Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெருமாள் முருகன் ஏற்படுத்தும் நம்பிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

_bc41bfd8-ae5e-11e7-9bc1-6ddb500cf946.jpg
 

 

 

நேற்று நண்பர் பௌத்த ஐயனாருடன் பெருமாள் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். ஜெய்ப்பூர் புத்தக விழாவில் பெருமாள் முருகனின் மொழியாக்க நாவல்களை வாங்கி அவரிடம் கையெழுத்துப் பெற (ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும்) வாசகர்களின் ஒரு நெடிய வரிசை நின்ற காட்சியைப் பற்றி ஐயனார் என்னிடம் குறிப்பிட்டார். இன்று பெருமாள் முருகனுக்கு உலகம் முழுக்க வாசகர்கள் தோன்றி விட்டார்கள். வாஷிங்டன் டைம்ஸில் அவருடைய நாவல்களுக்கு மதிப்புரை வருகிறது. இந்திய ஆங்கில படைப்பாளிகளான அருந்ததி ராய், அமிதாவ் கோஷ் கூட அடையாத இடத்தை ஒரு தமிழ் எழுத்தாளர் அடைந்திருப்பது ஒரு சாதாரண விசயம் அல்ல. நாம் இதை பொறாமையால் கவனிக்காததைப் போல் நடிக்கிறோம். ஆனால் அப்படி நடிக்காமல் இதை வைத்து என்ன கற்றுக் கொள்வது என நாம் யோசிக்க வேண்டும்.

 தமிழ் தெரியாத என்னுடைய மாணவர்கள் நிறைய பேர் அவருடைய நாவல்களைப் படிக்கிறார்கள். அனேகமாக என் மாணவர்கள் எல்லாருக்கும் அவரைப் பற்றி தெரிந்திருக்கிறது. நிறைய பேர் அவருடைய எழுத்துக்களைப் பற்றி ஆங்கிலத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்புகிறார்கள். இத்தனைக்கும் பெருமாள் முருகன் தொல்காப்பியம் கூறும் காலம், நிலம் குறித்த விதியை துல்லியமாக தன் கிராமிய புனைவுகளில் பின்பற்றுபவர். அந்தளவுக்கு தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய எழுத்து அவருடையது. ஆனால் தொல்காப்பியமோ சங்க இலக்கியமோ தெரியாதவர்களால் அவரை சுலபமாக ரசித்துப் படிக்க முடிகிறது. ஆங்கில, ஐரோப்பிய, ஜப்பானிய மொழியினராலும் நமது தமிழ் நிலத்தை, அதன் பிரச்சனைகளை, பாத்திரங்களை உள்வாங்க முடிகிறது. இது அவரது புனைவுகளின் வலிமையாலே. சர்ச்சையாலும், அந்த விளம்பரம் தந்த புகழினாலும் மட்டும் அவர் இந்த இடத்தை அடையவில்லை. ஆம், ஒரு வரலாற்று தருணம் அவரை இந்த பெரும் வெளிச்சத்தையும் இடத்தையும் நோக்கித் தள்ளியது, அதற்கான தகுதி இருந்ததால் அவர் அதை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். அது அவரை ஒத்த திறமையான தகுதியான மற்ற தமிழ் எழுத்தாளர்களுக்கு உடனே அமையப் போவதில்லை. ஆனால் இங்கு பேச வேண்டிய விசயம் அது அல்ல.

 

இது மற்றொரு உண்மையையும் காட்டுகிறது: இந்நாள் வரை இப்படி ஒரு சந்தையே மொழியாக்கத்துக்கும் பிராந்திய எழுத்துக்கும் இல்லை; சந்தையை கவர ஆங்கிலத்தில் எழுத வேண்டும் அல்லது அகில இந்திய மனப்பான்மையை (pan Indian approach) கொண்டிருக்க வேண்டும் என நினைத்திருந்தோம். ஆனால் அது தேவையில்லை என பெருமாள் முருகனும் அவருடைய பதிப்பாளரான கண்ணனும் நிரூபித்திருக்கிறார்கள். எந்தளவுக்கு ஒரு படைப்பு பிராந்திய தன்மையுடன் இருக்குமோ அந்தளவுக்கு அது சர்வதேச தன்மை கொண்டதாகும் என்பது ஒரு பின்நவீனப் பார்வை. லத்தீன் அமெரிக்க, ஆப்பிரிக்க இலக்கியங்கள் அப்படியானவையே. அவற்றுக்கு நடந்தது ஏன் தமிழுக்கு நடக்கவில்லை என யோசித்துக் கொண்டிருந்தோம். இதோ நடந்தே விட்டது. இது ஒரு அசாதாரணமான சாதனை

