Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

21’ எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்; துரோகங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
21’ எதிர்பார்ப்புகள் ஏமாற்றங்கள்; துரோகங்கள்!

 

 

நஜீப் பின் கபூர்

“இங்கு அரசியல் மற்றும் கட்சி யாப்புக்கள்; தலைவர்கள்

தன்னலத்தை மையமாக வைத்தே உருவாக்கப்படுகின்றன”

பொதுவாக நாடுகளின் அரசியல் யாப்பு என்பது அந்த நாட்டு மக்களினதும் தேச நலனையும் மையமாக வைத்து வடிவமைக்கப்படுகின்ற வழிகாட்டலாகத்தான் இருக்க வேண்டும். இதற்குச் சமாந்திரமான இன்னும் பல விளக்கங்கள் சொல்லப்படலாம். அவை என்ன வார்த்தைகளில் உச்சரிக்கப்பட்டாலும் பொதுவான கருத்து இப்படியாகத்தான் அமைய முடியும்.

அரசர்கள் நம்மை ஆட்சி செய்த காலத்தில் அவர்களின் விருப்பு-வெறுப்புக்கு ஏற்றவாறு சட்டங்கள் நாட்டில் அமுலில் இருந்திருக்கலாம்.ஆனால் அவர்கள் கூட நாட்டு நலன்களையும் குடிகளின் நலன்களையும் மையமாக வைத்துத்தான் நாட்டை முன்னெடுத்திருக்கலாம்.நாம் படித்த வரலாற்றுப் புத்தகங்களில் தன்னலத்தையும் தனது குடும்ப நலன்களையும் மட்டுமே மையமாக வைத்து ஆட்சி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டு நாட்டில் எந்த அரசருக்கும் இருந்ததாக நம் காணவில்லை.அப்படி இருந்திருந்தால் உதாரணத்துக்கு அவர்களது நாமங்கள் இன்று நாட்டில் உதாரணமாக உச்சரிக்கப்பட்டிருக்கும்.

ஐரோப்பியர் நம்மை ஆட்சி செய்த காலங்களில் அவர்கள் தங்களது தேச நலன்களுடன் உள்நாட்டு மக்களின் சமூக நலன்களையும் கருத்தில் கொண்டுதான் இங்கு சட்டங்களை அமுல்படுத்தி இருக்கின்றார்கள்.இதற்கு டச்சு ரோமனியச் சட்டங்கள் குறிப்பாக பிரித்தானிய காலத்தில் ஆங்கிலச் சட்டங்களை கூறலாம். அதே நேரம் தமது மதங்களை குடியேற்ற நாடுகளில் பரப்புகின்ற நோக்கிலும் அவர்கள் சட்டத்துறையில் நெளிவு சுளிவுகளை ஏற்படுத்தி ஊக்குவித்தார்கள் என்பதையும் மறுக்க முடியாது.

ஆனால் முற்று முழுதாக தன்னலத்தையும் குடும்ப நலத்தையும் கருவாகக் கொண்டு உலகில் அரசியல் யாப்புக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று நாம் ஆபூர்வமாகத்தான் பார்க்க முடியும்.அதுவும் மன்னராட்சி காலத்தில்-நாடுகளில் தான் அது நடந்திருக்கும்.! நவீன சிந்தனையும் எண்ணக்கருவும் ஆதிக்கம் செலுத்துகின்ற இந்த காலத்தில் தன்னலத்தையும் குடும்ப நலத்தையும் மையமாக வைத்து ஆட்சியாளர்கள் யாப்புக்களை உருவாக்கி தேசத்தை பாதாளத்துக்கே இட்டுச் சென்ற வரலாறு நமது நாட்டில்தான் அமைந்திருந்ததை நாம் பார்க்க முடியும்.

இதற்கு நாம் தற்போதைய ஆட்சியாளர்களை மட்டும் குற்றம் சொல்லவில்லை. அத்துடன் நாங்கள் இங்கு செய்கின்ற விமர்சனம் கூட தற்போதைய அரசுக்கான கருத்துக்கள்-விமர்சனங்கள் என்று எவரும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தொப்பிகள் தலைக்குச் சரியாக சமைகின்றவர்கள் அதனை அவரவர் தலைகளில் மாட்டிக் கொண்டு அழகு பார்ப்பதிலும் நமக்கு ஆட்சேபனைகள் இல்லை. இந்தக் கட்டுரையில் தேசிய அரசியல் யாப்பு-கட்சி அரசியல் யாப்புக்கள்- செயல்பாடுகள் பற்றிப் பேசலாம் என்று எண்ணுகின்றோம்.யதார்த்தத்துக்கு இசைவான கருத்துகளைத்தான் நாம் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். எமது கருத்துக்கள் தேச சமூக நலன்களை மையப்படுத்தியவையே!

