Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திண்டுக்கல் நத்தம் அருகே எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் - காரணம் என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் நத்தம் அருகே எறும்புகளுக்கு பயந்து ஊரை காலி செய்யும் மக்கள் - காரணம் என்ன?

6 மணி நேரங்களுக்கு முன்னர்
 

எறும்புகளுக்குப் பயந்து ஊரை காலி செய்யும் மக்கள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மாதிரி படம்

(இந்தியா, இலங்கையில் இன்று (13.08.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நத்தம் அருகே கரந்தமலை பகுதியில் பரவியுள்ள வினோத எறும்புகள் உயிரினங்களைக் கொல்வதால் மக்கள் பீதியில் உள்ளதாகவும் மலை அடிவார கிராம மக்கள் வீடுகளைக் காலி செய்து வேறு ஊர்களுக்கு குடிபெயர்வதாகவும் தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியின்படி, கரந்தமலையைச் சுற்றி உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டுப்பட்டி, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய வகை எறும்புகள் பரவின.

நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அவை பரவின. இப்போது கிராமப்பகுதிகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இவை கண்களை மட்டுமே பதம் பார்க்கின்றன. உடலில் ஏறுவதால் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் காட்டிலுள்ள பாம்பு, முயல் போன்ற காட்டுயிர்கள் இறந்துவிட்டதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

 

காட்டெருது போன்ற பெரிய காட்டுயிர்களின் கன்றுகளையும் இந்த எறும்புகள் தாக்கி அழிப்பதாகக் கூறுகின்றனர். மேலும், விவசாயிகளின் கால்நடைகளுடைய கன்றுகளையும் இவை கொல்வதாகவும் எறும்புகள் பரவியுள்ள மலையடிவார விவசாய நிலங்களில் வசிக்கும் விவசாயிகள் வீடுகளைக் காலி செய்துவிட்டு வேறு பகுதிகளுக்குக் குடி பெயர்வதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.

"இது புதுவகையான எறும்பாக உள்ளது. இதுபோன்ற வகை எறும்புகளை இதுவரை நாங்களே கண்டதில்லை. இந்த வகை எறும்புகள் அசுர வேகத்தில் பரவி வருகின்றன. இவற்றை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று எங்களுக்கே தெரியவில்லை. இதனால், காட்டுயிர்கள் அழிகின்றன" என்று கரந்தமலை வனத்துறை வனவர் முத்துச்சாமி கூறியதாகவும் தினமலர் குறிப்பிட்டுளது.

 

1px transparent line

 

1px transparent line

நத்தம் கால்நடை மருத்துவர் சங்கமுத்து "இப்படியொரு எறும்பு இருப்பது தெரியவில்லை. இதுகுறித்து ஆய்வு செய்யப்படும்" என்று கூறியதாக தினமலர் செய்தி கூறுகிறது.

இந்த எறும்புகளின் மீதான அச்சத்தில், அடிவாரத்தில் விவசாயம் செய்து வாரும் பல குடும்பங்கள் வீடுகளைக் காலி செய்து வேறு பகுதிகளுக்குச் சென்றுவிட்டதாகவும் தினமலர் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி குறித்த விவாதம் எப்போது? - காங்கிரஸ் கேள்வி

தேர்தல் இலவசங்களுக்கு எதிரான கருத்துகளுக்காக பிரதமர் நரேந்திர மோதியை விமர்சித்துள்ள காங்கிரஸ், 'பெருநிறுவனங்களின் வாராக்கடன் தள்ளுபடி, பெருநிறுவன வரி குறைப்பு ஆகியவை குறித்து விவாதிப்பது எப்போது?' என்று கேள்வியெழுப்பியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, தேர்தலில் இலவசங்களை அறிவித்து, வாக்குகளை அறுவடை செய்யும் கலாசாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு ஆபத்தானது என்று பிரதமர் மோதி கடந்த மாதம் தெரிவித்தார். அதோடு பல்வேறு தருணங்களில் தேர்தல் இலவசங்களுக்கு எதிராக அவர் பேசி வருகிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கௌரவ் வல்லப் வெள்ளிக்கிழமையன்று, "கடந்த 5 ஆண்டுகளில் 9.92 லட்சம் கோடி வங்கி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்த வாராக்கடன் 7.27 லட்சம் கோடி. இந்த கடனில் 1.03 லட்சம் கோடி மீட்கப்பட்டதாக மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 20% வரை மீட்கப்படலாம் என்றாலும், 5.8 லட்சம் கோடி வாராக்கடன் மீட்கப்படாமல் தான் இருக்கும்.

