Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஞ்சியும்.... செல்ஃபியும் – நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கஞ்சியும் செல்ஃபியும் – நிலாந்தன்.

கஞ்சியும்... செல்ஃபியும் – நிலாந்தன்.

முள்ளிவாய்க்காலில் கடந்த 18ஆம் திகதி கதறி அழும் பெண்களைச் சூழ இருந்தவர்கள் கைபேசிகளில் படம் பிடிப்பது தொடர்பாக எனது நண்பர் ஒருவர் விமர்சனபூர்வமாக சில கருத்துக்களை முன்வைத்தார்.அழுது கொண்டிருப்பவர்களை படம் எடுக்கும் மனோநிலையை எப்படி விளங்கிக் கொள்வது என்று கேட்டார். உண்மைதான். கண்ணீரின் பின்னணியில், ஒப்பாரியின் பின்னணியில், செல்ஃபி எடுப்பது என்பது நினைவு கூர்தலின் ஆன்மாவை கேள்விக்குள்ளாக்கக் கூடியதே.

இது கைபேசி யுகம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எல்லாவற்றையுமே அவர்கள் படமெடுக்கிறார்கள். தூக்கம், சந்தோசம், நல்லது, கெட்டது, அந்தரங்கம் என்ற வேறுபாடின்றி விவஸ்தையின்றி எல்லாமே படமாக்கப்படுகிறது. கைபேசி கமராக்கள் உலகை நிர்வாணமாக்கி விட்டன. படுக்கை அறை வரை கமரா வந்துவிட்டது. கழிப்பறை வரை கமரா வந்துவிட்டது. இப்படிப்பட்ட ஒரு தொழில்நுட்ப வளர்ச்சியின் பின்னணியில், நினைவுகூர்தல் அதன் ஆன்மாவை இழந்து விடாமல் இருக்கும் விதத்தில் அதை எப்படி ஒழுங்கமைப்பது? யார் ஒழுங்கமைப்பது?

முள்ளிவாய்க்காலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற ஒரு செயற்பாட்டாளர் சொன்னார்….. பரந்தன், சாலையில் தான் குடித்த கஞ்சி மிகச் சுவையாக இருந்தது என்றும் காலை ஆகாரத்தை அருந்தாமல் சென்ற தனக்கு அது பசிக்கு விருந்தாக இருந்தது என்றும்.ஒரு உள்ளூராட்சி சபை உறுப்பினர் சொன்னார்….. நாங்கள் முதலில் கஞ்சிக்கு உப்புச் சேர்க்கவில்லை. பாலை குறைத்துச் சேர்த்தோம்.ஆனால் ஒரு கட்டத்தில் அதை வழமையான கஞ்சி போல சமைத்தோம் என்று. காலிமுகத்திடலில் காய்ச்சப்பட்ட கஞ்சி மஞ்சள் நிறமாக இருந்தது.சிங்கள மக்கள் தமது சமையலில் மஞ்சளை எப்படியாவது சேர்ப்பார்கள். மேலும் அது கஞ்சியாகத் தெரியவில்லை. அது இறுகிய பால் சோறு போலக் காணப்பட்டது. பல்வேறு இடங்களிலும் சமைக்கப்பட்ட கஞ்சி வெவ்வேறு சுவைகளில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதாவது கஞ்சிக்கு ஒரு பொதுவான சமையல் குறிப்பு பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது.

ஒரு பொதுவான சமையல் குறிப்பு வழங்கப்பட வேண்டும்.ஏனென்றால் முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு இனப்படுகொலையின் நினைவுப் பொருள்.இறுதிக்கட்டப் போரில் வன்னி கிழக்கில் அகதிகள் புனர்வாழ்வு கழகம் கொட்டில்களை அமைத்து கஞ்சி காய்ச்சியது.ஆனந்தபுரம் சண்டை வரையிலும் தேங்காய் கிடைத்தது.அதன்பின் தேங்காய் பாலுக்கு பதிலாக பால்மா பாவிக்கப்பட்டது.இரண்டு பால்மாப் பெட்டிகள் சேர்க்கப்பட்டு கஞ்சி சமைக்கப்பட்டது.அது சுவையற்ற கஞ்சி.பசிக்குக் குடித்த கஞ்சி. பீரங்கிகளு்க்குப் பசியெடுத்த காலத்தில் போர்க்களத்தில் சிக்குண்டிருந்த மக்களுக்கு பசி இருக்கவில்லை. மரண பயத்தின் முன் சுவை நரம்புகள் மரத்துப் போயிருந்தன. ருசி தெரியவில்லை. அந்தந்த வேளைக்கு எதையாவது சாப்பிட்டு வயிற்றை நிரப்பினால் சரி என்ற நிலைதான் இருந்தது.திடீரென்று கூவிக்கொண்டு வரும் எறிகணையியிலிருந்து தப்பி பதுங்கு குழிக்குள் ஓடுவதற்கு அல்லது பாய்ந்து மறைப்புக்குள் நுழைவதற்கு உடலில் சக்தி வேண்டும். அந்த வலுவைத் தரும் எதையாவது சாப்பிட்டால் சரி என்ற நிலைதான் இருந்தது.