சோல்பரி அரசியல் யாப்புக்குப் பின்னர் 1972 இல் ஸ்ரீமா அம்மையார் காலத்தில் டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வாவினால் உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு தன்னலத்தையும் குடும்ப நலன்களை மட்டும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அரசியல் யாப்பு என்று இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் முதலில் குறை கண்ட ஒரு சிறு கூட்டம் நாட்டில் இருந்தது.அவர்கள் மேற்கத்தைய நலன்களுக்கு எதிரான இந்த யாப்பு, நாடு சோசலிசத்தை நோக்கி செல்கின்றது என்று ஜே.ஆர் தலைமையிலான வலதுசாரிகள் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வலி இருந்தது.

எனவே 1977 தேர்தலில் வெற்றி பெற்ற ஐ.தே.க.வின் ஜே.ஆர். ஜெயவர்தன தன்னலத்தையும் குடும்ப நலத்தையும் மையமாக வைத்து 1978ல் ஒரு அரசியல் யாப்பை இங்கு அறிமுகம் செய்தார்.தன்னலத்துக்கும் கட்சி நலனுக்குமான அரசியல் சிந்தனை இங்கிருந்துதான் ஆரம்பமாகின்றது என்பது நமது வாதம்.அடுத்து சர்வதேச அரசியலில் மேற்கு, கிழக்கு ஆதிக்கம் அல்லது வலது, இடது முகாம் இருப்பது போல இங்கும் 1956 எஸ்.டப்ளியு.ஆர்.டி. பண்டார நாயக்காவுக்குப்பின் வலது, இடது என்ற ஆதிக்கப் போட்டி உருவாகி இருந்தது.அது ஏதோ ஒரு வகையில் இன்றும் நாட்டில் ஓரளவிலேனும் இருக்கின்றது என்பது உண்மையே. ஜே.ஆர். விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து இதனை முன்னெடுக்கப் போன இடத்தில் இன்று ரணில் தனது கட்சியையே வங்குரோத்துக்கு கொண்டு செல்ல வேண்டி வந்தது.

1978 அரசியல் யாப்புப்படி காலம் முழுதும் தனது ஐ.தே. கட்சியை அதிகாரத்தில் வைத்திருக்க ஜே.ஆர். விரும்பினார். அது சில தசாப்தங்கள் வரை மட்டுமே நீடித்தது.தனக்குப் பின்னர் தனது மருமகன் ரணிலை அதிகாரத்துக்கு கொண்டுவரும் தன்னல முயற்சியும் ஜே.ஆரிடத்தில் இருந்தது.அதில் ரணிலின் பலயீனம் காரணமாக உச்சத்தை தொட்டு ஜனாதிபதி கதிரையில் இன்று வரை அவரால் அமர முடிய வில்லை.அது அவரது தனிப்பட்ட பலயீனம்.எனினும் இலங்கை அரசியலில் ஏதோ ஒருவகையில் அவர் இன்றுவரை நிலைத்திருக்கின்றார்.இது கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை.

நமது பார்வையில் இலங்கைய அரசியலில் ரணில் பாத்திரம் என்பது துணை நடிகர், கோமாளி, சகுனி, வில்லன் என்று வந்து இன்று சதிகாரன்-துரோகி என்ற வகையில் அமைந்து இருக்கின்றது.ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் யாப்பை எடுத்துப் பாருங்கள், கட்சியின் இன்றைய அழிவுக்கு அடிப்படை காரணம் தன்னலத்தையும் குடும்ப நலனையும் மையப்படுத்தி ரணில் ஐ.தே.க.வை வழிநடத்தியதே காரணமாக இருந்திருக்கிறது.இதே போன்றுதான் இன்று ஹக்கீம் வைத்திருக்கின்ற மு.கா. அரசியல் யாப்பும்.

