Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்?

  • ஆனந்த் தத்
  • பிபிசி ஹிந்தி
7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பிர்ஸா முண்டா

பட மூலாதாரம்,RAJYASABHA.NIC.IN

 

படக்குறிப்பு,

பிர்ஸா முண்டா

பிர்ஸா முண்டா, 1800களில் கடைசி ஆண்டுகளில் பழங்குடி சமூகங்களுக்காக வாழ்ந்தவர். ஜூன் 9ஆம் தேதி அவரது நினைவு தினம். பிபிசியின் இந்த சிறப்புக் கட்டுரை மூலம் அவரது ஆளுமை மற்றும் சமூகத்திற்கு அவரது பங்களிப்பு பற்றி அறிந்து கொள்வோம்.

பழங்குடி சமூகத்தின் ஒரு நாயகனாகத் திகழ்ந்த பிர்ஸா முண்டாவை, பழங்குடி மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவில் கொள்கிறார்கள். பழங்குடியினரின் நலன்களுக்காகப் பாடுபட்ட பிர்ஸா முண்டா, அப்போதைய ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகவும் போராடினார்.

அவரது பங்களிப்பு காரணமாக, அவரது உருவப்படம் இந்திய நாடாளுமன்றத்தின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. பழங்குடி சமூகத்தில் இதுவரை பிர்ஸா முண்டாவுக்கு மட்டுமே இந்த கெளரவம் கிடைத்துள்ளது. பிர்ஸா முண்டா ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் பிறந்தார்.

அவர் பிறந்த ஆண்டு மற்றும் தேதி குறித்து பல்வேறு தகவல்கள் உள்ளன. ஆனால் பல இடங்களில் அவரது பிறந்த தேதி 1875 நவம்பர் 15 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரியான குமார் சுரேஷ் சிங், பிர்ஸா முண்டாவைப் பற்றி ஆராய்ச்சி அடிப்படையிலான, 'பிர்ஸா முண்டா மற்றும் அவரது இயக்கம்' என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

குமார் சுரேஷ் சிங் சோட்டா, நாக்பூரின் கமிஷனராக இருந்தார் . மேலும் அவர் பழங்குடி சமூகத்தைப் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். அவர் காலமாகி 15 வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், பிர்ஸா முண்டா பற்றிய அவரது புத்தகம் உண்மையான தகவல்கள் கொண்ட புத்தகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. பிர்ஸா முண்டா பிறந்த ஆண்டு 1872 என்று இந்தப் புத்தகம் குறிப்பிடுகிறது.

இது தவிர மேலும் பல சுவாரசியமான தகவல்கள் இதில் உள்ளன. பிர்ஸா முண்டாவின் குடும்பம் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்டதாக பல ஆதாரங்கள் மூலம் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. பிர்ஸா முண்டாவின் குடும்பத்தில், அவரது பெரிய சித்தப்பா கனு பால், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். அவரது தந்தை சுக்னா மற்றும் அவரது தம்பியும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். அவரது தந்தை பின்னர் மத போதகர் ஆனார்.

மதமாற்றத்திற்குப் பிறகு, பிர்ஸாவின் பெயர் தாவூத் முண்டா என்றும் அவரது தந்தையின் பெயர் மசிஹ் தாஸ் என்றும் மாறியது.

கிறிஸ்தவ மதத்துடனான உறவை முறித்தவர்

 

பிர்ஸா முண்டா கதை

பட மூலாதாரம்,ANAND DUTTA/BBC

பிர்ஸாவின் இளைய சித்தி ஜோனி அவரை மிகவும் நேசித்தார். திருமணத்திற்குப் பிறகு, அவர் பிர்ஸாவை ,கட்டங்கா கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். இங்கு அவருக்கு கிறிஸ்தவ மத போதகர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் தனது சொற்பொழிவுகளில் முண்டாக்களின் பழைய வாழ்க்கைமுறையை விமர்சித்தார். இந்த விஷயம் அவரை மிகவும் வருத்தியது.