அக்காலகட்டத்தில் கஞ்சி மட்டும் பொது உணவாக இருக்கவில்லை. வாய்ப்பானும் இருந்தது. உலக உணவு ஸ்தாபனம் வழங்கிய கோதுமை மா, சீனி எண்ணை என்பவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்ட வாய்ப்பன்கள் இலவசமாகவும் கொடுக்கப்பட்டன.அல்லது மூன்று வாய்ப்பன்கள் ஐம்பது ரூபாய்க்கு அல்லது 100 ரூபாய்க்கு விற்கப்பட்டன.

கஞ்சியை ஒரு நினைவுப் பொருளாக அறிமுகப்படுத்தியது தமிழ் சிவில் சமூக அமையம்தான்.அதை அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே முள்ளிவாய்க்கால் நினைவு தினங்களின் போது அறிமுகப்படுத்தியிருந்தார்கள்.உணவை ஓர் ஆயுதமாக பயன்படுத்திய ஒரு போர்க்களத்தில், உணவையே ஒரு நினைவுப் பொருளாகவும் பகிர முடியும் என்று தமிழ் சிவில் சமூக அமையம் சிந்தித்தது. அதன் விளைவாகவே கஞ்சி அறிமுகப்படுத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது சுவையற்றது. அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால்,அது இனப்படுகொலையின் சுவை எனலாம். சுவையின்மைதான் அதன் நினைவு. சுவையின்மைதான் தலைமுறைகள் தோறும் கடத்தப்பட வேண்டிய செய்தியும் ஆகும்.அந்தக் கஞ்சி ஏன் சுவையற்றது? என்று புதிய தலைமுறை கேட்கும்பொழுது மூத்த தலைமுறை இனப்படுகொலையின் கதையை அவர்களுக்கு கூற வேண்டும். எனவே முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது ஒரு துயரக் கஞ்சி.ஒரு நினைவுக் கஞ்சி.இரத்தத்தின்.காயத்தின், கண்ணீரின்,அச்சத்தின் சுவை அது.

சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி நாளில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து இந்துக்கள் அருந்தும் சித்திரைத் கஞ்சி ஒருவிரதக் கஞ்சி.அதுபோல முஸ்லிம்களின் நோன்புக் கஞ்சியும் ஒரு தவக்காலக் க்கஞ்சிதான். அப்படித்தான் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் ஒரு நினைவுக் கஞ்சி. எனவே அது நினைவுகளை கடத்துவதாக அமைய வேண்டும். அதன் சுவையின்மைதான் அந்த நினைவு. இந்த அடிப்படையில் சிந்தித்தால், முள்ளிவாய்க்கால் கஞ்சிக்கென்று என்று ஒரு பொதுவான சமையல் குறிப்பு வேண்டும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை என்பதனை உலகின் பல்வேறு பாகங்களிலும் உள்ள செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேற்கண்ட இரண்டு விடயங்களும் அதாவது கண்ணீரின் பின்னணியில் செல்பி எடுப்பது, கஞ்சிக்கு சுவை சேர்ப்பது ஆகிய இரண்டு விடயங்களும், தமிழ் மக்களுக்கு எதை உணர்த்துகின்றனவென்றால், நினைவுகூர்தல் ஒரு மையத்தில் இருந்து முழுமையாகத் திட்டமிடப்படவில்லை என்பதைத்தான். அவ்வாறு திட்டமிடப்பட்டு இருந்திருந்தால் எப்படிக் கஞ்சி காய்ச்ச வேண்டும்? நினைவுகூரும் மைதானத்தில் கைபேசிகளைப் பயன்படுத்தலாமா? இல்லையா? எதைப் படமாக்க வேண்டும்? படமாக்கக் கூடாது? போன்ற விடயங்களை ஒரு மையத்திலிருந்து முடிவெடுத்து இருக்கலாம். அது மட்டுமல்ல சித்திரைக் கஞ்சி என்பது விரதத்தின் போது குடிப்பது. அதுபோல நோன்பு கஞ்சியும் நோன்பிருந்து குடிப்பது. அதுபோலவே முள்ளிவாய்க்கால் கஞ்சியும் துயரங்களை நினைவுகூர்ந்து துயரங்களைப் பகிர்ந்து குடிப்பது என்ற அடிப்படையில் துயரங்களை பகிர்வதற்கும் பரிமாறுவதற்குமுரிய ஏற்பாடுகளைக் குறித்து தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.