 

பிரதமர் நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

அந்த வகையில், பெருநிறுவனங்களுக்கு வங்கிகள் 'இலவசமாக' வழங்கியுள்ள 5.8 லட்சம் கோடி ரூபாய் குறித்து எப்போது விவாதிப்பது? பெருநிறுவன வரி குறைப்பால் 1.45 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்து எப்போது விவாதிக்கலாம்?

உங்களுடைய பணக்கார நண்பர்களுக்கு வரி குறைப்பு, கடன் தள்ளுபடி போன்ற 'இலவசங்கள்' வழங்கப்படும்போது, ஏழை மக்களுக்குக் குறைந்த மதிப்பிலான நிதி அல்லது இதர உதவிகள் இலவசமாக வழங்கப்படக்கூடாதா?

2022ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு, விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், புல்லட் ரயில் இயக்கம், நாட்டின் பொருளாதார மதிப்பு 398 லட்சம் கோடியாக அதிகரிக்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பிரதமர் மோதி தலைமையிலான அரசு ஏற்கெனவே அளித்திருந்தது. இந்தப் பொய் வாக்குறுதிகள் கலாசாரம் எப்போது முடிவுக்கு வரும்?" எனக் கேள்வியெழுப்பினார்.

நண்பரின் கருணைக் கொலையைத் தடுக்க நீதிமன்றத்தை நாடிய தோழி

தீவிர அரிய வகை நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து செல்லத் திட்டமிட்டுள்ள நிலையில், அவருக்கு விசா வழங்கக்கூடாது என்று அவருடைய தோழி நீதிமன்றத்தை நாடியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, டெல்லியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஸ்விட்சர்லாந்தில் மருத்துவ சிகிச்சைக்குச் செல்வதாகக் கூறி விசா பெற்றுள்ளார். ஆனால், அவர் ஸ்விட்சர்லாந்தில் தன்னை கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்ளவே செல்கிறார் எனக் கூறி அவருடைய தோழி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

 

கருணைக் கொலை

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மாதிரி படம்

அந்த மனுவில், "எனது நண்பருக்கு மையால்ஜிக் என்செஃபாலோமயலிட்டிஸ் என்ற நோய் பாதிப்புள்ளது. இந்த நோய் காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு முதல் அவர் படுக்கை நோயாளியாக மாறியுள்ளார். அவரால் வீட்டிற்குள் கூட சில அடிகள் மட்டுமே நடக்க முடியும். இதனால் விரக்தியில் உள்ள என் நண்பர், ஸ்விட்சர்லாந்தில் கருணைக் கொலைக்கு உட்படுத்திக் கொள்வதற்காக பயணப்படத் திட்டமிட்டுள்ளார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளார். ஆனால், இங்கு தூதரகத்தில் விசாவுக்கு விண்ணப்பிக்கையில் மருத்துவ சிகிச்சைக்காகச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

என் நண்பருக்கு வயதான பெற்றோர் உள்ளனர். அவர்கள் மகனின் முடிவை நினைத்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர். என் நண்பர் கொரோனாவுக்கு முன்பு வரை எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன் பின்னர், வீட்டிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிகிச்சை செலவுகளை மேற்கொள்வதில் எவ்வித பண நெருக்கடியும் இல்லை.