நமது எழுத்தாளர்கள், அவர்கள் பேசும் விசயம், அவர்களுடைய மொழிநடை, அவர்களுடைய மொழிபெயர்ப்பாளர்கள் எதுவுமே, யாருமே சர்வதேச வாசகர்களுக்கும், சந்தைக்கும் தடை அல்ல, மாறாக இவையே தனியான தகுதியாக இன்று மாறி இருக்கிறது. பெருமாள் முருகன் கண்டைந்த உலகுக்கும் தமிழுக்குமான இந்த பாதையை எப்போது பிற தமிழ் எழுத்தாளர்களும் கண்டையப் போகிறார்கள்? அதற்கு ஊடகங்களும் ஆங்கில, சர்வதேச பதிப்பாளர்களும் உதவுவார்கள் எனில் நாம் தமிழில் புத்தகங்களை எவனும் வாங்குவதில்லை என கவலை கொள்ளத் தேவையில்லை. நேரடியாக பிரித்தானிய, அமெரிக்க, ஜெர்மானிய, ரஷ்ய, ஜப்பானிய வாசகர்களுக்காக நாம் எழுதலாம். அப்படியான ஒரு நாளும் வரக் கூடும்

 

எஸ்.ராவிடம் பேசிய போது அவரது இரு நாவல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் பெற்று ஒரு பிரசித்தமான ஆங்கில பதிப்பகம் மூலமாக வர இருக்கிறது என்றார். அண்மையில் கீதாஞ்சலி ஸ்ரீ எனும் இந்தி நாவலாசிரியர் சர்வதேச புக்கர் பரிசை Tomb of Sand எனும் இந்தியில் எழுதப்பட்டு மொழியாக்கமான தனது பிராந்திய நாவலுக்காக வென்றார். எதிர்காலத்தில் இது தமிழ் நாவலாசிரியர்களில் ஒருவருக்கும் நடக்கக் கூடும்.

 

எப்போதும் உள்ளுக்குள்ளோ போர் புரிந்து கொண்டிராமல் நாம் நேர்மறையாக சிந்தித்து நம்பிக்கையோடு இருப்போம். தொடர்ந்து உழைப்போம். ஒருநாள் எல்லா கதவுகளும் திறக்கும்ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2022/06/blog-post_91.html

  • கருத்துக்கள உறவுகள்

எழுத்தாளர் பெருமாள்முருகன்  அவரது படைப்புகள் தனித்துவம் மிக்கவை........!  🌹

நன்றி ஏராளன் .........!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

எழுத்தாளர் பெருமாள்முருகன்  அவரது படைப்புகள் தனித்துவம் மிக்கவை........!  🌹

நன்றி ஏராளன் .........!

அவற்றை ஒரு புத்தகம் வெளிவந்து பெரிய பிரச்சனையாகி எழுதக் கூடாது என்று வற்புறுத்தினவர்கள் எல்லோ!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அவற்றை ஒரு புத்தகம் வெளிவந்து பெரிய பிரச்சனையாகி எழுதக் கூடாது என்று வற்புறுத்தினவர்கள் எல்லோ!

ஓம் ..... அது ஒரு சமுதாயத்தை குறைகூறுவதாக கூறி பெரிய பிரச்சினை பண்ணினார்கள்......அதனால் அவர் அந்தப் புத்தகங்களை திரும்பப் பெற்றதாகவும் நினைக்கிறேன்.......!

நான் அந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன்.......அதன் பெயர் மறந்து விட்டது.......இனி உணவில் கொஞ்சம் வல்லாரை சேர்க்க வேண்டும்......!  😁 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

ஓம் ..... அது ஒரு சமுதாயத்தை குறைகூறுவதாக கூறி பெரிய பிரச்சினை பண்ணினார்கள்......அதனால் அவர் அந்தப் புத்தகங்களை திரும்பப் பெற்றதாகவும் நினைக்கிறேன்.......!

நான் அந்தப் புத்தகத்தை வாசித்திருக்கிறேன்.......அதன் பெயர் மறந்து விட்டது.......இனி உணவில் கொஞ்சம் வல்லாரை சேர்க்க வேண்டும்......!  😁 

அடுத்து எது குறித்து எழுத போகிறார்? - மனம் திறக்கும் பெருமாள் முருகன்

  • மு. நியாஸ் அகமது
  • பிபிசி தமிழ்
10 மார்ச் 2018
 

பெருமாள்முருகன்

''இப்போது எனக்கு நானே  தணிக்கை செய்துக் கொள்ளத் தொடங்கிவிட்டேன். அதனால்தான் என் கதையின் கருப்பொருளாக வெள்ளாட்டை தேர்ந்தெடுத்தேன்'' என்கிறார் எழுத்தாளர் பெருமாள்முருகன்.

