னை 'டெமிசெக்ஸூவல்' என்று அறிவித்தார். அவரைப் பலரும் கேலி செய்தார்கள். சிலரே இந்த வகை உறவுகளை 'உண்மையானதாக' ஒப்புக்கொண்டனர்.

"அரை பாலியல் ஈர்ப்பு" என்பது பரவலாக அறியப்படவில்லை. இருப்பினும் இது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்துகிற ஒரு பாலியல் நோக்குநிலைதான். எப்படி தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்டவற்றை ஏற்கிறோமோ அதைப்போல இதையும் ஒருவகையான பாலியல் நோக்குநிலையாக ஏற்க வேண்டும் என்று பலரும் கருதுகிறார்கள்.

அரை பாலியல் ஈர்ப்பு நிலை என்பதை பாலியல் ஈர்ப்பு அற்ற நிலை என்ற வரையறைக்குள் பொதுவாக வைக்கப்படுகிறது. ஆனால் அது சற்று வேறுபட்டது. பாலியல் ஈர்ப்பு ஏற்படுவதற்கு முன்னதாக தொடர்புடையவருடன் உணர்ச்சி ரீதியாகப் பிணைப்பு ஏற்படுவதற்கு இவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் Asexual எனப்படும் பாலியல் ஈர்ப்பு அற்ற நிலை கொண்டோருக்கு இந்த வரையறை பொருந்தாது. அவர்கள் எப்போதும் பாலியல் ஈர்ப்புக்குள் வராதவர்கள்.

எல்லி

பட மூலாதாரம்,ELLE ROSE

 
படக்குறிப்பு,

அமெரிக்காவின் இண்டியானாவில் வசிக்கும் 28 வயதான எல்லி ரோஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை அரை பாலியல் ஈர்ப்பு கொண்டவராக அடையாளம் கண்டார்.

கென்னெடி கியூமோவின் அறிவிப்பு ஒரு வகையில் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது என்கிறார் அரை பாலியல் ஈர்ப்பு தொடர்பாகப் பேசும் காய்லா காஸ்ஸிகா. Sounds Fake But Okay என்ற வலையொலி சேவையின் இணை நிறுவனர் அவர். அவரும் அவருடன் நிகழ்ச்சியை நடத்தும் பாலியல் ஈர்ப்பு அற்ற சாரா கோஸ்டெல்லாவும் காதல், உறவுகள், பாலியல் ஈர்ப்பு அற்ற நிலை ஆகியவை குறித்து விவாதித்து வருகிறார்கள்.

"நீண்ட காலமாகப் பெயரில்லாத நிலை"

கென்னெடி கியூமோவின் அறிவிப்பு அரை பாலியல் ஈர்ப்பு குறித்து ஒரு வரையறையை வெளிக் கொண்டுவந்தது என்கிறார் காஸ்ஸிகா.

மறுபுறம், இது தொடர்பான பரந்த விவாதம் எதிர்ப்பாளர்களைக் கொண்டு வந்து தவறான தகவல்கள் பரவுவதற்கும் காரணமானது. "டெமிசெக்சுவாலிட்டி என்ற சொல் நிச்சயமாக பரவலாக அறியப்பட்டதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன், ஆனால் சரியான வரையறை இன்னும் பலருக்கு தெளிவாகத் தெரியவில்லை" என்று கூறுகிறார் 24 வயதான காஸ்ஸிகா.

உதாரணமாக, பலர் இன்னும் அரை பாலியல் ஈர்ப்பு நிலையை நிராகரிக்கிறார்கள். நீங்கள் ஒருவருடன் ஆழமான, உணர்ச்சி ரீதியான தொடர்பை உருவாக்கும் வரை பாலியல் ரீதியாக ஈர்க்கப்படாமல் இருப்பது 'சாதாரணமானது' என்று கூறுகின்றனர்.

"நீங்கள் கட்டுக்கதைகளை உடைக்கத் தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார் காஸ்ஸிகா.

காஸ்ஸிகா போல அரை பாலியல் ஈர்ப்பு கொண்டவர்கள், தங்களது பாலியல் நோக்கு நிலை குறித்து மற்றவர்களுக்குப் புரிய வைப்பதற்காக கடுமையாக முயன்று வருகிறார்கள். இந்த நோக்கு நிலைக்கு நீண்ட காலமாக ஒரு பெயர் கூடக் கிடையாது என்பதால், இதைப் புரிய வைப்பது அவ்வளவு சாதாரணமானதில்லை. இன்னும் அதன் வரையறை மக்களைக் குழப்பிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆயினும் காஸ்ஸிகா போன்றோரின் பணி ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது. கடந்த பல ஆண்டுகளாக, ஃபேஸ்புக் குழுக்கள், இன்ஸ்டாகிராம் இடுகைகள் போன்றவற்றில் அரை பாலியல் ஈர்ப்பு என்று நாம் இங்கு குறிப்பிடும் "டெமிசெக்சுவாலிட்டி" பற்றிய விவாதம் பெருகியுள்ளது.