ஆகையால், அவர் இந்தியாவிலேயே மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்திக்கொண்டு, உடல்நிலையை முன்னேற்ற முயற்சி செய்ய வேண்டும் என்று பெற்றோர், நண்பர்கள் விரும்புகிறோம். ஆகையால், அவரது விசாவுக்கு குடியேற்று அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது எனக் கோருகிறேன்," என்று கோரியுள்ளார். https://www.bbc.com/tamil/india-62531044

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கால்நடைகளின் கண்களை குறி வைக்கும் எறும்புகள்: அச்சத்தில் திணறும் திண்டுக்கல் கிராமம் - கள ஆய்வு

  • பிரசன்னா வெங்கடேஷ் & க.சுபகுணம்
  • ㅤㅤ
3 மணி நேரங்களுக்கு முன்னர்
 

யெல்லோ கிரேஸி எறும்புகள்

பட மூலாதாரம்,GOPALA KRISHNAN

 

படக்குறிப்பு,

தனது கூட்டின் முட்டைகளைச் சுமந்து செல்லும் யெல்லோ கிரேஸி எறும்புகள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரந்தமலை காட்டுப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.

காட்டுப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட கிராமத்தினரின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளைப் பராமரிப்பது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவத் தொடங்கின.

ஆண்டுகள் செல்லச் செல்ல மலையின் மேல் பகுதியிலிருந்த எறும்புகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. கிராமங்களில் இருக்கக்கூடிய கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து இந்த எறும்புகள் தாக்குவதாகவும் அதனால் கால்நடைகள் கண் பார்வையை இழந்து உயிரிழந்து விடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் காட்டுப்பகுதிகளில் இருக்கக்கூடிய காட்டெருது, பாம்பு, முயல் உள்ளிட்ட பல காட்டுயிர்களும் இந்த எறும்புகளின் தாக்குதலால் தொடர்ச்சியாக உயிரிழப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் கிராம மக்களுக்கு தோள்கள் சிவந்து போகுதல், தோல் வீக்கம், கடுமையான அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இதனால் மேற்கண்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினம்

அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்சன் தர்மராஜனிடம் இந்த எறும்பு வகை குறித்துக் கேட்டோம்.

 

1px transparent line

 

1px transparent line

"இந்த எறும்புகளின் பெயர் யெல்லோ கிரேஸி ஆன்ட்ஸ் (Yellow Crazy Ants). இவை எதற்குமே அஞ்சாது. இந்த எறும்புகள், மனிதர்கள் இல்லாத நிலப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தான் இவை அதிகமாகப் பெருகுகின்றன. சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பான ஐயூசிஎன் (IUCN) உலகின் முதல் 100 ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பட்டியலில் இது உள்ளது," என்றார்.

சுமார் 20 கிமீ பரப்பளவு கொண்ட கரந்தமலை அடிவாரம் முழுவதும் தற்போது இந்த எறும்புகள் பரவியுள்ளன. இதனால் கரந்தமலை காட்டுப் பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கால்நடைத் துறை கிராம மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தற்போது மலை அடிவாரத்தில் கால்நடைகளை வைத்துப் பராமரித்து வந்த சிலர் இந்த எறும்புகளின் தொடர் தாக்குதலால் அச்சமடைந்து காலி செய்து ஊருக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை தங்களது விளைநிலங்களில் மணிக்கு ஒரு முறை தெளித்து வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

தற்போது மலமலவெனப் பரவி வரும் இந்த எறும்புகளுக்கு காட்டுயிர்கள் மற்றும் கால்நடைகள் பலியாவதால், இந்த எறும்புகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறை மற்றும் கால்நடை துறையிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த எறும்புகளால் காட்டு எல்லையிலுள்ள எங்களது தோட்டத்திற்குச் சென்று எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்கிறார் பாதிக்கப்பட்ட விவசாயி செல்வம். இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது, "தற்போது எனக்கு 55 வயதாகிறது. இந்த மாதிரியான எறும்பை நான் இதுவரை பார்த்ததில்லை. ஆடு, மாடு, கோழி, கோழிக்குஞ்சுகள் என்று எதையும் இந்த எறும்புகள் விட்டு வைக்கவில்லை.

