Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டமன்றத்தில் எப்போது தாக்கல் செய்யப்படும்?

  • எம். ஆர். ஷோபனா
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
 

கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தில், 13 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை கடந்த மே 18ம் தேதியன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக சமீபத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இந்த ஒருநபர் விசாரணை ஆணையத்தின் இறுதி அறிக்கை 2022 மே,18 அன்று தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அந்த அறிக்கை நான்கு தொகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளதால் அதை தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டியுள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அலுவலர்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு அந்த அறிக்கை அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்களின் பரிசீலனையில் உள்ளது. சம்பந்தப்பட்ட துறைகள் தகுந்த நடவடிக்கை எடுத்தபின், நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையுடன், ஆணையத்தின் இறுதி அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வைக்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,'ஃப்ரன்ட் லைன்' என்ற ஆங்கில இதழ், 3000 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

 

அந்த செய்தியின்படி, " இந்த துப்பாக்கிச்சூடுக்கு காரணமாக தென்மண்டல ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ், டி.ஐ.ஜி கபில்குமார் சரத்கர், தூத்துக்குடி எஸ்.பி மகேந்திரன், உதவி எஸ்.பி லிங்க திருமாறன் மூன்று இன்ஸ்பெக்டர்கள், இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், ஒரு தலைமை காவலர், ஏழு காவலர்கள், இவர்களுக்கு துணை போன தாசில்தார்கள் மற்றும் வருவாய் துறை உயர் அதிகாரிகள் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன." என்று தெரிவிக்கிறது.

 

கோப்புப் படம்

பட மூலாதாரம்,FACEBOOK/GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்

மேலும், இந்த சம்பவம் எந்த பின்னணியில் நடந்தது என்பது பற்றி அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விவரங்களையும் தங்களின் கோரிக்கைகளையும் முன்வைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "பொதுமக்களின் கூட்டத்தை கையாளுவதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யாருடைய உத்தரவும், துண்டுதலுமின்றி துப்பாக்கி சூடு நடந்துள்ளது.

தப்பி ஓடிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. தங்களிடம் இருந்து மிகவும் தொலைவில் இருந்த போராட்டக்காரர்கள் மீது காவல்துறை மறைந்து இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த முதல் துப்பாக்கிச் சூட்டில், காவல்துறையினர் ஆட்சியர் வளாகத்தில் உள்ள பூங்காவில் மறைந்திருந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிக்கை கூறுகிறது. இதில் போராட்டக்காரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். காவல் நிலையாணைகளின் படி, கூட்டத்தை கலைக்க, போலீசார் எச்சரிக்கை செய்தல், தண்ணீர் பாய்ச்சி அடித்தல், வானத்தை நோக்கி சுடுதல் போன்ற தடுப்பு நடவடிக்கை ஏதும் செய்யவில்லை.

இதற்கு, உயர் காவல்துறை அதிகாரிகள் காரணம் என்று ஆணையத்தின் அறிக்கை கூறுகிறது. அவர்கள் 'தங்களது வரம்பை மீறி விட்டார்கள்' என்று கூறி, "குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு" அறிக்கை பரிந்துரைக்கிறது.

அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த என்.வெங்கடேஷ், தனது பொறுப்பில் இருந்து செயல்படாமல் இருந்ததாகவும், ஒட்டுமொத்தமாக அலட்சியமாக இருந்ததாகவும், தவறான முடிவுகள் எடுத்ததாகவும் அறிக்கை கூறுகிறது.

"காவல்துறை அதிகாரிகளை ஒழுங்காக வழிநடத்துவதிலும், கட்டளைகளை திறம்பட வழங்குவதிலும் காவல்துறை உயரதிகாரிகள் தரப்பு தோல்வி அடைந்துள்ளது." மேலும், " பதவி படிநிலையில் உள்ள காவல்துறை அதிகாரிகளிடையே முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை" என்றும் அறிக்கை கூறுகிறது.

"இந்த சம்பவத்தில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சத்திலிருந்து 50 லட்சமாகவும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு 5 லட்சத்திலிருந்து 10 லட்சமாகவும் இழப்பீட்டை அரசு உயர்த்தி வழங்க வேண்டும்." என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த செய்தியை பிரத்யேகமாக வெளியிட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் ராஜசேகரன் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம், அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நடந்ததால், அவர்கள் இந்த சம்பவத்தை விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்தனர். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்த ஆணையம் ஓர் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது. இது இந்த துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு குறித்து மட்டுமே இருந்தது.

ஏனென்றால், அதிமுக ஆட்சியில் இருந்தப்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு குறைவான இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டது. திமுக ஆட்சி வந்த பிறகு, அவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவும், அரசுப் பணிக்கு பரிந்துரைக்கவும் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு முழு அறிக்கையும் மே 18ம் தேதி தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது," என்றார்.