டெமிசெக்சுவல் என்ற என்ற சொல் 2006ல் ஏசெக்சுவல் விசிபிலிட்டி & எஜுகேஷன் நெட்வொர்க் (AVEN) என்ற குழுமத்தின் இடுகையில்தான் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ப்ரோக் பல்கலைக்கழகத்தில் மனித-பாலியல் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான அந்தோனி போகார்ட் இதுபற்றிக் குறிப்பிடும்போது, "இது முதன்மையாக அவென் தளத்திலிருந்தும், பாலின வாதிகளிடமிருந்தும் தோன்றிய சொல் என்று நான் நினைக்கிறேன்" என்கிறார்.

ஆயினும் பாலியல் ஈர்ப்பு அற்றவர்கள் என்பதைக் குறிப்பிடும் Asexual என்ற சொல்லைப் போல இது பிரபலமாகவில்லை. அதிகமாக விவாதிக்கப்படவும் இல்லை. ஏனென்றால் பாலியல் ஈர்ப்பு அற்றவர்கள் என்ற வரையறை எளிதானது. அவர்களுக்கு எந்த விதமான பாலியல் ஈர்ப்பும் இல்லை என்கிறார் காஸ்ஸிகா. இந்த வரையறை பயன்படுத்துவதற்கு மிக எளிதாக இருக்கிறது. அதற்கு மேல் உணர்ச்சிப் பிணைப்பு என்றெல்லாம் சேர்த்து அரை பாலியல் ஈர்ப்பு என்று குறிப்பிடும்போது பலரும் குழப்பத்துடன் தலையைச் சொறியத் தொடங்கிவிடுகிறார்கள்.

அமெரிக்காவின் இண்டியானாவில் வசிக்கும் 28 வயதான எல்லி ரோஸ், சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை அரை பாலியல் ஈர்ப்பு கொண்டவராக அடையாளம் கண்டார். தன் பாலின ஈர்ப்பாளரான அவர், தன்னுடைய பெண் நண்பருடன் அதைப் பற்றி அவர் விவரிக்கும்போதுதான் அவருக்கு அந்தப் புரிதல் கிடைத்திருக்கிறது.

பெண்கள் ஊடகங்களில் பாலியல் ரீதியாக அதிகமாகப் பயன்படுத்தப்படும் அதே நேரத்தில், திருமணம் போன்ற உறவுகள் வரை தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்றும் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் வலியுறுத்துகின்றன. இது தன்னுடைய இணையுடன் புரிதல் ஏற்படும்வரை பாலுறவு கூடாது என்று தெளிவுபடுத்துகிறது. இது அரை பாலியல் ஈர்ப்புடன் ஒத்துப் போகிறது. ஆயினும் அரை பாலியல் ஈர்ப்பு என்று அதை அடையாளப்படுத்துவதில்லை.

காஸ்ஸிக்கா

பட மூலாதாரம்,SOUNDS FAKE BUT OKAY

 
படக்குறிப்பு,

"நீங்கள் கட்டுக்கதைகளை உடைக்கத் தொடங்க வேண்டும்" என்று வலியுறுத்துகிறார் காஸ்ஸிகா.

இந்த புரிதலின்மைதான் அந்த பாலியல் நோக்கு கொண்டோரை தனிமைப்படுத்துகிறது. கனடாவைச் சேர்ந்த 33 வயதான கெய்ரோ கென்னடி இப்படிப்பட்ட சூழலைச் சந்தித்தார். "என்னுடைய சகாக்களைப் போல எனக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்படவில்லை. அதனால் தோல்வியுற்றதாக உணர வேண்டியிருக்கிறது. இது ரகசியமாகவும் அவமானத்தின் மூலமாகவும் இருக்கிறது," என்கிறார் அவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பாலியல் நோக்குநிலைக்கு ஒரு பெயர் இருப்பதை தெரியவந்தபோது, கெய்ரோவுக்கு நிம்மதி ஏற்பட்டது. ஆயினும் அதுபற்றி பெரிதாக யாரும் பேசவில்லை என்பது அவருக்குக் குறையாகப் பட்டது. அதற்காக அவர் ஒரு வலைப்பக்கத்தை உருவாக்கினார். அதன் மூலம் அவரைப் போன்றே பாலியல் நோக்குநிலை கொண்டோர் அவரைத் தொடர்பு கொள்ளத் தொடங்கினார்கள். அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா வரை, பதின்ம வயதுடையவர்கள் முதல் 50-களில் இருப்பவர்கள் வரை பரவலாக அவரைத் தொடர்பு கொண்டபோது அவருக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