இந்த எறும்புகளால் எங்கள் அனைத்து கால்நடைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன. காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றாலே கால் முழுவதும் இந்த எறும்புகள் மேலேறி ஊருகின்றன. இதனால் மிகுந்த எரிச்சலுடன் அங்கங்கே கொப்பளம் ஏற்படுகிறது. தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் தண்ணீர் முழுவதும் இந்த எறும்புகள் நிரம்பியிருக்கின்றன. என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை," என்றார்.

 

யெல்லோ கிரேஸி எறும்புகள்

 

1px transparent line

யெல்லோ கிரேஸி எறும்புகள்

"இந்த எறும்புகள் மனித நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தான் பெரும்பாலும் பெருகுகின்றன. ஒரு தோட்டத்து வீடு இருக்கிறதென்றால், அது பூட்டப்பட்டே இருக்கும்போது அங்கு இந்த எறும்புகள் பெரியளவில் காணப்படாது. ஆனால், எப்போது மனித நடமாட்டம் அங்கு தொடங்குகிறதோ அப்போது அவையும் அங்கு வரத் தொடங்குகின்றன," என்கிறார் அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்ஷன் தர்மராஜன்.

"சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு அமைப்பான ஐயூசிஎன் (IUCN) இந்த எறும்பு வகையை உலகின் முதல் 100 ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் (Most notorious invasive species) பட்டியலில் பெயரிட்டுள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

இந்த வகை எறும்புகள் அனைத்து வகையான உயிரினங்களையும் உணவாகக் கொள்கின்றன. மற்ற வகையைச் சேர்ந்த எறும்புகளைக் கூட இவை கொல்லுகின்றன. ஏதேனும் இறந்த உயிரினங்களின் சடலங்களைப் பார்த்தால் அவற்றையும் சாப்பிடும். நம் கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், அந்தக் காயங்களிலும் இந்தப் பூச்சிகள் வந்து அரித்துச் சாப்பிடத் தொடங்கும். இவற்றுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு என்று எதுவுமே கிடையாது. ஆங்காங்கே அவற்றின் போக்கில் உலவும்," என்று கூறுகிறார்.

மேலும், அஃபிட்ஸ் எனப்படும் பூச்சி வகையோடு இவை இணைத்திற உறவு (Symbiotic relationship) கொண்டுள்ளன என்று கூறிய பிரியதர்ஷன் தர்மராஜன், "அஃபிட்ஸ் பூச்சிகளில் கிடைக்கும் பால் போன்ற திரவத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்தப் பூச்சிகள் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கக்கூடியவை. இவற்றை அதிகளவில் கொண்டு வந்து செடிகளின் மீது எறும்புகள் வைத்து உணவளிப்பது, பாதுகாப்பு கொடுப்பது போன்றவற்றை எறும்புகள் செய்கின்றன.

இந்த யெல்லோ கிரேஸி எறும்புகள் (Yellow Crazy Ants) எதற்குமே அஞ்சாது. அதனால் தான் இவற்றுக்கு கிரேஸி என்ற பெயர் அளிக்கப்பட்டது. இவை ஃபார்மிக் அமிலத்தை கக்குகின்றன. கூட்டம் கூட்டமாக வந்து இரையைத் தாக்குவது இவற்றின் வழக்கம்," என்றார்.

 

யெல்லோ கிரேஸி எறும்புகள்

பட மூலாதாரம்,GOPALA KRISHNAN

இந்த எறும்புகள் பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகள், புதர் காடுகள், நதியோரங்கள், விவசாய நிலங்கள், தோட்டங்களில் காணப்படுகின்றன என்று ஆன் எ டிரையல் ஆஃப் ஆன்ட்ஸ் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் சார் வாழ்வியல், மரம்சார் வாழ்வியல் என்று இரண்டிலுமே அவை அபாரமான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இந்த எறும்புகளின் காலனி மிகப்பெரிய அளவில் இருக்கும்.