கடந்த ஆண்டு எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய `பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை` நாவல் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் வெளியீட்டிற்கு வெள்ளிக்கிழமை டெல்லி வந்தவரை சந்தித்து உரையாடினோம்.

மனிதர்கள் குறித்து எழுத அச்சம்

பூனாச்சி நாவலின் நாயகன் ஒரு வெள்ளாடு. அந்த வெள்ளாட்டை சுற்றித்தான் கதை நகர்கிறது. கதையும் இங்கு நிகழ்வது அல்ல. அசுரர்கள் உலகில் நகர்வது. தொடர்ந்து அவரது படைப்புகளில் ஆடு முக்கியப் பாத்திரமாக இடம் பிடிக்கிறது.  இது குறித்து அவரிடம் கேட்டோம்,  அதற்கு அவர் பூனாச்சி நாவலின் முகவுரையில் குறிப்பிட்டுள்ளதையே விவரிக்கிறார், "கடவுள் குறித்து எழுத முடியாது. மனிதர்கள் குறித்து எழுத அச்சம். எனக்கு ஐந்து விலங்குகளை நன்கு தெரியும். அதில் பூனையும், நாயும் கவிதைகளுக்கானவை. மாடு, பன்றி ஆகியவற்றைப் பற்றி எழுதவே கூடாது. மிஞ்சியது ஆடு ஒன்றுதான். பிரச்சனை தராத அப்பிராணி ஆடு. அதனால்தான் அதனை தேர்ந்தெடுத்தேன். எனக்கு நானே தணிக்கை செய்துகொள்ளத் தொடங்கிவிட்டேன்" என்கிறார்.

இது மாதொருபாகன் சர்ச்சைகளுக்குப் பின் எடுத்த முடிவா...? இனி சாமான்ய மனிதர்கள் உங்கள் கதைகளில் இடம்பிடிக்க மாட்டார்களா என்ற நம் கேள்விக்கு, அவர்,  "அப்படியெல்லாம் இல்லை. கதை தமக்கான கதாபாத்திரங்களை அதுவாகத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறது. 2015 ஆம் ஆண்டு, கதைகளுக்கான 15 கரு என்னிடம் இருந்தது. ஆனால், 2017 ஆம் ஆண்டில் அதில் எந்தக் கருவும் எனக்கு உத்வேகம் தரவில்லை. நான் எனது படைப்புகளை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டேன். காலம்தான் என் கதைகளையும், கதாபாத்திரங்களையும் தீர்மானிக்கிறது" என்றார் அவர்.

 

பூனாச்சி

மாதொருபாகன் வெளிச்சம்

"எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்." - இது மாதொருபாகன் சர்ச்சைக்குப் பின் பெருமாள் முருகன் கூறியது. இப்போது எது உங்களை எழுத தூண்டியது? எது பெருமாள் முருகன் என்ற எழுத்தாளனை உயிர்த்தெழ வைத்தது? என்ற கேள்விக்கு, "நீதிமன்றத் தீர்ப்புதான்" என்கிறார் அவர்.

இது குறித்து மேலும் அவர், "தீர்ப்பின் இறுதி வரி - 'எழுத்தாளர் உயிர்த்தெழுந்து மீண்டும் எழுதட்டும்' என்று இருந்தது. அதை எனக்கான கட்டளையாகதான் கருதினேன். அந்தக் கட்டளையை புறந்தள்ளுவது, இனியும் பேசாமல் இருப்பது, அனைவருக்கும் அவநம்பிக்கையை அளிக்கும் என்று நினைத்தேன். அதனால்தான், மீண்டும் எழுத முடிவு செய்தேன்".  என்று தான் மீண்டும் எழுத முடிவு செய்ததன் பின்னணியை விளக்குகிறார் பெருமாள் முருகன்.

"மாதொருபாகன் சர்ச்சையால் என் மீது வெளிச்சம் பாய்ந்தது எனக்கு மகிழ்ச்சி தரவில்லை, என் படைப்பின் மூலமாக அடையாளப்பட்டிருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பேன்," என்று  அவர் மேலும் தெரிவித்தார்.

 

பூனாச்சி

யார் இந்த பூனாச்சி?

"தன் மக்களை எந்தக் கணத்திலும் எதிரியாகவும் விரோதியாகவும் துரோகியாகவும் ஆக்கிவிடும் வல்லமை படைத்தது ராசாங்கம்" என்ற வரி பூனாச்சி நாவலில் வருகிறது. அதுமட்டுமல்லாமல்,  அரசு என்ற நிறுவனம், அதில் மக்களின் நிலை போன்ற விஷயங்கள் இதில் உட்பொருளாக இருப்பதாகப் புரிந்துகொள்ள முடிகிறது. பூனாச்சி யார்? பெருமாள் முருகன்தானா அது? என்ற கேள்வியை முன் வைத்தபோது, "பூனாச்சி நான் அல்ல. நீங்கள் அரசு, அரசியலுடன் புரிந்துக் கொண்டால், அது உங்கள் புரிதல். எழுத்தாளன் தனது படைப்பை இவ்வாறுதான் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. நீங்கள் இவ்வாறாகப் பொருள் விளக்கம் கொள்வது உங்கள் சுதந்திரம்." என்கிறார்.