இறுதிக்கட்டப் போரில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை. பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் மட்டும் மக்கள் கொல்லப்படவில்லை. தமிழ்ப் பகுதிகள் எங்கும் தென்னிலங்கையிலும் தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இறுதிக்கட்டப் போரில் ஒரு குறுகிய நிலப்பரப்பில்,ஒரு குறுகிய காலகட்டத்துக்குள், அதிக தொகையினர் கொல்லப்பட்டார்கள் என்பதுதான் முள்ளிவாய்க்காலுக்குள்ள முக்கியத்துவம்.

முள்ளிவாய்க்கால் என்பது ஒரு புவியியல் வார்த்தை அல்ல. அது ஒரு அரசியல் வார்த்தை. அது ஒரு குறியீடு. உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்ச்சிப்புள்ளி அது. அந்த அடிப்படையில் நினைவுகூரல் திட்டமிடப்பட வேண்டும். ஒரு கூட்டுக் கோபத்தை, கூட்டுத்துக்கத்தை எப்படி கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவது என்று தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும்.அதற்கு வேண்டிய வழிமுறைகளையும் கட்டமைப்புகளையும் கண்டுபிடிக்க வேண்டும்.

நினைவு கூர்வதற்கான வெளியை தான் தடுக்கப் போவதில்லை என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். அதேசமயம் இறந்தவர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும் அவர் எச்சரித்திருந்தார். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை நினைவுகூர்தல் என்பது முழுக்க முழுக்க அரசியல்தான். அதைவைத்து அரசியல்வாதிகள் தேர்தல் மைய அரசியல் செய்கிறார்கள் என்பது வேறு விடயம். ஆனால் அது அரசியல்தான்.அது ஒரு அரசியல் செயற்பாடுதான்.கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றும் ஓர் அரசியல் செயற்பாடு அது.

அதை கட்சி கடந்து, மதம் கடந்து, கிராமம் கடந்து, மாவட்டம் கடந்து சிந்திக்க வேண்டும். அதற்கு ஒரு பலமான பொது அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அது உலகளாவிய தமிழர்களை ஓர் உணர்ச்சி புள்ளியில் ஒன்று சேர்ப்பது என்ற அடிப்படையில் பரவலான உலகளாவிய ஒரு கட்டமைப்பாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.அந்த கட்டமைப்பினால்தான் நினைவுகூர்தல் தொடர்பான ஒழுங்குகள் திட்டமிடப்பட வேண்டும். நினைவுகளை தலைமுறைகள் தோறும் கடத்துவதற்குரிய புத்தாக்க திறன்மிக்க ஏற்பாடுகளை கண்டுபிடிக்க வேண்டும்.

ஆனால் அப்படிப்பட்ட ஒன்றிணைந்த செயற்பாட்டை கடந்த 18ஆம் திகதி காணமுடியவில்லை.

ஒரு கூட்டுத் துக்கத்தை கூட்டு ஆக்க சக்தியாக மாற்றுவது என்றால் அது ஒரு கூட்டுச் செயற்பாடாக அமைய வேண்டும். கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். எனவே இந்த விடயத்தில் நினைவு கூர்தலுக்கான பொது அமைப்பை பலப்படுத்தி, ஜனநாயக மயப்படுத்தி அனைத்து தரப்பினரும் பங்களிக்கும் உலகளாவிய ஒரு அமைப்பாக கட்டியெழுப்ப வேண்டும். அப்பொழுதுதான் மே 18 ஐ அதன் மெய்யான பொருளில் அனுஷ்டிக்கலாம். இல்லையென்றால் ஒரு கட்டத்தில் நினைவுகூர்தல் ஒரு சடங்காக மாறும் ஆபத்து உண்டு.

https://athavannews.com/2022/1283223

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.