ஒரு காலனியில் ஆயிரக்கணக்கான எறும்புகள் இருக்கக்கூடும் என்பதால், அவற்றின் வாழ்விடப் பரப்பும் மிகப்பெரிதாக இருக்கும். அந்தப் பகுதியை அவை மிகுந்த ஆக்ரோஷத்தோடு இவை பாதுகாக்கின்றன. தங்களுடைய வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காக, இந்த எறும்புகளில் ஒரு பகுதி பகல் மற்றும் இரவு என இரண்டு நேரங்களிலும் செயல்படுகின்றன.

6.5 முதல் 7மிமீ வரையிலான நீளத்தில் இருக்கக்கூடிய இவை மிக வேகமாகச் செயல்படக் கூடியதாகவும் மிக ஆபத்தானவையாகவும் அறியப்படுவதாக ஆன் எ டிரையல் ஆஃப் ஆன்ட்ஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு உயிரினமாக அறியப்படும் இவை, மேற்குத்தொடர்ச்சி மலையில் மனித நடமாட்டம் உள்ள பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. மனித நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய காட்டு நிலங்களின் எல்லையோரங்களில் இவை அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

 

1px transparent line

ஆட்டுக்குட்டிகள் கண் பார்வையை இழந்துவிட்டன

கரந்தமலை காட்டுப்பகுதிக்குள் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இந்த எறும்புகளால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் கரந்தமலை கிராமத்தைச் சார்ந்த விவசாயி அழகு.

"கரந்தமலை காட்டுப்பகுதியில் உள்ள காட்டெருது, முயல், பாம்பு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் இந்த எறும்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த எறும்பு எங்களின் கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களை மட்டுமே குறி வைத்துக் கடிக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பார்வை பறிபோய், அதனால் நீர், உணவு உட்கொள்ள முடியாமல் பரிதாபமாக இறந்து விடுகின்றன. வனத்துறை அதிகாரிகள் இதுவரை எங்கள் பகுதியில் நேரடியாக வந்து முறையாக ஆய்வு மேற்கொண்டு எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை," என்கிறார் அழகு.

 

யெல்லோ கிரேஸி எறும்புகள்

 

படக்குறிப்பு,

யெல்லோ கிரேஸி எறும்புகள் தங்களுடைய கால்நடைகளின் கண்களைத் தாக்குவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்

பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட அனைத்து காட்டுப்பகுதிகளிலும் இந்த எறும்பு பரவியுள்ளதாகக் கூறுகிறார் நாகம்மாள்.

"வேலாயுதம்பட்டி மலை அடிவாரத்தில் நான் வசித்து வந்தேன். இந்த எறும்புகளால் என்னுடைய ஆடுகள் இறந்து விட்டன. மேலும் மூன்று ஆட்டு குட்டிகளுக்குத் தற்போது கண் பார்வை பறிபோய்விட்டது. என்னுடைய வீடு முழுவதுமே இந்த எறும்புகள் சூழ்ந்துவிட்ட காரணத்தால் வீட்டைக் காலி செய்துவிட்டு ஊருக்குள் குடி வந்திருக்கிறேன்.

இந்த எறும்புகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாளுக்கு நாள் இந்த எறும்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே வனத்துறையினர் உடனடியாக இதைக் கவனத்தில் கொண்டு எறும்புகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

 

1px transparent line

 

1px transparent line

மக்களுக்கு தோல்வீக்கம், அரிப்பு, கொப்பளங்கள்

மனிதர்களை இந்த எறும்புகள் கடித்தால், தோல்வீக்கம், கடுமையான அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகிறது என்கிறார் கல்லூரி மாணவி ஆஷிகா.

பிபிசி தமிழிடம் பேசிய ஆஷிகா, "சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டின் மேல் பகுதியில் இருந்த இந்த எறும்புகள் இப்போது காடு முழுவதும் பரவி மலை அடிவாரத்திற்கும் படையெடுத்துள்ளன. வெயில் அடிக்கும்போது இந்த எறும்புகளின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது.