பெரும்பாலும் இங்கு கட்சி அரசியல் யாப்புகள் என்பது கொள்கை ரீதியிலானதோ மக்களின்-தொண்டர்களின் எதிர்பார்ப்புக்களை மையப்படுத்தியவையோ அல்ல. அவை முற்றிலும் அதிகாரத்தில் உள்ள கட்சித் தலைவரினதும் பிள்ளைகளினதும் எதிர்காலத்தை அல்லது அவர்கள் சார்ந்தவர்கள் நலன்களை மையமாகக் கொண்டே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன- செயல்படுகின்றன.இது தனிநபர் வழிபாட்டுக்கான ஏற்பாடுகளாகத்தான் இருக்கின்றன.மொட்டுக் கட்சி என்பது ராஜபக்ஸக்களின் எதிர்கால நலன்களைப் பாதுகாப்பதற்காகவும், ஐக்கிய தேசிய கட்சி அரசியல் யாப்பு என்பது ரணிலினதும் அவரது குடும்ப-சகாக்களின் நலன்களை இலக்காகவும் கொண்டது.ரணில் பிரதமராக பதவியேற்றது தொடர்பாக அவர் சார்ந்திருந்த கட்சிக்குக் கூட கடைசி நேரம் வரை சொல்லப்படவில்லை. இன்று வரை அதற்கான அனுமதிகூட கட்சியிடம் பெறப்படவில்லை என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.? இவை எல்லாம் ஒரு கட்சியா என்று நாம் சமூகத்திடம் கேட்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் அரசியல் செய்கின்ற தமிழ் தரப்புகளிடத்திலும் சமூக நலன் சார்ந்த புரட்சிகரமான அரசியல் யாப்புக்கள் இல்லை என்றுதான் நாம் நினைக்கின்றோம்.இதனால்தான் டசன் கணக்கான அரசியல் குழுக்களை வைத்து அவர்கள் கூட்டு அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள்.முழுத் தமிழ் தரப்புக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரக் கூடிய அரசியல் சக்தியொன்று காலத்தின் தேவை என்பதும் நமது சிபார்சு.பிரிவினையில் ஐக்கியப்பட்ட கட்சிகைளை வைத்து இன நலனுக்கான போராட்டங்கள் பலயீனப்பட்ட ஒரு போக்குத்தான் அங்கு தெரிகின்றது.மலையகத்திலும் ஏறக்குறைய அதே போக்குத்தான்.பேரினக் கட்சிகளிலும் இதே குறைபாடுகள் இருந்தாலும் யார் அதிகாரத்துக்கு வந்தாலும் போரின் நலன்களுக்கு ஆபத்துகள் கிடையாது.அதனை அரசும் அதிகாரிகளும் படையினரும் தேரர்களும் பார்த்துக் கொள்வார்கள்.

இப்போது அனைவரும் பேசுகின்ற 21 பற்றிப் பார்ப்போம். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெற்றதும் 19- அரசியல் யாப்பை வைத்துக் கொண்டு தனக்கு ஏதும் பண்ண முடியாது.தான் கைவீசி காரியம் பார்க்க வேண்டும்.எனவே ஜே.ஆரையும் விஞ்சிய அதிகாரங்கள் வேண்டும் என்று கேட்க, அதிகாரத்தை 19தால் குறைத்தவர்களே 20க்கும் கைகளைத் தூக்கி அதற்கான நியாயங்களைச் சொல்லி ஜனாதிபதி ஜீ.ஆருக்கு அதிகாரங்களை அள்ளிக் கொடுத்தார்கள்.இன்று அவர்களே மிகப் பெரிய தப்புப் பண்ணிவிட்டோம்.மீண்டும் 19 பிளஷ் என்று அதனை மாற்றி அமைக்க வேண்டும். 21 அவசியம் என்று பல்டி அடித்து வாதிடுகின்றார்கள்.சிலர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படக்கூடாது எனவும் வாதிட்டுக் கொண்டு வருகின்றார்கள்.பசில் இலங்கை அரசியலில் இருக்க வேண்டும், அவரை இலக்குவைத்து இந்த 21 வருகின்றது என்று எதிர்க்கின்றார்கள்.

ஏப்ரல் 9 நிகழ்வுக்குப் பின்னர் ஆம் எனது அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் போவது நல்லது என்று பேசிய ஜனாதிபதி ஜீ.ஆர். சர்வதே ஊடகங்களுக்கு பேசுகின்றபோது அதிகாரம் இல்லாமல் தான் எப்படி நாட்டை ஆட்சி செய்வது என்று முரணாக கதைத்தும் வருகின்றார்.இதற்கிடையில் 21 பற்றி பெரிதாக கதை விட்ட நீதி அமைச்சர், இன்று வீரியம் குறைந்த 21 ஐத்தான் பிரசவிக்க முயல்கின்றார்.எப்படியும் இது ஒரு குறைபாடுள்ள குழந்தையாகத்தான் பிறக்க வாய்ப்புக்கள் என்பது நமது நம்பிக்கை.