"பாலியல் நோக்கு நிலையை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்"

"சமூக ஊடகங்கள் காரணமாகவே இந்தச் சொல் மிகவும் பிரபலமானது என்று நான் நினைக்கிறேன்," என்று ஹவாயைச் சேர்ந்த சிகிச்சையாளர் ஜேனட் பிரிட்டோ கூறுகிறார். 2014ஆம் ஆண்டு அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டப் படிப்பின்போதுதான் அவர் முதன்முதலில் டெமிசெக்சுவாலிட்டி என்ற வார்த்தையை கேட்டார்.

இந்தப் பாலியல் நோக்கு நிலை அனைத்து வயதினருக்கும் பொதுவானது என்று கூறும் ஜேனட், தன்னிடம் வருவோரில் பெரும்பாலானோர் இருபதுகளில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார்.

காய்ரோ கென்னெடி

பட மூலாதாரம்,CAIRO KENNEDY

 
படக்குறிப்பு,

"என்னுடைய சகாக்களைப் போல எனக்கு பாலியல் ஈர்ப்பு ஏற்படவில்லை கெய்ரோ கென்னெடி

ஃபின்லாந்தின் ஹெல்சின்கி நகருக்கு வெளியே வசிக்கும் 30 வயதான கிளாஸ் ராபர்ட்ஸ், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனது பாலியல் நோக்குநிலைக்கு ஒரு பெயரை வைக்க உதவியதற்காக இணையத்துக்கு நன்றி தெரிவிக்கிறார். "இந்த விஷயங்களில் பின்லாந்து கொஞ்சம் பின்தங்கியிருக்கிறது, ஏனென்றால் ஒப்பீட்டளவில் சிறிய நாடு" என்று அவர் கூறுகிறார்.

அவர் தன்பாலினச் சேர்க்கையாளர் என்று அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் பல LGBTQ+ சமூகங்களில் உள்ளவர்களை ஆன்லைனில் சந்திப்பதன் மூலம் டெமிசெக்சுவல் என்பது தன்மை துல்லியமாக வரையறைப்படுத்தியது என்கிறார் அவர்.

பலவிதமான பாலியல் நோக்குநிலைகள் பற்றிய தகவலை பெரிய வெகுஜன நிறுவனங்கள் வழங்கத் தவறும்போது ஆன்லைன் குரல்கள் தேவைப்படுகின்றன.

காஸ்ஸிகாவும் அவருடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை நடத்தும் சாரா காஸ்டெல்லோவும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்பை படித்துக் கொண்டிருந்தபோது, வலையொலி சேவையைத் தொடங்கினார்கள். அங்கு அவர்களது நண்பர்கள் மட்டுமே அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று, ஆங்கிலம் பேசும் பிற நாடுகளுக்கும் ஐரோப்பாவிற்கும் அவர்களின் குரல் சென்றடைகிறது. சுமார் 7 ஆயிரம் பேர் அதைக் கேட்கிறார்கள் என்று காஸ்ஸிகா மதிப்பிட்டுள்ளார். ஏசெக்சுவல் எனப்படும் பாலியல் ஈர்ப்பற்ற வரையறைக்குள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல், அவர்களின் பெற்றோர்கள், இணையர்கள், நண்பர்கள்கூட இதன் மூலம் தெளிவுபெற முடியும் என்கிறார் காஸ்ஸிகா.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், இது போன்ற அம்சங்களைப் பற்றிப் பேசுவதும் கற்றுக்கொள்வதும் பாலியல் ரீதியிலான சிறுபான்மையினர் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்ப்பதற்கு உதவும் என்கிறார் ஆராய்ச்சியாளர் போகார்ட். "பாலியல் ஈர்ப்புத் தன்மையை நன்கு புரிந்துகொள்ள இது உதவுகிறது."

https://www.bbc.com/tamil/global-59212412

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.