ஆனால், மழைக்காலத்தில் ஊர் முழுவதுமே பரவி விடுகிறது. மேய்ச்சலுக்குச் செல்லும் மக்களின் கால்களைக் கடிக்கும் இந்த எறும்புகளால் தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எறும்புகளை முற்றிலும் கட்டுப்படுத்த வனத்துறையும் கால்நடை துறையும் இங்கு சிறப்பு முகாம் அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

இந்த எறும்புகள் சாதாரண எறும்புகள் போலத்தான் தெரிகின்றன என்றும் இந்த எறும்புகளால் தான் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நத்தம் கால்நடை மருத்துவர் சிங்கமுத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசியவர், "20 கிமீ பரப்பளவு கொண்ட கரந்தமலை முழுவதுமே இந்த எறும்புகள் தற்போது பரவியுள்ளன. எதனால் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவியுள்ளன என்பது குறித்துத் தெரியவில்லை. மேலும் இந்த எறும்புகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் புரியவில்லை.

 

யெல்லோ கிரேஸி எறும்புகள்

 

படக்குறிப்பு,

பாம்பு ஒன்றை மொய்த்துக் கொண்டிருக்கும் எறும்புகள்

ஆனால் இந்த எறும்புகளின் தாக்குதல் காரணமாகத்தான் காட்டுயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது," என்றவர், தற்போதைய சூழலில் காட்டுப் பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று அனைத்து கிராம மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வனத்துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட கிராமப் பகுதிகளுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இதுகுறித்து விளக்கமளிக்க முடியும் என்று பிபிசி தமிழிடம் பேசிய சிறுமலை வன அலுவலர் பிரபு தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்

இந்தப் பிரச்னை இவ்வளவு தீவிரமானதற்கு, காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பயமாதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் முனைவர்.பிரியதர்ஷன் தர்மராஜன்.

அவர், "பூச்சிகள் உடலில் வெப்பத்தை உருவாக்க முடியாத உயிரின வகைப்பாட்டைச் சேர்ந்தவை. ஆகவே அவற்றின் உடல் வெப்பநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அவை வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். உடல்வெப்பநிலை அதிகரிக்கும்போது அவற்றின் வளர்சிதை மாற்றங்களும் அதிகரிக்கின்றன," என்கிறார்.

வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும்போது அவை மிகத் தீவிரமாக அதிகளவில் சாப்பிடுகின்றன. இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் இதை உறுதி செய்வதற்கு நம்மிடம் போதுமான தரவுகள் இப்போது இல்லை. சமீபத்திய பருவநிலைகள் அவற்றின் இந்தப் பெருக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும். இந்த எறும்புகள் பெரும் படையெடுப்பைச் செய்திருக்ககூடிய பகுதியின் பருவநிலை குறித்த தரவுகளைச் சேகரித்து விரிவாகப் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும் என்கிறார் பிரியதர்ஷன் தர்மராஜன். https://www.bbc.com/tamil/india-62554041

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சள் எறும்புகள்: "அலட்சியம் காட்டினால் அழிவு நிச்சயம்" - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

  • பிரசன்னா வெங்கடேஷ்
  • பிபிசி தமிழுக்காக
2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

மஞ்சள் எறும்புகள்

பட மூலாதாரம்,DR PRONOY BAIDYA

மஞ்சள் எறும்புகள் ஏற்படுத்தும் தாக்கத்தை அலட்சியப்படுத்தினால் அது ஊர்ந்து செல்லும் பகுதிகளின் சுற்றுச்சுழலை முழுமையாக அழிப்பதுடன் அங்குள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையலாம் என்று சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனமான 'அசோகா' தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கரந்தமலை வனப்பகுதியில் பரவலாக இந்த மஞ்சள் எறும்புகள் காணப்படுகின்றன. அவை குறித்த விரிவான கட்டுரையை சமீபத்தில் பிபிசி தமிழ் வெளியிட்டிருந்தது. அதில் மஞ்சள் எறும்புகளின் திடீர் ஆதிக்கத்தால் சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரந்தமலை காட்டுப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

மேலும், அந்த மக்கள் பராமரிக்கும் கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து மஞ்சள் எறும்புகள் தாக்குவதாகவும் அதனால் அவை கண் பார்வையை இழந்து உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாகவும் பிபிசி தமிழில் செய்தி வெளியாகியிருந்தது.