இந்த அறிக்கையை அரசு பொதுவெளியில் வெளியிடாமல் இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஆணையத்தின் விதிகளின்படி, ஓர் ஆணையத்தின் அறிக்கையை பெற்றவுடன், எந்த அரசும் சட்டமன்றத்தில், அதுதொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் அதிகபட்சம் ஆறு மாதத்திற்குள் தாக்கல் செய்யவேண்டும். அந்த வகையில், இந்த அறிக்கையை அரசு பொதுவெளியில் வெளியிட வேண்டும்," என்றார்.

 

கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

கோப்புப் படம்

இந்நிலையில், இந்த அறிக்கை தொடர்பாக ஞாயிற்றுகிழமையன்று நடக்கவிருந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழு பத்திரிகையாளர் சந்திப்புக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மைக்கேல் ஆண்டோஜீனியஸ், "இந்த அறிக்கை எங்களுக்கு 80 சதவீதம் நிம்மதியை அளித்திருக்கிறது. ஆனால், இது மக்களுக்கு சாதகமாக வந்த அறிக்கை என்பதால் இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கவுள்ளோம். தமிழக அரசு இந்த அறிக்கையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோருகிறோம்," என்றார்.

அதே வேளையில், தமிழக சட்டதுறை அமைச்சர் ரகுபதியின் அறிக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை குறித்த தெளிவான விவரம் இல்லை என்கிறார் இளங்கோவன் ராஜசேகரன். "இந்த அறிக்கை வெறும் கண் துடைப்பாக மட்டுமே தெரிகிறது. இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டு அவை சட்ட ஆலோசகர்கள் பரிசீலனைக்கு பின் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரது அறிக்கை கூறுகிறது.

ஆனால், அருணா ஜெகதீசன் ஆணையம் என்ன கூறுகிறது?

முதலாவது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல்துறையினர் மீது, துறைரீதியான நடவடிக்கையுடன், குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இரண்டாவது, மாவட்ட ஆட்சியர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.

மூன்றாவது, மூன்று துறை வட்டாட்சியர்கள் மீது துறை நடவடிக்கை மற்றும் சட்டத்திற்குட்பட்ட பிற நடவடிக்கைகளைத் தொடங்குமாறு ஆணையம் பரிந்துரைக்கிறது.

ஆனால், சட்டத்துறை அமைச்சரின் அறிக்கையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை மட்டுமா அல்லது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படுமா என்ற தெளிவு இல்லாமல் இருக்கிறது," என்கிறார். https://www.bbc.com/tamil/india-62626826

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு விவகாரம்: இறந்தவரின் தாய் பிபிசி தமிழுக்கு பேட்டி

  • பிரசன்னா
  • பிபிசி தமிழுக்காக
40 நிமிடங்களுக்கு முன்னர்
 

தமிழ்நாடு ஸ்டெர்லைட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த சம்பவத்தில் இறந்து போன பெண் ஸ்னோலினின் தாயார் வனிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வனிதா, "துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சுதந்திரமாக உள்ளனர். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் வேதனையுடன் உள்ளோம். துப்பாக்கி சூடுக்கு காரணமான அதிகாரிகளை நீதிபதி அருணா ஆணையம் அடையாளம் கண்டுள்ளது. அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். அருணா ஜெகதீசனின் அறிக்கையை பொதுவெளியில் வெளியிட வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு அறிவித்த நிதி இப்போதும் கூட முறையாக வந்து சேரவில்லை," என்று தெரிவித்தார்.

முன்னதாக, நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் முன்பே ஊடகங்களில் கசிந்தது. இதைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார் வனிதா மற்றும் தமிழ் மீனவர் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ரஜினி செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றபோது அவர்களை நோக்கி திட்டமிட்டே துப்பாக்கி சூடு நடத்தினர். காக்கா, குருவிகளை சுடுவது போல மக்கள் மீது சுட்டுள்ளனர் என்று வனிதா கூறினார்.

 

ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறிய புகையால் நாங்கள் குடியிருந்த பகுதியில் மூச்சுப் பிரச்னைகள் ஏற்பட்டன. இதனால் சுமார் 99 நாட்களாக நாங்கள் அந்த ஆலைக்கு எதிராக போராடினோம். அப்போது எந்த அதிகாரியும் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. அதனால் போராட்டத்தின் நூறாவது நாளில் நியாயமான முறையில் அமைதியாக உரிய தீர்வு கிடைக்கக் கோரி பொதுமக்கள் பேரணியாக சென்றனர். நான், எனது மருமகள், மகள் ஸ்னோலின் உள்ளிட்டோரும் ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றோம்.

கண் முன்னே நடந்த துப்பாக்கி சூடு

 

தமிழ்நாடு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆறு மாத கைக்குழந்தையுடன் நான் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் மேலிருந்தும், கீழிருந்தும் துப்பாக்கி சூடு நடத்தினர். மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். என் கையில் குழந்தையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை மீது குண்டடி பட்டு விடக்கூடாது என்பதற்காக அதை இறுகப்பிடித்துக் கொண்டு பதறியபடி இருந்தேன். ஆனால், என் மகள் துப்பாக்கி தோட்டாவுக்கு இரையாகி விட்டாள் என்று எனக்கு அப்போது தெரியாது என கூறினார் வனிதா.