21 இன்று வருகின்றது, நாளை வருகின்றது என்று மே 9ம் திகதி நிகழ்வுக்குப் பின்னர் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.ஆனால் இது சொல்கின்ற வேகத்திலோ உருவத்திலோ உடனடியாக வர வாய்ப்புக்கள் இல்லை என்பதனை நாம் அடித்துச் சொல்லி இருந்தோம்.அப்படி வந்தாலும் ராஜபக்ஸ நலன்களுக்கு அதில் பெரிய சேதங்கள் இருக்காது.அத்துடன் அதன் தலைவிதியைப் பணம்தான் தீர்மானிக்கும் என்றும் சொன்னோம்.அது மிகவும் குறைந்தளவு திருத்தங்களுடன்தான் இப்போது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

இதனால் இப்போது எல்லாம் ஓகே என்பதும் கிடையாது.அது நாடாளுமன்றத்தில் வரும் போது ஏலத்தில் விற்கப்படும் சொத்துக்கள் போல் பணப் பலத்தில்தான் கரை சேர வேண்டி இருக்கும்.இன்னும் அதனைப் பலயீனப்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன.21க்கு எதிராக 76 வாக்குகள் இருந்தால் அதனைத் தூக்கி குப்பையில் வீசிவிடலாம்.அதனைக் கரைசேர்ப்பதாக இருந்தால் 156 வாக்குகள் வேண்டும். மேலும் நீதிமன்றம் முட்டுக்கட்டைகளுக்கும் இன்னும் இடமிருக்கின்றது.

இன்று நாகானந்த கொடித்துவக்கு முன்வைத்துள்ள முறைப்பாட்டின்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்காது கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தலில் நின்றார்.தான் அமெரிக்கப் பிரஜா உரிமையை ரத்துச் செய்ததற்கான எந்த ஆவணங்களையும் அப்போது அவர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கவில்லை என்பதனை சத்தியக் கடதாசி மூலம் அதன் உறுப்பினர் பேராசிரியர் ரத்னஜீவன் ஹூலும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

இதனால் கோட்டா இலங்கை அரசியல் யாப்பை துச்சமாக மதித்துத்தான் அந்தத் தேர்தலில் நின்று வெற்றி பெற்றிருக்கின்றார் என்ற சந்தேகம் வலுக்கின்றது.அன்று இது பற்றி எவரும் கேள்வி எழுப்பவில்லை என்றாலும் ஒரு அச்சத்தில் தனது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஸவையும் ஒரு டம்மியாக அங்கு நிறுத்தி கடைசி நேரத்தில் அவரை விலக்கிக் கொண்டார்கள்.இது அச்சம் காரணமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஏற்பாடாக இருந்திருக்க வேண்டும்.

அன்று இருந்த அரசியல் பின்னணியில் கோட்டாவுக்கு எதிராக எவராவது நீதிமன்றம் போய் வம்பு பண்ணி இருந்தால் கடும் போக்கு பௌத்த தேரர்கள் பெரும் கலாட்டா பண்ணி இருப்பார்கள் என்பதும் தெரிந்ததே.நாட்டில் பெரும் ஹீரோவாக பார்க்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழு ஹீரோ மஹிந்த தேசப்பிரிய இதனால் இன்று சீரோவாகப் போகின்றாறோ என்னவோ தெரியாது.பொறுத்துப் பார்ப்போம்.மொத்தத்தில் இந்த நாட்டில் அரசியல் யாப்புக்களும் கட்சி யாப்புக்களும் கேலிக் கூத்தாகி இருக்கின்றன.

அத்துடன் ஒரு யாப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற விடயங்கள் 1978 லும், அதன் பின்னர் வந்த 20 வது திருத்தத்திலும் வரப்போவதாக சொல்லப்படுகின்ற 21லும் நம்பகத்தன்மையற்ற ஒரு நிலை தெரிகின்றது.மேலும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கூட்டணி சமைத்துத் திட்டமிட்டு நாட்டுக்கும் குடிகளுக்கும் நிறையவே துரோகங்களைச் செய்து அவர்கள் பெரும் சொத்துக்களை சம்பாதித்திருக்கின்றனர்.இதனால் நாடு வங்குரோத்து நிலைக்கு வந்து விட்டது.

தன்னலத்துக்காகத்தான் இங்கு யாப்புகள் வடிவமைக்கப்படுகின்றன என நாம் சாடுகின்றோம்.அந்த யாப்பு கூடப் பரவலாக மீறப்பட்டு வந்திருக்கின்றன. யாப்பை கண்டு கொள்ளாமலே அரச தலைவர்கள் தான்தோன்றித்தனமாக காரியம் பார்த்து வந்திருக்கின்றனர் என்பதற்கு நிறையவே உதாரணங்களை இங்கு அவதானிக்க முடியும்.அரச சுற்று நிருபங்களுக்கும் அதே நிலைதான் நடந்திருக்கின்றன என்பதனை கோப் விசாரணைகளில் பார்க்க முடியும்.இதனால் எப்படியோ எதிர்வரும் நாட்களில் தெருக்களில் மக்கள் செத்து மடிகின்ற காட்சிகள்தான் நமக்குப் பார்க்க எஞ்சி இருக்கின்றது.

https://thinakkural.lk/article/186651

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி நுணா........!  😁

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.