மிஷனரி பள்ளியில் படித்த பிறகும் அவர் தனது பழங்குடி வழிகளுக்குத் திரும்புவதற்கு இதுவே காரணம். ஆனால் இவை அனைத்திற்கும் மத்தியில், 1894 இல் அவர் நிலம் மற்றும் காடுகளில் பழங்குடியினரின் உரிமைகளைக் கோரி, சர்தார் இயக்கத்தில் இணைந்தபோது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.

இந்த இயக்கத்திற்கு பழங்குடியினரோ அல்லது கிறிஸ்தவ மதமோ முன்னுரிமை கொடுக்கவில்லை என்பதை அவர் உணர்ந்தார். இதற்குப் பிறகு அவர் வேறுபட்ட மத அமைப்பை உருவாக்கினார். இன்று அதன் விசுவாசிகள் 'பிர்சாய்த்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

"1895 ஆம் ஆண்டில், பிர்ஸா முண்டா தனது மதத்தைப் பிரசாரம் செய்ய 12 சீடர்களை நியமித்தார். ஜல்மாய் (சாய்பாஸா) வாசியான சோமா முண்டாவை, தலைமை சீடராக அறிவித்தார். அவரிடம் மத புத்தகத்தை ஒப்படைத்தார்."என்று குமார் சுரேஷ் சிங் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர் 1894-95 க்கு இடையில் தனது மதத்தை நிறுவியிருக்க வேண்டும். பிர்ஸாவை தங்கள் கடவுளாக அல்லது நாயகனாக கருதும் லட்சக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆனால் குந்தி, சிம்தேகா மற்றும் சாய்பாஸா மாவட்டங்களில், சில ஆயிரம் பேர் மட்டுமே அவரால் உருவாக்கப்பட்ட மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அது ஏன்?

 

பிர்சாய்த் மதத்தைச் சேர்ந்தவர்கள்

பட மூலாதாரம்,ANAND DUTT/BBC

 

படக்குறிப்பு,

பிர்சாய்த் மதத்தைச் சேர்ந்தவர்கள்

பிர்சாய்த் மதத்தை பின்பற்றுவது எவ்வளவு கடினம்

ராஞ்சியில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில், சாரித் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான ஜகாய் ஆபா,"பிர்சாய்த் மதத்தைப் பின்பற்றுவது மிகவும் கடினம். இறைச்சி, மது, கைனி, பீடி போன்றவற்றை நாங்கள் எந்த சூழலிலும் தொடுவதில்லை," என்கிறார்.

"வெளியில் இருந்து சமைப்பதை சாப்பிடக்கூடாது.. வேறு வீட்டில் கூட சாப்பிடுவதில்லை. வியாழகிழமை பூ, இலை, பல் தேய்க்கும் குச்சி கூட பறிக்கமாட்டோம். வயலில் அன்று ஏர் பூட்டி உழமாட்டோம். துணிகளில் பளிச்சென்ற நிறத்தில் பருத்தி துணியை மட்டுமே பயன்படுத்துவோம்."

ஜகாய்யின் மகனான 24 வயது ஹன்ஸ்ராஜ் முண்டா. "எங்கள் மதத்தில் பூக்கள், பிரசாதம், தட்சிணா, தூபக் குச்சிகள், சந்தனம் போன்றவற்றை வழிபாட்டிற்கு பயன்படுத்துவது கண்டிப்பாகத் தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இயற்கையை மட்டுமே வணங்குகிறோம், பாடல்களைப் பாடுகிறோம். பூணூல் அணிகிறோம்."என்று அவர் கூறினார்.

காணொளிக் குறிப்பு,

பிர்ஸா முண்டா படத்தை இயக்க நான் தேர்வானது எப்படி? பிபிசியிடம் மனம் திறக்கும் ரஞ்சித்

ஹன்ஸ்ராஜின் மனைவி பெலோங் முண்டாயின், "ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, நாங்கள் முடியை வெட்டுவதில்லை."என்கிறார்.

