Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எவரும் விரும்பாத ஜனாதிபதி; எவரும் தெரிவுசெய்யாத பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவரும் விரும்பாத ஜனாதிபதி; எவரும் தெரிவுசெய்யாத பிரதமர்

on June 14, 2022

dfe6214bdbef04573c5e9fb9064afb31c946b916

Photo, Laprensalatina

இலங்கையின் இன்றைய ஆட்சிமுறையின் இலட்சணம்

தன்னைப் பதவி விலகி வீட்டுக்குப் போகுமாறு கோரிக்கை விடுத்து  வீதிப்போராட்டங்களை நடத்திவரும் மக்களுக்கும் இளைய தலைமுறையினருக்கும் எதிரணிக் கட்சிகளுக்கும்  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ தெளிவான செய்தியொன்றைக்  கூறியிருக்கிறார்.

கடந்தவாரம் புளூம்பேர்க் செய்திச்சேவைக்கு நேர்காணலொன்றை வழங்கிய அவர் தனது ஐந்து வருட பதவிக்காலத்தின் எஞ்சிய இரு வருடங்களையும் நிறைவுசெய்த  பின்னரே பதவியில் இருந்து இறங்கப்போவதாகவும் இரண்டாவது பதவிக்காலத்துக்கு மக்களிடம் ஆணைகேட்டு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தார். தோல்விகண்ட ஒரு ஜனாதிபதியாக தன்னால் பதவியில் இருந்து போகமுடியாது என்றும் அவர் கூறியதைக் காணக்கூடியதாக இருந்தது.

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்று இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்றபோது இரண்டரை வருட குறுகிய காலத்திற்குள் நாட்டு மக்களால் பெரிதும்  வெறுக்கப்படும் ஒரு ஆட்சியாளராக மாறவேண்டிய நிலை தனக்கு வரும் என்றோ நாட்டை வங்குரோத்து நிலைக்குக் கொண்டுசென்ற ஒரு ஜனாதிபதி என்ற அவப்பெயரைச் சம்பாதிக்கவேண்டியேற்படும் என்றோ கோட்டபாய  ராஜபக்‌ஷ கனவிலும் நினைத்துப்பார்த்திருக்கமாட்டார். தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எந்தளவுக்கு முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு தடவை கேட்கப்பட்டபோது “எனக்கு இன்னொரு ஐந்து வருட பதவிக்காலம் இருக்கிறது” என்று உறுதியாகப்  பதிலளித்த அவர் இவ்வளவு குறுகிய காலத்திற்குள் மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவிக்கவேண்டிய நிலை தனக்கு ஏற்படும் என்றும் நினைத்திருக்கமாட்டார். மேலும் பல தசாப்தங்களுக்கு இலங்கையை ஆட்சிசெய்யும் கனவுடன் இருந்த தனது குடும்பத்தின் உறுப்பினர்களை பதவிகளில் இருந்து இறங்குமாறு கேட்கவேண்டிவரும் என்றோ ராஜபக்‌ஷ சகோதரர்களோ அல்லது வாரிசுகளோ இல்லாத நிர்வாகம் ஒன்றுக்கு இவ்வளவு விரைவாக தான் தலைமை தாங்கவேண்டிவரும் என்றோ கூட அவர் நினைத்திருக்கமாட்டார்.

இலங்கை சுதந்திரத்துக்குப் பின்னரான அதன் வரலாற்றில் முன்னென்றுமே கண்டிராத படுமோசமான பொருளாதார அனர்த்தத்தில் சிக்கித்தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், வானளாவ உயர்ந்துகொண்டு செல்லும் வாழ்க்கைச் செலவினாலும் அத்தியாவசிய உணவு வகைகள், எரிபொருட்கள் மற்றும் உயிர்காக்கும் மருந்துப்பொருட்களுக்கு நிலவும் மோசமான தட்டுப்பாட்டினாலும் மக்கள் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு பயனுறுதியுடைய திட்டங்களை அறிவிக்கமுடியாமல் அரசாங்கம் அன்றாடம் மக்களை அச்சுறுத்தும் அறிவிப்புக்களைச் செய்துகொண்டிருக்கும் பின்புலத்தில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி வெளிப்படுத்தியிருப்பதைக் காண்கிறோம்.

இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர்களில் வேறு எவருமே இரண்டாவது பதவிக்காலத்துக்கு தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று முதலாவது பதவிக்காலத்தின் இடைநடுவில் அறிவித்ததில்லை. அவ்வாறு அறிவித்த முதல் ஜனாதிபதி என்ற விநோதமான பெருமையை கோட்டபாய ராஜபக்‌ஷ தனதாக்கிக்கொண்டுள்ளார். தோல்வி கண்ட ஒரு ஜனாதிபதியாக  தன்னால் பதவியில் இருந்துவிலகமுடியாது என்று கூறியிருக்கும் அவர் தனது இதுவரையான இரண்டரை வருட கால ஆட்சியின் இலட்சணத்தை முதலில் நினைத்துப்பார்க்கவேண்டும். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பதவியில் இருந்த எந்த தலைவருமே நாடும் மக்களும் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு நியாயமான  தீர்வுகளைக் கண்டு வெற்றிபெற்ற ஜனாதிபதிகளாக வீடு சென்றதில்லை. சகலருமே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், நிலைவரங்களை முன்னையதை விடவும் மோசமானதாக்கிவிட்டே சென்றார்கள். இலங்கை வெளிநாட்டுக் கடன்களை மீளச்செலுத்த வக்கற்றதாகி வங்குரோத்து நிலையை வேறு எந்த ஜனாதிபதியின் கீழும் அடைந்ததில்லை. கோட்டபாயவின் ஆட்சியில்தான் அந்த கதி நாட்டுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான ஒரு நிலையில் தோல்வியடையாத ஜனாதிபதியாக வீட்டுக்குப் போவது குறித்து அவர் கனவு கண்டுகொண்டிருக்கிறார் போலும்.

இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்த தனது தன்னிச்சையான தீர்மானங்கள் சிலவற்றின் தவறை ஜனாதிபதி ஏற்கெனவே ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் ஒத்துக்கொண்டிருக்கிறார். கடந்தவருடம் ஏப்ரலில் இரசாயனப்பசளை இறக்குமதியை  திடீரெனத் தடைசெய்த தனது தீர்மானத்தின் விளைவாக விவசாயத்துறைக்கு ஏற்பட்ட பாரதூரமான பாதிப்பை ஒத்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டது. பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதில் காட்டிய தாமதத்தையும் தவறு என்று அவர் ஒப்புக்கொண்டார். சர்வதேச நாணய நிதியத்திடம் குறைந்தபட்சம் 6 மாதகாலத்துக்கு முன்னராவது போயிருந்தால் இன்றைய அனர்த்தத்தைத் தவிர்த்திருக்கலாம் என்று ஜனாதிபதி புளூம்பேர்க் நேர்காணலில் கூறியிருந்தார். 2019 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கையோடு தனது நேசசக்திகளான பெருமுதலாளித்துவ கோர்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பயனடையக்கூடியதாக தன்னால் மேற்கொள்ளப்பட்ட பாரிய வரிக்குறைப்பு தீர்மானத்தின் தவறை அவர் இன்னமும் பகிரங்கமாக ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால், அரசாங்கத்துக்கு வருடாந்தம் 600 கோடி ரூபா வருமான இழப்பை ஏற்படுத்திய அந்தத் தீர்மானத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடைவிடாமல் மக்களுக்கு நினைவுபடுத்திய வண்ணமேயிருக்கிறார்.

ஜனநாயக அரசியல்  அணுகுமுறைகளிலும் நடைமுறைகளிலும்  அக்கறைகாட்டாத இயல்பைக்கொண்ட கோட்டபாய ராஜபக்‌ஷ எப்போதுமே தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதை வழக்கமாகக் கொண்டவர் என்பது இதுவரையான அனுபவம். புளூம்பேர்க் நேர்காணலில் கூட நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை தொடரவேண்டுமென்றால் முற்றுமுழுதான அதிகாரங்களை ஜனாதிபதிக்கு வழங்கிவிட்டு நாடாளுமன்றத்தை ஆட்சிமுறையில் இருந்து விலக்கிவைக்கவேண்டும் என்றும் கலப்பான ஆட்சிமுறை பொருத்தமானதல்ல என்றும் அவர் கூறினார். ஒன்றில் ஜனாதிபதி ஆட்சிமுறை இருக்கவேண்டும் அல்லது வெஸ்மினிஸ்டர் நாடாளுமன்ற ஆட்சிமுறை இருக்கவேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. இந்த சிந்தனை இதுவரையான அவரது ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியதை நடைமுறையிலும் காணக்கூடியதாக இருந்தது. தனது கையில் முழுமையாக அதிகாரங்களைக் குவிப்பதற்காகவே அவர் 20ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். மட்டுமீறிய அதிகாரங்களை கையில் வைத்திருந்தும் அவரால் நாட்டை உருப்படியாக ஆட்சிசெய்யமுடியவில்லை.