இத்துடன், மஞ்சள் எறும்புகளின் தாக்கத்தால் காட்டுப்பகுதிகளில் காணப்படும் காட்டெருது, பாம்பு, முயல் உள்ளிட்ட பல கானுயிர்களும் தொடர்ச்சியாக உயிரிழப்பதாக அங்குள்ள கிராமவாசிகள் கூறியுள்ளனர்.

 

இந்த நிலையில், பெங்களூரில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்சன் தர்மராஜன் தலைமையில் டாக்டர். ரஞ்சித், சஹானாஸ்ரீ, ஃபெமி இ பென்னி குழுவினர் கரந்தமலை கிராம பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் அவர் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளனர். அதனஅ முக்கிய அம்சங்களை இங்கே வழங்குகிறோம்.

 

Presentational grey line

 

Presentational grey line

  • மஞ்சள் எறும்பு வகை, உலகின் ஆபத்தான 'நூறு அந்நிய உயிரினங்கள் ஒன்று' என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மஞ்சள் எரும்பு அனைத்துண்ணிகள் (omnivores) என்பதால் இவை ஊடுருவுவது உள்ளூர் உயிரினங்கள், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.
 

மஞ்சள் எறும்புகள்

 

படக்குறிப்பு,

மஞ்சள் எறும்புகளால் பதம் பார்க்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் கண் பகுதி

  • உதாரணமாக இந்திய பெருங்கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவில் பெரிய காலனியாக இந்த மஞ்சள் எறும்புகள் பெருக்கெடுத்தன. சிவப்பு நண்டுகளின் சாம்ராஜ்ஜியமான கிறிஸ்மஸ் தீவில் இந்த மஞ்சள் எறும்புகளின் தாக்குதலால், பல நண்டுகள் நிலைகுலைந்து குருடாகி இறுதியில் மடிந்துள்ளன.
  • இந்த எறும்புகள் இரவு மற்றும் பகல் நேரங்களில், 21 டிகிரி முதல் 35 டிகிரி சூழலில் இரைதேடும். 26 முதல் 30 டிகிரியில் இதன் இரை தேடும் நடவடிக்கை உச்சம் அடைந்து 44 டிகிரி வரை இயங்கும். உலகின் மற்ற பகுதிகளில் பதிவான மஞ்சள் எறும்புகள் பற்றிய வரலாறு மூலம், அந்த வகை எறும்பை உரிய கவனம் செலுத்தி தடுக்காவிட்டால் அவை அங்குள்ள சுற்றுச்சுழலை முழுமையாக அழிப்பதுடன் தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்.
  • வேலாயுதம்பட்டியில் கவனித்தபோது, மஞ்சள் எறும்புகள் மிகப்பெரிய அளவில் ஊடுருவியுள்ளன. நிலத்தில் வேறு பூச்சிகளையோ, சிறிய விலங்குகளையோ பார்க்க முடியாத அளவுக்கு அதன் செயல்பாடு இருக்கிறது.
  • வண்டுகள், கரப்பான்பூச்சிகள், தவளைகள், மாட்டுச் சாணம், குளவிகள் மற்றும் தேனீக்கள் மீது இந்த மஞ்சள் எறும்புகளின் முரட்டுத்தனமான உண்ணும் வழக்கத்தைப் பார்க்க முடிகிறது.
 