"வெளியூரில் இருந்து யாராவது அவர்களின் வீட்டிற்குச் சென்றால், அவர்கள் சமைத்து உணவளிப்பதில்லை. மாறாக, சமையல் பொருட்கள், விறகு மற்றும் சமையல் செய்ய இடம் போன்றவற்றை ஏற்பாடு செய்கிறார்கள்."என்று குந்தி கல்லூரியின் முண்டாரி மொழி பேராசிரியரான பீரேந்திர குமார் சோய் முண்டா தெரிவித்தார்.

 

ஜகாய் ஆபா

பட மூலாதாரம்,ANAND DUTT/BBC

 

படக்குறிப்பு,

ஜகாய் ஆபா

"வேறு சாதி பெண்களை திருமணம் செய்து கொண்டால், அவர்கள் பிர்சாய்த் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனால் பிர்சாய்த் மதத்தைச் சேர்ந்த ஒரு ஆண் வேறு சாதியிலோ அல்லது மதத்திலோ திருமணம் செய்தால், அவர்களுக்கு சமூக அங்கீகாரம் கிடைப்பது மிகவும் கடினம். இந்த மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதற்கு இது ஒரு பெரிய காரணம்," என்று பேராசிரியர் பீரேந்திர குமார் சோய் முண்டா மேலும் கூறினார்.

பிர்ஸா முண்டா 1901 இல் காலமானார். அவரது இயக்கத்தின் தாக்கம் இன்றும் நாடு முழுவதும் உள்ள பழங்குடியினர் மீது உள்ளது. ஆனால் இவரால் தொடங்கப்பட்ட மதத்தை பின்பற்றுபவர்கள் குறைவான எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் அதிலும் பல பிரிவுகள் உள்ளன.

"இதிலும் மூன்று பிரிவினர் உள்ளனர். ஒரு பிரிவினர் புதன்கிழமையும், மற்றொரு பிரிவினர் வியாழக்கிழமையும், மூன்றாவது பிரிவினர் ஞாயிறன்றும் வழிபாடு செய்கின்றனர். இந்த மூன்று பிரிவுகளில், ஞாயிற்றுக்கிழமை வழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கையே அதிகம்."என்று சிம்தேகா மாவட்டத்தைச் சேர்ந்த பிர்ஸா முண்டா என்ற மற்றொரு பிர்சாய்த் கூறுகிறார்.

"மூன்று பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவும் தாங்கள்தான் உயர்ந்த பிர்சாய்த் என்று கருதுகிறார்கள். வியாழக்கிழமைகளில் வழிபாடு செய்பவர்கள் தங்கள் வீட்டின் முன் கொடியை நட்டு வைக்கிறார்கள். புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை செய்பவர்கள் துளசியை வணங்குகிறார்கள்."

 

பெலோங் முண்டாயின்

பட மூலாதாரம்,ANAND DUTTA/BBC

 

படக்குறிப்பு,

பெலோங் முண்டாயின்

வெவ்வேறு பிரிவுகள்

தனது மதத்தின் தனித்தன்மைகள் குறித்துப்பேசிய அவர், "பேய், பிசாசு, பேயோட்டுபவர்கள், மந்திரவாதிகள் போன்றவற்றில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆண்டுக்கு இரண்டு முறை அனைவரும் சந்திக்கிறோம். முதல் முறையாக ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை, இரண்டாவது முறையாக 15 முதல் மே 18 வரை, சிம்தேகா மாவட்டத்தில் மத மாநாடு. நடைபெறுகிறது,"என்று குறிப்பிட்டார்.

"பிர்சாய்த்களின் முக்கிய தொழில் விவசாயம். பாரம்பரிய முறையில் அதாவது எருதுகளை வைத்து வயலை உழுகிறார்கள். இது தவிர அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை காடுகளில் இருந்து பெறுகிறார்கள்,"என்று எழுத்தாளரும் சமூக ஆர்வலருமான சஞ்சய் பாசு மல்லிக் கூறுகிறார்.