பிரதமராக விக்கிரமசிங்கவை நியமித்தமை ஜனநாயக நடைமுறைறைகளை தலைகீழாக்கிய ஜனாதிபதி கோட்டபாயவின் மிக அண்மைய நடவடிக்கையாகும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஒரு ஆசனத்தைக்கூட பெறவில்லை. நாடுபூராவும் அந்தக் கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகளின் அடிப்படையில் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தைப் பயன்படுத்தியே விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான  உறுப்பினர்களின் ஆதரவைப்பெறக்கூடியவர் என்று தன்னால் கருதப்படக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி பிரதமராக நியமிக்கலாம் என்று அரசியலமைப்பு கூறுகிறது. ஆனால், ஐக்கிய தேசிய கட்சியின் தன்னந்தனி உறுப்பினராக இருக்கும் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துவிட்டு அவரின் கொள்கைகளுடன் முற்றாக முரண்படுகின்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்றப் பெரும்பான்மை மூலம் அரசாங்கத்தைக் காப்பாற்றும் கேலிக்கூத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு பிரதமர் விக்கிரமசிங்கவினால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்கு மாத்திரமே தங்களால் ஆதரவளிக்கமுடியும் என்றும், அரசியலமைப்புக்கு திருத்தங்களைக் கொண்டுவரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கமுடியாது என்றும் பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான உறுப்பினர்கள் வெளிப்படையாக கூறுகிறார்கள். 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது குறித்து நேர்காணலில் ஜனாதிபதி கிளப்பிய சந்தேகம் பொதுஜன பெரமுன நாடாளுமன்றக்குழு மீது கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதில் அவருக்கு இருக்கும் இயலாமையை வெளிக்காட்டுகிறது. ஒரேயொரு உறுப்பினராக நாடாளுமன்றத்தில் தனது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர் பிரதமராக நியமிக்கப்படக்கூடிய அதிசயம் இலங்கையைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்ததில்லை. பிரதமர் ஒருவரைத் தேடுவதில் ஜனாதிபதி கோட்டபாய கடந்த மாதம் எந்தளவுக்கு அந்தரித்தார் என்பதை கடந்தவாரம் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகயவின் உறுப்பினர் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல் உணர்த்தியது.

பிரதமர் பதவியைப் பொறுப்பேற்குமாறு தன்னை ஜனாதிபதி கேட்டதாகவும் ஆனால் தனது கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவளிக்க முன்வந்தால் மாத்திரமே பிரதமராகுவதற்கு இணங்கமுடியும் என்று தான் நிபந்தனை விதித்ததாகவும் பொன்சேகா சபையில் கூறினார். தன்னுடன் தொலைபேசியில் ஜனாதிபதி பேசிய மூன்று மணித்தியாலங்களில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றுக்கொண்டார் என்று குறிப்பிட்ட முன்னாள் இராணுவத்தளபதி தனது புண்ணியத்தினால் தான் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார் என்று அவருக்கு நேரடியாகவே கூறினார். கோட்டபாயவுக்கும் பொன்சேகாவுக்கும் இடையிலான உறவுமுறையின் இலட்சணம் எல்லோருக்கும் தெரியும். அவ்வாறிருந்தும் கூட அவரைப் பிரதமராக வருமாறு கேட்குமளவுக்கு விரக்தியின் விளிம்பில் ஜனாதிபதி இருந்தார் என்று தெரிகிறது.

சுமந்திரனின் பாராளுமன்ற உரை

முன்னர் கட்டுரையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டதைப் போன்று, ஒரு அமைதிவழி அரசியல் புரட்சியின் பரிமாணங்களை எடுத்திருந்த மக்களின் வீதிப்போராட்டங்ளையும் அவர்களின் கோரிக்கைகளையும் அலட்சியம் செய்து கோட்டபாய ராஜபக்‌ஷ பதவியில் இருந்து விலகாமல் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடியும் வரை ஆட்சியதிகாரத்தில் இருக்கத் தீர்மானித்திருக்கிறார் என்று தெரிகிறது. ஆனால், அவர் ஏன் பதவியில் இருக்கக்கூடாது என்பதற்கு கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் முன்வைத்த  காரணத்தை  விடவும் வேறு காரணம் எதுவும் தேவையில்லை.