மேலும், பூனாச்சி குறித்து பெருமாள் முருகன் தனக்கும் தனது நண்பருக்கும் நடந்த உரையாடலை நினைவு கூர்கிறார், "நான் பூனாச்சியை எழுதி முடித்தவுடன், அதன் கையெழுத்துப் பிரதியை முதலில் என் நண்பருக்குதான் கொடுத்தேன். அதை படித்துபார்த்தவர், இதே கேள்வியைதான் கேட்டார். பூனாச்சி நீங்களா? இதில் ஏழு குட்டிகளை சுமந்த பூனாச்சி கல்லாகிவிடுவதாக விவரிக்கிறீர்கள். நீங்கள் மாதொருபாகன் வரை ஏழு நாவல்களை எழுதி இருக்கிறீர்கள். இது குறியீடா என்று கேட்டார். உண்மையில் அப்படியெல்லாம் இல்லை."

"நானும் கூச்ச சுபாவம் உடையவன். 15 வயது வரை அம்மாவின் முந்தானையைப் பிடித்து திரிந்தவன் போன்ற பூனாச்சியின் தன்மைகள் என்னிடம் இருக்கலாம். ஆனால், பூனாச்சி நானில்லை,"  என்று தெரிவித்தார்.

 

பெருமாள்முருகன்

பட மூலாதாரம்,FACEBOOK/பெருமாள்முருகன்

"எழுத்தாளர்கள் மீதான தாக்குதல்"

தொடர்ந்து எழுத்தாளர்கள் இப்போது தாக்கப்படுகிறார்கள்;  கொல்லப்படுகிறார்கள். யோசித்துப் பார்த்தால் இது உங்களிடமிருந்துதான் தொடங்கி இருக்கிறது இதனை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டபோது, "ஜனநாயக சமூகத்தில் எழுத்தாளர்களுக்கான சுதந்திரவெளி எவ்வளவு விரிவாகிறதோ, அந்த அளவிற்கு ஜனநாயகம் வலுவடையும். எழுத்தாளர்களுக்கான வெளி குறைவது, எழுத்தாளர்களைவிட ஜனநாயகத்திற்குத்தான் ஆபத்து," என்கிறார்.

"சாதாரணம் இங்கு அசாதாரணம் ஆகிறது"

ஒரு பேராசிரியராக உங்களுக்கும்,  மாணவர்களுக்குமான உறவு குறித்து உங்கள் மாணவர்கள் புத்தகம் தொகுத்து இருக்கிறார்கள். அதில் நெகிழ்ச்சியான சில சம்பவங்களை பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த ஆசிரிய - மாணவ உறவு எப்படி சாத்தியமானது? என்ற கேள்விக்கு, "சாதியத்தால் கட்டமைக்கப்பட்ட சமூகம் இது. எல்லா இடத்திலும் சாதியப் பாகுபாடு உள்ளது போல, கல்வி நிலையங்களிலும் உள்ளது. அப்படியான சூழலில், இயல்பான விஷயங்கள் இங்கு அசாதாரண உறவாகக் கருதப்படுகிறது. "முன் இருக்கையில் அமர வைப்பது போன்ற சாதாரண விஷயத்தைதான் நான் செய்தேன். அதைத்தான் அவர்கள் பெரிதாகக் குறிப்பிட்டு இருப்பார்கள்," என்கிறார்

"அடுத்த நாவல் என்ன?"

"அடுத்த நாவல் கழிமுகம். நகர வாழ்க்கையில் ஒரு மத்தியதர வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்தான் என் அடுத்த நாவலின் பொருள். இன்னும் அது முழு வடிவம் பெறவில்லை. அதற்கு, இன்னும் மூன்று மாதங்கள் ஆகலாம்," என்று தம் அடுத்த நாவல் குறித்துப் பகிர்ந்து கொண்டார் பெருமாள்முருகன்.

https://www.bbc.com/tamil/india-43351221

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ....அந்தப் புத்தகம் "மாதொருபாகன்"தான்.......இதைப் படிக்கும்போது தெரிகிறது அவர் ரொம்ப மனசொடிந்து போய் இருக்கிறார்...... எல்லாம் எழுத்தர்களுக்கிடையே இருக்கும் காழ்புணர்ச்சிதான்......ஒரு தரமான எழுத்தாளனை முடமாக்கி வைத்திருக்கிறது........! 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.