மனு கொடுக்க அழைத்து வந்த தங்கையை கொன்று விட்டாயே என்று எனது மகன் கதறித் துடித்தான். என் மகளை இழந்து நித்தமும் ரத்தத்தில் கண்ணீர் வடிக்கிறோம். வழக்கறிஞராக வேண்டும் என்ற கனவுடன் வளர்ந்தவள் ஸ்னோலின். அவளை இழந்துவிட்டோம் என்கிறார் வனிதா.

 

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

99 நாட்களாக நாங்கள் போராட்டம் நடத்தியபோது பேச்சுவார்த்தைக்கு வராத அதிகாரிகள் 100 நாள் போராட்டத்தை குலைக்கும் வகையில் சூழ்ச்சி செய்து துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்றுள்ளனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.

துப்பாக்கி சூடு நடத்தினால் தான் இவர்களுக்கு பயம் இருக்கும். இனி வேற யாரும் ஸ்டெர்லைட் ஆலை குறித்து பேச முன்வர மாட்டார்கள் என்று அரசு தரப்பு எண்ணியிருக்கக் கூடும். ஆனால் போராட்டத்தில் இருந்த நாங்கள் யாரும் பின்வாங்கவும் இல்லை. பயப்படவும் இல்லை. இனி பயப்பட போவதும் இல்லை. துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றபோது இருந்த அதே மனநிலையில்தான் இப்போதும் மககள் இருக்கிறார்கள் என்று வனிதா தெரிவித்தார்.

துப்பாக்கி சூடு நடந்தபோது தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆக இருந்த வெங்கடேஷ், தென் மண்டல ஐஜி ஆக இருந்த சைலேஷ்குமார யாதவ், நெல்லை டி ஐ ஜி ஆக இருந்த கபில்குமார் சரட்கார், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட சில போலீசாரை குற்றம்சாட்டப்பட்டவர்களாக நீதிபதி அருணா ஆணையம் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அந்த அதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிபதி அருணா ஆணைய அறிக்கையை விரைவில் வெளிப்படுத்த வேண்டும் என்கிறார் ஸ்னோலினின் தாயார் வனிதா.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

முதல்வருக்கு கோரிக்கை

 

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழ்நாட்டில் முந்தைய ஆட்சியில் துப்பாக்கி சூடுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான குழுவினர் முறையிட்டனர். அப்போது எதிர்கட்சி தலைவராக இருந்தவர் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின். அவர் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வந்தால் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.

இப்போது மக்களை கொன்றவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள். 13 உறவுகளை பறிகொடுத்த நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம் என்கிறார் வனிதா.

துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், எத்தனை கோடி இழப்பீடு கிடைத்தாலும் அது இறந்த உயிர்களுக்கு ஈடாகாது. 13 பேரின் உயிர் போனது மட்டுமின்றி, இந்த சம்பவத்தின் போது உடலுறுப்புகளை இழந்து இன்றளவும் மாற்றுத்திறனாளிகளாக வேதனைப்பட்டு வருவோருக்கு போதிய உரிய உதவி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வனிதா கேட்டுக் கொண்டார்.

ரஜினி மீதும் வழக்கு தொடர கோரிக்கை

இதற்கிடையே, நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர வேண்டும் என்று தமிழ் மீனவர் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் ரஜினி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் அருணா ஜெகதீசன் அறிக்கையையும், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசனின் அறிக்கை கசிந்த விவகாரத்தில், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு தமிழ் மீனவர் கூட்டமைப்பு எதிர்வினையாற்றியிருக்கிறது.

இதற்கிடையே, நீதிபதி அருணாவின் அறிக்கை கசிந்த விவகாரத்தில் விரைவில் அந்த அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும்," என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.

துப்பாக்கி சூடு தொடர்பாக பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், போராட்டக்குழுவுக்குள் ஊடுருவியதாகக் கூறி போலீஸ் துப்பாக்கி சூடுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கையில் பயங்கரவாத ஊடுருவல் எதுவும் இல்லை என கூறியுள்ளனர்.

அந்த வகையில் துப்பாக்கி சூடு பற்றிய கேள்விக்கு பதிலளித்தபோது சர்ச்சையாந தகவலை வெளியிட்ட நடிகர் ரஜினிகாந்த் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் ரஜினி கூறினார்.

ஆலை ஆதரவு குழுவினரும் கோரிக்கை

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்கம் மற்றும் ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், "ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது அபாண்டமான பழியை சுமத்துவதுடன், மீண்டும் மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தையும், தமிழக முதலமைச்சரையும் கேட்டுக்கொள்கிறோம்," என்று தெரிவித்தனர்.

"பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தொழில் வளம் பாதிக்கப்பட்டுள்ளது, பொது மக்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே அரசு, அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர்கள் கேட்டுகொண்டனர்.

https://www.bbc.com/tamil/india-62663689

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.