முதல் நாள் பிரதமர் பொருளாதார நிலைவரம் குறித்து வெளியிட்ட விசேட அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்ற சுமந்திரன், ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு கோட்டபாய அறிவித்த பாரிய வரிக்குறைப்புக்கள் இன்றைய பொருளாதார இடர்நிலைக்கான காரணிகளில் முக்கியமான ஒன்று என்று சுட்டிக்காட்டினார். அந்த வரிக்குறைப்புகள் குறித்து முன்னாள் நிதியமைச்சர் காலஞ்சென்ற மங்கள சமரவீர செய்த முன்னெச்சரிக்கைகளையும் அவர்  நினைவுபடுத்தினார். கோட்டபாயவின் ‘சுபிட்சத்துக்கும் சீர்மைக்குமான  வருங்கால நோக்குகள்’ (vistas of prosperity and splendour) என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டவற்றையும் இன்றைய நிலைவரங்களையும் ஒப்பிட்டு வாசிப்பவர்கள் பட்டினியால் சாவதற்கு முதல் வயிறுகுலுங்கச் சிரித்தே செத்துப்போவார்கள் என்று நகைச்சுவையாக குறிப்பிட்ட  சுமந்திரன், 2019 அக்டோபரில் மங்கள சமரவீர அந்த விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டிருந்த வரிக்குறைப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கை லெபனானையும் வெனிசூலாவையும் போன்று வங்குரோத்து நிலைக்குக் கொண்டுசென்றுவிடும். அந்த யோசனைகள் இலங்கையை வங்குரோத்து நிலையை நோக்கி கடுகதி ரயிலில் ஏற்றிச்சென்றுவிடும் என்று கூறியதை நினைவு படுத்தினார்.

இன்றைய பொருளாதார இடர்நிலையின் சூத்திரதாரியான ஜனாதிபதியை பதவியில் தொடர்ந்து வைத்துக்கொண்டு மீட்சிக்கான நடவடிக்கைகள் பயன்தரும் என்று எதிர்பார்க்கமுடியாது என்பதே சுமந்திரனின் வாதத்தின் மையப்பொருளாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஏன் பதவி விலகினார்? அமைச்சரவை ஏன் பதவி விலகியது? மத்திய வங்கி ஆளுநர் ஏன் பதவி விலகினார்? நிதியமைச்சின் செயலாளர் ஏன் பதவிவிலகினார்? என்று கேள்விகளை எழுப்பி சுமந்திரன் ஜனாதிபதியும் நிச்சயம் பதவிவிலகவேண்டும் என்பதை அழுத்தி வலியுறுத்தினார்.

இத்தகையதொரு சூழ்நிலையில், ஐந்து வருடங்களுக்கு பதவியில் இருப்பதற்கு தனக்கு 69 இலட்சம் மக்களின் ஆணை இருக்கிறது என்று கூறிக்கொண்டு ஜனாதிபதி பதவியில் கோட்டபாய தொங்கிக்கொண்டிருப்பது பொருத்தமானதல்ல. சுபிட்சத்தைக் கொண்டுவருவதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டுவந்து அத்தியாவசிய பொருட்களுக்காக மக்களை மைல்கணக்கான வரிசைகளில் காத்துநிற்கவைத்த பிறகு அந்த ஆணைக்கு உரிமைகோருவதற்கு அவர் தார்மீக அடிப்படையில் தகுதியானவரல்ல.

இன்று நாம் காண்பது எவருமே விரும்பாத ஜனாதிபதியையும் எவருமே தெரிவு செய்யாத பிரதமரையும் கொண்ட ஒரு அரசாங்கத்தையேயாகும். இதுவே இலங்கை ஜனநாயகத்தின் இன்றைய இலட்சணம்.

தனது ஒரு தம்பி மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முடிவில் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருக்கவேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் காலங்கடந்த அறிவுரையைக்  கூறிய மூத்த சகோதரர் சமல் ராஜபக்‌ஷ இன்னொரு தம்பி ஜனாதிபதி கோட்டபாயவுக்கு நேரகாலத்தோடு அறிவுரையைக் கூறுவாரா?

Thanabalasingam-e1653297290887.jpeg?resiவீரகத்தி தனபாலசிங்கம்

 

https://maatram.org/?p=10199

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.