மஞ்சள் எறும்புகள்

 

படக்குறிப்பு,

கிராமவாசிகளிடம் விசாரணை நடத்தும் அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வுக்குழுவினர்

  • இத்தகைய உண்ணும் வழக்கத்தின் நீண்ட கால சூழலியல் பாதிப்புகள் கடுமையானதாக இருக்கும். அதைப்பற்றி இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை.
  • பாதிக்கப்பட்ட இடங்களில் வேறு எந்த பூச்சிகளையும் காண முடியாயது. இது தீவிர அக்கறை செலுத்த வேண்டிய விஷயமாக உள்ளது.
  • கிராமத்தினரிடம் நாங்கள் பேசியதிலிருந்தும் பாதிக்கப்பட்ட விலங்குகளை நேரடியாக பார்த்தலிருந்தும் பலவீனமாக விலங்குகள் தான் முதலில் பாதிக்கப்படுவது தெரியவந்துள்ளது. மேலும் முக்கிய பாதிப்புகள் கண் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளில் தென்படுகின்றன.
  • கிராம மக்கள் நம்புவதைப் போல இந்த எறும்புகள் ஃபார்மிக் அமிலத்தை கக்குவதால் பாதிப்பு ஏற்படுவதாக நாங்கள் நம்பவில்லை. ஃபார்மிக் அமிலம் பல காரணிகளில் ஒன்றாக இருக்கலாம்.
  • அந்த பகுதியில் உள்ள கால்நடைகளிடம் முழுமையான கால்நடை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், எறும்பு கடியால் தங்களுடைய கால் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளதை கிராமத்தினர் காண்பித்தனர். இங்கு தோல் மற்றும் ஒவ்வாமை நிபுணர்கள் உட்பட நிபுணர்கள் குழுவுடன் மருத்துவ முகாம் நடத்த பரிந்துரைக்கப்படுகிறது.
 

மஞ்சள் எறும்புகள்

 

படக்குறிப்பு,

மாவட்ட வன அலுவலருடன் ஆலோசனை நடத்தும் ஆய்வுக்குழுவினர்

  • இந்த எறும்புகள் வந்ததற்கான காரணத்தை துல்லியமாகக் கண்டறிய இந்த பகுதியில் உயிர் இயற்பியல் அளவுகோல்களை வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்.
  • சமீப காலங்களில் அதிகரித்து வரும் கோடைகால மழைப்பொழிவும் இவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கக்கூடும்.
  • கிராம மக்கள் சைபர்மெத்ரின் போன்ற வலுவான ரசாயன பூச்சிக்கொல்லிகளை வெறும் கையிலேயே பயன்படுத்துகின்றனர். இந்தப் பூச்சிக்கொல்லிகளாலும் ஓவ்வாமை ஏற்படலாம். இத்தகைய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு பாதுகாப்பான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்த ஊக்குவிக்க வேண்டும்.
  • வனத்தை ஒட்டிய பகுதிகளில் பூச்சிக் கொல்லிகள் மற்றும் ரசாயனங்களின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தி, பொறுப்புடன் அவற்றைக் கையாள விவசாயிகள் மற்றும் விவசாய பணியாளர்களுக்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.
 

மஞ்சள் எறும்புகள்

  • கடந்த சில பத்தாண்டுகளில் இந்தியா முழுவதும் இந்த வகை மஞ்சள் எறும்புகள் பரவியுள்ளன. இத்தகைய தீவிரமான ஊடுருவலும் மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்பும் இந்தியாவிலே முதல் முறையாக இங்கு தான் காணப்படுகிறது. சூழலியல் மாற்றங்களால் இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் நாம் இத்தகைய பாதிப்புகளை எதிர்பார்க்கலாம்.
  • இதனை ஒரு எச்சரிக்கை சமிக்ஞையாக எடுத்துக் கொண்டு இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். உள்ளூர் அளவிலும், தேசிய அளவிலும் இத்தகைய பாதிப்புகளை ஊக்குவிக்கும் சூழலியல் மற்றும் காரணிகளை அறிந்து உரிய தடுப்பு நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட வேண்டும்.

இந்த நிலையில், மேற்கண்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தால் நத்தம் கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை மருத்துவர் சிங்கமுத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62727184

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.