குறைந்த எண்ணிக்கையிலான மக்களே பிர்சாய்த்தைப் பின்பற்றுவது பற்றிப்பேசிய அவர்,"70கள் வரை, வெகு சிலரே பிர்ஸாவை அறிந்திருந்தனர். அவரது போராட்டம் காரணமாக பலர் கொல்லப்பட்டனர் என்று அவர் வசித்த குந்தி மாவட்டத்தின் மக்கள் கூட கூறுகிறார்கள். பிர்ஸாவின் பிறந்தநாள் முதன்முறையாக 1981ல் ராஞ்சியில் கொண்டாடப்பட்டது."என்று கூறினார்.

இருப்பினும், பிர்ஸாவின் மதத்தை நம்புபவர்களைப் பற்றி, சஞ்சய் இவ்வாறு கூறுகிறார். "பிர்சாயித்களின் வீடுகளில் தேவையான பொருட்கள் குறைவான அளவே இருக்கும். தங்கள் பராமரிப்புக்கு தேவையான அளவு நிலத்தைமட்டுமே அவர்கள் வைத்திருக்கிறார்கள்."

 

ஜகாய் ஆபா மற்றும் அவரது குடும்பத்தினர்

பட மூலாதாரம்,ANAND DUTTA/BBC

 

படக்குறிப்பு,

ஜகாய் ஆபா மற்றும் அவரது குடும்பத்தினர்

"பிர்சாய்த் மதத்தில் படித்தவர்கள் குறைவு என்பது உண்மைதான்., ஆனால் இப்போது குழந்தைகளுக்கு இந்தி, ஆங்கிலம் தவிர முண்டாரி மொழியையும் கற்றுக்கொடுக்கிறோம். புதிய தலைமுறை குழந்தைகள் அரசு வேலை செய்ய விரும்புகிறார்கள். சிலருக்கு வேலையும் கிடைத்துள்ளது, யாரையும் தங்கள் மதத்திற்கு வர அவர்கள் கட்டாயப்படுத்தமாட்டார்கள். யார் இதில் வந்தாலும், அவரவர் விருப்பத்தின் பேரில் வந்துள்ளனர். அதனால்தான் அவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது,"என்று ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகத்தின் 'அழிந்துவரும் மொழிகளுக்கான' மையத்தின் உதவிப் பேராசிரியர் குஞ்சால் இகிர் முண்டா கூறுகிறார்.

மத அரசியல் மற்றும் பழங்குடி சமூகம்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பழங்குடியினரின் எண்ணிக்கை 10,42,81,034. அதேசமயம் ஜார்கண்டில் (உள்துறை அமைச்சகத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி) 86 லட்சத்திற்கும் அதிகமான பழங்குடியினர் உள்ளனர். இதில் சர்னா மதத்தை பின்பற்றுவோர் எண்ணிக்கை 40,12,622.

32,45,856 பழங்குடியினர் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர். கிறிஸ்தவத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் எண்ணிக்கை 13,38,175. ராஞ்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் தீப்தி ஹோரோ, 2018 ஆம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை RTI மூலம் இந்தத் தகவலைப் பெற்றார்.

கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி ஜார்கண்ட் சட்டப் பேரவையில் சர்னா ஆதிவாசி சமய சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

"ஆதிவாசிகள் எப்போதுமே இந்துக்களாக இருந்ததில்லை. இப்போதும் இல்லை. இதில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் வழிமுறைகள் அனைத்துமே வேறுபட்டவை," என்று ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் ஏற்கனவே கூறியுள்ளார்.

"இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் , சமணர்கள் என அனைவரில் இருந்தும் நாங்கள் வேறுபட்டவர்கள் என்பதே எங்கள் கோரிக்கையின் அடிப்படை கருத்து. நாங்கள் எல்லா மதங்களிலிருந்தும் வேறுபட்டவர்கள். எங்கள் பாரம்பரியம் மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டது. ஆங்கிலேயர்களும் இதை ஏற்றுக்கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் எங்களை தனிப்பிரிவில் வைத்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில், இந்து மதம் என்று எழுத எங்களை கட்டாயப்படுத்தினர்," என்று அகில இந்திய ஹோ லாங்குவேஜ் ஆக்ஷன் கமிட்டியின் பொதுச் செயலாளராக இருந்த ஒடிஷா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியைச் சேர்ந்த லக்ஷ்மிதர் சிங் கூறினார்.

 

இந்திய அரசு அளித்த RTI பதில்

பட மூலாதாரம்,ANAND DUTTA/BBC

 

படக்குறிப்பு,

இந்திய அரசு அளித்த RTI பதில்

"2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 'மற்றவர்' என்ற பத்தியில் அதிகம் இடம்பெற்றவர்கள் சர்னா பழங்குடியினர். அவர்களின் எண்ணிக்கை 49 லட்சம் மற்றும் ஜெயின்களின் எண்ணிக்கை 43 லட்சம். இந்த நிலையில் எங்களுக்கு ஏன் தனி அடையாளம் கிடைக்கக்கூடாது. ஆதிவாசிகள் , ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மத அடையாளத்தின் கீழ் இல்லை. ஆனால் அனைவருமே இயற்கையுடன் தொடர்புடையவர்கள்," என்கிறார் அவர்.

2013 ஆம் ஆண்டில், JNU மாணவர் பல்பத்ரா பிருவா, RTI கேள்வியில், மக்கள்தொகை கணக்கெடுப்பில் சர்னாவை ஏன் முக்கிய மதங்கள் பிரிவில் சேர்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டார்.

 

இந்திய அரசு அளித்த RTI பதில்

பட மூலாதாரம்,ANAND DUTTA/BBC

 

படக்குறிப்பு,

இந்திய அரசு அளித்த RTI பதில்

இதற்கு பதிலளித்த மத்திய அரசு, "எளிதாக எண்ணும் வகையில் மதக் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. குறியீட்டை பெறுவதால், எந்த மதத்திற்கும் சிறப்பு சலுகைகள் கிடைக்காது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சர்னா மதத்தை பின்பற்றுபவர்கள், ஒடிஷா, ஜார்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் பிகாரில் உள்ளனர். மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் அதிக எண்ணிக்கை இல்லை."என்று குறிப்பிட்டுள்ளது.

"அதே ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், பழங்குடியினர் 100 க்கும் மேற்பட்ட மதங்களில் தங்களைப் பதிவு செய்தனர். முக்கியமாக ஜார்கண்டில் சர்னா, மணிப்பூரில் சனா மாஹி, அருணாச்சலத்தில் டோனி கோலோ மதம். இது தவிர, சந்தால்,முண்டாஸ், ஓரான்கள், கோண்டுகள், பீல்கள் மற்றும் வேறு மதங்களின் விசுவாசிகள் இருந்தனர்."

"ஜார்கண்டில் சர்னா உட்பட 50 பிற மதங்கள் மற்றும் பிரிவுகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 20 மதங்கள் பழங்குடியினரின் பெயரில் மட்டுமே உள்ளன. முண்டா, ஓரான், கோண்ட், பீல் போன்றவை. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, வெவ்வேறு மதங்களுக்கு, வெவ்வேறு குறியீடுகள் வழங்குவது சாத்தியம் இல்லை. எனவே அவை 'மற்றவை'என்ற பிரிவின் கீழ் எண்ணப்படுகின்றன."

பழங்குடியினரின் நாயகனாக இருந்த பிர்ஸா முண்டாவால் தொடங்கப்பட்ட மதம், தற்போது பழங்குடியினரின் மதம் தொடர்பான அரசியலில், எண்ணிக்கையிலோ, அரசியலிலோ எந்த முக்கியத்துவத்தையும் பெறவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

https://www.bbc.com/tamil/india-61748787

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.